Advertisement

சரமாரியாக அம்புகளை விட்டு முடித்த ஆர்யன் அறைக்கு திரும்ப, சோபாவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் ருஹானாவை பார்த்தான்.  “நான் தப்பு செய்திட்டேன். ஆரம்பத்துல இருந்தே அந்த ஃபைல்ல இருந்ததை நான் நம்பியிருக்கக் கூடாது. என்னோட இருட்டுப் பக்கத்துல உன்னை இழுத்துட்டேன். உன்னை நான் நம்பல. அவநம்பிக்கையால உனக்கு நான் கொடுமை செய்திட்டேன். வருத்தம் தெரிவிக்க என்கிட்டே வார்த்தையே இல்ல. ஆனா நீ இல்லனா, நான் இல்ல! இது மட்டும் தெரிஞ்சிக்கோ! தேவைப்பட்டா இந்த உலகத்தையே உனக்காக நான் எதிர்த்து நிற்பேன்! நீ இல்லாத உலகம் எனக்கு ஒன்னுமேயில்லை!”

அவளை எழுப்பி இப்படியே எல்லாவற்றையும் சொல்லிவிடலாமா என யோசித்தவன், தலையாட்டி மறுத்தான். “நான் செய்த கொடுமைக்கு பதிலா இப்படி பேசறது எளிது கிடையாது. என்னால முடியாது!”

காலை வரை அவளை பார்த்துக் கொண்டிருந்தவன் “வெட்கப்படாம உன்னை என்னால பார்க்க முடிந்தா, அதுக்கு என்ன விலைனாலும் நான் தருவேன்!” என்று சொல்லிக்கொண்டான். ‘கோபத்தோடு எழுபவன் அவமானப்பட்டே அமர்வான்’ எனும் பழமொழி தனக்கு எத்தனை பொருத்தம் என நொந்து கொண்டான்.

அவளிடம் அசைவு தெரியவும் எழுந்து வெளியே சென்றுவிட்டான்.

கதவு சாத்தும் சத்தம் கேட்டு எழுந்த ருஹானா தன்மேல் போர்த்தப்பட்டிருக்கும் போர்வையை யோசனையாக பார்த்தாள்.

கீழே வரவேற்பறைக்கு வந்த ஆர்யனை “நீங்க சரியா இல்லயே?” எனக் கேட்டான் ஜாஃபர். கரீமா மேலே நின்று அவர்கள் பேசுவதை கவனித்தாள்.

“பெரிய குருடனா இருந்திருக்கேனே! அவ செய்திருப்பான்னு எப்படி நான் நினைத்தேன்? உலகத்திலுள்ள எல்லா ஆதாரங்களும் அவளுக்கு எதிரா இருந்திருந்தாலும் நான் அவகூட தானே நின்றிருக்கணும்? அவ அப்படித்தானே போராடி என்னை சிறையில இருந்து வெளிய கொண்டுவந்தா! நான் ஏன் அதை செய்யல?” என ஆர்யன் பல்லைக் கடித்தான்.

“அவங்க கூட மனம்விட்டு பேசினா தான் உங்க கஷ்டம் தணியும். பேசுங்க சார்!”

“நான் அவளுக்கு செய்த துரோகம் அவளுக்கு தெரியக்கூடாது, ஜாஃபர்!  தெரிந்தா நான் அவளை நிரந்தரமா இழந்திடுவேன்!” என்றான் தாங்க இயலா துயரத்துடன்.

“அப்படினா அவளுக்கு அது கண்டிப்பா தெரியணுமே!” என்று சொல்லி சிரித்த கரீமா ருஹானாவிடம் சென்றாள்.

வருத்தத்தை முகத்தில் பரவவிட்டபடி வந்த கரீமாவை பார்த்து “கரீமா மேம்! என்ன நடந்தது? ஏன் இப்படி இருக்கீங்க?” ருஹானா படபடப்பாக கேட்க, கரீமா “சல்மாவை போலீஸ் கைது செய்திட்டாங்க” என்றாள்.

“என்ன? ஏன்?”

“ஆர்யன் அவ பேர்ல புகார் கொடுத்துட்டான்.”

“சல்மா அந்த அளவுக்கு என்ன தப்பு செய்தா?” ஆர்யனை சரியாக தெரிந்துவைத்திருந்த ருஹானா கேட்டாள்.

“என்னால சொல்லமுடியாது. எனக்கு அவமானமா இருக்கு. ஆனா உனக்கு இது தெரியணும், ருஹானா! சல்மா….”

வேகமாக உள்ளே வந்த ஆர்யன் கரீமாவை முறைத்தான். “சல்மா வஞ்சனை செய்திட்டா!” என்று ருஹானாவை பார்த்து முடித்தான். ருஹானா அதிர்ச்சியாக பார்க்க, “பொய்யான ஆவணங்கள் தயாரித்து பெரிய தப்பு செய்திட்டா! எங்களை ஏமாத்திட்டா! அதனால தான் அவளுக்கு தண்டனை கிடைக்கப் போகுது” என்றான்.

“எப்படி? அலுவலகத்திலயா?” என்று ருஹானா கேட்க, இனி எந்தக்காலத்திலும் அவளிடம் பொய் கூற விரும்பாத ஆர்யன் பதில் பேசாமல் இருக்க, “ஆமா, பெரிய குற்றம்” என்று கரீமா சொன்னாள்.

‘நான் உங்களுக்காக வருந்துறேன். கடினமான நிலை உங்களுக்கு!”

“ஆமா, எனக்கு அவமானமா இருக்கு.”

“உங்களுக்கு எதும் தேவைனா என்கிட்டே சொல்லுங்க!” என்று ருஹானா பரிவோடு கரீமாவின் கையை பிடித்தாள். “நன்றி, ருஹானா டியர்!” என்ற கரீமா கடுப்பாக ருஹானாவின் திருமண மோதிரத்தை தடவினாள்.

ருஹானாவின் கவலையை பார்த்த ஆர்யன் “அண்ணி! நான் உங்ககிட்டே கொஞ்சம் பேசணுமே!” என்று கரீமாவை வெளியே கூப்பிட்டான்.

“அந்த டிடெக்டிவ் சல்மாவுக்காக தான் தேடியிருக்கார். எனக்காக இல்ல” என்று ருஹானா நிம்மதி பெருமூச்சை வெளியிட்டாள்.

படிக்கட்டின் அருகே கரீமா முந்திக்கொண்டு கேள்வி கேட்டாள். “ஏன் ஆர்யன் எதுவும் ருஹானாகிட்டே சொல்லக்கூடாது? அவளுக்கு இதை தெரிஞ்சிக்கற உரிமை இருக்கே!”

“இப்போ இல்ல!”

“ஆனா அவளுக்கு தெரிஞ்சிட்டா?”

“சீக்கிரமே சரியான நேரம் பார்த்து நானே சொல்றேன். அதுவரை அவளுக்கு எதுவும் தெரியக்கூடாது.”

“சரி, ஆர்யன்! எனக்கு களைப்பா இருக்கு. நான் அறைக்கு போறேன். சல்மாக்காக மன்னிப்பு கேட்கவே எனக்கு வெட்கமா இருக்கு” என்று கரீமா சொல்ல, ஆர்யன் பால்கனிக்கு வந்தான்.

“உன் அப்பாவித்தனத்தை தவிர மத்த எல்லாத்தையும் நான் நம்பினேன். அதான் உன்னை கஷ்டப்படுத்திட்டேன். நான் இதை எப்படி உன்கிட்டே சொல்லுவேன்?” என்று கட்டுப்போட்ட கையை நெறிக்க புதிய குருதி வெளியே பாய்ந்து வந்தது.

அங்கே வந்த ருஹானா சூனியத்தை வெறித்து நிற்கும் ஆர்யனை பார்த்து பாவப்பட்டவள், அருகே ஜாஃபர் வரவும் “உங்களுக்கும் நடந்தது தெரியும்தானே ஜாஃபர் அண்ணா? எனக்கு அதிர்ச்சியா இருந்தது” என்றாள் அவனிடம்.

தலையாட்டிய ஜாஃபர் “இந்த அளவுக்கு அவர் பாதிக்கப்பட்டு நான் பார்த்ததே இல்ல” என்று சொல்ல, “மிக கடுமையான நிலை! இப்படி அவருக்கு நடக்கும்னு யாராலும் நினைச்சி கூட பார்க்க முடியாது” என்று பரிதாபப்பட்டாள்.

ஆர்யனின் அருகே சென்றவள் “உங்களுக்கு எப்படி இருக்கும்னு என்னால உணர முடியுது. நீங்க நம்பின ஒருத்தர் எதிர்பார்க்காதபோது முதுகுல குத்தினா என்ன ஆகும்? அதும் குடும்பத்தினரே! எதிரினா சண்டை போட்டு ஜெயிக்கலாம். ஆனா இங்க என்ன செய்ய முடியும்? அதிர்ச்சியா தான் இருக்கும்” என்றாள்.

‘சொல்லாதே! சொல்லாதே! இது எல்லாமே நான் உனக்கு செய்தேன்!’ ஆர்யன் மனதிற்குள் அலறினான்.

“எனக்கும் இது நடந்திருக்கு!”

‘ஆமா, நான் தான் நடத்தினேன்!’ ஒப்புக்கொண்டான் உள்ளே.

“நான் உங்களுக்கு ஆறுதல் சொல்ல வரல. இப்போ உங்களுக்கு புரியுதா? நெருக்கமா இருக்கறவங்க கத்தியை கொண்டு வந்து நெஞ்சில குத்தினா எப்படி இருக்கும்னு? நீங்க எவ்வளவு தூரம் குடும்பத்தை மதிப்பீங்கன்னு எனக்கு தெரியும். அதனால இது எவ்வளவு வேதனை தரும்னும் எனக்கு தெரியும்.” சாட்டையாய் ருஹானா சொடுக்கினாலும் ஆர்யனுக்கு வலிக்கவே இல்லை.

“சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமா நாமும் குடும்பமாகிட்டோம். அதனால கடினகாலங்களில் நாம சேர்ந்து இருக்கறது அவசியம். எனக்கு இதை நீங்க நிறைய உணர்த்தி இருக்கீங்க! எது நடந்திருந்தாலும் இப்போ உங்களுக்கு என்னோட வருத்தத்தை தெரிவிக்கிறேன்” என்றவளை ஆர்யன் அபூர்வப் பொருளை பார்ப்பது போல பார்த்தான்.

ஆம்! அவள் யாருக்கும் கிடைக்காத அபூர்வமானவள் தானே? ஆனால் அவளின் அருமை தெரியாத ஆர்யனுக்கு கிட்டியிருக்கிறாளே!

கண்ணிமைக்காமல் பார்க்கும் அவனின் பார்வை அவளை சங்கடப்படுத்த “இவானை போய் பார்க்கறேன்!” என்று அவள் திரும்ப, “இரு!” என்று அவளை நிறுத்தியவன் “என்னோட குடும்பத்துக்கும், அண்ணிக்கும் நீ ஆதரவா இருக்கறதுக்கு நன்றி!” என்றான்.

தலையாட்டிய ருஹானாவின் பார்வை கீழே செல்ல, சிதறும் இரத்தத்துளிகளை பார்த்து பதறினாள். தன்னியல்பாக வேகமாக ஆர்யனின் கையை பிடித்தவள் “உங்க கைக்கு என்ன ஆச்சு? கையை அழுத்தாதீங்க! இது உங்க தப்பு இல்ல” என்று கைக்கட்டை கழட்டினாள்.

ஆழமான காயத்தை பார்த்து கவலையானவள் “நான் ஜாஃபர் அண்ணாட்ட மருந்து போட சொல்றேன்” என்றாள்.

“இல்ல, நானே பார்த்துக்கறேன்” என்று ஆர்யன் சொல்ல, “ஆனா அலட்சியம் செய்யாதீங்க! வந்து…. கிருமித்தொற்று ஏற்படலாம். அதனால தான் சொன்னேன்” என்று அவன் கையை விட்டுவிட்டு சென்றாள்.

அவளது விலகலை தாங்கமுடியாத ஆர்யன் கைவிரல்களை இறுக்கமாக மூடினான். சொட்டு சொட்டாக வடிந்த செந்நீர் வெள்ளை ரோஜாவை சிவப்பாக மாற்றியது.

———

“சல்மாவை நீதிமன்றத்துல கொண்டுவந்து ஆஜர் செய்து இப்போ தற்காலிக சிறைல போட்டு இருக்காங்க, ஆர்யன்!”

“லாயர்ஸ்ட்ட பேசு, ரஷீத்! அதிகபட்ச கடுமையான தண்டனை வாங்கிக்கொடுக்க என்ன செய்யணுமோ அதை செய்ய சொல்லு!”

“ஆர்யன்! எனக்கு தெரியும், இது மன்னிக்கக்கூடிய தவறு இல்ல. ஆனா…”

“எதுவும் இல்ல. அவ இனிமே இங்க எதுவும் இல்ல” என்று ஆர்யன் சொன்னதும் ரஷீத் கீழ்படிந்து வெளியே சென்றான்.

‘இனிமேல் எதையும் மறைக்கக் கூடாது. எது நடந்தாலும் நடக்கட்டும். நான் அவளுக்கு சொல்லியே ஆகணும்’ என்றபடி கையில் புதிய கட்டுப்போட்டுக்கொண்டு ஆர்யன் எழுந்து நடக்க, கதவை திறந்துக்கொண்டு ருஹானா உள்ளே வந்தாள்.

“உங்களை பார்க்க வந்தேன்!”

“உன்னை பார்க்க வந்தேன்!” என்று இருவரும் சொல்ல, ஆர்யன் ருஹானா பேச காத்திருந்தான்.

“மிஸ்டர் ரஷீத் போனதை பார்த்தேன். நான் நேத்து உங்க ஆபீஸ் போனேன். அதுபத்தி சொன்னாரா? நான் ஏன் போனேன்னா..” என்று தயக்கமாக ருஹானா தொடங்க, ஆர்யன் இடைமறித்தான். “இல்ல, அதை பற்றி இல்ல. இது வேற!”

‘அது உனக்கு உரிமையான இடம் தானே? அதற்கு எதுக்கு விளக்கம்?’ என்பது போல அவள் அலுவலகம் சென்றதை அவன் சட்டை செய்யவில்லை.

“வேற என்ன?” என்று கேட்டவள் ஆர்யனின் கட்டு அவிழ்ந்திருந்ததை பார்த்துவிட்டாள். “சரியா கட்டு போடலயா?” என்றபடி அவன் கையை பிடித்து நெருங்கி அதை சரியாக கட்டினாள்.

அவளின் கருணையை கண்டு குற்ற உணர்ச்சியில் ஆர்யன் வெட்கப்பட்டு நின்றான். அவனின் பரிதாப பார்வையில் சுயநினைவடைந்த ருஹானா விலகி நின்றாள். “நீங்க என்ன சொல்லணும்?” எனக் கேட்டாள்.

“இவான்…. மருந்து சாப்பிட்டானா?”

“ஆமா, விளையாடிட்டு இருக்கான். எனக்காக காத்திருப்பான்” என்று சென்றுவிட்டாள்.

———

“எந்த சிறையில போட்டு இருக்காங்க?” என்று விவரம் கேட்டுக்கொண்ட கரீமா வஞ்சினம் உரைத்தாள். “சல்மா இங்கில்ல, ஆனா நான் தனியாவே உன்னை முடிப்பேன், பாம்பு சித்தி!”

——–

ஆர்யன் தன்வீருக்கு எல்லாவற்றையும் விளக்கி முடித்தான். “சல்மாவும் மிஷாலும் சேர்ந்து செய்திருக்காங்க” என்று ஆர்யன் சொல்ல, தன்வீர் திகைப்பாக அமர்ந்திருந்தான்.

“ருஹானாவுக்கு தெரியுமா இப்போ? நேத்து என்கிட்டே பேசும்போது அவளுக்கு எதும் தெரியலயே!”

“இல்ல, இன்னும் சொல்லல!”

“வேற யார் மூலம் தெரியறதுக்கு முன்ன நீங்களே சொல்லிடலாம், இல்லையா?”

“ஆமா, ஆனா அது எளிது இல்ல!”

“ஏன் ஆர்யன்?”

ஆர்யன் தலைகுனிந்து கொண்டான். “நான் அவகிட்டே கடுமையா நடந்துகிட்டேன். பேசக்கூடாதுலாம் பேசிட்டேன். அதுல இருந்து….”

“நீங்க ஒருத்தருக்கொருத்தர் விலகிட்டீங்க. உங்களுக்குள்ள என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது. ஆனா ஒன்னு மட்டும் சொல்வேன். ருஹானா வெறுப்பை இழுத்து பிடிச்சி வச்சிக்கறவ கிடையாது. நீங்க சொன்னா அவ புரிஞ்சிப்பா.”

“புரிஞ்சாலும் என்னை அவ மன்னிக்கலனா?”

“சரிதான். ஆனா இது நீங்க சொன்னா தான் சரியா இருக்கும். ஏன்னா யார் இதயத்தை புண்படுத்தினாங்களோ அவங்க தான் மருந்தும் போட முடியும். ஏன்னா எங்க காயம் பட்டதுன்னு அவங்களுக்கு தான் தெரியும்!”

தன்வீர் சொல்லி சென்ற வார்த்தைகளை மனதில் அசைப்போட்டவாறே, ஆர்யன் தான் உடைத்த பேனாவை ஒட்டுவதற்கு பலவிதங்களில் முயற்சி செய்தான். எத்தனை விதமான ஒட்டுபசையை கொண்டு இணைத்து பார்த்தாலும் இரு துண்டுகளும் இணையவில்லை.

(தொடரும்)

Advertisement