Advertisement

பின் இவான் பக்கம் சென்ற கரீமா, “இவான் செல்லம்! அங்க என்ன நடந்தது?” என்று கேட்க, இவான் விளக்கினான். “ஒரே புகையா வந்துடுச்சி. கண்ணு எரிஞ்சது. மூச்சு விடவே முடியல. சித்தி அவங்க ஜாக்கெட்டை எனக்கு தந்தாங்க.. அதுல வாய மூடிக்க சொன்னாங்க. அப்புறம் கதவு கிட்ட போய் சித்தி கையால தரையை விடாம கீறினாங்க” சித்தி செய்ததை தன் பிஞ்சு கைகளால் இவான் செய்து காட்டியதை கிச்சன் வாசலில் நின்ற ஆர்யனும் மிக கூர்மையாக கவனித்தான்.  

“சித்தி கை பூரா ரத்தம். ஆனாலும் அவங்க நிறுத்தவே இல்ல. ஒரு ஓட்டை வந்திச்சி. அதுல என்னை குனிஞ்சி காத்து எடுக்க சொன்னாங்க. ஆனா அவங்க எடுக்கவே இல்லை” என இவான் கைகளாலும், முக பாவனையிலும் விவரிக்க.. சாராவின் கண்கள் பெருக்கெடுத்தது. “அல்லாஹ்க்கு நன்றி!” என அவர் சொல்ல, கரீமாவின் முகம் இறுகியது.

திக்பிரமை பிடித்து நின்ற ஆர்யன், தான் அவளை தூக்க போகும்போது கவனித்த அவள் கைக்காயங்களை நினைத்துப் பார்த்தான். அவன் கோட் பாக்கெட்டில் கைவிட்டு ருஹானாவிடமிருந்து பறித்த சங்கிலியை எடுத்தான். உள்ளங்கையில் வைத்து இவான் படத்தை பிரித்து பார்த்தான். உள்ளுக்குள் படபடவென்று ஆனது.

“நீங்க பயந்திட்டீங்களா, லிட்டில் சார்?” என சாரா கேட்க.. “இல்லியே! நான் பயப்படல. சித்தப்பாக்கு நான் உறுதி கொடுத்துருக்கேன், எப்பவும் நான் பயப்பட மாட்டேன்” என்ற இவானின் பதிலில் ஆர்யன் தலை நிமிர்ந்தது. லாக்கெட்டை இறுக்கி பற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றான்.

“மாஷா அல்லாஹ்! உங்களுக்கு எவ்வளவு நல்ல சித்தி! பாருங்க, உங்களுக்காக என்னலாம் செஞ்சிருக்காங்க..!” என சாரா நெகிழ.. “எனக்கு என் சித்தி ரொம்ப பிடிக்கும்.” என அன்பாக சொன்ன இவான் திராட்சை சாறு குடிக்க.. கரீமா கொதிப்புடன் வெளியே வந்தாள். “ஒரே நாள்ல ஹீரோ ஆகிட்டா. இவள வெளியேத்தியே ஆகணும்.” என பல்லை கடித்துக்கொண்டு கழுதையை போல கத்தியவள், ஓர் திட்டத்தையும் வகுத்துக்கொண்டாள்.

——–

கமிஷனர் வாசிம் பெரியப்பா ஹெமதுல்லாவும், பர்வீனும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். “என் பையன் தன்வீர் எப்பவும் உங்க பையனை பற்றி தான் பேசிட்டு இருக்கான். அவன் தான் சொன்னான், இஸ்கெந்தர் கெபாப் எங்க கமிஷனருக்கு பிடிக்கும்ன்னு. அதான் செய்து கொண்டு வந்தேன்” என்று பர்வீன் சொல்ல.. “ஆமா, அவனுக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு இது செய்ய தெரியாது. உங்களுக்கு தான் அதிக சிரமம். ஏற்கனவே நிறைய உதவி செஞ்சிருக்கீங்க..” என்று ஹெமதுல்லா நன்றி சொன்னார்.

“உங்களுக்கு இன்னும் உதவிக்கு ஆள் கிடைக்கலையா? நான் வேணும்னா ஏற்பாடு செய்யவா?” என்று பர்வீன் கேட்க.. “உங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன். உங்க பையன்கிட்ட கூட சொல்லிடாதீங்க. என் பழைய மாணவி ஒருத்தி, கிராமத்துல இருந்து இன்னைக்கு வந்துருக்கா. பேர் வாகிதா. ரொம்ப நல்லவ. படிச்ச பொண்ணு. பாவம் அம்மா, அப்பா இல்லாத பொண்ணு.” 

“அவ அண்ணன் முரடன். காசுக்கு ஆசைப்பட்டு அவளுக்கு பிடிக்காத இடத்துல கல்யாணம் பண்ண ஏற்பாடு செஞ்சிட்டான். அவனை அடிச்சி போட்டுட்டு நேத்து இரயில்ல கிளம்பிட்டா. எனக்கு போன் செய்து அழுதா. நான் தான் இங்க வர சொன்னேன்.”

“இப்படி விவகாரமான பொண்ணுனா என் பையன் வேணாம்னு  சொல்லிடுவான். அதான் அவளுக்கு நல்ல வேலை கிடைக்கிறவரை உதவிக்கு இருக்குற பொண்ணா இங்க இருக்கட்டும்னு முடிவு செய்து வர சொல்லிட்டேன். அவளுக்குன்னு இந்த உலகத்தில யாரும் இல்லை, என்னை தவிர” என்று கவலையாக ஒரு நீண்ட கதையை சொல்லி முடித்தார்.

“ஐயோ பாவம்! இப்படியும் பெண்கள் கஷ்டப்படறாங்க,“ என்று பர்வீனும் அவருடன் சேர்ந்து வருத்தப்பட்டவர், “நீங்க பயப்படாதீங்க.. நான் யார்க்கும் சொல்ல மாட்டேன். இங்க பாதுகாப்பா இருப்பா” என்று சொல்லியபோது, அங்கேயிருந்த சிறிய படுக்கையறையில் இருந்து ஒரு அழகிய பெண் வெளியே வந்தாள்.  

குண்டு கன்னங்களுடன் அழகிய தோற்றமுடன் இருந்த அந்த வாகிதாவை ஹெமதுல்லா, பர்வீன்க்கு அறிமுகப்படுத்தினார். வாகிதாவும் பர்வீன்க்கு சலாம் சொல்லி வணங்க, “அல்லாஹ் உனக்கு நல்வழி தரட்டும்” என பர்வீன் அவளை ஆசிர்வதித்தார்.

—–

வரவேற்பு அறையில் ஆர்யனுக்கு காபியை வைத்துவிட்டு திரும்பிய சாராவை பிடித்துக்கொண்ட கரீமா ‘தாங்கள் பேசுவதை திரும்பி  நின்றப்படி ஆர்யன் கேட்கிறான்’ என்பதை உறுதி செய்து கொண்டு ஆரம்பித்தாள். “சாரா! இவானுக்கு சத்தா சாப்பாடு கொடுக்கணும். பாவம் குழந்தை, அவன் சித்திய தேடிப்போய் இப்படி விபத்துல சிக்கிட்டான். அது எனக்கு வருத்தமா போச்சி. அந்த பொண்ணும் பாருங்க, எவ்வளவு கஷ்டம் அனுபவிச்சிட்டா.. ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தா சந்தோசப்படுவாங்க. வெளிய இதமான வெயிலோட தட்பவெப்பம் சுகமா இருக்கு, ஆர்யன்ட்ட சொல்லலாம்னு இருக்கேன். தோட்டத்துல இவானை அவன் சித்தியோட விளையாட அனுப்பலாம். இவான் உடம்புக்கும் நல்லது. சரி, நீங்க போய் வெளிய பாருங்க” என்று சாராவை அனுப்பிவிட்டு மரம் போல நிற்கும் ஆர்யனை பார்த்துவிட்டு சூழ்ச்சி புன்னகையுடன் அகன்றாள்.  

ருஹானா தன் கையைப் பற்றி இழுத்துவந்த பாதுகாவலனை உதறிக்கொண்டே வந்தவள், “இவானை பார்க்காம நான் எங்கயும் போக மாட்டேன். போய் உங்க பாஸ்ட்ட சொல்லு. அவன் என்னை கொன்னாலும் நான் போக மாட்டேன். விடு என்னை! என் கைய விடு“ என கத்தினாள். தூரத்தில் இவான் “சித்தி..!” என சிரிப்புடன் கூப்பிடவும், அவளுக்கு இன்ப சாரல் அடித்தது. “இவான்! என் உயிரே!” என புன்னகையுடன் முணுமுணுத்தாள். 

காவலன் “ஆர்யன் சார் இவான் கூட ஒரு மணி நேரம் இருக்க உங்களுக்கு அனுமதி கொடுத்துருக்கார்” என சொல்லவும், குடுகுடுவென இவானை நோக்கி ஓடினாள். “என் உயிர்!” என்று அவனை தழுவிக்கொண்டாள். அவன் முகத்தை தடவிக்கொண்டே, “அல்லாஹ்க்கு நன்றி! உன்ன காப்பாத்திட்டார். உன்ன நினைச்சி நான் கவலைப்பட்டுட்டு இருந்தேன்” என்றாள். 

காவலன் கையசைக்க தோட்டத்தில் அதுவரை இவானோடு இருந்த நானியும் விலகிச் செல்ல, காவலனும் சென்றான். இந்த சந்தோஷ சங்கமத்தை மாடியிலிருந்து ஆர்யனும் பார்த்திருந்தான். “என் இதயமே! என் செல்லம்! இரு, உன்ன நல்லா பார்க்குறேன்.. உனக்கு ஒண்ணுமில்ல தானே! எங்கயும் அடி படலல” என விடாமல் கேட்க.. இவான் பெரிய மனிதன் போல் தன் பாசமிகு சித்தியையே இளநகையுடன் பார்க்க.. மேலிருந்து ஆர்யனும் உற்று நோக்கினான்.

“என் வாழ்க்கையே” என அவள் ஆனந்த கண்ணீருடன் இவான் உள்ளங்கையில் முத்தமிட, ஆர்யனின் நெறித்த புருவங்கள் விரிந்தன. “சித்தி! இன்னும் உங்களுக்கு உடம்பு சரியாகலயா?” இவான் கேட்க.. “இல்ல செல்லம். நான் நல்லா இருக்கேன். உன்னை பார்த்ததும் எல்லாம் சரியா போச்சி..” என்று அவனை அணைத்துக்கொண்டு, “அல்லாஹ்க்கு நன்றி! இவனை சந்திக்க வைத்ததற்கு நன்றி!” என்று நெகிழ்ந்தவள் பார்வை மேலே சென்றது. 

இவானை அணைத்துக்கொண்டே அவள் தன்னை பார்க்கவும் விரைப்பானவன், அவள் புன்சிரிப்புடன் நன்றி சொல்லும் விதமாய் அவனை பார்த்து தலையாட்டவும் திகைத்துப் போனான். முகம் சுருக்கி தன் உள்ளம் மறைத்து, திரும்பி உள்ளே நடந்து விட்டான். 

கடும் கோபம் மூடு திரையாக ….

மழலை உயிர்காத்த கதை கேட்டு

கடினத்திரை சற்று அசைந்திட …..

நன்றி நவிலலாய் சில மணித்துளிகள்

இருவருக்கும் பரிசாய் மனமுவுந்து தந்திட..

ஆனந்தமாய் அவளும் அணைத்திட

திரை இன்னும் அசைகிறது..!

நகையுடன் நன்றிக்கோர் நன்றி 

மான் விழிமொழி கடத்திட ….

திரை விலகிடுமோ கொஞ்சம் ..? 

“உங்க கை மோசமா இருக்கே, சித்தி!” இவான் வருத்தப்பட.. ”இல்லயே அன்பே! குணமாகிடுச்சே!” கண்ணீரை துடைத்தப்படி ருஹானா சொன்னாள். “இன்னும் வலிக்குதா?” இவான் இன்னும் அக்கறையாக கேட்டான். “எனக்கு வலிக்கல.. நீ கவலைப்படாதே! வா, நமக்கு கிடைச்ச நேரத்தை நாம சந்தோசமா கொண்டாடலாம். சரியா?” என ருஹானா அவன் மனதை வேறு திசையில் திருப்ப.. இவானும் சரியென்றான்.

“என்ன செய்யலாம்? உனக்கு எது பிடிக்கும்?” என்று அவன் முடியை அன்பாக ஒதுக்கியபடி சித்தி கேட்க.. இவான் யோசித்தான். “பாரு, பந்து இருக்கு.. விளையாடலாமா?” என அவள் கேட்டாள். அவன் வேண்டாமென்று தலையாட்டினான். வேறு என்ன என யோசித்தவள், முகம் மலர்ந்து “ஒளிந்து விளையாடலாமா?” என்று கேட்க அவனும் சிரிப்புடன் வேகமாக தலையசைத்தான்.

அவனை போலவே தலை ஆட்டியவள், “உனக்கு எப்படி விளையாடனும்ன்னு தெரியுமா?” என வினவ.. அவன் “ஓ! தெரியுமே!” என சொன்னான். “சரி, நான் ஒளிஞ்சிக்கிறேன். நீ கண்டுபிடி” என்று சொல்லி ஆனந்த மிகுதியால் அவனை அணைத்துக்கொண்டாள்.

பின்பக்க தோட்டத்தில் அவர்கள் விளையாடுவதை உள்ளே இருந்து கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்த ஆர்யன், கரீமா அங்கே வரவும் அங்கிருந்து நகர்ந்தான். “நல்ல வேலை செய்தே, ஆர்யன். அவளுக்கும் உரிமை இருக்கு தானே. அவ அவனோட சித்தியாச்சே?” என அவன் மனதில் நஞ்சு கலக்க முயன்றாள். ‘ருஹானா தன் உயிரை பணயம் வைத்து இவானை காப்பற்றிய விஷயம் ஆர்யனுக்கு தெரியாது’ என்ற நினைப்பில் ருஹானா மேல் வெறுப்பு மூட்ட கரீமா முயல.. அவனும் கோப முகம் காட்ட.. திருப்தியாய் உள்ளே நடந்தாள். 

இவான் கண்களை மூடிக்கொண்டு ஒன்று, இரண்டு என எண்ண.. ருஹானா எங்கே ஒளிவது என இடம் தேடிக்கொண்டு இருந்தாள். அப்போது தூரத்தில் வந்த ஒருவனை பார்த்து குழப்பமானாள். “என்ன அப்பாஸ்! காலைல ஹார்பர் போனே.. இப்போதான் வரீயா?” என காவலன் கேட்க.. அந்த அப்பாஸ் ஏதோ பதில் சொன்னான். அவனை ருஹானா அடையாளம் கண்டுக்கொண்டாள். “ஆர்யன் கொலை செய்யல..!” என தனக்குள் சொன்னவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள். பாய்லர் ரூமில் அவனை ஆர்யன் கொன்றதாக நடித்த நாடகத்தை புரிந்து கொண்டாள்.

“நீங்க ஒளிஞ்சிகிட்டீங்களா? நான் கண் திறக்க போறேன்..” என்று தேடிக்கொண்டே வந்த இவான், வெளியே பார்த்துக்கொண்டிருந்த ருஹானாவை, “நான் உங்கள கண்டுப்பிடிச்சிட்டேன்!” என்று ஓடிவந்து கட்டிக்கொண்டான். “அழகா கண்டுபிடிச்சிட்டியே, என் செல்லம்!” என அவளும் அவனை சந்தோசமாக அணைத்துக்கொண்டாள்.  

(தொடரும்)

Advertisement