Advertisement

கட்டுப்போட்ட கையுடன் கவலையாய் ருஹானா கதவருகே நின்று எட்டி பார்க்க, கட்டில் அருகே கரீமாவும், டாக்டர் அருகே ஆர்யனும் நிற்க, டாக்டர் ஊசியில் மருந்தை ஏற்றி இவான் கையில் இறக்கியவர், ஆர்யனை பார்த்து சொன்னார். “இப்போ குழந்தை நிலைமை ஓகே தான். சீக்கிரம் சரியாகிடுவான். அல்லாஹ் அருளால மோசமாகாம தப்பிச்சிட்டான். சரியான நேரத்தில முதலுதவி செஞ்சிட்டீங்க” 

ஆர்யன் ருஹானாவை திரும்பி பார்க்க.. அவள் ஏன் அவனை பார்க்கிறாள்? இவான் முகத்தையே வருத்தமாய் அவள் பார்க்க, இவானும் “சித்தி சித்தி!” என கண்மூடியும் கூப்பிட்டான். கடுப்பாக இருவரையும் மாறி மாறி பார்த்த ஆர்யன், கதவருகே வந்து அவளை உறுத்து விழித்தவன், ‘இவளை என்ன தான் செய்றது? ‘ என்ற பாவனை காட்டி வெளியே சென்று விட்டான். 

மருத்துவரும் வெளியேற இவானிடம் ஓடிய ருஹானா,  “கண்ணே! எல்லாம் நல்லா போச்சி! பாரு, நான் உன் பக்கத்துலயே இருக்கேன். அல்லாஹ்க்கு நன்றி, நீ குணமாகிட்டே!” என அவன் தலையை தடவி, கைகளில் முத்தமிட்டு தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டாள். 

பார்த்துக் கொண்டிருந்த கரீமா முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. 

நரி குணப் பெண்

ஒன்று கண்டோம்.

அவள் சதிகள் பல

தீட்டிட பயந்தோம்.

சூழ்ச்சிகள் சில பெருமிதம்

கொள்ள வைத்தாலும்

வெற்றியே எப்போதும்

துணை நிற்குமா..???

தத்தகிட தத்தகிட

தத்தகிட தித்தோம்..!

——-

படிக்கட்டில் ஏறி வந்துக் கொண்டிருந்த ஆர்யனிடம் ஜாஃபர், “ஆர்யன் சார்! ரஷீத் வந்து விருது வழங்கும் விழா அழைப்பிதழ் கொடுத்துட்டு போனார். அதை உங்க மேஜையில வச்சிருக்கேன்” என சொல்ல.. ஆர்யன் தலையசைத்தான். அதை கேட்டுக்கொண்டே வந்த கரீமா, “இன்னைக்கு நடந்த கலாட்டால நாளைக்கு விழா இருக்குங்றதயே நான் மறந்துட்டேனே!” என்றாள். “ஏற்பாடுலாம் நீங்க பார்த்துக்கங்க” என ஆர்யன் சொல்லவும், “கண்டிப்பா, நான் பார்த்துக்கறேன். நீ கவலைப்படாதே” என சொல்லி சென்றாள். 

காகித கப்பல்களை நிறைய செய்து இவானை சுற்றி ருஹானா வைத்துக் கொண்டிருந்தாள். கதவருகே வந்து நின்று ஆர்யன் அவளை முறைப்புடன் பார்க்க, அதை அவள் கவனிக்கவில்லை. தன் பிரிய அக்கா மகனின் கன்னங்களையும், தலையையும் தடவிக் கொண்டே பாவமாக பேசிக் கொண்டிருந்தாள். 

“நான் ரொம்ப பயந்துட்டேன், இவான். உனக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயந்தே போனேன். அப்படி ஆகியிருந்தா நானும் செத்திருப்பேன்.” 

கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஆர்யனின் பாறை இதயம் என்ன நினைத்ததோ, அவன் முகத்தில் மாற்றம் இல்லை. கண்கள் தாழ்ந்தன.

“மீண்டும் ஒரு இழப்பை தாங்குற சக்தி எனக்கு இல்ல. நானும் கட்டாயம் இறந்திருப்பேன். நல்லவேளை, அல்லாஹ் எனக்காக உன்னை காப்பாத்திட்டார்.”

ஆர்யன் கண்கள் விரிந்தன. முகத்தில் இறுக்கம் குறைந்தது. மனதில் ஏதேதோ எண்ணங்கள் வந்து போயின. 

“வாழ்க்கை பூராவும் நான் பாய்லர் ரூம்ல இருந்தாலும், நான் உன்னை விட மாட்டேன்.”

ஆர்யன் முகம் கடுமையாக தொடங்கியது. சுவாசம் வேகமெடுத்தது. 

“இனிமே  உன் மேல இருந்து என் கண்ணை ஒரு நொடி கூட எடுக்க மாட்டேன். எது நடந்தாலும் நடக்கட்டும். நீ இருந்தா நான் இருப்பேன். உன் பக்கமே இருப்பேன். எப்பவும் இருப்பேன்” ருஹானாவின் குரல் தழுதழுக்க கண்ணீர் வந்தது. 

ஆர்யனின் கண்கள் சுருங்க, புருவங்களை நெறித்தவன் உள்ளே செல்லாமல் வந்த வழியே திரும்பினான். 

மனதில் அழுத்தம் தாளாமல் வெளிக்காற்று வாங்க பால்கனிக்கு வந்தவன், கோட் பாக்கெட்டில் இருந்த ருஹானாவின் சங்கிலியை கையில் எடுத்து பார்த்துக்கொண்டே இருந்தான். 

அங்கே இவானின் நானி போனில் பேசிக்கொண்டிருந்தாள்.  “பையனுக்கு அதிக காய்ச்சல் வந்துடுச்சி. இவான் சித்தி அங்க வரலனா அவன் கதை முடிஞ்சிருக்கும். நீ பார்த்திருக்கனும், என் பாஸ் முகத்தை.. அதான் ஆர்யன் அர்ஸ்லான். என்னை கொன்னே போட்டுருப்பார். இதுல என் தப்பு என்ன? நான் என்ன செய்திருக்க முடியும்? சின்ன பையன் தானே. இது மாதிரி வர்றது சகஜம் தானே. நல்லவேளை அவன் சித்தி வந்து காப்பாத்திட்டா. 

என்னால முடிஞ்சவரை எல்லாம் செய்றேன். ஆனா இது விசித்திரமான வீடு. சாப்பிட முடியல. தூங்க முடியல. பாத்ரூம் கூட போக முடியாதுன்னா எப்படி?  தன் சொந்த குழந்தையை கூட இப்படி யாரும் பார்த்துக்க மாட்டாங்க” 

பின்னால் ஒரு எரிமலை வெடிப்பதற்காக கொதித்துக் கொண்டிருப்பது தெரியாமல் பேசிக் கொண்டே போனவள், “சரி, நாம அப்புறம் பேசலாம்!” என்று போனை நிறுத்தி திரும்பினாள். அப்படியே அவள் மூச்சும் நின்று போனது.  “ஆஆ ஆர்யன் சார்!” என தடுமாறியவள், “நான் விளக்கமா சொல்றேனே” என திக்கினாள். 

தீப்பிழம்பாய் நின்ற ஆர்யன் “அதுக்கு அவசியம் இல்ல. மிக பெரிய தப்பு செஞ்சிட்டே. இத்தனை பேச்சு ஒரு ஆண் பேசியிருந்தா, அவனை தலைகீழா கட்டி தொங்க விட்ருப்பேன். உன் மூட்டை முடிச்சைலாம் கட்டிட்டு உடனே வெளியே போ. உன்னை இனிமே நான் பார்க்க கூடாது!” என கர்ஜிக்க, நானி எடுத்தாள், ஓட்டம்! 

——–

மிகவும் அழகான பூச்சாடியை தூக்கிக்கொண்டு நஸ்ரியா இவான் அறையின் பக்கத்து அறைக்கு வர, அழகுப்படுத்தப்பட்ட அந்த அறையை சரிபார்த்துக் கொண்டிருந்த கரீமா, “ஆஹ்! நஸ்ரியா, அருமையா இருக்கே! அதை இந்த மேசை மேல வை. சல்மா ரசிப்பா, பாரேன்” என ஆனந்தமடைந்தாள். 

அங்கே இருந்த படுக்கை விரிப்பை விரிக்கவா என நஸ்ரியா கேட்க, “இந்த நிறம் சல்மாக்கு பிடிக்காது. அந்த நீல நிறம் எடுத்து விரி” என சொல்லும்போதே அவள் கைத்தொலைபேசி அழைக்க, “சல்மா செல்லம், வந்துட்டியா.? டிரைவர் சரியா வந்துட்டானா? சரி. உன் ரூமை தான் தயார் செய்துட்டு இருக்கேன்” என ஆர்ப்பாட்டமாக பேசியவள், குரலை தழைத்து “ஆர்யன் ரூமுக்கு எதிர் ரூம் தான். பார்த்ததும் உனக்கு பிடிக்கும்” என்று கிசுகிசுத்து, “வா, வா, சீக்கிரம் வா. உனக்காக தான் நான் காத்திருக்கேன்” என்று போனை அடைத்தாள். 

——-

தண்ணீர் கொடுத்து இவானை படுக்க வைத்த ருஹானா, உள்ளே வந்த கரீமாவை பார்த்ததும் எழுந்தாள். “இவான் எப்படி இருக்கான்?” என கரீமா கேட்டதற்கு, “இப்போ பரவால்ல. ஜீரம் குறைஞ்சிடுச்சி. ஆனா சோர்வா இருக்கான்” ருஹானா பதிலளித்தாள். “பாரு ருஹானா, நான் ஒன்னு சொல்றேன். தயவு செய்து தப்பா எடுத்துக்காதே” என பெரிய பள்ளம் வெட்ட கடப்பாறை பேச்சு சாமர்த்தியத்தை கையில் எடுத்தாள்.

“அச்சோ, இல்லை, நீங்க எது சொன்னாலும் நான் தப்பா எடுத்துக்க மாட்டேன். நீங்க சொல்லுங்க..” அவள் சூட்சுமம் அறியாத ருஹானா பதற.. கரீமா சொன்னாள். “நீ இங்க அதிகமா இருக்காதே. ஆர்யன் கோபம் உனக்கு தெரியும் தானே. சரியா கவனிக்காத நானியை உடனே வேலை விட்டு தூக்கிட்டான்.” 

“இவானை விட்டு என்னால எப்படி இருக்க முடியும்? அவனை தவிர எனக்கு யாரும் இல்ல. என் அப்பா, அக்காவோட வாரிசு அவன். அவனை நான் விடமுடியாது” ருஹானா மறுக்க..

“எனக்கு புரியுது. ஆனா ஆர்யனோட பொறுமை கூட விளையாட முடியாது” என பயங்காட்ட, ருஹானா யோசிப்பதை பார்த்தவள், “நீ கவலைப்படாதே. இவ்வளவு நடந்த பின்னால ஆர்யன் இன்னும் நல்லா இவானை பார்த்துக்குவான். அவனும் இவானுக்கு சித்தப்பா தானே. உன்ன போல இரத்த சொந்தம், இல்லயா? 

நானும் இருக்கேன். இத்தனை நாள் நான் தானே இவானை வளர்த்தேன். அவனும் என்னை அம்மாவா தான் பார்க்கறான். நீ எங்க தப்பு பண்ணுவேன்னு ஆர்யன் நோட்டம் விட்டுட்டு இருக்கான். உங்க ரெண்டு பேருக்கும் நடக்கற போராட்டத்தை பார்த்தா இவானும் கவலைப்படுவான். எனக்கு தெரியும், நீ இவானை ரொம்ப நேசிக்கிறே” கரீமா தன் வாத திறமை முழுதும் பயன்படுத்தி ருஹானாவை வெளியே தள்ள முயன்றாள். 

 

“என் உயிரை விட அதிகமா நேசிக்கிறேன்” ருஹானா சொல்ல, ‘தெரியும்’ என தலையாட்டியவள், தன் பேச்சை முடித்தாள் இல்லை. “ஆர்யன் கோபம் புயல் மாதிரி. கண்ணுமண்ணு தெரியாம கோபப்படுவான். முன்னாடி இருக்கற எல்லா பொருளையும் நொறுக்கிடுவான். அதை இவான் பார்த்தா என்ன ஆகும்? உனக்கு அடிபட்டா என்ன ஆகும்?” எப்படியெல்லாம் பயமுறுத்த முடியுமோ அத்தனையும் சொன்னாள்.

அப்போது உணவு எடுத்து வந்த நஸ்ரியாவால் அவள் பேச்சு தடைபட கடுப்பான கரீமா, “ஆஹ்! இவான் குட்டிக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்தியா, நஸ்ரியா? நல்லது செய்தே!” என அவளை கொஞ்சினாள்.

 

ருஹானாவின் மனதில் குழப்பங்கள் அலை மோத யோசித்தவள் தன் வாழ்வின் கடினமான முடிவை எடுத்தாள். “நீங்க சொன்னதுலாம் சரிதான். நான் இங்க இருக்கறது நல்லது இல்லை. இவான் மோசமா பாதிக்கப் படுவான்” அவள் கண்ணீர் ததும்ப சொல்ல, கரீமா முகத்தில் நிம்மதி புன்னகை .

“இவானோட சந்தோஷம் தான் எனக்கு உலகத்தை விட முக்கியம்” என ருஹானா சொல்லிக் கொண்டிருக்கும்போது வந்த ஆர்யன் தன் புது வழக்கமாய் கதவருகே நின்று அவள் பேசுவதை கேட்டான்.

“அவன் அமைதியான சூழலில சந்தோஷமா இருந்தாலே எனக்கு போதும்” என்று சொல்லி இவானை தடவி முத்தமிட்டாள். “எனக்கு அப்பப்ப இவானை பத்தி தகவல் சொல்லுங்க. சரியா? என பரிதாபமாக கேட்டாள். சரியென கரீமா தலையாட்டினாள்.

திரும்ப ஓடிப்போய் இவானுக்கு முத்தமிட்டவள், வெளியே செல்ல கிளம்பவும், ஆர்யன் உள்ளே வர அவனை பார்த்து தயங்கி நின்றாள். 

“பக்கத்துக்கு ரூம் தயார் செய்ங்க, அண்ணி!” ருஹானாவை பார்த்துக்கொண்டே கரீமாவிடம் சொன்னான்.

“ஆமா, ஆமா, ஏற்கனவே தயார் செய்துட்டேன். சல்மா பக்கத்துல வந்திட்டா!” என கரீமா குதூகலமாக தொடங்க…

“இவான் சித்தி அங்கே இருக்கட்டும்! இப்ப இருந்து இவானை அவளே கவனிக்கட்டும்” 

கண்ணீர் நிரம்பிய விழிகளை ருஹானா தட்டி முழிக்கக் கூட இல்லை.

கரீமா வாய் பிளந்தவள், இம்மியும் மூடக் கூட இல்லை.

கொண்ட குயுக்தி அறிவோ ஐந்தரை

மடக்க நினைத்த ஆணோ அடி ஆறரை

துருப்பாக எடுத்ததோ பக்கத்து அறை.

நானி கூட்டியதோ ஏழரை..

அந்தோ! பறிபோனது அழகு அறை

ஐந்தரை முழித்ததோ பேயறை..!

Advertisement