Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 11

இவானை கவனிக்கும் அனுமதி தந்த ஆர்யனின் வாய் மொழி ருஹானாவின் காதில் தேன் ஊற்றினாலும், அவனின் கண்மொழி கடுமையே காட்டியது. என்றாலும் அதை பற்றி அவள் கவலைப்படுவாளா, என்ன? இல்லையே…. உயிரான இவானை பிரிய முடிவெடுத்த வேளையில் அமுதமே கையில் கிடைத்தால், அவள் ஏன் மற்ற எதையும் சிந்திக்கப் போகிறாள்?

ஆர்யன் நஸ்ரியாவை அழைத்து, “அடுத்த அறையை உடனே சுத்தமாக்கு!” என சொல்ல, யாருக்கு என்ன ஏது என்று தெரியாத அவளோ கரீமாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ஏற்கனவே நாங்க தயார்படுத்திட்டோமே! தங்கறதுக்கு ரூம் ரெடியா இருக்கு” என்றாள். “ஆனா..” என்று கரீமா இழுக்க… ஆர்யன், “என்னாச்சி?” என கேட்க.. கரீமா, “ஒன்னுல்ல.. நான்…  நாங்க அதை சல்மாக்காக ரெடி செய்தோம். கவனமா அலங்காரம் வேற செய்தோமே” என்று தயங்கியபடியே என்றாலும் சொல்லி முடித்து விட்டாள்.

“உங்க தங்கை வேற ரூம்ல தங்கட்டும்!” என்று ஆர்யன் முடிவாக சொல்லிவிட, வேப்பிலை சாப்பிட்டது போல கரீமாவின் முகம் மாற “ஆமா, ஆமா, மாளிகைல நிறைய அறைகள் இருக்கே!” என்று சமாளித்து விட்டு, “நஸ்ரியா! போய் ரெண்டு ரூமும் சரியா இருக்கான்னு பாரு” என அவளை அனுப்பி வைத்தாள்.

ருஹானா நீராடும் விழிகளோடு ஆர்யனை ஏறிட, அவனோ முறைப்புடன், “என்ன! உனக்கு பக்கத்து ரூம்ல தங்க விருப்பம் இல்லயா? பாய்லர் ரூமுக்கு தான் போக ஆசைப்படறியா?” என கேட்டான். அவள் இல்லையென வேகமாக தலையாட்ட, ஆர்யன் மேலும் கீழும் அவளை பார்த்தவன், ‘ம், அந்த பயம் இருக்கணும்’ என்பது போல் தலையசைத்தான்.

ருஹானா பின்னால் திரும்பி இவானை ஒருமுறை பார்த்துவிட்டு, ஆர்யனிடம் “நான்…  வந்து.. மிக்க நன்றி!” என்றாள். அவனோ “நன்றி தேவையில்ல. இவானுக்காக தான் இது” என்று வேகமாக சொன்னவன், “நான் சொல்லப்போறத கவனமா கேள். நீ அவன் சித்தி, நானி இல்ல. இவானை பேபி சிட்டரை விட கருத்தா கவனிக்கணும்” என்று சொல்ல ருஹானா ஆமென தலையாட்ட, கரீமா திகைத்து பார்த்திருந்தாள்.

ஆர்யன் அவளை பார்த்துக் கொண்டே “உன் கவனம் எப்பவும் இவான் மேல தான் இருக்கணும்.  இந்த நிமிடத்தில இருந்து அவனோட ஆரோக்கியம் உன் பொறுப்பு. உன் வேலைய சரியா செய். இல்லன்னா….” என்று மிரட்டலை முடிக்காமல் பேச்சை முடித்தான்.

ருஹானா அதற்கும் தலையாட்ட, கரீமா பக்கம் திரும்பி “நீங்க தான் இவளுக்கு பொறுப்பு” என ஆர்யன் சொல்லவும், “கண்டிப்பா, ஆர்யன். நான் உதவி செய்றேன். கவலை வேண்டாம்” என சொன்னாள் கரீமா. அவளே திரும்ப, “நல்ல முடிவு எடுத்தே, ஆர்யன். இவானும் ரொம்ப சந்தோஷப்படுவான். உனக்கு நன்றி!” என ஒரு பாசாங்கு செய்ய.. ஆர்யன் ருஹானாவை பார்த்தவாறே வெளியே நடந்தான்.

‘தன் திட்டம் எல்லாம் தவிடுபொடியாயிடுச்சே!’ என்று கரீமா உள்ளம் குமுற, ருஹானாவை வெளியேற்றுவதற்காக சற்றுமுன் நீண்ட சொற்பொழியாற்றியவள், இப்போது என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்தாள்.

பின் ஒருவாறாக சுதாரித்துக் கொண்டு “வாழ்த்துக்கள், ருஹானா! நீ நினைச்ச மாதிரியே எல்லாம் நடக்குது. இன்ஷா அல்லாஹ்! இதுக்கு மேல உனக்கு எந்த துன்பமும் வரக்கூடாது” என்று சொல்ல.. ருஹானாவும் “இன்ஷா அல்லாஹ்!” என புன்சிரிப்புடன் சொன்னவள், இவான் கட்டிலுக்கு சென்றாள்.

இவானை நெருங்கி “அன்பே! என் இதயமே! என் அழகு குட்டி செல்லம்! நம்ம வீட்டுல உன் கூட இருக்கலாம்னு ஆசைப்பட்டேன். அது நடக்கல. ஆனா இங்க உன்னோட இருக்கேனே, அது போதும் எனக்கு. அல்லாஹ்க்கு நன்றி” என்று அவன் கைகளை பிடித்துக் கொண்டாள்.

பாச இணைப்பை பொறுமலாக பார்த்திருந்த கரீமாவை ஜாஃபர் வந்து அழைத்தார், சல்மா வந்துவிட்டதாக சொல்லி. அவளும் வேகமாக நகர்ந்தாள்.

———

நான்கைந்து பெரிய பெட்டிகளை காவலாளிகள் தள்ளிக் கொண்டு வர, நேர்த்தியான பனிக்கால உடை அணிந்து வெகு அழகான பெண் ஒருத்தி மிக நளினமாக உள்ளே நடந்து வந்தாள். அவள் நடை, உடை, பாவனை ‘லண்டனில் படித்தவள் இப்படித்தான் இருக்க வேண்டும்!’ என வரையறுத்துக் காட்டியது. “ஹலோ! எல்லாம் எப்படி இருக்கீங்க?” என கேட்டபடியே அவள் ஜாஃபர் முன்னே திரும்ப, அவனும் மரியாதையாக குனிந்து வரவேற்று, அவளின் கம்பளி மேல்கோட்டை நாசுக்காக கழட்டினான்.

சாரா, “இனிய வரவு, சல்மா மேம், உங்க பிரயாணம் எப்படி இருந்தது?” என கேட்க, “அஹ் சாரா! எப்படா முடியும்னு ஆகிடுச்சு” என சல்மா நெஞ்சில் கை வைத்து மயக்கும் பாவனையில் சொன்னாள். “உங்க அறை தயாரா இருக்கு. நீங்க ஓய்வெடுங்க” என சாரா சொல்ல, நஸ்ரியா வரவேற்கும்விதமாய் சல்மாவை அணைக்க வந்தாள். அவளிடமிருந்து சட்டென்று  விலகியவள், “கவனம்  கோவிட்19..! முத்தம் தவிர்!” என்றவள் “நல்லா வளர்ந்திட்டியே, அழகா இருக்கே” என்று நகர்ந்தாள்.

அதற்குள் அவள் அன்பு உடன்பிறப்பு, ‘சல்மா…!’ என அழைத்தபடி வர, ஓடிச்சென்று அவளை அணைத்து கொண்டாள். ‘உன் அக்காக்கு கொடு, அந்த கொரானாவை…’. இருவரும் நலம் விசாரித்து கொள்ளவும் பணியாளர் மூவரும் உள்ளே சென்றனர்.

“ஏன் அக்கா, உன் முகமே சரியில்லை?” என சல்மா வினவ, “கொஞ்ச நேரத்துக்கு முன்ன என்னை கடுப்பாக்கிட்டாங்க, வா, நாம காபி குடிச்சிட்டே பேசலாம்” என்று கரீமா தங்கையை அழைத்து சென்றாள்.

——-

இவான் அறையின் பக்கத்திலிருந்த அறைக்கு ருஹானா தன் பெட்டியை தள்ளிக்கொண்டு கண்களால் அறையை அலசியபடி வந்தாள். பெரிய இரட்டை கட்டில், அலமாரி, சோபா, மேசை, கண்ணாடி, சுவற்றில் ஓவியங்கள் என்று அந்த அறை அழகுற அமைந்திருந்தது.

கட்டிலில் மெதுவாக அமர்ந்தவள் அவளது பெட்டியை திறந்தாள். துணிகளுக்கு மேலாக இருந்த சட்டமிட்ட புகைப்படத்தை வெளியே எடுத்தாள். ருஹானாவும், தஸ்லீமும் இருந்த அந்த படத்தை பார்த்து பேசினாள்.

“அன்பு அக்கா! பார். நான் இங்க இருக்கேன். இவான் பக்கம் வந்துட்டேன். உன் வாரிசு இப்போ பாதுகாப்பா இருக்கான். நான் அவனை கண்ணும் கருத்துமாக பார்த்துக்குவேன்” என்று அக்காவிடம் கண்ணில் நீர் கசிய சொன்னாள். அவள் மனதில் ஆர்யன் விதித்த கட்டளைகள் வரிசையாக ஓடியது.

———

வரவேற்பு அறையில் அமர்ந்து சகோதரிகள் இருவரும் காபி குடித்து கொண்டு இருந்தனர். “நீ சீக்கிரம் வந்துருக்கணும், சல்மா! லேட் பண்ணிட்டே” என கரீமா குறைபட, “அதான் வந்துட்டேன்ல, அக்கா. விடு” என்று சலித்து கொண்ட சல்மா, “லண்டனை விட்டு ஏன் தான் வந்தேனோ?” என முணுமுணுத்தாள்.

பாம்பு செவி கரீமாக்கு அது கேட்டுவிட, “சல்மா! உன் எதிர்காலம் இங்க தான். இந்த வீட்ல தான். ஆர்யன் கூட தான் இருக்கு” என்று அழுத்தி சொன்னாள். சல்மா அதை காதில் வாங்காமல், “ஆமா, ஆர்யன் எங்கே?” என கேட்டாள்.

அப்போது ஆர்யன் வெளியே செல்வதை பார்த்துவிட்ட கரீமா, “ஆர்யன்!” என சத்தமாக அழைத்து, “பாரு, யாரு வந்துருக்காங்கன்னு? உன்னை பத்திதான் கேட்டுட்டு இருந்தா” என சிரிப்புடன் கூறினாள். திரும்பி பார்த்த ஆர்யன் உள்ளே வந்துகொண்டே, “இனிய வரவு!’ என்று சொன்னான். சல்மா அவனை நெருங்கி கை குலுக்கியவள், “எப்படி இருக்கீங்க, ஆர்யன்?” என கேட்டாள்.

“நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே?” என ஆர்யன் கேட்டு அவள் நலம் என்றதும், “டின்னரில் பார்க்கலாம்!” என விடைபெற்றான். கரீமா, “ஆர்யன், வாயேன், எங்களோடு காபி சாப்பிட” என்று கூப்பிட “நான் அவரசமா போகணும்” என வெளியே சென்று விட்டான்.

தோள் குலுக்கி திரும்பிய சல்மா சகோதரியின் முகம் பார்த்தவள், “ஏன் அக்கா ஒரு மாதிரியா இருக்கே.? என்ன நடந்ததுன்னு என்கிட்டே சொல்லேன்” என கேட்க.. கரீமா அவளுடன் நடந்து கொண்டே, “எனக்கு இந்த பொண்ணு ஒரு தலைவலியா வந்து சேர்ந்துருக்கா. பார்க்க தேவதை மாதிரி தான் இருக்கா. ஆனா சரியான பிசாசு. காசுக்காக தான் இப்படி நடிக்கிறா. ஆர்யனை கூட ஏமாத்தி இந்த மாளிகையில ஒரு ரூமும் வாங்கிட்டா ன்னா பார்த்துக்கோ. ஏற்கனவே சின்ன பையனை வசியம் செய்து வச்சிருக்கா.. இப்படியே இவ ஏமாத்திட்டே போனா…. அல்லாஹ்!” என டபடபவென பொரிந்தாள்.

“அக்கா! நீ ஓவரா சொல்றே. இவ்ளோ டென்ஷன் ஏன் ஆகுற?” என சல்மா கேட்க.. கரீமாக்கு இன்னும் இரத்த ஓட்டம் அதிகரித்தது. “சல்மா! இனி எல்லாம் உன் கைல தான் இருக்கு. நீ தான் புத்திசாலித்தனமா காரியங்கள் செய்யணும். இல்லைனா இந்த மாளிகையும், ஆர்யனும் நம்ம கைய விட்டு போயிட்ட மாதிரி தான்” என கரீமா பொரிய, சல்மா முகத்தில் சலிப்பு தான் தெரிந்தது.

படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டே இந்த பேச்சுவார்த்தை நடக்க.. எதிரே ருஹானா வந்தவள், புன்னகையுடன் சல்மாவை நல்வரவு சொல்லி வரவேற்க, சல்மா அதே புன்னகையுடன் நன்றி கூறினாள்.

படிக்கட்டுக்கு அருகேயே கரீமா இருவருக்கும் அறிமுகம் செய்து வைக்க, ருஹானா, “உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று கனிவாக சொல்ல.. “எனக்கும்” என்று சல்மா அலட்சியமாக சொல்லி தலையை திருப்பிக்கொள்ள, ருஹானாவின் புன்சிரிப்பு மறைந்தது.

“உன் அறைக்கு போய் ஓய்வெடு, சல்மா” என கரீமா தங்கையை அனுப்ப, அவள் ருஹானாவின் உடையை கேவலமாக பார்த்து சென்றாள். ருஹானா, “கரீமா மேம்! இந்த ரூம் உங்க தங்கைக்காக தயார் செய்ததுன்னு எனக்கு தெரியாது. ஆர்யன் சார் சொல்லும்போது என்னால எதும் மறுத்து சொல்ல முடியல. இப்போ வேணும்னா ரூம் மாத்திக்கலாம்” என்றாள்.

Advertisement