Advertisement

அம்ஜத் செடிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தான், “ஆர்யன் இன்னும் வரல. இப்போ வந்துட்டே இருப்பான். அவன் இல்லனா அமைதி இல்ல”. மண்ணை கொத்திக்கொண்டிருந்த அம்ஜத்தை பார்த்து கொதித்து போன கரீமா, “உச்சி வெயில்ல என்ன செய்றீங்க?” என கத்திக்கொண்டே வந்தாள். அவளை பார்த்ததும், “ஆர்யன்… ஆர்யன்.. ஆர்யன் வந்துட்டானா? என அம்ஜத் ஓடிவந்து அவளை எதிர்கொண்டான்.

“இன்னும் இல்ல. உள்ள வாங்க. உங்க உடம்புக்குக்கு எதாவது வந்தா நான் பார்க்க மாட்டேன்” என அவள் கடுப்பாக கூற, “ஆர்யன் வந்தா தான் நான் வருவேன். எனக்கு அமைதி வேணும்” என அம்ஜத் மறுபடி போய் தொட்டிகளுக்கு நடுவே அமர்ந்துக்கொண்டான்.

“எப்படியோ போங்க!” என இரைந்தபடி அவள் உள்ளே சென்று போனில் ஆர்யனுடன் தொடர்பு கொள்ள முயல இணைப்பு கிடைக்கவில்லை. தலையையும், கையையும் வெட்டியவளை பார்த்து, “ஏன் அக்கா இப்படி பதட்டமாவே இருக்கே? உடம்புக்கு எதாவது வந்துறப்போகுது” என்று அங்கே வந்த சல்மா சொல்ல, கரீமா கொதிநிலைக்கே சென்றாள்.

“அங்கே என் புருஷன் பூச்சி பொட்டுகளோட பேசிட்டு இருக்கான். என் உதவாக்கரை தங்கை என் பேச்சு எதுவும் கேட்க மாட்றா. இந்த ஆர்யன் எங்க போனான்னே தெரியல. என்னை என்ன ஊஞ்சல் ஆட சொல்றியா?” என கரீமா பல்லை கடித்தாள்.

“சரிக்கா, கொஞ்சம் பொறுமையா தான் இரேன்” என சல்மா சொல்ல, “ஒருவேளை அவ சொந்த ஊருக்கு போகாம இருந்தா.. ரெண்டு பேரும் சேர்ந்து எங்கயாவது தங்கி இருந்தா.. அவ ஆர்யனோட நெருக்கமாயிருந்தா…” என்று கரீமா அடுக்கிக் கொண்டே போக, “அக்கா! ஆர்யன் உன்கிட்டே பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? நீ ஓவரா தான் யோசிக்கிறே” என சல்மா சொன்னபோதும் கரீமா யோசித்துக்கொண்டே தான் இருந்தாள்.

——–

காரில் உட்கார்ந்திருந்த ருஹானா யோசித்துக்கொண்டே இருக்க, அவள் காயத்தை பார்த்தபடியே ஆர்யன் கார் ஓட்டிக் கொண்டிருந்தான். ‘இன்னுமா மிஷாலை அடிச்சவங்களை கண்டுபிடிக்கல, ரஷீத்?’ என்ற ஆர்யனின் கேள்வியும், ‘ராத்திரியெல்லாம் உன்னை பார்த்துக்கிட்டது ஆர்யன் தான்’ என்ற சையத்தின் குரலும் அவள் காதில் ஒலித்துகொண்டே இருந்தது.

அடிபட்ட இடம் வலிக்கவும், ருஹானாவின் கை தானே அங்கே சென்றது. திடீர் என்று காரின் வேகம் குறைந்தது. வேதனையில் சுருங்கிய அவளின் முகத்தை பார்த்த ஆர்யன் எட்டி வந்து அவள் பக்கம் இருந்த விசையை தள்ள அவள் இருக்கை பின்னால் சாய்ந்து அவள் வசதியாக அமர ஏதுவானது. பின்பு அலுங்காமல் குலுங்காமல் மெல்ல காரை செலுத்தினான்.

“நன்றி!” என ருஹானா சொல்ல அவன் காதில் விழுந்தது போல காட்டிக்கொள்ளவில்லை. “இவான் நல்லா இருக்கானா?” என்ற அவளின் கேள்விக்கு “ஆம்” என ஒற்றை வார்த்தை பதில் வந்தது. “இந்நேரம் என்னை தேடிட்டு இருப்பான். நீங்க கொஞ்சம் வேகமா போங்களேன். ஏன் இவ்வளவு மெதுவா ஓட்றீங்க? என கேட்டாள். திரும்பி அவள் காயத்தை கவனித்த ஆர்யன் அவளுக்கு பதில் ஏதும் சொல்லவில்லை. அவள் முகத்தையும் பார்க்கவில்லை.

“நீங்க என் மேல கோவமா இருக்கீங்களா, நான் சையத் சார் வீட்ல தங்க மாட்டேன்னு சொன்னதால?” என அவள் மெதுவாக கேட்க அப்போதும் திரும்பி அவள் காயத்தையே பார்த்தான். “இவான் என்னை தேடிட்டு இருக்கும்போது என்னால எப்படி வேற இடத்துல தங்க முடியும்?” என அவள் சொல்ல காரை ஓரமாக நிறுத்தினான். அவள் குழப்பமாக அவனை ஏறிட்டாள்.

அவள் புறம் திரும்பி அவளை பார்த்து கேட்டான், “ஏன் அப்படி செய்தே?”. பொதுவாக அவன் கேட்டாலும் எதை பற்றி கேட்கிறான் என அவளுக்கு புரிந்தது. ஆனாலும் அவள் பதில் சொல்லாமல் திரும்பிக் கொண்டாள். அவள் எச்சில் விழுங்குவது அவள் தொண்டையில் தெரிந்தது. கோபமாக வந்தது அடுத்த கேள்வி “ஏன் துப்பாக்கி குண்டுகளுக்கு நடுவுல வந்தே?”

அவன் முகத்தை தயக்கமாக ஏறிட்டவள், “நீங்க என்னை தடுத்தீங்க. காரில இருந்து இறங்காதேன்னு சொன்னீங்க. நான் உங்க பேச்சை கேட்கல. என் அஜாக்கிரதையால நீங்க இறந்திருப்பீங்க” என்று சொல்லி திரும்பிக் கொண்டாள். ஆர்யன் அப்படியே அசைவற்று எதிரே பார்த்திருந்தான். ருஹானா அவனை நோக்கி “நீங்க சொன்னதை நான் கேட்ருக்கணும். மன்னிச்சிடுங்க” என்றும் சொல்ல ஆர்யன் சடாரென திரும்பி அவள் முகத்தை பார்த்தான்.

‘இப்படியும் ஒரு பொண்ணு இருப்பாளா?’ என்பது போல அவளை நம்ப முடியாமல் பார்க்க, அவன் பார்வையின் வீச்சு தாங்காமல் அவள் நேராக பார்த்தாள். அவளிடமிருந்து அவனால் கண்ணை அசைக்க முடியவில்லை. நிமிடங்கள் கழிய, “மிஷால் விஷயத்திலயும் உங்கள தப்பா குற்றம் சொன்னதுக்கும் நான் மன்னிப்பு கேட்கறேன்” என அவனை பார்த்து ருஹானா சொல்லவும், ‘இது எப்போ இவளுக்கு தெரிந்தது?’ என இன்னும் வியப்பாக புருவம் உயர்த்தி அவளை பார்த்தான்.

பின்பே கார் நின்றுக் கொண்டிருப்பதை உணர்ந்து காரை எடுத்தான். சிறிது தூரம் சென்றதும் அவள் கலங்கிய கண்களை பார்த்து, “ரொம்ப வலிக்குது தானே?” என அவன் கேட்க, “அப்படி பெருசா இல்ல” என்று ருஹானா மறுத்தாள். “உன்னை நான் கூட்டிட்டே வந்துருக்கக் கூடாது. வீட்ல உள்ளவங்களுக்கு கண்டிப்பா தெரியத் தான் போகுது” என்று அவன் சொல்ல “கவலைப்படாதீங்க, தெரிய வராது” என்று உறுதியளித்தாள்.

சற்று நேரத்தில் வேறு ஒன்று நினைத்தவள், “அவங்க உங்கள கொல்ல பார்த்தாங்க. திரும்ப உங்கள தாக்க வந்தா என்ன ஆகும்? இவா…” சத்தமாக கேட்டு பாதியிலேயே நிறுத்திக்கொண்டாள். அவன் பதில் சொல்லாவிட்டாலும் அவள் கேட்க வந்ததை புரிந்துக்கொண்டான். யோசனையில் ஆழ்ந்தான். “அல்லாஹ் காப்பாற்றட்டும்” என ருஹானா பெருமூச்சு விட அவன் தலை நிமிரவே இல்லை.

ரஷீத் அழைக்க அதுவரையில் நிலவிய மௌனம் கலைந்தது. “ஆர்யன்! சுட்டவனை பிடிச்சிட்டோம். சொல்லுங்க.. அவனை என்ன செய்ய?” என ரஷீத் கேட்க, ஆர்யனுக்கே உரிய கடுமை அவனிடம் ஓடி வந்து ஒட்டி கொண்டது. “நீங்க ஒன்னும் செய்ய வேணாம். நான் வந்து பார்த்துக்கிறேன்” கோபமாக சொல்ல ருஹானா திகைப்பாக பார்த்தாள்.

அர்ஸ்லான் மாளிகை வந்துவிட, காரை நிறுத்தியவன் அவளை கீழே இறங்க சொன்னான். “ஆனா?” என அவள் தயங்க, “உன்னை இறங்க சொன்னேன்” என அழுத்தி சொல்ல அவள் மிகவும் சிரமப்பட்டு காரை விட்டு இறங்கினாள். அவளை ஓரக்கண்ணால் பார்த்தவன் அவள் நடந்து செல்லவும் காரை திருப்பி வேகமாக செலுத்தினான்.

ருஹானா வருகிற தகவல் கிடைத்ததும் கரீமா மேலும் குழம்பி போனாள். “அவ சொந்த ஊருக்கு போனதா சொன்னான். அப்புறம் எப்படி அவனே அவளை கொண்டுவந்து விட்டுட்டு போறான்? வேற யாரையும் அனுப்பி அவளை கூப்பிட்டுருக்கலாமே” என அவள் பலவாறாக அங்கலாய்க்க, போனை பார்த்துக்கொண்டிருந்த சல்மா கண்களை உருட்டி சலித்துக்கொண்டாள்.

ருஹானா காயத்தை பிடித்தபடி மாளிகை உள்ளே வர, வாசலுக்கு வெளியே நான்கு படிகளும், உள்ளே மூன்று படிகளும் ஏறுவதற்குள் மிகவும் தடுமாறிப் போனாள். அவளை பார்தததும் கரீமா விரைந்து அவளிடம் வந்தாள். ருஹானா மேல் மாடி ஏறி செல்லும் முன் அவளை தடுத்தவள், “ஒருவழியா வீடு வந்து சேர்ந்தியா, டியர்.? உனக்காக தான் நான் காத்திருக்கேன். எங்க தான் போனீங்க?” என வேகமாக கேட்டாள்.

“நான் அவசரமா ஊருக்கு போக வேண்டியதாயிடுச்சி. அங்கே இருந்து தான் வரேன்” என ருஹானா சொல்லவும், மேலும் கரீமா விசாரிப்பதற்குள் இவான், “சித்தி..!” என ஓடிவந்து அவளை கட்டிக்கொண்டான். அவன் மோதிய இடம் குண்டடிப்பட்ட பகுதியாக இருக்க ருஹானாவிற்கு வலி உயிர் போனது. கண்களை மூடிக்கொண்டு வலியை தாங்கிக்கொண்டாள். அவள் அவஸ்தையை கரீமா பார்த்தாள்.

“என்னுயிரே! அன்பே!” அவளும் இவானை தடவிக் கொடுக்க, கரீமா, “என்னாச்சி ருஹானா? நீ ஓகே தானே?” என கேட்டாள். ”எனக்கு ஒன்னும் இல்லயே. நான் நல்லா இருக்கேன்” என ருஹானா பதிலளித்தாள். “சித்தி! நீங்க திரும்பி வர மாட்டீங்கன்னு நான் ரொம்ப பயந்து போயிட்டேன்” என இவான் அவள் கையை பிடிக்க, “அது போல எப்பவும் நடக்காது, என் செல்லம். உன்னை விட்டு எப்பவும் நான் போக மாட்டேன், சித்தியின் உயிரே!” என்று ருஹானா சொல்லி அவன் கன்னங்களை தடவினாள்.

சோபாவில் அமர்ந்தபடி இதையெல்லாம் சல்மா பார்த்துக்கொண்டு இருந்தாள். “சித்தி! நாம விளையாடலாமா?” என இவான் கேட்க, ருஹானா என்ன செய்வது என அறியாமல் திகைத்துப் போனாள். நல்லவேளையாக உதவிக்கு வந்த ஜாஃபர், “லிட்டில் சார்! நீங்க இன்னும் சாப்பிடலயே! வாங்க சாப்பிடலாம்” என அழைக்க, ருஹானாவும், “நீ போய் சாப்பிட்டு வா. நானும் உடை மாத்திட்டு வரேன். விளையாடலாம், அன்பே” என சொல்லி இவானை அனுப்பிவிட்டு கரீமாவை பார்த்து தலையசைத்துவிட்டு மிக மெதுவாக படியேறினாள். கரீமாவும் ‘இவ எதோ மறைக்கிறா, என்னன்னு கண்டுபிடிப்போம்’ என அவளையே பார்த்திருந்தாள்.

———-

கடற்கரையோரம் ருஹானாவை சுட்டவனை அடியாட்கள் பிடித்துக்கொண்டு நிற்க, ரஷீத் ஆர்யன் வருகைக்காக காத்து நிற்க, வேட்டைக்கு செல்லும் வேங்கை போல ஆர்யன் நடந்து வந்தான். அவன் அடங்கா கோபம் கண்ட ரஷீத், “ஆர்யன்! பசங்க பார்த்துக்குவாங்க” என தடுக்க பார்த்தான். அவனை கை காட்டி நிறுத்திய ஆர்யன் சுட்டவன் முன்னே வந்து நின்றான்.

ருஹானா தன் முன்னே ஓடிவந்து குண்டடிப் பட்டது அவன் கண்முன்னே தோன்றியது. ‘என்னால நீங்க இறந்திருந்தா’ எனும் அவள் குரல் காதில் ஒலித்தது. கை முஷ்டியை இறுக்கியவன் எதிரே நின்றவன் முகத்தில் சரமாரியாக குத்தினான். அவன் கீழே விழுந்த பின்னும் விடவில்லை. ஆர்யன் கையில் இருந்து இரத்தம் கொட்டியது. ரஷீத் வந்து, “போதும், ஆர்யன்! விடுங்க அவனை! கோபம் கட்டுப்படுத்துங்க, ஆர்யன்” என அவனை பிடித்து இழுக்கும்வரை ஆர்யன் நிறுத்தவில்லை.

ஆட்களிடம் கண்ணை காட்டி அடிபட்டவனை அகற்றும்படி உத்தரவிட்ட ரஷீத், “ஆர்யன்! நீங்க ஓகே தானே?’ என கேட்டான். அவனுக்கு பதில் சொல்லாமல் தன் கோட்டை சரிசெய்தபடி ஆர்யன் இன்னும் கோபமாக நின்றான்.

——–

ருஹானா தன் அறையில் உடை மாற்றி, காயத்தின் கட்டையும் மிகுந்த வலியுடன் மெதுவாக மாற்றி கண்ணாடி முன் நின்று பார்த்தாள். போட்ட கட்டை சட்டைக்கு உள்ளே தள்ளினாள். வலி மிக அதிகமாக இருந்தது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு மருந்து, பிளாஸ்டர் போன்றவற்றை மறைத்து வைத்தாள்.

போனை எடுத்து மிஷாலுக்கு அழைத்தாள்.

“என்ன ஆச்சி, ருஹானா? என் அழைப்பை நீ எடுக்கவே இல்ல. நான் ரொம்ப பயந்து போனேன். அவன் உன்னை எதாவது தொல்லை செய்தானா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல, மிஷால். என் போன்ல சார்ஜ் இல்ல. நான் இவான் கூட விளையாட்டிட்டு இருந்தேன். கவனிக்கல.”

“உண்மையை சொல், ருஹானா. என்கிட்டே எதையும் மறைக்காதே”

“உணமையா தான் சொல்றேன், மிஷால். ஒன்னும் பிரச்சனை இல்ல”

“அப்படியே இருந்தா நல்லது. அவன் உன்னை தொந்தரவு செய்தா நீ உடனே எனக்கு சொல்லணும், சரியா?”

“சரி மிஷால். எல்லாம் சரி தான். நான் அப்புறம் உன்னை கூப்பிடுறேன்” என்று சொல்லி போனை வைத்தவள் மெதுவாக கட்டிலில் சாய்ந்து அமர்ந்தாள்.

“சித்தி! நான் உள்ளே வரவா?” என கேட்டபடி இவான் கையில் ஒரு புத்தகத்துடன் வந்தான். “வா என் தேனே!” என்றபடி தன் அருகில் வந்து நின்றவனை கஷ்டப்பட்டு தூக்கி மடியில் உட்கார வைத்தாள். அவள் வேதனையை பார்த்து இவான், “என்ன சித்தி?” என கேட்டான். “ஒன்னுமில்ல, செல்லம்” என்று சொன்னவள் அவனுக்கு கதை புத்தகம் படித்துக்காட்ட ஆரம்பித்தாள்.

கதை சொல்லி முடித்தவள் அதிலுள்ள நீதியையும் இவானுக்கு எடுத்துரைத்தாள், “உண்மை எப்பவும் வெளிப்படையா தெரியாது. இதயம் வழியா பார்த்தா தான் உண்மை தெரியும்”

“உனக்கு கதை பிடிச்சிருக்கா, இவான்?”

“ரொம்ப பிடிச்சிருக்கு, சித்தி”

அவன் தலை கோதி முத்தமிட்டவள் “மீதி புத்தகம் அப்புறம் படிக்கலாம், அன்பே. இப்போ உன் ரூம் போய் இரயில் விடலாமா?” என்று கேட்டாள். ஆனால் இவான் முகத்தில் உற்சாகம் இல்லை. சிந்தனையே இருந்தது.

“ஏன் செல்லம் கவலையா இருக்கே?”

“சித்தப்பா ஏன் இன்னும் வரல, சித்தி? எனக்கு உடம்பு சரியில்லாம விழாக்கு போக முடியாம போச்சே, அதனால சித்தப்பா என்மேல கோவமா இருக்காரா?”

“அப்படிலாம் இல்ல, அறிவே! உன் சித்தப்பாக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். அவர் வேலையா இருக்கார். முடிச்சதும் வந்திடுவார். வீட்டுக்கு வந்ததும் உன்னை தான் முதலில் பார்ப்பார், சரியா?” சமாதானப்படுத்தி விளையாட அழைத்தாள்.

இவான் மனக்காயம் கண்டு தன் உடல் காயம் மறந்த ருஹானா திரும்பவும் அவனை தூக்க முயற்சி செய்ய காயத்தில் இரத்த கசிவு ஏற்பட்டது. “நீ உன் ரூம்க்கு போ. சித்தி உடை மாறிட்டு வரேன்” என இவானை அனுப்பி வைத்துவிட்டு காயத்தை ஆராய்ந்தாள்.

——

Advertisement