Advertisement

சிறிது நேரத்தில் ரஷீத் அழைத்து வேண்டிய விவரங்கள் சொன்னான். “ஆர்யன்! போலீஸ்க்கு டிரைவர் போன் சிக்னல் கிடைக்கல. நான் உங்களுக்கு டிரைவரோட இன்னைக்கு டெலிவரி விவரம், லொகேஷனோட அனுப்பி இருக்கேன். அவன் டெலிவரி செய்ற எல்லா இடத்துக்கும் நம்ம ஆள்களையும் அனுப்புறேன்.”

ஆர்யன் சரியென சொல்லி போனை அடைக்கவும், காரின் முன்னே மாட்டியிருந்த போனை ருஹானா வேகமாக எடுத்துக்கொண்டாள். ஆர்யன் அவளை முறைத்து பார்ப்பதை சிறிதும் அவள் சட்டை செய்யவில்லை. மேப்பை திறந்து ருஹானா வழி காட்டிக்கொண்டே வர.. ஆர்யனும் அவள் சொன்னபடியே சென்று கொண்டிருந்தான்.

——–

ரஷீத்க்கு அழைத்து கரீமா நடப்பவைகளை தெரிந்து கொண்டு சாராக்கும் சொல்ல.. சாராவும் நஸ்ரியாவும் ‘இவானுக்கு எந்த ஆபத்தும் வர கூடாது’ என கடவுளை வேண்டிக் கொண்டனர். 

அப்போது கரீமா போன் ஒலிக்க “யா அல்லாஹ்! இது நல்ல செய்தியா இருக்கணும்” என நஸ்ரியா சொல்ல.. “இது சல்மா போன் செய்றா” என கரீமா சொல்லவும் இருவரும் நகர்ந்தனர்.

“அக்கா! உனக்கு சந்தோசமான விஷயம். நான் நாளைக்கு கிளம்பி அங்க வரேன். ஏர்போர்ட்க்கு கார் அனுப்பு” என ஆர்ப்பாட்டமாக சல்மா சொல்ல, சரியென ஒற்றை வார்த்தையில் கரீமா பதிலிளித்தாள். 

“ஏன் இப்படி பேசுற..? நீதான் என்னை வர சொல்லி தொல்லை பண்ணிட்டு இருந்தே. இப்போ மகிழ்ச்சியே காணோம். நான் வர்றது உனக்கு பிடிக்கலையா, அக்கா?” சல்மா கேட்க.. “நான் வேற கவலைல இருக்கேன். இவான் காணாம போய்ட்டான். தேடிட்டு இருக்காங்க. மணிக்கணக்காச்சி..” என கரீமா சொன்னாள்.

“சின்ன பையன் தானே.. எங்க போயிற போறான்? அவனே வருவான். அங்கத்தான் எங்கயாவது இருப்பான்” அலட்சியமாக தங்கை சொல்ல.. அக்காக்கு இரத்த அழுத்தம் எகிறியது. “உனக்கு சரியா புரியல. இவான் காணாம போனதுக்கு நான் தான் காரணம்!” என்று கரீமா கோபமாக சொல்ல.. “நீதான் காரணமா.. நீதான் காரணமா?” என பின்னால் இருந்து குரல் கேட்டது.

பேயறைந்தது போல திரும்பிய கரீமா அங்கே அம்ஜத் நிற்பதை பார்த்து முழித்தாள். சுட்டு விரலை அவளை நோக்கி நீட்டியபடி “நீதான் காரணம். இது நடக்க நீதான் காரணம்” என்று அம்ஜத் திரும்ப திரும்ப சொல்ல.. “அம்ஜத் டியர்! அமைதியா இருங்க. அல்லாஹ் பேரால கேட்கறேன். கத்தாதீங்க..” என்று அவனை சமாதானம் செய்யப் பார்த்தாள்.  

“நீ தானே சொன்னே.. நான் தான் காரணம்?” என்று கேட்டவன் “நான் தான் காரணம்” என்று பத்து தடவைக்கு மேல் சொல்லிக்கொண்டே இருந்தான். “அம்ஜத்! நிதானத்துக்கு வாங்க. நீங்க காரணம் இல்ல. உண்மையில யாரும் காரணம் இல்லை” என்று அவனை அமர வைத்தவள், “இப்போ ஏதும் நடக்கல. இவான் தூரத்துல போய் ஒளிஞ்சி விளையாடறான். ஆர்யன் போய் கண்டுபிடிச்சி கூட்டிட்டு வந்துடுவான். சரியா?” என கேட்டாள். 

“சரியில்ல.. சரியில்ல.. வீட்டு அமைதி கெட்டு போச்சி” என்று அம்ஜத் பல முறை சொன்னான். “ஒன்னும் ஆகாது. உங்களுக்கு ஆர்யன் மேல நம்பிக்கை இல்லையா?” என கரீமா அழுத்தி கேட்க.. அம்ஜத் முகம் இயல்பு நிலைக்கு திரும்பியது. “வாங்க! நாம துவா செய்வோம். ஆர்யன் பத்திரமா இவானை கூட்டிட்டு வரணும். இவான் நல்ல தகவலை மட்டும் தான் ஆர்யன்ட்ட சொல்லணும். வேற ஏதும் இவானுக்கு நினைவு வரக்கூடாது. அப்போ தான் நம்ம அமைதி கெட்டு போகாது” என அம்ஜத் கைகளை பிடித்து சொல்ல, அம்ஜத்தும் புன்னகை புரிந்தான்.

கிச்சனில் சாரா இவானை நினைத்து நஸ்ரியாவிடம் புலம்ப, “பாவம் இவான்! நான் தான் அவ்வளவு நேரம் அந்த டிரக் பின்னாடி நின்னுட்டு இருந்தேன். லிட்டில் சார் எப்போ ஏறினாரோ? குளிரில குழந்தை என்ன பாடுபடறாரோ! ஜாஃபர் இருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்காது. முதல்ல பாய்லர் ரூம்ல நெருப்பு பிடிச்சது. இப்போ இப்படி. ஜாஃபர் கவனமா வீட்டு விசயம்லாம் கவனிப்பாரே!” 

நஸ்ரியா அழுதுக் கொண்டே கேட்டாள். “பெரியம்மா! அந்த வண்டில இருந்து இவான் எப்படி உயிரோட வர முடியும்? பெரியவங்க நமக்கே அந்த குளிர் தாங்காது. இவானுக்கு எதாவது தப்பா நடந்திட்டா.. “ 

“எதுவும் அப்படி நடக்காது” என்ற குரல் கேட்டு இருவரும் பின்னாடி திரும்பி பார்க்க, அங்கே வீட்டு மேனேஜர் ஜாஃபர் கையில் பெட்டியுடன் நின்றிருந்தான். “என்ன நடக்கிறது?’ என்று ஜாஃபர் கேட்க இருவரும் மாறி மாறி அது வரை வீட்டில் நடந்த அனைத்து சம்பவங்களையும் கூறினர்.

“ஆர்யன் சார் கோவத்தில குதிச்சிட்டு இருக்கார். இவானுக்கு எதும் ஆச்சினா அவன் சித்திய நார் நாரா கிழிச்சிடுவார்” என்று நஸ்ரியா சொல்ல, “அந்த பொண்ணு எப்படி?” என ஜாஃபர் விசாரிக்க.. சாரா சொன்னார், “ருஹானா நல்ல பொண்ணு. இவான் மேல உயிரையே வச்சிருக்கா. இவானும் அவ கிட்டே அன்பா இருக்கார். இரத்த பந்தம் இல்லையா, ஈர்த்துடுச்சி”

“என்ன நடக்குமோன்னு எனக்கு பயமா இருக்கு” நஸ்ரியா சொல்ல.. “ஒன்னும் ஆகாது. ஆர்யன் சார் தேடி போயிருக்கார்ல. பத்திரமா கூட்டிட்டு தான் வீட்டுக்கு வருவார்!” என நம்பிக்கையாக ஜாஃபர் சொல்லி, “அவங்க திரும்பி வரும்போது இங்க எல்லாம் சரியா இருக்கணும். போய் வேலையை பாருங்க” என அனுப்பி வைத்தான்.

——-    

ருஹானா போனில் மேப்பை பார்த்துக்கொண்டே வழி சொல்லி வர.. ஆர்யன் அவளை முறைப்புடன் திரும்பி திரும்பி பார்த்தபடி வண்டி ஓட்டினான். அப்போது ருஹானா “சிக்னல் போச்சே!” என பதறியவள் வெளியே பார்த்து தேடியபடி வந்தாள். ஒரு கடையின் முன் இருந்த பார்சல்களை பார்த்து விட்டவள், ஆர்யனை காரை நிறுத்த சொல்லி இறங்கி ஓடினாள்.

அவனும் பின்னால் ஓடிவர.. கடைக்காரரிடம் ‘வண்டி எப்போது வந்தது, எந்த திசையில் சென்றது’ போன்ற விவரங்களை கேட்டவர்கள், ‘சிறுவன் வண்டியில் இருந்தானா?’ என்பதையும் கேட்டு ‘பார்க்கவில்லை’ என்ற பதிலையும் பெற்றனர்.

திரும்ப வண்டியில் ஏறி வேகமாக செல்ல… “பெட்டியை இறக்கும்போது எப்படி டிரைவர் பார்க்கல? ஒருவேளை அதுக்கு அப்புறம் பார்த்து ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போயிருக்கலாம்ல.. அப்படித்தான் இருக்கும். அல்லாஹ் கருணையால இவான் இப்போ நல்லா இருப்பான்” என ருஹானா அனுமானங்களை அடுக்க.. ஆர்யன் அவள் தவிப்பை பார்த்து அமைதியாக வந்தான்.

சிறிது தூரத்தில் ஆர்யன் அந்த வண்டியை பார்த்துவிட்டான். “இதோ அந்த டிரக்!” என அவன் சொல்ல.. “இவான் அதுல இருக்கான். வேகமா போங்க” என ருஹானா விரட்ட.. டொயோட்டா செக்வயா பறந்தது. மற்ற வண்டிகளை முந்திக்கொண்டு ஆர்யன் மிக வேகமாக காரை செலுத்தி டிரக் வண்டியின் முன்னே கொண்டு நிறுத்தினான்.

ருஹானா குதித்து இறங்கி வண்டியின் பின்னால் ஓடி கதவை திறக்க முற்பட்ட.. அவளால் திறக்க இயலவில்லை. “நகரு” என சொல்லி ஆர்யன் கதவை திறந்து வண்டியின் மேலே ஏறினான். வண்டி முழுதும், பெட்டிகளுக்கு நடுவே என தேட, இவான் அங்கே இல்லை எனவும் திகைத்தான்.

கீழே இருந்து “இவான்! இவான்!” என ருஹானா கத்தவும் கீழே இறங்கியவன், முன்னால் சென்று டிரைவரின் சட்டை காலரை பிடித்தான். “பையன் எங்கே?” என கேட்க டிரைவர் ஒன்றும் புரியாமல் விழித்தான். அவனை சரமாரியாக அடிக்கவும், “நான் யாரையும் பார்க்கல” என டிரைவர் அழ.. ருஹானா வந்து தடுத்தாள். 

“விடுங்க! அவர் கிட்ட இருந்து தான் நமக்கு இவான் பத்தி விவரம் கிடைக்கும்” என்று சொல்லி டிரைவர் வண்டியை நிறுத்திய இடங்களை கேட்டாள். டிரைவர் காட்டுப்பகுதியில் நிறுத்திய இடத்தின் அடையாளம் சொல்லவும் இருவரும் காருக்கு ஓடினர்.

காரை திருப்பிக்கொண்டு செலுத்தி இருவரும் பார்த்துக்கொண்டே வர… சாலையின் இரு ஓரங்களிலும் நிறைய கட்டைகள் அடுக்கப்பட்ட இடத்தை வந்தடைந்தனர். கீழே இறங்கி “இவான்!” என கத்தியபடி இருவரும் ஆளுக்கொரு பக்கம் தேடலாயினர். 

அங்கே காகித கப்பல் ஒன்று கீழே கிடப்பதை ருஹானா பார்த்துவிட்டாள். அழுது கொண்டே ஓடிச்சென்று அதை எடுத்தவள் ‘இவான் சட்டைப் பையிலிருந்து தான் அந்த கப்பல் விழுந்திருக்க வேண்டும்’ என புரிந்துக்கொண்டு, அந்த திசையில் தேடி ஓடினாள். 

நடுவே வந்த பள்ளத்தை அவள் எட்டி பார்க்க, உள்ளே இவான் அசைவற்று கிடப்பதை கண்டு அவள் இதயம் வேலை செய்ய மறந்தது.

“இவாவாவாவான்..!” என்று அவள் கத்திய சத்தம், வேறொரு திசையில் தேடிக்கொண்டிருந்த ஆர்யன் காதில் விழ.. அதிர்ச்சியில் நின்றுவிட்டவன் சத்தம் வந்த திசையில் ஓடி வந்தான்.

சர்ரென்று அந்த பள்ளத்தில் குதித்து இவானை தூக்கிக்கொண்டு மேலே வந்த ருஹானா, “சித்தி வந்துட்டேன், இவான். என்னை பாரு. கொஞ்சம் பொறுத்துக்கோ. என்னை விட்டு போயிடாதே.. இல்ல.. இல்ல.. முழிச்சிக்கோ.. ஏன் மூச்சு விடாம இருக்கே? கண்ண திற, பேபி.. தயவுசெய்து மூச்சு இழுத்து விடு. கெஞ்சி கேட்கறேன்” என பலவாறு அழ.. ஓடி வந்த ஆர்யன் அப்படியே சிலையென நின்றான்.

“இவான் சுவாசிக்கல.. அசையாம இருக்கான்” என இவானை மடியில் போட்டுக்கொண்டு ருஹானா அழ அவர்களை சுற்றி வந்தவன், இவானை கலக்கத்துடன் பார்த்தான். அவன் கைமுஷ்டிகள் இறுகி இரத்த நிறம் கொண்டன. முகம் கல்லென உறைந்தது. பழைய இழப்புகள் மனதில் வலம் வந்தன.

“ஏன் இப்படி நடந்தது? என் அன்பே! என் கண்ணே!” என அழுதுகொண்டே ருஹானா திக்கி திணறி, “அல்லாஹ்! என் உயிரை எடுத்துக்கங்க.. என்னை மன்னிச்சிடு, இவான். சித்தி உன்ன காப்பாத்த தவறிட்டேன். என்னை மன்னிச்சிடு” என இவானை இறுக அணைத்துக் கொண்டு கதறினாள்.

அதை கேட்டதும் சுயநினைவுக்கு வந்த ஆர்யன், கோபத்துடன் இடுப்பில் செருகியிருந்த துப்பாக்கியை எடுத்து கீழே அமர்ந்திருந்த அவள் உச்சந்தலையில் வைத்தான். 

          

சுடும் நெருப்பிலிருந்து மீட்டவள்

கடும் குளிரில் மயங்கிய சிறுவனை

கண்டு விபரீதமாய் அஞ்சுகிறாள்….

பேரிழப்பை ஏற்க துணியாத இருவருக்கும்

பொக்கிஷத்தை இழந்த பரிதவிப்பு..!

கொல்ல துடிக்கும் வெறியோடும்,

மிச்சமிருக்கும் துச்ச உயிரும்

போகட்டும் என்ற எண்ணமோடும்,

இளங்குருத்து மீது அன்பு வைத்த இருவர்..!

(தொடரும்)

Advertisement