Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                              அத்தியாயம் – 6

அர்ஸ்லான் மாளிகையின் வெளிகேட்டில் சாய்ந்திருந்த ருஹானாவின் தோற்றம் மிக பாவமாக.. பரிதாபமாக.. உருக்கமாக.. இருந்தது.. கண்கள் பஞ்சடைந்து, முகம் கன்றி சிவந்து.. விரிந்து பறந்த கூந்தல் தூசி படிந்து, அணிந்திருந்த உடை புழுதி படர்ந்து , மேலே போட்டிருந்த கருப்பு கம்பளிஷால் முற்களால் அங்கங்கே கிழிபட்டு… ஒரு கலைந்த ஓவியம் போல் துயரமாய் நின்றாள்.. கையில் காயங்களோடு இவான் சங்கிலியை பிடித்து கொண்டு… மாளிகை வாசலையே பார்த்திருந்த ருஹானாவை… மேன்மாடத்திலிருந்து ஆர்யனும், ரஷீத்தும்  உற்றுநோக்கினர்..

“என்னால நம்பவே முடியல.. அவ எப்படி இங்க வந்தா?” என ரஷீத் அதிர்ச்சியாக சொல்ல… “ரஷீத்! கண்டிப்பா அவளோட நோக்கம் இவானா இருக்காது.. வேற என்னன்னு கண்டுபிடி… போ..” என்று ஆர்யன், ருஹானாவிடம் இருந்து கண்களை எடுக்காமல் சொல்ல… தலையாட்டிய ரஷீத் வேகமாக கீழே இறங்கினான்… இருந்த இடம்விட்டு இம்மியும் இடம்பெயராமல் ஆர்யன் பார்த்துகொண்டே இருந்தான், கண்கள் அலைபாய அசைந்து கொண்டேயிருந்த ருஹானாவை…

ரஷீத் பிரதான வாசலில் நின்ற காரில் ஏறி வெளியே கிளம்பவும், காவலாளிகள் வெளிகேட்டை விரிய திறந்தனர்…  மூடிய கதவு திறந்த பின்னும் மாளிகை உள்ளே நுழைய முயற்சிக்காமல், ருஹானா காருக்கு ஒதுங்கி வழி விட்டாள்.. வெளிய வந்த கார் நேரே செல்லாமல் அவள் அருகே வந்து நின்றது.. கார் கண்ணாடியை கீழே இறக்கிய ரஷீத், தன் வெயில்காப்பு கண்ணாடியும் இறக்கி “நீ இங்க நிக்கறது ஆர்யன் சாருக்கு பிடிக்காது.. உனக்கு உன் உயிர் தேவைனா உடனே இங்க இருந்து போய்டு.. ஒரு நொடி கூட நிக்காதே!” என்று முறைப்புடன் சொன்னான்…

‘மாட்டேன்’ என்பது போல தலையாட்டியவள், “என் உயிரை விட்டாலும் விடுவேன்… இவானை விட மாட்டேன்… நேரம் வரும்போது உங்க சார்க்கும் இது புரியும்” என்று அழுத்தமாக கூறினாள்.. முகம் மாறிய ரஷீத் கண்களை கண்ணாடியால் மறைத்துக்கொண்டு வண்டியை எடுக்க சொன்னான்.. திரும்ப இரும்பு கதவுகள் மூடப்பட.. கதவின் நடுவே உறுதியுடன் வந்து நின்றவள் கம்பிகளை பிடித்துக்கொண்டாள்

———

சாரா மீனை பொரித்து எடுத்துக்கொண்டு, “கேப்டன் இவான்…!! சோள மாவு தடவி இந்த மீன் அழகாயிடுச்சே..! பட்டு சட்டை போட்டு பளபளக்குதே…!” என உற்சாகமாக சொல்லி இவானை சாப்பிட வைக்க முயற்சி செய்தார்… வருத்தமாக அம்ஜத் பெரியப்பா பக்கத்தில் இருக்க, இவானும் சாப்பிட வாயை திறக்கவேயில்லை… “ம்ஹூம்! நீங்க இதை சாப்பிட மாட்டிங்களா, கேப்டன்.. இதை பாருங்க.. நீங்க சாப்பிடுவீங்கன்னு தானே இந்த மீன் எண்ணையில குதிச்சி புரண்டு வந்திச்சி” என ஆடிக்கொண்டே சொல்ல.. இவான் நிமிர்ந்து புன்னகையுடன் பார்த்தான்… “நான் மீன்ட்ட சொன்னேன்.. ‘ஏ மீனே! நீ தவால இருந்து தாவ முடியாது’.. அது குதிக்க குதிக்க பார்த்துச்சி… அப்புறம் அது என்ன பண்ணுச்சி தெரியுமா.. அப்படியே கேப்டன் இவான் தட்டுல வந்து விழுந்துருச்சி… ஹேய்” என சாரா அவனை குதூகலப்படுத்தவும், அவன் வாயில் வாங்கிக் கொண்டான்…

“என்ன கேப்டன் பெரியப்பா! மீன் பாருங்க மீன்..!” என்று அம்ஜத்தையும் சாரா கண் காட்டி அழைக்க.. அவனும் “ஆஹா!!” என எழுந்து மீனை சாப்பிட்டவன், “என்ன ருசி! என்ன ருசி!” என்று இவானுக்கும் ஊட்டினான்… அப்போது அங்கே வேகமாக வந்த நஸ்ரியா, “தலைப்பு செய்தி..!! இவான் சித்தி கேட்ல நிக்கிறாங்க!” என்று கத்தி சொல்ல… சாரா வேகமாக கண் காட்டி இவான் அங்கே இருப்பதை நஸ்ரியாக்கு உணர்த்தினார்…

அதற்குள் சித்தி நினைப்பாகவே இருக்கும் இவானுக்கு அது கேட்டுவிட்டது.. “என் சித்தி வந்துட்டாங்களா…..?” என அவன் வேகமாக எழ.. அம்ஜத்தும் “உன் சித்தி வந்துட்டாங்களா?” என அதையே திருப்பி சொல்ல…., “என் சித்தி…!” என்று ஓடி வந்த இவானை அங்கே வந்த கரீமா தடுத்து நிறுத்தினாள்.. “நான் தோட்டத்துல இருந்து தான் வரேன். அங்கே யாரும் இல்லயே..? வேற யாரையோ பார்த்திட்டு நஸ்ரியா தெரியாம சொல்றா..” என்று சொல்லி… “வெளிய குளிர் அதிகமா இருக்கு.. நீ வெளிய போனா உனக்கு சளி பிடிக்கும்.. நீ மேல உன் ரூம்க்கு போ” என அவனை நானியுடன் அனுப்பினாள்…

நஸ்ரியாவின் கையை பிடித்து சாரா கிள்ள.. அவள் கரீமாவிடம் “மன்னிச்சிடுங்க, மேம்!.. நான் இவான் இங்க இருக்குறத பார்க்கல..” என்று சொல்ல.. “அதை விடு.. நெஜமாவே இவான் சித்தி வந்துருக்காளா?” என பரபரப்புடன் வினவ.. “ஆமா மேம்! வந்துருக்காங்க.. கேட் பக்கத்தில நிக்கிறாங்க.. இங்க இருந்து நகர மாதிரி தெரியல..” என்று பதிலளித்தாள்…

———-

வெளியே மழை கொட்டிக் கொண்டிருக்கிறது…. இவான் அவன் அறையில் கட்டிலில் அமர்ந்து பிரார்த்தனை செய்கிறான்… “அல்லாஹ்..! சித்தி சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு திரும்பி வரணும்… நான் ஒழுங்கா சாப்பிடுவேன்.. சித்தப்பாக்கு தொல்லை கொடுக்க மாட்டேன்… ஆமீன்!” கதவோரம் நின்று அதை பார்த்த ஆர்யன் சலிப்புடன் கதவை சாத்தி சென்றான்…

அடிக்கும் மழையில், ருஹானா தலையில் கம்பளிஷாலை போட்டு தன் முகத்தை மட்டும் மூடி, கேட்டுக்கு வெளியே ஒரு ஓரமாக குத்துக்காலிட்டு அமர்ந்திருக்கிறாள்.. கனவில் அவள் அக்கா சொன்னது – ‘என் மகனை விட்டுவிடாதே’ – காதில் ஒலிக்க.. எழுந்து கேட்டின் அருகே வந்தாள்.. சங்கிலியை பிடித்துக்கொண்டு “சித்தியின் உயிரே!.. நான் இங்கே தான் இருக்கேன், கண்ணே!” என்று அழ.. அவள் கண்ணின்மழை விண்ணின்நீரோடு கலந்து ஓடியது..

ருஹானாவின் போன் ஒலிக்க.. பர்வீன் அதில் அழைக்க.. தொண்டையில் அடைத்த துக்கத்தை விழுங்கிக்கொண்டவள், ஒரு செருமலுடன் “பர்வீன்ம்மா!” என ஆரம்பித்தாள்..

“மகளே! எப்படி இருக்கே?”

“நான் நல்லா இருக்கேன், பர்வீன்ம்மா…”

“ஊருக்கு போனதும் ஏன் எனக்கு போன் செய்யல..? நான் கவலைப்பட்டுட்டு இருக்கேன்…”

“வேலையா இருந்தேன்.. மன்னிச்சிடுங்க, பர்வீன்ம்மா”

“என் பொண்ணு குரல் ஒரு மாதிரியா இருக்கே!”

“இல்லையே பர்வீன்ம்மா.. சரியா தூங்கல.. அதான் அப்படி இருக்கும்”

“நீ உன் உடம்பை நல்லா பார்த்துக்குவேன்னு எனக்கு உறுதி கொடு, மகளே!”

“சரி பர்வீன்ம்மா!”

“நான் உன்கூட இல்லனாலும் என் நினைப்பு பூரா உன்கூடவே தான் இருக்கும்.. நல்லா சாப்பிடு.. எதுக்கும் கவலைப்படாதே” என சொல்லியவருக்கு அவள் அழும் குரல் கேட்டது..

“மகளே! நீ அழறியா?” என அதிர்ச்சியுற்று கேட்டார்..

“உங்க குரல் கேட்டதும் நான் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்.. வேற ஒண்ணுமில்ல.. சரி.. என் பூனைக்குட்டி என்ன செய்யுது? உங்களுக்கு தொல்லையா இருக்கா?”

“இல்லல்ல.. அதுக்கு காயம் நல்லா சரியாயிடுச்சி.. ஒழுங்கா சாப்பிடுது.. மாஷா அல்லாஹ்! துள்ளி குதிச்சி ஓடுது..”

“நல்லது, பர்வீன்ம்மா.. எனக்கு இப்போ கொஞ்சம் வேலை இருக்கு.. நான் அப்புறம் கூப்பிடவா?”

“சரி மகளே! கவனமா இரு.. எனக்கு அப்பப்போ போன் செஞ்சி உன் நலத்தை சொல்ல மறக்காதே…”

“சரி பர்வீன்ம்மா” என போனை அடைத்து மேல் சட்டைப் பையில் போட்டாள்..

கொட்டும் மழையில் நனைந்துகொண்டே ருஹானா அழுவதை மாடி கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்த கரீமா சிடுசிடுத்தாள்.. “இந்த பொண்ணு எனக்கு தொல்லை அதிகமா கொடுப்பா போலயே…!”

——-

“இவானை ருஹானா கூட்டிட்டு செல்வது போலவும், பின்னாலேயே ஆர்யன் ‘இவான்..! இவான்…! என கூவிக்கொண்டே ஓடிச்செல்வது போலவும் கனவு கண்டு, வேர்க்க விருவிருக்க தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டான், ஆர்யன்… சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தவன் எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு கால்களில் செருப்பு மாட்டிக்கொண்டு தன் படுக்கை அறையிலிருந்து முன் அறைக்கு வந்தான்… மேசையில் எதையோ எடுக்க போனவன் திறந்திருந்த லேப்டாப் திரையில் ருஹானாவை பார்த்து அதிர்ந்து போய் தானாக நாற்காலியில் உட்கார்ந்தான்… கண்கள் விரிய பார்க்க… பார்க்க… அடித்து ஊற்றும் மழையில் சாலையோரம் மடங்கி அமர்ந்திருந்தவள் தெளிவாக தெரிந்தாள்…

கடுப்பாக பார்த்தவன் தலையை திருப்பி அமர்ந்து யோசிக்க….கண்கள் தானாக திரும்பி அவளை நோக்கியது… உள்ளுக்குள் இனம் தெரியாத ஏதோ ஒன்று எதையோ பிரட்டியது.. பல முயற்சிகளுக்கு பின்னும் கண்கள் அவனை ஏமாற்றி லேப்டாப் புறமே செல்ல… பட்டென்று அதை மூடி வைத்தான்.. நெற்றி வேர்த்திருக்க.. எச்சில் விழுங்குவது தொண்டையில் தெரிந்தது…

———-

போலீஸ் கமிஷனர் அலுவலகம்.. பர்வீன் மகன் தன்வீர் தன் தாயுடன் போனில் பேசிக்கொண்டிருக்கிறான்.. “ஆமாம்மா.. இப்போ தான் வேலை முடிஞ்சது.. கமிஷனர் வாசிம்மை வீட்ல விட்டுட்டு வரேன்.. என்ன உங்க குரல் அழுதது போல இருக்கு..?” என கவலையுடன் கேட்க.. “இரவெல்லாம் தூங்கலப்பா.. ஒரே ருஹானா நினவு தான்..” என்று போனின் அந்த பக்கம் பர்வீன் சொன்னார்..

“என்னாச்சி ருஹானாக்கு.. தப்பா ஏதும் நடக்கலல.. இப்போ அவ எங்க இருக்கா?” என தன்வீர் பதட்டத்துடன் விசாரிக்க… வீட்டிற்கு செல்வதற்கு தயாராக குளிர்மேலுடையை எடுத்த கமிஷனர் வாசிம் நின்று தன்வீர் பேசுவதை கவனித்தான்… “இல்லை, தன்வீர்.. நேத்து அவட்ட பேசினேன்.. அவ குரல் கவலையா இருந்தது” என அன்னை சொல்ல.. மகனும், “அம்மா! அவளுக்கு நேர்ந்த துயரம் லேசானதா..? கவலையா இருப்பா தானே. நீங்க அதையே யோசிக்காதீங்க.. நான் வந்து பேசுறேன்” என்று சொல்லி போனை மூடினான்…

“என்ன தன்வீர்! ஒன்னும் பிரச்சினை இல்லையே..?” என கேட்ட கமிஷனர் வாசிம் அகாபா நகரின் காவல்துறையின் உயர் அதிகாரி… தன்வீருக்கு மேல் அதிகாரி.. என்றாலும் எந்தவித பந்தாவும் முறைப்பும் இல்லாமல் பழகக் கூடியவன்… உயரமான இளைஞன்.. அழகான தோற்றம்.. கட்டுமஸ்தான உடல்.. தீட்சண்யமான கண்கள்…

“அப்படித்தான் நினைக்கிறேன், பாஸ்..” தன்வீர் சொல்ல..

“யாருக்கு, என்ன?” வாசிம் கேட்டான்..

“என் சகோதரி, பாஸ்”

“சகோதரியா..? நீ ஒரே பையன் தான்னு சொன்னியே”

“ஆமாம் பாஸ்.. அவ என் வளர்ப்பு சகோதரி.. ருஹானா பிறக்கும்போதே அவ அம்மா இறந்திட்டாங்க.. என் அம்மா தான் அவளுக்கு பாலூட்டி வளர்த்தது.. என் சொந்த சகோதரி போலத்தான்”

“ஓ! அப்படியா?.. இப்போ என்ன பிரச்னை?”

“ருஹானாவோட இப்போதைய நிலைமை ரொம்ப கஷ்டமானது.. அவ அக்காவை அவ அஞ்சாறு வருஷமா பார்க்கல.. போன வாரம் திடீர்னு அக்கா இறந்திட்டா.. ரெண்டே நாள்ல அவ அப்பாவும் அவளை விட்டு போய்ட்டார்…”

“அப்பாவும் அக்காவுமா?.. அச்சோ! பாவம்!”

“இவான் அங்கிள் இறந்ததும் வீட்டை காலி செய்துட்டு தாத்தா ஊருக்கு கிளம்பிட்டா… ஆனா…”

“ஆனா.. என்ன ஆனா..?”

“எனக்கு ஏதோ சரியாப்படல, பாஸ்.. நான் அம்மாக்கிட்ட சொல்லல.. ஆனா எதோ சரியில்லன்னு தோணுது”

“சரி, வா.. நாம பேசிட்டே போலாம்” என கமிஷனர் வாசிம் சொல்ல இருவரும் காவல் அலுவலகம் விட்டு வெளியேறினர்…

சிறிது தூர பயணத்தில் இன்னும் சொன்னான், தன்வீர்.. “எப்போ தஸ்லீம் அக்கா அர்ஸ்லான் வீட்டுக்கு மணப்பெண்ணா போனாளோ, அப்போருந்தே இவான் அங்கிள் சிரிக்க மறந்திட்டார்…”

வாசிம் கேட்டான், “அர்ஸ்லானா…! நமக்கு தெரிஞ்ச அர்ஸ்லானா…?  ஆர்யன் அர்ஸ்லான்..!!”

தன்வீர் ஆமோதிக்க.. வாசிம் அவனை தேற்றினான்… “நீ கவலைப்படாதே.. உன் சகோதரியை யாரும் ஏதும் செய்ய முடியாது.. நாம எதுக்கு இங்க போலீஸ்ன்னு இருக்கோம்!!”

தோட்டத்துடன் கூடிய அழகிய வீட்டின் முன் வந்து கார் நிற்க.. வாசிம் காபி சாப்பிட உள்ளே வருமாறு தன்வீரை அழைத்தான்.. “ஹெமதுல்லா அங்கிள்க்கு எதுக்கு சிரமம்?” என தன்வீர் மறுக்க… “அட பிகு செய்யாதே.. வா.. இந்த வீட்டை எங்களுக்கு பார்த்து கொடுத்துருக்கே.. ஒரு காபி கொடுக்க மாட்டோமா.. அதுல்லாம என் பெரியப்பாக்கு விருந்தாளிகளை வரவேற்குறதுனா இஷ்டம்.. வா” என சொல்லி வாசிம் தன்வீரை உள்ளே அழைத்து போனான்..

வெள்ளை நிற கேட் தாண்டியதும் இருபக்கமும் சிறிய தோட்டத்துக்கு நடுவே நடந்து சென்று வீட்டை அடைய… அங்கே டிவி ஓடிக்கொண்டிருக்க.. ஹெமதுல்லா சோபாவில் அமர்ந்து தூங்கி கொண்டிருந்தார் … வாசிம் அவரை உலுக்கவும்….  எழுந்தவருக்கு தன்வீரை அறிமுகம் செய்தான்.. “என்கூட வேலை செய்றான்.. தன்வீர் தான் நமக்கு இந்த வீடு பார்த்து தந்தது..” என்று சொல்ல.. “ஓ! பர்வீன் மகன் தானே.. உங்க அம்மா ரொம்ப உதவி செய்தாங்க..” என்று உற்சாகமாக பேசினார்… “ஆமா அங்கிள்! அம்மா உங்களை பத்தி நெறைய சொன்னாங்க” என சொன்ன தன்வீர், “பாஸ்! கிச்சனில் எதோ வாடை அடிக்குது” என்று வாசிமிடம் சொன்னான்..

ஓடிச்சென்று தீயை அணைத்த வாசிம், உணவை அடுப்பில் விட்டுவிட்டு உறங்கிய பெரியப்பாவை கடிந்து கொண்டான், ‘எந்த பணியாளையும் பெரியப்பா வேலைக்கு வைக்க விடுவதில்லை’ என தன்வீரிடம் புகார் படித்தான்… தன் வேலையை தானே பார்த்துகொண்டு, வாசிம்க்கும் தானே உணவு  தயாரித்துக் கொடுப்பதாகவும், உதவியாள் தனக்கு தேவையில்லை எனவும் ஹெமதுல்லா மறுக்க.. அவர்களின் பாச சண்டையை வேடிக்கை பார்த்து தன்வீர் சிரித்தான்..

Advertisement