புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 14

ருஹானாவை பார்த்து முறைத்தபடி ஆர்யன் நிற்க, அதைக் கண்ட கமிஷனர் வாசிம் ஆர்யனை முறைக்க, ருஹானா கண்கலங்க சொல்வதறியாது நின்றாள். “நீதியை நீயே இங்க வர வச்சிட்டியா, இப்போ?” ஆர்யன் ஏளனமாக கேட்க, ருஹானா இல்லையென தலை அசைத்தாள். “போலீஸ்ல புகார் செய்தே தானே!” என அவன் கேட்கவும், வாசிம், “ஆர்யன் அர்ஸ்லான்! நீங்க ஸ்டேஷன்க்கு வந்து உங்க பதிலை கொடுங்க, வாங்க” என அதிகாரமாய் அழைத்தான்.

ஆர்யன் கோபம் அணை தாண்ட, வாசிம் மீது எரிக்கும் பார்வை வீச, பதிலுக்கு வாசிமும் அனல்கணை விடுத்தான். ஆர்யன் விறுவிறுவென வெளியே செல்ல, தன்வீர் உள்படி ஏறி ருஹானாவிடம் வந்தான். “பயப்படாதே ருஹானா! நான் உன்கூட இருக்கேன், சரியா?” என அவளை கைப்பிடித்து கூட்டிப்போனான். மேலே நின்ற கரீமாக்கு ஒரே கொண்டாட்டம்.

தங்கையிடம் சென்று தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டவள், “இனி ருஹானா இந்த மாளிகைக்கு திரும்ப மாட்டா. அவள் புகார் கொடுக்கலன்னு சொன்னாலும் ஆர்யன் நம்ப மாட்டான். இந்த சொத்தை யாருக்கும் நான் பங்கிட மாட்டேன்” என்றவளை ஆத்திரமூட்டினாள், அவள் தங்கை. “அந்த சித்தி ஒன்னும் தெரியாதவ. அவளுக்கு போய் நீ ஏன் தான் இப்படி பயப்படுறீயோ!” என்று தன் போனை பார்த்துக்கொண்டே சொன்னாள்.

கரீமா அவள் போனை பிடுங்கி தூர வீசியவள், “அந்த ஒன்னும் தெரியாதவ தான் இவான் மூலமா இந்த சொத்தை அடைய பார்க்குறா. அது உனக்கு இன்னும் புரியல. ஆர்யன் மனைவி ஆகணும்…. இந்த திரண்ட சொத்தை அனுபவிக்கணும்னா அதுக்கு ஒரே வழி இவானை  பாசமா கவனிச்சிக்கிறது தான். அந்த வேலைய இனிமேல் நீ ஒழுங்கா செய்” என பேயாட்டம் ஆடிய அக்காவை பார்த்து பயந்து போன சல்மா பாவமாக தலையாட்டினாள்.

———-

கமிஷனர் வாசிம் வீடு…

வாசிமின் பெரியப்பா ஹெமதுல்லா ஆதரவில்லாத தன் மாணவிக்கு அடைக்கலம் கொடுத்து வீட்டின் உதவியாளாக வைத்துக்கொண்டு வீட்டு வேலைகளில் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார், வாசிமுக்கு தெரியாமல்.

“வாகிதா! வாசிம் வீட்டுக்கு வர்ற நேரமாகிடுச்சி. நீ சீக்கிரம் வீட்டை சுத்தம் செஞ்சிடு. அவன் திருப்தியானா தான் நீ இங்க இருக்க முடியும். நான் அவனுக்கு போன் செய்து எப்போ வரான்னு கேட்குறேன்” என சொல்லி போனை எடுக்க, வாகிதா தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையில் வேகத்தை கூட்டினாள்.

“என்ன பெரியப்பா, ஏதாவது வேணுமா, நான் வீட்டுக்கு வரும்போது வாங்கிட்டு வரணுமா? உங்க மருந்தெல்லாம் இருக்கு தானே?” என வாசிம் மறுமுனையில் கேட்க, அவன் அன்பில் நெகிழ்ந்த ஹெமதுல்லா, “எதும் வேண்டாம், வாசிம். நீ வீட்டுக்கு கிளம்பிட்டியா?” என கேட்டார்.

“இன்னும் இல்ல, பெரியப்பா. இன்னைக்கு வேலை அதிகம்” என்று அந்த பொறுப்பான காவல் அதிகாரி சொல்லிக் கொண்டிருக்கும்போது, அங்கே வந்த எழுத்தர் “சார்! ஆர்யன் அர்ஸ்லானோட ஃபைல் தயாரா இருக்கு. நீங்க விசாரணை செய்யலாம்” என்று சொன்னது இந்தப் புறம் ஹெமதுல்லாக்கு தெளிவாக கேட்டது.

“ஆர்யன் அர்ஸ்லான்!” என அவர் திகைப்பாக அந்த பெயரை திரும்ப சொல்ல, “ஆமா பெரியப்பா, புகழ்பெற்ற ஆர்யன் அர்ஸ்லான் தான். அவனைத்தான் விசாரிக்க கூட்டிட்டு வந்துருக்கேன். நான் வர லேட் ஆகும். நீங்க சாப்பிடுங்க” என்று சொல்லி போனை வைத்தான், வாசிம்.

“ஆர்யன் அர்ஸ்லான்!” என இருமுறை அந்த பேரை சொன்ன ஹெமதுல்லாவின் கண்கள் கலங்கின. “ஆனா…” என்று யோசித்தவர் நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.

——–

வாசிம் விசாரணை அறைக்கு செல்ல, அங்கே விறைப்பாக நின்று கொண்டிருந்த ஆர்யனை பார்த்து உட்கார சொன்னான் தான். ஆனால் இருவரும் எதிரி நாட்டு மன்னர்களை போல எதிரும் புதிருமாக கோபக் கனல் வீசியே நின்றிருந்தனர். “நீங்க உட்கார்ந்தா நாம பேச வசதியா இருக்கும்” என நாற்காலியை காட்டி மீண்டும் ஆர்யனை அமர சொன்ன வாசிம் தானும் எதிரே அமர்ந்து தன் முன்னே இருந்த கோப்புகளைப் பிரித்தான்.

வாசிம் காட்டிய இடத்தில் அமர்ந்தாலும், ஆர்யன் உடல் மொழியில் பணிவென்பது மருந்துக்கும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டிருக்கிறோம் எனும் பயமுமில்லை. இடுங்கிய கண்களைக் கொண்டே கமிஷனரை நோக்க, கோப்பை படித்துக்கொண்டே தலை தூக்கிய வாசிமும் கடுமையாகவே பேசினான்.

“ஆர்யன் அர்ஸ்லான், ம்.,ம்., மிகப்பெரிய நிறுவனங்கள், பெரிய கப்பல்களின் வரிசை, இலாபம் கொழிக்கும் வியாபார சாம்ராஜ்யம்…” சொல்லியபடி அடுத்த பக்கத்தை திருப்பியவன், “இந்த ஃபைல்ல உங்களைப் பத்தி நிறைய புகார்களும் இருக்கே… போலீஸ் ரெய்ட்ஸ், மோதல் சம்பவங்கள் இப்படியும் இருக்கு. விசாரிக்க வேண்டிய விஷயங்கள் தான்” என்று தலையை ஆட்டியபடி ஆர்யனை பார்த்து சொன்னான்.

வாசிம் பேச பேச அவனை பார்த்துக்கொண்டே அமைதியாக இருந்த ஆர்யன் இப்போது வாயை திறந்தான். “இப்போ வந்த புகாரை பற்றி மட்டும் பேசலாமா?” ஆர்யன் கேள்வியில் அவனை விசித்திரமாக வாசிம் பார்க்க, “நீங்க வேற பாதைல போறீங்க” என்று ஆர்யன் கமிஷனருக்கே வழி சொல்லிக் கொடுத்தான்.

“உங்களை பத்தி தெரிஞ்சிக்க முயற்சி செய்றேன்” என வாசிம் சொல்ல, “உங்க முயற்சி வீணாகும். நீங்களும் நானும் வேற வேற” அவனுக்கு பணியாமல் திமிராகவே பேசினான், ஆர்யன்.

“எனக்கு தெரிஞ்சவரை ருஹானாவும் உங்களை விட மாறுபட்டவர் தானே! ஆனா அவங்களை எப்படி உங்க வீட்டுக்கு கொண்டு போனீங்க?”

“அவங்க இவானோட சித்தி”

“இவான் உங்க அண்ணன் பையன் தானே!”

“இறந்து போன என் அண்ணன் என்கிட்டே ஒப்படைச்ச என்னோட உரிமை” அழுத்தமாக சொன்னான், ஆர்யன்.

அவனை ஒரு நொடி கூர்ந்து நோக்கிய வாசிம் திரும்ப கோப்பை பார்த்து, “இவானோட அம்மா தஸ்லீம் மாடியில இருந்து குதிச்சி தற்கொலை செய்துக்கிட்டாங்க தானே? அது விபத்துன்னு நீங்க நினைக்கிறீங்களா?” எனக் கேட்டு ஆர்யனின் கோபத்தை தூண்டினான்.

“அந்த ரிப்போர்ட்ல என்ன எழுதி இருக்கு?”

ஆர்யனின் சரியான கேள்வியில் திகைத்த வாசிம் தானே தலையாட்டிகொண்டு விசாரணையை வேறு திக்கில் திருப்பினான். “இவான் மனநிலை பாதிக்க படக்கூடாதுன்னு தான் ருஹானா தேவைப்பட்டாங்களா? நீங்க ருஹானாவை கட்டாயப்படுத்தி உங்க வீட்ல தங்க வச்சிருக்கீங்களா?”

“அப்படி அவங்க சொன்னாங்களா?”

“என் கேள்விக்கு பதில் சொல்லுங்க!”

“நீங்க முதல்ல பதில் சொல்லுங்க. அதுக்கு ஆதாரம் இருக்கா?” ஆணித்தரமாக வந்து விழுந்தது, ஆர்யனின் கேள்வி.

அதற்கு வாசிமிடம் பதில் இல்லை. அவன் முகம் யோசனைக்கு போகவும், ஆர்யன் எழுந்து கொண்டே சொன்னான்.

“இதோடு விசாரணை முடிந்தது”

‘தான் சொல்லவேண்டியதை இவன் சொல்கிறானே!’ என வாசிம் ஆர்யனையே நிமிர்ந்து பார்க்க, ஆர்யன் அவனை குனிந்து நோக்கி “போய் வக்கீலை பாருங்க. குற்றத்தை நிருபீங்க. அப்புறம் வந்து கேள்வி கேளுங்க. இந்த அபத்தமான விசாரணைக்குலாம் என்கிட்டே நேரமில்ல” என சட்டமாக பேச, அதை தாங்கிக்கொள்ள முடியாத வாசிம் வேகமாக எழுந்தான்.

“உங்க குற்றம் நிருபிக்க படக்கூடாதுன்னு வேண்டிக்குங்க” என வாசிம் சொல்ல, அதை சட்டை செய்யாத ஆர்யன், கமிஷனர் அனுமதி இன்றி வெளியேறினான். ஒன்றும் செய்ய இயலாத வாசிம் அந்த கோப்பை கோபத்துடன் மூடினான்.

———

ருஹானா சொன்னதை கணினியில் பதிவு செய்த தன்வீர், “ருஹானா! நீ ரிப்போர்ட்ல சொன்னதுலாம் ஓகே தான். ஆனா எனக்கு ஒன்னும் சரியா படல. நான் உன் சகோதரன். என்கிட்டேயே நீ மறைப்பியா?” என கவலையோடு கேட்டான். “இல்ல தன்வீர், நான் சொன்னது தான் நடந்தது” என ருஹானா சொல்ல, “அப்போ புகார் கொடுத்தவன் பொய்யா சொல்றான்? யார் தான் அதை கொடுத்தது?” என்று அப்போதும் தன்வீர் திருப்தி அடையவில்லை.

“அது எனக்கு தெரியலயே. ஆனா யாரா இருந்தாலும் என்னை இப்போ சங்கடத்தில மாட்டி விட்டுட்டாங்க” என ருஹானா வருத்தப்பட, “அந்த வீட்ல உனக்கு எந்த தொல்லயும் இல்லயா, உண்மையா தான் சொல்றியா?” என்று தன்வீர் மீண்டும் நம்பிக்கை இல்லாமல் கேட்க, அந்த நேரம் வெளியே வந்த ஆர்யன் இவர்கள் பின்னால் நின்றான்.

“தன்வீர்! எனக்கு ஒரு பிரச்னையும் இல்ல. அங்கே என்னை நல்லா தான் நடத்துறாங்க. இவான் ரூம் பக்கத்துலயே எனக்கு ஒரு வசதியான ரூம் தந்துருக்காங்க. இதுக்கு மேல என்ன வேணும்?” என ருஹானா பேசுவதை ஆர்யன் கூர்ந்து கவனிக்க அவள் மேலும் தொடர்ந்தாள்.

“நான் கவனிக்கிறதால இவான் சந்தோசமா இருக்கான். இவானுக்காக ஆர்யன் சாரும் எனக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்குறார். அவருக்கு என்னைப் பத்தி தெரியாது தானே? ஆனாலும் அவர் என்மேல நம்பிக்கை வச்சிருக்கார்” ருஹானா பேச பேச தனக்குள் என்ன மாதிரியாக உணர்ந்தான் என ஆர்யனுக்கு புரியவில்லை. ஆனால் மனது லேசானது.

“அப்போ உன்ன அடைச்சி வச்சிருக்கறது, கொடுமைப்படுத்தினது எல்லாமே பொய்யா?” என தன்வீர் திரும்பவும் கேட்க, “பொய் தான் தன்வீர், அப்படி எதாவது நடந்திருந்தா நான் உன்கிட்டே உதவி கேட்ருக்க மாட்டேனா?” என அவன் நம்பும்படி சொன்னவள், “இவான் கூட இருக்குறதுக்கு போய் நான் புகார் கொடுப்பேனா? அவன் அக்காவோட வாரிசு. அவள் எனக்கு தந்த பொக்கிஷம். அவன் தான் எனக்கு எல்லாமே. நான் இன்னும் உயிரோட இருக்கேன்னா அதுக்கு காரணமே இவான் தான்” என அழுத்தி சொன்னாள்.

அவள் சொன்னதை கேட்டு யோசித்த தன்வீர் ஓரளவு சமாதானம் ஆனான். ஆர்யன் முன்னே வரவும், “ஆர்யன் சார் உங்க அறிக்கையை கொடுத்திட்டீங்கனா நீங்க கிளம்பலாம். ருஹானாவோடதும் முடிஞ்சது” என்று தன்வீர் சொல்லி, ருஹானாவிடம், “இன்னும் நீ ஏதும் சொல்ல இருக்கா?” என கேட்டான். அவள் இல்லையென சொல்லவும் தலையாட்டினான்.

வாசல் புறம் நடந்த ஆர்யன் திரும்பி ருஹானாவை பார்த்து ‘வா போகலாம்’ என்பது போல் நிற்க, அவளும் அதை புரிந்துகொண்டு எழுந்தாள். மேசைக்கு பின்புறம் அமர்ந்திருந்த தன்வீரும் எழுந்து முன்னால் வந்து அவளை அன்புடன் கட்டிக்கொள்ள, அவளும் நன்றி சொல்லி அவனை அணைத்து விடைப்பெற்றாள். ஆர்யனிடம் இதுவரையில் இருந்த இலகுத்தன்மை மறைந்தது. அவளை ஒரு பார்வை பார்த்தவன் முன்னே நடந்தான்.