Advertisement

“ஹலோ மிஷால்!”

“நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே?”

“நான் மடாபால இல்ல. இங்க அகாபால தான் இருக்கேன்.”

“உன்கிட்டே பேச சந்தர்ப்பமே கிடைக்கல.”

“இவான் கூட அர்ஸ்லான் வீட்ல இருக்கேன். உனக்கு அப்புறமா விவரமா சொல்றேன்”

“சரி, சொல்லு, உன் ஹோட்டல் எப்படி போயிட்டு இருக்கு?”

“நல்லது, நான் உனக்கு அப்புறம் பேசுறேன்”

ருஹானா பேசி முடிக்கவும், ஒரு வார்த்தை விடாமல் அவள் பேசியதை கேட்ட கரீமா ருஹானாவை வெளியேற்ற ஒரு நல்ல திட்டம் கிடைத்த சந்தோசத்தில் குதித்துக்கொண்டு சென்றாள்.

அவள் சந்தோசத்தை குறைப்பது போல் சல்மா நன்றாக தூங்கிக்கொண்டிருந்தாள். அவளை திட்டி எழுப்பியவள் சாயங்கால விழாவுக்கு தயாராக சொன்னாள். தங்கையின் மொத்த ஆடைகளையும் ஆராய்ந்த கரீமாவுக்கு திருப்தி ஏற்படவில்லை. பின் போன் செய்து சல்மாக்கு புதிய ஆடை, அலங்காரங்களுக்கு என நிபுணர்களின் நேரத்தை பெற்றாள்

சல்மா, “என்ன தான் உன் திட்டம் அக்கா? ஏன் இந்த பரபரப்பு?” என கேட்க, கரீமா சொன்னாள். “இன்னைக்கு நடக்க போறது ஹார்பர்ல நம்ம பெரிய கப்பலை நிறுவும் விழா. இது போல கொண்டாட்டங்கள் ஆர்யனுக்கு பிடிக்காது. நான் தான் எப்பவும் போவேன். இன்னைக்கு இவானை கூட்டிட்டு ஆர்யனும் வரான். இவானுக்கு துணையா என்னை கூப்பிட்டு இருக்கான். கடைசி நேரத்தில எனக்கு உடம்பு சரியில்லனு நான் வரலன்னு சொல்லிடுவேன். அப்படின்னா இவானை விட்டுட்டு ஆர்யன் மட்டும் வருவான்.

நீ செய்ய வேண்டியது என்னன்னா அழகு நிலையம் போயிட்டு நல்லா அலங்காரம் செய்துட்டு புது டிரஸ் போட்டுட்டு நேரா விழா நடக்கும் இடத்துக்கு போக வேண்டியது. எந்த தொந்தரவும் இல்லாம ஆர்யனோட இரவு பூரா நேரம் செலவழிக்க வேண்டியது தான்”

கண்களை விரித்து ஆர்வமாக அக்கா விவரித்ததை கேட்ட சல்மா அவள் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்தாள். “ஆனா அக்கா! நான் இன்னைக்கு என் பழைய நண்பர்களோட வெளிய போக இருக்கேனே!” என அவள் சொல்லி வாய் கூட மூடவில்லை. கரீமா அவள் வாயிலேயே அடித்தாள்.

“நல்லா நினைவு வச்சிக்கோ. இந்த நொடியில இருந்து உனக்கு ஆர்யனை தவிர வேற எதுவும் முக்கியமா இருக்க கூடாது. நான் இன்னைக்கு சொல்றது தான் கடைசி” என வலியுறுத்திக்கொண்டு இருக்கும்போதே சல்மா போன் அடிக்கவும் அவள் அதை வேகமாக எடுத்து பார்த்தாள்.

கரீமா அந்த போனை பிடுங்கி கீழே போட்டவள், “உன் நல்லதுக்கு தான் சொல்றேன். உன் எதிர்காலம் வசதியா இருக்கணும்னா நீ ஆர்யனை கல்யாணம் செஞ்சாகனும். அதுக்கு நீ எல்லாம் செய்யணும். இந்த சொத்து எனக்கு வேணும். யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன். என்ன விலையானாலும் கொடுத்து இந்த சொத்தை அடைவேன். சரி, இப்போ போய் நல்லா ட்ரெஸ் செய்துட்டு ஆர்யனோட கவனத்தை உன் அழகு மேல திருப்பு, போ” என்று சொல்லி வெளியே செல்ல, சல்மா சலிப்புடன் நின்றாள்.

——-

இவான் எழுந்து அமர்ந்து நீல கப்பல் மற்றும் சிவப்பு கப்பலுடன் விளையாடிக்கொண்டு இருப்பதை திருப்தியுடன் பார்த்துக்கொண்டே உள்ளே வந்த ஆர்யன், இவான் எதிரே கட்டிலில் அமர்ந்தான். “சிங்க பையா! இந்த கப்பலுக்கு பேர் வச்சிருக்கியா?” என ஆர்யன் கேட்க, “இது காற்று, இது புயல்” என்று இவான் கப்பல்களை தூக்கி காட்டி சொன்னான்.

“பேர் நல்லா இருக்கே! வெல்டன் அக்னி சிறகே” என ஆர்யன் சொல்ல, “என் சித்தி தான் வச்சாங்க” என இவான் பெருமைப்பட்டான். “உனக்கு உடம்பு சரியாகிடுச்சா?” என சித்தப்பா கேட்க, அதற்கும், “என் சித்தி என்னை நல்லா கவனிச்சிக்கிட்டாங்களே” என சித்தி புகழ் பாடினான்.

இவான் நெற்றியை தொட்டு பார்த்த ஆர்யன் “நல்லது. இப்போ ஜீரம் இல்ல” என்றபடி அவனும் ஒரு தாள் எடுத்து கப்பல் செய்துக்கொண்டே, “சரியான நேரத்துக்கு மாத்திரை எடுத்துக்கணும். அது தான் உன்ன சீக்கிரம் குணமாக்கிருக்கு” என்றான், உன் சித்தி பங்கு குறைவு தான் என்பது போல்.

அதற்கு இவான் பதில் சொல்லும்முன் பழச்சாறுடன் சான்ட்விச் கொண்ட ஒரு தட்டுடன் ருஹானா உள்ளே வந்தாள். இவான் அருகே குனிந்து இவானுக்கு சான்ட்விச் கொடுத்தவள், “சாப்பிடு கண்ணே!” என்றாள். அவள் கழுத்தில் ஆடிய சங்கிலியை திருப்தியுடன் பார்த்த ஆர்யன் அதற்கு எதிர்மறையாக, “இப்போ தான் காலை உணவு சாப்பிடுறானா? அவனோட மாத்திரை நேரமும் தாண்டிடுச்சே” என அவளைப் பார்த்து கோபத்தோடு கேட்டான்.

ருஹானா பதில் சொல்வதற்குள் இவான் முந்திக்கொண்டு, “அப்பவே சாப்பிட்டு மாத்திரை போட்டேனே, சித்தப்பா. சான்ட்விச் ருசியா இருக்குனு மறுபடியும் கேட்டேன். என் சித்தி எனக்காக செய்து கொண்டு வந்தாங்க” என சித்தி புராணம் படிக்க, ருஹானா புன்னகை செய்ய, அவளை ஓர கண்ணால் ஒரு கணம் பார்த்த ஆர்யன் கப்பல் செய்வதில் கவனம் போல் குனிந்து கொண்டான்.

ஒன்றும் சொல்லாமல் மேசையில் மேல் இருந்த தண்ணீர் பாத்திரத்தை ருஹானா கொண்டு வந்து, இவான் முன்னே வைத்து, “செல்லம் இதுல உன் கப்பல் போகும், பார்” என்றாள். உற்சாகமான இவான் அதில் தன் ‘புயல்’ கப்பலை விட்டான். அது அழகாக மிதக்க, அவளை ஒரு கண்ணால் பார்த்தபடியே ஆர்யனும் தான் செய்த சிறிய கப்பலை இவானிடம், “இதையும் விடு, சிங்கப்பையா” என்று கொடுத்தான்.

ஆனால் பரிதாபம், நகரத்தின் பெரிய கப்பல்களின் உரிமையாளனின் கப்பல் தண்ணீரில் சாய்ந்து விட்டது. “சித்தப்பா! என் சித்தியே செய்யட்டும். அவங்க கப்பல் எப்பவும் மூழ்காது” என இவான் சொல்லவும், ஆர்யன் நிமிர்ந்து ருஹானாவை பார்த்து தலையசைத்தான். அவளும் ஒரு நகரும் நாற்காலியை இழுத்து வந்து இவான் அருகே அமர்ந்து கப்பல் செய்ய துவங்கினாள். இவான் சிரிப்புடன் பார்த்திருக்க, ஆர்யன் அவள் கப்பல் செய்வதை பக்கவாட்டு பார்வையில் கவனத்துடன் பார்த்தான்.

“காலையிலேயே இந்த அக்கா என்னை நானி வேலை பார்க்க சொல்றா” என்று புலம்பியபடியே வந்த சல்மா, அந்த நானி வேலைக்கு சற்றும் சம்பந்தமில்லாத அழகான சிவப்பு நிற கவுனில், அதற்கு பொருத்தமான அணிகலன்களோடு கண்கவரும் வகையில் இருந்தாள்.

அப்போது போனில் அழைத்த தன் காதலனின் அழைப்பை ஆர்வத்துடன் ஏற்றவள், “அக்கா இருந்தா. அதான் உன் போன் எடுக்க முடியல. நானும் உன்ன மிஸ் செய்றேன். அக்கா என்னை தனியா விட மாட்றா. சீக்கிரம் திரும்பி வந்துடுறேன். ஐ லவ் யு” என கொஞ்சி பேசியவள் வெட்கத்துடன் முத்தங்கள் தந்தாள்.

போனை அடைத்துவிட்டு இவான் அறைக்கு முன் வந்தவள், அங்கே கனகச்சிதமாக கப்பல் கட்டும் வேலை நடந்து கொண்டிருப்பதை கண்ணுற்று கதவருகே நின்று கவனிக்கலானாள். அப்போது அங்கே வந்த கரீமா ‘இவள் ஏன் தன் வேலையை பார்க்கிறாள்?’ என சல்மா அருகே வந்து அவள் கையை பிடிக்க, உதட்டின் மேல் கை வைத்து அவளை எச்சரித்த சல்மா உள்ளே கைகாட்டினாள்.

“இப்படி ஓரத்தை அழுத்தி விட்டா தான் கப்பல் மிதக்கும்” என்று ருஹானா வகுப்பு எடுப்பதை உள்ளே இருவர் கவனமுடன் கவனித்தார்கள் என்றால் வெளியே இருவர் கடுப்புடன் கவனித்தார்கள். ஆனாலும் சல்மா முகத்தில் தன் அக்காவை நினைத்து சிரிப்பு தான் அதிகம் தெரிந்தது.

ருஹானா செய்த பச்சை கப்பலை நீரில் விட்ட இவான், “பாருங்க சித்தப்பா! எவ்ளோ அழகா போகுது” என சிரிக்க, தன் தோல்வியை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாத ஆர்யன் ஒற்றை புருவம் உயர்த்தி ருஹானாவை பார்த்தவன் எழுந்து கொண்டான். சகோதரிகள் குதித்து ஓடி தள்ளி நின்றுகொண்டனர்.

“அக்னி சிறகே! நல்லா ஓய்வெடு. உடம்பை சரிப்படுத்திக்க. இரவு நாம விழாக்கு போலாம்” என சொல்ல, நாற்காலியிலிருந்து வேகமாக எழுந்த ருஹானா, “ஆனா அவனுக்கு இன்னும் முழுசா சரியாகல” என்று ஆட்சேபித்தாள். ஆர்யன் “நான் அவனுக்கு வாக்கு கொடுத்துருக்கேன். என் வாக்கை நான் எப்பவும் காப்பாத்துவேன்” என்றான், உறுதியுடன்.

“அவன் உடல்நிலை இன்னும் மோசமாகலாம்” என ருஹானா கவலைப்பட, அவளை கண்டுகொள்ளாமல், ஆர்யன் இவானிடம் “இரவு சந்திப்போம், இரும்பு மனிதா!” என்று வெளியே சென்றான். காலை வணக்கம் சொல்லிய கரீமாவையும் கண்டுகொள்ளாமல் போகிற போக்கில் காலை வணக்கம் சொல்லி அவன் அறைக்கு சென்றான், ஆர்யன்.

அழகுச்சிலை போல நின்ற சல்மா, “பார் அக்கா, இந்த மனிதனா என்னை காதலிக்க போறான்? நீயும் கோட்டை கட்றே!’ என ஏளனமாக சிரிக்க, “நான் சொல்லறதை மட்டும் செய். எல்லாம் நடக்கும். நீ ஆர்யன் கூட நெருக்கமா பழகு. மத்ததை நான் பார்த்துக்குறேன்” என அப்போதும் மனம் தளராமல் கரீமா பேசினாள்.

அக்காவின் தொல்லை தாங்காமல் சல்மா, ஆர்யனின் அறைக்கு சென்றவள் “ஆர்யன்!” என்று அழைக்க, கதவு திறக்கப்படும் ஓசையில் நிமிர்ந்தவன், அவள் அழைப்புக்கு மறுமொழி சொல்லாமல் குனிந்து தன் வேலையில் கவனமானான்.

அவன் அலட்சியத்தில் மனம் நொந்தவள், சமாளித்துக்கொண்டு, “அப்புறம் ஆர்யன், நாம பேசவே இல்லயே! எப்படி இருக்கீங்க? வேலை எப்படி போகுது என விசாரித்தாள். “ஆமா, எல்லாம் சரிதான்” என லேசாக நிமிர்ந்து அவள் முகம் பார்க்காமல் சொன்னான்.

இன்னும் அவன் மேசைக்கு அருகே நெருங்கியவள், “இன்னைக்கு விழாக்கு தயார் செய்றீங்களா? நான் ஏதும் உதவி செய்யவா?” என கேட்டாள். “நன்றி. ரஷீத் எல்லாம் பார்த்துக்குவான்” என்றான், அப்போதும் அவள் உடையையோ, அலங்காரத்தையோ பார்க்காமல்.

அக்காவின் நச்சரிப்புக்கு பயந்து மேலும் பக்கத்தில் சென்று, “மேடைப்பேச்சு, தொகுத்து வழங்கறது எதாவது இருந்தா சொல்லுங்க. நான் செய்றேன். நான் லண்டன்ல அதுக்கு ஸ்பெஷல் கோர்ஸ் செய்துருக்கேன்” என்றாள். “அப்படி ஏதும் இல்லை” ஒரே வார்த்தையில் முடித்தான்.

‘இதுக்கு மேல என்ன செய்ய?’ என அவள் திணற, ‘இவள் எப்ப வெளிய போவா?’ என அவன் யோசிக்க, இருவரின் சங்கடத்தையும் போக்க ரஷீத் உள்ளே வந்தான், கதவை தட்டிவிட்டு. “இரவு நிகழ்ச்சியில் வீடியோ ப்ரோமோவை கட் பண்ணிடு, ரஷீத்” என ஆர்யன் எடுத்ததும் அவனிடம் சொல்ல சரியென தலையாட்டிய ரஷீத், சல்மாவை பார்க்க, அவள் “சரி, விழாவில் சந்திப்போம்” என்று சொல்லி வேகமாக வெளியே சென்றாள்.

——-

வெந்நீரில் துண்டு நனைத்து இவானுக்கு உடம்பு துடைத்து விட்ட ருஹானா அவனுக்கு பழச்சாறு கொடுத்து உட்கார வைத்தாள். உள்ளே வந்த கரீமா, “சித்தி கவனிப்பில இவான் நல்லா தேறிட்டானே!” என்று அவன் தலையை தடவ, ருஹானா புன்னகை செய்தாள்.

லேசாக இருமி காட்டிய கரீமா “இவான் குணமாகுறான். எனக்கு இப்போ தொண்டை வலி, இருமலா இருக்கு” என பாசாங்கு செய்தாள். பதறிய ருஹானா, “சூடா நிறைய குடிங்க. தொண்டைக்கு இதமா இருக்கும்” என ஆலோசனை வழங்க, “ஆமா, சாராவை சூப் செய்ய சொல்லி இருக்கேன்” என்றவள் “எனக்கு உங்க மடாபா சூப் ரொம்ப பிடிக்கும். யோகார்ட், கறித்துண்டுகள், கடலைலாம் போட்டு செய்வீங்களே?” என தன் பாதைக்கு ருஹானாவை இழுத்து வந்தாள்.

Advertisement