Advertisement

ஆர்யனின் மெய்காப்பாளர் இருவரும் துப்பாக்கியை உருவி வாசிமை குறிபார்க்க, தன்வீரும், மற்ற அதிகாரிகளும் அவர்கள் துப்பாக்கியை நீட்டி பிடித்தனர்.

ரஷீத்தும், ஜாஃபரும் எதற்கும் தயாராக நிற்க, சல்மாவும் கரீமாவும் நடப்பதை ஆவலாக பார்க்க, ருஹானா மிரண்டு போனாள். அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது.

ஆர்யன் அருகே வந்த ரஷீத் “ஆர்யன்! அமைதியா இருங்க, இவானுக்காக” என அவன் காதில் ஓத, நிதானமான ஆர்யன் தன் மெய்க்காவலருக்கு சைகை செய்தான். அவர்களும் துப்பாக்கியை கீழே இறக்க, வாசிம் மாட்டிய கைவிலங்கை கழட்டிய ஆர்யன் அதை வாசிம் கையில் திணித்துவிட்டு விறுவிறுவென சென்று காவல் நிலையக் காரில் ஏறினான்.

ஆர்யன் பின்னால் ஓடப்போன ருஹானாவை கரீமா தடுத்து நிறுத்த, அதிகாரிகள் ஆர்யனை அழைத்து சென்றனர்.

———-

சிறுவர் விடுதியில் இவானின் பரிசுகளுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. ஹஸலும், புராக்கும் ஆர்வத்தோடு இவான் தந்ததை வாங்கி பிரித்துப்பார்க்க, மெஹ்மத் மட்டும் இவான் தந்ததை வாங்கவில்லை. இவானும் சளைக்காமல் அதை நீட்டியபடியே சொன்னான்.

“ரயில் வச்சி விளையாடணும்ன்னு அன்னைக்கு நீ புராக் கிட்டே சொன்னே ல, அதை நான் என் சித்தப்பாட்ட சொன்னேன். அவர் தான் இதை வாங்கி கொடுத்தார்” என இவான் சொன்னதை கேட்டதும் ஆவலை அடக்க முடியாத மெஹ்மத் அதை வாங்கிக் கொண்டான்.

பெரிய ரயில்வண்டியை கண்ட மெஹ்மத்தின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. நால்வரும் சேர்ந்து விளையாடுவதை லைலா மகிழ்வோடு பார்த்திருந்தார்.

——–

“அக்கா! யார் ஆர்யன் மேலே புகார் கொடுத்துருப்பாங்க? இவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுக்குறாங்க?”

“இன்னைக்கு வந்த போலீஸ் ஆபீசர்ல ருஹானாவோட சகோதரனும் இருந்தான்”

“ஓ! அந்த முட்டாளா புகார் கொடுத்திருப்பா? வம்பை விலை கொடுத்து வாங்கிட்டாளா?”

“ஆமா, சல்மா. இனி அவ கதை முடிந்தது. ஆர்யன் துரோகத்தை மறக்கவே மாட்டான். இனி எல்லாம் நம்ம திட்டப்படி தான் நடக்கும்”

———-

காவல்நிலைய விசாரணை அறையில் ஆர்யன் அமர வைக்கப்பட்டிருக்க, தன்வீருடன் உள்ளே வந்த வாசிம் ஒரு ஃபைலை ஆர்யன் முன்னே தூக்கி போட்டான்.

ஆர்யன் முன்னே மிடுக்காக வந்து அமர்ந்த வாசிம் ஆர்யனை சில விநாடிகள் உற்று நோக்கிவிட்டு “ஆர்யன் அர்ஸ்லான்! நாம பேசுவோமா?” என கிண்டலாக கேட்டான்.

வாசிமின் மிடுக்கோ, தோரணையோ கம்பீரமாக அமர்ந்திருந்த ஆர்யனை சற்றும் அசைக்கவில்லை. அவன் வாசிமை கூர்ந்து பார்த்தபடி உள்ளே எழுந்த கொந்தளிப்பை மறைத்துக்கொண்டு மிக நிதானமாகவே இருந்தான்.

“ஏன் உன் அண்ணன் மகனை நீயே கடத்தினே?”

“உன்னோட திறமையில இன்னொரு ஜீரோ சேர்த்துக்கோ, கமிஷனர்!. இத்தனை பெரிய போலீஸ் டிபார்ட்மென்ட் உன் பின்னால இருந்தும், உன்னோட வேலையை நீ சரியா பார்க்கல”

விசாரணை கைதி போல இல்லாமல், வாசிமின் மேல்அதிகாரி போல ஆர்யன் அதிகாரமாக பேச வாசிமின் கோபம் எல்லை மீறியது.

“கமிஷனர்! அப்படி உன் கடமையை நீ ஒழுங்கா பார்த்திருந்தா, இவானை கடத்தினவன் கிட்ட இருந்து இவானை எனக்கு முன்னால நீ காப்பாத்தி இருப்பே”

ஏளனத்துடன் ஆர்யன் கூறியதை கேட்ட வாசிம் அவனுக்கு திருப்பி கொடுத்தான்.

“குழந்தையை கடத்துறவன், கள்ள கடத்தல்காரன், கொலைகாரன் எல்லார் கூடவும் உனக்கு தான் நல்ல பழக்கம் இருக்கு. உன்னோட குடும்பம் உன் அண்ணன் பையன் இல்ல. சாக்கடை எலிகள் தான் உன் உண்மையான குடும்பம்”

ஆர்யன் தன் கைக்கடிகாரத்தை பார்த்துவிட்டு “இன்னும் பத்து நிமிடம் தான் உனக்கு நேரம் இருக்கு. அதுக்குள்ள உனக்கு என்ன கேட்கணுமோ கேட்டுக்கோ” என மீண்டும் வாசிமுக்கு ஆணையிடுவது போல சொன்னான்.

“ஐந்து நாளா உன் அண்ணன் பையனை கடத்தி எங்க வச்சிருந்த, அர்ஸ்லான்?”

அப்போது தன்வீர் போன் அடிக்க விசாரணை தடைப்பட்டது. அழைப்பது ருஹானா என பார்த்த தன்வீர் வெளியே வந்து அழைப்பை ஏற்றான்.

“ருஹானா விசாரணை நடந்துட்டு இருக்கு. நான் உன்னை அப்புறம் கூப்பிடவா?”

“தன்வீர்! தயவு செய்து நான் சொல்றதை கேளு. இவான் சித்தப்பா மேலே எந்த தப்பும் இல்ல. எல்லாம் என்னோட தவறு தான்”

“அவன் என்ன நிரபராதியா?”

“நீ இங்க வந்த போதே அதான் நான் சொல்ல வந்தேன்”

“ருஹானா! நீ அவனுக்கு பயந்து இப்படி பேசுறே”

“சத்தியமா அப்படிலாம் எதும் இல்ல. இவான் இப்போ விடுதியில பத்திரமா இருக்கான். அவனை அங்கே சேர்த்தது அவன் சித்தப்பா தான். வேணும்னா நீ அந்த சமூகசேவை நிறுவனத்துக்கு போன் செய்து கேட்டுக்கோ”

“சரி, நான் கேட்கிறேன்” என தன்வீர் போனை வைத்துவிட்டு யோசித்தான்.

—–

“சொல்லு, ஒன்னுமே பதில் சொல்ல மாட்றே” என வாசிம் ஆர்யனை மிரட்டிக்கொண்டிருக்க, ஆர்யன் முகபாவனைகளால் வாசிமை எரிச்சல் பட வைக்க, உள்ளே வந்த தன்வீர் வாசிம் காதில் கிசுகிசுத்தான்.

அதை கேட்டு முகம் மாறிய வாசிம் யோசனையில் இருக்க “என்னை குற்றம் சாட்ட, உன்கிட்ட எந்த நிரூபணமும் இல்ல. என்னை ரெண்டாவது தடவையா கைது செய்திருக்கே. கமிஷனர்! உன்னோட வரம்புக்கு இது ரொம்ப அதிகம்” என ஆர்யன் எச்சரிக்கை விடுத்தான்

“எல்லை மீறி பேசாதே, அர்ஸ்லான்”

“என் தகுதிக்கு உன்கூட பேசுறதே தப்பு”

“நான் உன்னை விசாரிக்க வேண்டி இருக்கலனா, உன்னை மனுசனா மதிச்சி கூட பேச மாட்டேன்”

“நீ என்னை தேவையில்லாம கைது செய்ததுக்கு ஏதோ காரணம் இருக்கு. சொல்லு, உனக்கு என்ன வேணும்? பணமா, பதவியா, உத்தியோக உயர்வா?” என ஆர்யன் கேட்டதும், கொதித்து எழுந்த வாசிம் “நீ அநாகரிகமா பேசுறே, அர்ஸ்லான்! உன்னை கைது செய்ய ஒரு காரணமும் இருக்கு. எனக்கு உன்மேலே அளவு கடந்த வெறுப்பு” என கனலை உமிழ்ந்தான்.

“தன்வீர்! இவன் கிட்ட கையெழுத்து வாங்கிட்டு அனுப்பு” என்று வெளியே செல்ல போன வாசிம், கதவருகே நின்று “அர்ஸ்லான்! உன் மேலே யார் புகார் கொடுத்ததுன்னு உனக்கு தெரியும். அந்த பொண்ணுக்கு மட்டும் எதாவது ஆச்சுன்னா, தன்வீர் மட்டும் இல்ல, நானும் உன்னை சும்மா விட மாட்டேன். ஜாக்கிரதை. நான் உன்னை கண்காணிச்சிட்டே தான் இருப்பேன்” என்று சொல்லி வெளியே சென்றான்.

——-

தடதடக்கும் இதயத்தோடு நிலை கொள்ளாமல் ருஹானா நடந்து கொண்டிருந்தாள். அவள் அறைக்கதவை திறந்து கொண்டு கரீமா உள்ளே வர, வேகமாக அவளிடம் ஓடியவள் “அவர் வந்துட்டாரா?” என கேட்டாள்.

“ஆர்யனையா கேட்கறே? அவன் இன்னும் வரலயே”

தலையில் கை வைத்து கொண்ட ருஹானா திரும்பவும் பரபரப்பாக நடக்க ஆரம்பித்தாள்.

“அவர் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கார். அவர் வந்ததும் நான் அவர்கிட்டே பேசணும்” என அவள் தவிப்பாக சொல்ல, “ருஹானா டியர்! எனக்கு உன்னை புரிஞ்சிக்க முடியுது. யாரா இருந்தாலும் இதை தான் செஞ்சிருப்பாங்க” என கரீமா அவளை மனம் மாற்ற முயன்றாள்.

“எனக்கு அதிக வருத்தமா இருக்கு, கரீமா மேம். நான் அவரை தப்பா புரிஞ்சிக்கிட்டேன். நான் செய்தது பெரிய தவறு”

“முதலில் ஆர்யன் செய்தது தான் தவறான செயல். உன்னையும் இவானையும் பிரிக்க பார்த்தான். நீ ஒன்னும் தப்பு செய்யல. நீ குற்ற உணர்ச்சிக்கு ஆளாகாதே”

அந்த வேளையில் கதவை தள்ளிக்கொண்டு வந்தது புயல் காற்று அல்ல! சூறாவளி காற்று…! ஆர்யன் எனும் ஆவேச காற்று..!

ருஹானா அவனை கழிவிரக்கத்தோடு பார்க்க, அவள் மீது வைத்த கனல் கக்கும் பார்வையை அகற்றாத ஆர்யன் “அண்ணி!” என ஒற்றை சொல்லை உதிர்த்தான். உள்ளே பொங்கிய மகிழ்ச்சியை வெளியே காட்டாமல் சோகமாக ருஹானாவை பார்த்தபடியே சென்ற கரீமா வெளியே போய் கதவை மூடினாள்.

ஆர்யன் தாக்க வருவதை போல அவளை நோக்கி முன்னேறி வர, வாய் திறந்து பேச முடியாமல் ருஹானா பின்னடைந்தாள். அப்படியே இருவரும் நகர்ந்து வெளிப்புறம் மேல்மாடத்துக்கு வர, தடுப்பு சுவர் ருஹானாவை தாங்கி பிடித்தது.

அதற்கு மேல் செல்ல வழி இல்லாமல் அவள் கட்டை சுவரில் சாய்ந்து நிற்க, ஆர்யன் அவளுக்கு மிக அருகே நெருங்கினான். மாலை சூரியனின் கதிர்கள் நேரே அவன் முகத்தில் அடித்து அவன் கோப நெருப்புக்கு தூபம் போட்டது.

ருஹானா தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வாயை திறந்து “நான் இப்படி செய்திருக்கக் கூடாது. ரொம்ப வருத்தப்படறேன். தன்வீர்…” என சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவள் கையை பிடித்த ஆர்யன் அவளை பின்னால் சாய்த்தான்.

“ம்ஹூ!” என அதிர்ந்து மூச்சை இழுத்த ருஹானாவின் உடல் இடுப்புக்கு மேலே தலைகீழாக அந்தரத்தில் தொங்க, குதிகால் செருப்பு அணிந்திருந்தபடியால் அவள் கால்கள் தரையில் ஊன்ற முடியாமல் பற்றில்லாமல் ஆடியது.

பால்கனி சுவற்றில் மடிந்து கிடந்த ருஹானா தலையை அண்ணாந்து கீழே இருபுறமும் பார்த்தவள் பயத்தில் கண்கள் அகலமாக வெலவெலத்துப்போனாள்.

அவள் இடது கையை தனது வலது கையால் அழுந்த பற்றியிருந்த ஆர்யன் “நீ என்னை ஏமாத்திட்டே! நீ இன்னும் வருத்தப்படணும் தான். ஏன்னா நான் தப்பை என்னைக்கும் மன்னிக்க மாட்டேன்” என்று இரைந்தவன் அவள் கையை ஆட்டினான்.

அதனால் அவள் உடலும் ஆட நடுங்கிப்போன ருஹானா “ஆஹ்!” என அழுகையுடன் கத்தினாள். அவள் கையை வேகமாக ஆர்யன் இழுக்க, தொங்கிக்கொண்டிருந்த ருஹானா மேலே வந்தாள்.

Advertisement