Advertisement

கரீமா தன் அடியாள் மூலம் ஆர்யன் மேல் தாக்குதல் நடந்ததும் ருஹானா அவனை காப்பாற்றி காயம் பட்டதும் தெரிந்து கொண்டதும் பெரும் திகைப்புக்கு உள்ளானாள். சல்மாவுடன் அதை பகிர்ந்து கொள்ள வந்தவள் தான் வந்தது கூட தெரியாமல் அவள் போனில் யாருடனோ தொடர்பு கொள்ள முயற்சிப்பது கொண்டு கடும் கோபம் கொண்டாள்.

வேகமாக வந்து அவள் கையிலிருந்த போனை பிடுங்கி சோபாவில் வீசியவள், “நீ இங்க போனையே பார்த்துட்டு கோட்டை விடு. அவ அங்கே ஆர்யனை காப்பாத்தி அவனை கைக்குள்ள போட்டு இந்த கோட்டையை பிடிக்க பார்க்குறா!” என கத்தினாள்.

“என்னக்கா நடந்தது?” என சல்மா கேட்க, அவளுக்கு கரீமா நடந்ததை சொல்ல சல்மா புன்னகையுடன் அதிரடி படம் பார்ப்பது போல சுவராசியமாக கேட்டாள். “நாம இங்க உன் கிறுக்கு மச்சான் கூட மல்லுக்கட்டிட்டு இருந்தா, அவ சுலபமா ஆர்யனை தட்டிட்டு போக பார்க்குறா” என சொல்லி கரீமா அவளை திட்ட வரவும், “அக்கா! மச்சானை எங்க ரொம்ப நேரமா காணோமே? என தங்கை அக்காவை திசை திருப்பி விட்டாள்.

“ஆமா, எங்க? தோட்டத்துலயும் காணோம். ஆர்யன் வரதுக்குள்ள கண்டுபிடிக்கணும்” என கரீமா நகர, சல்மா சில நாட்களாக பிடிக்க முடியாத தன் காதலன் இணைப்பை பெற முயன்றாள்.

கார் வரும் பாதையில் கவலையாக நடந்துக் கொண்டிருந்த அம்ஜத், ஆர்யனின் கார் உள்ளே வரவும் “ஆர்யன்..! ஆர்யன்…!” மகிழ்ச்சியாக ஓடிச் சென்றான். காரிலிருந்து இறங்கிய ஆர்யனை கட்டிக்கொண்டவன், “வா ஆர்யன்! எங்க போயிட்டே நீ? போனும் செய்யல. நான் ரொம்ப கவலைப்பட்டேன். உன்னை தேடிட்டே இருந்தேன்” என்று சொல்லி முத்தமிட்டான்.

“இனி இப்படி போகாதே. போன்ல பேசு. நம்ம அமைதிலாம் கேட்டு போச்சி பார்” என்று சொன்ன அண்ணனை பார்த்த ஆர்யன் “இல்ல அண்ணா! அடுத்த முறை கண்டிப்பா சொல்லிட்டு போறேன். நீங்க எவ்வளவு நேரமா இங்க நிக்கிறீங்க?” என கேட்டான். அப்போது அங்கே வேகமாக வந்த கரீமா, “காலைல இருந்து இங்க தான் நிக்கிறார். ஆர்யன் வந்தா தான் நான் உள்ளே வருவேன்னு பிடிவாதம் பிடிக்கிறார்” என்று சொல்ல, அண்ணனை தம்பி கைப்பிடித்து வீட்டினுள்ளே அழைத்து சென்றான்.

அம்ஜத்தை தூங்க அனுப்பிவிட்டு ஆர்யன், ருஹானாவின் மருந்துகளுடன் அவள் அறைக்கு சென்றான். காயத்தின் மீது கை வைத்தபடி கால்களை மடித்து அவள் அசந்து தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்து வாசலிலேயே நின்றான். ‘தூங்கும் அவளை பார்ப்பது தவறு’ என ஒரு மனம் சொன்னாலும் கண்கள் அவள் புறமே சென்றன. என்ன தான் கட்டுப்படுத்தி தலையை திருப்பினாலும் அடுத்த நொடி அவளையே பார்க்க விரும்பின.. திரும்பின… அவன் விழிகள்.

உள்ளே சென்று வாங்கி வந்த மருந்துகளை மேசையில் வைத்தவன் நிர்சலனமாய் உறங்கும் அவள் அருகில் நின்று இவன் சலனப்பட்டான். பார்வை அவள் மீது பாய்வதும், வலுக்கட்டாயமாக அதை வேறு பக்கம் மாற்றுவதும் என நின்றிருந்தவனின் மனதில் தன்னை காப்பாற்ற அவள் பாய்ந்ததற்கு சொன்ன காரணம் ஓடியது.

அதை நினைத்துக்கொண்டே அவளை மெய்மறந்து பார்க்க அவள் பிறை நெற்றியில் பனித்துளிகளாய் வியர்வை அரும்பி இருப்பதை கவனித்தான். இது சையத் பாபா வீடல்ல என்பதை மறந்தான். அவளை கவனிக்கும் தன் பணி முடிந்தது என்பதும் அவனுக்கு நினைவில்லை. அருகே சென்று துடைக்கும் காகித பெட்டியிலிருந்து திசு காகிதத்தை உருவியவன் அவள் நெற்றியில் அதி மென்மையாக ஒற்றி எடுத்தான்.

ஒவ்வொரு துளியாக துடைத்து முடித்தபின் பனி நீங்கிய முகம் துல்லியமாக தெரிய தன்னை மறந்து அப்படியே நின்றான். தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என அவன் உணர்வதற்குள் அவளிடம் அசைவு தெரிய சடாரென தன் கையில் இருந்த காகிதத்தை மறைத்தவன் பின்னடைந்து மேசை அருகே சென்று நின்று கொண்டான்.

உறக்கத்திலிருந்து விழித்த ருஹானா தன் அறையில் ஆர்யன் நிற்பதைக் கண்டு ஆடையை சரிப்படுத்திக்கொண்டே எழுந்து அமர்ந்தாள்.

“காயத்திலிருந்து ரத்தம் வந்ததா?” ஆரியன் கேட்டான்.

“பரவாயில்ல.. லேசான வலி தான். இப்போ நல்லா இருக்கேன்”.

தலையாட்டியவன் வாங்கி வந்த மருந்தை அவள் அருகில் வைத்து, “தவறாம மாத்திக்கோ” என்று சொல்லி அவள் கண்களை சந்திக்காமல் திரும்பி நடந்தான்.

“இவான் உங்கள கேட்டான்” ருஹானாவின் சொற்கள் அவனை தேக்கின. நின்று திரும்பினான். என்றாலும் அவள் முகத்தை பார்க்கவில்லை.

“உங்கள தேடுறான். நீங்க அவன் மேல கோபமா இருக்கீங்கன்னு கவலைப்படுறான்” தரையை பார்த்துக் கொண்டிருந்தவன் ஒரு நொடி அவளை பார்த்துவிட்டு மீண்டும் தலையை தாழ்த்தினான்.

“அப்படி இல்லன்னு நான் அவனுக்கு சொன்னேன். ஆனா…” என நிறுத்தினாள். புரிந்தது என்பதாய் அவளை பார்த்து தலையாட்டினான். அவளும் தலையாட்ட கதவருகே சென்றவன் அவளை ஒருமுறை பார்த்துவிட்டு கதவடைத்து வெளியே சென்று நின்றுக்கொண்டான்.

கரீமா தன் அறையிலிருந்து வெளியே வந்தவள், ருஹானா அறை வாசலில் ஆர்யன் யோசனையில் நின்றிருப்பதை பார்த்து அப்படியே கவனித்து நின்றாள். சில நிமிடங்கள் நின்ற ஆர்யன் பின் இவான் அறைக்கு செல்லும்வரை அவனையே நோட்டமிட்டாள்.

———-

“ஆர்யன் அவளுக்கு மருந்து கூட அவனே வாங்கிட்டு வரான். சாதாரணமா இப்படியெல்லாம் செய்யக்கூடியவன் இல்ல, அவன். அவ ஏதாவது மந்திரம் போட்டுருப்பாளா?” என கரீமா தங்கையிடம் புலம்ப “அக்கா! என்ன முட்டாள்தனம் இது. அவளுக்கு அடிபட்டதால ஆர்யனுக்கு குற்ற உணர்ச்சில இப்படி செய்றான்” என சல்மா தெளிவுப்படுத்த முயன்றாள்.

“ஆர்யனுக்காவது, உணர்ச்சிகள் இருப்பதாவது“ அதற்கும் கரீமா தடை சொல்ல, “அப்படின்னா அவளை காதலிக்க தொடங்கியிருப்பான்” சல்மா எளிதாக சொல்ல, “அது நடக்கவே முடியாது. அவன் அண்ணனை போல அவனும் ஒரு பைத்தியம் தான்” என கரீமா மறுத்தாள்.

“எதுவா இருந்தாலும் இதை இப்படியே தொடர விடக்கூடாது. இப்போ ருஹானாக்கு அடிபட்டதை மிஷாலுக்கு தெரிய வைப்போம். என்ன நடக்குதுன்னு வேடிக்கை பார்ப்போம்” என கரீமா குயுக்தியாய் திட்டமிட, சல்மாவுக்கும் ஆவல் பிறந்தது.

“அவளை பார்க்க மிஷால் இங்க வருவான்” சல்மா ஆர்வமாக ஆரம்பிக்க, “மிஷாலை மறுபடியும் இங்க பார்த்தா ஆர்யன் என்ன செய்வான்?” கரீமா அதற்கு சுவை கூட்டினாள். “அக்கா! நீயா போய் எப்படி மிஷால் கிட்டே சொல்லுவ? சந்தேகம் வரும் தானே?” என்று தங்கை சந்தேகம் கேட்க, “எனக்கு மடாபா உணவு சாப்பிட்ட ஆசையா இருக்கே” என கரீமா சிரித்தாள். அக்காவின் சாமர்த்தியம் கண்டு தங்கை மெச்சினாள்.

——–

உணவு மேசையில் அம்ஜத்தும், இவானும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, எதிரே சகோதரிகள் இருவரும் சிரிப்புடன் கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர்.

“மிஷால்ட்ட பேசிட்டேன்”

“இப்போ வருவானா?”

“நாளைக்கு கட்டாயம் வருவான்”

“நீ மாட்டிக்க போறே?”

அதெல்லாம் நடக்காது என்பது போல கரீமா தலையசைத்து சிரிக்க, ஆர்யன் அங்கே வந்து நடுவில் அமரவும் மாலை வணக்கம் பரிமாறிக்கொண்டனர். கரீமா தன் வேலையை ஆரம்பித்தாள்.

“ஆர்யன்! நீ இல்லாத நேரத்துல சல்மா இவானை நல்லா கவனிச்சிக்கிட்டா. அவன் கூடவே தான் இருந்தா. புக் படிச்சி காட்டினா. விளையாடினாங்க. ஏற்கனவே சல்மாக்கு குழந்தைங்கனா பிடிக்கும். இவானை அவளுக்கு ரொம்ப பிடிச்சிப் போச்சி” என அக்கா அடுக்கவும், தங்கை ‘இதெல்லாம் எப்போ நடந்தது?’ என்பது போல் பார்த்தாள்.

கரீமா முறைக்கவும் சல்மா தன் ஆச்சர்ய பார்வையை மாற்றி தன்னடக்கத்தோடு புன்னகைத்தாள். ஆனால் இந்த பெரு முயற்சி வீணாய் தான் போனது. ஆர்யன் அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. மாறாக ஜாஃபரை அழைத்து, “இவான் சித்தியை கூட்டிட்டு வாங்க” என்றான்.

கரீமாவும், சல்மாவும் முழிக்க “அவளை ஏன் இங்கே வர சொல்றான்?” என சல்மா கேட்க, “எதாவது தப்பு செஞ்சிருப்பா. ஆர்யன் அந்த தாக்குதலை மறைச்சான். இவ யார்கிட்டேயாவது சொல்லியிருப்பா. இப்போ பாரேன், சண்டையை” என கரீமா அலட்சியமாக சொன்னாள்.

ருஹானா தயங்கியபடி மெதுவாக வந்தவள் மாலை வணக்கம் சொல்ல அம்ஜத் மட்டும் புன்சிரிப்புடன் பதில் வணக்கம் சொன்னான். இவான் சிரிப்புடன் சித்தியை பார்த்திருந்தான். “என்னை வர சொன்னீங்களாமே?” என ருஹானா ஆர்யனிடம் கேட்க, அவன் ஏதும் சொல்லாது தன்னிடத்திலிருந்து எழுந்தான். அவன் எழுந்ததும் அம்ஜத்தும் குழப்பத்துடன் எழுந்தான்.

வலது பக்கம் நின்ற ருஹானாவை தாண்டி சென்ற ஆர்யன், இவான் நாற்காலிக்கு பக்கத்துக்கு நாற்காலி அருகே செல்லவும் அம்ஜத் அதற்கு அடுத்த நாற்காலிக்கு சென்றான். ருஹானா ஒன்றும் புரியாமல் நோக்க, கரீமா சிரிப்புடன் பார்த்திருக்க, ஆர்யன் அந்த நாற்காலியை நகர்த்தி பிடித்துக்கொண்டு ஜாஃபரை பார்த்து “இங்க ஒரு தட்டு வைங்க” என்று சொல்ல ஜாஃபர் சரியென தலையாட்டினான். பின் நேராக பார்த்து “இனிமேல் இவான் சித்தி நம்மோடு தான் இந்த மேசையில் சாப்பிடுவாங்க” என்று தீர்க்கமாக அறிவித்தான்.

அதை கேட்ட கரீமாவின் உணர்ச்சிகள் கொந்தளித்தாலும் முகம் உறைந்திருக்க, சல்மா கழுத்தை தடவினாள்.

நாற்காலியை பிடித்தபடி அவள் வருகைக்காக அவளை ஆழமாக பார்த்திருந்த ஆர்யனை ‘என்ன இது?’ என்று அகன்ற கண்கள் கலங்க பார்த்துக்கொண்டே இருந்தாள், ருஹானா.

 

இரவின் நொடிகளும் கவனமாய் 

கவனித்தது நெஞ்சை தொட….

அவன் உயிர் காத்த காரணம்

கேள்வியாய் முன்னிறுத்த…..

உன் எச்சரிக்கை மீறி

சூழ்ச்சியில் உன்னை

சிக்க வைத்திருந்தால்

காலமெல்லாம் குற்றவுணர்வே..

இதை அங்கீகரிக்கவோ

குடும்பத்தில் ஒருவராய் அடையாளம்..?

(தொடரும்)

Advertisement