Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 5

கொடிய மிருகத்தின் கண்ணில் சிக்கிக்கொண்ட மானாய் அவள் தவிக்க.. ஆர்யனின் பார்வை இவானிடம் சென்றது… “இவான்” என்ற அவனது கோபமான அழைப்பில், சிறுவன் தலையை குனிந்துக் கொண்டான்.. ருஹானா, “ப்ளீஸ்! என்கிட்டே இருந்து இவானை பிரிக்காதீங்க.. நான் கெஞ்சி கேக்கறேன்..” என சொல்ல.. இவான், “சித்தப்பா! எனக்கு ட்ரைன்ல போகணும்..” என்று சொல்லவும், கோபமான ஆர்யனின் பார்வையின் அனல் தாங்காமல், ருஹானா கண்களை மூடிக்கொண்டாள்…

“இவானை காருக்கு கூட்டிட்டு போ!” என்ற ஆர்யனின் உத்தரவில் நானி வந்து இவானின் கையைப் பிடிக்க… “ஆனா சித்தப்பா, நான் ட்ரைன்ல…” என இவான் ருஹானாவின் கையை விடாமல் இழுக்க… ஆர்யன் ருஹானாவை உறுத்து விழித்தான்.. தன் துக்கத்தை உள்ளே அடக்கியவள், இவான் உயரத்திற்கு மண்டியிட்டு.. “கண்ணே! நீ இப்போ வீட்டுக்கு போ.. என் வேலைய முடிச்சிட்டு நான் உன்கிட்டே வருவேன்.. சரியா?.. என கேட்டாள்… “ப்ராமிஸ்?” என இவான் கேட்க.. அவனுக்கு வாக்குறுதி கொடுத்து அவன் கையை பற்றி முத்தமிட்டவள், நானியுடன் அனுப்பி வைத்தாள்…

அவன் கையை மெதுவாக விட்டவள், ‘படாது பாடுபட்ட தன் அத்தனை முயற்சியும் கைநழுவி போனதே’ என சோகமானாள்… சித்தியை திரும்பி பார்த்துக்கொண்டே சென்ற இவான், அழும் அவளை பார்க்க சகிக்காமல் ஓடிவந்து கட்டிக்கொண்டான்.. அவனை கண்ணீருடன் முகர்ந்து கொண்டவள், “ஆருயிரே! நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன்.. ரொம்பவுமே…“ என்றாள்.. இந்த பாச பந்தத்தை மேற்கொண்டு வளர்க்க விரும்பாமல் ஆர்யன், “காருக்கு போக சொன்னேன்” என்று நானியை பார்த்து கத்த.. அவளும் வேகமாக வந்து இவானை காருக்குள் கூட்டி சென்றாள்.. 

இவான் காருக்குள் அமர்ந்ததை உறுதி செய்து கொண்டு, ருஹானாவை முறைத்தபடி நெருங்கிய ஆர்யன் அவள் முழங்கையை பற்றி இழுக்க.. அவளோ, “தயவுசெய்து என்னை இவான்ட்ட இருந்து பிரிச்சிடாதீங்க… அவனுக்கு நான் தேவை..” என கெஞ்சவும்.. கோபமுற்று அவள் கையை பிடித்து தள்ளிவிட்டு திரும்பி நடக்க எட்டு வைத்தான்.. வேகமாய் வந்து அவன் கையை பற்றியவள், “அவன் சின்ன குழந்தை.. என்கிட்டே இருந்து கூட்டிட்டு போகாதீங்க!” என கதற.. பிடித்த அவள் கையை வேகமாக உதறி அவளை எட்ட தள்ளினான்…. “நீ எல்லை மீறி போயிட்டே!” என கடுமையாக சொன்னவன், ரஷீத்துக்கு கண்ணால் சைகை தந்தான்.. ரஷீத்தும் புரிந்து கொண்டதாய் தலையசைத்தான்.

விருட்டென்று செல்லும் ஆர்யனைக் கண்டு ருஹானா சப்தமிட்டாள்.. “நீங்க என்ன செய்தாலும், என் அக்கா மகனை என்கிட்டே இருந்து பிரிக்க முடியாது… கேட்குதா..? நான் ஓயவே மாட்டேன்.. இவான் என் உரிமை..” 

கார் கதவை திறக்க முனைந்தவன், திரும்பி அவள் மேல் ஒரு கோபக் கணை வீசி, காரில் ஏறி கிளம்பி சென்றான் “இவான் என் அக்கா எனக்கு அளித்த பொக்கிஷம்.. எனக்கு எல்லாமே அவன்தான்” என்று அவள் விட்ட கண்ணீர் வீண்தான் போல..  

ரஷீத்தின் கை  காட்டியதும், இரு பாதுகாவலர்களும் ருஹானாவை இழுத்து சென்று மற்றொரு காரில் தள்ளினார்..  நடுவே அவளை அமர வைத்து இருபுறமும் இருவரும் அமர்ந்து கொள்ள கார் வேகமெடுத்தது.. “என்னை எங்க கூட்டிட்டு போறீங்க? என்ன செய்ய போறீங்க?” என பயத்துடன் கேட்டவள் பக்கத்திலிருந்தவனின் இடுப்பில் செருகியிருந்த துப்பாக்கி கண்ணில் பட்டது… திகிலுடன் ஒண்டி அமர்ந்துகொண்டாள்…

ஆர்யன் சென்ற காரில் பின்பக்கம் கண்ணாடியில் பார்த்தப்படி வந்த இவான், முன்புறம் திரும்பி, “சித்தி வேலை முடிய ரொம்ப நேரம் ஆகுமா?” என கேட்க.. அப்போதுதான் சற்று சமநிலைக்கு வந்திருந்த ஆர்யன், திரும்ப முகம் சுருக்கி நானியை பார்க்க… அவள் கையில் வைத்திருந்த புத்தகத்தில்  இவானின் கவனத்தை திருப்ப, “உனக்கு பிடிச்ச புக் வச்சிருக்கேனே.. இது நான் வாசிக்கவா?” என கேட்டாள்.. அவள் பேச்சை இவான் எங்கே கேட்டான்..! “சித்தி எப்போ வருவாங்க?”.. ஆர்யன் பேச்சிழந்து போனான்..

——

நேரத்தை பார்த்துக்கொண்டே நிலைகொள்ளாமல் நடைபயின்று கொண்டிருந்த கரீமாக்கு, நஸ்ரியா காபி கொடுத்தாள்.. கார் வந்த ஓசை கேட்டதும் அதைக்கூட குடிக்காமல் கரீமா, வெளிவாசலுக்கு விரைந்தாள்… காரிலிருந்து இறங்கிய ஆர்யன், பின்னிருக்கையில் இருந்த சின்னக்குட்டியைத் தூக்கி இறக்கி கையை பிடித்து கொண்டு நடந்தான்.. “சித்தப்பா! நீங்க என மேல கோவமா இருக்கிங்களா… சித்தி கூட ட்ரைன்ல போறேன்னு சொன்னதுக்கு?” இவானின் கேள்வியில் யோசித்த ஆர்யன் “இல்லை” என சொல்லி அவனை நானியிடம் கொடுத்தான்.. “வா இவான்! நீ சோர்வா இருப்பே.. ரூம்க்கு போய் ஓய்வு எடுக்கலாம்” என நானி அவனை அழைத்து செல்ல.. கரீமா ஓடிவந்து இவானிடம் குனிந்தவள், “இவான் செல்லம்! உன்னை பத்தி தான் கவலைப்பட்டுட்டு இருந்தேன்.. இரத்தம் எடுக்கும்போது வலிச்சிதா.. நீ பயப்படல தானே..?” என கேட்டாள்.. இவான் இல்லை என தலையாட்ட.. “அழகு  பையா! உனக்கு கண்டிப்பா ஒரு பரிசு இருக்கு.. சொல்லு, என்ன வேணும்?” என ஆர்யன் முன் மீண்டும் நடிக்க, இவான் சொன்னான், ”நான் ட்ரைன்ல போக இருந்தேன்.. சித்தி கூட.. அப்புறம் எதோ ஆச்சி.., சித்தி ஒரு வேலையா போயிருக்காங்க.. வந்து என்னை கூட்டிட்டு போறேன்னு ப்ராமிஸ் செய்துருக்காங்க..” 

கரீமா இறுகி கிடந்த ஆர்யன் முகத்தையே பார்த்தவள், “இவான் கண்ணே! பார், உன் முகம் வெளுத்து போச்சி.. உள்ள போய் குளிச்சிட்டு சாப்பிடு” என நானியுடன் உள்ளே அனுப்பியவள்.. நஸ்ரியா! சாராட்ட சொல்லி இவானுக்கு ஊற்றுத் தண்ணி கொடுக்க சொல்லு.. அது இவானுக்கு நல்லது.. இரத்தம் ஊறும்” என அக்கறையாய் சொல்லி அவளையும் அனுப்பிவிட்டு, “ஆர்யன்! என்ன நடந்தது? என்ன டிரெயின்? சித்தி அங்க வந்தாளா?” என்று ஒன்றும் தெரியாதவள் போல கேட்டாள்..

“நீங்க போன்ல சொன்னது சரிதான்.. அந்த பொண்ணு ஆஸ்பிட்டல் வந்தா.. கடைசி வினாடில நான் அங்க போயிருக்கலனா, அவ இவானை தூக்கிட்டு போயிருப்பா..” என ஆர்யன் சொன்னதை கேட்டு திடுக்கிடுவதை போல நடித்தவள், “அடடா! அவ அங்க வந்தாளா…? நான் சந்தேகப்பட்டது மாதிரியே நடந்துருக்கே…! நீ சரியான நேரம் போகலனா, என்ன ஆயிருக்கும்?… இவானை ஒருவேளை…… அச்சோ… அப்படி எதாவது நடந்திருந்தா என்னை நானே மன்னிச்சிருக்க மாட்டேன்.. அம்ஜத்க்கு அப்படி அட்டாக் வந்துருக்கலனா நான் கண்டிப்பா போகாம இருந்துருப்பேனா…சாரி ஆர்யன், ரியலி சாரி.. இது ரெண்டாவது முறை அந்த பொண்ணு விசயத்துல நான் தப்பு செய்துருக்கேன்….” ‘அடேங்கப்பா! இவள் நடிப்புக்கு பெரிய விருதே வழங்கலாம்’ 

“இதுல உங்க தப்பு ஏதும் இல்லை.. நீங்க தான் இவான் கார் பின்னாடி அவ டாக்ஸில போறது பார்த்து எனக்கு போன் செய்து சொன்னீங்களே… அதான் நான் வேலைய விட்டுட்டு உடனே கிளம்பினேன்” என்ற ஆர்யன் “இனி இந்த மாளிகை மேல ஒரு பறவை கூட பறக்க கூடாது” அழுத்தி சொன்னவன் அண்ணனின் நிலை விசாரித்தான்.. ‘நலமே’ என்று  சொல்லிய கரீமா “அந்த பொண்ணு?.. அதான் இவான் சித்தி.. அவ எங்க இருக்கா இப்போ..” என கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வேகமாக வீட்டினுள் சென்றான்… அவளோ வாசலில் நின்று, “உன் அண்ணன் செடி மேல பாசம் வச்சிருக்கான்.. நீ உன் அண்ணன் மேல உயிரை வச்சிருக்கேன்னு எனக்கு தான் தெரியுமே!” என்று நயவஞ்சகமாக சிரித்தவள், “சித்தி கதை முடிஞ்சது…!” என்றபடி உள்ளே சென்றாள்…

———

சிறிய கப்பல் போல இருந்த பெரிய படகில் ருஹானாவை கூட்டி சென்ற இரு தடியர்களும் அவளை கடலில் தள்ளுவதாக பயம் காட்டினர்.. ரஷீத் மறைந்திருந்து பார்க்க.. ருஹானா கத்தி கொண்டு இருந்தாள்… “ விடு! என்னை விடு!.. என்னை போக விடுங்கள்.. கெஞ்சி கேட்கிறேன்.. விடுங்க என்னை”… ஒரு  குண்டன் மிரட்டினான் “கடல்ல தள்ள போறேன்.. உனக்கு பயமா இல்லயா? இவானை விட்டுறேன்னு சொல்லு.. உன்னை போக விடுறோம்..” 

இவான் என் உரிமை, சொத்து, பொக்கிஷம் எல்லாமே.. நான் செத்தா தான் அவனை விட்டு கொடுக்க முடியும்.. என்னை கொன்னுடுங்க… இல்லனா இவானை நான் விடவே மாட்டேன்” என உயிர் ஆசையின்றி கதறியவளை, இழுத்து சென்றனர்.. பயத்தாலும், சோர்வாலும் மயக்கம் அடைந்திருந்த ருஹானாவை காட்டுப் பகுதியில் அவள் பெட்டிகளோடு சேர்த்து வீசி சென்றனர், இரக்கமற்ற ஆர்யன் ஆட்கள்… 

———-

வட்ட வடிவ தண்டவாள பாதையில் பொம்மை இரயில்வண்டியை ஓட விட்டு இவான் பார்த்துக் கொண்டிருக்க… நானி அவனை கலர் செய்ய அழைத்தாள்.. “பார் இவான்! புது கலர்ஸ் வந்துருக்கு.. எவ்வளவு அழகா இருக்கு..” அவன் தலையாட்டி மறுத்ததும்.. “இந்த ஊத்துதண்ணி குடி.. உனக்கு புத்துணர்ச்சியா இருக்கும்” என்று கூப்பிட்டு பார்த்தாள்.. அதற்கு செவி சாய்க்காமல், “சித்தி வேலை முடிஞ்சிருக்குமா?” என இவான் கேட்கும் வேளையில் உள்ளே நுழைந்த ஆர்யன், நானியை வெளிய செல்லும்படி வழக்கம்போல கண்ணால் கட்டளையிட்டான்… ஆர்யனிடம் எப்போதும் பேச்சு குறைவு தான்… சிரிப்பு என்பது அவன் அறிந்திராத ஒன்று.. புன்னகையை எந்த விலைக்கும் வாங்க அவன் தயாராக இல்லை.. அவன் விழியின் கட்டளைக்கே அங்கே விழுந்தடித்து பணிந்தனர், பணியாளர்கள்…

“அக்னி சிறகே! நாம பையன்ங்களுக்குள்ள பேசிக்குவோமா?” ஆர்யன் ஆரம்பிக்க.. இவான் தலையாட்டினான்.. இவனுக்கும் பேச்சு குறைவு தான் போல.. கீழே உட்கார்ந்து இருந்த இவான் எழுந்து சித்தப்பாவை நிமிர்ந்து பார்த்தான்.. “நம்ம இதை பேச போறது இதான் முதலும் கடைசியும்.. அதனால கவனமா கேளு.. சரியா? என்று பீடிகை போட்டவன் இவான் சரியென இசைந்ததும் தொடர்ந்தான்… “இந்த வீடு தான் உனக்கு ரொம்ப பாதுகாப்பான இடம்.. வேற இடத்துல.. வேற ஆளுங்க கூட உன்னால வாழ முடியாது.. இந்த வீட்டில இருக்குறவங்க மட்டும்தான் உன் குடும்பம்..” கீழே ஓடிக்கொண்டிருந்த இரயிலை காலால் நிறுத்தியவன், “இதை தவிர வேற யாரும் உனக்கு கிடையாது..” என புருவம் உயர்த்தி சொன்னான்…

இவான் கண் கலங்க, “ஆனா… என் சித்தி…?” என பாவமாக கேட்டான். அவனிடமிருந்து பார்வையை விலக்கி வெறித்தவன், பின்பு இவானை பார்த்து சொன்னான்.. “நீ என்கூட தான் இருக்கணும்.. எப்பவும் இதை மறக்காதே.. உன் இடம் என பக்கம் தான்.. டீல்?” என கேட்க.. சரி என்று சொல்ல மனம் வராத இவான் அமைதியாக நின்றான்.. கீழே குனிந்து இரயிலை எடுத்த ஆர்யன் அதற்கு சாவி கொடுத்துக்கொண்டே, “நீ ஒத்துக்கிட்டினா… நாம ரெண்டுபேரும் படகுல போலாம்” என ஆசை காட்டினான்… இவான் சிரிக்கவும் ஆர்யனுக்கு நம்பிக்கை துளிர்த்தது.. “நம்ம கூட சித்தியும் வருவாங்களா…?” என கேட்டு அந்த நம்பிக்கையை வேரறுத்தான், இவான்… ஆர்யன் முகம் கூம்பியது… ஒப்பந்தம் இரத்தானது, பாசமிகு இவான் சம்மதிக்காத காரணத்தால்…

அவன் அறையில்…. கையில் பிரம்பை தட்டி தட்டி யோசித்து கொண்டிருந்த ஆர்யனுக்கு , ‘இவானை அடைந்தே தீருவேன்’ என்ற ருஹானாவின் சபதம் அப்போதும் காதில் ஒலித்தது.. இவான் பேச்சும் சேர்ந்து அவனை இறுக வைக்க… அப்போது வந்த ரஷீத் போன் செய்தி அவனை தளர்த்தியது.. நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டான்…      

———–

Advertisement