Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 9

அர்ஸ்லான் மாளிகையின் பின்புறம் சரக்கு வண்டி வந்து பொருட்களை இறக்கி கொண்டிருந்தது. வண்டியிலிருந்து இறங்கும் பொருட்களை சாரா மேற்பார்வை செய்து நின்றிருந்தார். அறுந்த செருப்பை காலில் மாட்டிக்கொண்டால் நடக்கும் சாய்ந்த நடை போல விசுக் விசுக் என அங்கே வந்த கரீமா, “சாரா! மேனேஜர் ஜாஃபர் இல்லாததால இந்த வேலையும் உங்களுக்கு வந்துடுச்சா? ஆர்யன் பார்த்தா திட்ட போறான். உணவு தயாரா?” என பயங்காட்டி சாராவை உள்ளே அனுப்பி வைத்தாள்.

தோட்டத்திற்கு வந்த கரீமா, “என்ன அழகு பையா! சித்தி கூட விளையாடுறீங்களா? குளுருதே! நீ குல்லா போடலையா?” என வினவ.. ருஹானா தான் சென்று எடுத்து வருவதாக சொல்லி உள்ளே சென்றாள். “ஒளிஞ்சி விளையாடுறீங்களா?.. நல்லது.. மிக நல்லது.. இவான்! நீ இப்போ எங்க மறைய போறே?” என கேட்டாள். அவன் தெரியவில்லை என தோளை குலுக்கியதும், “ம்.. நல்ல இடமா தேடனுமே! சித்தி கண்டுபிடிக்கக் கூடாதே! எங்க ஒளியலாம்? எங்க?” என யோசிப்பது போல நடித்தாள்.

இவானும் யோசிக்க, “ஆஹா! இது நல்ல இடம்! பின்னாடி ஒரு டிரக் நிக்குது. அதுல போய் மறைஞ்சிகிட்டினா உன் சித்தியால கண்டுபிடிக்கவே முடியாது” என பாதகி கரீமா பிஞ்சு குழந்தையை அனுப்பி வைத்தாள். கெட்ட நேரத்தில் மேலும் கொடுமையாய் சாதாரண டிரக் வண்டி வெளிய சென்று, இறைச்சி கொண்டு வரும் குளிர்சாதன வண்டி வந்து அந்த இடத்தில் நின்றது. 

இவான் அந்த வண்டியின் பின்னே இருந்த சிறிய ஏணியில் ஏறி, உள்ளே தவழ்ந்து சென்று ஒரு பெட்டியின் பின் மறைந்து கொண்டு, சித்தியின் வருகைக்காக எட்டி பார்த்தான். கதவருகே சத்தம் கேட்கவும் ‘சித்திதான் கண்டுபிடிக்க வருகிறாள்’ என எண்ணி உள்ளே தள்ளி உட்கார்ந்து கொண்டான். வண்டியின் கதவை பூட்டி தாள் போட்ட டிரைவர் வண்டியை கிளப்பி சென்றான்.

இவான் என கூப்பிட்டுக்கொண்டே ருஹானா தோட்டத்திற்கு வந்தாள். அவள் கையில் குளிருக்கு அணியும் இவானின் கம்பளி தொப்பி இருந்தது. “இவான்! இதை முதல்ல போட்டுக்கோ. குளிரா இருக்கு” என சத்தமாக அழைத்தாள். ஒன்றும் பதில் வராமல் போகவே, அவனை அழைத்தப்படியே அந்த பகுதி முழுதும் சுற்றி வந்தாள். “இவான் எங்க இருக்கே? வெளிய வா.. ஆட்டம் முடிஞ்சது. இவான் வா செல்லம்” என இரைந்து கத்தியவள் கண்களில் நீர்.

இவானை கூப்பிட்டுக்கொண்டே திரும்பியவள், அவள் அருகே ஆர்யன் வந்ததை கண்டு திடுக்கிட்டாள். “உன் நேரம் அவ்வளவு தான். இவான் எங்கே?” என அவன் கடுமையாக கேட்க அவள் விழித்தாள். “உன்னை தான் கேட்கறேன். இவான் எங்க?” மீண்டும் ஆர்யன் அழுத்தி கேட்க.. ருஹானா “இல்ல!” என ஒற்றை சொல் சொன்னாள். “என்னது? இல்லையா?” என அவளை நெருங்கி கோபமாய் கேட்க, அவள் தலை குனிந்துக் கொண்டாள். 

வண்டியினுள் இவானுக்கு குளிர ஆரம்பித்தது. உள்ளங்கைகளில் மாறி மாறி ஊதிக்கொண்டவன், வண்டியை தட்டி, “டிரைவர் அங்கிள்! நான் உள்ளே இருக்கேன். கதவு திறங்க” என கத்தி சொன்னான்.

பாதுகாவலர்களும் வீட்டின் நாலாபுறமும் புருனோவுடன் “இவான்! இவான்!” என்று தேட.. சாராவும், நஸ்ரியாவும் ஒருபுறம் தேட.. ருஹானா அழுகையுடன் சுற்றி அலைந்தாள். அம்ஜத் அதிர்ச்சியுடன், “கரீமா! எங்க போனான் குழந்தை? மாயமா எப்படி மறைஞ்சான்?” என கேட்க.. நடிப்பரசி கரீமாவும், “எனக்கு தெரியல அம்ஜத், எனக்கு தெரியலயே! தோட்டத்துல எங்க தான் காணாம போக முடியும்? எனக்கு புரியலயே” என உருகினாள்.

“இவான்! அம்ஜத் பெரியப்பா வந்துருக்கேன். வெளிய வா. நாம விளையாடலாம். இவான் வா” என அம்ஜத் அழைத்துக்கொண்டே செல்ல, இவான் என அழும் ருஹானாவை கரீமா வேடிக்கை பார்த்தாள். அவள் மட்டுமல்ல.. ஆர்யனும் ருஹானாவைத் தான் வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தான். 

‘இவான் இவான்’ என தேம்பும் ருஹானா அருகே தன் வேட்டைநாயுடன் வந்தவன், “எங்கே உன் உரிமை? எங்கே இவான்?” என நெருங்க.. புருனோ ஆக்ரோஷமாக குரைக்கவும் பின்னால் நகர்ந்தவள் கீழே விழுந்தாள். “எனக்கு தெரியாது, எனக்கு தெரியாது” என பயத்துடன் சொன்னாள். ஆர்யன் பின்னே ரஷீத் நிற்க, சற்று தள்ளி அம்ஜத், கரீமா, சாரா, நஸ்ரியா இங்கே நடப்பதை பார்த்துக்கொண்டு இருந்தனர்.

“ஆரம்பத்துல இருந்து இங்க நடந்ததை சொல்லு. எல்லாத்தையும் விரிவா சொல்லு” என புருனோ குரைப்பை விட அதிக சத்தமாக ஆர்யன் கேட்டான். கீழே சப்பணம் இட்டு அமர்ந்தவள், கையில் இவான் குல்லாவை பிடித்துக்கொண்டு, தலையை தூக்கி ஆர்யனை பார்த்து அழுதபடி சொன்னாள். “தோட்டத்துல விளையாடிட்டு இருந்தோம். குளிரா இருந்துச்சி. அவனுக்கு இந்த தொப்பிய எடுக்க உள்ள போனேன். எடுத்துட்டு திரும்பி வந்தா இவானை காணோம்”

கண்ணீர் விட்டபடி ஆர்யன் முன் மண்டியிட்டவள், “தயவுசெய்து இவானை கண்டுபிடிங்க..! அவனுக்கு எதாவது கெட்டதா நடந்தா, நான் உயிரோட இருக்க மாட்டேன்” என விக்கி அழுதாள். ரஷீத் பாவமாய் அவளை பார்க்க.. அம்ஜத்க்கு அழுகை வந்தது. ஆர்யன் ஒன்றும் புரியாமல் நின்றான்.

அப்போது அங்கே வந்த பாதுகாவலன் “சார்! நாங்க எல்லா இடமும் தேடி பார்த்துட்டோம். இவானை கண்டுபிடிக்க முடியல” என்று சொல்ல.. புருனோவின் சங்கிலியை ரஷீத்திடம் கொடுத்த ஆர்யன், காவலனை அறைந்து தள்ளினான். மண்டியிட்டபடி இருந்த ருஹானா இறுக கண்களை மூடிக்கொள்ள, அவன் ருஹானாவின் பின்னால் போய் விழுந்தான். “அது எப்படி கண்டுபிடிக்காம போகும்? எல்லா மூலைமுடுக்கெல்லாம் தேடுங்க!” என இரைந்தான்.

“அமைதியா இரு, ஆர்யன்! கோவப்படாதே!” என இடைபுகுந்த கரீமாவை எரிப்பது போல் பார்த்த ஆர்யன், நகர்ந்து வந்து தேம்பி அழும் ருஹானாவின் முன் நின்று அவளை பார்த்தான். அவனின் எரிமலையாய் பொங்கும் கோபப்பார்வை கண்டு கரீமாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது. “துவா செய்துக்கோ! இவானுக்கு ஒன்னும் ஆகக்கூடாதுன்னு துவா செய்! அப்படி எதாவது நடந்தா நான் உன்னை கொன்னுடுவேன்!” என இரைந்தான்.

“எழுந்திரு!” என ஆர்யன் கட்டளையிட, ருஹானா தயங்க.. கரீமா தன் கையை நீட்டி “பிடித்துக்கொள்” என முன்னால் வந்தாள். “வேணாம்! அவளே எழட்டும்” என ஆர்யன் தடுக்க.. ருஹானா ஒரு கையை தரையில் ஊனி தடுமாறியபடி எழுந்து நின்றாள். சாரா வாயை பொத்தியபடி அழ, நஸ்ரியா பரிதாபமாக ருஹானாவை பார்க்க.. கரீமா கண்ணில் சிரிப்புடன் அங்கே நடப்பதை பார்த்தாள். ருஹானா அவனை பார்த்தபடி “நான்…“ என்று தொடங்க.. “நீ?.. நீ உயிரோட இருக்க மாட்டே, இவானுக்கு ஏதாவது நடந்திச்சினா..” என்று ஆர்யன் முடித்தான். அதுவரையில் அழுது கொண்டு இருந்தவள், அழுகையை மென்று  முழுங்கி தலை நிமிர்த்தி விரக்தியுடன் கேட்டாள்.

“நான் அதுக்கு கவலைப்படுவேனா?”

“என்ன சொன்னே?” முகம் சுருக்கி ஆர்யன் விநோதமாய் பார்க்க..      

“நீங்க என்ன நினைச்சீங்க, என் உயிரைப் பற்றி கவலைப்படுவேன்னா?” என வெறுப்பாக கேட்டாள்.

ஆர்யன் திகைத்து பார்க்க, “இவானுக்கு தப்பா நடந்திட்டா, உடனே நான் செத்துடுவேன்” என்று ஆவேசமாக சத்தமிட்டாள்.

கண்ணோடு கண்ணாக அவளை சில வினாடிகள் நோக்கியவன், “அப்படினா ரெண்டு பேருக்காக துவா செய்!” என கூறி விருட்டென்று அகன்றான்.

மற்ற அனைவரும் அப்படியே உறைந்து நிற்க, கரீமாக்கு ஒரே குதூகலமானது. 

தேடுதல் வேட்டை தொடர்ந்தது.

வாசலில் நிலைகொள்ளாமல் ஆர்யன் நடந்து கொண்டிருக்க, தூணோரம் ருஹானா ஏங்கி அழுது கொண்டிருந்தாள். உள்ளே இருந்து இவர்களை நோட்டமிட்டுக் கொண்டே வெளியே வந்த கரீமா, கைக்கடிகாரத்தை பார்த்தப்படி, “இவ்வளவு நேரமாச்சே! சின்ன பையனாச்சே! ஒளிஞ்சிருந்தாலும் இந்நேரம் வெளிய வந்துருக்கணுமே!” என்று தன் நாடகத்தை துவங்கினாள்.

ருஹானா அதை கேட்டு ஒரு முடிவுக்கு வந்தவள், “இல்ல! இதுக்கு மேல என்னால இங்க சும்மா நிற்க முடியாது!” என படியிறங்கி நடக்க.. “எங்க போறே?” என கரீமா கேட்டாள். “தெருத்தெருவா போய் இவானை தேட போறேன்” என சொன்ன ருஹானா வேகமா நடக்க, ஆர்யன், “நீ எங்கயும் போக முடியாது. இவான் கிடைக்கலனா உன்ன கடவுள் கூட காப்பாத்த முடியாது” என மிரட்டினான்.

“அச்சோ ஆர்யன்! அந்த பொண்ணு நிலமைய பாரு” என கரீமா முதலை கரிசனத்தை காட்ட.. அந்த நேரத்தில், ரஷீத் உள்ளே இருந்து வேகமாக வந்து, “ஆர்யன்! இவானை கண்டுபிடிச்சாச்சி” என தன் கையில் இருந்த சிறிய மடிகணினியை காட்டினான். “இவான் எங்க இருக்கான்?” என ருஹானா படபடப்புடன் கேட்க.. “அல்லாஹ்க்கு நன்றி” என்று கரீமா வேஷம் போட்டாள். ரஷீத் கணினியை நீட்டி சொன்னான். “செக்யூரிட்டி கேமரால பதிவாகிருக்கு. வீட்டுக்கு வந்த இந்த டிரக்ல ஏறியிருக்கான். ஆனா கெட்ட விஷயம் என்னன்னா அது ப்ரீசர் வண்டி!” 

ஆர்யன் பதட்டத்துடன் கணினியை வேகமாக வாங்கி பார்க்க.. ருஹானா பதைப்புடன் மூச்சை இழுத்துப் பிடிக்க.. கரீமாவும் அதிர்ச்சியுடன் கையை பிசைந்தாள். இவானை சாதாரண வண்டியை நோக்கி தான் அனுப்பியதை நினைத்து பார்த்தாள். 

ஆர்யன் துரிதமாக செயலில் இறங்கினான். “ரஷீத்! அந்த உணவு கம்பனிக்கு கேட்டு டிரைவர் போன் நம்பர் வாங்கு!” ரஷீத் உள்ளே ஓட.. கரீமா, “அச்சோ என் செல்லம்! என்ன செய்திட்டே நீ?” என பொய்யாய் நடிக்க.. பக்கத்தில் இருந்த ருஹானா பாசத்தில் துடித்தாள்.

“நான் தகவல் சொல்றேன்” என்று சொல்லி ஆர்யன் விரைந்து காரில் ஏறினான். ருஹானா ஒரே விநாடி யோசித்தவள், ஓடிச்சென்று அவன் காரில் முன்சீட்டில் வேகமாக அமர்ந்தாள். சீட்பெல்ட் போட்டுக்கொண்டிருந்த ஆர்யன் அவளைப் பார்த்து திகைத்து “கீழ இறங்கு” என கோபமாக சொன்னான். ருஹானா அதை காதில் வாங்காமல் அவளும் சீட்பெல்ட் போட்டாள். 

“நான் உன்னை இறங்க சொன்னேன்” பலமாக அவன் சொல்ல.. “இவானை கண்டுபிடிக்கிறவரை செத்தாலும் நான் இந்த காரை விட்டு இறங்க மாட்டேன்” என பல்லை கடித்துக்கொண்டு அவள் பதில் சொன்னாள். ஆர்யன், “வேகமா போகணும். அதான் உன்ன சும்மா விடறேன்” என்று சொன்னபடி காரை எடுத்தான்.

“கரீமா! இவான் கிடைச்சிட்டான், கரீமா. இனி ஒன்னும் ஆபத்து கிடையாது, இல்லையா?” என்று மகிழ்ச்சியோடு அம்ஜத் வர.. “அவன் டிரக் பின்னாடி இருக்கான். அந்த டிரக்கை எங்கேனு தேடுறது?” என கரீமா எதிர்மறையாக பேச… “அது சுலபம்தான். அவன் சித்தப்பா எப்படியும் கண்டுபிடிச்சிடுவான்!” என்று நல்லவிதமாக சொன்ன அம்ஜத் திரும்ப குழப்பத்துடன் கேட்டான். “இவான் எப்படி அந்த வண்டில ஏறினான்?”. கரீமா முகம் விகாரமானது. “எனக்கு எப்படி தெரியும்.? நானே கொதிச்சிட்டு இருக்கேன்!” என்று சொல்லி அவள் உள்ளே செல்ல.. அம்ஜத் யோசனையோடு பார்த்துக்கொண்டு நின்றான்.

——–

ஒரு கூட்டமே வலை போட்டு தேடிக்கொண்டிருந்த அந்த டிரக் வண்டி, மேலும் ஒரு கடையில் சரக்கு இறக்கிவிட்டு, அடுத்த இடம் நோக்கி சென்று கொண்டிருந்தது. தெய்வாதீனமாக அந்த கடையில் சரக்கு இறக்கிவிட்டு டிரைவர் சரியாக தாள் போடாத காரணத்தால், வண்டி செல்ல செல்ல அதன் அதிர்வில் கதவு தானாக திறந்து கொண்டது. வெளிக்காற்று உள்ளே வர, அந்த வேறுபாட்டில் ஒரு பெரிய பெட்டியின் பின் மயங்கி படுத்திருந்த இவான் கண் விழித்தான்.

ஒரு காட்டுப்பகுதியில் வண்டி செல்ல.. டிரைவருக்கு அப்போது ஒரு முக்கியமான போன் வர அவன் ஓரமாக வண்டியை நிறுத்தி பேசினான். வண்டி நிற்கவும் தடுமாறி எழுந்த இவான், திறந்த கதவின் வழியே எட்டி பார்க்க.. சாலையோரம் வெட்டி அடுக்கப்பட்ட கட்டைகள் கதவருகே இருக்க.. அதன் மேல் கால் வைத்து இறங்கினான். கால் தடுமாற நழுவிப்போய் உருண்டு, ஒரு பள்ளத்தில் விழுந்தவன் திரும்ப மயங்கி போனான். சத்தம் கேட்டு பின்னால் வந்த டிரைவர் சுற்றிலும் பார்க்க, திறந்திருந்த கதவை மட்டும் கண்டான். பின் கதவை பூட்டி வண்டி எடுத்து சென்றுவிட்டான்.

——–          

காரை இலக்கின்றி செலுத்திக் கொண்டிருந்த ஆர்யன் டிரக் டிரைவர் எண்ணுக்கு அழைத்தான். இணைப்பு கிடைக்காத கோபத்தில் “அடச்சே!” என போனை அடைத்தான். பக்கத்தில் ருஹானா புலம்பியபடி பரிதவித்தாள். “எப்படி சின்ன உடம்பு குளிர் தாங்கும்? காது மறைக்கிற குல்லா கூட போடலயே.. என்ன கஷ்டம் படறானோ?”

“சீக்கிரம் கண்டுபிடிங்க” என போனில் தன் அடியாட்களை விரட்டிக்கொண்டே ஆர்யன் காரோட்ட.. ருஹானா கேள்விகள் கேட்டுக்கொண்டே வந்தாள். 

“டிரைவரை பிடிக்க முடியலனா இப்போ எங்க தான் போறோம்?”. திரும்பி அவளை முறைத்தவன் ஒன்றும் பேசாமல் திரும்பிக்கொண்டான். 

“கம்பனிக்கு போன் செய்து வீட்டு நம்பர் வாங்கலாமே!”. கோபத்துடன் பதில் வந்தது, “வாயை மூடு!”

“கம்பனியில கேளுங்க. எங்க டெலிவரி, எங்க வண்டிய விடுவான்ன்னு”. திரும்பவும் அதே பதில், “வாய மூட சொன்னேனே!”

“எங்க எங்க டெலிவரி இருக்கு, என்ன ரூட் ன்னு தயவுசெய்து கம்பெனிக்கு போன் செய்து கேளுங்க”. 

ஒன்றும் சொல்லாமல் போனை எடுத்தவன், ரஷீத்க்கு அழைத்து அவள் சொன்னதை செய்தான். வெளியே தேடிக்கொண்டே ருஹானா அலைபாய.. ஆர்யன் கவலையுடன் காரை செலுத்தினான்.  

Advertisement