Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 8

தன்வீர் காரோட்டிக்கொண்டே போனில் அழைப்பு விடுத்தவன், “அல்லாஹ்! இப்பவும் கிடைக்கலையே..!” என்று புலம்ப.. பக்கத்தில் இருந்த கமிஷனர் வாசிம், “யாருக்கு கால் செய்றே?” என்று கேட்டான். “என் சகோதரி ருஹானாக்கு தான்”. அவள் தான் நிலவறையில் இருக்கிறாளே.. இணைப்பு எப்படி கிடைக்கும்?.. “எனக்கு கெட்ட நினைப்பாவே வருது.. மனசு சொல்லுது.. நீ மடாபா போய் பாருன்னு..” என்று தன்வீர் கவலைப்பட.. “அவள் தனியா கொஞ்ச நாள் இருக்க நினைச்சிருக்கலாம்” என வாசிம் ஆறுதல்படுத்தியவன்.. “இன்னொருமுறை கார் ஓட்டும்போது போன் பேசாதே” என்றும் கண்டிப்புடன் எச்சரித்தான். 

அவனிடம் மன்னிப்பு வேண்டிய தன்வீர், “ருஹானா சம்மந்தப்பட்டதால என்னால என்னையே அடக்க முடியல.. ஆனாலும் நாம போலீஸ் தானே.. சில ரூல்ஸ் சில சமயம் நாம் மீறலாமே?” என்று கேட்டான். “ரூல்ஸ் முதல்ல நாம்தான் பின்பற்றனும். அதுக்கு அப்புறம் தான் பொதுமக்களுக்கு.. எப்பவும் நம் வாழ்க்கையில சட்டதிட்டங்களை தவறாம கடைப்பிடிக்கணும்” என அறிவுரை தந்தான், அந்த ஒழுக்கமுள்ள நல்ல கமிஷனர் வாசிம்..

——-

மயக்கத்தில் இருந்து விழித்த ருஹானா, பதட்டத்துடன் இவானை பார்க்க.. அவன் மயங்கி இருக்க.. அவன் கன்னத்தை தட்டி “இவான்..! கண்ணே..! உயிரே..!” என எழுப்பலானாள். இருமிக்கொண்டே இவானும் எழுந்தான். “சித்தி! என்னை வெளிய கூட்டிட்டு போங்க..” “போயிடலாம், செல்லம்..! இப்போ வந்து திறந்துடுவாங்க. பயப்படாதே. நான் உன்ன எப்படியும் காப்பாத்துவேன்” என சொல்லும்போதே அவளுக்கும் மூச்சு அடைத்து இருமல் வந்தது. புகையும் அதிகமானது.

“சித்தி..! எனக்கு மூச்சு விடமுடியல!!” என்றான் இவான், முகம் சுருக்கி. “இதோ!!.. கொஞ்ச நேரம்தான். தைரியமா இரு..” என்று சொல்லி தன் மேல்சட்டையை அவன் கழுத்தை சுற்றி போட்டு கண்கள் மட்டும் வெளியே தெரியும்படி முகத்தை மூடி வைத்தாள். பின் இருமிக்கொண்டே கதவருகே வந்தவள், தன் கைகளாலேயே கதவிற்கு கீழே குழி பறிக்க தொடங்கினாள். 

“அல்லாஹ்! என் இவானை காப்பாத்துங்க” என்று வேகமாக இரு கைகளால் கதவிற்கு அடியில் உள்ள மண்ணை தோண்டினாள். சிறிது நேரத்தில் நகக்கண்களில் இருந்து இரத்தம் வடியத் தொடங்கியது.. சுற்றுமுற்றும் தேடி ஒரு இரும்பு கம்பியை கொண்டு வந்தாள். இருவரின் இருமலும் அதிகரிக்க சுவாசத்துக்கு திணறல் ஏற்பட்டது. “இவான் கண்ணே! ஒன்னும் இல்லை. சித்தி உன்னை காப்பாத்துவேன்” என்று அவனிடம் சொன்னவள் கம்பியை வைத்து வேகமாக அந்த ஓட்டையை பெரிதாக்கினாள்.   

கதவிற்கும், தரைக்கும் இடைவெளி அதிகரித்து, வெளிச்சம் தெரிந்தது. “அல்லாஹ்! கருணை கொண்டு எங்களை காப்பாத்துங்க!” என வேண்டியவள் அந்த ஓட்டையில் குனிந்து “யாராவது இருக்கீங்களா..? நாங்க இங்க மாட்டிகிட்டோம்..” என்று கத்தினாள். இவான் தொடர்ந்து இருமினான்.. ஓடிச்சென்று அவனை தூக்கி வந்தவள், அந்த குழியருகே அவனை குனிய வைத்து, “உயிரே! நல்லா காற்றை இழு, செல்லம்!” என்று அவனுக்கு சொல்லிக்கொண்டு கதவை பலமாக தட்டினாள். இவான் அந்த ஓட்டைக்கு நேரே குனிந்து மண்டியிட்டான். “காப்பாத்துங்க!.. இவான் இங்க இருக்கான். வேகமா வாங்க!” என கூவிக்கொண்டே இருந்தவள் மூச்செடுக்க முடியாமல், “இவான்! இவான்!!” என மயங்கி விழுந்தாள்..

  —— 

ஆர்யன் மும்முரமாக எதோ குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவன், வேகமாக கதவு திறக்கப்படும் ஓசையில் நிமிர்ந்தான். கதவருகே நின்றிருந்த சாரா பதட்டத்துடன், “ஆர்யன் சார்!! நீங்க பாய்லர் ரூம் போகக்கூடாதுன்னு சொன்னீங்க.! ஆனா அங்க இருந்து புகை அதிகமா வருதே!” என சொன்னாள். திடுக்கிட்டு எழுந்த ஆர்யன் மிக வேகமாக ஓடினான், பாய்லர் ரூம் நோக்கி.

அந்த பகுதியில் பயங்கரமாக புகை சூழ்ந்திருக்க… அங்கே வந்த ஆர்யன், “அடச்சே!” என்று கதவை ஓங்கி தட்டினான். “ஹேய்! உள்ள இருக்கியா? பதில் சொல்லு..!” என அவன் எரிச்சலாக கத்த.. பதிலளித்த குரல் கேட்டு நிலைகுலைந்து போனான். “சித்தப்பா! நான் இங்க இருக்கேன்” என இவான் கத்தி சொல்ல, “இவான்..!!!” என அதிர்ந்து போய் கூப்பிட்டான்.

“சித்தப்பா! நான் உள்ளே இருக்கேன். காப்பாத்துங்க!” என திரும்ப இவான் சத்தம் போட்டான். சுதாரித்துக் கொண்ட ஆர்யன், “இவான்! கதவு பக்கம் இருந்து தள்ளிப்போ” என சொல்ல.. இவான் தவழ்ந்துக் கொண்டே கதவை விட்டு எட்டி போனான். ஆர்யன் தன் பலம் கொண்டு கதவை மோதி திறந்தான். கதவுக்கு நேரே மயங்கிய நிலையில் ருஹானா கிடப்பதை பார்த்து நின்றவன், இவான் வேகமாக இருமவும் துரிதமாக உள்ளே சென்றான். அவனை அள்ளி தூக்கிக்கொண்டு வெளியே ஓடினான்.

——-

மயக்கத்திலிருந்து மெல்ல கண் திறந்த ருஹானா, தான் எங்கிருக்கிறோம் என தெரியாமல் விழித்தாள். கையில் ஊசி குத்தப்பட்டு மருந்து ஏறிக் கொண்டிருப்பதை கவனித்தாள். அவள் சுயநினைவுக்கு வந்ததை கவனித்து அருகே வந்த ஒரு பெண், “இப்போ எப்படி இருக்கு? நீங்க சுகமா?” என விசாரித்தாள். ருஹானா அவளிடம் கேட்டாள், “நான் இங்க எப்படி வந்தேன்?”

——

ஆர்யன் தன் அறையில் கண்மூடி படுத்திருந்த இவானையே பார்த்துக் கொண்டிருக்க.. அவன் சிந்தனை நிலவறைக்கு ஓடியது. இவானை தூக்கிக்கொண்டு வெளியே வந்தவன், தன் பின்னாலேயே ஓடிவந்த சாராவிடம் இவானை கொடுத்து, “இவனை என் ரூம்ல படுக்க வைங்க” என சொன்னான். “யா அல்லாஹ்!” என இவானை பார்த்து சாராவும் கவலையடைந்து அவனை தூக்கிக்கொண்டு ஓடினார்.

வாசலில் சற்று தயங்கிய ஆர்யன், திரும்ப உள்ளே சென்று கோபமாக ருஹானாவை பார்த்தபடியே சில விநாடிகள் நின்றான். அவள் முகம் புகையால் கருப்படித்திருந்தது. கைவிரல் நுனிகள் பத்தும் இரத்தத்தால் சிவப்பு நிறம் பூசப்பட்டு இருந்தது. அதை பார்த்ததும் சட்டென்று மண்டியிட்டவன், அவள் இருகைளையும் அவள் உடம்பின் குறுக்கே மடித்து தூக்கினான். இருகைகளிலும் அவளை ஏந்தியவன், நெருக்கத்தில் அவள் முகத்தை உற்றுப் பார்த்தான். பின் விரைந்து அங்கிருந்து சென்றவன், வீட்டுக்குள் சென்று ஒரு கட்டிலில் அவளை தொப்பென்று போட்டான்.

அவளை தூக்கி வந்ததை மன கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்த ஆர்யன் கதவு தட்டப்படும் ஓசையில் நடப்புக்கு வந்தான். உள்ளே வந்த சாராவிடம் கேட்டான், “அவ முழிச்சிட்டாளா?” என. ஆம் என்ற பதில் பெற்று வெளியே நடந்தான்.

ருஹானா புதிய சிவப்புநிற மேல் கோட்டை மாட்டிக் கொண்டிருக்க.. அவளுக்கு உதவிய செவிலிபெண், “மேடம்! நீங்க ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம்” என அவள் வெளியே செல்வதை தடுத்தாள். “நான் இவானை பார்க்கணும். அவன் எப்படி இருக்கான்? அவனுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல தானே!” என ருஹானா கேட்ட வேளையில், அறைக்கதவு வேகமாக திறக்கப்பட்டு, ஆர்யன் சினத்துடன் உள்ளே வந்தான். ருஹானா குழப்பத்துடன் அவனை பார்க்க.. அவன் உதவிப்பெண்ணை வெளியேறுமாறு சைகை செய்ய… அவளும் வெளியே செல்ல.. ருஹானா தயக்கத்துடன் அவனை நோக்கினாள்.

“நீ உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கே..? அந்த விபத்துல ஏன் இவானை சிக்கவச்சே?” வார்த்தைகள் வெடித்தன, ஆர்யனிடமிருந்து

“நானா! நான் எங்க அவனை அங்க கூட்டிட்டு போனேன்? அவனே தானே அங்க இருந்தான்!” குழப்பத்துடன் ருஹானா பதில் சொன்னாள். அவன் நம்பாமல் பார்த்தான்.

“நீ என்னை கூப்பிட்டிருக்க வேண்டியது தானே.! இவான் இங்க இருக்கான்னு சொல்லிருக்கணும்ல. அதை ஏன் செய்யல நீ?” குற்றச்சாட்டு அவனிடமிருந்து, கோபக் கணைகளாய். 

“நான் செய்யலன்னு உங்களுக்கு தெரியுமா?” ருஹானா எதிர்த்து கேள்வி கேட்டாள்.

“பொய் சொல்லாதே! நீ வேணும்னே தான் இப்படி செஞ்சிருக்கே!” மீண்டும் குற்றம் சாட்டியபடி இன்னும் அவளை நெருங்கினான்.

“இல்லவே இல்ல.. உங்களுக்கு புரியலையா..? நீங்க என்னை உள்ள தள்ளும்போதே இவான் ஏற்கனவே அங்க இருந்தான். பயந்துபோய் ஒளிஞ்சிருந்தான்” சத்தம் கூடியது, அவள் குரலில்.

உண்மையாக இருக்குமோ என சிறிது யோசித்தவன், மறுபடியும் சொன்னான் “பொய்..!”  

“நான் பொய் சொல்லல. நீங்க அவனையும் உள்ள வச்சி தான் கதவை மூடினீங்க. உங்களால தான் என்னோட சேர்ந்து இவானும் கஷ்டப்பட்டான். புரிஞ்சதா!” இப்போது குற்றம் சாட்டுவது அவள் முறையானது.

“உலகத்தையே அவனுக்கு கொடுக்குறதா சொன்ன நீங்க தான், அவனை இந்த உலகத்தை விட்டே அனுப்ப பார்த்தீங்க..!” குற்றச்சாட்டுக்களும், அவள் சத்தமும் ஏறிக்கொண்டே போனது. அவன் முகமும் மாறிக்கொண்டே போனது.

“தாயை இழந்த ஒரு பையனை பார்த்துக்குற லட்சணம் இதானா?.. என்ன சித்தப்பா நீ..!” ஆங்காரமாய் அவள் குரல் உயர உயர அவன் மரியாதை குறைந்துக் கொண்டே போனது.

சிங்கத்தின் குகையிலேயே போய் அதன் பிடரியை உலுக்கியது, ஒரு அழகு மான். 

மிக அருகே சென்று அவள் கையை கோபமாக அவன் பற்ற, அதை விட கோபமாய் அவள் அவனை உதறினாள். ஆர்யன் அவளை மேலும் கீழும் பார்த்து, “உன் நிதானத்துக்கு வா. உன்னோட இருப்பிடம் போய் சேரு” என்று சொல்லி திரும்பி நடந்தான்.

“இவானுக்கு நான் தேவை. நான் அவன் சித்தி!” உறுதியாய் வந்த அவள் வார்த்தையில் நின்றவன், முகத்தை மட்டும் திருப்பி கண்களை சுருக்கி அவளை பார்த்தான். ‘நீயெல்லாம் என் இவானுக்கு சொந்தமா?’ என்பது போல் ஏளனமாய் அவன் பார்க்க.. ‘ஆம்!’ என்று அவன் பார்வையை அவள் எதிர்கொண்டாள். இன்னமும் அவளை முறைத்து, அவன் வேகமாக சென்று விட.. என்ன செய்வது என்று தெரியாத சலிப்புடன் அவள் நின்றாள்.

கிச்சனில் நஸ்ரியா “இவானின் சித்திய என்ன செய்வாங்க? ஆர்யன் சார் கோபமா இருப்பாரே? இனி என்ன நடக்கும்?” என சாராவிடம் கிசுகிசுப்பாய் கேட்க.. “உன் வேலையை மட்டும் பாரு. மேல போய் துணியெல்லாம் எடுத்துட்டு வா” என வேலை சொல்ல.. அவளும் கழுத்தை வெட்டிக் கொண்டு சென்றாள்.

சாரா, “இவான்! கப் கேக் உங்களுக்கு பிடிச்சிருக்கா?” அங்கே சிறிய மேசையில் அமர்ந்து, நானி ஊட்ட சாப்பிட்டுக் கொண்டிருந்த இவானிடம் கேட்டார். இவான் திரும்பி தலையாட்ட.. “உங்களுக்கு பிடிச்ச கிரீம் சேர்த்து செஞ்சேன்” என சாரா கூற, “என் சித்தி சாப்பிட்டாங்களா? அவங்களுக்கும் பிடிக்குமா?” என இவான் திருப்பி கேட்டான்.

அப்போது உள்ளே நுழைந்த கரீமா, “இவான் செல்லம்! சித்தி சோர்வா இருக்காங்க.. இப்போ தூங்குறாங்க.. கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும். சரியா?” என கேட்க, அவனும் சரியென தலையசைத்தான். சாராவிடம் நெருங்கிய கரீமா, “அந்த பொண்ண நீங்க ஏன் அவ அக்கா ரூம்ல தங்க வைக்கல..? அது நல்லா அமைதியா இருக்குமே?” என கேட்டாள். சாரா சொன்னார். “அவளுக்கு அவ அக்கா ரூம் துக்கத்தை கிளறிவிட்டுடும்ன்னு நினைச்சேன். அதான் விருந்தாளிகள் ரூம்ல படுக்க வைச்சேன்” கரீமா “சரியாத்தான் யோசிச்சிருக்கீங்க, சாரா!” என சமாளித்தாள். அக்காவைப் போல தங்கையையும் போட்டுத் தள்ள வசதியா இருக்குமென நினைத்தாள் போல.

Advertisement