Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                               அத்தியாயம் – 130

மூடியிருந்த ஆர்யனின் மேசையின் இழுப்பறை சாவியை ருஹானா அங்குமிங்கும் தேட, அது எழுதும் பலகைக்கு அடியிலேயே இருந்தது. சாவிகொண்டு திறந்து அங்கிருந்த எல்லா கோப்புகளிலும் அவசரமாக தேடினாள். அவளுக்கு கிடைத்த ஒரு புகைப்படத்தை பார்த்து அதிர்ந்தாள்.

பர்வீன் வீட்டிலிருந்து அவளது அன்னையின் படத்தோடு கொண்டுவரப்பட்ட அவளது சிறுவயது படம்தான் அது. அன்னையின் படத்தை பெரிதுபடுத்தியபோது சிறுமி ருஹானாவையும் பெரிய படமாக செய்து வைத்திருக்கிறான். “ஏன் என் போட்டோவை வச்சிருக்கார்?”

“சித்தி! எதும் தொலைச்சிட்டீங்களா?” என்று கேட்டபடி இவான் உள்ளே வர, “ஆமா, கண்ணே! தொலைத்திட்டேன்” என்றாள்.

“அது மதிப்பு அதிகமான பொருளா?”

“அதிக மதிப்பானது மானே! வேற பொருளால அதை ஈடு கட்ட முடியாது!”

“வருத்தப்படாதீங்க, சித்தி! நான் உங்களுக்கு உதவி செய்றேன். சித்தப்பாவும் தேடி தருவாங்க. நாம சேர்ந்து கண்டுபிடிச்சிடலாம்” என்று சொன்ன இவானை அணைத்துக்கொண்ட ருஹானா “அத்தனை எளிதா இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்?” என்று முணுமுணுத்துக் கொண்டாள்.

——–

“இவானை தூங்க வச்சிட்டேன். என்னால தூங்க முடியல. அவர் வர நேரமாகுமா?” என்று ருஹானா ஜாஃபரிடம் கேட்டாள்.

“ஆர்யன் சார் மிக முக்கியமான வேலைக்காக போயிருக்கார்” என்று அவன் சொல்ல, அங்கே மேசையில் முடிவீலி சின்னத்தை வரைந்த ஒரு புத்தகம் இருந்ததை ருஹானா பார்த்தாள்.

“இது அவர் போறதுக்கு முன்னாடி வரைந்திட்டு இருந்தார்” என்ற ஜாஃபர் “நாம எல்லாருமே முடிவீலியை தான் தேடிட்டு இருக்கோம். ஆனா வேற வேற பெயர்ல… அழியாத அன்பு, அழியாத நம்பிக்கை… அதுல சிரமம் என்னன்னா நாம ஒரு கடினமான பரிட்சையில வெற்றி பெற்றாதான் அது நமக்கு கிடைக்கும். கிடைத்த பின்னும் தவறவிடவும் கூடாது. என்ன நடந்தாலும் பாதையை நிறைவு செய்யணும்” என்றான்.

கசந்த முறுவலை வெளிப்படுத்திய ருஹானா “அது முட்டு சந்தா இருந்தா என்ன செய்றது ஜாஃபர் அண்ணா?” என்று கேட்டாள். அவனிடமிருந்து பதில் வராமல் போகவே “அழியாத அன்பு, அழியாத நம்பிக்கை எல்லாம் அழியாத வலியா மாறினா?” என்று அவள் கேட்க, ஜாஃபர் தலைகுனிந்து கொண்டான்.

“அந்த பாதையில இருந்து எப்படி வெளிய வர்றது?” என்று இன்னொரு கேள்வியையும் கேட்டவள் அதற்கும் விடை கிடைக்காது என தெரிந்து மெல்ல படிக்கட்டில் ஏறிச் சென்றாள்.

———-

இரும்புத்திரை இதயத்தில் காதல் கசிந்திட

சதிப்பொருளால் அதில் துருப்பிடித்திட

அகக்கண்ணோடு அறிவுக்கண்ணும் மூடிட..

உடன்பிறந்த பாசக்கண் அகத்தால் 

உண்மை உணர வலியுறுத்திட…

இதயக்கண் கொண்டு அறிந்திடும்போது

கள்ளமும் இல்லை கபடமும் இல்லையே!

கூட்டாளி பொய்யனே அசலை தந்திட

துகள் துகளாய் திரை நொறுங்கிட

தவிப்புகள் திகைப்புகள் மேலோங்கிட

பிறழ்ந்த காதல் மீண்டும் கைகோர்க்குமா?

கையெழுத்து நிபுணரின் பெயரட்டை, ருஹானா கன்னத்தில் அறைந்து தள்ளிவிடுவது கோபமாக பேசுவது கையை உதறுவது என அனைத்து போட்டோக்கள், அவள் பேசிய அசல் குரல்பதிவு.. இவையெல்லாம் சுற்றிலும் இருக்க, ஆர்யன் தரையில் தளர்ந்து போய் அமர்ந்திருந்தான்.

இரவு முழுவதும் ருஹானா பேசிய முழுப்பேச்சையும் கேட்டபடி காட்டின் நடுவில் திக்கற்று வருந்தினான்.

‘எனக்கு கல்யாணம் ஆகப்போகுது, மிஷால்! என்னை ஏமாத்தி வரவச்சி இப்படி கேவலமா பேசுறீயே! இதுக்கு மேல இங்க இருந்தா என் மரியாதையை நானே கெடுத்தது போல..’

‘போகாதே! ருஹானா நில்லு!’

‘விடு என்னை! என் பேரை சொல்லக்கூட உனக்கு தகுதியில்ல!’

நீலநிற கோப்பை சல்மா கொடுத்த அன்று ருஹானாவின் மேல் கோபமாய் காட்டில் இரவெல்லாம் கழித்தவன், இன்று தன்மீது ஆத்திரமாக முழுஇரவும் செய்வதறியாது புலம்பினான்.

“எல்லாம் பொய்! பித்தலாட்டம்! ஏமாற்று வேலை! என்ன செய்திட்டேன் நான்?”

வெறுப்பாக ஒலிப்பதிவு கருவியை தூக்கிப் போட, அது தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தது.

‘வீணா கெஞ்சாதே, சல்மா. நீ பறித்த குழியில நீயே விழுந்துக்கோ!’

‘ஓஹோ! நான் மாட்டினா நீ தப்பிச்சிடுவேன்னு நினைக்கறியா, மொய்தீன்? அந்த ஆவணங்கள் எல்லாமே பொய்ன்னு தெரிஞ்சா ஆர்யன் என்னை மட்டும் கொல்ல மாட்டான். நான் மட்டுமா இதெல்லாம் செய்தேன்? அவன் மனைவிக்கு எதிரா அத்தனை போலியான அத்தாட்சிகள் தயாரித்த உன்னையும் சேர்ந்து தான் என்னோட எரிப்பான்.’

போனில் சல்மா பேசியதை மொய்தீன் சாதுர்யமாக பதிவு செய்திருந்ததை கேட்டவுடன் சதித்திட்டம் தீட்டியதே சல்மா தான் சந்தேகமற புரிந்துகொண்டவனுக்கு உள்ளம் கொதித்தது.

“அண்ணனுக்கு புரிந்தது எனக்கு ஏன் புரியல? புது தோட்டக்காரன் கூட தெரியப்படுத்தினானே!”

———–

ருஹானா கிளம்பி வெளியே வந்தவள் தூங்கும் இவானை பார்த்துக்கொள்ளுமாறு ஜாபரிடம் சொல்லிவிட்டு நேரே ஆர்யனின் அலுவலகம் சென்றாள், அவளுக்கு அங்கே எதும் துப்பு கிடைக்கலாம் என்ற நம்பிக்கையோடு.

———-

“இந்தா சல்மா! உன் டிக்கெட்! முழிச்சிட்டு நிக்காதே! உடனே கிளம்பு! உன் பாஸ்போர்ட், ஐடி கார்டு இன்னும் தேவையானது எல்லாம் எடுத்துக்கோ! விமானத்துக்கு நேரமாச்சி!” கதிகலங்கி அமர்ந்திருந்த சல்மாவிடம் கரீமா நீட்டினாள்.

“அக்கா! ப்ளீஸ்! ப்ளீஸ்! இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாமே! ஆர்யனை பார்க்கும்முன்ன டிடெக்டிவ் செத்திருந்தா?”

“மடத்தனமா பேசாதே! எவ்வளவு பெரிய அபாயம் நமக்கு காத்திருக்குன்னு உனக்கு தெரியல? ஆர்யன் வர்றத்துக்கு முன்ன கிளம்பு! உடனே! சீக்கிரம்!”

“ஆனா அக்கா?”

“ஆனா கீனா எதுவும் இல்ல! தயாராகு! ஐந்து நிமிடத்துல நீ புறப்பட்டு இருக்கணும். இந்த பார்வைலாம் வேணாம். நான் போய் உனக்கு வேற வங்கி அட்டை ஏற்பாடு செய்றேன்” என்று கரீமா வெளியே செல்ல, கண்ணீர் விட்டுக்கொண்டே சல்மா துணிகளை பெட்டியில் எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

கருப்பு நிற கார் காலனைப் போல வேகமாக உள்ளே வந்தது. காரிலிருந்து இறங்கிய ஆர்யன் சூறாவளியாய் மாளிகைக்குள் வந்தான்.

“சல்மாஆஆஆ!!” என்று அவன் கத்திய கர்ஜனையில் அர்ஸ்லான் மாளிகையையே கிடுகிடுத்தது.

“ஐயோ! ஆர்யன்!” என்று நடுங்கிய சல்மா, கையிலிருந்த துணியை தவறவிட்டாள். அவன் பாய்ந்து வருவதை கண்ட கரீமா ஒரு தூணின் பின்னால் மறைந்து கொண்டாள்.

மூடிய கதவு எந்த வினாடியிலும் திறக்கப்படலாம் என வெலவெலத்து பார்த்திருந்த சல்மா, ஆர்யன் காலால் உதைத்து கதவை திறந்து வருவது கண்டு மிரண்டாள்.

“என்ன மாதிரியான பேய் நீ? இவ்வளவு கீழ்தரமா உன்னால நடந்துக்க முடியுமா? உனக்கு ஈனம் மானம் கொஞ்சம் கூடவா இல்ல? கண்ணியமே இல்லாதவ நீ! என் மனைவியை பற்றி அவதூறு பரப்பியிருக்கே! என் மனைவி, என் மரியாதை!” கூச்சலிட்டுக்கொண்டே ஆர்யன் மேசை நாற்காலிகளை தள்ளிவிட்டவாறு அவளை நெருங்கினான்.

“கெஞ்சி கேட்கறேன். நான் சொல்றதை கேளுங்க, ஆர்யன்!”

கட்டிலில் திறந்திருந்த சூட்கேஸ் அவன் கண்ணுக்கு பட்டது. “தப்பிச்சி ஓடப்பார்க்கறியா? என்கிட்டே இருந்து உன்னால தப்பிக்க முடியுமா?”

“இல்ல, ஆர்யன்! அக்கா! அக்கா! என்னை காப்பாத்து! ப்ளீஸ்! நான் சொல்றதை கேளுங்க!” அவளின் கூக்குரல் கரீமாவை நிலைகுலைய செய்தது. ஜாஃபர், சாரா ஓடிவந்து படிக்கட்டின் அருகே பயத்துடன் நின்றனர்.

“உன்னால எப்படி இப்படி செய்ய முடிந்தது? எப்படி? வெட்கம் மரியாதை இல்லாதவளா நீ? இப்போ நான் உன்னை என்ன செய்றது?”

“அக்கா! அக்கா! அக்கா! காப்பாத்து!”

“அவளை கொல்லப்போறான்” என்றபடி கரீமா உள்ளே ஓடிவர, சல்மா அவளிடம் பாய்ந்தாள். “அக்கா! என்னை காப்பாத்து!”

“ஆர்யன்! என்ன நடந்தது?”

“உங்க தங்கச்சிட்டயே கேளுங்க. சொல்லு, உன் அக்கா கிட்டே! நீ எவ்வளவு பெரிய குப்பை! புளுகி!  உன்னோட சதியை பத்தி சொல்லு” என்று ஆர்யன் அவள் தோளை உலுக்கினான்.

“ஆர்யன் டியர்! எனக்கு புரியல! என்ன பொய்?” இவள் நடிப்புக்கே நடிப்பு சொல்லி தருவாள்.

“அவ கொடுத்த ஃபைல்ல இருந்த எல்லா ஆதாரங்களும் பொய்யானது. பதிவுகள் போலியானது. கடிதங்கள் மாற்றி எழுதப்பட்டவை” என்று சொன்ன ஆர்யன் சல்மாவின் கழுத்தை பிடித்தான். “அல்லாஹ்க்கு நன்றி சொல்லு. நீ மட்டும் ஒரு பொண்ணா இல்லாம இருந்திருந்தா இப்படியே உன்னை தூக்கி வெளியே போட்டுருப்பேன்!”

“அக்கா!  ஏதாவது செய்! அக்கா!” என்று சல்மா தவிக்க, அவளை ஆர்யன் கையிலிருந்து வாங்கிய கரீமா, அவளை பளார் என்று கன்னத்தில் அடித்து கீழே தள்ளினாள். “வாயை மூடு! என்னை அக்கான்னு கூப்பிடாதே!”

சகலமும் செயலற்றுப் போன சல்மா “நீ… நீயும் தானே?” என்று தொடங்க, கரீமா அவளை பேசவிடாது மாறி மாறி அறைந்தாள்.

“இதான் நாங்க உனக்கு செய்ததுக்கு நீ காட்ற நன்றியா? ஒரு அப்பாவி பெண்ணை மாட்டி விட்டு இருக்கியே! உனக்கு மனசாட்சி இல்ல?” என்று ‘எதுவும் சொல்லாதே’ என கண்ஜாடை செய்துக் கொண்டே அடித்தாள்.

“ஆர்யன்! இவளும்..” என பேசவந்த சல்மாவை கரீமா ஓங்கி அறைந்தாள். சல்மா திக்பிரமை பிடித்து நிற்க, அவள் கையை பிடித்த ஆர்யன் “உனக்கு தகுந்த தண்டனை கிடைக்கும்” என வெளியே இழுத்து வந்தான்.

படிக்கட்டின் கைப்பிடியை பிடித்துக்கொண்டு கீழே இறங்க மறுத்தவளை பிடித்து தூக்கிய ஆர்யன் அவளை படிக்கட்டில் தரதரவென இறக்கினான்.

“அக்கா! இப்படி செய்யாதே! ஆர்யன் கேளுங்க! அக்கா! எனக்கு உதவி செய்!”

“என்கிட்டே உதவி கேட்க உனக்கு என்ன தைரியம்?” என்று கத்திய கரீமா கண்ணீரை வெளிவிடாமல் அடக்கிக்கொண்டாள்.

“ஆர்யன்! என்ன ஆச்சு?” என்று அம்ஜத் ஓடிவந்தான். அவனை பார்த்ததும் “மச்சான்! மச்சான்! என்னை காப்பாத்துங்க!” என்று சல்மா அவனைக் கட்டிக்கொண்டாள்.

Advertisement