Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 10

“இவான், இவான்” என முணுமுணுத்துக் கொண்டிருந்த ருஹானா துப்பாக்கி தலையில் பட்டதும் இவானை இன்னும் இறுக்கிக்கொண்டாள். அழுகையை நிறுத்தி நீண்ட மூச்சு விட்டவள், “சுடு! என்னை சுடு! இந்த உலகத்தில எனக்கு எதும் மிச்சம் இல்ல.. நான் ஏற்கனவே செத்துட்டேன். சுடு!” என்று கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள். 

ஆர்யன் மேலும் துப்பாக்கியை அவள் தலையில் அழுத்த, “என் உயிரை எடுத்துக்கோ! இந்த வேதனைல இருந்து எனக்கு விடுதலை கொடு” என அவள் கெஞ்ச.. ஆர்யன் ஆங்காரமாய் துப்பாக்கியின் லாக்கை விடுவித்தான். ஏனோ ட்ரிக்கரை அழுத்தாமல் குனிந்து அவளை பார்த்தபடி நின்றிருக்க, “ஏன் நிறுத்திட்டே? சுடு என்னை! சொன்ன சொல் காப்பாத்தற மனுஷனா இருந்தா உடனே சுடு!” என ருஹானா அவனை மிரட்டினாள்.

ஆர்யன் ஒவ்வொரு விரலாக துப்பாக்கியிலிருந்து எடுத்து திரும்ப பிடிக்க.. அவளோ, “இவான்! சித்தியும் வரேன்! இதோ உன்கூடவே வந்துட்டேன்” என்று கண்களை மூடி அவனை நெஞ்சோடு அணைக்க.. அப்போதுதான் அந்த அற்புதம் நடந்தது.

இவான் லேசாக சுவாசிக்க, ருஹானா அதை உணர, “ஆஹ்! இவானுக்கு மூச்சி வருது, செல்லம் நல்லா மூச்சு விடு, இவான் உயிரோடு இருக்கான். அல்லாஹ்க்கு நன்றி” என ஆனந்தித்தவள், பின்னால் திரும்பி ஆர்யனிடமும் பரபரப்பாக சொன்னாள். “இவன் மூச்சு விடறான்.!!” 

அந்த நொடியே ஆர்யன் அவனை குனிந்து தூக்கிக்கொண்டு வேகமாக ஓட்டம் பிடித்தான். அவன் பின்னாலேயே ருஹானாவும் “இவான்!” என்று சொல்லிக்கொண்டே ஓடினாள். 

——-    

மருத்துவமனை.

இவானுக்கு டிரிப்ஸ் ஏறிக்கொண்டு இருக்க, அவன் தலையை தடவியபடி ஆர்யன் பக்கத்தில் நிற்க, மருத்துவர் பரிசோதனை முடிவுகளை பார்த்துக்கொண்டு இருந்தார். “இவான் எப்படி இருக்கான்?” ஆர்யன் கேட்டதற்கு டாக்டர் பதில் சொன்னார். “டெஸ்ட் ரிசல்ட் நல்லா இருக்கு. இவன் ஹைபோதேர்மியாவால சிரமப்பட்டுட்டான். இத்தனை குளிர் ஒரு சின்ன பையன் தாங்குறது கஷ்டம்”. ஆர்யன் “இதுனால வேற பாதிப்பு ஏற்பட்டுருக்கா?” என கவலையுடன் கேட்டான். “இல்ல. நீங்க சரியான நேரத்தில இங்க கூட்டிட்டு வந்துட்டீங்க, ஐந்து நிமிடம் லேட் ஆகியிருந்தா கூட நாங்க ஒன்னும் செய்திருக்க முடியாது” என்று வழக்கமான மருத்துவ வாசகத்தை சொன்னார்.

வெளியே ருஹானா பயத்துடன் அழுதுகொண்டே நடக்க, ரஷீத் அவளை பார்த்தவண்ணம் நின்றிருந்தான். ஆர்யன் வெளியே வரவும் ருஹானா ஓடிவந்து, “இவான் எப்படி இருக்கான்?” என கேட்டாள். அவனோ, “என்னோட புக்ல தவறு செஞ்சவங்க யாரா இருந்தாலும் அவங்களுக்கு கடுமையான தண்டனை உண்டு. ஆனா நீ மிகப்பெரிய தப்பு செஞ்சிருக்கே!” என அவளை பார்த்து விழிகளை உருட்டி சொன்னான்.

அவன்தான் அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அவளை மிரட்டினான் என்றால், அவள் அந்த மிரட்டலை சிறிது கூட சட்டை செய்யாமல், “இவான் நல்லா இருக்கானா? அவனுக்கு ஏதும் வலி இல்லயே?” என்று தன் கேள்வியிலேயே நின்றாள். தன் பேச்சுக்கு மதிப்பில்லாமல் போனதை கண்டு எரிச்சலானவன் வேகமாக உள்ளே போனான். ருஹானாவும் அவன் பின்னே உள்ளே ஓடிவிட்டாள்.

ரஷீத்தின் போன் அடிக்க, கரீமா இங்குள்ள சேதியை கேட்க, ‘இவான் நலமே!’ என்ற ரஷீத் சொல்ல, கரீமா போன் பேச்சை சற்று நிறுத்தி, அதை அம்ஜத்க்கு சொன்னாள். அதை கேட்டு மகிழ்ந்த அம்ஜத், “ஜாஃபர்! இவான் சரியாகிட்டான், சாரா! இவான் சரியாகிட்டான், நஸ்ரியா! இவான் சரியாகிட்டான்!” என அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் சிரிப்புடன் சொன்னான்.

சாரா கடவுளுக்கு நன்றி சொல்ல, நஸ்ரியா, “எனக்கு சந்தோசம்!” என சிரிக்க, ஜாஃபர், “எல்லாம் சரியாகிடுச்சில. போய் வேலைய செய்ங்க” என்று அனுப்பினான். ரஷீத்திடம் கரீமா, “இவான் எப்படி வண்டிக்கு போனான்னு தெரிஞ்சதா?” என்று கேட்க.. “நான் வெளிய தான் நிக்கிறேன். விவரம் ஒன்னும் தெரியல” என்ற ரஷீத்தின் பதில் அவளுக்கு திருப்தி அளிக்கவில்லை. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்து குதித்துக்கொண்டு இருந்தது.

இவானின் கையிலிருந்த ட்ரிப்ஸ்ஸை செவிலிப்பெண் அகற்றி செல்ல, ருஹானா அவன் முடியை ஒதுக்கி, தலையை பாசத்துடன் தடவிக் கொடுத்தாள். “சித்தியின் உயிரே! என் கண்ணே! மானே! என் செல்லம்!” என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் இவானை, தன் கட்டுப்போட்ட கைகளால் வருடினாள். வெளியே இருந்த இவானின் கைகளை எடுத்து முத்தமிட்டு போர்வைக்குள் பாதுகாப்பாய் வைத்து மூடினாள். 

அவள் செயல்களை கடுப்புடன் பார்த்துக்கொண்டே இருந்த ஆர்யன், அவளை நோக்கி எதோ சொல்ல வரும்போது மருத்துவர் உள்ளே நுழைந்தார். “பேபி கண் முழிச்சதும் நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம். ஒரு வாரத்துக்கு கவனம் அதிகம். அவனுக்கு சிரமம் இல்லாம பார்த்துக்கோங்க. தனியா விடாதீங்க” என்று அவர் சொல்லவும், ருஹானா அழுத்தமாக சொன்னாள். “விட மாட்டேன். எப்பவும் விடமாட்டேன்.” 

ஆர்யன் சடக்கென்று அவளை பார்க்கவும், “என் அக்கா மகனை விட்டு ஒரு நொடி கூட பிரிய மாட்டேன். ஒருபோதும் இல்லை” என அவனை பார்த்து சொன்னாள். ஆர்யன் கண்களும், புருவங்களும் சுருங்கின. “சீக்கிரம் சுகம் பெறட்டும்!” என்று டாக்டர் சொல்லி செல்ல, இவான் மிக மெதுவாக கண் திறந்தான்.

ரஷீத் உள்ளே வர, ருஹானா ஆவலுடன் இவான் முகத்தையே பார்க்க, இவான் தலையில் கை வைத்த ஆர்யன், “எல்லா கெட்டதும் ஒழிந்தது, சிங்க பையா!” என்றான். அவனை பார்த்து புன்னகைத்த இவான், மறுபுறம் திரும்பி “சித்தி!” என பாசத்துடன் அழைத்தான்.

ஆர்யன் பொறாமையுடன் அவளை பார்க்க, “என் செல்லமே! சித்தி உன்கூடத் தான் இருக்கேன், ஆருயிரே!” என அவன் கன்னத்தை வருடியபடி ருஹானா சொல்ல, பொசுங்கிய ஆர்யன் படுக்கையிலிருந்து இவானை தூக்கினான். “சித்தி?” என இவான் கூப்பிட “என்ன நடக்குது, என்ன செய்றீங்க?” என ருஹானா பதறினாள்.

ரஷீத் கதவை திறந்து பிடிக்க, இவானை கைகளில் ஏந்திய ஆர்யன் வெளியே நடந்தான். “எங்க தூக்கிட்டு போறீங்க?” அவன் பின்னாலேயே ஓடி வந்து கேட்டாள். எதற்கும் அவனிடம் பதில் இல்லை. இங்கும் ரஷீத் கார் கதவை திறக்க, இவானை பின் இருக்கையில் படுக்க வைத்த ஆர்யன், முன்னால் செல்ல போக அவன் முன் வந்து ருஹானா நின்றாள். “என்ன மனிதன் நீ? இவானுக்கு நான் தேவை. அவன் நல்லா குணமாகற வரை நான் அவனை விட்டு போக மாட்டேன். நீ என்னை என்ன செஞ்சாலும் சரி”

அவள் பேசிக்கொண்டே இருக்க, அதை கேட்காதது போல ஆர்யன் கார் கதவை திறக்க, அவன் கையை பிடித்து இழுத்தவள், “வீட்டுக்கு போனதும் ‘சித்தி எங்க?’ன்னு இவான் கேட்டா என்ன சொல்வீங்க?” என்று அவள் கேட்க, ஆர்யன் அவளை மேலும்கீழும் கடுப்புடன் பார்த்தான். அவன் வழக்கமாய் பதில் சொல்லாமல் ஓட்டுனர் இருக்கையில் ஏறி அமர்ந்தான்.

ஓடிச்சென்று கார் முன்னால் நின்றவள், “நீங்க சொன்னபடி செய்றேன். சத்தியமா எதிர்த்து பேச மாட்டேன். இவான் கூட இருக்க மட்டும் எனக்கு அனுமதி கொடுங்க” என கெஞ்சினாள். காரை ஓட்டாமல் அவளையே பார்த்தபடி இருந்தான், ஆர்யன்.

——  

அர்ஸ்லான் மாளிகை கதவை ஜாஃபர் திறக்க, இவானை ஏந்தியபடி ஆர்யன் உள்ளே வர, கரீமா வேகமாக ஓடி வந்தாள். “அஹ், ஆர்யன்! வந்துட்டியா? இவான் எப்படி இருக்கான்? தூங்குறானா? நாங்கலாம் ரொம்ப பயந்திட்டோம். ரஷீத்ட்ட கேட்டு நாங்க அங்க வரலாம்னு பார்த்தோம். அதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க” என்று சொல்லிக்கொண்டே போனவளுக்கு பேச்சு தானாக நின்று போனது, வாசலில் தயக்கமாக படி ஏறி வந்துக்கொண்டிருந்த ருஹானாவை பார்த்ததும். 

‘கொடுமைப்படுத்துவான்னு பார்த்தா கூடவே கூட்டிட்டு வந்துருக்கான்!’ என பொசுங்கியவள், சமாளித்துக்கொண்டு இவானை பார்த்து, “என் செல்லம் எவ்வளவு அழகா தூங்குறான். பாவம், களைப்பாயிருப்பான். சுயநினைவுக்கு வந்தானா? ஏதும் பேசினானா? எப்படி டிரக்ல ஏறினானாம்?” என பயத்துடன் கேட்டாள்.

“இன்னும் இல்லை. ஆனா நான் எல்லாத்தையும் தெரிஞ்சுக்குவேன்” என்று ஆர்யன் அழுத்தமாக சொல்ல, கரீமாக்கு உள்ளே உதறல் எடுத்தது. இவானை தூக்கிக்கொண்டு ஆர்யன் படியேற, பின்னாலேயே ருஹானாவும் போக முற்பட, அவளை திரும்பி பார்த்து சொன்னான். “இவான் கூட இருக்கலாம்ன்னு கனவுலயும் நினைக்காதே. உன் இடம் உனக்கு தெரியும்”.

ருஹானா பாவமாய் அங்கேயே தேங்கி நிற்க, பீதியடைந்திருந்த கரீமா முகத்தில் லேசாக புன்னகை உதித்தது.

கப்பலின் சுக்கான்கள் அழகாக வரையப்பட்டு, ‘கேப்டன்’ஸ் கேபின்’ என்று எழுதப்பட்ட இவானின் கட்டிலில், ஆர்யன் அவனை மெதுவாக படுக்க வைத்தான். “அப்பாடா வீட்டுக்கு வந்துட்டான். குட்டி தேவதை போல தூங்குறான்” என அம்ஜத் நிம்மதியடைய, ஆர்யன் நானியிடம் சொன்னான், “இவானை கவனமா பார். ஒரு நிமிடம் கூட தனியா அவனை விட கூடாது. உனக்கு உணவு, தூக்கம் எல்லாம் இங்கயே தான். புரியுதா?” நானியும் “சரி சார்” என பணிந்தாள்.

“என் குழந்தை இன்னும் தூங்குறானா?” என்றபடியே கரீமா உள்ளே வர.. இவானையே பார்த்துக்கொண்டு இருந்த ஆர்யன், “இவனை பார்த்துக்கங்க, நான் ஒரு போன் பேசிட்டு வரேன்” என சொல்ல, கரீமா “கண்டிப்பா ஆர்யன்! நான் இருக்கேன். நீ பேசிட்டு வா” என சொன்னாள்.

ஆர்யன் வெளியேறவும், “குழந்தை தூங்குறான்ல. ரூம்ல எல்லாரும் இருக்க வேணாம். நான் பார்த்துக்குறேன்” என்று அம்ஜத்தையும், நானியையும் வெளியே அனுப்பினாள். பின் தூங்கும் பாலகனை, “இவான் செல்லம்! எழுந்திரு” என தட்டி எழுப்பினாள். அவன் மிரள மிரள கண் விழிக்கவும், “டியர்! நீ டிரக்ல எதுக்கு ஏறினேன்னு உன் சித்தப்பா கேட்டா…“ என சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ஆர்யன் உள்ளே நுழையவும் பட்டென்று பேச்சை நிறுத்தினாள்.

இவான் கட்டிலில் அமர்ந்த ஆர்யனும் அதே கேள்வியை இவானிடம் கேட்க, கரீமாக்கு உடல் நடுங்கலானது. இவான் பதில் சொல்லாமல் கரீமாவை பார்க்க அவளுக்கு தொண்டை உலர்ந்து போனது. இவான் வாயை திறக்காததால், சிறிது தைரியம் பெற்று, “அவனே சோர்வா இருக்கான். அப்புறம் விசாரிக்கலாம், ஆர்யன்” என தப்பிக்க பார்த்தாள்.

ஆனாலும் ஆர்யன் விடுவதாயில்லை. “சிங்க பையா! ஏன் வண்டில ஏறினே?” என கேட்க.. கரீமா கண்களை மூடிக்கொண்டாள். இவான் அதற்கு பதில் சொல்லாமல், “சித்தி எங்கே?” என கேட்கவும், ஆர்யன் முகம் சலிப்பை காட்டியது என்றால், கரீமாக்கு போன உயிர் திரும்பி வந்தது.

ஆர்யன் “அக்னி சிறகே! நான் இருக்கேன், உனக்காக” என்றான். “ஆனா என் சித்தி?” என இவான் திரும்ப கேட்டும் சித்தப்பாவிடமிருந்து பதில் வராத காரணத்தால் தலை சாய்த்து கண்களை மூடிக்கொண்டான்.

——

ருஹானா கத்த கத்த பாதுகாவலன் அவளை இழுத்துக்கொண்டு போய் நிலவறையில் அடைத்தான். “இது எல்லாம் என்னால் நடந்தது. நான் எப்படி அவனை தனியா விட்டுட்டுப் போனேன்? இப்படி ஒரு தப்பு நான் செய்யலாமா?  விபரீதமா இவானுக்கு நடந்திருந்தா…. அல்லாஹ்!” என்று அழுதாள். கதவை தட்ட கை ஓங்கியவள் அதனால் பயனில்லை என விட்டு விட்டாள். கதவில் சாய்ந்தவள் தன் கோட் பாக்கெட்டில் இருந்து அந்த காகித கப்பலை எடுத்துக்கொண்டு “இவான்! நான் இவான் பக்கத்துல இருக்கணுமே. அல்லாஹ் எனக்கு உதவி செய்ங்க” என முணுமுணுத்தவாறே தரையில் அமர்ந்து கொண்டாள். 

——–

இவானை தட்டிக்கொடுத்தவாறே கரீமா தன் அடுத்த நாடகத்தை ஆரம்பித்தாள். “நான் ரொம்ப பயந்துட்டேன், ஆர்யன்! நீ ருஹானாவை கொலை செய்யப் போறேன்னு நினைச்சிட்டேன். நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து திரும்பி வந்தது பார்த்து தான் எனக்கு நிம்மதியாச்சி. என்ன இருந்தாலும் அவ பையனோட சித்தி. நீ அவளை இங்க கூட்டிட்டு வந்தது நல்லதா போச்சி. உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியாது. ஆனா பாரு, இவான் தூக்கத்தில கூட அவன் சித்தியைத்தான் கூப்பிட்டுறான்”

ஆர்யன் “இவான் அவளை தேடுறதால தான், அவ இங்க இருக்குறா. ஆனா கொஞ்ச நாளைக்கு தான் இருப்பா. அப்படியும் அவ ஏதாவது விளையாட்டு காட்டினாள்னா உடனே அனுப்பிட வேண்டியது தான்” என சொல்ல.. கரீமாவின் மனது கூத்தாடியது. “நீ கவலைப்படாதே! நான் கவனிச்சிக்கிறேன். ரெண்டு பேரையும் கவனமா பார்த்துக்கறேன்” என்று சொல்லி புன்முறுவலுடன் வெளியே சென்றாள். 

——–

ஆர்யன் கட்டிலில் அமர்ந்து யோசனையில் இருக்க.. ஜாஃபர் அடுத்த நாள் ஆர்யன் அணிய வேண்டிய உடைகளை எடுத்து, ஆர்யனிடம் ஒப்புதல் கேட்க, அவன் தலை மட்டும் ஆடியது. சுட்டிக்காட்டிய ஆடையை எடுத்து ஸ்டான்ட்லில் தொங்க விட்ட ஜாஃபர், வெளிய செல்ல போகும்முன், “இவான் சித்தி…” என்று தொடங்கி ஆர்யன் பார்த்த பார்வையில் “நீங்க ஓய்வெடுங்க” என சொல்லி வெளியேறி விட்டான். 

——-

ருஹானா காலை மடித்து தலையை அதன்மேல் வைத்து கண்மூடி இருந்தாள். கதவருகே காலடி சத்தம் கேட்கவும், “இவான்” என்று சொல்லி எழுந்து வாசலை பார்த்து நின்றாள். உள்ளே வந்த கரீமா கிடங்கு போல இருந்த அந்த இடத்தை சுற்றி பார்வையை ஓட்டினாள். “கரீமா மேம்! நீங்க எப்படி இங்க?” என ருஹானா கேட்டாள். 

ஆடு நனையுதே என்று அழுத ஓணானும், “ருஹானா டியர்! உன்னை இப்படி பார்க்க எனக்கு கஷ்டமா இருக்கு. ராத்திரிலாம் தூக்கமே வரல. வயசு பொண்ணு. தஸ்லீம் தங்கை நீ.. அவ அக்கா மகன் கூட இல்லாம இப்படி இருக்கிறதை பார்த்தா..” என்று கவலை பெருமூச்சு விட்டு “உனக்கு இவானை பார்க்கணுமா?” என கேட்டது. நொடியில் முகம் மலர்ந்த ருஹானா, இவானைப் போலவே பலமுறை வேகமாக தலையாட்டினாள். 

“சரி, நான் உனக்கு உதவி செய்றேன்” என கரீமா வஞ்சக வலை விரித்தாள். ஆச்சரியம் அடைந்த ருஹானா, “நிஜமாவா?” என கேட்க, கரீமா ஆமென தலையாட்டினாள். “உங்க கருணைக்கு நான் எப்படி கைமாறு செய்வேன்?” என நன்றி ஊற்றெடுக்க வெள்ளை மன ருஹானா கேட்க, பெருந்தன்மை சிரிப்புடன் அதை ஏற்றுக்கொண்ட கரீமா, “சீக்கிரம் வா! யாரும் பார்க்கறதுக்கு முன்னே ஓடிப்போய்ட்டு ஓடி வந்துடு!” என சொல்லி கதவை திறந்தவள் ருஹானா வேகமாக செல்லவும் அவளை நிறுத்தினாள். 

“உன்னை யாராவது பார்த்துட்டா நான் உதவி செஞ்சேன்னு சொல்லிடாதே. ஆர்யனுக்கு தெரிய வந்தா என்னை கொன்னுடுவான்” என கரீமா சொல்ல, “என் உயிரை பணயம் வச்சி கேட்டா கூட உங்களை சொல்ல மாட்டேன். நீங்க எனக்கு காட்றது கருணை மழை” என உணர்ச்சிமிக சொன்ன ருஹானா அவள் கையை பிடித்துக் கொண்டாள். 

கரீமா, “நான் உனக்கு இன்னும் எவ்வளவோ செய்ய ஆசைப்படறேன். அதெல்லாம் இருக்கட்டும். நீ சீக்கிரம் போயிட்டு வா” என ருஹானாவை அனுப்பி வைத்தவள், கள்ளச் சிரிப்புடன் தலையாட்டிக் கொண்டாள். 

இவான் கண்களை மூடிக் கொண்டு “சித்தி! அம்மா! சித்தி!” என அரற்றிக் கொண்டு இருந்தான். மேஜையில் சாய்ந்து நானி தூங்கிக் கொண்டிருக்க, மெதுவாக உள்ளே நுழைந்த ருஹானா திடுக்கிட்டாள். ஓடி வந்து அவனை தொட்டுப் பார்க்க உடல் அனலாய் கொதித்தது. “டாக்டரை வர சொல்லுங்க, இவானுக்கு சுரம் அடிக்குது!” என கத்தியவள், அவனின் சட்டையை வேகமாக கழற்றினாள். தண்ணீரை எடுத்து அவன் முகம், கழுத்து, கைகளில் துடைத்தாள். 

அவள்  சத்தம் கேட்டு எழுந்த நானியிடம், “பாத்ரூமுக்கு போங்க! குளிர்ந்த நீரை நிரப்புங்க! ஏன் என்னை பார்த்துட்டு இருக்கீங்க? போங்க, சீக்கிரம்!!” என விரட்ட, நானி வேகமாக சென்றாள். “கண் திற மகனே! எழுந்திரு இவான்!” என்று இவானை அவள் தூக்கி திரும்பும்போது உள்ளே வந்த ஆர்யன், ருஹானாவை பார்த்து திகைத்தான். “நீ இங்க என்ன செய்றே?” அவன் சத்தமிட்டதை கவனிக்காமல், “இவானுக்கு அதிகமா சுரம் அடிக்குது. எனக்கு வழி விடுங்க! டாக்டரை உடனே வர சொல்லுங்க!” என அவனுக்கு மேல் சத்தமாக உத்தரவிட்டு பாத்ரூம்க்குள் சென்று விட்டாள். அவனும் வைத்தியரை வரவழைக்க விரைந்தான்.  

——-

Advertisement