Advertisement

அவளை ஆர்யன் குண்டுகட்டாய் வெளியே தூக்கிவந்தான். வாசலில் போலீசை பார்த்ததும் பீதியான சல்மா வீட்டிற்குள் ஓடிப் போக முயற்சி செய்ய, ஆர்யன் அவளை பிடித்து காவல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தான்.

ரஷீத்துடன் நின்ற காவல் அதிகாரிகளையும் காவல் வண்டியையும் எதிர்பாராத கரீமா அதிர்ந்து நின்றாள். சல்மாவை மாளிகையை விட்டு ஆர்யன் அனுப்புவான். அதன்பின் தான் பார்த்துக் கொள்ளலாம் என இருந்தவளுக்கு பேரிடியாக நெஞ்சில் விழ திகிலடைந்து நின்றாள்.

“மிஸ் சல்மா! மோசடி செய்த குற்றத்துக்காக உங்களை கைது செய்றோம்” என்ற அதிகாரிகள் அவளை காரில் ஏற்றினார். அவளின் பயங்கர ஓலம் எங்கும் எதிரொலித்தது. எந்த வினாடியும் அக்கா தன்னை காப்பாற்றுவாள் என அசையாது நின்ற கரீமாவை பார்த்துக்கொண்டே சல்மா காரினுள் பரிதவித்தாள்.

கார் வெளியே சென்று மறைய, “சல்மா தப்பு செய்தா! அவ கெட்டவ! ஆர்யனுக்கு வேற வழி இல்ல. அவளே அவனை இந்த நிலைக்கு கொண்டு வந்துட்டா. எல்லார் நிம்மதியும் கெடுத்தா!” என்று அம்ஜத் அமைதியாக சொன்னான்.

உள்ளே வந்த ஆர்யனிடம் கரீமா “ஆர்யன்! அவளுக்காக நான் உன்கிட்டே மன்னிப்பு கேட்கறேன். இப்படி ஒரு தங்கை எனக்கு இருக்கறதை நான் அவமானமா கருதுறேன். டிடெக்டிவ்வை கொலை செய்ய சொன்னது நிஜமா சல்மா தானா? அதுக்கு ஆதாரம் இருக்கா?” என விசாரித்தாள்.

ஆர்யன் சிலையாக நிற்க, ரஷீத் “துரதிஷ்டவசமாக ஆதாரம் எதுவும் இல்ல. வாக்குமூலம் கொடுக்கறதுக்கு முன்ன டிடெக்டிவ் இறந்துட்டான். சுட்டவங்களையும் கண்டுபிடிக்க முடியல. கொலையை நேர்ல பார்த்த சாட்சியும் இல்ல. சல்மா மேல கொலைக்குற்றம் பதிவு செய்ய சரியான நிரூபணம் இல்ல” என்று சொல்ல, கரீமாவிற்கு நிம்மதியானது.

“எல்லாரும் மாளிகைல இருக்காங்களா?” ஆர்யன் கேட்டான்.

“ருஹானாவை கேட்கறியா? காலைலயே வெளியே போனா! அவளுக்கு போன் செய்து கூப்பிடவா?”

“வேணாம்!”

——–

காவல்நிலையத்தில் ருஹானா தன்வீரின் முன் அமர்ந்திருந்தாள்.

“நான் ஒரு தப்பு பண்ணிட்டேன், தன்வீர்! அதனால எனக்கு பாதிப்புன்னா பரவால்ல. இவானை இழக்கறது போல ஆகுது.” போலி அடையாள அட்டைகளைப் பற்றி அவனுக்கு சொல்லாமல் பூடகமாக பேசினாள்.

“ஏன்? ஆர்யனுக்கு இது தெரியுமா?”

“எங்களுக்கு நடுவுல இப்போ சுமூகமான உறவு இல்ல, தன்வீர்! நானே ஒரு துருப்பு சீட்டை அவர் கையில கொடுத்துட்டேன். அதை பயன்படுத்தி அவர் இவானை என்கிட்டே இருந்து எடுத்துக்கலாம்.”

“ஏன் ஆர்யன் அப்படி செய்யப்போறார்?”

அதற்கு பதில் சொல்லாத ருஹானா “அப்படி நடந்தா நீ தான் எனக்கு உதவி செய்யணும். எனக்கு உன்னைத்தவிர வேற யாரும் இல்ல” என்றாள்.

தங்கையின் கலக்கத்தை பார்த்து தன்வீர் குழம்ப, ஆர்யனிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. “இரு, வரேன்!” என்று சொல்லி அவளை விட்டு தள்ளி போய் போனை எடுத்தான்.

“என்ன நடந்தது ஆர்யன்?”

“சிக்கல் தீர்ந்துடுச்சி, தன்வீர்! ஒரு பெரிய தவறு செய்றதுல இருந்து நீ என்னை காப்பாத்திட்டே!”

“இதுல ருஹானாவோட தவறு எதும் இருக்கா?”

“நிச்சயமா இல்ல! அவ பேர்ல ஒரு சின்ன தவறும் இல்ல. நான் உனக்கு நேர்ல எல்லாம் சொல்றேன். உன்னோட தங்கையின் பாதுகாப்புக்கு நான் உனக்கு உறுதி அளிக்கறேன்” என்று ஆர்யன் சொல்ல, நிம்மதியான தன்வீர் ருஹானாவிடம் வந்தான்.

“தன்வீர்! நீ ஒன்னும் சொல்லலயே! நீ எனக்கு உதவி செய்வே தானே?”

“உங்க ரெண்டுபேருக்கு நடுவுல என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது, ருஹானா! ஆனா ஆர்யன் உன்னை கஷ்டப்படுத்த மாட்டார். நீ நினைக்கறது போல எதுவும் நடக்காது. ஆர்யன் மேல நம்பிக்கை வை. அவருக்கு கொஞ்சம் நேரம் கொடு. அதுக்கு அப்புறமும் உனக்கு திருப்தி ஆகலனா நாம பேசலாம். சரியா?”

———-

தன்வீரிடம் பேசி முடித்த ஆர்யன் சோபாவில் தன்னருகே இருந்த ருஹானாவின் குளிராடையை கையில் எடுத்து பார்த்தான்.

அந்த அறையில் வைத்து அவளை மிரட்டியதும், அவள் கையை பிடித்து தள்ளியதும், அவள் என்னவென்று தெரியாமல் தவித்து அழுததும் அவன் நெஞ்சில் ஈட்டிகளாக குத்தின.

அவளுக்கு ஆறுதல் சொல்ல மனம் பரபரத்தது. எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளை தேற்றுவான்? ருஹானாவிற்கு அவன் இழைத்த கொடுமைகளும், அவளின் கெஞ்சலும், தேம்பலும் அவனை பாடாய்படுத்தியது. அவன் மீதே கோபம் கொப்பளிக்க வைத்தது.

அங்கிருந்த கண்ணாடி டம்ளரை கையில் எடுத்தவன் அதை அழுத்தி பிடித்தான். அது உடைந்து நொறுங்க அதை மேலும் அழுத்தினான். கண்ணாடி துண்டுகள் அவன் உள்ளங்கையில் இறங்கி பதம் பார்த்தன. பழத்தை பிழிவது போல அவன் இன்னும் அழுத்த, சாறாக இரத்தம் பொங்கி வழிந்துகொண்டே இருந்தது.

                                        ————

அந்தி சாய்ந்து இரவு கவ்வும் வேளையில் ருஹானா பயம், ஏமாற்றம், குழப்பம் என பல்வேறு உணர்வுகளுடன் மாளிகையை பார்த்துக்கொண்டே உள்ளே நுழைய, ஆர்யன் வில் அம்போடு கதவை திறந்துகொண்டு வெளியே வந்தான்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு அப்படியே நின்றனர். அவர்களின் இதயங்கள் மௌனமாக பேசிக்கொண்டன.

இதோ உங்க முன்னாடிதான் இருக்கேன். என்ன செய்யப்போறீங்க? மறுபடியும் கத்தப்போறீங்களா?’

என்னை பாரேன் நீ! உன் கண்ணை பார்க்கற தைரியம் எனக்கு இல்ல!

அதே பார்வை? இன்னும் என்னை பார்த்து முடிக்கலயா நீங்க? ஆனா நீங்க என்னை பார்க்கும்போது என்னோட பொய்கள் தானே உங்களுக்கு தெரியும்?’

உன் கண்ணுல பயத்தை கொண்டுவந்துட்டேனா நான்? இப்படித்தான் என்னை இனிமேல் நீ பார்க்கப் போறியா?’

ஒரு காலம் இருந்தது, அப்போ நாம பேசாமலயே புரிஞ்சிக்கிட்டோம். ஆனா இப்போ இந்த பயங்கர அமைதியால நீங்க என்னை சாகடிக்கறீங்க!

நீ உண்மையை தெரிஞ்சிக்க வேண்டிய நேரம் இது! நான் நம்பினதை நீ கேட்கணும், என்னோட மிகப்பெரிய துரோகத்தையும்..

பேசுங்க! தயவுசெய்து பேசுங்க! அமைதி சுவரை நாம கிழிக்கப் போறாமோ, இல்லயா?’

நம்ம ரெண்டுபேருக்கும் நடுவுல துரோக சுவரை கொண்டுவந்துட்டேன். உன் உயிரே போறதா இருந்தாலும் இதெல்லாம் நீ செய்திருக்க மாட்டேன்னு என்னால ஏன் நம்பமுடியல? யார்னாலும் இதை செய்திருப்பாங்க, ஆனா அவ செய்திருக்கவே மாட்டான்னு என்னால ஏன் சொல்ல முடியல?’

உங்களை கெஞ்சி கேட்டுக்கறேன். மௌனமா இருக்காதீங்க! கத்துங்க! கோபப்படுங்க! ஆனா எதையாவது பேசுங்க!

என்னோட துரோகத்தை உனக்கு சொல்லாதவரை நான் வேற என்ன சொல்லமுடியும்?’ 

எனக்கு என்ன செய்தீங்க?’

மோசம் செய்திட்டேன்! என்கிட்டே இருந்தே நான் உன்னை காப்பாற்றல. வாழ்க்கையில முதல்முறையா என்ன செய்றதுன்னு எனக்கு தெரியல. இந்த உணர்வு என்னன்னு எனக்கு தெரியல. இந்த உணர்வை என்ன செய்வேன்? உனக்கு வஞ்சகம் செய்து எனக்கு நானே வஞ்சகம்  செய்துக்கிட்டேன். என்னை நான் என்ன செய்யப்போறேன்?’

தலையை குனிந்து கொண்டு வில்லோடு அவன் தோட்டத்திற்கு நடக்க, ருஹானா அவனை பார்த்துக்கொண்டே நின்றாள்.

                                                  ————-

சல்மா லாக்கப்பில் கேவி கேவி அழுதுக்கொண்டு இருக்க, கரீமா மெல்ல உள்ளே வந்தாள்.

“நீயா? எந்த முகத்தை வச்சிக்கிட்டு இங்க வந்தே? உன் தங்கையை நீ ஏமாற்றிட்டே!” கரீமாவின் கழுத்துப்பட்டையை இழுத்துப் பிடித்தாள்.

அவளை தள்ளிவிட்ட கரீமா “ஆமா, நான் ஏமாற்றினேன். எனக்காக இல்ல, நமக்காக!” என்றாள்.

“விளையாடுறியா? என்ன நமக்கு? என்ன பேசுறே நீ? நீயா தரையில இழுப்பட்டு வந்தே? உன்னையா போலீஸ் கைது செய்தாங்க? சிறையில போட்டது உன்னையா? நான், நான் தான்! நான் இங்க இருக்கும்போது நீ எங்க போயிட்டே?”

“இப்பவும் நீ உணர்ச்சிவசப்பட்டு தான் பேசுறே! என்னோட உண்மைமுகத்தை காட்டியிருந்தா என்ன நடந்திருக்கும்னு நீ யோசித்து பார்த்தியா?”

“என்ன நடந்திருக்கும்? உனக்கு என்ன கிடைக்கணுமோ அது கிடைச்சிருக்கும்.”

“இல்ல, நம்மை காப்பாத்த வெளிய யாரும் இருந்திருக்க மாட்டாங்க. ஆர்யன் நம்மை சும்மா விட்டுருக்க மாட்டான். நாம எந்த சேரியில இருந்து வந்தோமோ அதைவிட மோசமான சேரியில போய் சேர்ந்திருப்போம். கைல ஒரு காசும் இருந்திருக்காது.” சல்மா திரும்பிக்கொள்ள கரீமா தொடர்ந்து பேசினாள்.

“எனக்கு வேற வழி தெரியல. நீ துரோகம்னு சொன்னது நாம உயிர் வாழ நமக்கு கிடைத்த அனுமதி சீட்டு. நீ என்மேல கோபமா இருப்பே, எனக்கு தெரியும். நானும் கோபமா தான் இருக்கேன், சல்மா! ஆனா அவ மேலே. நீ தான் என் உயிர், சல்மா!” தங்கையின் தோளைத் தொட, அவள் உதறி நகர்ந்து சென்றாள்.

“சீக்கிரமே உன்னோட விடுதலைக்கு நான் ஒரு வழி கண்டுபிடிப்பேன். ஆனா நீ எதும் பேசக்கூடாது! மொய்தீனை கொல்ல சொன்னது நாம தான்னு ஆர்யனால நிருபிக்க முடியாது. நீ என்னைக் காட்டிக் கொடுக்கலனா நான் உன்னை இங்க இருந்து விடுவிப்பேன். சரியா?”

கன்றி சிவந்த முகத்துடன் சல்மா வேறுவழியின்றி சரியென தலையாட்டினாள்.

————

Advertisement