Advertisement

திரும்ப திரும்ப ஆர்யனின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்த கரீமா அவன் எந்த அழைப்பையும் ஏற்காததால் கடுப்பானவள் ரஷீத் போனுக்கு அழைத்தாள். “போலீஸ் ஸ்டேஷன் போய் கையெழுத்து போடனும்ன்னு காலைல கிளம்பினவங்க இன்னும் வரல. ஆர்யன் போனும் எடுக்க மாட்றான். இங்க இவானும் ரெண்டு பேரையும் கேட்டுட்டே இருக்கான். சொல்லு ரஷீத் எங்க ரெண்டு பேரும்?” 

ஆர்யனின் நிழலான ரஷீத், “எனக்கும் எதும் தெரியலயே மேம். எனக்கு தெரிந்ததும் கண்டிப்பா உங்களுக்கு சொல்றேன்” என்று எஜமான் சொன்னபடியே சொன்னான். 

கரீமா அருகே இரயில் வண்டியை பாதையில் விட்டு விளையாடியபடியே இவான் வாசலை பார்த்துக் கொண்டிருந்தான். ஜாஃபர், “லிட்டில் சார், இரயில் வண்டி சாயுது பாருங்க.. பிரயாணிகள் வெளிய விழுந்துட போறாங்க” என இவானின் கவனத்தை வாசலிலிருந்து விளையாட்டிற்கு திருப்பினான். “சித்தி ட்ரைன்ல ஏறி போயிருப்பாங்களா?” என இவான் தன் பயத்தை வெளியிட்டான். “அப்படிலாம் இருக்காது. ரெண்டு பேரும் வேலையா இருப்பாங்க. முடிச்சிட்டு வந்துடுவாங்க. நீங்க வாங்க, நீங்க தூங்கற நேரமாச்சி” என ஜாஃபர் இவானை அழைத்து செல்ல, கரீமா கண் காட்ட சல்மாவும் தன் போனை மூடி அவர்கள் பின்னால் சென்றாள். 

இவான் காலை கட்டிக்கொண்டு கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருக்க, மறுமூலையில் சல்மா போனில் மூழ்கியிருக்க, இடையே சிறுவர் கதை புத்தகம் கிடந்தது. 

” சித்தியும் சித்தப்பாவும் எங்கே இருக்காங்க?” 

“இருக்காங்க, இருக்காங்க” 

“என் சித்தி எப்போ வருவாங்க?” 

“வருவாங்க, வருவாங்க?” 

“என்னை விட்டு சித்தி  தூரம் போக மாட்டாங்கல?” 

இவானின் தொடர்ந்த கேள்வித் தாக்குதல்களில் சோர்வடைந்த சல்மா, “சின்ன பசங்கலாம் இந்த நேரத்துக்கு தூங்கி போயிருப்பாங்க. நீ ஏன் இப்படி முழிச்சிட்டு இருக்க? வந்து படு. நீ நல்லா தூங்கலனா வளரவே மாட்டே. இதே உயரத்திலயே நின்னுடுவ” என பயமுறுத்த அவனும் படுத்து கண்மூடிக் கொண்டான். சல்மா அவன் மேல் போர்வையை போர்த்தி அகன்றாள். 

அவள் சென்றதும் எழுந்த இவான் மேசை மேல் இருந்த இரண்டு காகித கப்பல்களை எடுத்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தான். 

         ——

ருஹானாவின் வெப்பநிலையை சரிபார்த்து விட்டு வெப்பமானியை துடைத்துக் கொண்டிருந்த சையத்திடம் பேச ஆர்யன் வர, சையத் கைத்தொலைபேசி மணி ஒலித்தது. போனில் பேசி முடித்த சையத், “ஆர்யன்! முக்கியமான வேலை. நான் உடனே போகனும். நீ இந்த பொண்ணை மிக கவனமா பார்த்துக்கோ. அப்பப்போ டெம்பரேச்சர்  சரிபாரு. தண்ணி கொடுக்காதே. பஞ்சை நனைச்சி உதட்டுல வைச்சி எடு. காய்ச்சல் அதிகமானா நீதான் இன்ஜெக்ஷன் கொடுக்கனும். உனக்கு தெரியும் தானே” என கேட்க ஆர்யனும் தலையாட்டினான். 

“தையல் இப்போ தான் போட்ருக்கேன். எந்த காரணம் கொண்டும் அது பிரிந்திட கூடாது. அசைவு இல்லாம பார்த்துக்கோ. லேசா தையல் விலகினாலும் ஆஸ்பத்திரியில கூட ஒன்னும் செய்ய முடியாது.  என்ன சொல்றேன்னு உனக்கு புரியுதுல.  அந்த பொண்ணு கொஞ்சம் கூட நகரக் கூடாது. ஒரு நொடி கூட அவ மேல இருந்து உன் பார்வையை திருப்பிடாதே” என சையத் தெளிவாக சொல்ல ஆர்யன் யோசனையோடு தலையாட்டினான். என்ன யோசனை? ‘இவானை கண்ணெடுக்காம கவனின்னு அவளை நான் கட்டாயப்படுத்தினேன். இப்போ அவளை நான் அப்படி பார்க்கற மாதிரி ஆச்சே’ என யோசித்திருப்பானோ? 

என்றாலும் சையத் வார்த்தைகளுக்கு செவி சாய்த்தவன், “சையத் பாபா! உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா?” என கேட்டான். “நான் என் வேலைய பார்த்துக்கறேன். நீ நான் சொன்னதை செய்” என்று சொல்லிவிட்டு சையத் வேகமாக சென்றுவிட்டார். 

ருஹானா படுத்திருக்கும் அறைக்கு வந்தவன் உணர்வற்ற அவளையே பார்த்தபடியே சில நிமிடங்கள் நின்றான். அவள் நெற்றியில் முத்து முத்தாக வியர்த்திருக்க பக்கத்திலிருந்த சிறிய துண்டை எடுத்து துடைக்க குனிந்தான். அவள் முகம் வரை துண்டை கொண்டு போனவன் தயங்கினான். பின் அவள் வியர்வையை துடைக்காமல் துண்டை அங்கேயே போட்டு விட்டு கட்டில் காலருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தான். 

             —–

அர்ஸ்லான் மாளிகையில் கரீமாக்கு இருப்பு கொள்ளவில்லை. திரும்ப ஆர்யனுக்கு முயற்சிக்க அவன் போன் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தது. ‘எங்கே தான் போனாங்க?’ என குழம்பியவளை இன்னும் வெறுப்பேற்ற அங்கே வந்த அம்ஜத், “ஆர்யன் இன்னும் வீட்டுக்கு வரலயா? எனக்கு கவலையா இருக்கே! நம்ம வீட்டோட அமைதி என்ன ஆகும்?” என புலம்ப முகத்தை கர்ணகொடூரமாக்கிய கரீமா பதில் சொல்லும்முன் குறுஞ்செய்தி வந்த சத்தம் கேட்டது. 

“ஆர்யன் தான் அனுப்பி இருப்பான்… பார்.. பார்” என அம்ஜத் சொல்ல.. “இருங்க, அவன் தான்.. படிக்கிறேன்” என்று சொன்னவள் அதை வாசித்தாள். ‘நான் ஒரு வேலைல மாட்டிக்கிட்டேன். இரவு வீட்டுக்கு வர முடியாது. நாளைக்கு வரேன். இவான் சித்தி சொந்த ஊருக்கு போயிருக்கா’ என்று அது சுருக்கமாக இருந்தது. 

அதற்குள் அம்ஜத் என்ன என்ன என பரபரக்க, “ஆர்யனுக்கு வேலையாம். நாளைக்கு வர்றானாம்” கரீமா பல்லைக் கடித்துக் கொண்டு சொல்ல.. “நாளைக்கா? அதெல்லாம் முடியாது.. இன்னைக்கு வரனும்.. இன்னைக்கு அமைதி வேணும்” என கத்திக் கொண்டே அம்ஜத் உள்ளே சென்றான். 

“நீயும் உன் அமைதியும்!” என கத்தியவள் தன் அடியாளுக்கு போன் செய்து ஆர்யனையும், ருஹானாவையும் எங்கே என தேட சொன்னாள். 

          ——–

ருஹானாவின் முகத்தையே பார்த்தப்படி அமர்ந்திருந்த ஆர்யன் அவளை தலை முதல் கால் வரை பார்த்தான். பின்பு பார்வையை திருப்பிக் கொண்டான். அப்போது அவனுக்கு ஒரு பயங்கர சந்தேகம் தோன்றி உடனே எழ வைத்தது. அசைவின்றி அவள் கிடந்ததால் அவள் அருகில் சென்று தலையை திருப்பி காதை உன்னிப்பாக தீட்டி கவனித்தான், அவளுக்கு மூச்சு வருகிறதா என்று. சில நிமிடங்கள் கேட்டபின்னே மனப்பாரம் நீங்கிய தன் தலையை நேராக்கியவன் அவள் முகத்தை மிக நெருக்கத்தில் பார்த்தான். 

முகமெல்லாம் வியர்வைத்துளிகள் பூத்திருக்க… இந்த முறை எந்த தயக்கமும் இல்லாமல் துணியை எடுத்து அவள் நெற்றி, கன்னங்கள், நாடி என்று பூவை வருடுவது போல ஒற்றி எடுத்தான். பஞ்சில் தண்ணீர் ஊற்றி அவள் இதழ்களிலும் லேசாக தடவினான். காலருகே இருந்த நாற்காலியை சற்று முன்னே எடுத்து போட்டு அமர்ந்து கொண்டான். பின் எந்த சுணக்கமும் இன்றி அவளையே பார்த்திருந்தான். 

       ——–

மிஷாலும் ருஹானாவை அழைத்தவன் அவள் போன் தொடர்பு கிடைக்காமல் கரீமாக்கு அழைக்கிறான். இது தான் சாக்கு என்று அவள் ஆர்யனுடன் வெளியே சென்றிருப்பதாவும், இன்று இரவு வெளியே தங்கி நாளை தான் மாளிகை திரும்புவார்கள் என நளினமாக மூட்டி வைத்தாள். மிஷாலுக்கு ஒரே யோசனை.. ‘அவனுடனா.. ருஹானாவா… வெளியே செல்வதா.. வாய்ப்பே இல்லை…  ருஹானா அப்படிப்பட்ட பெண் இல்லையே…’ ஒரே குழப்பம், அவனுக்கு. 

      ——

ருஹானாவின் லேசான முக மாறுதலை கவனித்த ஆர்யன் அவள் நெற்றியை தொட்டு பார்த்தான். மெல்ல சூடு ஏறுவதுபோல இருக்கவும் அவள் முகத்தை மென்மையாக துடைத்து விட்டான். இன்னும் சற்று நாற்காலியை முன்னே இழுத்து போட்டு அமர்ந்தவன், அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தான். பார்க்க பார்க்க அந்த அழகிய முகம் அவனுக்கு ஒரு அமைதியை தர அவன் முகம் சுருக்கங்கள் நீங்கி மிருதுவானது. 

அவனின் தனி உலகத்தில் இருந்து வெளியே இழுத்து வந்தது, ருஹானாவின் போன் அழைப்பு.  அவள் மேல்கோட்டிலிருந்து போனை எடுத்து பார்க்க அழைத்த மிஷால் பெயர் அவனை திரும்ப கடுமையாக்கியது. போனையும், ருஹானாவையும் மாறி பார்த்தான். அவள் முகம் பார்த்து முறைத்தான், ஏதோ அவள் சொல்லித்தான் மிஷால் அழைத்தது போல… 

போனை முழுதாக அடைத்தவன், கோபமாக நாற்காலியில் உட்கார்ந்து புருவ சுளிப்புடன் அவளை பார்க்க தொடங்கினான். திடீரென அவள் உடலில் லேசாக தோன்றிய நடுக்கம் மெல்ல மெல்ல அதிகமானது. மற்ற எல்லாவற்றையும் மறந்தவன் பதறிச்சென்று அவள் மணிக்கட்டைப் பற்றினான். அவள் நடுக்கம் குறையவில்லை. முகத்தில் வேதனை அதிகரித்தது. 

அவள் முழங்கைகளை பற்றினான். நடுக்கம் நிற்கவில்லை. 

அவள் தோள்களை பற்றினான். அப்போதும் நிற்கவில்லை. 

வேகமாக அவளை தூக்கியவன் தன்னோடு சேர்த்துக்கொண்டான், அவன் வலது தோளில் அவள் முகம் பதிய..  இடதுகையால் அவள் பின்னந்தலையை தாங்கி.. 

மெல்ல மெல்ல அவளுக்கு நடுக்கம் குறைய, குறைய.. 

இவனுக்கோ இதுவரை  உள்ளே அசைந்தது, பிறண்டது, நகர்ந்தது எல்லாமே ஆட்டம் காண ஆரம்பித்தது. 

வெளியே அசைவற்று தனக்கு  என்ன நடக்கிறது என புரியாமல் பார்த்திருந்தான். 

அவள் நடுக்கம் முற்றிலும் நின்றதும் அவள் முகத்தை குழந்தையை தாங்குவது போல முன்னே கொண்டு வந்து பார்த்துக் கொண்டே இருந்தான். 

என்னை காத்து நின்றவள்

துடிக்கும் துடிப்பு.. 

என்னுள் அனலாய் தகிக்க

அணைத்துப் பிடிக்கிறேன்

பெண்நிழல் அறியாத நான்.. 

அமைதி அடைகிறாள் அவள்

தாக்குதல் நின்று விட்டதா? 

குளிரும், நெருப்பும் எனக்குள்ளே

சுழலாய் வீசி தென்றலாய்… 

(தொடரும்)

Advertisement