Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 12

இவான் அறையில் சல்மா கொண்டு வந்து குவித்த விளையாட்டு பொருட்கள் அலமாரியை அலங்கரிக்க, இவான் இரண்டு காகித கப்பல்களை வைத்து விளையாடிக் கொண்டிருக்க, அவனை ஆர்யன் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“இது உனக்கு யார் செய்து கொடுத்தது?” ஒரு கப்பலை கையில் எடுத்து பார்த்து ஆர்யன் வினவ.. “என் சித்தி!” ஆனந்தம் இவான் குரலில். தன் கையில் இருந்த சிவப்புநிற கப்பலை சித்தப்பாவிடம் காட்டி, “இதான் பெருசு. இது எப்படி போகுது பாருங்க” என காற்றில் வேகமாக சுற்றி காட்டினான்.

“உனக்கு கப்பல் அவ்வளவு பிடிக்கும்ல. நிஜ கப்பல் பார்க்க உனக்கு ஆசையா?’ என்று ஆர்யன் கேட்டான்.

“நிஜமாகவா?”

“நிஜம்தான். நாளைக்கு என்கூட வரியா, பார்க்கலாம்”

“வரேனே, போலாம், சித்தப்பா!”

“ஆனா ஒரு நிபந்தனை இருக்கு. நாளைக்குள்ள உன் உடம்பு சரிப்படுத்திக்கணும்”

“நான் தான் நல்லாகிட்டேனே! சித்தி எனக்கு சாப்பாடு, மாத்திரை, பால் எல்லாம் கொடுக்குறாங்க. நானும் சாப்பிடுறேனே!”

ஆர்யன் மனதில் இருந்த பெரும் பாரம் அகன்றது. நிம்மதியாக தலையாட்டிக்கொண்டான்.

இவான் ருஹானாவை நினைவுப்படுத்தவும் மணிக்கட்டை நோக்கி நேரம் பார்த்தான். பொறுமையின்றி எழுந்து நடந்தவன், “எங்க போனா இவ? பத்து நிமிஷத்துல வரேன்னு சொல்லிட்டு போனா” என வாசலைப் பார்க்க, அங்கே சல்மா கையில் ஒரு பரிசுப்பெட்டியுடன் வந்தாள்.

“இவான் டியர்! நான் வந்துட்டேன்” என்று ஆரவாரமாக வந்த சல்மா, ஆர்யன் அங்கிருப்பது தெரியாதது போல, “ஆஹ் ஆர்யன்! நீங்க இங்க தான் இருக்கீங்களா? நான் இவான் கூட விளையாட வந்தது உங்களுக்கு ஒன்னும் தொந்தரவு இல்லயே?” என கேட்டாள். அவன் தலை ‘இல்லை’ என ஆடியபின் ஜன்னல் பக்கம் திரும்பி கொண்டது.

“இதோ, இவான்! இதை பாரு, நாம இதை வச்சி விளையாடலாமா?” பெட்டியுள் இருந்த பிளாஸ்டிக் படகு பாகங்களை பிரித்துக் காட்டி சல்மா கேட்க, “எனக்கு இது தெரியலயே” என்று சொன்ன இவான் தன் காகித கப்பலை செலுத்த ஆரம்பித்தான்.

“நான் சொல்லி தரேன். இது உன் சித்தப்பா கப்பல் போல பெருசு” என்று ஆர்யனை பார்த்துக்கொண்டே சொல்ல அவன் பார்வை வெளியே இருந்து உள்ளே திரும்பவில்லை. இவானும் கவனிக்கவில்லை எனவும் சலிப்படைந்த சல்மா, “நீ என்ன விளையாடற?” என கேட்டாள்.

“என் சித்தி செஞ்சி கொடுத்த கப்பலை ஓட்டிட்டு இருக்கேன்” என சொல்லவும் இவானை திரும்பி பார்த்த ஆர்யன் மறுபடியும் வெளியே பார்க்கலானான். “இந்த கப்பல் தண்ணில போகாதே!” என சல்மா ஏளனமாக சொல்லவும், “நான் ஓட்டுவேனே! இப்படித்தான் போகும்” என இவான் கையில் கப்பலை சுற்றி காட்டினான். ‘உஃப்’ என்று மூச்சுவிட்டு சல்மா தலையை திருப்பி கொண்டாள்.

வெளியே பார்த்துக் கொண்டிருந்த ஆர்யன் அங்கே கண்ட காட்சியில் மெய் மறந்து நின்றான். ஒரு பூத்தொட்டியை ருஹானாவும், நீர்வாளியை அம்ஜத்தும் கைகளில் வைத்துக்கொண்டு, சிரித்து பேசியவாறே நடந்து வந்து கொண்டிருந்தனர். தன் சகோதரன் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியில் ஆர்யன் முகம் மென்மையானது.

——

சல்மா அவள் அறையில் தன் தோழியுடன் போனில் பேசிக்கொண்டிருக்கிறாள்.

“என் அக்கா செஞ்ச வேலையால நான் தான் கஷ்டப்படுறேன்”

“ஆமா.. ஆமா.. நடிச்சிட்டு தான் இருக்கேன்”

“வேற என்ன செய்ய?”

“உனக்கு என் அக்காவை பத்தி தெரியாது”

“நான் அவ பேச்சை கேட்கலனா கொன்னு புதைச்சிடுவா”

“எப்படியும் ஆர்யன் என்னை லவ் பண்ண மாட்டான்”

“அடுத்த வாரம் நான் லண்டன் வந்துடுவேன்”

“என் ஆளு எனக்காக அங்க காத்துட்டு இருக்கான்”

அவள் பாட்டுக்கு சந்தோசமாக பேசிக்கொண்டே இருந்தாள்.

——

நடு இரவில் இவானை பார்ப்பதற்காக அவன் அறைக்கு ஆர்யன் வர, இவான் லேசான காய்ச்சலில் முனகி கொண்டு இருந்தான். கவலையான ஆர்யன் அவனை தூக்கிக்கொண்டு போய் தன் முன்னறையில் படுக்க வைத்தான்.

தூக்கத்தில் கனவு கண்டு விழித்த ருஹானாவும் தன் மேல்கோட்டை போட்டுக்கொண்டு இவானை தேடி வர, கதவும் திறந்திருக்க, இவானும் காணாதிருக்க திகைத்துப் போனாள்.

வெளியே வந்தவள் ஆர்யன் அறைக் கதவும் லேசாக திறந்திருப்பதை பார்த்தாள். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெல்ல உள்ளே வர, இருட்டாக இருந்ததால், தன் கைபேசியின் டார்ச்சை உயிர்ப்பித்துக் கொண்டு மேலும் அடியெடுத்து வைத்தாள்.

வெளியறையிலேயே சோபாவில் இவான் உறங்குவது கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டவள், ஆர்யன் எங்கும் தென்படுகிறானா என சுற்றிலும் பார்த்தாள். பின் தன் கைபேசியை மூடி கோட் பாக்கெட்டில் போட்டாள். இல்லையில்லை. போடுவதாக நினைத்துக்கொண்டு கீழே தவற விட்டாள்.

இவானை தூக்கிக்கொண்டு ‘நீ எப்படி இங்க வந்த?’ என கேட்டவாறே வெளியே வந்து அவன் அறையில் இவானை படுக்க வைத்தாள். ‘தூக்கத்துல நடக்கற பழக்கம் இருக்கா இவனுக்கு?’ என கேட்டவள், அவன் நெற்றியை தொட்டு பார்த்தாள். சூடு இல்லை எனவும் ஆறுதல் அடைந்தவள், தன் பாக்கெட்டை தடவ அவள் கைத்தொலைபேசி அங்கே இல்லை.

திடுக்கிட்டவள் கீழே தேடிக்கொண்டே தயக்கமாக ஆர்யன் அறைக்குள் மீண்டும் எட்டி பார்த்து, ஆர்யன் அங்கு இல்லை என உறுதிப்படுத்திக்கொண்டு சோபாவில் தேடினாள். உள்ளறையை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அங்கே கிடந்த போர்வையை உதறி தேடியும் கிடைக்கவில்லை.

சுற்றுமுற்றும் தேடியவளை ஒரு கை பிடித்து இழுத்தது. தூக்கிவாரிப்போட ‘ஆஹ்’ என கத்தியவளை அந்த கை இழுத்த இழுப்புக்கு ஒரு சுற்று சுற்றியவள் மோதியது ஆர்யன் மேல். பயந்தவள் பார்வையும், இழுத்தவன் பார்வையும் மோதி நின்றன.

சில விநாடிகளில் சுதாரித்த ஆர்யன், “இங்க என்ன செய்றே?” என்று கேட்டான், பிடித்த கையை விடாமல். “இவானோட டெம்பரேச்சர் சரிபார்க்க வந்தேன். அவனை காணோம். பயந்திட்டேன். உங்க ரூம் கதவு திறந்திருந்தது.” என அவள் கடகடவென சொல்ல, அவளின் அக்கறையை நினைத்து, சுருங்கி இருந்த கண்கள் லேசாக விரிந்தது.  அவள் கையை விட்டவன், அவளை தாண்டி சோபாவை எட்டி பார்த்தான்.

“இவான் இப்போ அவன் ரூம்ல இருக்கானா?” என அவன் கேட்க, ஆமென சொன்னவள், “அவனை தூக்கிட்டு போகும்போது என் மொபைல் இங்க விழுந்துடுச்சி” என்றும் சேர்த்து சொன்னாள். அவன் பார்வை கீழே செல்ல, கைத்தொலைபேசி கிடந்தது தெரிய கண்களால் அதை அவளுக்கு காட்டினான்.

அவள் குனிந்து செல்லை எடுத்து வேகமா செல்ல, செல்லும் அவளையே பார்த்தான். ருஹானா ‘தப்பித்தோம், பிழைத்தோம்’ என வெளியே வந்து மூச்சு விட்டாள். கரீமாவும் அந்த நேரம் வெளியே வந்தவள், ஆர்யன் அறை வாசலில் ருஹானா நிற்பதை பார்த்து மறைந்து நின்றாள்.

இவான் அறைக்குள் ருஹானா நுழைய முற்பட “நில்!” என்ற ஆர்யனின் குரல் அவளை தடுத்தது. பயத்துடன் அவள் திரும்பி அவனை பார்க்க, எதையோ கொடுக்க அவள் முன்னே கை நீட்டினான். அவள் அதை வாங்காமல் அவனை பார்க்க, கையில் இருப்பது என்ன என கையை திருப்பிக் காட்டினான்.

இவான் பட டாலர் பொருத்திய சங்கிலியை கண்டதும் அவள் கை தானாய் நீண்டது. அவள் கை தொடாமல் அந்த சங்கிலியை ஆர்யன் அவள் கையில் போட்டான். தூரத்தில் கரீமா திகைக்க, அவள் ஆனந்தக் கண்ணீருடன் அதை பார்ப்பதை ஓரக்கண்ணால் கண்டவன், அவள் நன்றி சொல்ல முனைவதை கவனிக்காமல் விருட்டென்று அவன் அறைக்குள் சென்று விட்டான்.

  ——-

காலையில் பணிக்கு செல்ல கிளம்பிய ஆர்யன், தன் கைத்தொலைப்பேசியை எடுக்கும்போது நேற்றைய அவளின் அருகாமை அவன் நெஞ்சில் ஆடியது. போனில் ‘டிங்’ எனும் ஓசை எழும்பி அவனை தற்காலத்துக்கு அழைத்து வந்தது. முகத்தை எப்போதும் போல் இறுக்கமாக்கியவன் போனை கோட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வேகமாக வெளியே சென்றான்

—–

நேற்று இரவு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளாவிட்டால் கரீமாவுக்கு தலை வெடித்து விடும் போல் இருந்தது. கடுகடுப்பாக ருஹானா அறை நோக்கி வந்தவள், கதவு பக்கம் வந்து ஒட்டு கேட்டாள். உள்ளே இருந்து எந்த சத்தமும் கேட்காததால், முகத்தில் புன்னகையை பூசிக்கொண்டு கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

கைகளில் சங்கிலியை வைத்துக்கொண்டு ருஹானா எதோ யோசனையில் இருப்பதை பார்த்தவள், காலை வணக்கம் சொல்லி, “ஏன் சோர்வா இருக்கே, டியர்?” என அன்பொழுக கேட்டாள். புது இடம் என்பதால் நல்ல உறக்கம் இல்லையென ருஹானா சொல்ல, “ஆமா, எனக்கும் அப்படித்தான். இடம் மாறினால் தூக்கம் வராது. நம்ம வீட்ல நம்ம பெட்ல படுத்தாத்தான் நல்லா தூங்க முடியும்” என்று வேண்டுமென்றே சொன்னாள். ருஹானா முகம் வாடுவதை கண்டு உள்ளூர மகிழ்ந்தவள், “அச்சோ! இதும் உன் வீடும் தான் டியர்!” என்றாள்.

“என்னை மன்னிச்சிடு, ருஹானா. சல்மா வந்ததும் நான் உன்ன கவனிக்கவே இல்ல. எல்லாம் வசதியா இருக்குதானே. உனக்கு ஏதும் தேவைனா என்னை கேளு” என கரீமா சொல்ல சரியென ருஹானா தலையாட்டினாள்.

கரீமா தற்செயலாக பார்ப்பதுபோல ருஹானா கையில் இருந்ததை பார்த்து “அட இந்த சங்கிலி எப்படி உன்கிட்டே வந்தது? இது தஸ்லீம் சங்கிலியாச்சே! ஆர்யன் வச்சிருந்தானே?” என கேட்டாள். “அவர் தான் நேத்து ராத்திரி திருப்பி தந்தார்” என ருஹானா சொல்லவும் “என்ன ஆர்யன் தந்தானா, அதிசயமா இருக்கே? உன் அக்கா சங்கிலி உன்கிட்டே இருக்குறது நல்ல விஷயம் தான். ஆனா ஆர்யன் அதை திருப்பி தர அளவுக்கு என்ன நடந்தது?’ என கேட்டாள்.

ருஹானா சொல்ல தயங்கவும், “தப்பா ஒன்னும் நடக்கலையே?” என சந்தேகமாக கரீமா கேட்க, ருஹானா வேகமாக மறுத்தாள். “இவான் அங்க தூங்கிட்டு இருந்தான். நான் அவனை தூக்கிட்டு வரும்போது என் போன் கீழ விழுந்துடுச்சி. அது எடுக்க போனேன். அப்போ சங்கிலிய தந்தார்” என ருஹானா நடந்தது எல்லாம் சொன்னதும் தான் கரீமாக்கு திருப்தியானது.

“ஒரு அக்காவா நான் உனக்கு ஒன்னு சொல்றேன். இனி ஆர்யன் ரூம்க்கு போகாதே. அது அவனுக்கு பிடிக்காது” என்று பயங்காட்டவும் ருஹானா சரியென்றாள். அப்போது ருஹானா போன் ஒலிக்க, கரீமா “நீ பேசு, நான் வெளிய போறேன்” என நாகரீகமாக வெளியே சென்றவள், அநாகரீகமாக ஒட்டு கேட்டாள், கதவை சரியாக மூடாமல் கதவை ஒட்டி நின்று.

அழைப்பை எடுத்த ருஹானா பேச ஆர்மபித்தாள்.

Advertisement