ஆர்யன் உணவு மேசையில் அறிவித்தது மற்றவர்களை போல ருஹானாவிற்கும் திகைப்பாகவே இருந்தது. இமைகளை தட்டிக் கொண்டே ஆர்யனை பார்த்தவள் அப்படியே நின்றாள். இந்த வீட்டுக்கு உள்ளே வந்து இவானை பார்க்க அவள் பட்ட பாடு என்ன! கேட்டுக்கு வெளியே நின்று அவள் விட்ட கண்ணீர் என்ன! இப்போது குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிடும் உரிமையை ஆர்யனே தருகிறான். நம்ப முடியாத அதிசயமெல்லாம் நடப்பது அல்லாஹ் அருளே!
ஆர்யனும் அவளை பார்த்தவாறே அவன் இடத்தில் வந்து அமர்ந்தான். ருஹானா நகர்ந்து சென்று ஆர்யன் காட்டிய இடத்திற்கு செல்லவும், அம்ஜத் வரவேற்பாய் புன்னகைத்தான். அவனுக்கு தலையாட்டிய ருஹானா அம்ஜத்துக்கும் இவானுக்கும் இடையே அமர்ந்தாள். இவானுக்கு முகமெல்லாம் சிரிப்பு. கரீமா கைகளை பிசைந்தாள். சல்மா முகம் மாறி இருந்தாள்.
நஸ்ரியா சூப் கொண்டு வந்து வைக்க, அவளிடம் ருஹானா நன்றி சொன்னாள். இவானும், ருஹானாவும் புன்னகையை பரிமாறிக்கொண்டனர். இவானின் மகிழ்ந்த முகத்தை பார்த்து திருப்தியான ஆர்யன் “அக்னி சிறகே! நல்லா சாப்பிடு” என்று சொன்னான்.
ருஹானாவிற்கு அடிபட்ட இடம் மிகவும் வலித்தது. அவள் கை தானாகவே அங்கே போனது. அவள் வலியை சமாளிப்பதை ஆர்யன் பார்த்து அதிர்ந்து போனான். அவன் முகம் மாறியது. என்ன செய்வது என்று அவனுக்கு தெரியவில்லை. அப்போதுதான் ஒரு வாய் உணவு உண்டவன் அப்படியே நிறுத்திவிட்டு அவளையே பார்த்தான். ஆர்யன் தன்னை கவனிப்பதை கண்ட ருஹானா காயத்திலிருந்து கையை எடுத்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.
பெரிய தாக்குதலிருந்து அதற்குள் தன்னை மீட்டுக்கொண்ட கரீமா “ருஹானா! சாலட் எடுத்துக்கோ” என புன்னகை பூசி நீட்டினாள். அவளுக்கு நன்றி சொல்லி ருஹானா அதை வாங்கிக்கொண்டாள். அம்ஜத் மகிழ்ச்சியுடன் “இப்படி எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடறது நல்லா இருக்குல” என்று பொதுவாக சொன்னவன் ஆர்யனை பார்த்து “ரொம்ப நல்லா இருக்கு. அப்படித்தானே, ஆர்யன்?” என கேட்டான்.
கரீமா முறைக்க அவன் பேச்சை நிறுத்தவில்லை. “ருஹானாவும் இருக்கா. நம்ம அமைதியும் வந்துடுச்சி. நாம பெரிய குடும்பம். இல்லயா, கரீமா?” தன்னிடம் கேட்ட அம்ஜத்தை பார்த்து கரீமா ஆம் என மேம்போக்காக ஒத்துக்கொண்டாள். சல்மாவின் போன் அடிக்க, ‘லண்டனிலிருந்து முக்கிய அழைப்பு’ என அவள் எழுந்து சென்று விட்டாள்.
சாரா பெரிய சிக்கன் துண்டுகளை பரிமாறிக்கொண்டே வந்தவர், ருஹானாவிற்கு வைக்க வரும்போது அவள் வேண்டாமென தன் தட்டை நகர்த்தினாள். சாரா ஆர்யனை பார்க்க, அவன் அவளுக்கு வைக்க சொல்லி கண்ணை காட்டினான். ருஹானாவும் அதை பார்த்துவிட சாரா திரும்ப அவள் தட்டில் வைக்கும்போது தடுக்கவில்லை.
காய்கறி சாலட்டுக்கு மிளகுத்தூள் எடுக்க ஆர்யன் கை நீட்டியபோது அவன் முஷ்டியில் இருந்த இரத்த காயத்தை ருஹானா பார்த்துவிட்டாள். ரஷீத்திடம் தன்னை சுட்டவனைப் பற்றி ஆர்யன் பேசியதும், தன்னை இறக்கிவிட்டுவிட்டு வேகமாக சென்றதும் அவளுக்கு நினைவு வந்தது. ஒரு மெலிதான பெருமூச்சு விட்டவளுக்கு திரும்ப வலிக்க ஆரம்பித்தது.
அவள் இடது கை தானாக காயத்தை பிடிக்க, அதை பார்த்த ஆர்யனுக்கு அதன் பின் ஒரு ஸ்பூன் கூட உணவு எடுத்து வாயில் வைக்க முடியவில்லை. துணி கொண்டு வாயை துடைத்தவன் ‘நல்லுணவு’ என சொல்லி எழுந்து சென்று விட்டான். அதுவரை சிரமப்பட்டு அங்கே இருந்த கரீமாவும் “நான் போய் சல்மாவை கூட்டிட்டு வரேன். அவள் சூப் ஆறுது” என சொல்லி வெளியே போய்விட்டாள்.
வெளிய வந்த கரீமா, சல்மா தன் தோழியுடன் கவலையுடன் பேசிக்கொண்டு இருப்பதை கேட்டாள். “என் கால், மெசேஜ் எதுக்கும் பதில் கொடுக்க மாட்றான். அவனுக்கு என்ன ஆச்சோ தெரியல. நீ அவன் வீட்ல போய் பார்த்துட்டு வந்து எனக்கு சொல்லு” அதை கேட்டு சிரித்த கரீமா ‘அவன் எப்படி கூப்பிட்டாலும் வர மாட்டான், என் முட்டாள் தங்கையே!’ என்று தனக்குள்ளேயே சொன்னாள்.
——-
சாப்பிடாமல் தன் அறைக்கு விரைந்த ஆர்யன், மடிகணினியில் உள்ள காமிரா மூலம் ருஹானா தள்ளாடியபடி வீட்டுக்குள் வரும் பதிவை எடுத்து பார்த்தான். அவன் காரிலிருந்து அவளை இறக்கிவிட்டு சென்றதும் அவள் காயத்தில் கை வைத்தபடி மெதுவாக நடந்து வருவதை பார்த்தவன் ருஹானாவை மட்டும் பெரிதாக்கி அருகில் கொண்டு வந்து பார்த்தான். முகத்தில் வேதனை தெரிய அவள் அடி மேல் அடி எடுத்து நடந்து வருவதை கூர்ந்து பார்த்தவனுக்கு வேர்த்தது.
இன்னும் பெரிதாக்கி அவள் முகத்தையே பார்த்தவன், கதவு தட்டப்படும் ஒலியில் கணினியில் அந்த பதிவை வேகமாக மூடினான். ஜாஃபர் காபி கொண்டு வந்து வைத்து விட்டு ஆர்யன் முகத்தை தயக்கமுடன் பார்த்தான். “நீங்க அனுமதி கொடுத்தா நான் ஒன்னு உங்ககிட்டே சொல்லலாமா?” என ஜாஃபர் கேட்க ஆர்யன் தலை ஆட்டினான்.
“ருஹானா மேம் சரியா சாப்பிடல. ரொம்ப சோர்வா இருந்தாங்க. அவங்க நடையில கூட எதோ பிரச்சனை இருக்குற மாதிரி தெரியுது” இதை ஜாஃபர் சொல்லும்போது ஆர்யன் நிமிர்ந்து கவலையுடன் கவனித்தான். “அவங்களுக்கு உடம்பு சரியில்ல போல. என்னன்னு நான் கவனிக்கவா?” ஜாஃபர் முடிக்கக் கூட இல்லை. “வேண்டாம்” ஆர்யன் பதில் உடனே வந்தது. “புரிந்தது சார்” என சொல்லி ஜாஃபர் வெளியேறி விட்டான்.
அவன் செல்லவும் முன்னே இருந்த காபியை மறந்து ஆர்யனும் எழுந்து ருஹானாவை பார்க்க கிளம்பினான். படிகள் ஏறி கதவருவே சென்றவன், எதோ யோசித்து திரும்ப வந்து அமர்ந்துக்கொண்டான். என்றாலும் யோசனைகள் அவளை சுற்றியே சென்றன.
——-
இவான் அறையில் சோபாவில் அமர்ந்திருந்த ருஹானாவுக்கு மிக அதிகமாக வலித்தது. இவான் கீழே அமர்ந்து காகித கப்பல்களுடன் விளையாடிக் கொண்டிருக்க அவனுக்கு தெரியாமல் கண்ணீர் விட்டாள்.
“சித்தி நீங்க கப்பல்ல போயிருக்கீங்களா?“
“இல்ல செல்லம். ஆனா பெரிய படகுல பிரயாணம் செஞ்சிருக்கேன்”
“நான் போனதே இல்ல“ இவான் சோகமாக சொல்ல, அந்த சோகத்தை மாற்ற அவள் மெதுவாக சோபாவிலிருந்து கீழே இறங்கி அமர்ந்தாள். “உனக்கு அதை பத்தி நான் சொல்லவா?“ இவான் உற்சாகமாக தலையாட்டினான்.
ஒரு காகித கப்பலை கையில் எடுத்துக் கொண்டவள், “பெரிய விசில் சத்தம் கேட்கும். உடனே கப்பல் கிளம்பும். ஆழமான நீலக்கடல்ல பாய்ந்து புறப்படும். அலைகளை கிழிச்சிக்கிட்டு சர்னு வேகமாக போகும். பின்னாடி நுரை பொங்கும்” கப்பலை அசைத்துக் கொண்டு சொன்னாள்.
“நிறைய சீகல் (கடற்பறவை) கூடவே பறந்து வரும். கப்பல்ல இருக்குறவங்க அதுக்கு பேகல் (மெதுவடை போன்றது) சாப்பிட கொடுப்பாங்க. அதை தூக்கிட்டே சீகல் பறக்க பார்க்கும்” அவள் சுவாரஸ்யமாக விவரிக்க இவானும் “நிஜமாவா, சித்தி?“ என கேட்டான். அவளும் இவானை போலவே வேகமாக தலையசைத்தாள்.
“சித்தி, நாம கப்பல்ல போலாமா?” ஆவலோடு கேட்டான்
“நிச்சயமா போகலாம்”
“நம்மளும் பேகல் கொடுக்கலாமா, சீகலுக்கு?” அவன் கண்களில் ஆசை. உதட்டில் குறுநகை.
“ஓ! கண்டிப்பா தரலாம். செங்கடல்ல பறக்கற எல்லா சீகலுக்கும் கொடுக்கலாம்” அவன் கன்னத்தைப் பிடித்து ஆட்டியபடி சொன்னாள். இவான் சிரிப்பு மேலும் விரிந்துக்கொண்டே சென்றது.
அதுவரை ஆர்வமாக அவனுக்கு விவரித்துக் கொண்டிருந்தவளின் உற்சாகம் அப்படியே வடிந்தது.
“சித்தப்பாக்கு நிறைய வேலை இருக்கும். அதனால நம்ம கூட வரமாட்டாங்க” என இவானே சோகமாக சொன்னான்.
சிறிது யோசித்தவள் கேட்டாள், “உன் சித்தப்பாவை உனக்கு ரொம்ப பிடிக்குமா?”
இவான் வேகமாக தலையாட்டினான். ஆர்யன் மேல் நடந்த தாக்குதலும், ஆர்யன் கைமுஷ்டி காயமும் அவள் நினைவுக்கு வந்தது. இவான் தனியாக கப்பல்களுடன் விளையாடிக்கொண்டிருக்க, ருஹானா யோசனையில் ஆழ்ந்தாள். “அது முடியாது” என முணுமுணுத்தவள் “உன்னை இங்க விடமாட்டேன்” என தீர்மானமாக சொல்லிக்கொண்டாள்.
ருஹானா இவானை மடியில் போட்டு தலையை தடவிக் கொடுத்து தூங்க வைத்துக்கொண்டிருக்க, அங்கே ஆர்யன் லேப்டாப்பில் நடந்து வரும் ருஹானாவையே திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டிருந்தான். பின் அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமல் சையத்துக்கு அழைத்தான்.
அங்கே ஒரு வேனில் உணவகம் நடத்திக்கொண்டிருக்கும் சையத், மரங்களுக்கு கீழே போடப்பட்டிருந்த சிறிய பென்ச்களில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறிக்கொண்டே தன்னுடைய திறந்தவெளி அடுப்பையும் கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது ஆர்யன் போன் வரவும் எடுத்தார்.
“சொல் மகனே!”
“இந்த காயம் சீக்கிரம் குணமாகாதா, சையத் பாபா?” அதை கேட்ட அவர் சிரித்துக்கொண்டார். அவர் பதில் சொல்லும்முன் ஆர்யன் உடனே பேசினான்.
“அவன் சித்திக்கு அடிபட்டது இவானுக்கு தெரிஞ்சா கஷ்டமாகிடும்”. இவானுக்காக என ஆர்யன் சொன்னதை கேட்ட சையத்தின் புன்னகை இன்னும் விரிந்தது.
“அந்த பொண்ணு எப்பவும் வெளிக்காட்ட மாட்டா. ரோஷக்கார பொண்ணு. அதனால தான் சொன்னேன், நீ அவளை கவனிச்சிக்கணும்னு”
அது காதில் விழாதது போல தன் பிடியிலேயே நின்றான். “காயம் எப்போ ஆறும்?”
“அது ஒரு நாள்ல ஆறுற காயம் இல்ல. அவ பிடிவாதத்தை விட அதிகமா உனக்கு பொறுமை இருக்கணும். அப்போ தான் அது குணமாகும். நான் என்ன சொல்றேன்னு உனக்கு புரியுதா? அவளா வந்து உதவி கேட்க மாட்டா. நீ தான் போய் உதவி செய்யணும். சத்துள்ள சாப்பாடு சாப்பிடணும். அவளுக்கு ஓய்வு அவசியம் தேவை. அதை விட முக்கியம் நீ அவ மேல் ஒரு கண் எப்பவும் வச்சிருக்கணும்”.
அவர் அடுக்கடுக்காய் சொல்வதை கவனமாக கேட்ட ஆர்யன் “சரி சையத் பாபா! நன்றி” என்று சொல்லி போனை அடைத்தான்.