Advertisement

 

“சரி, நான் ஆள் ஏற்பாடு செய்ய சொன்னேனே.. செய்திட்டியா?” என ஆர்யன் வினவ.. “அப்பாஸ் தானே.. செய்துட்டேன்..” என ரஷீத் உடனே சொல்ல.. “அவனை பாய்லர் ரூம்க்கு அனுப்பு, ரஷீத்..!”.. அவன் அதிர்ந்து “ஆர்யன்..!” என அழைக்க.. ‘சொன்னதைச்செய்..!’ பார்வையால் உத்தரவு வந்தது ஆர்யனிடமிருந்து… பெருமூச்சுடன் தலையசைத்த ரஷீத் வேகமாக அங்கிருந்து அகன்றான்…

இவானுக்கு வெளிய செல்ல தேவைப்படும் ஆடைகளை கரீமா அணிவிக்க, இவான் கேட்டான், “நாம எங்க போறோம்?..” கரீமா சிரிப்புடன் சொன்னாள்.. “குதிரை சவாரிக்கு போறோம்.. சின்ன குதிரை, ஆட்டுக்குட்டி எல்லாம் பார்க்கலாம்”… “நீங்களும் நானும் மட்டுமா, பெரியம்மா?..” இவான் கேட்டப்படி பக்கத்தில் நின்ற ஆர்யனை திரும்பி பார்க்க.. கரீமாவும் ஆர்யனை பார்த்தபடி… “ஏன் செல்லம், நான் உன்னை பார்த்துக்க மாட்டேனா… வா, நாம ஜாலியா போயிட்டு வரலாம்.. போய் கார்ல ஏறு.. நான் பின்னாடியே வரேன்” என அவனை நானியுடன் அனுப்பி வைத்தாள்..

“நல்ல வேலை செய்தே, ஆர்யன்.. வெளிக்காற்று இவானுக்கு நல்லது.. வேற எதையும் யோசிக்காம இருப்பான்.. உற்சாகமாவும் உணர்வான்” என்று கரீமா சொல்ல.. அதற்கு மறுமொழி கூறாமல் “செக்யூரிட்டி கார்ட்ஸ் உங்ககூட இருப்பாங்க.. இருந்தாலும் நீங்களும் கவனமா இருக்கணும்” என ஆர்யன் எச்சரிக்க.. “நீ கவலைப்படாதே.. நான் பார்த்துக்குறேன்.. இரவு சந்திப்போம்” என்று கரீமா விடைபெற்றாள்…

அப்போது சாரா உள்ளே வந்து சொன்னார், “ஆர்யன் சார்! பாய்லர் ரூம் எலெக்ட்ரிக் பேனல் பழுது பார்க்க வந்துருக்காங்க… ஜாஃபர் ஊருக்கு போகும்போது சொல்லிட்டு போயிருந்தார்..“.. அவரை மேலே பேசவிடாமல் தடுத்த ஆர்யன், “அவங்கள நாளைக்கு வர சொல்லுங்க” என வேகமாக சொன்னவன்.. “யாரும் என் அனுமதி இல்லாம கீழ பாய்லர் ரூம்க்கு போகக்கூடாது..!” என்று கண்டிப்புடன் சொன்னான்.. தலைகுனிந்து உடன்பட்டு சாரா சென்றதும் அவனும் வெளியேறினான்…

தரையில் சுருண்டு படுத்திருந்த ருஹானா எதோ சத்தம் கேட்டு எழுந்தாள்.. மெல்ல அடி வைத்து தூங்கும் புருனோவை தாண்டியவள் சாவித் துவாரம் வழியாக வெளியே பார்த்தாள்.. “என்னை விடுங்க..! நான் ஒன்னும் செய்யல.. என்னை விட்ருங்க” என ஒருவன் அலற.. “போதும்..! கத்தாதே!” என்றபடி ஆர்யனின் காவலன் அவன் வாயை டேப்பால் ஒட்டினான்.. ருஹானா பயந்தபடி, “அல்லாஹ்..!” என கத்தினாள்.. அப்போது அங்கே வந்த ஆர்யன் கட்டி வைத்திருந்தவனை சரமாரியாக அடித்தான்..

“பைத்தியம்..!! காட்டுமிராண்டிகளே..!! அவரை விடுங்க” என கதவை தட்டியபடி இங்கிருந்து ருஹானா குரல் கொடுக்க… புருனோவும் எழுந்து குரைத்தது… வாயில் ஒட்டிய டேப் கிழிந்து “அண்ணா! உங்க கால்ல விழுறேன்.. என்னை விட்டுடுங்க.. நான் எந்த தப்பும் செய்யல“ என அடி வாங்கியவன் கெஞ்ச.. அவன் பயந்த முகம் ருஹானாவுக்கு தெளிவாக தெரிய, “மிருகங்களே…! அவரை ஒன்னும் செய்யாதீங்க..” என அவளும் கெஞ்சினாள்..

இரண்டு கையாட்களும் அவனை அடி வெளுத்துக்கட்ட.. இப்போது ஆர்யன் கையில் துப்பாக்கி முளைத்திருந்தது.. அதை பார்த்த ருஹானா நெஞ்சில் கை வைத்துக்கொண்டாள்… “இல்ல! இல்ல!” இவள் கத்த… “வேணாம்! வேணாம்!!” என அவன் கத்த.. எதையும் கேட்காமல் ஆர்யன் துப்பாக்கி வெடித்தது.. கால்கள் மடிய அப்படியே தரையில் அமர்ந்தவள், “அவன் கொன்னுட்டான்…!” என்று அழுதாள்.. வெளியே சத்தம் ஓய்ந்து அமைதி நிலவியது.. 

புருனோ சத்தமாக குரைக்கவும் கைகளால் காதுகளை மூடி கதவின் மேல் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.. “சைக்கோ..! கிறுக்கன்..!” என்று புலம்பியபடி தலை மேல் கை வைத்துக்கொண்டாள்.. “அல்லாஹ்! இந்த அசுரன் கிட்ட என் இவானை நான் விடமாட்டேன்” அழுதபடியே யோசிக்கலானாள்…

புருனோ தன் பெரிய பற்களை கோரமாக காட்டி குரைப்பதை பார்த்துக்கொண்டே இருந்தவள் மெல்ல துணிவை திரட்டிக்கொண்டு அருகே சென்று தயங்கியபடி அதன் தலையை தொட்டாள்.. அது அமைதியாக இருக்கவும் மெதுவாக தடவி கொடுத்தாள்… “நல்ல பையன் நீ..! அமைதியா இரு..!” என அதன் கண்ணோடு கண் நோக்கி சொல்லவும்.. அவளையே பார்த்திருந்த புருனோவும் குரைப்பதை நிறுத்தியது.. நிம்மதியாக புன்னகைத்தவள் “இங்கே வா“ என அழைத்து அதை கழுத்தோடு கட்டிக்கொண்டாள்… “எவ்வளவு நல்லவன் நீ!” புருனோவின் கழுத்து சங்கிலியையும் கழட்டிவிட்டாள்..

அடுத்து என்ன செய்வது என சுற்றுமுற்றும் பார்த்தவள், ஒரு குழாயில் மாட்டியிருந்த இரும்பு கம்பியை எடுத்து மடக்கி, சாவி துவாரத்தில் விட்டு திறக்க முயற்சிக்கலானாள்… இடைஞ்சலாக இருந்த மேல்ஷாலை தள்ளி விட்டுவிட்டு மும்முரமாக கம்பியை திருப்பினாள்.. புருனோவும் விடுதலை விரும்பி அவளையே சுற்றி வந்தது.. விடாத பல முயற்சிகளுக்கு பின் பூட்டு திறந்துக் கொண்டது… ருஹானாவால் நம்பவே முடியவில்லை.. சில நாட்களுக்குப் பின் அவள் முகம் சிரிப்பால் மலர்ந்தது பார்க்கவே அழகாக இருந்தது…

மெதுவாக வெளியே வந்தவள் சுற்றுமுற்றும் பார்த்தபடி, கவனமாக வீட்டை சுற்றி ஒவ்வொரு ஜன்னலாக திறந்திருக்கிறதா என ஆராய்ந்தாள்… காவல் காப்பவர்களின் கண்ணில் படாமல், திறந்திருந்த ஒரு ஜன்னலில் ஏறி உள்ளே குதித்து பூனைக்குட்டி போல் மாடி ஏறினாள்.. மெதுவாக இவான் அறைக்கு வந்தவள் கதவு திறக்க போகும் சமயம் அவள் வாய் பொத்தப்பட்டது.. அவளும் இழுக்கப்பட்டாள்..

கதவருகே கேட்ட சத்தத்தினால் விழித்த இவான், “சித்தி..!” என எழுந்தான்.. ‘இது இரத்த பாசமா.. உள்ளுணர்வா.. இல்லை ‘சித்தி சித்தி’ என்று சொல்லி வந்த பழக்கமா..?’ ஜன்னல் திரை விலக்கி பார்க்க.. கீழே தோட்டத்தில் புருனோ ஒரு கருப்பு நிற ஷாலை வைத்து விளையாடுவதை பார்த்தான்… “என் சித்தி ஷால்!” என்று கத்தியவன் மேலே இருந்து இறங்கி தோட்டத்துக்கு வந்தான்..

ருஹானாவின் வாயை மூடியபடியே பக்கத்தில் இருந்த தன்னறைக்கு இழுத்து வந்த ஆர்யன் அவளை சுவரோடு அழுத்தினான்.. பயத்தில் கண்கள் விரிய திமிறிய அவளை ஒரு கையால் இறுக்கமாக பிடித்துக்கொண்டான்… அவள் மூச்சுக்கு திணறவும் மறுகையை லேசாக அவள் மூக்கிலிருந்து எடுத்து… அவள் சத்தம் வெளியே வராதபடி வாய்மேல் அழுத்திக்கொண்டான்… அவள் பச்சைநிற எமரால்ட் கண்களை அத்தனை நெருக்கத்தில் பார்க்கவும் அவனுள்ளே இரண்டாவது கல் மிக லேசாக அசைந்தது… அவள் வேகவேகமாக மூச்செடுக்கவும் முகத்தை கடுமையாக்கியவன், “என் பொறுமைய நீ அதிகம் சோதிக்கிறே…!” என்றான்..

வேகமாக திமிறி அவனை தள்ளியவள் வாயால் மூச்சிரைத்தாள்… “உனக்கு நான் பயப்பட மாட்டேன்.. செத்துப் போகக்கூட நான் தயார்.. ஆனா என் அக்காவோட கடைசி ஆசையை நிறைவேத்தாம நான் ஓய மாட்டேன்… இப்போ நான் இவானை பார்க்கணும்…” என்றுரைத்தாள்… 

அவள் முகத்தையே பார்த்தவன், ஒரு அடி விலகி நின்று அவள் கால் முதல் தலை வரை கீழும் மேலும் பார்வையிட்டான்… தூசியும், அழுக்கும் படிந்த அவள் காலணிகள், கால் சாராய், மேல் சட்டை, பாதி மாட்டிய குளிர் மேலுடை, சிக்கலாய் விரிந்த கூந்தல்.. பசியாலும், தூக்கமின்மையாலும் வாடி, கன்றி சிவந்த முகம்.. கசங்கி, நலுங்கி, காயம்பட்ட அவள் தோற்றம்.. “இப்படியே இவானை பார்ப்பியா நீ….?” ஏளனமாக ஆர்யன் கேட்க.. ருஹானாவும் தன்னை ஒருமுறை முழுதாக பார்த்தாள்… “நீ இப்படி இருந்தா, புருனோ கூட உன் பக்கத்துல வராது” என்று சொல்லி.. அவன் நெருங்கினான், இன்னும் அருகே.. அவள் அவனை முறைக்க, அவளை மேலும் கீழும் உற்று நோக்கினான்.. பின்பு அவள் கைகளை பிடித்து இழுத்தவண்ணம், “விடு என்னை..!” என ருஹானா கத்த… அறையை விட்டு வெளியே நடந்தான்.. 

தோட்டத்தில் இவான், “புருனோ..! அதை என்கிட்டே கொடு..! அது என் சித்தியோடது…. புருனோ.. தா..!“ என கேட்க கேட்க.. புருனோ அதை வாயால் கவ்வியபடி ஆட்டம் காட்டியது.. இவானும் அதை பிடிக்க ஓடினான்.. ஒரு கட்டத்தில் புருனோவை தொடர்ந்து பாய்லர் ரூம்க்கே வந்துவிட்டான்.. ‘என் வேலை முடிந்தது’ என்பது போல புருனோ ஓடிவிட்டது.. “புருனோ! எங்க இருக்கே?” சித்தியின் ஷாலை தேடியபடி இவான் இயந்திரங்களுக்கு பின்னால் போய்விட்டான்…

ருஹானாவை இழுத்து வந்த ஆர்யன் பழைய இடத்தில் “போ..!” என அவளை வேகமாக தள்ளினான்… தள்ளிய வேகத்தில் அவள் கீழே விழ.. அவள் சங்கிலியில் இருந்த லாக்கெட் திறந்துக் கொள்ள… அதில் இவான் சிரித்தான், ஆர்யனை பார்த்து…  திக்கென்றானது அவனுக்கு.. தலையை சாய்த்து சில நொடிகள் கூர்ந்து பார்த்தவன், அதை எடுக்க கை நீட்டினான்.. “என்னை தொடாதே!” என்று ருஹானா அவன் கைகளை அடித்தவள், பின்னால் நகர.. ஒரே எட்டில் அவளை நெருங்கி கழுத்தில் கைவைத்து சங்கிலியை பிடுங்கினான்.. சங்கிலி அறுந்து அவன் கையோடு வந்தது.. ருஹானா கதற கதற வேகமாக கதவை சாத்தி, தோட்டத்தில் விருவிருவென நடந்து வீட்டிற்குள் சென்று விட்டான்…

“கதவை திற! என் சங்கிலிய கொடு! என்னை வெளியே விடு!” என ருஹானா கதவை தட்டி கத்த, அந்த சத்தம் கேட்டு உள்ளே இருந்த இவான் முன்னே வந்தான்.. சித்தியை பார்த்ததும் அளவு கடந்த ஆனந்தம் அவனுக்கு.. “சித்தி..!” என சிரிப்புடன் கூப்பிட்டான்.. கதவிலிருந்து திரும்பிய ருஹானா அப்படியே திகைத்து நின்று விட்டாள்.. அவள் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை…. “இவான்..!” என்று கூப்பிட்டவள் தன் முடியை கைகளால் ஒதுக்கி நன்றாக அவனை உற்று நோக்கினாள்…  

பிறைக்கண்டு மாதமெல்லாம்  

நோன்பிருந்தவர் கண்கள்

மறுமாத பிறைநிலவை

தேடுவதுபோல்…

உடன்பிறப்பு ஒப்படைத்த நாள்முதல்

காணத் துடித்த மதிமுகம்

தானாய் தேடி வர

கண்ட நாள் திருநாளே…!!

ருஹானா “சித்தியின் மகிழ்ச்சியே..!! என் உயிரே..!!” என்று தாவி வந்து அணைத்துக் கொண்டாள்.. இவானும் தான் தேடிகொண்டே இருந்த சித்தியை இறுக கட்டிக்கொண்டவன்.., “நீங்க என்னை விட்டு போகலயா, சித்தி?” என சந்தோசத்துடன் கேட்டான்.. திகைத்து அவனை பார்த்தவள் “உன்னை விட்டுட்டு போறதா..?.. அது என்னால எப்படி முடியும்? இல்ல.. எப்பவும் இல்ல.. சித்தி உன்ன விட்டு எப்பவும் போக மாட்டேன்..!!” ருஹானா அழுத்தி சொல்லி தழுவிக்கொண்டாள்.. முகத்தை மறைத்த சித்தியின் முடியை தள்ளி இவானும் கழுத்தில் கைகளை இறுக்கிக் கொண்டான்..

பின்பு குழப்பத்துடன் கேட்டாள்.. “ஆனா நீ இங்க எப்படி வந்தே?..” அவனை பார்த்தது சந்தோசம் தான் என்றாலும் ‘இவன் ஏன் இந்த பயங்கர இடத்தில்?’ என்ற பயமும் அவளை பீடித்தது… “உங்கள தேடித்தான் நானும் வந்தேன், சித்தி” என இவான் அளித்த பதிலில் அவளுக்கு ஆனந்த கண்ணீர் துளிர்த்தது..  இவான் அந்த இடத்தை சுற்றி நோக்குவதை கண்டவள், “வா! நான் உன்னை வெளிய கூட்டிட்டு போறேன்!” என்று சொன்னவள், கதவை தட்டி “யாராவது இருக்கீங்களா.. கதவை திறங்க.. இவான் இங்க இருக்கான்” என அழுகையுடன் கத்தியவள் மேலும் வேகமாக கதவை இடித்தாள்..

“கதவு வெளிய பூட்டி இருக்கா, சித்தி?” என இவான் கேட்க.. “எப்படியோ பூட்டு மாட்டியிருக்கும், கண்ணே..” என்று சமாளித்தவள், “நீ பயப்படாதே, என் செல்லம்.. சித்தி இருக்கேன்.. உன் சித்தப்பா இப்போ வந்து கதவை திறப்பார், சரியா?.. நான் உன் பக்கத்திலயே இருக்கேன்.. கவலைப்படாதே” என்று அவன் முடியை பாசமாய் ஒதுக்கி விட்டாள்..

அவள் எதிர்ப்பார்த்த சித்தப்பாவோ அவள் சங்கிலியை கையில் வைத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்துக்கொண்டு இருந்தான்… ‘இவான் என்னுரிமை..!!!’ என்று ருஹானா முழங்கியது இன்னும் அவன் காதில் ஒலித்தது… டாலரில் இவானை பார்த்தபடி ஆர்யன் சொன்னான்.. “இவான் என்னிடம் ஒப்படைக்கப்பட்டவன்..!”.. ‘இங்கே உட்கார்ந்து போட்டோவை பார்த்து பேசுவதற்கு பதில் இவான் ரூம்ல போய் அவனை பார்க்கலாம், காப்பாற்றலாம்!’

அங்கே குழல் விளக்கு மினுமினுவென கண் சிமிட்டி அணைந்துப் போக.. பழுதான எலெக்ட்ரிக் பேனல் தீப்பிடித்து எரிய தொடங்கியது.. இவானை அருகே இழுத்து கட்டிக்கொண்டவள், “பயப்படாதே, அன்பே..!” என சொல்ல.. அவனும் “சித்தி..!” என்று குழப்பத்துடன் தழுவிக்கொண்டான்..

உயிர் காக்கும் மூலிகை தேடி ஏழு கடல், ஏழு மலை தாண்டி சென்றவன், கொடிய மிருகத்தால் விரட்டப்பட்டு ..  மலையுச்சியிலிருந்து குழிக்குள் விழுந்து நிமிர்ந்தால்.. தேடி வந்த அரிய மூலிகை அங்கே இருக்கக்கண்டு ஒருபுறம் ஆனந்தம், மறுபுறம் மூலிகையுடன் தப்பிக்க வழி தேடி தவிப்பு என்றிருக்க…. விழுந்தது புதைக்குழிக்குள் என அறிய நேர்ந்தால்… 

அந்த நிலைமையில் இருந்தாள், ருஹானா… கதவை தட்டி தட்டி ஓய்ந்தவள், இவானை மடியில் வைத்துக்கொண்டு சுவரோரம் சரிந்தாள்… தீ மெல்ல அதிகரித்து மின்கம்பிகளில் பரவ ஆரம்பித்தது…

நெருப்பானாவன் 

நெருங்க விடவில்லை..!

அடையாத செல்வம் எண்ணி

நிராசையாய்  ஏங்க…

அரிதாய் கண்ட பொழுதில்

முழுதாய் மகிழும்முன்

சூழும் பேராபத்து..!!

உயிராய் சிறுவனிருக்க

அவள் உயிர் துச்சமாய்…!!

தவிக்க விட்டுவிடுவாளா

இளந்தளிரை…..? 

(தொடரும்)

Advertisement