Advertisement

——–

இரவில் எத்தனை மழை அடித்ததோ, அத்தனைக்கும் குறைவில்லாமல் பகலிலும் குளிர் அடிக்க… ருஹானா சோர்வுடன் அந்த சின்ன சுவருக்கும், கேட்டுக்கும் இடையே அலைந்துக் கொண்டிருந்தாள்.. பின் சுவரில் சரிந்து அமர்ந்து கைப்பையில் இருந்து ஒரு போட்டோவை எடுத்தாள்.. அப்பா இவான் சிரிப்புடன் நடுவே நிற்க, உடன்பிறப்புகள் இருவரும் தந்தையை ஒட்டி புன்னகையுடன் நின்றிருந்தனர்… அதை பார்த்து கண்ணீர் உகுத்தவள், அதற்கு முத்தமிட்டு உள்ளே வைத்தாள்.. பசிக்கவும் பையில் இருந்து ஒரு ரொட்டி துண்டை எடுத்து பிரித்தாள்.. அப்போது சாலையில் குப்பை எடுக்கும் சிறுமி அவளை பார்த்துக்கொண்டே நிற்க…. ருஹானா எழுந்து போய் ரொட்டியை அந்த பெண்ணிற்கு கொடுத்து விட்டாள்…

மாளிகையின் உள்ளே இருந்து கரீமா கனமான ஆடையுடன்.. தன் ஸ்டைல் நடையுடன் வெளியே வந்தாள்.. ருஹானாவை அப்போது தான் பார்ப்பவள் போல.. “நீ இன்னுமா வீட்டுக்கு போகல..? ராத்திரிலாம் இங்கயா இருந்தே.. .? யா அல்லாஹ்!! உன்னை பார்க்கவே பரிதாபமா இருக்கு, டியர்.. எனக்கு தெரியும் நீ வருத்தமா இருக்கேன்னு ..  ஆனா நீ இங்க நிக்கிறதால ஒரு பயனும் இல்ல.. உனக்கும் இல்ல.. இவானுக்கும் இல்ல.. பேசாம வீட்டுக்கு போ.. இன்னும் ஆர்யன் கோபத்துக்கு பலியாகாதே…”.. என பயங்காட்டினாள்..

ருஹானாவின் மன உறுதிக்கு முன் கரீமாவின் பேச்சு செல்லுபடியாகவில்லை.. தலை நிமிர்ந்து சொன்னாள்.. “என் அக்காவுக்காக நான் பல வருடம் ஏங்கியிருந்தேன்… ‘அவ எப்படி இருக்காளோ.. சந்தோசமா இருக்காளா.. எங்களை தேடினாளா..’ன்னு தினமும் கவலைப்படுவேன்” ருஹானா சொல்ல சொல்ல கரீமாவின் முகம் மாறியது.. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கத் தானே செய்யும்..

“அல்லாஹ்ட்ட தினசரி கேட்பேன், அக்காவை என் கண்ணுல காட்டுங்கன்னு.. ஒருநாள் ஒரு போன் வருது.. நான் ஓடுறேன், அக்காவை பார்க்க.. ஆனா அவ கடைசி மூச்சு தான் என் மேல பட்டுச்சி.. அவளை அணைக்க முடியல.. அவள் கிட்ட பேச முடியல.. அவளோட கை கோர்க்க முடியல… என்னால எதும் செய்ய முடியல.. அவளை காப்பாற்ற முடியல…” அழுதுக்கொண்டே ருஹானா பேச.. கரீமா முகத்தில் ஈயாடவில்லை…

“அக்கா மரணப் படுக்கையில தன் மகனை என்கிட்டே ஒப்படைச்சா… தன் கடைசி விருப்பமா அவளோட பொக்கிஷத்தை என் கைல கொடுத்தா… இப்போ நான் என்ன செய்றதுன்னு நீங்களே சொல்லுங்க.. நீங்க என் இடத்துல இருந்தா நீங்க என்ன செய்வீங்க?” என மிகவும் உருக்கமாக கேட்டாள்.. ‘நீ இந்த இடத்துக்கு.. இப்படி நடுத்தெருவுக்கு வரவே இவ தானே காரணம்…’ என்று யார் சொல்வார், அந்த பேதைக்கு…?

இரக்கமற்ற கரீமா தன் முகத்தை கனிவாக வைத்துக்கொண்டு சொன்னாள்.. “இங்க பாரும்மா.. நீ சொல்றது எல்லாமே சரிதான்.. எனக்கு புரியுது.. ஆனா ஆர்யனை பத்தி இன்னும் உனக்கு தெரியல.. இந்த வீட்ல இருந்துக்கிட்டு நான் இதை சொல்லக்கூடாது.. ஆனாலும் உனக்காக சொல்றேன்… நீ இப்படியே நின்னா.. ஆர்யன் மோசமான நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டான்.. இவான் விசயத்துல அவன் எது வேணும்னாலும் செய்வான்… அதனால உடனே திரும்பி பார்க்காம இங்க இருந்து போய்டு.. நான் உனக்கு வாக்கு கொடுக்குறேன்.. என்னால முடிஞ்ச அளவுக்கு இவானை அடிக்கடி நீ பார்க்கிற மாதிரி செய்றேன்.. இன்னும் நீ புண்ணாகறதுக்குள்ள கிளம்பிடு..”…

ஒரு வருத்தமான புன்னகையுடன் ருஹானா கூறினாள்.. “இதுக்கு மேல நான் காயம் பட என்ன இருக்கு..? அப்பாவும், அக்காவும் என்னை விட்டு போய்ட்டாங்க… அதையே தாங்கிக்கிட்டேன்.. எல்லாமே இவானுக்காக.. என் உயிரை எடுக்கறது தவிர வேற என்ன செய்யமுடியும்?… நான் சாக பயப்படுவேனா… ? கண்டிப்பா இல்ல… எனக்கு யாரும் இல்ல… இவானை தவிர… அவன் என் உரிமை.. உயிர்..”

கரீமா எதோ சொல்ல வரவும், ருஹானா, “இல்ல.. என்னை விட்டு விலக சொல்லி கேட்காதிங்க.. நான் இங்க நிக்க ஒரே காரணம்.. இவான்.. இவான் மட்டும் தான்.. அவனை பார்க்காம நான் மூச்சை விட மாட்டேன்.. உங்களை கெஞ்சி கேட்கறேன்.. இவானை பார்க்க எனக்கு அனுமதி கொடுங்க.. அவனுக்கு நான் தேவை… எனக்கு அவன் தேவை..” என்று தீர்மானமாய் சொல்ல கரீமா வாயடைத்துப் போனாள்…

……………

எழுந்து கொள்ளக்கூட முடியாமல் சுவரைப் பிடிமானமாகப் பற்றி எழுந்து தன் வழக்கமான இடமான கேட்டின் மையப்பகுதியில் வந்து நின்றாள், ருஹானா.. மேலிருந்து ஆர்யன் அவளை கடுப்பாக பார்த்துக் கொண்டிருக்க…  பின்னால் வந்து நின்ற கரீமா, “ஆர்யன்! அந்த பொண்ணு ரொம்ப உறுதியா இருக்கா.. எது சொன்னாலும் விட்டு போக மாட்டேன்னு அடம் பிடிக்கிறா… உனக்கு அவ பெரிய தொல்லையா இருக்கான்னு எனக்கு தெரியும்.. ஆனாலும் அவ இவானோட சொந்த சித்தி.. தஸ்லீமோட தங்கச்சி.. “ என அவனுக்கு கொம்பு சீவி  விட.. ஆர்யன் இன்னும் மூர்க்கமானான்..

அந்த சமயம் ரஷீத் வந்தவன் “ஆர்யன்! இவான் சித்தி பத்தி எல்லா விவரமும் கிடைச்சிடுச்சி.. அவ அப்பா இறந்ததும் அவ வீட்டை காலி பண்ணிட்டா.. சொத்துன்னு எதுவும் கிடையாது.. அவ வேலையும் பார்க்கல.. வீட்டு வாடகையும் பாக்கி இருக்கு… “ என சொல்லவும்… கரீமா,  “ஓ.. அதானா.. இங்க வந்து நிக்கிறா” என்று உருவேத்தினாள்.. அவளை திரும்பி பார்த்த ஆர்யன் ஏதோ யோசனையுடன் கீழே செல்ல…  கரீமாவும் , ரஷீத்தும் அவனை பின்தொடர்ந்தனர்…

ருஹானா போன் அழைக்கவும் எடுத்து பார்க்க.. மிஷால் அழைப்பு என தெரிந்து எடுக்கவா, வேண்டாமா என சில நொடிகள் யோசித்து நின்றாள்.. பின் அழைப்பை ஏற்றவள், “அலோ! மிஷால்,” என சொல்ல.. அந்தப்பக்கம் மிஷாலும் “ அப்பாடா! ஒரு வழியா நீ போனை எடுத்துட்ட… நான் உன்னை பத்தி கவலைப்பட்டுட்டு இருக்கேன்.. சொல்லு, நீ எப்படி இருக்கே?? “ என கேட்டான்…  “ நன்றி மிஷால்.. நான் நல்லா இருக்கேன்” என பதில் சொன்னாள்.. மிஷால் மேலும் சொன்னான்…  “நான் பர்வீன் ஆன்ட்டியை பார்த்தேன்.. அவங்க தான் சொன்னாங்க ‘நீ மடாபாக்கு போயிட்டே’ன்னு… நீ ஏன் என்கிட்ட சொல்லாம போயிட்ட… “

“நான் யாருக்கும் தொந்தரவு கொடுக்க விரும்பல” என்ற ருஹானா பதிலில் வருத்தமடைந்தவன் ஆதங்கத்துடன் கேட்டான்.. “தொந்தரவா…  என்ன சொல்ற? நீ எப்படி எனக்கு தொந்தரவு? உன்ன தேடி நான் உன் வீட்டுக்கு போனேன்.. அங்க வீடு காலியா இருந்ததும் நான் கவலைப்பட்டேன்.. உனக்கு ஏதோ ஆகிடுச்சோன்னு ரொம்ப பயந்துட்டேன்” என அவன் சொல்லி கொண்டிருக்கும்போதே ருஹானாவின் கவனம் அவன் பேச்சில் இல்லாமல் மாளிகையின் வாசலுக்கு சென்றது…  அங்கே பாதுகாவலர், ரஷீத், கரீமா பின்தொடர ஆர்யன் நடந்து காரோடும் பாதைக்கு வருவதை பார்த்தவள், “மிஷால்! நான் உன்கிட்ட அப்புறம் பேசுறேன்“ என போனை அடைத்தாள்.. அந்த புறம் மிஷால், “ருஹானா! ருஹானா!“ என்று பதட்டத்துடன் கூப்பிடதையும் அவள் லட்சியம் செய்யவில்லை…

பாதைக்கு நடுவில் வந்து நின்ற ஆர்யன் கேட்டை திறக்க காவலர்களுக்கு கண்ணால் கட்டளை இட்டான்.. அவனுக்கு வலது பக்கம் ரஷீத்தும், இடப்புறம் கரீமாவும் நிற்க.. பாதுகாவலர் இருவரும் பின்னாடி நின்றனர்.. கேட் திறந்ததும் தலையசைத்து ருஹானாவை உள்ள வர கூப்பிட்டான்.. அவள் நம்ப முடியாமல் அசையாமல் நின்றாள்…  ஆர்யன் திரும்ப தலையாட்டி ருஹானாவை அழைத்தான்…  மகிழ்ச்சி ஊற்றெடுக்க வெகு வேகமாக நடந்து வந்து ஆர்யன் முன்னால் நின்றாள்.. வீட்டின் வாசலில் நஸ்ரியாவும், கிச்சன் கண்ணாடி ஜன்னலில் நானியும், சாராவும் இங்கே நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்கள்…

சிவந்த முகத்துடன் விரிந்த கண்களுடன் நின்றவளை ஒரு கணம் பார்த்த ஆர்யன் பின்னால் கை நீட்ட  ரஷீத் ஒரு பணக்கட்டை அவன் கையில் வைத்தான்… ஆர்யன் அதை ருஹானாவிடம் நீட்டி… “நீ இங்க இருந்து போறதுக்கு இந்த பணம் போதும்ன்னு நினைக்கிறேன் … “ என்றான்.. ‘இவானை பார்க்கத்தான் அனுமதிக்க போகிறான்’ என மிக்க மகிழ்ச்சியுடன் ஓடி வந்தவளும் அவனையே நோக்க… ‘ஏன் இவ பணத்தை வாங்க மாட்றா?’ என ஆர்யனும் குழப்பத்துடன் அவளையே நோக்கினான்…  மற்ற அனைவரும் ருஹானாவையே பார்த்துக் கொண்டிருந்தனர்…

ருஹானா முகம் மாறவும், ஆர்யன் பணத்தை நீட்டியபடியே கேட்டான்.. “ஏன்..! இது போதாதா?….“ ருஹானா முகத்தில் அனல் ஏறவும், ஆர்யன் அவளை இன்னும் நெருங்கி சொன்னான்.. “உனக்கு சேர வேண்டிய உன் சகோதரியின் உரிமை இவ்வளவு தான்” அப்போதும் அவள் அசையவில்லை.. சுற்றியுள்ளவர்கள் உற்று நோக்க மேலும் நெருங்கியவன், “இதான் உன் பொக்கிஷம்.. இந்தா.. எடுத்துக்கிட்டு என் வீட்டு வாசலை விட்டுப்போ… “ என அழுத்தி சொன்னான்…

பொங்கி எழுந்த சினத்துடன் ருஹானா கையை தூக்கி பளார் என அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்… அவள் அடித்த அடியில் ஆர்யன் தலை வலப்பக்கமாய் திரும்பியது.. அனைவரும் திக்பிரமை அடைந்து நிற்க.. பாதுகாவலர் தலைகுனிந்து கொள்ள, கரீமாவின் கை தானாக அவள் வாயை மூடியது…  ருஹானா கண்களை மூடி ஒரு கணம் நின்றாள்.. பின் தைரியமாக ஆர்யனை நோக்கினாள்.. ஆர்யனும் தலை திருப்பி சினம் கொண்ட வேங்கையென அவளை நோக்கினான்..

அன்பிற்கு தவிக்கும் சிறுவனும்

அள்ளித் தர துடிக்கும் தாயுள்ளமும்

பிரிக்கும் அரணாய் கல்நெஞ்சு கூட்டமும் !!

தாய்மைக்கு பணம் பரிசாகுமா?

தாயன்பை சீண்டினால்

இடியாய் விழும் ஒரு அடி !!

(தொடரும்)

Advertisement