“நேத்து நைட் ஹக்கீம் கிட்டே பேசி ஒப்பந்தத்தை ரத்து செய்திட்டீங்களாமே? ஏன் ஆர்யன்?”

“அது நமக்கு சரிப்படாது, ரஷீத். ஆரம்பத்துல இருந்தே ஏதோ ஒன்னு சரியில்லன்னு எனக்கு தோணிட்டே இருந்தது. அதான் நேத்து நைட் லேட்டானாலும் பரவாயில்லைன்னு ஹக்கீம்க்கு போன் செய்து பேசிட்டேன். இன்னைக்கு ஏற்பாடு செய்திருந்த சந்திப்பையும் வேணாம்னு சொல்லிட்டேன். நான் சொன்ன மாறுதல்களோட அவனை புது ஒப்பந்தம் போட சொல்லு. நீயே பேசி முடி. மத்த என்னோட எல்லா வேலைகளையும் கொஞ்ச நாளைக்கு நீயே பார்த்துக்கோ”

“சரி, ஆர்யன்! நான் கவனிச்சிக்கறேன்”

அப்போது கப்பல் கேப்டன் அங்கே வர “ஏன் இன்னும் கப்பல் புறப்பட தயாராகல?” என ஆர்யன் கோபமாக கேட்டான்.

“கடைசி நேர பணிகள் இன்னும் முடியல, சார்”

“நம்மகிட்டே நேரம் இல்ல. சீக்கிரம் முடிச்சாகணும்” என ஆர்யன் அழுத்தமாக உத்தரவிட “இதோ! உடனே செய்றேன்” என கேப்டன் வேகமாக சென்றார்.

“சித்தப்பா! சித்தி எப்போ வருவாங்க?” இவானின் கேள்வி ஆர்யன் முகத்தில் வந்து மோத, ரஷீத்தும் ஆர்யன் முகத்தையே பார்த்தான்.

பதில் சொல்லாமல் ஆர்யன் கைமுஷ்டியை இறுக்க, இவான் கால்சட்டை பையில் இருந்து ருஹானாவின் ஸ்கார்ப்பை எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.

பெண்டுலம் போல அவன் மனம் அவள் வேண்டும் வேண்டாம் என ஊஞ்சலாடி அவளை அழைத்து செல்ல வேண்டாம் என ஏற்கனவே முடிவு எடுத்திருந்தது

அவள் அழகு அவனை ஈர்த்தாலும், அதை விட முக்கியமாக அவளது குணம் அவனை கவர்ந்தாலும், அவன் மனதை பூட்டி வைத்திருக்கும் கடினமான அவநம்பிக்கை எனும் ஓடு மிக பலம் வாய்ந்ததாக இருந்தது. அண்ணனையே இவானுக்காக தற்காலிகமாக பிரிய துணிந்த ஆர்யன், ருஹானாவை அழைத்து செல்ல எப்படி முடிவெடுப்பான்? 

துரித நடவடிக்கையாக நாடு விட்டு செல்லும் நிலையில், அவளது பயண ஆவணங்கள் தயாரிப்பில் ஏற்படும் தாமதத்தை அவனால் எப்படி பொறுத்துக் கொள்ள இயலும்

அதோடு அவளை அழைத்து செல்வதால் ஏற்படும் இடையூறுகள், இவானை பிரிவதில் கொண்டு போய் முடியுமோ

மேலும் அத்தனை தூரம் அவள் அவனுக்கு முக்கியமானவள் என்பதை அவன் மனம் உணரவில்லையே! இவானுக்கு இன்றியமையாதவள் தான், இவனுக்கு இல்லையே! 

அண்ணனைக் கூட இவானுக்காக பிரிய முடிவு எடுத்தவன், இவளை எப்படி அழைத்து போவான்? 

——– 

அர்ஸ்லான் மாளிகையின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த ருஹானா, இவான் இல்லாத அந்த மாளிகை இருண்டு கிடப்பது போல உணர்ந்தாள். கண்ணில் நீரோடு அவள் அங்கேயே நிற்க, படிகளில் இறங்கிக்கொண்டிருந்த கரீமா அவளை பார்த்து திடுக்கிட்டு வேகமாக அவளிடம் வந்தாள்.

“ருஹானா! எங்க போனே நீ? ஆர்யன் கூடவா இருந்தே?”

ருஹானா பேச முடியாமல் தலையாட்ட “ஆர்யன் எங்கே? இவான் எங்கே?” என கரீமா பரபரக்க கேட்டாள்.

கண்ணீரை அடக்கி கொண்டு ருஹானா “அவங்க போய்ட்டாங்க. இவான் சித்தப்பா அவனை கடத்திட்டார். வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டார்” என கரீமாவின் தலையில் பாறங்கல்லை தூக்கி போட்டாள்.

ருஹானா சொல்லிவிட்டு அழ ஆரம்பிக்க, கரீமா சிலையென நின்றாள்.

——

“நான் போய் கப்பல் புறப்பட ஆயத்தம் செஞ்சிட்டாங்களான்னு பார்க்கறேன்” என ரஷீத் நகர, ஆர்யன் இவானின் அருகே வந்து அமர்ந்து அவன் தலைமுடியை கோதினான்.

“கப்பல் பயணத்துக்கு ரெடியாகிட்டியா அக்னி சிறகே?”

“நாம ரொம்ப தூரம் போறோமா, சித்தப்பா?”

மென்மையாக பேசிக்கொண்டிருந்த ஆர்யனின் முகம் கடுமையாக ஆமென தலையாட்டினான்.

“நாம எப்போ திரும்பி வருவோம்? சித்தியையும், பெரியப்பாவையும் நான் மறுபடியும் எப்போ பார்ப்பேன்?”

பதில் சொல்ல யோசித்த ஆர்யன் “கொஞ்ச நாளைக்கு யாரையும் நம்மால சந்திக்க முடியாது, சிங்கப்பையா. இதான் இப்போதைக்கு சரிவரும். சரியா?” என கேட்டான்.

சரியென இவான் தலையாட்டவில்லை. இவான் முகம் இன்னும் சோகமாக ஆர்யன் மேலும் இறுகிப் போனான்.

——

இவானின் அறைக்கு வந்த ருஹானா அவனும், தஸ்லீமும் இருக்கும் புகைப்படத்தை கட்டிக்கொண்டு கண்ணீர் உகுத்தாள். இவானின் கட்டிலில் படுத்துக்கொண்டு அவன் தலையணையை முத்தமிட்டாள்.

“சித்தி! இனி என்னை விட்டு நீங்க போக மாட்டீங்க தானே?” என இவான் கேட்டதும், “உன்னை விட்டு எப்பவும் நான் பிரியவே மாட்டேன்” என இவள் வாக்கு தந்ததும் அவள் மனதில் ஓடியது.

துறைமுகத்தில் இவானும் அதையே நினைத்துக்கொண்டு கண்ணீர் விட்டான்.

ரஷீத் அப்போது அங்கே வந்தவன் “இன்னும் பத்து நிமிடத்துல கப்பல் கிளம்ப போகுது, ஆர்யன்!” என சொல்ல ஆர்யன் எழுந்தான். 

“சித்தப்பா! நாம போகவேணாம். எனக்கு சித்தியை பார்க்கணும். நீங்க வேணும்னா அந்த விடுதியிலேயே என்னை கொண்டுவிடுங்க. நான் அங்கேயே இருக்கேன். அது ரொம்ப தூரத்துல இல்ல தானே? அங்க சித்தி என்னை பார்க்க வருவாங்க” என இவான் அழுதான்.

மாற்றங்கள் தரும் தடுமாற்றமெல்லாம்

முதல்முறை மட்டுமே அச்சுறுத்தும்!

பரிவும் பாசமும் வேண்டும் சிறுவண்டு

சிறுதூர பிரிவை, சிறையாய் நினைக்கும்

இருப்பிடத்தை தேர்ந்தெடுக்கிறது, 

நெடுந்தூரம் நீளும் பயணம் மறுத்து..

மனதை பிசையும் அவன் வேண்டுகோளை மறுக்க ஆர்யனுக்கு இதயம் இரும்பால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அவன் கன்னம் தடவிய ஆர்யன் “நாம கிளம்பலாம், இவான்” என்று சொல்ல, ரஷீத் இருவரையும் பாவமாய் பார்க்க, இவான் மறுபடியும் பெஞ்சில் போய் உட்கார்ந்து கொண்டு சித்தியின் ஸ்கார்ப்பை இறுக்கி பிடித்துக்கொண்டான். 

ரஷீத் போன் அடிக்க “ஹக்கீம் தான் கூப்பிடுறான்” என ரஷீத் சொல்ல, “சரி! நீ அவனை உடனே போய் பாரு” என்று சொன்ன ஆர்யன், ரஷீத்தை அணைத்து விடை கொடுக்க, “நீங்க கவனமா இருங்க. அங்க போய் சேர்ந்ததும் போன் செய்ங்க” என ரஷீத் சொன்னான். 

இவான் அருகே மண்டியிட்ட ரஷீத் அவன் நெற்றியில் முத்தமிட்டு “இவான்! பத்திரமா போயிட்டு வா” என சொல்ல, ஆர்யன் இவானை நோக்கி கை நீட்ட, இவான் சித்தப்பாவின் கையை பிடித்துக்கொள்ள இருவரும் கப்பலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

——– 

இவானின் சட்டையை எடுத்துக்கொண்டு தனது அறைக்கு வந்த ருஹானா அதை கன்னத்தோடு வைத்துக்கொண்டு அழுதுக்கொண்டிருக்க, கீழே வரவேற்பு அறையில் அக்காவும் தங்கையும் கொந்தளித்து போய் கொதித்துக்கொண்டிருந்தனர்.

“அக்கா! நாம கையை கட்டிக்கிட்டு சும்மா உட்காந்துகிட்டு இருக்கோம். எனக்கு பைத்தியம் பிடிக்குது. நம்மட்ட ஒன்னுமே சொல்லாம அவன் கிளம்பி போயிட்டே இருக்கான்! அவன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கான்?”

வெளிநாட்டுலயே தங்கிகிட்டு இவானோட எதிர்கால  பாதுகாப்புக்காக இங்க இருக்கிற சொத்தையெல்லாம் ஆர்யன் வித்துட்டான்னா, நாம என்ன செய்றது? ஒரு நொடி கூட அவன் நம்மள பத்தி யோசிக்கல பார்த்தியா, சல்மா?”

“எல்லாமே இந்த பாழாப்போன சித்தியால வந்தது, அக்கா?”

ஆமா! என்னைக்கு அவ இங்க காலடி எடுத்து வச்சாலோ, அன்னைக்கே நமக்கு அழிவு காலம் ஆரம்பிச்சிடுச்சி?”

“அவளை வீட்டைவிட்டு துரத்த இன்னும் என்னக்கா யோசிக்கிறே? இப்பவே வெளியே தூக்கி போடுக்கா”

“ஆர்யன் கிட்டே பேச வாய்ப்பு கிடைக்கட்டும். இனிமேல் என்ன நடக்க போகுதுன்னு தெரிஞ்சிகிட்ட பிறகு என்னோட முதல் வேலையே அவளை வெளிய அனுப்பறது தான்”

அப்போது பெட்டியோடு ருஹானா அவர்களை நோக்கி வர இருவரும் ஆச்சரியமானார்கள்.

“ருஹானா டியர்! என்ன இது பெட்டியோட எங்க போறே?” என கரீமா கேட்க, “நான் கிளம்பிட்டேன். இவான் இல்லாத வீட்டுல எனக்கு என்ன வேலை?” என ருஹானா கண்ணீரோடு சொல்ல, சல்மா உதட்டை பிதுக்கினாள்.

“நீ எங்க போக போறே? தங்கறதுக்கு இடம் பார்த்திட்டியா? வேணும்னா கொஞ்ச நாள் எங்க கூட இரு” என கரீமா சொல்ல, சல்மா அக்காவை கடுப்போடு பார்த்தாள்.

“நன்றி கரீமா மேம்! ஆனா இங்கிருந்து நான் போறது தான் நல்லது. அகாபால ஒருநாள் இருந்துட்டு என் சொந்த ஊருக்கே நான் போய்டுவேன்”

“சரி டியர்! போயிட்டு வா”

“எல்லாத்துக்கும் நன்றி”

“உனக்கு தான் நாங்க நன்றி சொல்லணும். எங்க இவானை நீ இருக்குறவரை நல்லா கவனிச்சிக்கிட்டே. நீ அவனை தனியா விடவே இல்ல. எனக்கு இவானை பத்தி தகவல் தெரிஞ்சா உனக்கு உடனே போன் செய்றேன். கவலைப்படாதே”

“சரி கரீமா மேம்! அம்ஜத் அண்ணா எங்க? நான் அவர்கிட்டே சொல்லிட்டு போறேன்”

“அவர் மாத்திரை சாப்பிட்டு தூங்குறார், ருஹானா டியர்”

“அவரை எழுப்ப வேணாம். நீங்களே சொல்லிடுங்க. நான் போறேன். குட்பை”

“கவனமா இரு ருஹானா” என கரீமா சொல்ல, சல்மாவும் அலட்சியமாக “பை” என்றாள்.

ருஹானா அவள் சொன்னதை கண்டுகொள்ளவும் இல்லை. அவளை திரும்பி பார்க்கவும் இல்லை.

கரீமாவிடம் மட்டும் தலையாட்டி நகர்ந்தாள். நிம்மதி பெருமூச்சு விட்ட சல்மா “அப்பாடா! ஒருவழியா இந்த நாடகக்காரி தொலைஞ்சா” என்றாள். 

சாராவும் நஸ்ரியாவும் அங்கே ஓடிவர, ருஹானா இருவரையும் அணைத்து விடைபெற்றாள். “உங்க அன்பை என்னைக்கும் நான் மறக்க மாட்டேன். நீங்க எனக்கு செய்ததுக்குலாம் மிக்க நன்றி”

“உன் கூட ரொம்ப பழகிட்டோம். நீ இல்லாம எப்படி இருப்போம்னு தெரியல. நீ ஒரு அற்புதமான பெண். அல்லாஹ் உன்னை காப்பாற்றுவார். எங்களுக்கு போன் செய்ய மறந்திடாதே” என சாரா சொல்ல ருஹானா கலங்கிய கண்களுடன் தலையாட்டினாள்.

உற்ற தோழியாய் பழகிய நஸ்ரியா கண்ணீருடன் “உன்னை கவனிச்சிக்கோ, ருஹானா” என கைப்பிடித்து சொல்ல, தலையாட்டிய ருஹானா “நீயும் கவனமா இரு” என்றாள். பின்னால் நின்ற ஜாஃபர் தலையாட்டி மவுனமாக விடைதர இவளும் மரியாதையுடன் விடைபெற்றாள்.

பின்னால் திரும்பி வீட்டை ஒருமுறை பார்த்தவள் சோகமாக வாசலை நோக்கி நடந்தாள்.

வெளியே செல்ல கதவை திறந்தவள் மூச்சு விட மறந்து நின்று விட்டாள்.

வெளிக்காற்று முகத்தில் வந்து மோதி அசைவற்று நின்ற அவளை விட்டுவிட்டு அவள் கூந்தலை மட்டும் பறக்க வைக்க, எதிரே தெரிந்த காட்சி நிஜமா என இமை தட்டாமல் அவள் பார்த்தபடியே நின்றாள்.

முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் ஆர்யனும், புன்னகையுடன் இவானும் அங்கே நின்றிருந்தனர்.

ஆனந்த கண்ணீருடன் இவானை ஆசைதீர பார்த்துவிட்டு, ஆர்யனை பார்த்த ருஹானாவின் கண்கள் ஆர்யனின் கண்களோடு கலந்தது. 

அவளது நன்றிகலந்த தீட்சண்யமான பார்வையிலிருந்து தப்பிக்க ஆர்யன் வேறுபுறம் பார்க்க முயல, ருஹானாவின் அகன்ற காந்த கண்கள் அதை சற்றும் அனுமதிக்கவில்லை. எங்கெங்கோ விழிகளை சுழற்றிய அவனும் இறுதியில் விரும்பியே அவள் பார்வை வீச்சில் மூழ்கி போனான்.

(தொடரும்)