Advertisement

மாளிகையின் பின்புற தோட்டம்..

“அவங்க போறாங்க… அவங்க போறாங்க“, என அம்ஜத் முணுமுணுத்துக் கொண்டு இருக்க… அங்க வந்த ஆர்யன், “அண்ணா” என அழைத்தான்..

“ஆர்யன்”

“நீங்க ஓகே தானே!.. ஏன் இங்க இருக்கீங்க?”

அம்ஜத் செடிகள் தொட்டிகளுடன் இருந்தவன், “ஏன்னா அவங்க போறாங்க… நாம சொன்னாலும் அவங்க இருக்க மாட்டாங்க.. அவங்க போறாங்க… அவங்க எப்பவும் போயிட்டே இருக்காங்க..” என உளறலாய் திரும்ப திரும்ப பேச…

“அண்ணா என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லயா?” என ஆர்யன் ஆற்றுப்படுத்த முயல… அம்ஜத் கேட்டான் “ஏன் அவங்க போறாங்க, ஆர்யன்?“

“போகட்டும்.. நான் இருக்கேன்.. உங்களுக்காக.. இங்க.. யார் போனாலும் நான் இருக்கேன்ல?”

தம்பி கையை பிடித்து “யாரையும் போக விடாதேயேன்… யெஸ், ஆர்யன் இருப்பான் எனக்காக… கடைசி வரை இருப்பான்.. ஆர்யன் அவன் அண்ணனுக்காக இருப்பான்.. ஆர்யன் இருப்பான்” என ஆசுவாசமானான் அண்ணன்…

  • – – – – – – – –

அப்பாவும் மகளும் அழுது கொண்டிருக்க…. அருகே அமர்ந்து ஆறுதல் சொல்லி கொண்டிருந்தார், மயானத்தில் துணை நின்ற அதே பெண்மணி பர்வீன்..

“என் மகள் என்ன செய்தாளோ… என்ன சாப்பிட்டாளோ…. சந்தோஷமா இருந்தாளா… எப்படி வாழ்ந்தா.. எப்படி இறந்தா.. எதுவும் தெரியலயே… எல்லாம் என்னால தான்“, என்று சென்ற மகளை நினைத்து பெரியவர் புலம்ப…

“நீங்களே உடம்பு சரியில்லாதவர்.. உங்களை இப்படி வருத்திக்காதீங்க…” என  பர்வீன் தேற்ற…

அங்கு வந்த ருஹானா தன் கழுத்திலிருந்து சங்கிலியை கழற்றி லாக்கெட்டை காட்டியபடி, ”அப்பா!!! இது யார் பாருங்க?“ என்று கூற….  அவர் யோசிக்கவும்..

“உங்க பேரன் இவான், அப்பா” என ருஹானா சங்கிலியை நீட்ட… இவான் தாத்தா கைகளில் வாங்கி கண்ணீருடன் பார்த்தவரின் முகம் கனிந்தது, பேரனை பார்த்து…

பர்வீனும் படத்தை எட்டி பார்த்து, ”அல்லாஹ் அருள் என்றும் கிடைக்கட்டும்.. உங்கள போலவே இருக்கான்” என நெகிழ்ந்து கூற…

“அக்கா என்னை நம்பி அவனை விட்டுட்டு போயிருக்கா..  என் அக்காவின் வாரிசு, அவன்… எப்படியாவது அவனை இங்க கொண்டு வருவேன்” என ருஹானா சூளுரைத்தாள்…

  • – – – – – – – – – –

“சித்தப்பா! இந்த கப்பலை பாருங்க.. அம்மா பேப்பர்ல செய்ய கத்து கொடுத்தாங்க” இவான் காட்ட… ஆர்யன் கையை நீட்ட அவன் கையில் காகித கப்பலை வைத்த இவான், “நான் உங்களை மாதிரி பெரியவன் ஆனதும் என் அம்மாவுக்கு கப்பல் செய்வேன்… இது மாதிரி இல்ல… பெருசா” என ஆசையாக சொன்னான்..

“சில சமயம் நாம நினைச்சா மாதிரி எல்லாமே நடக்காது, அக்னி சிறகே!” என்ற கல்நெஞ்சு சித்தப்பன் அந்த கப்பலை கையில் கசக்கினான்..

இவான் முகம் சுருங்கி கண்களில் கண்ணீர் தேங்க, “என் கப்பல்” என..

“பலவீனமானவங்க தான் இழந்தது, போனதுக்காக அழுவாங்க.. நீ எப்படி?”

“இல்லை.. அழ மாட்டேன்” என சுருங்கிய முகம் உறுதி பெற்றது.. பின் கேட்டான்..

“அம்மாவும் அப்பா மாதிரி ரொம்ப தூரமா போயிட்டாங்களா?”

“என் அண்ணன் இங்க இல்ல.. ஆனால் நான் இருக்கேன் உனக்காக… உன் பக்கத்துல எப்பவும்..“

“எனக்கு அம்மா இருக்காங்கல்ல..  அவங்க பக்கத்துல நான் இருக்கனுமே!” என சிறுவன் தாய் மேல் இருக்கும் அன்பை காட்ட…

ஆர்யன் முகம் மாறி தனது இடது கை மணிக்கட்டை வலது கையால் பற்றினான்..

“சரி.. லேட்டாச்சி.. நீ தூங்கு”

அவன் சொன்ன அடுத்த விநாடி இவான் படுக்கையில் படுத்துக் கண்களை மூடிக் கொண்டான்…

சில விநாடிகள் இவானை பார்த்துக் கொண்டே நின்ற ஆர்யன் விளக்கை அணைத்து சென்றான்….

     —————

இவான் போட்டோவை கையில் வைத்தபடி ருஹானா படுத்து கொண்டே அக்கா சொன்ன வார்த்தைகளை நினைத்து விடிய விடிய அழுது கொண்டிருந்தாள்… “நீ எனக்கு தந்த பொறுப்பை உலகமே புரண்டாலும் நிறைவேற்றுவேன், அக்கா”

காலையில் விடியவும்… அர்ஸ்லான் மாளிகை வாசலுக்கு வந்த ருஹானா, ”அல்லாஹ் எனக்கு துணை இருங்க” என வேண்டியபடி  கேட்டுக்கு வெளியே நின்றிருந்தாள்…. வீட்டு செக்யூரிட்டி அதட்டலாக கேட்டில் நின்ற காவலாளியிடம் பேசிக் கொண்டு இருப்பதை கேட்டவாறே…  அவன் பேசி முடிக்கும் வரை காத்து நின்றாள்…

“என்ன காரியம் இது? இதற்காக ஆர்யன் பாஸை நான் தொந்தரவு பண்ண முடியாது..  அவர் பெட்ரா போயிருக்கார் மீட்டிங்க்கு..  நடுவுல நான் கால் செய்து பேச முடியுமா” கடுமையாக பேசி கொண்டே போனவன்…  ருஹானாவை அப்போது தான் பார்த்தான்… அவள் புறம் திரும்பி

“யெஸ் மேம்…. என்ன வேணும்”

“நான் இவானை பார்க்கனும்.. எனக்கு கேட்டை திறங்களேன்”

“முடியாது..  அனுமதி இல்ல..“

“நான் அவன் சித்தி”

“யாரா இருந்தாலும் ஆர்யன் பாஸ் அனுமதி இல்லாம உள்ளே வர முடியாது”

அப்போது கார் ஒன்று உள்ளே இருந்து வெளியே வர.. இவள் ஒதுங்க.. இவள் அருகே கார் தயங்கி நிற்க… கண்ணாடி இறக்கப்பட்டு கரீமா தெரிந்தாள்..

“என்ன”

“நான் இவான் சித்தி”

“யெஸ் யெஸ்”

“எனக்கு அவனை பார்க்கனும்.. ப்ளீஸ் நீங்க சொல்லுங்க”

சற்று யோசித்த கரீமா, செக்யூரிட்டியிடம் ருஹானாவை உள்ளே அனுமதிக்கும்படி தலையசைத்துவிட்டு காரெடுக்க சொன்னாள்..

ருஹானா  லேசான புன்சிரிப்புடன் நன்றி சொல்ல, கார் அங்கே இருந்து செல்ல… செக்யூரிட்டி அவளை உள்ளே அழைத்துச் சென்று உட்கார சொன்னான்..  வேலைக்கார பெண்ணிடம் இவானை அழைத்து வர சொன்னான்..

ஹாலின்  நடுவே இருபுறமும் அழகாக அமைந்த படிக்கட்டில், சீருடை நானியின் கை பிடித்து  மெதுவாக இவான் இறங்க… இவள் முகம் கனிய அவனையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்…

இவான் அருகே வர வர… கலங்கிய கண்களை தட்டி விழித்து அவனை முழுமையாக கண்களுக்குள் நிரப்பிக் கொண்டாள்.. லாக்கெட் போட்டோவில் இருந்ததை விட வளர்ந்திருந்தான்… அவன் உயரத்திற்கு மண்டியிட்டவள்,   “அஸ்ஸலாமு அலைக்கும் அன்பே“ என்றாள் புன்னகையுடன்…

இவான் பதிலுக்கு “வ அலைக்கும் அஸ்ஸலாம்” என்றான்..

“நான் யாருன்னு உனக்கு தெரியுதா? “

தெரியாது என குழந்தை தலையாட்ட  சோகமானவள் கண்களில்  நீர் துளி ததும்பி நின்றது…

அவளை ஒரு நிமிடம்  உற்றுப் பார்த்த இவான், லேசான புன்னகையுடன் “சித்தி?“ என ஆவலோடு கேட்டான்..

பளீரென்று மலர்ந்த முகத்துடன், “ ஆமாடா செல்லம், நான் உன் சித்தி தான்“   என்று சொல்லி பாய்ந்து அவனை அணைத்துக் கொண்டு நெற்றியில் முத்தமிட்டாள்..

இவான் புன்சிரிப்புடன் அவளை கட்டிக் கொண்டான்.. “எங்கே.. உன்னை நல்லா பார்க்கிறேன்” என அவனை ஆராய்ந்தவள் “எவ்வளவு வளர்ந்துட்டே” என ஆச்சர்யப்பட்டாள்..

“அம்மா உங்களை பற்றி அடிக்கடி பேசுவாங்க…  நீங்க வருவீங்கனு  உங்களுக்காக ரொம்ப காத்திருந்தாங்க.. இப்போ உங்களை பார்த்தா சந்தோஷப்படுவாங்க“ என்று அவன் சொன்னதும் மலர்ந்திருந்த ருஹானாவின் முகம் கூம்பியது..

“ஹாஸ்பிடல்ல இருக்காங்க.. சீக்கிரம் வந்துடுவாங்க” அவன் இன்னும் சொல்லவும் சோகமாக தலையாட்டினாள்..

உலகம் விட்டு சென்றாலும்

             மனம் விட்டு போய்விடுமா சொந்தம்?

             உயிர் விடை பெறும் நேரம்

             உயிரான உறவுக்களுக்குள்

             ஓர் அறிமுகம் !

 “தாத்தா எங்க?..  என்னை பார்க்க அவர் வரலையா?“ என இவான் ஆவலுடன் கேட்டான்..

“இல்லை கண்ணே! நான் மட்டும் தனியா வந்தேன்.. தாத்தாவை பார்க்க போகலாமா?“ என ருஹானா சொல்லவும்.. சின்னவன் ஆசையாக சம்மதித்தான்..

எழுந்து நின்றவள் அவன் நானியிடம் இவானின் மேல்கோட்டை தருமாறு கேட்டாள்..

திகிலடைந்த அந்த பெண்மணி, “நோ… நோ… மேம்… இவானை வெளியே அனுப்ப முடியாது.. பாஸ் ஆர்யனின் அனுமதி இல்லாம ஒரு அந்நியரோடு அனுப்பினால் என்னை தொலைத்து கட்டிவிடுவார்” என்று வேகமாக கூறினாள்..

எட்ட நின்ற செக்யூரிட்டியும் ஆட்சேபித்தப்படி அருகே வந்தான்.. ருஹானா ஒரு நிமிடம் யோசித்தவள், பின் எப்படியும் இவானை அழைத்து செல்ல முடிவெடுத்தாள்….

“நான் அந்நிய பெண் இல்ல.. இவான் சித்தி.. மிசஸ் கரீமா தான் என்னை உள்ளே விட்டார்.. மிஸ்டர் ஆர்யனின் அனுமதியோடு தான் நான் இவானை கூட்டிட்டு போறேன்“, என்று துணிந்து பொய்யுரைக்க இருவரும் சற்று தயங்கினர்…

அதை சாதகமாக்கி கொண்டு மேலும், “நீங்க வேணும்னா பெட்ரா ல இருக்கற மிஸ்டர் ஆர்யன்ட்ட கேட்டுட்டே அனுப்புங்க..  முக்கியமான மீட்டிங்க்கு போறதா மிஸ்டர் ஆர்யன் சொன்னாரே…  நீங்களே அவர்ட்ட கேளுங்க… அஞ்சு பத்து நிமிஷம் காத்திருந்து கூட்டிட்டு போறதுல எனக்கு ஒன்னும் சிரமம் இல்ல…“ என்று அடித்து விட்டாள்.. கேட் அருகே அவள் கேட்ட ஊர் பெயர் நல்லவேளை அவளுக்கு நினைவு இருந்தது.. நானி நம்பிக்கையாக பார்க்கவும் இவளுக்கு தைரியம் கூடியது..

செக்யூரிட்டி யோசிக்கவும் தன் மேல்கோட் பாக்கெட்டில் இருந்து போனை வெளிய எடுத்தவள், “மிஸ்டர் ஆர்யன் மீட்டிங்ல இருந்தா என்ன.. இவான் விஷயத்துக்கு அவரை தொல்லை செய்தா ஒன்னும் தப்பில்லை” என்று தெரியாத நம்பருக்கு டயல் செய்ய ஆரம்பித்தாள்..

“இல்லல்ல.. பாஸை தொந்தரவு செய்ய வேண்டாம்.. நான் போய் இவான் கோட் எடுத்துட்டு வரேன்” என்று நானி மேலே சென்றாள்…

நிம்மதி பெருமூச்சு விட்ட ருஹானா, “தாத்தா உன்னை பார்த்தா ரொம்ப ஆனந்தமாயிடுவார்” என சொல்லியபடி இவானை கட்டி அணைத்து கொண்டாள்..

கோட் வந்ததும் அவனுக்கு மாட்டிவிட்டு இவானோடு கிளம்பி விட்டாள், ருஹானா..

அவனுக்கு தெரியாத ஒரு பெண்ணுடன் அவன் அனுமதி இல்லாமல், அவன் பொத்தி பாதுகாக்கும் அந்த வீட்டின் குலகொழுந்து வெளியே சென்றது ஆர்யனுக்கு தெரிய வந்தால் என்ன நடக்கும்…?

                ———————–

(தொடரும்)

Advertisement