Advertisement

                                அத்தியாயம் – 2

இவானை சந்தோஷமாக வீட்டுக்குள்  அழைத்து வந்த ருஹானா அவன் ஷூவை கழட்டி கொண்டே, “அப்பா! நான் வீட்டுக்கு வந்துட்டேன்…  யார் வந்திருக்காங்க.. பாருங்க“ என சத்தமிட்டாள்..

உள்ளே இருந்து பதில் ஏதும் வரவில்லை.. பின்புதான் மேசையில் இருந்த காகிதத்தை கவனித்தாள்..  ‘மகளே! உன் அக்காவை பார்க்க கல்லறைக்கு போயிருக்கேன்.. பயப்படாதே.. சீக்கிரம் வந்துடுவேன் ‘ என்று எழுதியிருந்ததை படித்தவள், ஒரு துயர பெருமூச்சுடன் தனது காலணிகளையும் கழட்டினாள்…

“இவான்! தாத்தா வெளிய போயிருக்கார்.. அவருக்கு நாம ப்ளெசன்ட் சர்ப்ரைஸ் கொடுக்கலாம்.. நீ உள்ளே போ.. இதுவும் உன்னோட வீடு தான்” சொல்லிக்கொண்டே இருவரின் குளிர் மேலுடைகளை கழட்டி அதற்குரிய இடத்தில் மாட்டினாள்..

“என் வீடா?“ சந்தோஷத்தில் இவான் கண்கள் மினுமினுத்தன..

“ஆமா.. உன் வீடு தான்.. நானும் உன் தாத்தாவும் இருக்கற வீடு..” சொல்லி கொண்டே வந்தவள் சோகத்துடன் “உன் அம்மாவும் இங்க தான் இருந்தா” எனவும்..

இவான் குதித்து கொண்டு உள்ளே ஓடினான்…  ஒவ்வொன்றாக தொட்டு பார்த்து ஆச்சரியப்பட்டான்..

“உன் வீட்டை விட சின்ன வீடு இது” என அவன் சித்தி சொல்லவும்..  தலையாட்டி மறுத்த இவான், “அழகான வீடு..“ என ஆனந்தத்துடன் சொன்னான்..

“உனக்கு பசிக்கிதா… சாப்பிட என்ன வேணும்னு சொல்லு.. செஞ்சி தரேன்“ என ருஹானா கேட்க.. அதற்கு பதில் சொல்லாமல் வீட்டை சுற்றி பார்க்கலானான்..

அங்கு வட்டமாக இருந்த ஒரு கருவியை காட்டி “இதுல தானே தாத்தா உங்களுக்கு அக்ரூட் உடைச்சி தருவாரு?“ என கேட்டான்..

“ஆமா.. நான் காயப்பட்டுக்குவேன்னு அவரே உடைச்சி தருவார்…  இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?“ வியப்பு அவள் குரலில்..

“அம்மாக்கு உடம்பு கொஞ்சம் நல்லா இருக்கும்போது நான் அவங்க கூடத்தான் படுத்துக்குவேன்.. அவங்க எப்பவும் இந்த இடத்தை பத்தி தான் பேசுவாங்க.. இது ஃபேர்ரி டேல் வீடு…  நீங்க தான் உலகத்திலயே பெஸ்ட் குக்…  நீங்க செய்ற லெமன்…“ என்று அவன் யோசிக்க… அவன் பேச பேச திகைத்து பார்த்திருந்த ருஹானா “லெமன் குக்கீஸ்” என கண்ணீருடன் முடித்து அவன் கையை பற்றி முத்தமிட்டாள்…

“உங்க மேலயும் அந்த குக்கீஸ் வாசனை தான் வருது..  அம்மா சொல்வாங்க, என் மேலயும் அந்த வாசனை தான் வரும்னு.. நீங்க வாசனை பிடிச்சி பாருங்களேன்“ என அழகாக தலை சாய்த்து கழுத்தை காட்டினான்..

மனம் விட்டு சிரித்த ருஹானா இவானை கட்டிக் கொண்டு அவன் கழுத்தில் முத்தமிட்டாள்..

“அதே ஸ்மெல் தானே?“ ஆவலுடன் இவான் தலையாட்டி கேட்க..

“இல்ல.. உன் வாசனை அதை விட அருமையா இருக்கு“ என்று புகழ்ந்தாள் ருஹானா..

அவள் கழுத்தை முகர்ந்து பார்த்து நிமிர்ந்த இவான், “உங்க மேல என் அம்மா வாசனை வருதே!“

ருஹானா கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென கொட்டியது.. வாரி அவனை அணைத்து கொண்டாள்.. இவானும் இரு கைகளாலும் சித்தியின் கழுத்தை இறுக கட்டி கொண்டான்…

           ————

அர்ஸ்லான் மாளிகை…

நஸ்ரியா காபி கொண்டு வந்து அம்ஜத்திடம் கொடுக்க.. அங்கே இவானின் நானியும் நின்று கொண்டு இருந்தாள்..

அப்போது ஆர்யன் தன் வேக நடையுடன் உள்ளே வர.. அங்கே தானாக ஒரு இறுக்கம் பரவியது..

அண்ணன் அம்ஜத் சிரிப்புடன் ‘ஆர்யன்!’ என அழைக்க..

“என்ன செய்றீங்க அண்ணா?” என ஆர்யன் கேட்க..

அதற்குள் அந்த பானத்தின் பெயரை மறந்திருந்த அம்ஜத், “நஸ்ரியா ஏதோ கொடுத்தாளே… நஸ்ரியா நீ என்ன கொடுத்த?” என அவளையே விசாரிக்க அவள் ‘காபி’ என்றாள்.

“ஆங்… ஆமா.. காபி..“

அண்ணனின் பதிலை கேட்டுக் கொண்ட ஆர்யன் அடுத்து விசாரித்தான்..  “அண்ணி எங்கே?”

“அவ வெளியே போனா… இன்னும் வரல”

அண்ணனின் பதிலுக்கு தலையாட்டியவன், நானியிடம் திரும்பி, “இவான் தூங்கிட்டானா?“ என கேட்டான்…

முகம் வெளுத்த நானி, “அவன் வெளிய போயிருக்கானே!” என தட்டு தடுமாற…

ஆர்யனின் முகத்தில் அனல் பறந்தது… கண்களை சுருக்கி தலையை சாய்த்து, “என்ன!!! கரீமா அண்ணி என்னை கேட்காமல் இவானை வெளிய கூட்டிட்டு போனாங்களா?“ என்று உறுமினான்..

திகிலடைந்த நானி, “இல்ல.. கரீமா மேம் இல்ல.. இவான் சித்தி.. அவங்க தான்… உங்களுக்கு இந்த விஷயம் தெரியும்னு…..“

அவள் வார்த்தையை முடிக்கும் முன் ஆர்யன் முகத்தில் வீசிய அனல் இப்போது பறந்தது…..

            ————————–

“இவான் செல்லம்! உன் குக்கீஸ் சாப்பிட்டு முடித்தாயா?” என்று கேட்டுக் கொண்டே வந்த ருஹானா ஹால் சோபாவிலேயே படுத்து தூங்கி விட்ட அக்காவின் மகனை பார்த்து புன்னகை செய்தாள்…

அவன் தூங்கும் அழகை ரசித்து கொண்டே சோபாவில் அமர்ந்தாள்…

அப்போது பெரிய இவான் உள்ளே வர…  ருஹானா எழுந்து, “அப்பா!! இங்க பாருங்க.. நம்ம இவான்… உங்க பேரன்“ என ஆனந்தமாக சொன்னாள்..

அவர் மகிழ்ச்சியில் மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டார்…  அவன் அருகே அமர்ந்து, “என் அன்பு மகளின் மகன்!” என நடுங்கும் கரங்களால் பேரனின்  தலையை தடவிக் கொடுத்தார்… இருவர் கண்களிலும் ஆனந்த கண்ணீர் பெருகியது…

———————–

“இன்னுமா அட்ரஸ் கிடைக்கல?”… ஆர்யனின் குரலில் அர்ஸ்லான் மாளிகையே அதிர்ந்தது…

எங்கும் ஒரே பரபரப்பு..

அப்போது தான் உள்ளே நுழைந்த கரீமா, “என்ன ஆச்சு, ஆர்யன்… வாசல் வரை சத்தம் கேட்குது…“ என குழப்பத்துடன் விசாரிக்க…

“நீங்க எங்கே போயிட்டு வர்றீங்க?” கடுமையாக வந்தது ஆர்யனின் கேள்வி…

“ஃபௌண்டேஷன் மீட்டிங்க்கு போயிட்டு வரேன்.. இங்க என்னாச்சு… ஏதும் தப்பா நடக்கலயே?” என பதில் கேள்வி கரீமாவிடமிருந்து…

“இவானை அவன் சித்தி வந்து கூட்டிட்டு போயிட்டா… உங்களுக்கு தெரியும்னு இவங்க சொல்றாங்க.. அப்படியா?” எரிச்சலுடன் கேட்டான் ஆர்யன்..

“என்னா… கூட்டிட்டு போயிட்டாளா.. எப்படி..  நான் இவான் பார்க்க தானே பெர்மிஷன் கொடுத்தேன்… இப்போ தான் அக்காவை பறி கொடுத்து இருக்கா.. அக்கா மகனை பார்க்கட்டுமேனு… யா அல்லாஹ்…. சாரி ஆர்யன்.. நான் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கலயே அவ இப்படி செய்வானு… அவன் சொந்த சித்தி தானே…. அவனுக்கு தீங்கு இழைக்க மாட்டா… செய்ய மாட்டா தானே…?“ அவளே பதில் சொல்லிக் கொண்டு அவளே கேள்வியும் கேட்டுக் கொண்டாள்….

ஆர்யன் மேலே ஏதும் பேசும் முன் உள்ளே வந்த செகரட்டரி ரஷீத் “அட்ரஸ் கிடைச்சது” என்றான்…

கிளம்ப தயாரான ஆர்யன் கையிலிருந்த ஸ்டிக்கை தட்டி கரீமாவை ஒரு முறை முறைத்தான் .. அவளுக்கு சர்வங்கமும்  நடுங்கி போனது…

கார் சீறி பாய்ந்தது…

———————

ருஹானா மருந்து எடுத்து வந்து அப்பாவிற்கு கொடுக்க…  அவரோ, “இதனால என்ன பயன்…  என் அன்பு மகளே போனதுக்கு அப்புறம்…“ என வருத்தமாக கூறினார்…

“அப்பா! அப்படிலாம் பேசாதீங்க… என்னை நினைங்க.. இவானை நினைங்க” என சின்ன மகள் தேற்ற.. பேரனின் போர்வையை சரி செய்து அவன் முகத்தை தடவியவர், “அவன் அம்மா மாதிரியே இருக்கான்” என பெருமைப்பட்டுக் கொண்டார்…

இவான் தூக்கம் அப்போதும் கலையவில்லை..

“என்ன அதிசயம்! அர்ஸ்லான் மாளிகையில் இவனை உனக்கு எப்படி தந்தாங்க?“ என ஆச்சரியமாக கேட்டார்..

ருஹானா அங்கு நடந்தது எதையும் சொல்லாமல், “அவன் என் அக்கா மகன்.. எனக்கு எல்லா உரிமையும் இருக்கு.. அவங்க கூட மறுக்க முடியாது” என தீவிரமாக சொன்னாள்…

அதை ஆமோதித்த அப்பா “அவங்க கிட்ட இனி விட வேண்டாம்… என் மகளின் சொத்து, என் பேரன்“ என உரிமை பாராட்டியவர்… பின்பு தன் பேரன் நலம் நாடி சோபாவை காட்டி…

“இது வசதியா அவனுக்கு….. முதுகு வலிக்காதுல… நைட் என் கூட படுக்கட்டும்” என பேரனை ஆசையாக வருடினார்…

ருஹானா மகிழ்ச்சியுடன், “உங்க விருப்பம், அப்பா“ என்றாள்…

“நாளைக்கு எனக்கு சம்பள நாள்..  கடைக்கு போய் அவனுக்கு தேவையானது, அவன் ஆசைப்படறது எல்லாம் வாங்கிடலாம்” என உற்சாகமாக சொன்னவர், “இப்போ சாப்பிட யோகார்ட், பால், பழம் இருக்கா?“ என கேட்டார்…

“பால் இருக்கும் அப்பா… பழம் இல்ல… நான் போய் வாங்கி வரேன்”

“இந்த ராத்திரிலயா.. வேணாம்.. நான் போறேன்…. இஸ்மாயில் கடை திறந்திருக்கும்…. என் பேரனுக்கு ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் எல்லாம் வாங்கிட்டு வரேன்….“ என்று சொல்லி தூங்கும் பேரனுக்கு முத்தமிட்டு….

“நான் போய் உடனே வாங்கிட்டு வரேன்” என கிளம்பி விட்டார்…

ருஹானா போர்வையை நன்கு இழுத்து போர்த்திவிட்டு இவான் நெற்றியில் முத்தம் தந்தாள்…

அவன் சாப்பிட்டு வைத்த தட்டை எடுத்தவள் ஆச்சரியம் அடைந்தாள்…, ‘ஓரம் மட்டும் சாப்பிடுறான்….. அப்படியே என்னை போல…. ஆச்சரியப்படும்போது அவன் காட்ற  எக்ஸ்பிரஷன் நான் செய்றது போலவே இருக்கு…..

என் அன்பு அக்கா… என் அற்புதமான அக்கா…. உன் சொத்து என்னிடம்…‘ என்று மகிழும் வேளையில்….

கதவு மிக பலமாக  இடிக்கப்பட்டது…

அதிர்ந்து போன ருஹானா கதவருகே செல்லும்முன் கதவு தடாலடியாக உடைக்கப்பட்டு…. தனது ஆறடி உயரத்துடன் கொல்லும் பார்வையுடன் ஆர்யன் உள்ளே நுழைந்தான்… பின்னே ரஷீத்தும், பாடிகார்டும் நிற்க.. அவன் ஒவ்வொரு அடியாக வாசலிருந்து அறைக்கு முன்னேற முன்னேற, ருஹானா பின்னால் அடியெடுத்து வைத்தாள்..

ருஹானா கண்களை நேருக்கு நேர் முறைத்து அவன் பார்க்க, முதலில் சற்று பயந்த அவள் தன் முகத்தை தாழ்த்தி கொண்டாள்.. கண்களை மூடி ஒரு விநாடி சிந்தித்தவள், கண் திறந்து அவனை நேருக்கு நேர் சந்தித்தாள்… பின் உறுதி வர பெற்றவள், சற்றும் அவனுக்கு பயப்படாமல் அவனை எதிர் கொண்டாள்.. அவள் துணிவு கண்டு திகைத்த ஆர்யன் கண்களை சுருக்கி கோப பார்வையை வீச… சில விநாடிகள் இருவரும் கண்களில் அனல் கக்க நெருங்கி நின்றிருந்தனர்… அவன் குனிந்து அவளை கடுப்பாக பார்க்க அவள் நிமிர்ந்து தைரியமாக அவனை பார்த்தாள்….

கொளுத்தும் நெருப்பாய்

சுட்டெரித்தாலும்

மேகம் விலகி ஓடலாம்!!

துவளும் மலர் அல்ல, அவள்

சூரியகாந்தியாய்

ஒளியை ஏற்கும் மலரோ?

பின் தன் பார்வையை அவளிடமிருந்து விலக்கி வீட்டை அலசியவன் கண்களுக்கு தூங்கிக் கொண்டு இருந்த இவான் தென்பட்டான்…

விடுவிடுவென அவன் அருகே சென்றவன், அவனை தூக்கி கைகளில் ஏந்திக் கொண்டான்…

அதிர்வில் லேசாக விழித்துக் கொண்ட இவான், ‘சித்தப்பா!’ என அழைத்து மறுபடியும் தூக்கத்தில் ஆழ்ந்தான்….

“அவனை ஏன் தூக்குறீங்க?”

“விடுங்க விடுங்க“

“இவான்… இவான் “

“எங்க கூட்டிட்டு போறீங்க“

“விடுங்க…  இவான்.. என் கண்ணே!”

பின்னாடியே கத்தி கொண்டு ஓடி வந்த ருஹானாவின் எந்த கூக்குரலும் அந்த நெடியவனின் செவியை எட்டவில்லை…

குழந்தையுடன் வெளியே வந்தவன், பாடிகார்ட் கார் கதவை திறக்க, நின்று அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தபடி காரில் ஏறி கொண்டான்…  கார்கள் வேகமாக கிளம்பி சென்றன…

பின்னோடே ஓடி வந்த ருஹானா சாலையில் மடிந்து கதறினாள்…

சில பழங்கள் அவள் அருகே உருண்டு வர திகைப்புடன் திரும்பி பார்க்க…

அங்கே நெஞ்சில் கை வைத்து இருமியபடி “இவான்!!! என் பேரன்” என அப்பா முனகியபடியே கீழே விழ ருஹானா ஓடி சென்று தாங்கிக் கொண்டாள்….

Advertisement