Advertisement

அத்தியாயம் – 46 

ருஹானா வாடகை வண்டியிலிருந்து இறங்கி வேகமாக ஓடி வந்தாள். தாவூத்தின் மறைவிடத்தில் காவல்துறையினர் ஆராய்ந்து கொண்டிருக்க, தலைமை அதிகாரியின் அருகே வந்தவள்நான் தான் குழந்தை கடத்தலை பற்றி உங்களுக்கு தகவல் சொன்னது. இவான் எங்க?” என கேட்க, அந்த அதிகாரிநாங்க இங்க வரும்போது யாரும் இல்லைஎன்று சொன்னார்.  

“அது எப்படி? அந்த ஆள் எங்க போனான்?” அவள் கேட்க “எந்த ஆள்?” என்று அவர் திருப்பி கேட்க, பதில் சொல்லாமல் உள்ளே ஓடிய ருஹானா இவான் அடைபட்டு இருந்த இடத்தை சுற்றி சுற்றி பார்த்தாள். 

காவல் அதிகாரிக்கு வாக்கிடாக்கி செய்தி சொன்னது நீங்க அங்க போறதுக்கு முன்னே தாவூத் அங்க தான் இருந்திருக்கான், அவன் கையில சின்ன பையன் இல்ல. வேற யாரும் கூட இருக்கல

ஆராய்ச்சியை முடித்த அவர் உதவியாளர் “சீஃப், இங்க விசாரணை முடிஞ்சது. இங்க ரெண்டு காரோட டயர் தடங்கள் இருக்கு, ஒரு கார் எதிர்பக்கம் போயிருக்கு” என சொல்ல, அதை கேட்டுக்கொண்டே வெளியே வந்த ருஹானாவுக்கு ஆர்யன் ‘எப்படியும் இவானை காப்பாத்திடுவேன்’ என்று சொன்னது நினைவு வந்தது.

“மேம்! நீங்க வீட்டுக்கு போங்க. எந்த செய்தி கிடைச்சாலும் உங்களுக்கு சொல்றோம். தாவூத்ட்ட பையன் இல்ல. ஒன்னு அவன் பையனை தவற விட்ருக்கனும்.. இல்லனா கை மாத்தி இருக்கனும்.  நீங்க கவலைப்படாதீங்க. எப்படியும் உங்க அக்கா மகனை கண்டுபிடிச்சிடுவோம். உங்களுக்கும் எந்த தகவல் கிடைச்சாலும் எங்களுக்கு சொல்லுங்கஎன அதிகாரி சொல்ல,  ருஹானா நன்றி சொல்ல, காவல் படை அங்கிருந்து கிளம்பியது

அவள் போனை எடுத்து ஆர்யனுக்கு அழைத்தாள்.

பின் இருக்கையில் இவான் தூங்கிக் கொண்டிருக்க, வேகமாக காரை ஓட்டிக் கொண்டு இருந்த ஆர்யன் பக்கத்து இருக்கையில் இருந்த போன் அடிக்கவும் திரும்பி பார்த்தான். ‘இவானின் சித்தி’ என பெயர் மேலே வர, போனை எடுத்து வேகமாக இருக்கையிலேயே கவிழ்த்து போட்டான். ருஹானாவே அங்கே அமர்ந்திருப்பது போல போனை முறைத்து பார்த்தான்.

——-

மலையடிவாரத்தில் மிக அழகாக அமைந்திருந்த வீட்டுக்கு வந்து சேர்ந்த ஆர்யன், இவானை தோளில் சுமந்தவாறே உள்ளே சென்று அவனை சோபாவில் படுக்க வைத்தான். மறுபடியும் காருக்கு சென்று உள்ளே இருந்த பழங்கள், காய்கறிகள் என இருந்த பைகளை கைகொள்ளாமல் தூக்கி வந்து உள்ளே வைத்து விட்டு வெளியே சென்றான்

மரங்களுக்கு இடையே மறைவாக காரை நிறுத்தியவன் மரக்கிளைகளை போட்டு காரை மூடினான். போனில் ருஹானா அழைக்க அதை ஏற்காமல் பார்த்துக் கொண்டே நின்றான்.

முழு மணிச்சத்தமும் அடித்து ஓய்ந்த பின் மறுபடியும் ஆர்யனுக்கு ருஹானா அழைக்க நீங்கள் அழைக்கும் நபர் தொடர்பு எல்லையில் இல்லைஎன பதிவு செய்யப்பட்ட குரல் கேட்க அவள் கவலையின் வசமானாள். 

அப்போது அங்கு வந்த கரீமாருஹானா! என்ன நடந்தது? ஆர்யன் எங்கே?” என கேட்க “இவான் சித்தப்பா அவனை கடத்திட்டார்” என அவள் சொல்லவும்

“என்ன?” என்று கேட்ட கரீமா  ‘நம்ம திட்டத்திலேயே இது இல்லயே!’ என திகைத்தாள்.

——-

தூங்கும் இவானையே ஆர்யன் பார்த்திருக்க ருஹானா தானும் உடன் வருவேன் என அடம் பிடித்து நின்றது அவனுக்கு நினைவு வந்தது. இவானை மீட்பதில் முழுகவனம் தேவை என, அவளின் நலன் கருதியும் விட்டுச் சென்றவன் இப்போது அவள் தவித்துக்கொண்டிருப்பாள் என எண்ணினான்.

போனை எடுத்து பார்க்க இருமுறை ரஷீத் அழைப்பு விடுத்திருக்க, இருபத்தெட்டு முறை ருஹானா அழைத்திருந்தாள். ‘அவளுக்கு அழைத்து சொல்’ என மனம் சொல்ல அவள் பெயர் மேல் விரல் வைத்தவன் பின் மனம் மாறி ரஷீத்தை அழைத்தான்.

“ரஷீத்! இவானை நான் கூட்டிட்டு வந்துட்டேன். பாதுகாப்பான இடத்தில இருக்கோம். நாங்க கொஞ்ச நாள் இங்க தான் இருக்க போறோம்”

“நீங்க போலீஸ்ட்ட இவானை கொடுக்க போறதில்லயா?”

“இல்ல, ரஷீத்”

“நீங்க இன்னும் பிரச்சினையை சிக்கலாக்கிடாதீங்க, ஆர்யன்”

“இவான் என் கூட தான் பத்திரமா இருக்கான். நான் அவனை கொடுக்க மாட்டேன்”

“அடுத்து என்ன ஆகும்? உங்க திட்டம் என்ன?”

“நான் முடிவு செய்றேன். அதுக்கு முன்ன நான் தீர யோசிக்கனும். உனக்கு நான் அப்புறமா போன் செய்றேன்”

போனை அணைத்து வைத்தவன் தூங்கும் இவானின் தலையை தடவியபடி அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். படபடப்புக்கு பஞ்சமில்லாமல் இவானை பாய்ந்தோடி மீட்டாகிவிட்டது. ஆனால் ஆர்யனால் முழுதாய் மகிழ்ந்திட முடியவில்லை. நிரந்தரமாக இவானை தக்க வைக்க என்ன வழி என யோசித்துக்கொண்டே இருந்தான்.

இரவெல்லாம் தூங்காமல் ருஹானா விடாமல் ஆர்யனிடம் பேச முயற்சி செய்து கொண்டே இருந்தாள்.

காலையிலும் ருஹானா அழைக்க அவன் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவள் ஜாஃபரிடமிருந்து ரஷீத் போன் இலக்கத்தை வாங்கி அவனுக்கு அழைக்க அவனும் போனை எடுக்கவில்லை

கரீமாவும் போனில் ஆர்யனுக்கு கூப்பிட்டு தோல்வியடைந்தவள் ஆங்காரமாக கத்தினாள். 

இன்னும் போன் ஆன் செய்யல? என்ன தான் செய்றான், இவன்?”

நாம கஷ்டப்பட்டு செய்ததுலாம் வீணாக்கிட்டான், அக்கா”

“இது நம்மையும் பாதிச்சா என்ன செய்றது? இத்தனை நாள் நான் போட்ட திட்டமெல்லாம் ஒன்னுமே இல்லாம போய்டும். நாம கொஞ்சம் கூட யோசிக்காததை ஆர்யன் செய்றான்”

“அந்த குட்டி பிசாசு விடுதில இருந்து தப்பிச்சது தான் அக்கா இது எல்லாத்துக்கும் காரணம்”

“அவனை இங்கயும் கூட்டிட்டு வர முடியாது. ஆர்யன் இங்க வரலனா நமக்கு எல்லாமே நஷ்டம் தான்”

கரீமா தன் கையாளுக்கு போனில் அழைத்து ஆர்யனை கண்டுபிடிக்க சொன்னாள்.

———

“சித்தப்பா! நாம இங்கயே தான் இருக்க போறோமா? நீங்க அவங்க கிட்ட என்னை கொடுக்க மாட்டீங்க தானே?”

“நாம அங்க போக மாட்டோம். இப்போதைக்கு இங்க இருக்கலாம். அடுத்து என்ன செய்றதுன்னு அப்புறம் யோசிக்கலாம்”

“என் சித்தி இங்க வருவாங்களா?”

வெளி தோட்டத்தில் உணவு மேசையை அமைத்து இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்க, இவான் ருஹானாவை பற்றி கேட்கவும், ஆர்யன் யோசனையில் ஆழ்ந்தான்.

ருஹானாவின் ஸ்கார்ப்பை எடுத்து காட்டிய இவான் “இது சித்தியோடது. இதை எப்பவும் நான் பிடிச்சிட்டே இருக்கேன். சித்தியோட வாசனை இதுல இருக்கு” என்று சொல்லி அதை முகர்ந்தான்.

“விடுதில புராக்னு ஒரு பையன் இதை பிடுங்க பார்த்தான். நான் விடவே இல்ல. அவனை தள்ளிவிட்டுட்டேன். அவன் கீழே விழுந்துட்டான். நான் அவனை விழ வைக்கல. தள்ளி தான் விட்டேன். அவன் விழுந்தது எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சி”

“நீ வருத்தப்படாதே, சிங்கப்பையா! உன்னை தாக்க வந்தவங்க கிட்டே இருந்து உன்னை பாதுகாத்துக்கிட்டே. அது தப்பு இல்ல. நாம நேசிக்கிறவங்களையும், நாம பத்திரமா வச்சிருக்கற பொருளையும் எப்பாடுபட்டாவது காப்பாத்தனும்

“நீங்க என்னை காப்பாத்தினது போல. அப்படித்தானே சித்தப்பா?”

“ஆமா, அக்னி சிறகே!’ என சொல்லி இவானின் தலையை வருடினான்.

“அப்போ நானும் என் சித்தியை அதே போல காப்பாத்தனும் தானே?”

ஆர்யனால் பதில் சொல்ல முடியவில்லை.

“இதை புராக் எடுத்திருந்தா, சித்தியை என்கிட்டே இருந்து பிரிச்சது மாதிரி” என சொல்லி திரும்பவும் ஸ்கார்ப்பை முகர்ந்து பார்த்தான். “சித்தியும் இங்க இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன்” 

ஆர்யன் அவனையே பார்த்திருக்க அப்போது சேவல் கூவும் சத்தம் கேட்டது. “ஆஹ்! சேவல்! நான் போய் பார்க்கிறேன்” என்று இவான் ஓடிவிட, ஆர்யன் ருஹானாவை நினைத்திருந்தான்.

அப்போது அழைத்த ரஷீத்தும் போனில் அவளை பற்றியே பேசினான்.

“என்ன ஆர்யன்! எல்லாம் சரிதானே? இவான் சித்தி எனக்கு கால் செய்திட்டே இருக்காங்க. நான் எடுக்கல”

“மறுபடியும் கூப்பிட்டா எடுத்து பேசு, ரஷீத். உனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லு”

“சரி, உங்க விருப்பம். இப்போ என்ன செய்ய போறீங்க?

“இவானை நான் கொடுக்குறதா இல்ல. என்னோட ஒரே முடிவு இதான். நீ லாயர்ஸ்ட்ட பேசு. இதை தீர்க்க என்ன வழி இருக்குன்னு பாரு. என்ன செய்யணுமோ அதை நான் செய்றேன். இவானை விட முக்கியம் எனக்கு வேற எதும் இல்ல”

——–

“ரஷீத் சார்! உங்களுக்கு எதாவது தெரிஞ்சா எனக்கு சொல்லுங்க. எனக்கு இவானை பற்றி அதிக கவலையா இருக்கு. அவன் சித்தப்பா போன் எடுக்க மாட்றார். அதான் உங்களை கூப்பிட்டேன்”

“எனக்கும் இணைப்பு கிடைக்கல, ருஹானா மேம்! ஆனா சீக்கிரமே அவர் கிட்டே இருந்து தகவல் வரும்”

“இன்ஷா அல்லாஹ்! உங்களுக்கு எந்த தகவல் வந்தாலும் எனக்கு சொல்லுங்க”

“கண்டிப்பா சொல்றேன்”

“அவர் செய்றது தவறான செயல்ன்னு அவர் போன் செய்தா எடுத்து சொல்லுங்க. இவர் இப்படி செய்றது இவான் நமக்கு திரும்ப கிடைக்கிறதை சிக்கலாக்கும். உங்க கிட்டே இருந்து வர செய்திக்காக காத்து இருக்கேன்”

ருஹானா பேசிக்கொண்டு இருக்கும்போதே உள்ளே வந்த கரீமா, அவள் பேசி முடிக்க காத்திருந்தாள்.

“ரஷீத் சார் கிட்டே தான் கேட்டேன். அவருக்கும் எந்த விவரமும் தெரியல”

“ஆர்யன் ஏன் இப்படி செய்றேன். இவானை எங்க கொண்டுபோய் மறைச்சி வைக்க முடியும்? யாருக்கு தான் அவனோட ரகசியம் தெரியுமோ?”

கரீமா புலம்பியபடி செல்ல ருஹானாக்கு ஒரு யோசனை வந்தது. கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டாள்.

——

“நல்வரவு மகளே! நீ அதிக கவலையா இருக்கற மாதிரி தெரியுதே?”

“ஆமா, சையத் பாபா! மிக மோசமான நிகழ்ச்சி நடந்துடுச்சி. இவான் சித்தப்பா அவனை எங்கயோ மறைச்சி வச்சிருக்கார்”

“என்ன!! வா வந்து உட்கார்ந்து விவரமா சொல்லு”

———

ஆர்யன் கட்டைகளை பிளந்து கொண்டிருக்க இவான் சோகமாக அமர்ந்திருந்தான்.

“என்ன ஆச்சு, இவான்? எதோ யோசிக்கிறே! சொல்லு என்கிட்டே. இந்த இடம் பிடிக்கலயா?”

“பிடிச்சிருக்கு. ஆனா பிடிக்கவும் இல்ல”

கோடரியை கீழே வைத்த ஆர்யன் இவான் பக்கம் வந்து மண்டியிட்டான்.

“நாம மனம்விட்டு மறைக்காம பேசலாமா, சிங்கப்பையா? ஏன் இந்த இடம் உனக்கு பிடிக்கல?” இவான் தோளில் கைபோட்டு கேட்டான்.

“என்னோட சித்தி இங்க இல்ல. எனக்கு அவங்களை ரொம்ப தேடுது”

ஆர்யன் பதில் சொல்லவில்லை.

“என் அம்மாவை கூட நான் மிஸ் செய்தேன். ஆனா சித்தி வந்ததும் அது குறைஞ்சிடுச்சி. ஏன்னா சித்தி என்னை பாசமா கட்டிபிடிச்சிக்குவாங்க”

இவான் சொல்ல ஆர்யனின் சிந்தனை ருஹானா அவனை கட்டிப்பிடித்த நிகழ்வுக்கு சென்றது. மண்ணோடு புதைக்கப்பட்ட அவளை தோண்டி எடுத்து ஆர்யன் காப்பாற்றிய வேளையில் பயத்துடனும், உயிர் பிழைத்த நிம்மதியிலும் ருஹானா ஆர்யனின் தோளில் கைபோட்டு அணைத்தது அவன் நினைவு பொக்கிஷங்களிலிருந்து வெளியே வந்தது.

“கதைல வர இளவரசி போல சித்தி இருப்பாங்க. உங்களுக்கு தெரியும் தானே? அவங்க சிரிக்கும்போது ரொம்ப அழகா இருப்பாங்க”

ஆர்யனுக்கு இப்போது ரோஜாவண்ண கவுனில் ருஹானா புன்னகை முகம் காட்டினாள். 

“நீங்க என்ன நினைக்கறீங்க, சித்தப்பா? சித்தி இளவரசியை விட அழகு தானே?”

——–

“என்ன நினைச்சி இதெல்லாம் செய்றார்ன்னு எனக்கு புரியல, சையத் பாபா. இவான் எப்படி இருக்கான்னு கூட எனக்கு தெரியல. அதான் உங்களால உதவ முடியுமான்னு கேட்க வந்தேன்”

“நாம நம்பிக்கை வச்சிருக்கவங்க மேல இன்னும் நம்பிக்கை வைக்கிறது தப்பு இல்ல, மகளே! 

“நீங்க என்ன சொல்றீங்க? நான் அவங்களை தேடி போக கூடாதா? ஆனா அவர் யோசிக்காம இவானையும் சேர்த்து அபாயத்துக்குள்ள மாட்டிக்கிறார்”

“ஆர்யன் யோசிக்காம எதும் செய்ய மாட்டான், மகளே! அதும் இவான் விசயத்துல அவன் ரிஸ்க் எடுக்கவே மாட்டான்”

ருஹானா அவரையே கூர்ந்து கவனிக்க “அவன் கருப்பு முத்து போலன்னு உனக்கு ஏற்கனவே நான் சொல்லி இருக்கேன்ல?” என்று சொல்ல அவளும் தலையாட்டினாள்.

“இப்போ அவன் பாதுகாப்பு கவசத்துல இவானை கொண்டு போய் பத்திரமா வச்சிருக்கான். அவன் ஒருத்தன் மட்டுமே இந்த பிரச்சினையை சமாளிக்க முடியும்ன்னு அவன் நம்புறான்” 

“மகளே! நீ அவனுக்கு நேரம் கொடு. அவன் கூட்டுல இருந்து வெளிய வரவரை பொறுமையா காத்திரு. எதும் செய்ய முடியாத நிலையில நாம இருக்கும்போது அமைதியா இருக்கறது தான் நல்லது”

“நான் பொறுமையா இருப்பேன், சையத் பாபா. ஆனா, இவான்? அவன் சின்ன பையன். மனசு உடைஞ்சி போயிருக்கான். இப்போ என்ன மனவலில இருக்கானோ? அவன் மேலும் புண்படறதுக்குள்ள அவனை நான் பார்க்கணும்”

——

“என் சித்தி ரொம்ப நல்லவங்க. அப்படித்தானே, சித்தப்பா?”

“ஆமா சிங்கப்பையா! உன்னை நல்லா கவனிச்சிக்கிட்டாங்க. உனக்காக ருசியா சமைச்சி கொடுத்தாங்க. முக்கியமா லெமன் குக்கீஸ் அதிக சுவையா செஞ்சி கொடுப்பாங்கல? உனக்கு ரொம்ப பிடிக்குமே”

“ஆமா, சித்தப்பா! நல்லா செய்வாங்க. அதோட என் சித்தி ரொம்ப அழகா இருப்பாங்க. அதானே சித்தப்பா?” இவான் திரும்ப தொடங்கிய இடத்துக்கே வர ஆர்யனின் நிலை தர்மசங்கடமானது. 

இவான் எலுமிச்சை வாசனையிலேயே வாசம் செய்ய ஆர்யனுக்குள் ஒரு தேடல், ருஹானாவை குறித்து.

“பேசினது போதும். வா வேலையை பார்க்கலாம். சித்தப்பாவுக்கு உதவி செய்” என அழைத்துச்சென்று வெட்டி போட்ட கட்டைகளை எடுத்து இவானின் கைகளில் அடுக்கி அடுப்பின் அருகே வைக்க சொன்னான்.

மீண்டு விட்ட சிட்டு

இதம் தருபவளை தேட

தேடல்களே மொழியானது..! 

ஒட்டுண்ணி போல

அவனையும் அது தீண்ட

அவனுக்குள்ளும் வார்த்தைகளற்ற தேடல்.. 

தூங்கிவிட்ட இவானை படுக்க வைத்த ஆர்யன், கீழே விழுந்து கிடந்த ருஹானாவின் ஸ்கார்ப்பை கையில் எடுத்தான். ‘சித்தி வாசனை இதில் இருக்கு’ என இவான் சொன்னது கவனத்தில் வர இவனும் அதை முகர்ந்து பார்த்தான்.

சில விநாடிகள் கடந்த பின்னே, ‘தான் என்ன செய்கிறோம்?’ என கோபப்பட்டவனின் முகம் மென்மையிலிருந்து கடுமைக்கு மாறியது. அதை இவானின் தலையணைக்கு அடியில் வைத்தவன், தன்னை சமப்படுத்திகொள்ள அங்குமிங்கும் நடந்தான். போனை எடுத்து ருஹானாவிற்கு அழைப்பு விடுத்தவன், அது செல்லும் முன் நிறுத்திவிட்டான்.

அப்போது ரஷீத் அழைக்க போனை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.

“வேலையெல்லாம் முடிச்சிட்டியா, ரஷீத்?”

“நீங்க சொன்னபடி எல்லாம் செஞ்சிட்டேன்”

“பணம் ரெடியா?”

“ஆமா. ஆனா அவ்வளவு பணம் வங்கில இருந்து எடுக்கும்போது கவனம் தேவை”

“சரி, அது நான் பார்த்துக்கறேன். வேற எதாவது தகவல் இருக்கா?”

“இவானோட சித்தி நீங்க எங்க இருக்கீங்கன்னு கேட்டாங்க. நான் தெரியாதுன்னு சொல்லிட்டேன். அவங்க குரலே பாவமா இருந்தது. இவானை பற்றி அதிகமா கவலைப்படறாங்க. ஆர்யன்! நீங்க அவங்க கிட்டே இவான் நல்லா இருக்கான்னு மட்டுமாவது சொல்லலாம்.”

ஒரு நீண்ட மூச்சை விட்ட ஆர்யன் “நாம ஏற்கனவே பேசினது தான். யாருக்கும் எதுவும் தெரியவேண்டாம்” என்றான்.

“சரி உங்க விருப்பம். பணம் எடுத்ததும் நான் உங்களை திரும்ப கூப்பிடுறேன்”

“ஓகே ரஷீத்”

போனை வைத்த ஆர்யன் இவான் அருகில் சென்று அமர்ந்துக்கொண்டான்.

சிறிது நேரம் கழிய எதோ சத்தம் கேட்கவும் கூர்ந்து கவனித்தவன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு பூனை போல மெதுவாக வெளியே சென்றான். வீட்டை சுற்றி சோதனை செய்துவிட்டு வெளிவாசல் கதவருகே வந்தவன் அங்கே யாரோ நிற்பது கண்டு வேகமாக பிடித்து இழுத்து துப்பாக்கியை நெற்றியில் வைத்து அழுத்தினான்.

பயந்து போய் ருஹானா சத்தம் எழுப்ப, அவளை பார்த்து ஆர்யன் சினம் கொண்டானா, ஆசுவாசம் அடைந்தானா.. அவனுக்கே தெரியவில்லை.

(தொடரும்)  

Advertisement