Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 7

அர்ஸ்லான் மாளிகையே ஆர்யன் வாங்கிய அறையால் அதிர்ந்து பின் சற்று அசைவற்று நின்றது.. தீ பார்வையை ருஹானா மேல் வீசிய ஆர்யன் பணக்கட்டை கீழே எறிந்து வேகமாக திரும்ப.. நஸ்ரியா உள்ளே ஓட.. சாரா ஜன்னல் திரை மூட… ஆர்யன் சூறாவளியாய் வீட்டுக்குள் சென்றான்..

ரஷீத் கட்டளைப்படி இரு காவலர்கள் ருஹானாவை இழுத்து சென்று காரில் ஏற்றினர்.. “என்னை விடு! என்னை எங்க கூட்டிட்டு போறீங்க… என்னை போக விடுங்க!!” என கத்திக்கொண்டே ருஹானா காரில் திமிறினாள்… 

அறைக்கு வந்த ஆர்யன் கதவை அறைந்து சாத்த.. அந்த அதிர்வில் சுவரில் மாட்டியிருந்த அவன் போட்டோ கீழே விழுந்து அதன் கண்ணாடி நொறுங்கியது… குனிந்து அந்த படத்தை பார்த்தான்.. அதில் ஆர்யன் வேட்டை துப்பாக்கி தோளில் தாங்கி, பயமுறுத்தும் வேட்டைநாய் பக்கத்திலிருக்க… அதன் சங்கிலியை கையில் பிடித்திருந்தான்.. அனல் மூச்சுடன் நடை பயின்றவன், தன் வழக்கமாய் இடது மணிக்கட்டை பிடித்துக் கொண்டான்..

பரபரவென்று போனை எடுத்து ரஷீத்தை அழைத்தான்.. “அந்த பொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு வா…!”… ரஷீத் நம்பமுடியாமல், “உண்மையாவா, ஆர்யன்?” என்று கேட்க.. “கூட்டிட்டு வா..!” கடுமையாக வந்தது கட்டளை… அவனால் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை.. அவள் அடித்த கன்னத்தை புறங்கையால் தடவிப் பார்த்து உக்கிரமாகவே நின்றான்..

———

கிச்சனில் சாராவின் கை வாணலியில் வறுத்தப்படி இருக்க, வாய் நஸ்ரியாக்கு அடுக்கடுக்காய் வேலைகள் சொல்லிக் கொண்டிருந்தது.. ஆனால் அத்தனையும் வீண் தான்.. நஸ்ரியாவின் கை தேநீர் ஊற்ற, சிந்தனை எங்கேயோ இருக்க, காது வேலை நிறுத்தம் செய்திருந்தது… பதில் வராததால் திரும்பி பார்த்த சாரா, கோப்பையை தாண்டி தேநீர் வழிவதை கண்டு “நஸ்ரியா..!” என அழுத்தி கூப்பிட.. சுயநினைவுக்கு வந்த நஸ்ரியா, “பெரியம்மா! இவான் சித்திய என்ன செய்வாங்க?” என கேட்டாள்… ‘இது உனக்கு தேவையில்லாத கேள்வி..!’ என்பது போல் சாரா முறைக்க, கரீமா உள்ளே வந்தாள்..

நஸ்ரியா, “கரீமா மேம் உங்களுக்குத் தான் டீ கொண்டு வரேன்” என சொல்ல.. “டீயை விடு, நஸ்ரியா! கைல கொட்டிக்காதே.. சூழ்நிலை அமைதியாகட்டும்.. வேலையை கொஞ்ச நேரம் நிறுத்துங்க.. ஆர்யன் கோவம் பயங்கரமானதுன்னு நமக்கு தெரியும் தானே..!.. நஸ்ரியா நீ போய் முகம் கழுவி நிதானத்துக்கு வா..” என்று சொல்ல நஸ்ரியா சரியென தலையாட்டி அங்கிருந்து அகன்றாள்..

“சாரா! இவானுக்கு நடந்த எதும் தெரியாம பார்த்துக்கணும்.. நான் அவன் நானிகிட்டே ஏற்கனவே எச்சரிச்சிட்டேன்… நாமும் கவனமா இருக்கணும்” என கரீமா சொல்ல.. நஸ்ரியா கேட்ட அதே கேள்வியை சாரா கேட்டார்.. “அந்த பொண்ணை என்ன செய்வாங்க, கரீமா மேம்?”.. கரீமா தோளை குலுக்கியவள், “தெரியலையே சாரா.. எனக்கு தெரியலியே..!” என வருத்தப்படுவது போல சொன்னாள்… சாரா கவலையாய் பெருமூச்சு விட்டார்..

——–

இயந்திரங்களும், குழாய்களும் நிறைந்த அழுக்கான ஒரு அறையில் ருஹானாவை கொண்டு வந்து தள்ளிய காவலர்கள் ஒதுங்கி நிற்க.. “என்னை ஏன் இங்க கொண்டு வந்தீங்க..? என்னை போக விடுங்க..! என்ன செய்ய போறீங்க என்னை..?”.. என தரையில் கிடந்தப்படி கத்தினாள்.. அப்போது அங்கே ஆர்யன் வர.. ருஹானாவின் கூச்சல் நின்றது.. ஆர்யன் சினம் கொண்ட சிங்கமென அவள் முன்னால் நிற்க.. அவளும் பயமின்றி அவனை ஏறெடுத்து நோக்கினாள்..

ஆர்யன் கண்ணசைவில் காவலர் கதவு பூட்டி வெளியே செல்ல.. அவளை நெருங்கிய ஆர்யன், “நான் உன்ன போக சொன்னேன்.. ஆனா நீ என் அண்ணன் மகன் கிட்டே நெருங்க என்னன்னவோ செய்துட்டே.. அதுக்கான பலனை நீ இப்போ அனுபவிக்க போறே..!” என்று மிரட்ட.. அதற்கு சற்றும் பயப்படாமல்  “இவான் என்னோட உரிமை.. அவனை எந்த காலத்திலும் நான் விட மாட்டேன்..” என்று ருஹானா அழுத்தி சொன்னாள்..

“நீ தைரியசாலி தான்.. பார்க்கலாம், உன் தைரியம் எதுவரைன்னு..!” என சொல்லிய ஆர்யன் கதவின் புறம் செல்ல, குழாயைப் பிடித்துக்கொண்டு தள்ளாடியபடி ருஹானா எழுந்து நின்றாள்.. “இனி இது தான் உன் புது வீடு!” என்று அவளிடம் சொல்லியபடி வெளியே சென்றவன், தன் வளர்ப்பு நாயுடன் திரும்பினான்..  அந்த பயங்கர நாய் சத்தமாக குரைத்தபடி ஆக்ரோஷமாக வருவதைப் பார்த்து ருஹானா ஓவென பயந்து அலறினாள்.. அதை பார்த்து திருப்தி அடைந்தவன், அவள் மேல் அந்த நாயை ஏவி இன்னும் பயங்காட்ட.. சுவரோடு ஒண்டியவளுக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது… 

அவள் பயப்படுவதை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தவன் கை சற்று தளர.. அவனும் எதிர்பாராமல் அவன் நாய் பாய்ந்து அவளது இடது உள்ளங்கையை கவ்வி விட்டது… வலியில் ஆவென அலறியவள் கையில் இரத்தம் வடிய… நாயை இழுத்த ஆர்யன் அதை சாந்தப்படுத்தினான்… அவளை பார்த்துக்கொண்டே.. “புருனோ தன் இரையை குறி வச்சிட்டான்னா அவன் கிட்டே இருந்து யாரும் தப்பிக்க முடியாது.. நீ போகணும்னு ஆசைப்பட்டின்னா இப்பவே இங்க இருந்து வெளிய போய்டு.. இப்போ இல்லனா எப்பவும் இல்ல.. இங்க கிடந்து தான் சாகணும்” என அவளுக்கு வெளியேற ஒரு வாய்ப்பு கொடுத்தான்…

அவளா அசருவாள்..? “நான் எங்கயும் போக மாட்டேன்.. இவானை விட்டுத் தரவும் மாட்டேன்.. உனக்கு புரியுதா..? செத்தாலும் இவானை விட மாட்டேன்..” என கத்தி சொன்னாள்.. “ஓ..!! அப்படியா..!” என்று தலை சாய்த்து கேட்டவன், விடாமல் கத்தும் புருனோவின் கழுத்தை தடவிக் கொடுத்து அதை உட்கார சொல்லி, அவள் அருகே ஒரு குழாயில் கட்டி போட்டான்.. ருஹானா ஒடுங்கி பின்னால் போனவள் இரண்டு இயந்திரங்களுக்கு இடையே நின்று கொண்டாள்.. 

புருனோவை கட்டியவன் அவளை பார்த்துக்கொண்டே வெளியே செல்ல திரும்ப, “எனக்கு இவானை பார்க்கணும்…!” என்ற அவள் குரல் கேட்டு கதவருகே சில நொடிகள் நிதானித்தவன், திரும்பிக் கூட பார்க்காமல் சென்று விட்டான்… புருனோவின் ஒவ்வொரு குரைப்புக்கும் அதிர்ந்தவள் மெல்ல நகர்ந்து சுவரோடு ஒண்டி கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்து விட்டாள்..

அறைக்குள் வந்த ஆர்யன், உள்ளே இருந்த மூன்று படிகளில் மேல் படியிலேயே நின்று.. உடைந்து கிடந்த அவனது படத்தை பார்த்துக்கொண்டே சில நிமிடம் நின்றான்.. பின் மற்ற படிகளில் இறங்கி கீழே நடந்தவன் மேசைக்கு பின்னிருந்த தனது சுழலும் நாற்காலியில் அமர்ந்துக் கொண்டான்.. கையில் பிரம்பை தட்டிக்கொண்டே யோசனையில் ஆழ்ந்தான்.. 

அந்நேரம் கதவை தட்டி உள்ளே நுழைந்த கரீமாவும் அந்த படத்தை பார்த்தவள் ஆர்யன் பக்கம் வந்தாள்.. “இவான் எந்நேரமும் அவன் சித்தியையே கேட்கறான்.. எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல.. நீ கோவமா இருப்பேன்னு எனக்கு தெரியும்.. ஆனாலும் அந்த பொண்ணு இவான் சித்தி.. நீ அந்த பக்கமும் இருந்து கொஞ்சம் யோசிக்கணும்.. இந்த  உலகத்துல அவளுக்கு அப்பா, அக்கா இல்லாம போய்ட்டாங்க.. இவான் மட்டுமே அவளுக்கு உறவு.. அவனும்……..“ என கரீமா மேலே என்ன சொல்லியிருப்பாளோ, தெரியாது.. அதற்குள் பேச்சில் இடையிட்ட ஆர்யன், “வேற எதாவது வேலை இருக்கா, அண்ணி?” என பிரம்பை தட்டிக் கொண்டே கேட்க.. “இல்ல ஆர்யன்!.. உணவு தயாரா இருக்கு” என்று சொல்லி படிக்கட்டுகளில் ஏறி கதவருகே செல்லவும் ரஷீத் உள்ளே நுழைந்தான்..

ரஷித்தும் உடைந்த படத்தை ஒரு கணம் நோக்கியவன், தன் உணர்ச்சிகளை நொடிப்பொழுதில் மறைத்து ஆர்யனிடம் நெருங்கி கேட்டான்.. “ஆர்யன்! நாம என்ன செய்யறது? எத்தனை நாள் அவ படிக்கட்டுக்கு கீழ இருப்பா?.. வெளியே கதவருகே நின்று ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த கரீமா, ஆர்யன் பதிலுக்காக காதை தீட்டிக்கொண்டாள்.. 

“எத்தனை நாள் முடியுமோ அத்தனை நாள் இருக்கட்டும்.. அவ அக்கா மகன்கூட ஒரே வீட்ல இருக்கணும்ன்னு ஆசைப்பட்டாள்ல.. இப்போ அவ ஆசைப்பட்டது நடந்துருக்கு..” என அலட்சியமாக சொல்ல.. கரீமா, “ஓ! பாய்லர் ரூம்ல இருக்காளா?” என மகிழ்வுடன் தலையாட்டி அகன்றாள்.. ரஷீத், “சரி ஆர்யன்! அரைமணி நேரத்துல நான் ஏலத்துக்கு போகணும்.. வேற வேலை இல்லனா நான் போகட்டுமா?” என்று கேட்க.. தலையாட்டிய ஆர்யன் திரும்ப யோசிக்கலானான்..

இவான் அவன் அறையில் தரையில் படுத்துக்கொண்டு நிறம் தீட்டிக்கொண்டிருக்க.. உள்ளே நுழைந்த நானியை பார்த்தவன், “என் சித்தி கண்டிப்பா வரேன்னு சொன்னாங்களே!” என்று கேட்டான்.. அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், நானி “நீங்க வரைஞ்ச படம் அழகா இருக்கு.. மரம் வரையலாமா?” என்று பேச்சை மாற்ற.. இவான் வரைவதை நிறுத்தி கவலையாக பார்த்தான்.. அவன் சித்தியை நினைத்து நானியும் பாவப்பட்டாள்..

தன் அம்பு உபகரணங்களோடு தோட்டத்துக்கு வந்த ஆர்யனின் மூச்சுக்காற்று  பனிப்புகையாய் வெளிவந்தது.. அந்த கடும் குளிரிலும் அம்பு பயிற்சி எதற்காக?.. இரவெல்லாம் புருனோவின் சத்தம் கேட்டுக்கொண்டே ஆர்யன் அம்பு விட்டுக்கொண்டே இருந்தான்..

விடியலில் ஜன்னல் வழியாக வெறித்துக் கொண்டிருக்கிறான், ஆர்யன்.. தன் பின்னால் கதவு தட்டப்பட்டவும் லேசாக கழுத்தை திருப்பி பார்த்தவன், வந்தது பாதுகாவலனென அறிந்து, “சொல்..!” என்றான்.. வந்தவனும், “அந்த பொண்ணு இராத்திரியெல்லாம் தூங்கல.. காலைல மயக்கம் போட்டு விழுற மாதிரி இருந்தா..” என்று அறிக்கை சமர்ப்பிக்க… தலையசைத்தவன் கீழே பாய்லர் ரூம்க்கு வந்தான்..

கால்களை மடக்கிக் கொண்டு இரத்தம் தோய்ந்த கைகளை தலைக்கு வைத்து கண்மூடி குளிர்தரையில் ருஹானா படுத்திருக்க.. புருனோ அவளையே பாவமாய் பார்த்தப்படி நின்றது.. கதவை மெல்ல திறந்து உள்ளே வந்தவனுக்கு அந்த பாவம் இருந்ததோ இல்லையோ.. அவனும் அவளையே நெடுநேரம் பார்த்துக் கொண்டே இருந்தான்.. பின் எதையோ யோசித்தவன் அவளை எழுப்பாமல் திரும்பி நடக்க துவங்க… போனநிமிடம் அவன் கண்ணில் கண்ட காட்சி, திரும்பிய நொடியில்தான் மூளைக்கு எட்டியது.. அதில் அதிர்ந்து நின்றவன் திரும்பிப் பார்க்க, அவனுக்கு தூக்கி வாரி போட்டது..

ஒரு பெரிய கருந்தேள் தன் கொடுக்கைத் தூக்கியபடி ருஹானாவை நோக்கி மெல்ல சென்றுக் கொண்டிருந்தது… ஒரு சில விநாடிகள் தான் அதிர்ச்சி, அவனுக்கு.. ஒரு அழகிய பெண் நகைத்துக் கொண்டே தன்னை அலங்கரிக்கும் காட்சி அவன் மனக்கண்ணில் தோன்ற.. அவன் முகம் பயங்கரமாக மாறியது… அந்த சிரிப்பொலி அவன் காதுகளில் ஒலிக்க ஒலிக்க இன்னும் இறுகியவன் திரும்பி நடக்க ஆரம்பித்து விட்டான்.. அடப்பாவி! மனிதத்தன்மையே இல்லையா, உனக்கு..? 

இல்லையில்லை.. அத்தனை கொடூரமானவன் இல்லை.. அரை நொடியில் திரும்பிய ஆர்யன், ருஹானாவின் மிக அருகே சென்று கொண்டிருந்த தேள் மேல் வேகமாக தன் காலணியை ஓங்கி மிதித்தான்.. அந்த சத்தத்தில் விழித்த ருஹானா தன் பக்கத்தில் ஆர்யனை பார்த்ததும் எழுந்தமர்ந்து பொரிய ஆரம்பித்தாள்.. “நீ ஒரு மேனியாக்….! சைக்கோ..! நான் கஷ்டப்படறது உனக்கு சந்தோசமா இருக்குல..” நடுவே ஓடிய ஒரு குழாயை பற்றிக்கொண்டு எழுந்தவள், தன் தலையை சிலுப்பி முன்னால் விழுந்த விரிந்த முடியை பின்னால் தள்ளினாள்.. தலை நிமிர்ந்து கண்கள் விரித்து சீறிய அவன் கண்களை துணிவுடன் எதிர்கொண்டாள்..   

“விட்டுப்போ..!” ஆர்யனும் உறும.. அவளும் “இந்த ரூம்ல இருந்து நான் உயிரோட வெளிய போக முடியலனா கூட பரவால்ல.. ஆனா நான் இவானை விட்டுத் தரமாட்டேன்.. எனக்கு உரிமையான பொக்கிஷத்தை நான் அடைந்தே தீருவேன்” புருவங்கள் உயர்த்தி ஒரு ஏளன புன்னகையுடன் மிக சத்தமாக சொன்னாள்.. கண்கள் சுருங்க அவளை வெறித்து நோக்கியவன், தன் காலணிக்கு கீழ் நசுங்கிய தேளை அவள் பார்க்கும்முன் தள்ளி விட்டுவிட்டு வேகமாக திரும்பி நடந்து மிக வேகமாக கதவடைத்து போய்விட்டான்.. அதுவரை இழுத்து பிடித்திருந்த மூச்சை வேகமாக வெளியிட்டாள், ருஹானா..

உணவு மேசையில் அம்ஜத்தும், கரீமாவும் அமர்ந்திருக்க.. இவான் கையை நானி பிடித்தப்படி அங்கே வர.. “அடடா! யாரு வர்றாங்க, பாரு?.. யாரு இது?”.. என அம்ஜத் செல்லமாக இவானை வரவேற்க அவனும் காலை வணக்கம் சொல்லி அமர்ந்தான்.. அப்போது கருப்பு நிற கோட்சூட்டுடன் ஆர்யனும் வர தன் கோணல்வாய் சிரிப்புடன் கரீமா அவனுக்கு காலை வணக்கம் சொன்னாள்.. அம்ஜத் தன் தட்டிலிருந்து மணயீஷை, (ரொட்டியினுள் பாலாடைக்கட்டி மற்றும் இறைச்சி சுருட்டி செய்யப்பட்ட பண்டம்) பாதியாக வெட்டி தம்பி தட்டில் வைத்தபடி காலை வணக்கம் சொன்னான்..  

அனைவருக்கும் காலை வணக்கம் சொன்ன ஆர்யன், அண்ணன் தந்த உணவை சிறிதாக கத்தியால் வெட்டியபடி இவான் தட்டை கவனித்தான்… அவனோ சாப்பிடாமல் முள் கரண்டியால் ஸ்ட்ராபெரியை அலைந்து கொண்டிருந்தான்.. நரிக்கூட்டத்தின் தலைவி கரீமா, “ஆர்யன்! என்ன, புருனோ சத்தம் ராத்திரில கேட்டுச்சே..! திரும்ப வேட்டைக்கு போறீயா?” என கேட்க… அவளை பார்க்காமல் மிக லேசாக தலையசைத்த ஆர்யன் இவானை கவனிக்க.. அவன் தட்டின் ஒரு பகுதியிலிருந்து பழத்தை எடுத்து மறு பகுதியில் வைத்துக் கொண்டிருந்தான்…

ஆர்யன் கவனம் இவானிடம் செல்வதை பார்த்த கரீமா தன் அக்கறை முகமூடியை போட்டுக்கொண்டு, “இவான் நீங்க பெரியம்மா செல்லமாச்சே..! கொஞ்சமாச்சும் சாப்பிடுங்க.. பாருங்க சாரா ஆன்ட்டி குக்கீஸ் செய்துருக்காங்க..” என கொஞ்சவும் நானி சதுர வடிவ குக்கீஸை இவான் தட்டில் வைத்தாள்.. அதுவரையில் முள்கரண்டி வைத்து தட்டில் விளையாடிக் கொண்டிருந்தவன், “இது லெமன் குக்கீஸ் இல்லயே..!” என்றபடி கரண்டியை தட்டில் வைத்துவிட்டு.. மேசையில் கைகளை மடித்து அதன் மேல் நாடியை ஊன்றிக் கொண்டான்.. அவன் சாப்பிடாததை கவனித்த ஆர்யன், அண்ணன் வைத்த மணயீஷ் கூட வாயில் வைக்கவில்லை…

மேற்கொண்டு என்ன செய்வது என யோசித்து ஆர்யன் நடைப் போட்டுக் கொண்டுருக்க, அவனோடு அவன் அறையிலிருந்த ரஷீத், “எதுக்கும் மசிய மாட்றாளே!..” என ஆதங்கப்பட.. “வழிக்கு வருவா.. என் உலகம் எப்படிப்பட்டதுன்னு அவளுக்கு இன்னும் தெரியல.. காட்றேன்.. சீக்கிரமே வழிக்கு வருவா..” என ஆர்யன் சொன்னான்.. “ஆர்யன்! எனக்கு ஒன்னு புரியல.. நீங்க நினைச்சிருந்தா அவள என்ன வேணும்னாலும் செஞ்சிருக்கலாம்… உங்க உத்தரவு கிடைச்சிருந்தா நான் அவளை ஈசியா வெளிய தூக்கி போட்ருப்பேன்.. நீங்க ஏன் வீட்டுக்குள்ள கொண்டு வந்து வச்சிருக்கீங்க.. உங்க மனசுல என்ன இருக்கு?” ரஷீத் தன் மனதிலிருந்ததை கேட்டான்..

“பனிக்கட்டி சின்னது.. தொல்லை இல்லாதது.. நாம அதை பனிமலை மேல வீசி எறிந்தோம்னா அது பெருசா வளர்ந்து ஆபத்தா உருவெடுக்கும்.. நாம கைல வச்சிருந்தோம்னா தண்ணியா கரைஞ்சிடும்..” என ஆர்யன் விளக்கம் கொடுத்தான்.. ‘நீ சரியாத்தான் சொல்ற..! அவள் பனிக்கட்டி தான்.. ஆனால் அன்புக்கு உருகுபவள்.. அடக்குமுறைக்கு பாறையாய் இறுகுபவள்.. அது உனக்கு எப்போது தெரியவரும்?…’

Advertisement