‘இப்போதான் ஆட்டம் சூடு பிடிக்குது’ என்று குதூகலமாக கரீமா பார்க்க, ‘மகளுக்கு என்ன ஆனதோ?’ என பர்வீன் கவலையுடன் பார்க்க, ஆர்யனும் மிஷாலும் முறைத்து நிற்க படிகளில் நடந்து வரும் ஓசை கேட்டது. மிஷால் நிமிர்ந்து பார்க்க, ஆர்யன் திரும்பி பார்க்க அவன் பின்னால் ருஹானா சிரிப்புடன் இறங்கி வந்தாள்.

ஆர்யனை தாண்டி சென்றவள், பர்வீன் கையை பற்றி முத்தமிட்டு நெற்றியில் வைத்துக்கொண்டாள். பின் அவரை அணைத்து வரவேற்றாள். மிஷால் கையையும் புன்னகையுடன் குலுக்கினாள், வரவேற்பு சொல்லி. “உங்கள காக்க வச்சிட்டேன். மன்னிச்சிடுங்க. இவானை தூங்க வச்சிட்டு இருந்தேன். நான் இல்லனா அவன் தூங்க மாட்டான்” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு ஆர்யனை பார்த்தாள்.

தலையாட்டிய அவனும் “விருந்தாளிகளை ஹாலுக்கு கூட்டிட்டு போ” என்று சொல்லி மேலே செல்ல, கரீமாவும் வெல்கம் சொல்ல ருஹானா அவர்களை உள்ளே அழைத்து வந்தாள்.

வரவேற்பு அறையில் அமர்ந்ததும் பர்வீன் கேள்விகளாக கேட்டார் “அன்பு மகளே! என்ன நடந்தது? முதல்ல இருந்து சொல்லு. இங்க எப்படி வந்தே?” ருஹானா என்ன சொல்வது என யோசிக்கும் நேரம் கண்ணை பாதி மூடிக்கொண்டே இவான் அங்கே வந்தான்.

எழுந்து அவனிடம் சென்றவள் “ஏன் செல்லம் அதுக்குள்ளே எழுந்துட்டே? இப்போ தானே தூங்க வச்சேன்” இவான் கண்ணை திறக்காமல் “எனக்கு தூக்கம் வரல. நீங்களும் அங்க இல்ல” என சொல்ல, “இங்க பார், யாரு வந்துருக்காங்கன்னு.. இவங்க உன் பாட்டி” என பர்வீனை அவனுக்கு அறிமுகப்படுத்தினாள்.

“எனக்கு பாட்டி இருக்காங்களா?” இவான் ஆசையுடன் கேட்டான்.

“நிச்சயமா. நான் தான் உன் பாட்டி. வா என்கிட்டே” என பர்வீன் அழைத்தார்.

ருஹானா தலையாட்டவும் பர்வீனிடம் இவான் செல்ல “என் ஆசைக் குட்டி! அல்லாஹ் தீய கண்களிலிருந்து உன்னை காப்பாத்தட்டும்” என அவனுக்கு ஆசி வழங்கியவர் “அப்படியே தஸ்லீம் போலவே இருக்கானே” என அவனை அணைத்துக்கொண்டு மகிழ்ந்தார்.

சாரா தேநீர் கொண்டுவர, நன்றி சொல்லி அதை வாங்கிய ருஹானா பர்வீன்க்கு கொடுக்க அவர் இவானுடன் கதை பேசிக் கொண்டே வாங்கிக்கொண்டார். மிஷாலுக்கு தேநீர் கொடுக்கும்போது “ருஹானா! நான் உன்கூட தனியா பேசணும்” என்று சொல்ல ருஹானா அவனை வெளியே தோட்டத்துக்கு அழைத்து போனாள்.

அங்கே கிடந்த நாற்காலியில் உட்காந்த இருவரும் யோசனையில் இருந்தனர். ‘தன் காயத்தை எப்படியும் மறைக்க வேண்டும்’ என ருஹானா யோசிக்க, மிஷால் கரீமாவின் சொற்களை நினைவுக்கு கொண்டு வந்தான். ‘ருஹானாக்கு உடம்பு சரியில்ல. எதோ உடல்நலக் குறைவை அவ மறைக்கிறா. என்னை அவளுக்கு இன்னும் நல்லா தெரியாது தானே. என்கிட்டே சொல்ல மாட்டறா. என்னால எதும் செய்ய முடியல. நீ அவளுக்கு உதவ முடியும். அவ நம்புற ஒரே ஆள் நீதான்’

“ருஹானா! நீ நல்லா இருக்கியா?”

“நல்லா இருக்கேனே, மிஷால்”

சுற்றுமுற்றும் பார்த்தவன் அவளை நெருங்கி, “இந்த வீட்ல எல்லாம் சரியா இருக்கா? உனக்கு எந்த பிரச்னையும் இல்லயே?” என மெல்லிய குரலில் கேட்டான்.

“இவான் இங்க இருக்கான், மிஷால். அவன் எங்க இருக்கானோ அங்க நான் சந்தோசமா இருப்பேன். நீ கவலைப்படாதே, மிஷால்”

ஜன்னல் ஓரமாக நின்று அவர்கள் பேசுவதை பார்த்த கரீமா ‘இப்போ இங்க ஆர்யனை வரவைக்கணுமே’ என யோசித்தாள்.

——–

மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த ஆர்யன் வரவேற்பறையில் பர்வீனும், இவானும் மட்டும் பேசிக்கொண்டிருப்பதையும், ருஹானாவும் மிஷாலும் அங்கே காணாதிருப்பதையும் கண்டு புருவங்கள் முடிச்சிட நின்றான்.

தோட்டத்தில் ருஹானா “மிஷால்! உனக்கு அடிபட்டது சரியாகிடுச்சா? ஒன்னும் வலி இல்லயே?” என்று கேட்க “இப்போ என்னை பத்தி இல்ல. உன்னை பத்தி தான் கவலைப்படணும். இங்க பாரு இந்த ஆள் மோசமானவன்….” என சொல்லும் நேரம் கரீமா ஆர்யனை அங்கே வரவழைக்க திரும்பி உள்ளே செல்ல போனாள். அதற்குள் ஆர்யனே அவர்களை தேடிக்கொண்டு அங்கே வந்தான்.

கரீமாவும் உற்சாகமாக பழைய இடத்திலேயே வந்து நின்றுக்கொண்டாள், நடக்க போகும் சண்டையை நன்றாக வேடிக்கை பார்க்க. வாசல்படியில் வேகமாக இறங்கிய ஆர்யன் அவர்களை நோக்கி மிக வேகமாக சென்றான். அங்கே ருஹானா மிஷாலுக்கு தெரியாமல் காயத்தை பிடித்திருப்பதை பார்த்து அசையாது தேங்கினான்.

“இந்த விசயத்துல நான் ஒன்னு உன்கிட்டே சொல்லணும், மிஷால்” என ருஹானா தொடங்க, ஆர்யன் அதைக் கேட்டு அப்படியே நின்றான்.

“நானும் அப்படித்தான் ஆரம்பத்துல நினைச்சேன். உன்ன அடிச்சது இவான் சித்தப்பாவோட ஆட்கள் இல்ல, மிஷால்”

“நீ அதை நம்புறியா?”

“அதான் உண்மை, மிஷால். பாரு, அவர் கொஞ்சம் கொடுமையானவர் தான்… இல்ல.. வந்து.. கொஞ்சம் கடுமையானவர் தான். ஆனா அடியாள்களை அனுப்பி அப்பாவியை அடிக்கிற ஆள் இல்ல, அவர்”

ஆர்யனுக்கு ருஹானாவின் வார்த்தைகள் மயிலிறகால் தடவுவது போல் இருந்தது. அவள் பேசுவதை கேட்டவண்ணம் அங்கேயே இருந்தான்.

“மிஷால்! நம்ம உலகம் வேற. அவர் உலகம் வேற. நீ சொல்றது சரிதான். ஆனா அதை அவர் செய்யல”

அழுத்தமாக அவள் சொன்னதை கேட்ட ஆர்யன் அப்படியே திரும்பி நடந்தான். “என்ன இவன் வீட்டுக்குள்ள வர்றான், டாமிட்” என கரீமா வெகுண்டாள்.

——–

சல்மாவின் லண்டன் தோழி போனில் அழைக்க சல்மா வேகமாக அழைப்பை ஏற்று பேசினாள்.

“என்னாச்சி என் ஆளுக்கு? ஹாஸ்பிடல்ல இருக்கானா?”

“என்னது நல்லா இருக்கானா? பார்ல பார்த்தியா?”

“அப்படியா சொன்னான்?”

பேசிக்கொண்டிருக்கும்போதே போனை கீழே போட்டவளுக்கு கை கால்கள் நடுங்கின. கண்களில் நீர் கொட்டியது. தலையை பிடித்துக்கொண்டு “எங்க என் மாத்திரை?” என எல்லாவற்றையும் உருட்டினாள். பின் அவள் கைப்பையிலிருந்து மாத்திரையை எடுத்து போட்டுக்கொண்டு சுவரில் சாய்ந்து உட்கார்ந்து மௌனமாக அழ ஆரம்பித்தாள்.

——-

ஆர்யன் திரும்ப கீழே வந்தபோது இவான் வரவேற்பறை சோபாவில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். கரீமா அவன் பக்கத்தில் அமர்ந்து காபி பருகிக் கொண்டிருந்தாள். வீட்டுக்கு வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலை ஜாஃபர் எழுதிக் வைத்துக்கொண்டு அதை திரும்ப வாசிக்க, கரீமா சரி பார்க்க அங்கே வந்த ஆர்யன் “இவான் ஏன் இன்னும் தூங்கல? அவன் சித்தி எங்கே?” என கேட்டான்.

“விருந்தாளிகள் போன பின்ன அவளை நான் பார்க்கலயே” என கரீமா போட்டுக் கொடுக்க, அங்குமிங்கும் கண்களை சுழற்றி ருஹானாவை தேடிய ஆர்யன் விரைவாக மேலே சென்றான். பாதி குடித்திருந்த காபியை கீழே வைத்த கரீமா “ஜாஃபர்! இவானை பார்த்துக்க” என சொல்லி அவன் பின்னாலேயே ஓடினாள். ஜாஃபரும் இவானுடன் சேர்ந்து கப்பல் செய்ய தொடங்கினான்.

——

ருஹானா கட்டிலில் சாய்ந்து அமர்ந்து இவான் தன் தாயின் கல்லறைக்கு செல்ல ஆசைப்படுவதை பற்றி யோசித்துக்கொண்டிருந்தாள். “இல்ல.. இதை இப்படியே விட முடியாது. நான் பேசித்தான் ஆகணும்” என சொல்லிக்கொண்டவள் சிரமப்பட்டு கட்டிலிலிருந்து கீழே இறங்கினாள்.

அறையை விட்டு வெளியே வந்தவள் இடக்கையால் காயத்தை பிடித்துக்கொண்டு வலது கையை வீசி வீராவேசமாக வர, ஆர்யனும் அவளை தேடியபடி வேகமாக படியேறி வர, இருவரும் மாடிப்படி வளைவில் சந்தித்துக்கொண்டனர். அவன் முன் நிமிர்ந்து நின்றவள் அவன் ஏதும் சொல்லிவிடும்முன் கடகடவென பேசினாள்.

“நீங்க இவான் மேல அதிக அன்பு வச்சிருக்கிங்கன்னு எனக்கு தெரியும். அவனுக்காக நீங்க எதுவும் செய்வீங்க.” ஆர்யன் புருவ சுளிப்பு நீங்கி அவளை பார்த்தான்.

“இவான் அவன் அம்மாவை ரொம்ப தேடுறான். அவங்களுக்கு குட்பை சொல்ல ஆசைப்படுறான்” ஆர்யன் முகம் கடுமையானது.

“நாங்க அவன் அம்மா கல்லறைக்கு போகணும்.”

இன்னும் கடினப்பட்ட ஆர்யன் “அது எப்பவும் நடக்காது” என்று சினத்துடன் சொன்னான்.

“நடந்தே ஆகணும்” ருஹானாவும் குரல் உயர்த்தி சத்தமாக சொன்னாள்.

“என் வார்த்தை தான் இறுதியானது” ஆர்யன் முடிவாக சொன்னான்.

“நான் இன்னும் பேசி முடிக்கல. உங்களுக்கு தெரியலயா? இவான் இங்க சிறைக் கைதி மாதிரி இருக்கான். உங்க இருட்டு உலகத்தில அவனை வச்சிக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல.”

கோபத்தின் உச்சிக்கு சென்றவன் “என்னது, சிறைக்கைதியா? இவானுக்கு தேவையான எல்லாமே இந்த வீட்ல இருக்கு” என சொல்ல…

“அப்படியா? என் கண்ணுக்கு அது தெரியலயே. ஸ்கூல் இல்ல. ப்ரண்ட்ஸ் இல்ல. அவனால் வீட்டை விட்டு வெளிய கூட போக முடியாது. அவனுக்கு அப்பா இல்ல.. அம்மா இல்ல…“ என இரைந்தாள்.

அவள் முழங்கையை பற்றி அருகே இழுத்த ஆர்யன் அவள் முகத்திற்கு நேரே வந்து “நீ இருக்கே..!” என்றான். ருஹானாவிற்கு மொழி மறந்தது. படிக்கட்டில் நின்று இதை பார்த்துக்கொண்டிருந்த கரீமாவுக்கு மூச்சுவிட மறந்தது. ஆர்யன் சகலமும் மறந்து ருஹானாவின் கண்களையே பார்த்து நின்றான்.

இளவரசன் வாழ்வும்

கைதியின் வாழ்வாய்

மாற்றிவிடும்

கருப்பு பக்கங்கள்… 

நிஜங்களின் வெப்பம்

சிறுவனை தாக்கிடாது

காத்திட துடிக்கும் தாயுள்ளம்… 

பிஞ்சை காக்கும் அரணின் மறுப்பும்

கருப்பு சாம்பலாய் மாறி… 

இளவலை பார்த்துக்கொள்ளும்

தாதியாய் நான்…. 

சாம்பலும் வெண்மை காண்கிறதோ

சிறுவனின் உலகமே நான் எனும்

உரிமை தரப்படும்போது… 

(தொடரும்)