Advertisement

“ஓ! அதெல்லாம் தேவையில்ல, டியர்… ஆர்யன் முடிவு தான் இறுதியானது. இருக்கட்டும். நீ கவலைப்படாதே. ருஹானா! நான் ஒன்னு உன்கிட்டே சொல்லவா? நீ இங்க இருக்குறது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி, இவானுக்கு இப்படி ஒரு சித்தி அமைஞ்சது அவன் அதிர்ஷ்டம். கடைசியா இது ஆர்யனுக்கும் புரிஞ்சது நல்ல விஷயம். எனக்கு ரொம்ப சந்தோசம்” என படம் ஓட்டினாள்.

ருஹானா முகத்தில் புன்சிரிப்பு மலர, “போ! இவானை கவனி. அவனை தனியா விடாதே” என்று கரீமா அவளை அனுப்பி வைத்துவிட்டு படிக்கட்டில் இறங்கினாள். அந்த படிக்கட்டுகளுக்கு மட்டும் வாய் இருந்தால் கரீமாவின் வஞ்சகத்தை கதை கதையாய் சொல்லும்.

——-

சல்மா பெட்டியில் இருந்து துணிகளை எடுத்து கொண்டிருக்க, உள்ளே நுழைந்த கரீமா கேட்டாள். “பார்த்தியா அவளை?”

“பார்த்தேனே, அக்கா! ஒரு சாதாரண பொண்ணு”

“யாரு அவளா சாதாரணமான பொண்ணு? நீ நினைச்சிக்க.. அவ என்னல்லாம் செய்வான்னு உனக்கு தெரியாது. அத்தனை லேசா எடை போடாதே, அவளை. சாவோட விளிம்புக்கு போயிட்டு வந்தும் தைரியமா நிக்கிறா. வீட்லயும் இடம் பிடிச்சிட்டா. ஆர்யனையும் நம்ப வச்சிட்டா. ஒரே நாள்ல இவானை கவனிச்சிக்கற பொறுப்பும் வாங்கிட்டா. உன் ரூமையும் பறிச்சிக்கிட்டா”.

“அவளை போய் நம்ம என்ன செய்யறது, அக்கா?”

“சல்மா, நீ சொல்றதும் சரி தான். இவளை பத்தி நாம ஏன் நினைக்கணும்? ஆர்யனோட அன்பை நீ வாங்கிட்டா போதுமே”

“அக்கா! ஒன்னும் இல்லாத இவளோட என்னை போட்டி போட சொல்றீயா?”

“சல்மா! சூழ்நிலையோட தீவிரம் உனக்கு தெரியல”

“அக்கா, என்ன தான் செய்யணும்னு சொல்ற?”

“ஒரு விஷயம் நல்லா தலைல ஏத்திக்கோ. ஆர்யன் உன்னை விரும்பணும்னா நீ முதல்ல இவானோட அன்பை சம்பாதிக்கணும். இவான் தான் ஆர்யனோட பலவீனம். இதை எப்பவும் மறக்காதே!“

ஒருபக்கம் உக்கிரமாகவும், மறுபக்கம் அலட்சியமாகவும் பேச்சு வார்த்தை போய்க் கொண்டிருந்தது.

“அவளை இவான் கிட்டே இருந்து விலக்கணும்”

“எப்படிக்கா?”

“அதை என்கிட்டே விடு. நான் பார்த்துக்கிறேன். நீ பையனை உன் பக்கம் இழு. இந்த துணியெல்லாம் விடு. இவானுக்கு வாங்கிட்டு வந்த பரிசு பொருட்கள்லாம் வெளிய எடு” என அக்கா எரிச்சலுடன் ஆணையிடவும், தங்கை அவற்றை எடுத்து டம் டம் என்று வெளியே போட்டாள்.

——–

தூங்கும் இவானையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த ருஹானா அவன் “சித்தி!” என சந்தோசமாக விழிக்கவும், “சித்தியின் உயிரே! என் செல்லம்!” என்று அவன் நெற்றியில் முத்தமிட்டாள். “நீ நல்லா இருக்கே தானே?” என அவள் கவலையுடன் கேட்கவும், அவன் ‘ஆம்’ என தலையாட்டினான்.

“உனக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயம் சொல்லவா? சித்தி எங்க தங்கி இருக்கேன், தெரியுமா? உன் பக்கத்து ரூம்ல தான். நீ கூப்பிட்ட அடுத்த நொடி சித்தி ஓடி வந்துருவேன். நாம சில நாள் ஒன்னா கூட தூங்கலாம்” என தன் ஆனந்தத்தை அவனோடு பகிந்து கொண்டாள்.

அதுவரை படுத்திருந்த இவான் எழுந்து “அப்போ என்னை விட்டு இனிமே நீங்க போக மாட்டீங்க தானே, சித்தி?” ஆவலுடன் கேட்க, “இல்ல என்னுயிரே! உன்கூடவே தான் இருப்பேன்” என சித்தி சொல்ல, இவான் முகத்தில் மகிழ்ச்சிப்பூ பூத்தது.

கட்டில் பக்கத்தில் இருந்த சிறிய மேசையில் ருஹானா செய்து வைத்திருந்த காகித கப்பல்களை பார்த்த இவான் அதில் ஒன்றை கையில் எடுத்தான். “நாம ரெண்டு பேரும் சேர்த்து விளையாடலாமா?” என்று கேட்க அவளும் ஓ என சம்மதித்தாள். “எனக்கு புது கப்பல் செஞ்சி தருவீங்களா?” என அவன் கேட்க, “நிறைய நிறைய செய்து தரேன்” என அவள் ஆனந்தமாக ஒப்புக்கொண்டாள்.

எதோ யோசித்து முகம் மாறிய இவான் “அம்மா செத்து போகும்முன்னே எனக்கு கப்பல் செய்து கொடுத்தாங்க” என சொல்ல, அதை கேட்டு சோகமான ருஹானா, “எனக்கும் உங்க அம்மா தான் கப்பல் செய்ய சொல்லி கொடுத்தா.” எனவும் “இப்போ அம்மாவும் நம்ம கூட இருந்தா நல்லா இருக்கும்ல, சித்தி?” என்று இவான் கேட்டான்.

“கண்ணே! உன் அம்மா எப்பவும் நம்ம கூட தான் இருப்பாங்க. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து இருக்குறதால அவங்க இப்போ ரொம்ப சந்தோசமா இருப்பாங்க, செல்லம்” என்று அவனை முத்தமிட்டு அணைத்தாள்.

கரீமாவும், சல்மாவும் அப்போது உள்ளே நுழைய, கரீமா, “ஆஹ் இவான்! எப்படி இருக்கே?” என அவன் கன்னங்களை தடவ, இவான் கவனம் கப்பலில் இருந்தது. “சல்மா அக்காவை உனக்கு நியாபகம் இருக்கா?” இவான் எதும் பேசவில்லை.

“அது எப்படி அக்கா இருக்கும்? அப்போ அவன் சின்ன குழந்தை” சல்மா சொல்ல.. “இப்போ நல்லா வளர்ந்திட்டான்ல?” கரீமா கேட்க, “ஆமா! அழகாவும் ஆகிட்டான். ஆனாலும் சின்ன பையன் தான்..” சல்மா சொன்னாள். ‘நீங்க ரெண்டு பேரும் பேசிக்கங்க, என்னை பேச சொல்லாதீங்க’ என்பது போல் இவான் அமர்ந்திருந்தான்.

“இங்க பார், நான் என்னதுலாம் உனக்கு வாங்கிட்டு வந்துருக்கேன்” என சல்மா பந்துகளையும், கார், மோட்டார் வண்டிகளையும் எடுத்து காட்டினாள். அது ஏதும் இவான் ஆர்வத்தை தூண்டவில்லை. சித்தியை எட்டி பார்த்தான். “எத்தனை அழகா இருக்குல. அவன் வச்சி விளையாடுவான். முதல்ல குட்டி செல்லம் சாப்பிடட்டும். அப்போ தான் சக்தி கிடைக்கும். இந்தா இதை கொடு” என்று கரீமா பழங்கள் நிரம்பிய தட்டை சல்மாவிடம் கொடுத்தாள்.

“இவானுக்கு என்ன வேணும்? ஆப்பிள், ஆரஞ்சு இருக்கே. இந்தா ஆப்பிள் சாப்பிடு” என சல்மா எடுத்து கொடுக்க, அவனோ அவன் சித்தியை பார்த்தான். அவள் தலையாட்டவும் வாங்கிக்கொண்டவன், திரும்ப அவள் தலையாட்டவும் தான் அதை வாயில் வைத்தான்.

இதை பார்த்து காந்தலெடுத்த கரீமா, “ருஹானா! உனக்கு வேற வேலை இருந்தா போய் பார். நாங்க தான் இங்கே இருக்கோமே” என வெளியே அனுப்பப் பார்க்க, “இல்ல, கரீமா மேம், நான் இருக்கேன். ஆர்யன் சார் உத்தரவு அதானே? உங்களுக்கும் தெரியுமே” என ருஹானா சொல்ல, சல்மா கழுத்தை திருப்ப, கரீமா பல்லை கடித்தாள்.

இரவு உணவு மேசை..

ஆர்யன் நடுநயமாக அமர்ந்து சூப் குடித்துகொண்டிருக்க, அவனுக்கு இடது பக்கம் அம்ஜத்தும், கரீமாவும் இருக்க, வலது பக்கம் சல்மாவும் அமர்ந்திருந்தனர். ஜாஃபர் மேற்பார்வையிட, நஸ்ரியா பரிமாறிக்கொண்டு இருந்தாள்.

ஆர்யன் கவனம் தங்கை மீது திருப்ப கரீமா தங்கை புராணம் எடுத்துவிட்டுக் கொண்டிருந்தாள்.

“நஸ்ரியா! இவானுக்கு பிடிச்ச சாப்பாடு எடுத்து வைக்க சாராட்ட சொல்லு. சல்மா இவானுக்கு ஊட்டுவா. அவ கையால இவான் நல்லா பழங்கள் சாப்பிட்டானே!” என்று ஆர்யனை பார்த்துக்கொண்டே கரீமா சொல்ல நஸ்ரியா உள்ளே போனாள். ‘எது, அந்த ஒரு ஆப்பிள் துண்டா?’ 

“உன்கிட்டே நல்லா ஒட்டிக்கிட்டான். உன்னை அவனுக்கு பிடிச்சிருக்கு.”

“ஆமாக்கா. அழகு பையன். எனக்கும் அவன் கூட இருக்குறது பிடிச்சிருக்கு”.

அம்ஜத் சிரிப்புடன் தலை ஆட்டினான். ஆர்யன் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

“எங்க பையன் அற்புதமானவன். இவானுக்கு பிடிச்சது நீ கொடு, சல்மா”

“கண்டிப்பா அக்கா, பெத்தவங்க இல்லாத அவனை பார்க்க எனக்கு பாவமா இருக்கு”

“இவான் தனியாள் இல்லை..!” இடையே ஊடுருவியது கடுமையான ஆர்யன் குரல்.

சல்மாவுக்கு சூப் தொண்டையில் அடைத்தது. அம்ஜத் முகம் மாறியது. கரீமா முகம் வெளுத்தது.

“அதானே! நாங்க தான் இவான் குடும்பம். நீ ஏன் அப்படி சொன்னே? எங்களுக்கு அவன் விலை மதிப்பில்லாதவன்” கரீமா சமாளித்தாள்.

அம்ஜத் எப்போதும் போல் திருப்பி சொன்னான். “விலை மதிப்பில்லாதவன்!. இவான் விலை மதிப்பில்லாதவன்!”

“இவானை நீ கவனிச்சிக்கணும், சல்மா! இப்போ அவனுக்கு கவனிப்பு, அக்கறை முக்கியம்” கரீமா சொல்ல, சல்மா தலையாட்டினாள்.

அம்ஜத் மறுபடியும் சொன்னான் “இவானுக்கு அன்பு தேவை. கவனிப்பு தேவை. அக்கறை தேவை”

——–

இவான் அறையில் ருஹானா அவனுக்கு கதை சொல்லி உணவு கொடுத்து கொண்டிருந்தாள். “நல்லா இருக்குல. வாயில இருக்குறது முழுங்கிட்டு வாங்கு செல்லம், இதான் கடைசி வாய்” என்று ஊட்டி முடித்து விட்டு “இனிய உணவு நலம் சேர்க்கட்டும்” என்றாள்.

அவள் வயிற்றிலிருந்து சத்தம் கேட்க, “சித்தி! என்ன உங்க வயத்துல இருந்து சத்தம் வருது?” என இவான் கேட்க, “இவான் குட்டி! இந்த கப்பல் கடல்ல அலைகள் மேல போற சத்தம்” என கப்பலை காட்டி அவன் கவனம் திருப்பினாள். அவளுக்கு மிகவும் பசித்தது. கடைசியாக என்றைக்கு சரியாக சாப்பிட்டாள் என்பதே அவள் நினைவில் இல்லை.

——–

கீழே உணவு மேசையில் இன்னும் நடிப்பும், நாடகமும் தொடர்ந்தது.

“போன சம்மருக்கு நீ இங்க வரலல, சல்மா?” அம்ஜத் கேள்வி.

“அப்போ எனக்கு லண்டன் விட்டு நகரவே முடியல. படிக்கிற வேலை அதிகம் இருந்தது” சல்மா அலட்டல்.

“நீ இன்னும் காலேஜ் படிக்கிறியா?” அம்ஜத் திரும்ப கேட்டான்.

“இல்லயே, அம்ஜத் டியர்! அவள் எக்னாமிக்ஸ் முடிச்சிட்டாளே” கரீமா உதவிக்கு வந்தாள்.

“அது கஷ்டமான படிப்பாச்சே!” அம்ஜத்க்கு ஆச்சர்யம்.

“அது மத்தவங்களுக்கு. என் தங்கை புத்திசாலியாச்சே!” தன் தங்கையை ‘முட்டாள்’ என்று சென்ற வாரமெல்லாம் இவள் திட்டியது எல்லாம் மறந்து போனது போல.

சகோதரிகள் ஆர்யன் முகம் பார்த்தே அனைத்தும் பேச, அவன் கவனமோ ‘உலகத்திலேயே முக்கியம் அந்த சூப் தான்’ என்பது போல் நிமிராமல் சாப்பிடுவதிலேயே இருந்தது.

இவான் சாப்பிட்டு முடித்த உணவு தட்டை ருஹானா கீழே கொண்டு வர, இவர்கள் சாப்பிடுவதை பார்த்து “நல்லுணவு!” என்று சொல்லி ஓரமாக ஒதுங்கி சமையலறைக்கு சென்றாள். அவளை பார்த்த ஜாஃபர் மெதுவாக ஆர்யனிடம் குனிந்து “ருஹானா மேம்க்கு எங்க சாப்பாடு கொடுக்கணும்?” என்று கேட்க, கரீமா தன் காதை எடுத்து அவர்கள் நடுவே போட்டாள். “கிச்சனில்!” என ஆர்யன் சொன்னது அவள் வயிறை நிரப்பியது.

Advertisement