அவள் வாயடைத்து போய் மூச்சும் எடுக்காமல் நிற்க “இங்க பார்! உனக்கு வாழ்க்கைல எதிரி வேணும்னா என்கிட்டே இருந்து தள்ளி நில்லு. ஏன்னா நான் என் எதிரிகளோட விளையாட்டிட்டு இருக்க மாட்டேன். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில ஒரு கோடு தான்” என சொன்ன ஆர்யன் இத்தனை நேரம் பிடித்திருந்த அவள் கையை வேகமாக உதறிவிட்டு சென்றான்.

அவன் சென்ற பின்னே மூச்சை இழுத்து விட்ட ருஹானா அந்த இடத்தை விட்டு சற்று நகர்ந்து கீழே எட்டி பார்த்தாள். இன்னமும் அவள் உடல் நடுங்கிக் கொண்டிருக்க பயத்துடன் கீழே பார்த்தவள் மூச்சிரைக்க கதவருகே வந்துவிட்டாள்.

நடந்ததை நம்பமுடியாமல் உயிர் பிழைத்த உணர்வுடன் அங்கேயே சுவரில் சாய்ந்து தரையில் அமர்ந்துவிட்டாள். வேகமாக சுவாசம் செல்ல அழுகையுடன் தற்போது என்ன நடந்தது என கிரகிக்க முயன்றாள்.

ருஹானாவை விட்டு விலகி வேகமாக தனது படுக்கையறைக்கு சென்ற ஆர்யனுக்கும் சுவாசம் சீராக இல்லை. கோபத்தில் வேகமாக மூச்சுக்காற்று உள்ளே வெளியே செல்ல, கோட்டை கழற்றி தூர வீசினான். கை பாதி கிழிந்திருந்த சட்டையையும் கழற்றி போட்டவன் கட்டிலில் அமர்ந்தான்.

பெண்கள் மேல் வெறுப்பு கொள்ளும் ஆர்யன், எள்ளவும் பெண்ணினம் மேல் நம்பிக்கை இல்லாத ஆர்யன், இதற்கு முன் நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்விலும் ருஹானா மேல் சந்தேகப்பட்டு பின் அவள் குற்றமற்றவள் என தெரிந்து அவள் மேல் சிறு நம்பிக்கை இழை படர ஆரம்பித்த நேரம், இப்போது அவள் வாயாலேயே அவள் செய்த குற்றத்தை சொல்ல அது அவனை மிகவும் பாதித்தது.

போலீசுக்கு சொல்லவேண்டாம் என அவன் வைத்துவிட்டு வந்த குறிப்பையும் மீறி அவள் அவன் மேல் புகார் கொடுத்த அவளுடைய நம்பிக்கை துரோகம் அவனால் தாங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது, அவனது பால்ய கால ஆழமான காயத்தை மறுபடியும் புண்படுத்தி விட்டது

கையில் ருஹானா மருந்து வைத்து கட்டியிருந்ததை பார்த்தவன் அதையும் வெறுப்புடன் உருவி போட்டான். அவள் அவனுக்காக மருந்து தேடி சென்றது, அவனுக்கு கருணையாக மருந்திட்டது என அவற்றை நினைத்தபடியே அசையாமல் அமர்ந்திருந்தான்.

——–

இரவும் கவிழ்ந்தது.

ருஹானா தன்னை திடப்படுத்திக்கொண்டு ஆர்யன் அறை முன்னே வந்து நின்றவள் தயக்கத்துடன் கதவை தட்டினாள்.

முன்னறையில் நின்று கண்ணாடி ஜன்னல்வழியாக வெளியே இருட்டை வெறித்து நின்ற ஆர்யன் கதவு தட்டப்படும் ஓசை கேட்டும் எதுவும் சொல்லாமல், கதவு மெல்ல திறக்கப்பட்டும்கூட அப்படியே நின்றான்.

கதவை தட்டப்பட்டு இவன் அனுமதி தராமலேயே உள்ளே வரும் தைரியம் கொண்டவள் ருஹானா மட்டுமே என்பதால் வந்தது அவள் என தெரிந்தும் ஆர்யன் திரும்பாமலே நின்றான்.

அவனும் விரும்பக்கூடிய ஒரு பெண் இந்த உலகத்தில் இருப்பாள் எனும் எதிர்பார்ப்பு கிஞ்சித்தும் இல்லாமல் இருந்த ஆர்யனுக்கு, ருஹானா அவன் மனத்தடைகள் ஒவ்வொன்றாக தகர்த்து கொண்டு இவான் மீது கொண்ட பேரன்பாலும், தனது இனிய நற்குணங்களாலும், இதமான அழகாலும், அவளையறியாமலேயே ஆர்யனை நோக்கி நெருங்கி வரும் வேளையில் இப்படி அதிர்ச்சி தரும் விதமாக பின்னடைவாள் என்பது அவனுக்கு பேரதிர்ச்சி தந்தது.

மெல்ல அவனை நெருங்கிய ருஹானா அவன் முதுகை பார்த்தபடி மெதுவாக வார்த்தைகளை கோர்த்து பேச துவங்கினாள்.

“ஆமா, நான் தான் போலீஸ்க்கு சொன்னேன். ஏன்னா இவான் என் அக்கா எனக்கு கொடுத்த பொக்கிஷம். என்னோட பொறுப்பு. அவனை இனி பார்க்கவே முடியாதோ என்ற பயம் என்னை பைத்தியமாக்கிடுச்சி. பயத்தில அது ஒன்னு தான் நான் செய்யக்கூடியதா இருந்தது. அதை நான் செஞ்சிட்டேன். என் நிலமைல நீங்க இருந்தாலும் நீங்களும் அதான் செஞ்சிருப்பீங்க”

ஆர்யன் கண்கள் இடுங்கின.

“உங்க கோபத்துல நியாயம் இருக்கு. நானும் உங்க இடத்துல இருந்திருந்தா எனக்கும் இப்படி தான் கோபம் வரும். ஆனா என்கிட்டே பேச வரவங்க கிட்டே இப்படி முகத்தை காட்டாம நிற்க மாட்டேன். அவங்க பக்கம் இருக்கற நியாயத்தை காது கொடுத்து கேட்பேன்”

ஆர்யன் கோபம் மெல்ல வடிந்தது.

“நீங்க திரும்ப இவானை கூட்டிட்டு வருவீங்கன்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கல. இவானை திரும்ப பார்க்க மாட்டேனோன்னு ரொம்ப பயந்திட்டேன். நீங்க சொன்னீங்க, வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவுல ஒரு கோடு தான்னு. நான் கண்முழிச்சதும் இவான் அங்க இல்லன்னு எனக்கு தெரிஞ்சதும் நான் அந்த கோட்டை தாண்டி போயிட்டு திரும்ப வந்தேன்”

மனம் உருகி சொல்லப்பட்ட அந்த வார்த்தைகளை கேட்டு ஆர்யன் இளகி நின்றான்.

“உங்களை பொருத்தவரை நான் சொல்லப்போற இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்ன்னு எனக்கு தெரியல. ஆனா நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்கறேன்”

அவளை திரும்பி பார்க்க விளைந்த கண்களை ஆர்யன் திரும்ப விடாமல் கஷ்டப்பட்டு அடக்கினான்.

“மனசார மன்னிப்பு கேட்கறேன்” பேசி முடித்தவள் அவன் திரும்புவதற்காக காத்திருந்து அப்படியே நின்றாள்.

முதல் தவறில் இருந்து முழு தவறும் அவன் மீது இருந்தாலும் ருஹானா அவனிடம் மன்னிப்பு கேட்க விழைந்தாள். அவன் அவளை அப்படி பயமுறுத்திய போதிலும் அவள் உள்ளம் அவன் மேல் கோபம் கொள்ளவில்லை.

இவான் மேல் அவன் வைத்திருக்கும் பாசத்திற்காக மட்டும் அவனிடம் அவள் மன்னிப்பு கேட்கவில்லை. அவள் மனதில் ஏற்பட்ட, அவளாலேயே இனம் காண முடியாத ஏதோ ஒன்று அவளை வருத்தப்பட வைத்து அவன் மன்னிப்பையும் யாசித்தது.

ஆர்யன் ருஹானாவிற்கு இழைத்த கொடுமைகளுக்கும் கூட அவனால் நேரிடையாக மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்க முடியவில்லை. அதன்பின் வந்த அவனுடைய செயல்களால் மட்டுமே அதை உணர்த்தினான். ஆனால் அவள் எந்த வெட்கமோ, தயக்கமோ இல்லாமல் மன்னிப்பு கேட்டு நின்றாள்.

சற்று நேரம் அவன் திரும்புவானா என பார்த்து நின்ற ருஹானா பின் மெல்ல வெளியே செல்ல திரும்பவும், ஆர்யன் அவள் புறம் திரும்பினான்.

அவளோ திரும்பி பார்க்காமல் பாவமாக கதவுக்கு நடக்க, ஆர்யன் அவளையே பார்த்திருக்க, அவள் திரும்பாமல் கதவடைத்து சென்றாள். அவள் சென்ற பின்னும் ஆர்யன் கதவை பார்த்தபடியே நின்றான்.

தனக்கு அவன் மறுமொழி கூறவில்லை என வருத்தத்துடன் அவள் சென்றாலும், அவள் பேச்சுக்கள் செவிடன் காதில் ஊதிய சங்கை போல வீணாகவில்லை.

மன்னிப்பு வேண்டிய அவள் இரவில் வெகு நேரம் சென்றாலும் இவான் நினைப்போடு தூங்கிவிட, ஐந்து நாட்கள் தூங்காமல் விழித்திருந்து காவல் காத்த அவன் இலகு பஞ்சணையிலும் தூக்கம் வராமல் தவித்தான்.

——

காலையில் அலுவலகம் செல்ல தயாராகி வெளியே வந்த ஆர்யன், நேற்று அவள் முகம் பார்க்காதவன் இன்று மூடியிருந்த அவள் அறையின் கதவையே நோக்கியபடி நின்றிருந்தான்.

ஜாஃபர் “கார் ரெடியா இருக்கு, சார்” என சொல்லவும் மனமின்றியே வெளியே சென்றான்.

இவானின் புகைப்படத்திற்கு முத்தமிட்ட ருஹானா “என் மனம் முழுசும் உன்னை சுத்தி தான் இருக்கு, அன்பே! இன்ஷா அல்லாஹ் நாம சீக்கிரம் சேர்ந்துடனும்”

ருஹானா போன் அடிக்க, சிறுவர் விடுதியில் இருந்து லைலா அழைத்திருந்தார்.

“இனிய நாள், ருஹானா மேம். சமூக சேவை நிறுவன அதிகாரி உங்க கிட்ட பேசுனுமாம்”

“என்ன! இவான் நல்லா தானே இருக்கான்?” என ருஹானா பதறியபடி எழுந்தாள்.

“ஆமா, ஆமா அவனுக்கு ஒன்னுமில்ல. இது வேற விஷயம். போன்ல விவரமா பேச முடியாது. நீங்க நேர்ல வாங்க. அதிகாரி உங்களுக்கு விளக்கமா சொல்வாங்க”

“ஓஹ் அப்படியா? நான் இப்பவே இவான் சித்தப்பாவோட அங்கே வரேன்”

“ம்.. இல்ல.. ருஹானா மேம் நீங்க தனியா வாங்க. சீக்கிரம் வாங்க”

“இதோ, உடனே வரேன்” என்று போனை வைத்துவிட்டு கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

அப்போது கதவை திறந்துகொண்டு வந்த சாரா “ருஹானா! காலை உணவு தயார். சாப்பிட வா” என்று அழைத்தார்.

“நாங்க சிறுவர் விடுதிக்கு இப்போ போகணுமே! நாங்க சீக்கிரம் கிளம்பணும்”

“ஆனா ஆர்யன் சார் வெளிய போயிட்டாரே!”

“என்ன! அவர் வீட்ல இல்லயா?”

“ஜாஃபர் சொன்னார், சாருக்கு முக்கியமான மீட்டிங் இருக்குன்னு. அதான் காலைல சீக்கிரம் கிளம்பிட்டார்”

“அப்போ நான் தனியா தான் போகணும்”

“பத்திரமா போயிட்டு வா” என சாரா சொல்ல, ருஹானா விரைந்து வெளியே சென்றாள்.

——–

சமூக சேவை அதிகாரி ருஹானாவை வரவேற்றார்.

“வாங்க ருஹானா! உட்காருங்க!”

“இவான் எப்படி இருக்கான்? அவனை பற்றி எதும் கெட்ட செய்தியா?” என ருஹானா பதட்டமாக கேட்டாள்.

“அவன் நல்லா இருக்கான். கவலைப்படாதீங்க. அவன் முதல் தடவை இருந்தது போல சோகமா இல்ல. எல்லா குழந்தைகளும் சேர்ந்து விளையாடிட்டு இருக்காங்க. நீங்க முதல்ல உட்காருங்க”

ருஹானா நாற்காலியில் அமர்ந்ததும் “நான் உங்களை கூப்பிட்டது வேற விஷயத்துக்காக. இவான் கஸ்டடி பற்றிய விசாரணையை நாங்க முடிச்சிட்டோம்” என்று சொன்ன அவர் புன்னகையுடன் ஒரு ஆவணத்தை அவளிடம் நீட்டினார்.

“இவானை பார்த்துக்கற உரிமை தற்காலிகமா உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கு”

“எனக்கா?” ருஹானா புரியாமல் கேட்டாள்.

“ஆமா, இன்னைல இருந்து இவானை பற்றிய எந்த முடிவும் எடுக்க உங்களுக்கு மட்டும் தான் உரிமை இருக்கு”

அதை தெளிவாக கேட்டவுடன்கூட அவளால் முழுமையாக மகிழ முடியவில்லை. கையில் வாங்கிய ஆவணத்தை பார்த்தபடியே இருந்தாள்.

(தொடரும்)