Advertisement

நேரம் ஒடியது..

இவான் அம்மா போன் அடித்த சத்தத்தில் எழுந்து மிகவும் கடினப்பட்டு தலையை தூக்கி கண்களை திறந்து போனை தேடினாள்..

“ஹலோ… என்ன..?”

“எங்க இருக்க..?“

“என் முன்னால வா..”

“நான் கேக்குறேன்ல.. எங்க இருக்க.. சொல்லு“

“நீ என் வாழ்க்கையே அழிச்சிட்ட..“

“எப்படி உன்னால எனக்கு இப்படி செய்ய முடிஞ்சது..”

“என் எதிரே வா”

அந்த பங்களாவே அதிர அலறினாள்

  • – – – – – – – – –

நவீன அலுவலகம்  அது..

கடுவன் ஆர்யன் கணினி முன்னே…

ஒரு கோப்பில் கையொப்பமிட்டு முன்னே நின்ற பெண்ணிடம் கொடுத்து அனுப்பினான்..

அவன் பக்கத்தில் நின்ற செகரட்டரி ரஷீத், “நம்ம போட்டி கம்பெனி யாசின்ஸ் ஏலத்தில இருந்து விலகிட்டாங்க, ஆர்யன்.. நீங்க உள்ள நுழைஞ்சது தான் காரணமா இருக்கும்” என்று சொல்ல…

ஆர்யனின் உணர்ச்சியற்ற முகத்தில் ஒரு அசைவு மட்டும்…

“இந்த முறை ஒரு குழப்பமும் இருக்க கூடாது.. டெலிவரிலாம் நீயே கூட இருந்து பார்த்துக்க” ஆர்யன் ஆணையிட… அப்போது மொபைல் அழைக்க… கரீமா அண்ணி எனும் பெயர் மேலே வர… கோபத்துடன் அழைப்பை ஏற்றவன்..

“என்ன அவ்வளவு முக்கியமான விஷயம்?“

“என்ன.. ஆக்சிடென்டா?”

“எந்த ஹாஸ்பிடல்?“

ஆர்யன் உடனே கார் எடுத்து பறந்தான்..

  • – – – – – – – – – – –

ருஹானா வீட்டை சுத்தப்படுத்தி கொண்டிருக்கிறாள்.. அக்கா நினைவில் செய்த பண்டத்தை ஒரு பெருமூச்சுடன் பார்த்தவள், அதை குளிர் சாதன பெட்டியில் வைக்க கையில் எடுத்தாள்… அப்போது அவள் போன் அழைக்க.. மறு கையில் எடுத்து தலை சாய்த்து காதில் வைத்தாள்..

“ஹலோ..”

“ஆமா.. நான் தான்..”

“யெஸ், அவள் தங்கை நான்..”

“என்னா….” என்று அலறியவள் கையிலிருந்த தட்டு கீழே விழுந்து நான்காக உடைந்தது… பலகாரம் சிதறியது… ‘அக்கா!’ என கத்தினாள்…

  • – – – – – – – – – –

மருத்துவமனை…

ஆர்யன் பெரிய காரிலிருந்து இறங்கி வலது பக்க வாயிலில் வேகமாக நுழைய…

ருஹானா டாக்சியில் இருந்து இறங்கி ஓடி வந்தவள் இடது பக்க வாசல் வழி சென்று ரிசப்ஷனில் “தஸ்லீம் அர்ஸ்லான்” என தன் அக்காவின் பேரை சொல்லி விசாரித்தாள்… ஆபரேஷன் செய்ய தயாராகி கொண்டிருப்பதாக தகவல் பெற்று ஆபரேஷன் தியேட்டர் நோக்கி ஓடினாள்…

  • – – – – – – – – –

வேகமாக வந்த ஆர்யனை அவன் அண்ணன் அம்ஜத் ஓடி வந்து அணைத்தவாறே சொன்னான் “திடீர்னு அவ நிலைமை மோசமாயிடுச்சி.. நாங்க ஒடஞ்சி போயிட்டோம்… எல்லாரோட அமைதி, நிம்மதி கெட்டு போச்சி” என பதற… “ஓகே அண்ணா.. அமைதியா இருங்க” என ஆறுதல் படுத்திய ஆர்யன், தனது அண்ணன் மனைவி கரீமாவிடம் கேட்டான்.. “என்ன நடந்தது?”

“தஸ்லீம் மாடியிலிருந்து விழுந்து விட்டாள்..  ம்.. வந்து..  அப்படிதான் எனக்கு சொன்னாங்க.. நான் பார்க்கல.. குக் சாரா தான் அவ கீழே கிடந்தது பார்த்து சொன்னது.. மாத்திரையின் தாக்கம்.. அதிக மாத்திரை எடுத்துக் கொண்டாள் போல.. பிசாசு மாதிரி இருந்தாள்.. தன் கட்டுப்பாட்டில் அவள் இல்லாமல் இப்படி நடந்து விட்டது.. அவ காதுலாம் ரத்தம்… வேலைக்காரங்க எனக்கு சொல்ல நான் ஆம்புலன்ஸை வர வைத்தேன்“ என கரீமா சொல்ல….

 அவள் கணவன் அம்ஜத் கண்ணீருடன் தடுமாற்றத்துடன் நடந்து கொண்டிருந்தவன், மனைவி சொல்ல சொல்ல ஒவ்வொரு வாக்கியத்துக்கும் “ஆமா.. ஆமா.. இவ தான் வர வச்சா” என பின்பாட்டு பாடினான்..

“ஒன்னும் ஆகாது அண்ணா” என ஆர்யன் அவனுக்கு தைரியம் சொன்னான்.. திரும்பி கரீமாவிடம் பதட்டத்தோடு கேட்டான்.. “இவான் எங்கே.. அவன் அம்மாவை பார்த்தானா?”

“இல்லல்ல.. நல்லவேளை அவன் ரூமில் இருந்தான்.. அவனுக்கு ஏதும் தெரியாது…” என்ற கரீமாவின் பதிலில் நிம்மதி பெருமூச்சு விட்டான், ஆர்யன்…

ஆபரேஷன் தியேட்டர் வாசலில் தனது தமக்கையை பார்த்து அதிர்ந்து நின்றுவிட்டாள், ருஹானா..

தலையில் கட்டுப்போட்ட இடத்தில் ரத்த கசிவு தெரிந்தது.. மூச்சிரைக்க கண்ணீருடன் ‘ருஹானா’ என அழைக்க

“பயப்படாதேக்கா..  உனக்கு ஒன்னும் ஆகாது.. நான் வந்துட்டேன்..”

“அப்பா வரலையா.. என் மேல கோபமா இருப்பார்..  நான் அவர் பேச்சை கேட்கல.. அவர் சொன்னதுலாம் சரிதான்..“

“இதெல்லாம் இப்ப வேணாக்கா… நீ குணமாகி வா.. அப்பாவிடம்  உன்னை நான் கூட்டிட்டு போறேன்..“

“இவான்?” என மூச்சிரைக்க..

“ஆமா.. அவனும் தான்.. அவனோடு நாம மூணு பேரும் போகலாம், அப்பாவை பார்க்க.. நம்ம வீட்டுக்கு போய் சந்தோஷமா இருக்கலாம்” என ஆனந்த பிம்பத்தை தமக்கைக்கு காட்ட விழைய..

அக்கா தஸ்லீம் நம்பிக்கை இன்றி கண்ணீரை வழிய விட்டவள், தொண்டை அடைக்க… “இவான் உன் பொறுப்பு.. அவனை விட்டு விடாதே.. என் வாரிசை உன்னிடம் ஒப்படைக்கிறேன்…. அவனை அர்ஸ்லான் மேன்சனில் அவங்க கிட்ட விட்டுடாதே“  திக்கியபடி பேசினாள்..

நர்ஸ்கள் அவசரமாக ஸ்டெச்சரை தள்ளி கொண்டு செல்ல..

“அக்கா! சீக்கிரம் சரியாகி வா!” என ருஹானா அழுகை குரலில் உரைக்க ஆபரேஷன் தியேட்டர் கதவு மூடியது..

  • – – – – – – –

ஆபரேஷன் தியேட்டர் திறந்து டாக்டர் வெளியே வந்து மெதுவாக சொன்னார் “எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்தோம்.. ஆனா துரதிர்ஷ்டவசமா அவங்களை காப்பாற்ற முடியல.. ஆழ்ந்த அனுதாபங்கள்..“

கரீமா பேயறைந்தது போல நிற்க.. அண்ணன் அம்ஜத் கதறி அழ.. தம்பி ஆர்யனின் இறுகிய முகத்தில் ஒன்றும் அனுமானிக்க முடியவில்லை

அந்த பக்கம் நர்ஸ் சொன்னதை கேட்டு கீழே மடங்கி அழுத ருஹானாவிடம் நர்ஸ் ஒரு சிறிய கவரை கொடுத்தாள்..

அதில் லாக்கெட்டுடன் கூடிய சிறிய சங்கிலி இருந்தது.

ருஹானா அந்த லாக்கெட்டை திறந்து பார்க்க… அதில்  போட்டோவில் அழகாக சிரித்தான், இவான்…  அதை பார்த்த ருஹானா “இவான்….!” என கத்தி கதறினாள்.

  • – – – – – – – – – –

இவான் சூப்பை எடுத்து கொண்டு வழக்கம் போல அம்மாவின் அறைக்கு சென்றவன், படுக்கை காலியாக இருக்கவும் சூப்பை வழக்கம்போல மேசையில் வைத்து விட்டு தாயின் படுக்கையில் படுத்துக் கொண்டான்…

  • – – – – – – – – – – – –

மயான பூமி..

துயரே உருவாய் மாறிய அப்பாவின் தோள் தாங்கி ருஹானா அழுது கொண்டு இருக்க, கழுத்தில் அக்கா கொடுத்த சங்கிலி, லாக்கெட் கையில்.. பக்கத்தில் ஒரு வயதான மாதுவும், அவர் மகன் தன்வீரும், பக்கத்து வீட்டு மிஷாலும் அவர்களுக்கு துணையாக நின்றிருந்தார்கள்.

தூரத்தில் கரீமாவிடம் அவர்கள் உறவினர்கள் துக்கம் விசாரித்தவண்ணம் இருந்தார்கள்..

“பாவம் சின்ன பையன்.. அப்பாவை இழந்தவன் இப்போ அம்மாவையும் பறி கொடுத்துட்டான்”

“அவனுக்கு இது தெரியுமா?”

“என்ன வயது அவனுக்கு?”

“ஐந்து வயசு பையன்ட்ட இதெல்லாம் எப்படி சொல்வாங்க?”

சரசரவென்ற பேசும் அந்த கூட்டத்தில் இருந்து விலகிய கரீமா, தள்ளி நின்று அழுது கொண்டிருக்கும் ருஹானாவிடம் சென்று “நான் என்ன சொல்ல.. தாங்க முடியாத இழப்பு..  உயிரோடு இருந்தபோதாவது அவ அப்பா அவளை வந்து பார்த்துருக்கலாம்.. ஆழ்ந்த அனுதாபங்கள்“ என்று சம்பிரதாய பேச்சு பேசி அகன்றாள்..

ருஹானா தலை அசைத்தது தவிர ஒன்றும் பேச இயலாமல் நின்றாள்..

ருஹானாவை வயதான மாது பர்வீன் தேற்ற முயன்றார் “மகளே! உன்னை நீயே தான் வெளிய கொண்டு வர வேண்டும்.. அப்பாவுக்கும் உடல்நிலை சரியில்லை.. அவருக்கு நீ மட்டும் தானே ஆதரவு”..

தலை ஆட்டிய ருஹானா நடந்து சென்று கல்லறையில் மேல் சரிந்து அழுதாள் “அக்கா! இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டு பிரிந்தாயே”

அவள் அப்பா அருகே வந்தவர், கல்லறை மேல் கவிழ்ந்து உடைந்து அழுதார்.. “அன்பு தஸ்லீம்! நான் உன்னை மன்னித்து விட்டேன் மகளே .. நீயும் என்னை மன்னித்து விடும்மா… உன் நல்லதுக்கு தானே சொன்னேன் மகளே… உன் சந்தோஷத்திற்காக எதையும் செய்வேனே… என் கிட்ட பேசாம போயிட்டியே”

  • – – – – – –

அர்ஸ்லான் மேன்சனின் வெளியே தோட்டத்தில் ஆங்காங்கே உறவினர்கள் குழுமி இருந்தனர்…

ஆர்யன் தன் செகரட்டரி ரஷீத்திடம் விசாரித்து கொண்டு இருந்தான், “அங்கே மயானத்தில் எல்லாம் ஒழுங்காக நடந்ததா…?“

“ஆம்.. எல்லாம் நமது கட்டுப்பாட்டில் தான்… நீங்களும் வந்திருந்தால் முறையாக இருந்திருக்கும்” என ரஷீத் சொல்ல ஆர்யனிடமிருந்து ஒரு அனல் வீசும் பார்வையை பெற்று கொண்டவன்..

“ஆமா.. ஆமா.. மயானம் உங்களுக்கு சென்சிடிவ் இடமாச்சே” என சமாளித்தான்..

அந்நேரம் ஆர்யனிடம் உறவு மாது ஒருவர் துக்கம் விசாரிக்க ஒரு  தலையாட்டல் மட்டுமே, ஆர்யனிடமிருந்து..

பின் திரும்பி பார்த்தவன் கண்களுக்கு, கண்ணாடி ஜன்னல் வழியாக திரையை விலக்கி பார்த்து கொண்டிருந்த இவான் தெரிந்தான்..

அவனை பார்த்து தலையசைத்த ஆர்யனிடம் ரஷீத் கேட்டான்,

“இவான் எப்படி?”

“ஏன்! அவனுக்கு என்ன?”

“அக்ரம் அண்ணா இறந்தபின்னே… இவான்க்கு இப்போ தாயும் இல்லயே?”

“இந்த உலகத்தில் அம்மா இல்லாத குழந்தை இவான் மட்டும் இல்லை.. அவனை நான் பார்த்துக்குவேன்.. அவன் தான் என் அண்ணாவோட வாரிசு, சொத்து!”

அப்போது கரீமா அருகே வர.. ஆர்யன் அவளிடம் “அம்ஜத் அண்ணா எங்கே?” என விசாரித்தான்..

“பின்பக்கம் தோட்டத்துல தன்னோட செடி கொடிகளோட இருக்கார்… இங்க நிறைய கூட்டமா இருக்குல”

சரி என அவளுக்கு தலையை ஆட்டிய ஆர்யன் “ரஷீத்! வந்தவங்களை கவனி” என உள்ளே சென்றான்…

உள்ளே சமையலறையில் இவான் விளையாடி கொண்டிருக்க .. வேலைக்கார சீருடை அணிந்த அழகு யுவதி நஸ்ரியா, தலைமை வேலைக்கார மாது சாராவிடம் கேட்டாள், “இன்னும் எத்தனை பேர் வருவாங்க, பெரியம்மா?… எனக்கு வேலை செய்துசெய்து கால் வலிக்குது” என புலம்ப, அவளை திரும்பி பார்த்து முறைத்தார், சாரா…

இதை கேட்டு கொண்டு இருந்த இவான், “இவங்கல்லாம் யாரு.. ஏன் இங்க வர்றாங்க”

தலைமை மாது சாரா சோகத்துடன் “உங்க சித்தப்பா கூட வேலை செய்யறவங்க, மாஸ்டர்… ஒரு மீட்டிங்க்காக வந்துருக்காங்க”

“அம்மா ஏன் ஹாஸ்பிடல்ல இருந்து இன்னும் வரல?… எப்பவும் சீக்கிரம் வந்துடுவாங்களே… ஏன் இந்த முறை லேட்?”

அந்த மாது  கண்ணீரை மறைக்க திரும்பி கொண்டார்.. இவானை பார்த்து கொள்ளும் நானி அங்கே வந்தவள், ”வா இவான்.. பால் குடிக்கலாம்..” என்று அழைத்து சென்றாள்…

சின்ன பெண் நஸ்ரியா, “ஏற்கனவே அவன் அம்மா இறந்தது போல தானே இருந்தாங்க…. ஆனால் மாஸ்டர்…“ என ஏதோ சொல்ல தொடங்க… “போதும் நிறுத்து.. அல்லாஹ் எனக்கு பொறுமையை தாங்க“, என மாது சாரா சத்தமிட…

“நான் உங்க சொந்தக்கார பொண்ணா, எதிரியானு தெரியல…. இந்த வீட்ல பேசக்கூட தடை” என அதற்கு அந்த இளங்கன்று திருப்பி பேச… அவளது பெரியம்மா சாரா “ஆமா.. அப்படிதான் எதுவும் பேசாதே.. ஜாஃபர் ஊர்ல இருந்து வந்தா தான் நீ அடங்குவ” என கோபமாக..  நஸ்ரியா கழுத்தை வெட்டிக் கொண்டு சென்றாள்….

Advertisement