புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 13 

ருஹானா மெதுவாக கீழே இறங்கி வரவும், அவளை தொடர்ந்த ஆர்யனின் பார்வையும் கீழே வர தலையும் தாழ்ந்தது. மெதுவாக தன் பார்வையை மீட்டுக்கொண்டவன், இமைகளை பலமுறை தட்டி விழித்து தன்னையும் மீட்டுக்கொண்டான். பின் யோசனையாய் திரும்பி நின்றுக் கொண்டான்.  

கரீமா தன் அதிர்ச்சியை விழுங்கிக்கொண்டு, “நீயும் போறியா, ருஹானா?” என கேட்க, “இவான் போகணும்னு ஆசைப்படுறான்” என ருஹானா பதிலளிக்க, “நல்லது, ரொம்ப நல்லது” என சமாளித்தாள். ஒரு இருமலை இருமி “என்னால தானே இவான் போக முடியலனு வருத்தப்பட்டுட்டு இருந்தேன். இப்போ எனக்கு மிக மகிழ்ச்சி” என கரீமா சொல்ல ருஹானா புன்னகை செய்தாள்.

ஆர்யன் “போகலாம்” என அழைத்து முன்னே செல்லவும், ருஹானாவும், இவானும் பின்தொடர்ந்தனர். அவள் புறம் திரும்பி, “இவானை கவனிக்கறது தான் அங்க உன் வேலை” என்று சொன்ன ஆர்யன் வெளியே வந்து காரில் முன்னே ஏற, இவர்கள் இருவரும் பின்னே அமர, டிரைவர் வண்டியை நகர்த்தினான்.

இவர்களை பார்த்துக்கொண்டே நின்றிருந்த கரீமா முகத்தில் எதை தூக்கிப் போட்டாலும் பஸ்பமாகி விடும். கொதி நிலையில் இருந்தவள் அவர்கள் செல்லவும் “டேமிட்!” என்று காலை உதைத்தாள்.

கார் செல்ல செல்ல அமைதியே அங்கே நிலைத்திருந்தது. பின் ஆர்யன் அதை கலைத்து, “இவான் மேலயே உன் கண் இருக்கட்டும். வேற யார்கிட்டயும் அவன் அநாவசியமா பேச வேண்டியதில்லை” என உத்தரவிட ருஹானா பதில் ஏதும் சொல்லவில்லை ஆர்யன் பக்கவாட்டில் தலை திருப்பி பார்க்கவும், அவளும் தலையை மட்டும் அசைத்தாள்.

அப்போது இவானுக்கு இருமல் வர, தன் கைப்பையில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து அவனுக்கு தண்ணீர் கொடுத்தாள். அவன் நெற்றியை தொட்டு பார்த்தவள் பதறி, “அதிகமா சுடுது” என்றாள். ஆர்யன் ஒன்றும் சொல்லவில்லை என்றதும், “இப்படியே போனால் நல்லது இல்ல. இன்னும் மோசமாகலாம். நாம வீட்டுக்கு திரும்பி போகலாம்” என்றாள்.

———-

விழாவுக்கு காரில் சென்று கொண்டிருந்த தங்கைக்கு கரீமா நடந்ததை சொல்லி, “கடைசி நிமிஷத்துல எல்லாம் நடந்துடுச்சி. எனக்கு வேற ஏதும் செய்ய முடியல. அவ இவானை பார்த்துக்குவா. நீ ஆர்யன் விட்டு ஒரு இன்ச் கூட நகராதே” என போனிலேயே வழிநடத்தினாள். 

கதவு திறக்கும் ஓசையில் போனை அடைத்தவள், சென்ற மூவரும் திரும்பி வருவதை பார்த்து வேகமாக வாசலுக்கு ஓடினாள். “என்னாச்சு?“ என கேட்க ருஹானா “இவானுக்கு அதிக காய்ச்சலாகிடுச்சி. அதான் திரும்பிட்டோம்” என சொல்லி “இவானுக்கு மருந்து கொடுக்கணும்” என அவனை மேலே கூட்டி சென்றாள்.

ஆர்யனும் அவர்களை பின்தொடர, திகைத்த கரீமா, “ஆர்யன்! நீ விழாக்கு போகலாமே. முக்கியமான நிகழ்ச்சியாச்சே. நான் இவானை பார்த்துக்கறேன்” என சொல்ல, அவனோ, “ரஷீத் எல்லாம் கவனிச்சிக்குவான்“ என்று சொல்லி நடந்தவன், நின்று, “உங்களுக்கு தான் உடம்பு சரியில்லயே! இங்க என்ன செய்றீங்க?” என கேட்டான்.

ஒரு நொடி அதிர்ந்தவள், “மூலிகை டீ வேணும்னு நஸ்ரியாவை கூப்பிட்டு பார்த்தேன். அவளுக்கு கேட்கல. அதான் நானே வந்தேன்” என்று சமாளித்தாள். ஆர்யன் மாடியேறவும் திரும்ப தங்கைக்கு அழைத்தவள் உடனே வீட்டுக்கு திரும்பி வர சொன்னாள். இப்போது இவான் பக்கத்தில் அவள் இருக்கவேண்டியது அவசியம் என்று சொல்ல சல்மாக்கு ஆயாசமானது.

இவானுக்கு இரவுஉடை அணிவித்து மாத்திரை கொடுத்த ருஹானா, “இனி உனக்கு உடம்பு சரியாகிறவரை பெட் விட்டு எழக்கூடாது. எங்கயும் போக கூடாது” என சொல்லி படுக்க வைத்தவள், மருந்து பாட்டிலை மூடும்போது மூடியை தவற விட்டாள். 

அவள் சொன்னதை கேட்டு கோபமானவன் மூடியை எடுத்து முறைத்தபடி அவள் கையில் கொடுத்து, “நான் விட்டு வச்சிருக்கறதால தான் நீ இன்னும் இங்க இருக்கே. அதை மறக்காதே. இவானை மட்டும் கவனி” என்று சொல்ல, அவனை பார்த்துக்கொண்டே மூடியை வாங்கிக்கொண்டு தள்ளி நகர்ந்தாள்.

“சித்தப்பா என் மேல கோவமா இருக்கீங்களா?” என இவான் கேட்க, “இல்ல சிங்கப்பையா! எல்லாருக்கும் உடம்பு சரியில்லாம போகும். உனக்கும் அப்படித்தான். நீ வலிமையான பையன், எனக்கு தெரியும். உடனே உடலை சரிப்படுத்திக்கணும். ஏன்னா நீ ஆர்யன் அர்ஸ்லானோட வாரிசு!” என ஆர்யன் அழுத்தம் திருத்தமாக சொல்ல, ருஹானாக்கு கோபம் வந்தது.

வெளியே சென்ற ஆர்யனின் பின்னே சென்றவள், “அவன் இன்னும் சின்ன பையன் தான். பெரியவனா எதையும் தாங்கணும்னு அவசியம் இல்ல. குழந்தைத்தனமும் இருக்கணும்” என்று சொன்னாள். அவளை முறைத்துக்கொண்டே நின்றவன் ஒன்றும் சொல்லாமல் அவன் அறைக்குள் சென்று விட்டான்.

——

இரவு இவானின் உடல்நிலையை பார்க்க வந்த ஆர்யன் வாசலிலேயே அப்படியே நின்றான். இவானின் கட்டிலில் இவானும், ருஹானாவும் தூங்கிக்கொண்டு இருந்தனர். பக்கத்துக்கு மேசையில் தண்ணீர் பாத்திரமும், அதை சுற்றி இவான் நெற்றியில் வைத்த துணிப்பட்டைகளும் கிடந்தன. அவள் கையிலும் ஒரு துணிப்பட்டை இருந்தது.  

கருப்பு நிற விழா ஆடையைக்கூட ருஹானா மாற்றவில்லை. அவள் அறைக்கு கூட அவள் செல்லவில்லை போலும். புருனோ கடித்த காயத்தில் கட்டு போட்டிருந்த ருஹானா உள்ளங்கையை இவான் தன் இரு கைகளாலும் பிடித்தபடி உறங்க, அவளும் அவன் தலையணையில் தலை வைத்து நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்.

ஓரிரு நிமிடங்கள் நின்று பார்த்த ஆர்யன் கதவை மூடி திரும்பி செல்ல யத்தனித்தவன், பின் மனம் மாறி கட்டிலருகே சென்றான். இவான் நெற்றியில் கைவைத்து சூடு இல்லை என நிம்மதியடைந்தவன் ருஹானாவை பார்க்க, அவன் பார்வை அயர்ந்து தூங்கும் அவள் முகத்திலேயே நிலை பெற்று நின்றுவிட்டது.

‘எந்த பெண்ணையும் முகம் நோக்காத நீ ஏன் இவளை இப்படி பார்க்கிறாய்?’ என அவன் மனம் உலுக்க திடுக்கிட்டவன் தன் பார்வையை எடுத்துக்கொண்டான். இடித்துரைத்த அவன் மனமோ வெட்கமே இல்லாமல் திரும்ப அவளைப் பார்க்க சொன்னது,. வேகமாக அவள் கையில் இருந்த துணியை எடுத்தவன் அதை மேசை மேல் வைத்துவிட்டு கதவடைத்து வெளியேறினான்.

——

காலையில் தோட்டத்தில் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்த சல்மாவிடம் வந்த கரீமா, “இன்னுமா நீ முடிக்கல? இப்போ எல்லாரும் உணவு மேசைக்கு வந்துடுவாங்க” என கடுப்புடன் கூறினாள். 

“நேத்து என்னை வச்சி நீ பண்ண கூத்தை மறக்க பார்க்கறேன், அக்கா”

“நேத்து கதை நேத்தோட. இப்போ நம்ம எதிர்காலத்தை பாரு. அதோட உன்னோட எதிர்காலம்”

“என்னோட எதிர்காலமா?’ சிரித்தாள் சல்மா.

பின்னால் இருந்த வீட்டைக் கைகாட்டினாள் கரீமா “பின்னே! இந்த மாதிரி ஆடம்பர மாளிகைல வசிக்கணும்னா சில முயற்சிகள் செய்துட்டே தான் இருக்கணும்.”

“அக்கா! உனக்கு ஒன்னு புரியவே மாட்டேங்குது. அந்த மனுஷன் உண்மையிலே மனுஷனே இல்ல. அவனுக்கு மனசும் இல்ல. என்ன செய்தாலும் அவனை என் பக்கம் திருப்ப முடியாது.”

“சரியா செஞ்சா எல்லாம் மாத்தலாம். நான் சொல்லறபடி கேளு”.

“சரிக்கா சொல்லு” பெருமூச்சு விட்டாள் சல்மா.

“நீ போய் குளிச்சிட்டு டைனிங் டேபிளுக்கு வா. அங்க என் திட்டம் எப்படி நிறைவேறுதுன்னு மட்டும் பாரு”

சலிப்புடன் எழுந்த சல்மா உள்ளே செல்ல, சகுனிப் புன்னகையுடன் கரீமாவும் பின்தொடர்ந்தாள்.

——–

சமையலறையில் ருஹானா இவானுக்காக உணவு எடுத்துக்கொண்டிருக்க, சாரா தன் கைவேலையை பார்த்தபடி அவளுக்கு எது எங்கிருக்கிறது என சொல்லிக்கொண்டிருந்தாள். இவானுக்கு தேவையானது எல்லாம் எடுத்து ருஹானா செல்லவும், “நல்ல பொண்ணு!” என சாரா நஸ்ரியாவிடம் சொன்னார்.

“ஆனா பெரியம்மா! சல்மாக்கு ருஹானாவை பிடிக்கல”

“அடேங்கப்பா! நீ எங்கருந்து கண்டுபிடிச்சே?”

“இதெல்லாமா கண்டுபிடிப்பாங்க? அதான் பார்த்தாலே தெரியுதே”

“ஆனா நீ நேத்து ராத்திரி சல்மாவோட டிரஸ், மேக்கப், அணிகலன்கள தானே உத்து உத்து பார்த்துட்டு இருந்தே”

“ஒரு பொம்மைக்கு மாட்டற மாதிரி அப்படியே எல்லாம் மாட்டிவிட்ருக்காங்க, பெரியம்மா”

“நஸ்ரியா! இதென்ன பேச்சு” சாரா அதட்டிக் கொண்டிருக்கும்போதே, ஜாஃபர் வந்து இருவர் பின்னால் நின்றான்.

“ஆமா, பெரியம்மா! உண்மை தான், நீங்க சல்மா முகத்தை பார்த்திங்களா? அது ஒரு பெயிண்ட் கடை போல இருக்கு. அவ்வளவு மேக்கப், ஆனா அத்தனையும் காஸ்ட்லி ஐட்டம்ஸ். அக்கா பணத்துல நல்லா அனுபவிச்சிக்கிறாங்க. அதான் சீக்கிரத்தில இங்க இருந்து போறா மாதிரி தெரியல”

“நான் உன்னை வாயை மூடுன்னு சொன்னா கேட்கவே மாட்டியா?”

“எனக்கு ஒரு சந்தேகம், பெரியம்மா! இவ்வளவு கெமிக்கல்ஸ் உபயோகிச்சா, முகம் விரைச்சி போகாதா?” கலகலவென சிரித்தவள் “ஆர்யன் சார் பக்கத்தில பார்த்தா பயப்பட போறாரு” என்றபடியே திரும்பியவள் மூச்செடுக்காமல் அசையாமல் நின்றாள்.

முகத்தில் அன்றாடம் மின்னுதே

விலையுயர்ந்த இரசாயன கலவை.. 

சுவாசம் நின்றபின்னும் மிளிருமோ

எகிப்து மம்மியின் சவக்களை.. 

அருகினில் பார்த்திட நேர்ந்தாலோ

அலறி ஓடுவாரோ நம் தலை..! 

“என்ன பேச்சு நின்னு போச்சி.. பேயை பார்த்த மாதிரி பயந்து நிக்கிற, என்னாச்சு” என கேட்ட சாராவும் திரும்பிப் பார்க்க, நஸ்ரியாவை முறைத்தப்படி அங்கே மேனேஜர் ஜாஃபர் நின்றிருந்தான். நஸ்ரியா மெதுவாக அங்கிருந்து நழுவி செல்ல, அவள் நகர்ந்ததும் சாராவும், ஜாஃபரும் வாய் விட்டு நகைத்தனர். 

உணவு மேசையில் நால்வரும் சாப்பிட்டு கொண்டு இருக்க, சல்மா அக்காவை பார்த்து ‘எங்கே உன் திட்டம்?’ என கண் ஜாடையில் கேட்க, ‘வரும், காத்திரு’ என கரீமா கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே பதில் சைகை செய்தாள். சாப்பிட்டுக்கொண்டு இருந்த ஆர்யனை கரீமா கண் காட்ட, சல்மா “ஆர்யன்! இவானுக்கு நேத்து உடம்பு சரியில்லாம போச்சே! இராத்திரிலாம் எனக்கு ஒரே கவலை” என கரிசனையுடன் சொல்ல ஆர்யனிடமிருந்து ஒரு தலையாட்டல் மட்டுமே. 

அம்ஜத் உற்சாகமாக, “நான் பார்த்தேன், இவானை. இப்போ நல்லா இருக்கான். அவன் சித்தி நல்லா கவனிச்சிக்கிறா, அவனும் அவன் சித்தியோட சந்தோஷமா இருக்கான். சந்தோஷமா இருக்கான்ல, ஆர்யன்?” என்று தம்பியிடம் கேட்க, “ஆமாண்ணா, சந்தோஷமா இருக்கான்” என ஆர்யனும் தலையாட்டி சொன்னான். அப்போது நஸ்ரியா கோஸ்லெமே பரிமாற கொண்டு வர, கரீமா சல்மாக்கு கண்காட்டினாள், ‘அதை நீ வாங்கி ஆர்யனுக்கு பரிமாறு!’ என. 

சல்மா ‘நானா?’ என தயங்க, கரீமா முறைக்கவும் எழுந்தவள், நஸ்ரியாவிடம் அந்த தட்டை கேட்டாள். நஸ்ரியா, “இல்ல, நானே வைக்கிறேன்” என சொல்ல அவளிடமிருந்து தட்டை பிடுங்கி ஆர்யனுக்கு பரிமாற போக, அவன் நிமிர்ந்து கூட பாராமல் ஒரு விரல் கொண்டு தடுத்தான். “கோஸ்லெமே சாப்பிடுங்க, ஆர்யன்” என மேலும் சல்மா வற்புறுத்த, “நன்றி. எனக்கு வேணாம்” என அவன் கடுமையாக சொன்னான். நஸ்ரியா சிரிப்பை அடக்க படாதபாடுப் பட்டாள்.

அக்காவை பார்த்து உதட்டை பிதுக்கிய சல்மா கைகளை தட்டிவிட்டு சாப்பிட உட்கார்ந்தாள். கரீமா திரும்பவும் தன் கைக்கடிகாரத்தில் நேரம் பார்க்கும் நேரம் வாயில் அழைப்பு மணி ஒலித்தது. கரீமா திருட்டு புன்னகை புரிய, நஸ்ரியா வந்திருப்பது யார் என்று பார்க்க சென்றாள். அங்கே கையில் ஒரு பார்சலுடன் மிஷால் நின்றிருந்தான், ‘இனிப்புகள் கொண்டு வர சொன்னார்கள்’ என்று சொல்லி.

அதை கையில் வாங்கிய நஸ்ரியா “பணம் கொடுத்து விட்டார்களா?” என கேட்க மிஷால் ‘இல்லை’ என்று சொல்லியவன் தான் ‘ருஹானாவை பார்க்க வேண்டும்’ எனவும் சேர்த்து சொன்னான். “நீங்கள் யார்?” என்று கேட்க “மிஷால்” என அவன் சொன்னான். அவனை காத்திருக்க சொல்லி நஸ்ரியா உள்ளே செல்ல, கரீமா வந்தது யாரென விசாரித்தாள். 

“மிஷால்னு ஒருத்தர் வந்திருக்கார். ருஹானா மேமை பார்க்கனுமாம்” என நஸ்ரியா சொல்லவும், சாப்பிடுவதை நிறுத்திய ஆர்யனின் முகம் இறுகியது. “சரி, அவரை காக்க வைக்காதே. ருஹானாட்ட போய் சொல்லு” என நல்லவள் போல கரீமா நஸ்ரியாவை அனுப்பினாள். ஆர்யனின் கருவிழிகள் வலதும் இடதும் என அலை பாய்ந்தன. 

             ———

கிச்சனில் அமர்ந்து மிஷால் தேநீர் அருந்திக் கொண்டிருக்க, அங்கே வந்த ருஹானா , “மிஷால்” என கூப்பிட்டாள். படபடப்புடன் எழுந்த மிஷால் “ருஹானா! எப்படி இருக்கே.? உன்ன நினைச்சி நான் ரொம்ப கவலையா இருந்தேன்” என சொன்னான். 

“நான் நல்லா இருக்கேன், மிஷால். உக்காரு” 

நாற்காலியில் அமர்ந்தான், “ஆனா பார்க்க நீ நல்லா இல்லயே” சந்தேகம் அவனுக்கு.

அவளும் எதிரே அமர்ந்தாள். “நல்லா தான் இருக்கேன், மிஷால். நேத்து ராத்திரி இவானுக்கு உடம்பு சரியில்லை. அவனை பார்த்துகிட்டேன். அதான் சோர்வா இருக்கு”

அவள் கை காயம் பார்த்து அவனுக்கு பதட்டம், “உன் கைல என்ன காயம்? எப்படி அடிபட்டது?”

“அது ஒன்னுல்ல. சின்ன விபத்து தான்” ருஹானா சமாளித்தாள்.

கரீமாவின் சொற்கள் அவன் நினைவுக்கு வர சற்று முன்னே வந்து குரலை தழைத்து, “ருஹானா! நீ என்கிட்டே ஏதாவது மறைக்கிறியா? இங்க உன்ன கொடுமைப்படுத்துறாங்களா? சொல்லு! பயப்படாதே. இவான் அங்கிள் எனக்கு நிறைய உதவி செஞ்சிருக்கார். அவருக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கேன். உனக்கு என்ன தேவைனாலும் நான் செய்றேன்” என வேகமாக சொல்லிக்கொண்டே செல்ல சமையலறை கதவருகே ஆர்யன் வந்து நின்றான்.

 

“அப்படியெல்லாம் ஒன்னுல்ல, மிஷால் நான் இங்க இவானுக்காக தங்கி இருக்கேன். என்னை நம்பு நான் நல்லா இருக்கேன்’” என ருஹானா அவனை அமைதிப்படுத்த முயன்றாள்.

இருவரும் அக்கம்பக்கம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை கவனித்த ஆர்யன் முகம் சுருக்கி உள்ளே வந்தான். “இவானுக்கு சாப்பிட கொடுத்தியா?” என அவன் சத்தமாக கேட்க, அந்த சத்தத்தில் ருஹானா பதறி எழுந்தவள், “தந்துட்டேனே, மருந்தும் தந்திட்டேன்” என சொன்னாள். நாற்காலியில் அமர்ந்து தன்னையே முகச்சுளிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த மிஷாலை சில விநாடிகள் முறைத்து பார்த்த ஆர்யன், பின் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்து விட்டு சென்று விட்டான்.

ஆர்யன் சென்றதும் வேகமாக எழுந்த மிஷால், “ருஹானா! இங்க என்ன நடக்குது? சொல்லு என்கிட்டே“ என கேட்கும்போது அங்கே வந்த ஜாஃபர், “ருஹானா மேம், சின்ன சார் எழுந்துட்டார். நீங்க பிஸியா இருந்தா நான் பார்த்துக்கவா?” என கேட்டான். “இல்ல. நானே போறேன்” என ருஹானா சொல்லவும், தலையாட்டிய ஜாஃபர் செல்ல, மிஷாலிடம் திரும்பியவள், “நீ இங்கயே இரு, மிஷால். நான் இவானை பார்த்துட்டு வந்துடுறேன்” என்றாள். அவள் வேகமாக செல்லவும் மிஷால் யோசனையில் ஆழ்ந்தான்.