Advertisement

சமையலறையில் சாராவிற்கு இவான் சாப்பிட்ட தட்டை பார்த்ததும் ஆனந்த கண்ணீர் வந்தது. “எல்லாமே சாப்பிட்டாரா, சின்ன சார். மாஷா அல்லாஹ்!” என இறைவனுக்கு நன்றி சொன்னார். ருஹானா புன்னகைக்கவும் “சித்தியை விட வேற யார் சாரை இப்படி கவனிக்க முடியும்?” என்று சொல்லி திரும்பியவர், நஸ்ரியா பழக்கலவை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்.

“சாலட் கம்மியா இருந்ததே!. இப்போ உணவு மேசையில யாராவது கேட்டா நான் என்ன செய்வேன், அல்லாஹ்” என தலை மேல் கை வைக்க, ஜாஃபர் உள்ளே வந்தவர் “எல்லாருக்கும் சாலட் கொண்டு போ” என சொல்லவும் சாராவோடு சேர்ந்து நஸ்ரியாவும் திகைத்தாள். அடுத்து ஜாஃபர் “சல்மா மேம்க்கு வேண்டாமாம்” என சொல்லவும் “அப்பாடா! மிக மகிழ்ச்சி!” என நஸ்ரியா சொல்ல, சாரா நிம்மதி பெருமூச்சு விட, ருஹானா இதழ்களில் சிரிப்பு எட்டி பார்த்தது.

“என்ன, எதுக்கு மகிழ்ச்சி?” என ஜாஃபர் கேட்க. நஸ்ரியா, “இல்ல, சல்மா மேம் டயட்ல இருக்குறது நல்ல செயல், இல்லயா? அதான் சொன்னேன்” என்று சமாளிக்க, ருஹானாவின் சிரிப்பு பெரிதானது. ஜாஃபர் அங்கிருந்த பணியாளர் அமர்ந்து சாப்பிடும் சிறிய மேசையை காட்டி, “ருஹானா மேம்! நீங்க இங்க உக்காந்து சாப்பிடுங்க” என்று சொல்லவும் அவள் பசி அதிகமானது. என்றாலும் அவள் தயங்கினாள்.

“இனி நீங்க இங்க உக்காந்து தான் சாப்பிடுவீங்க. ஆர்யன் சார் தான் சொன்னார்“ என்று ஜாஃபர் சேர்த்து சொல்லவும், தலையாட்டிய அவள் “இவான் தனியா இருப்பானே! நான் அப்புறம் சாப்பிடுறேன்” என வெளியே செல்ல திரும்பினாள். “நஸ்ரியா! நீ சாலட் கொடுத்துட்டு மேல இவான் ரூம்க்கு போ” என கட்டளையிட்ட ஜாஃபர், ருஹானாக்காக நாற்காலியை நகர்த்திப் போட்டுவிட்டு அவனும் நகர்ந்தான்.

அதற்குள் அங்கே உணவுடன் வந்த சாரா, “நீ நல்லா சாப்பிட்டா தானே இவானை கவனிக்க முடியும்.! உக்காந்து சாப்பிடும்மா. என் சமையல் உனக்கு பிடிக்கும் பாரேன்” என அன்பாக உபசரித்தார். ருஹானா அமரவும் “நான் போய் உனக்கு ரொட்டி எடுத்துட்டு வரேன்” என்று சாரா செல்ல, ருஹானா கண் கலங்க உணவை முள் கரண்டியில் எடுத்து வேகமாக சாப்பிட்டாள். எப்படியெல்லாம் விதவிதமாக சமைத்து தந்தைக்கு பரிமாறியவள் நிலைதான் இத்தனை குறுகிய காலத்தில் எத்தனை மாறிப்போனது..!!!!

——

இவான் நன்றாக தூங்கிக்கொண்டு இருக்க, அவனை பார்க்க வந்த ஆர்யன் அறையின் எல்லா இடங்களிலும் பார்வையை ஓட்ட ருஹானா எங்கும் இல்லை. அவன் கோபத்தை இன்னும் அதிகப்படுத்த, அங்கே மேசையில் இருந்த ருஹானாவின் போன் ஒலித்தது. வேகமாக சென்று அதன் சத்தத்தை நிறுத்தியவன், ‘மிஷால்’ எனும் பெயர் மேலே வர போனை உற்று பார்த்தான்.

அப்போது ஒரு தட்டில் பால் குவளையுடன் உள்ளே வந்த ருஹானா, ஆர்யனை பார்த்ததும் தயங்கி நின்றாள். “இவான் ஏன் தனியா இருக்கான்?” ஆர்யன் அவளை பார்த்து கேட்டான். “அவனுக்கு தான் பால் சூடுபடுத்திக் கொண்டு வந்தேன்” ருஹானா மெதுவாக பதில் சொன்னாள்.

“அதை செய்ய இங்க ஆளுங்க இருக்காங்க. இனிமே இப்படி செய்யாதே! நீ கேட்டா போதும். அவங்களே கொண்டு வந்து தருவாங்க. இவானை கவனிக்கிறது மட்டும் தான் உன் வேலை” அவளை முறைத்துப் பார்த்து அவன் சொல்ல அவள் எச்சில் விழுங்கினாள்.

“உன் போன் அடிச்சது. அது ஏன் சைலன்ட்ல இல்ல?” நீட்டியவன் அவள் பற்றவும் அதை அவளிடம் கொடுக்கவில்லை. அவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள். அவளால் பதில் சொல்ல முடியவில்லை. அவள் அவன் பார்வையை சந்திக்க முடியாமல் வேறு பக்கம் பார்க்க, அவன் தன் பார்வையை அவளிடமிருந்து திருப்பவில்லை.

அவள் போனை இழுக்க அப்போதும் தன் பிடியை விடவில்லை. “போனை இப்படி வச்சிட்டு போகாதே!” என்று சொல்லி போனை கொடுத்தான். அவளும் சரியென மெல்ல தலையசைத்தாள். போனை திறந்து ‘யார் அழைத்தது’ என்று பார்க்கவும் அவள் முகம் மென்மையானது. போனையும் அவள் முகத்தையும் மாறி மாறி பார்த்த ஆர்யன் முகம் சுளித்தான்.

“உனக்கு பலதடவை சொல்லிட்டேன். இவானை தனியா விடக்கூடாது. அவன் மேல இருந்து உன் கண்ணை எடுக்க கூடாது. அவனோட ஆரோக்கியமும், மற்ற எல்லா விசயங்களும் நீ தான் கவனிக்கணும். உனக்கு புரிந்ததா?” என ஒற்றை புருவம் உயர்த்தி குரலையும் உயர்த்தி சொன்னான்.

தலை உயர்த்தி ருஹானா சொன்னாள். “அப்படியே எப்போ அவன் மேல நான்  அன்பு காட்டணும்னும் சொல்லிடுங்க. எனக்கு வசதியா இருக்கும்.” அவன் முகம் மாறியது. பார்வையையும் தாழ்த்தினான். இதுவரை கோபமாக பேசியவள் கண்கலங்க சொன்னாள். “நான் இவான் நானி இல்ல. அவன் சித்தி. சரியா?  நீங்க மறுத்தாலும், மறந்தாலும் நான் அவன் சித்தி தான்”

நியமனமும் கட்டளையும்

உறவை மறுத்திடுமோ..?

அன்றி பாசம் நிறைந்த

கவனிப்பை குறைத்திடுமோ..?

தாய் அன்புக்கு ஈடேது..?

என்ன பெயரிட்ட போதும்

பந்தம் விட்டு போகாதே..!

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நிற்க, கடைசியில் ஆர்யன் தான் தன் பார்வையை மாற்றி இவானிடம் திருப்பினான்.  பின் அவன் வெளியேற, கதவை அடைத்த ருஹானா “அல்லாஹ்! எனக்கு பொறுமையை கொடுங்க” என்று வேண்டியவள் இவான் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

——-

காலையில் சமையலறையில் ருஹானா நிற்க, போன் பேசிக்கொண்டே உள்ளே வந்த கரீமா நஸ்ரியாவை தேடினாள். ருஹானா ‘அவள் இல்லை’ என சொல்லவும், போனில், “ஒரு நிமிடம் லைன்லயே இருங்க” என்று சொன்னவள், “ருஹானா டியர்! இந்த விட்டமின் பாட்டிலை அம்ஜத்ட்ட கொடுத்துடேன். அவர் மாடித்தோட்டத்தில இருக்கார். அவருக்கு இது அவசரமா வேணுமாம்” என சொன்னாள்.

ருஹானா தயங்கி, “இவான் ரூம்ல ஆர்யன் சார் இருக்கார். நான் போக லேட்டானால்…” என்றவளை இடைமறித்து, ” நான் போறேன், கவலைப்படாதே. நான் பார்த்துக்கறேன். இந்தா இதை வாங்கிக்க, டியர். சீக்கிரம் போய் கொடுத்துடு. வேகமா போ” என துரிதப்படுத்தினாள்.

ருஹானா வேறு வழி இல்லாமல் அதை வாங்கி நகர நன்றி சொன்னவள், போனில் “சல்மா! நான் சொன்னபடி செஞ்சிட்டேன். நீ உடனே இவான் ரூம்க்கு போ. ஆர்யன் கூட அன்பா பேசு. என் தேனே, போம்மா” என்று சொல்லி கழுத்தை வெட்டி வெற்றி சிரிப்பு ஒன்றை கோணலாக சிந்தினாள்.

——-

தோட்டத்தில் அம்ஜத்  செடிகளை பரிவோடு பராமரித்துக் கொண்டிருக்க, அங்கே சென்ற ருஹானா, “அம்ஜத் அண்ணா! கரீமா மேம் இதை கொடுத்தாங்க” என புன்சிரிப்புடன் நீட்டினாள். நிமிர்ந்த அம்ஜத், “ஓ! நீ? நீ தானே அந்த பொண்ணு? இவானோட சித்திதானே? இவானோட சித்தி. உன் பேர் ஏதோ சொன்னாங்களே?” என நெற்றியை தடவி யோசிக்க, “ருஹானா” என்றாள், அவள்.

“ஆங்! ருஹானா! ருஹானா! உனக்கு நல்வரவு ருஹானா!” சிரிப்புடன் சொல்லி, “நீ இங்க அடிக்கடி வருவியா?” என கேட்டான். “நான்.. நான் இங்க தான் தங்கி இருக்கேன்……. இவானுக்காக” என்று தயக்கமாக ருஹானா சொல்ல, “அஹ்! இவானுக்காக…. இவான் இனி சந்தோசமா இருப்பான். சந்தோசமா இருப்பான். இன்ஷா அல்லாஹ்” என்று அம்ஜத் சந்தோசப்பட்டான்.

“இன்ஷா அல்லாஹ்” என்று தானும் அதில் கலந்து கொண்ட ருஹானா,  ‘அந்த முரடனுக்கு இப்படி ஒரு அண்ணனா?’ என்று வியப்பாக பார்த்தாள். இன்னும் அவள் ஆச்சர்யத்தை அதிகப்படுத்த அம்ஜத், “உண்மையில சித்தின்னா இன்னொரு அம்மா தானே!  இவானுக்கு அம்மா தேவை தானே.. அம்மா இல்லன்னா கொடுமை! கொடுமை!” என்று சொல்லியபடி பாட்டிலை திறக்க முயன்றான். அவனால் முடியவில்லை.  அவள் வாங்கி திறந்து தந்தாள்.

அம்ஜத் அவளை கனிவாக பார்க்க… ருஹானா “நீங்க வளர்க்கற செடிலாம் ரொம்ப அழகா இருக்கே. பார்க்கவே அத்தனை ஆசையா இருக்கு” என்று அவனை பாராட்டினாள். அவனும் அவளை தொடர்ந்து “ஆசையா இருக்கு! ஆசையா இருக்குல! இதோ பார் இது தக்காளி. அது மிளகு இந்த பூக்களை பாரேன். எத்தனை அழகு.  காய்கறிகள் கூட அழகுதான், இங்க பார்.” என தன் வளர்ப்புக்களை அவளுக்கு ஆர்வமாக காட்டினான்.

“பூச்சி மருந்து போடாம வளர்க்கறேன். விட்டமின் மட்டும் தான் போடுவேன்”

“நிறத்தை பார்த்தாலே தெரியுதே. எல்லா செடியும் செழிப்பா இருக்கு”

“செழிப்பா இருக்கு செழிப்பா இருக்கு” உற்சாகமாக சொல்லிக்கொண்டே வந்தவனுக்கு திடீரென சந்தேகம் வந்தது.

“உனக்கும் செடிகள் பிடிக்குமா, ருஹானா?”

“செடிகள் பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா என்ன? முன்னே நான் கூட வீட்டில நிறைய செடி வச்சிருந்தேன்” என சோகமானவள் “செடிகள் கூட நிறைய பேசுவேன்” என்று சிரிப்புடன் முடித்தாள்.

அவளை மதிப்புடன் பார்த்தவன், “பேசுவீயா?” என ஆச்சரியமாக கேட்டு தன் குரலை இறக்கி “நான் கூட” என்று சொல்ல இருவரும் சிரித்தார்கள்.

“நாம பேசினா அவங்களுக்கு மகிழ்ச்சியாகிடும். நல்லா வளர்வாங்க” ருஹானா சொல்ல,

“ஆமா.. ஆமா.. வேகமா வளர்வாங்க. நான் நிறைய பேசுவேன். அவங்க நல்லா கேப்பாங்க” அம்ஜத் மகிழ்ச்சி அடைய..

“அவங்க மட்டும் தான் நாம பேசறதை கேப்பாங்க” ருஹானா சோகமாக சொல்ல..

“ஆமா! மனுசங்க போல ஏமாத்தறவங்க இல்ல. எப்பவும் துரோகம் செய்ய மாட்டாங்க. எப்பவும் இல்லை” என்று சொன்ன அம்ஜத் மேல் அவளுக்கு நல்லெண்ணம் பெருகியது.

நீர் தெளிக்கும் பாட்டிலையும் அவனிடமிருந்து வாங்கி ருஹானா திறந்து கொடுக்க இருவரும் சேர்ந்தே தண்ணீர் விட்டார்கள். “கவனமா ஊத்தணும். குறைவா ஊத்தினா வாடி போகும். அதிகமா ஊத்தினா அழுகி போகும்“ என்று அம்ஜத் சொல்லிக்கொண்டே ஊற்ற, ருஹானா புன்னகையுடன் தலையாட்டினாள்.

இதெல்லாம் சரிதான். ஆனால் இவானுக்கு துணையாக யாரை வைத்துவிட்டு வந்தாள் என்பதை இவள் மறந்துவிட்டாளா? அந்த நெடுவன் கடுவன் ஆர்யன் எத்தனை நேரம் பொறுமை காப்பான்? ஓநாய் கரீமா என்ன திட்டம் போட்டு இளையவளை அனுப்பி இருக்கிறாளோ?

(தொடரும்)

Advertisement