Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 15 

குண்டடிபட்ட ருஹானா ஆர்யன் தாங்கிப் பிடித்ததையும் மீறி கீழே நழுவினாள். மண்டியிட்ட ஆர்யன் அவளை அப்படியே மடி தங்கினான். ‘ஆஹ்’ என கத்தியபடி திரும்பவும் ஒருமுறை குண்டு வந்த திசை நோக்கி சுட்டான். கலங்கிப்போன ஆர்யன் ருஹானாவின் முகத்தை பார்க்க அவளுக்கு பெரிதாக மூச்சிரைத்தது. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. கண்கள் தானாக மூடிக்கொண்டன. அவள் கழுத்தில் கட்டியிருந்த ஸ்கார்ப்பை உருவிய ஆர்யன், அதை அவள் காயத்தில் வைத்து அழுத்தினான். பின் அவள் இடதுகையை அதன்மீது கொண்டு வந்து வைத்தான். 

அரக்க பரக்க அவளை தூக்கியவன் கார் முன்சீட்டில் சாய்வாக அமர வைத்தான். காரை சுற்றிக் கொண்டு ஓடிவந்தவன், “கவலைப்படாதே..!” என்று சொல்லி காரை வேகமாக எடுத்தான். காயத்தின் மீது இருந்த அவளது கைமேல் தன் வலதுகையை அழுத்தி வைத்துக்கொண்டு, இடது கையால் வண்டியை வேகமாக ஓட்டினான். அவள் முகத்தையும், காயத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே சாலையையும் கவனித்துக் கொண்டு படபடக்கும் மனதுடன் வாகனத்தை செலுத்தினான்.

அவன் எண்ணியிருந்த இடத்திற்கு வந்தடைந்தவன், காரை நிறுத்தி அவளை இருகைகளிலும் ஏந்தியபடி அந்த வீட்டிற்குள் நுழைந்தான். எதிரே வந்த ஒரு பெரியவர் ஆர்யன் வந்த கோலம் கண்டு திகைத்துப் போய் நின்றார். மயங்கியிருந்த அவளை அங்கிருந்த படுக்கையில் படுக்க வைத்தவன், “சையத் பாபா! இவளுக்கு இரத்தம் நிறைய போயிடுச்சி. உடனே சிகிச்சை செய்ங்க” என பரபரப்புடன் சொன்னான். 

அந்த சையத், “காயத்தை அழுத்திப்பிடி, ஆர்யன்” என்று சொல்லி சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்ய, கட்டிலில் அவள் பக்கத்தில் அமர்ந்த ஆர்யன் அவள் முகத்தையே கவலையுடன் பார்த்திருந்தான். அவள் வேதனையில் முகம் சுளிக்கவும், அதை பார்க்க சகிக்காமல்  தலையை திருப்பிக் கொண்டான். அதற்குள் தேவையான உபகரணங்களுடன் சையத் சிகிச்சையை ஆரம்பிக்க, ருஹானாவின் அருகே இருந்து எழுந்த ஆர்யன் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் வேகமாக நடக்க துவங்கினான். 

“உட்கார், ஆர்யன்” என சையத் சொன்னதும், அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்தான். இப்போது அவன் முகத்தில் கோபம் பொங்கியது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது வன்மம் பெருகியது. “எப்படி அவன் தப்பிச்சான்?” என உறுமியவன் முகத்தில் உணர்ச்சிகள் கொந்தளித்தன. சையத் தீவிரமாக சிகிச்சை செய்து கொண்டே ஆர்யன் முக மாறுதல்களை கவனித்தார். 

கண்மூடி, நெற்றி சுருக்கி இருந்த ருஹானாவின் முகத்தை எட்டி நோக்கிய ஆர்யன் அதற்கு மேல் தாங்க முடியாமல் வேகமாக வெளியே சென்றான். 

     ______

தங்கை சல்மாவின் காதல் பற்றி அக்குவேறு ஆணிவேராக தெரிந்து கொண்ட கரீமா தன் அடியாளை ஏவி சல்மாவின் லண்டன் காதலனை பணம் கொடுத்தும், மிரட்டியும் விலக்க சொன்னாள். தங்கை போனிலிருந்து கரீமா எடுத்த விவரங்கள் அதற்கு உதவிகரமாக இருந்தது.  

ருஹானா இல்லாத இந்த நேரத்தை பயன்படுத்தி இவானின் அன்பை பெறும்படி தங்கையை அறிவுறுத்திய கரீமா காவல் நிலையம் சென்றவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லையே என குழம்பியபடி வாசலை பார்த்த வண்ணம் வரவேற்பு அறையில் அமர்ந்தாள். 

அவள் பின்னால் இருந்த தூணில் சாய்ந்தபடி இவானும் கதவை நோக்கியபடி நின்றான். அவனுக்கான உணவு கொண்டு வந்த சாரா விளையாட்டு காட்டியபடி உணவூட்ட முயல, இவானோ, “சித்தியும், சித்தப்பாவும் எப்போ வருவாங்க?” என ஏக்கமாக கேட்டான். 

பதில் சொல்ல முடியாத சாரா கரீமாவை பார்க்க, கரீமாவோ போனில் குறுஞ்செய்தி அனுப்புவதில் கவனமாக இருந்த சல்மாவை முறைத்தாள். சடைத்துக்கொண்டே எழுந்த சல்மா, தன் போனில் எதையோ காட்டியபடி இவானை அழைத்தாள். “சித்தி வந்ததும் சாப்பிடலாமா?” என இவான் கேட்க, “இங்க பார், உனக்கு நான் புது புது கார்களை காட்டறேன்” என அவனை உணவு மேசைக்கு அழைத்து சென்றாள். 

     ———-

சையத் வீட்டு முன்பு இருந்த தோட்டத்தில் கோபமூச்சுகளுடன் நடந்து கொண்டிருந்த ஆர்யனுக்கு தன்னை காப்பாற்ற ருஹானா தன் முன்னே பாய்ந்த காட்சி திரும்ப திரும்ப கண்களுக்குள் ஓடியது. பெண்களை நம்ப கூடாது, அவர்கள் விஷத்தன்மை கொண்டவர்கள் என இவானுக்கு அவன் வழங்கிய அறிவுரைகளும் காதில் ஓயாது ஒலித்தது. பெண்களை வெறுக்கும் அவனுக்கு ருஹானாவின் இந்த செயல் புரியாத புதிராய் இருந்தது. 

நெடு நேரம் சிகிச்சை முடித்த சையத் ஆரியனை அழைத்து, “குண்டு ஆழமா பாஞ்சி வெளிய போயிருக்கு.  இரத்த போக்கை நிறுத்த பெரும்பாடா போச்சி. நல்ல வேளையா சரியான நேரத்தில நீ கூட்டிட்டு வந்துட்ட.  இன்னும் பத்து நிமிடம் ரத்தம் போயிருந்தா இந்த பொண்ணை காப்பாத்த முடிஞ்சிருக்காது” என்று சொல்லி அவள் இரத்தம் தோய்ந்த துணியை அதிர்ந்து பார்த்த அவனிடம் கொடுத்தார்.

ஆர்யன் அதை கையில் தொட்டவுடன் அவள் பட்ட வலியை தானே உணர்ந்தான். அவன் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை நோக்கியபடி சையத் ‘என்ன நடந்தது?’ என விசாரித்தார். 

“கோழைகள், மறைஞ்சிருந்து தாக்கிட்டாங்க” என வெறுப்புடன் ஆர்யன் சொல்ல, 

“அவளுக்கு எப்படி குண்டடிபட்டது?” என்று சையத் கேட்டார்.

“எனக்கு முன்னால அவ ஓடி வந்துட்டா” ருஹானா இருக்கும் இடத்தை ஒரு கணம் நோக்கி ஆர்யன் சொன்னான். 

“உன்னை காப்பாத்தவா?” ஆர்யனை கூர்ந்து பார்த்தவாறே சையத் கேட்டார். 

சில விநாடிகள் யோசித்த ஆர்யன் அவர் கூற்றை ஆமோதித்தான். 

“என் வீட்டு வாசல்ல ஒரு பொண்ணை ஏந்தியபடி நீ வந்து நின்னப்பவே எனக்கு புரிஞ்சிடுச்சி, அந்த பொண்ணு உனக்கு எவ்வளவு முக்கியம்னு…  இப்படி அவ உயிரை பணயம் வச்சி உன்னை காப்பாத்தியிருக்கா ன்னா,  இப்போ உனக்கு உன் உயிரை விட  அவ தான் பெருசு” என சையத் சொல்ல பட்டென்று நிமிர்ந்து அவரை பார்த்தான் ஆர்யன். 

“நீ எதிர்பார்க்காத நேரத்தில உன் எதிரிகளால மறைமுகமா தாக்கப்பட்டே.. ஆனா அதை விட பெரிய தாக்குதல் நீ கொஞ்சங்கூட நினைச்சு பார்க்காத இடத்தில இருந்து வந்திருக்கு. ஒரு பொண்ணு கிட்ட இருந்து..” சையத் அழுத்தமாக சொல்லவும் ஆர்யன் அவரை முறைத்துப் பார்த்தான். 

“ஒரு பெண் உன் உயிரை காப்பாற்றி இருக்கா.. அவளோட காயத்தைவிட உன் உள்காயம் ஆழமானது” சையத் பேச பேச ஆர்யன் முகம் கடுமையாகிக்கொண்டே வந்தது. “சரி, இப்போ சொல்லு.. சுடப்பட்டது அவளா இல்ல நீயா? ” என சையத் கேட்ட கேள்வி அவன் முகத்தில் வந்து மோதியது. அவனை யோசிக்க விட்டு சையத் விலகி சென்று விட்டார். 

ஆர்யன் நகர்ந்து வந்து மயங்கி கிடந்த ருஹானாவின் முகத்தை பார்த்தான். எப்போதும் அவன் மனதை அரிக்கும் குழந்தைப் பருவ நினைவுகள் இப்போதும் அலையடித்தன. சிரிக்கும் பெண்ணும், கண்ணீருடன் சிறுவனும் தோன்றினர். 

“உங்கம்மா உன்னை விட்டு போறாங்கடா.. மரக்கடை ஃபாரூக் கூட வேற நகரத்துக்கு போக திட்டம் போட்டுட்டாங்க. அவங்க பொருட்கள்லாம் மூட்டை கட்டிட்டாங்க.. நீ சீக்கிரம் போய் தடுத்து நிறுத்து” என யாரோ சொல்ல சிறுவன் வீடு நோக்கி ஓடிவருகிறான். 

வீட்டுக்குள்ளே பெரிய போராட்டமே நடக்கிறது. மண்டியிட்டு கிடந்த ஒருவன் அந்த பெண்ணை இழுக்க “என்னை விடு!” என அவள் கோபமாக அவன் கையை உதறி தள்ள.. “நீ பெத்த பிள்ளைங்கள நினைச்சி பார்க்க மாட்டியா? அம்ஜத், அக்ரம், ஆர்யன் என்ன செய்வாங்க?” என அவன் கெஞ்சினான். “போதும், நான் பட்டது போதும். உன் நோயோடும், வறுமையோடும் நான் துன்பப்பட்டது போதும். நான் போறேன்” என அவள் பெட்டியை தூக்கினாள். 

“தயவு செய்து போகாதே. பிள்ளைங்க அம்மாவை தேடினா நான் என்ன பதில் சொல்லறது?” எழக்கூட முடியாத ஆர்யனின் தந்தை அவள் கால் பிடித்து கெஞ்சுவதை பார்த்த பிஞ்சு ஆர்யனின் கண்கள் குளமாகியது. “ஏதாவது செய்துக்கோ. என்னை விட்டுடு. உன்னை மாதிரி தானே உன் பசங்களையும் வளர்த்து வச்சிருக்கே. உன் இயலாமை அவங்க முகத்துலயும் தெரியுது. எனக்கு உங்க யாரையும் பிடிக்கல. என்னை சந்தோசமா வாழவிடு. நான் போகனும்” என்று காலை உதறி வெளியே நடந்து விட்டாள். 

வாசலில் அவள் முன்னே சென்று ஆர்யன் பாவமாய் நிற்கவும் தயங்கியவள், அடுத்த எட்டு வைக்கவும் சிறுவன் ஓடிப்போய் அவள் கைகளை பிடித்தான். அவன் நெஞ்சில் கை வைத்து கீழே தள்ளியவள் படிக்கட்டில் இறங்க ஆரம்பித்தாள். சமாளித்துக் கொண்டு எழுந்த ஆர்யன் “அம்மா..!” என அழைத்தான். திரும்பி பார்த்தவள் “உன் அப்பா மாதிரி எப்பவும் இருக்காதே!” என்று சொல்லி விடுவிடுவென வெளியே வந்து காத்திருந்த காரில் ஏறினாள். 

பின்னாடியே ஓடிவந்த ஆர்யன் கேட்டை பிடித்துக்கொண்டு அழுது கொண்டே பார்த்தான்.  அவன் அம்மா ஏறிய காரும், பின்னாடியே சாமான்களை ஏற்றிய வண்டியும் கிளம்பி சென்றன. 

இரவில் இவர்கள் துக்கத்திற்கு ஏற்றார்போல மழையும் ஓயாது பெய்ய, உறங்கிக் கொண்டிருந்த இரு அண்ணன்களுக்கும் போர்வையை மூடி பாதுகாத்தான், சின்னத்தம்பி ஆர்யன். பக்கத்து அறையிலிருந்து பெரிய சத்தம் கேட்க ஓடிச்சென்று பார்த்தான். முக்காலி ஒன்று கீழே உருண்டு கிடக்க அவன் அப்பா உத்திரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். 

‘அப்பா!’ என்று அலறியபடி ஓடிச்சென்று அவர் கால்களை பிடித்து தன் பலம் கொண்ட மட்டும் ஆட்டினான். தடாலென கீழே விழுந்த உயிரற்ற அவனுடைய தந்தை ஆர்யனுடன் சேர்ந்து தரையில் சரிய, ஆர்யனின் இடதுகை அவரது உடலுக்கு அடியில் மாட்டிக் கொண்டது. அவனது இடதுகை மணிக்கட்டு எலும்பும் உடைந்தது. 

சிறுவன் ஆர்யன் இடது மணிக்கட்டை பிடித்துக் கொண்டாலும் தந்தையின் மரணம் தந்த வலிக்கு முன் தன் கைவலியை அவன் அந்த நொடி உணரவே இல்லை. சையத் பாபா வீட்டில் இந்த நொடி வலிமையான ஆர்யனுக்கு அந்த வலி தாளாத வலியாக இருந்தது. அவன் மணிக்கட்டை பிடித்த பிடியில் இரு கைகளும் இரத்த நிறம் கொண்டன. “பெண்கள் வெட்கக்கேடானவர்கள்..!” என்று சொல்லிய ஆர்யன் ருஹானாவின் கள்ளங்கபடறமற்ற முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். ‘அப்படியா, எல்லா பெண்களுமா?’ என அவன் மனதின் மூலையில் முணுமுணுத்தது ஒரு குரல். 

ரஷீத் போன் அழைப்பில் தெளிந்த ஆர்யன் நடப்புக்கு வந்தான். ” ரஷீத்! நீ சொன்ன மாதிரி யாசின்ஸ் பழி வாங்கிட்டாங்க. மறைஞ்சிருந்து சுட்டுட்டாங்க. இல்ல.. எனக்கு ஒன்னும் இல்ல.. இவான் சித்திக்கு தான் அடிபட்டுடுச்சி. இந்த விசயம் யாருக்கும் தெரியக் கூடாது. நம்மாளுங்களுக்கு கூட சொல்லாதே. சுட்டது யார்னு உடனே கண்டுபிடி. மத்த வேலையெல்லாம் அப்படியே நிறுத்து” ஆர்யன் கட்டளையிட்டான். 

பின் சையத்திடம் வந்து “உங்க வேலை முடிஞ்சதுன்னா நான் அவளை கூட்டிட்டு கிளம்புவேன்” ஆர்யன் சொல்ல அவர் முடியாது என தலையசைத்தார். “அவ நிலமை இன்னும் சீராகல.. இப்போ அவ எங்கயும் நகரக் கூடாது. ராத்திரி இங்க தான் நீங்க தங்கியாகனும்” என முடிவாக சொல்லி விட்டு சென்றார். ருஹானாவை உற்று பார்த்த ஆர்யன் பார்த்துக்கொண்டே நின்றான். 

      ——-

Advertisement