Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 52  

‘ருஹானாவுக்கு தான் இவானின் மேல் உரிமை’ எனும் ஆவணத்தை கையில் வாங்கியபின்னும் அவள் முகத்தில் உற்சாகம் காணாத லைலா ஆச்சரியப்பட்டு போனார். என்னதான் அந்த உரிமை தற்காலிகமானது என்றாலும், இவான் மேல் ருஹானா வைத்திருக்கும் பாசத்தையும், அவன் காணமல் போனபோது அவள் துடித்த துடிப்பையும் கண்ணார கண்டிருந்த லைலா அவளை வியப்பாக பார்த்தார்.

‘இது தனக்கு மட்டும் எப்படி கிடைத்தது? இதற்கு ஆர்யனின் எதிர்வினை, மனநிலை எப்படி இருக்கும்?’ என்ற யோசனையில் மூழ்கி இருந்த ருஹானா லைலாவின் பார்வை மாற்றத்தை சிறிது நேரம் கழித்தே கவனித்தாள்.

“நான்… எனக்கு மிக மகிழ்ச்சி… எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.. ஸாரி”

“எனக்கும் சந்தோசம் தான். உங்க உதவியோட இவான் சீக்கிரமே புது வீட்டுல பழகிக்குவான்னு நம்புறேன்” என லைலா சொல்ல ருஹானா புரியாது விழித்தாள்.

“எனக்கு புரியல”

“எல்லாமே அந்த ஆவணத்தில எழுதி இருக்கு. எங்க விசாரணைல என்ன தெரிய வந்ததுன்னா ஆர்யன் அர்ஸ்லான் தனிப்பட்ட வகையில் சிறுவனை வளர்க்க தகுதியானவர் இல்ல. அதோட அர்ஸ்லான் மாளிகையும் இவான் இருக்க சரியான இடம் இல்ல. அதனால எங்க முடிவு என்னன்னா இவான் வேற வீட்டுல தான் வளரணும் அப்படியே உங்களுக்கு அவனை பார்த்துக்கற உரிமை தரப்பட்டு இருக்கு”

லைலா விளக்கி சொன்னதும் ருஹானா ஆனந்தம் அடைவதற்கு பதிலாக குழப்பமே அடைந்தாள். இவானின் உரிமைக்காக எத்தனை கொடுமைகள் அனுபவித்தாள்! அடை மழை, கொட்டும் பனி, பசி, பட்டினி தாங்கி அர்ஸ்லான் மாளிகை வாசலில் தவம் கிடந்தது, கடல், காட்டில் ஆர்யன் அடியாட்களால் பயம் காட்டப்பட்டது, பாதாள அறையில் அடைபட்டு நெருப்பில் மாட்டி உயிருக்கு போராடியது, ஆர்யனின் துப்பாக்கி, வில்லுக்கு முன் நின்றது, அதைவிட முக்கியமாய் அவனது கொடுஞ்சொற்கள் தாங்கி சகித்து மீண்டது, இத்தனையும் இவானை சொந்தமாய் பெறத்தானே! ஆனால் இன்று அவள் கையில் உள்ள உரிமை அவளுக்கு ஏன் மகிழ்ச்சி கொண்டாட்டத்தை  தரவில்லை?

——–

அர்ஸ்லான் மாளிகை வெளி கேட்டை கடந்து போனில் பேசியபடியே ருஹானா உள்ளே வந்து கொண்டிருந்தாள்.

“பர்வீன் அம்மா! நடந்ததை என்னால நம்பவே முடியல. கடைசில இவான் என்கிட்டே வந்து சேர்ந்துட்டான். அவனை பிரிஞ்சி இத்தனை நாளா நான் தவிச்சி போயிட்டேன்”

“அல்லாஹ்க்கு நன்றி, மகளே! நீ எப்போ அவனை விடுதியில இருந்து அழைச்சிட்டு வரணும்?”

“இன்னைக்கு நைட் போய் கூப்பிட்டுக்கலாம், அம்மா. அப்போ தான் எல்லா சட்ட நடைமுறைகளும் தயாராகும். என் அக்கா இப்போ ரொம்ப சந்தோசப்படுவா. அவளோட வாரிசு, இப்போ என் கையில”

“நம்மோட துவா பலித்தது, மகளே! உன்னோட பொறுமைக்கு கிடைச்ச பரிசு இது. ருஹானா! நீ என்ன செய்ய போறே? இவான் சித்தப்பாட்ட என்ன சொல்ல போறே?”

“எனக்கு தெரியல, அம்மா. இந்த தகவலை நான் எப்படி சொல்ல போறேன்னு தெரியல. இந்த மாளிகைல இனி இவான் இருக்க முடியாதுன்னு எப்படி சொல்றது? அவன் சித்தப்பாக்கு இவான் தான் உயிர்”

“மகளே! நான் வேணும்னா தன்வீரை அங்க அனுப்பவா?”

“வேணாம் அம்மா. நானே அவர்கிட்டே பேசுறேன். அதான் சரியா வரும்”

போனை அடைத்த ருஹானா, எப்போதும் கழுத்தில் மாட்டியிருக்கும் இவானின் சங்கிலியை கையில் பிடித்துக்கொண்டே மாளிகையின் உள்ளே நுழைந்தாள்.

வரவேற்பறையில் நின்றிருந்த ஆர்யனை பார்த்த ருஹானா தைரியத்தை திரட்டிக்கொண்டு அவன் முன்னால் போய் நின்றாள்.

“நான் உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்…. நான்…”

அவளை மேலே பேச விடாத ஆர்யன் “நீ நேத்து நைட் சொன்னதுலாம்….” என தொடங்கவும் இடைமறித்த ருஹானா “நான் என்ன சொல்ல வரேன்னா…” என சொல்ல, அவளை தடுத்த ஆர்யன் “நீ சொன்னது எல்லாம் சரி தான்” என சொல்லி அவளுக்கு வியப்பை அளித்தான்.

“நீ போலீஸ்ட்ட புகார் தந்தே. ஏன்னா நீ இவானை பாதுகாக்க நினைச்சே. அது எனக்கு இப்போ புரியுது”

‘நான் எவ்வளவு பெரிய விசயத்தை சொல்ல வரேன். இவன் என்ன பழசை பேசிட்டு இருக்கான்?” என ருஹானா அவனை பார்க்க “நீயும் என்னைப் போலவே இவானுக்காக தான் போராடுறே. உரிமையானதுக்கு நேர்மையா போராடுறவங்க, மரியாதைக்கு உரியவங்க” என ஆர்யன் மேலும் இணக்கமாக பேசி அவள் ஆச்சரியத்தை கூட்டினான்.

“இனிமேல் நாம இவானை பற்றி மட்டும் கவலைப்படுவோம். நீயும் அப்படித்தானே நினைக்கறே?” என ஆர்யன் அவளையும் சேர்த்து வைத்து பேச அவள் தலை தானாக ஆடியது.

அமைதியாக இருக்கும்போது ஆர்யன் வேறு மனிதன். அவன் செய்த தவறை ஒத்துக்கொள்கிறான். அதற்கு அவன் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றாலும் அவள் சகோதரனுக்கு ஆர்யனை பற்றி தெரிவித்ததற்கு கூட பாராட்டுகிறான்.

ருஹானா அடுத்து பேசுவதற்குள் ஆர்யனுக்கு அலுவலக அழைப்பு வர அவன் போனில் மும்முரமானான்.

ருஹானா அவன் பேசுவதை பார்த்துக்கொண்டே படியில் ஏறி மேலே சென்றாள். இவான் துணிகளை பெட்டியில் எடுத்து வைக்க முயன்றாள். ஆர்யன் இவானை கூட்டிக்கொண்டு திரும்ப வந்ததும், சற்று முன் கீழே அவன் பேசியதும் அவளுக்கு நினைவில் ஆட, ஆர்யனிடம் பேசாமல் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என தோன்ற அவனை நாடி சென்றாள்.

அவன் அறைக்கதவை தட்டி உள்ளே நுழைந்தவள் அவன் தீவிரமாக அலுவலக கோப்புகளை கவனித்திருப்பதை கண்டும் தயக்கமாக அருகே சென்றாள். அவன் கையில் பேனாவோடு அவள் பக்கம் திரும்பி அவளை ஏறிட்டு பார்க்க “நான் உங்ககிட்டே பேசலாமா?…” என கேட்டு முடிக்கும்முன் மீண்டும் அவன் தொல்லைபேசி முந்திக்கொண்டது.

“சொல்லு ரஷீத்!”

“ஆர்யன்! சமூகசேவை நிறுவனத்தினர் இவானோட உரிமையை தற்காலிகமா இவானோட சித்திக்கு தந்துருக்காங்க”

ஆர்யன் கண்கள் பெரிதாக நாற்காலியை விட்டு எழுந்தான்.

“அவங்க காலைலயே இவானோட சித்தியை கூப்பிட்டு சொல்லிட்டாங்க”

அவன் கண்கள் இடுங்கி முகம் இறுகியது. திரும்பி ருஹானாவை உற்று நோக்கினான். அவனின் திடீர் மாற்றத்தில் ருஹானா குழப்பமடைந்தாள்.

“நீ… நீ என்கிட்டே இருந்து இவானை அபகரிக்க பார்க்கறியா?” என ஆர்யன் பெருங்குரலில் கத்தியவாறே அவளை முறைத்துக்கொண்டு முன்னே அடியெடுத்து வைத்தான்.

அவன் கோபம் கண்டு மிரண்ட ருஹானா பின்னால் அடியெடுத்து வைத்துக்கொண்டே “நான் அதை.. உங்ககிட்டே அதை சொல்ல தானே அப்போதுல இருந்து முயற்சி செய்றேன்” என சொன்னாள்.

“இவானோட கஸ்டடியை நீ வாங்கிட்டு, அதை என்கிட்டே மறைக்க பார்க்கறீயா?”

“நான் சொல்ல தானே வந்தேன்”

“எப்போ சொல்லுவே? இப்போவா? எனக்கு தெரிஞ்ச பின்னாடியா?”

ருஹானா பாவமாக தலையசைக்க, ஆர்யன் “வெளிநாட்டிற்கு இவானை கூட்டிட்டு போக இருந்தவன் அவனை திரும்ப இங்க கூட்டிட்டு வந்தேன். ஏன்?” என கேட்க, ருஹானா புரியாது விழிக்க “உனக்காக!” என்றான்.

அன்று அவள் இவானை அழைத்து வந்ததற்கு ஆர்யனுக்கு நன்றி சொல்லும்போது ‘இவானுக்காக செய்தேன்’ என சொன்னவன், இன்று ‘உனக்காக தான் அழைத்து வந்தேன்’ என கோப மிகுதியில் உண்மையை ஒத்துக் கொள்கிறான்.

ருஹானா திகைப்பாக பார்க்க “ஆனா நீ என்னை ஏமாற்றி இருக்கே!” என சொன்னவன், அந்த நினைப்பை தாங்கி கொள்ள இயலாமல் பெரிதாக மூச்சிரைக்க அவளை விட்டு விலகி, மேசையில் இருந்த பொருட்களையெல்லாம் ஆக்ரோஷத்துடன் கீழே தள்ளிவிட்டான்.

பயந்து போன ருஹானா கண்களில் நீர் நிறைய “எனக்கே அங்க போனதும் தான் தெரிஞ்சது. நான் ஏன் உங்க கிட்டே மறைக்க போறேன்? அதை சொல்ல தான் வந்தேன்” என அருகில் வந்து இறைஞ்சினாள்.

அவளுடைய அழுகை அவனுக்கு எப்போதும் தாங்க முடிவதே இல்லை. ஆனால் அதையும் இப்போது கோபமாகவே வெளிப்படுத்தினான்.

“இதை எப்படி நீ சாதிச்சே? கண்ணீர் விட்டா இல்ல பொறுப்பா இருக்கற மாதிரி நடிச்சா?”

“நான்.. நீங்க..” என ருஹானா கண்ணீருடன் வார்த்தைகளுக்கு தடுமாற, “நீ என்ன செய்தே? என்ன சொன்னே? எனக்கு மறைச்சி என்ன சதி செஞ்சே?” என இரைந்த ஆர்யன் கீழே கிடந்த பொருளை காலால் உதைத்தான்.

“நான் எந்த திட்டமும் போடல. உண்மையா தான் நடந்துக்கிட்டேன். என்னோட பாச உணர்வுகளை எடுத்து சொன்னேன்” என ருஹானாவும் தாங்க முடியாமல் கத்தினாள்.

“போலீஸ்ல இருந்து உனக்கு உதவி கிடைச்சதா?” என ஆர்யன், தன்வீரை மனதில் வைத்து பேச ருஹானாவுக்கும் கோபம் வந்தது.

“இதுலனா தான் நீங்க தோத்து போறீங்க! ஏன்னா எதையும் தெரிஞ்சிக்காம, கேட்காம நீங்களா தவறான தீர்மானத்துக்கு வந்திடறீங்க” என அவள் பல்லை கடித்துக்கொண்டு பேச ஆர்யன் திரும்பி நடந்தான்.

“எனக்கு ஏன் இவான் கஸ்டடி கொடுத்தாங்கன்னா என்னோட மனசுல மனிதர்கள் மேல நம்பிக்கையின்மை இல்ல, அதனால நான் யாரையும் சந்தேகப்பட மாட்டேன்” என ஆர்யன் மனதில் இருக்கும் மனிதர்களை நம்பாத தன்மையை சுட்டிக்காட்டி பேசிவிட்டாள்.

அவனுடைய பாதுகாப்பற்ற உள்மனதை பற்றி அவள் பேசவும் அவன் கொதிநிலை அடைந்திருந்தான். அவளுக்கு மட்டுமே தெரிந்த அவனுடைய ரகசியத்தை இவள் ஆத்திரத்தில் ஏளனமாக ஏலம் போட ஆர்யன் அவளருகே வந்தான். 

“நீ.. நீ நடிக்கிறே! உன்னோட கண்ணீரை வச்சி இரக்கத்தை சம்பாதிக்கிறே! முன்னே இவானை உனக்கு கொடுக்காம திருப்பி அனுப்பினாங்க தானே! இப்போ மட்டும் எப்படி கொடுத்தாங்க? ஆங்… என்ன பொய் சொன்னே? இல்ல, உன் பெண்மையை பயன்படுத்திக்கிட்டியா?”

ருஹானா வாயடைத்துப் போனாள். அவள் கண்களிலிருந்து நீர் கொட்டியது.

அவள் பல்லை கடித்துக்கொண்டு ஆர்யனை அடிப்பதற்காக கையை ஓங்கி வீச, வேகமாக இறங்கிய அவளுடைய கையை அவன் பிடித்துக்கொண்டான்.

“உனக்கு இவான் என்னைக்கும் கிடைக்க மாட்டான்” என அனல்வீசும் பார்வையுடன் அவள் கண்களை பார்த்து சொன்னவன், அவள் கையை வேகமாக உதறினான். “வெளியே போ!” என்றான்.

அவனை விட்டு விலகி படிக்கட்டில் ஏறி திரும்பி நின்ற ருஹானா “எனக்கு மட்டும் கஸ்டடி கிடைச்சதும், எனக்கு குற்ற உணர்வா இருந்தது. ஆனா இப்போ அது இல்ல. அவங்க சரியா தான் முடிவு எடுத்திருக்காங்க. உன்னை போல காட்டுமிராண்டி கிட்டே இவான் எப்படி வளர முடியும்?” என சொல்லி வெளியேறிவிட்டாள். 

வேகமாக திரும்பி அவள் பின்னே செல்ல போனவன் காலை ஒரு சட்டமிட்ட புகைப்படம் தடுத்து நிறுத்தியது. குனிந்து எடுத்து பார்க்க, அது இவானும், அவனும் நிற்கும் புகைப்படம். அதை கையில் வைத்து பார்த்துக்கொண்டே இருந்தான்.

——–

சிறுவர் விடுதியில் லைலாவிடம் பேசிட்டுவிட்டு திரும்பிய இவானிடம் ஹஸல் “என்ன சொன்னாங்க?” என ஆவலோடு கேட்டாள். “என் சித்தி என்னை கூட்டிட்டு போக நைட் வருவாங்க” என இவான் சொல்ல, புராக் “நீ வீட்டுக்கு போறியா? திரும்ப இங்க வரமாட்டியா?” என சோகமாக கேட்டான்.

மெஹ்மத் “உங்க வீடு தூரமா?” என கேட்க “எனக்கு தெரியலயே!” என இவான் பதில் சொன்னான். “எங்கள பார்க்க வருவீயா?” என மெஹ்மத் பாசமாக கேட்க “கண்டிப்பா வருவேன். என் சித்தியும் சித்தப்பாவும் நிச்சயம் என்னை இங்க கூட்டிட்டு வருவாங்க” என இவான் சொல்லவும் மற்ற மூன்று சிறுவர்களும் லேசாக புன்முறுவல் செய்தனர்.  

—–

Advertisement