Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 45 

இவானை கடத்திய ரவுடி தாவூத், குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவனிடம் விலை பேசிக் கொண்டிருந்தான். “அவ்வளவு அழகான பையன்! ரோட்ல விட்டா இவனை பார்க்காம யாரும் போக மாட்டாங்க. முகத்தில அப்படியே பால் வடியுது. பெத்தவங்க இல்ல. சித்தப்பன் தான் வளர்த்து இருக்கான். இப்போ என்ன..? நீ புது சித்தப்பனா இருந்துட்டு போயேன்.  பணத்தை பத்தி யோசிக்காதே. இவனை வச்சி புதையலே அள்ளிடலாம். ராத்திரி காசை கொடுத்துட்டு பையனை கூட்டிட்டு போ…”

போனில் பேரம் படியாமல் தாவூத் பேசிக்கொண்டே போக, இவான் சித்தி என அழுதுக் கொண்டிருக்க….

சிறுவர் விடுதி வாசலில் ருஹானா இவான் என்று அழுதுக் கொண்டிருக்க, ஆர்யன் ரஷீத்திடம் உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டிருந்தான். “அண்டர்கிரவுண்ட்ல இருக்கற அத்தனை குரூப்ஸ், மாஃபியா, கேடிங்க, ரவுடிங்க எல்லாரையும் கண்காணிக்க ஆளுங்கள அனுப்பு. எந்த கொடுக்கல், வாங்கலும் நமக்கு தெரியாம நடக்கக் கூடாது. இன்னும் ஒரு மணி நேரத்தில இவான் எனக்கு கிடைக்கனும். புரியுதா? அவனுக்கு ஒரு கெடுதலும் நடக்கக்கூடாது”

காரில் ஏறப் போனவனிடம் ருஹானா கேட்டாள்.

“எங்க போறீங்க? இங்க தான் போலீஸ்ல சொல்லியிருக்காங்களே!”

“இவானை தேட போறேன். நைட் தான் வெளியே போயிருக்கான். அதிக தூரம் போயிருக்க முடியாது. இங்க தான் எங்காவது பக்கத்தில இருப்பான்”

ஆர்யன் காரை இயக்க, ருஹானா பிரார்த்தனை செய்தபடியே ஓடிவந்து அமர்ந்தாள்.

பையிலிருந்த குக்கீசை பார்த்தவள் “நேத்துலருந்து பசியா இருப்பானே!” என மீண்டும் அழ ஆரம்பிக்க, ஆர்யன் கண்களும் கலங்கின. சாலையில் நின்ற ஒரு சிறுவனை பார்த்து இவான் என ருஹானா கத்த, ஆர்யன் வேகமாக காரை நிறுத்தி இறங்கி ஓடினான்.

ஆனால் அது வேறு ஒரு பையன். ஏமாற்றம் அடைந்தவர்கள் போனில் இவானின் புகைப்படத்தை காட்டி அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார்கள். யாரும் பார்க்கவில்லை என்று சொன்னதும் மீண்டும் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர்.

——-  

தையல்காரனிடம் மாட்டிய வாகிதா தப்பிக்க பெருமுயற்சி செய்தாள். அங்கிருந்த கத்திரிக்கோலை கேடயமாக வைத்து அவனை பயமுறுத்தினாள். இவானை பற்றி காவலரிடம் தகவல் தெரிவித்தபின் அணைத்து வைத்திருந்த செல்பேசியை எடுத்து இயக்கி கமிஷனர் வாசிமுக்கு அழைப்பு விடுத்தாள். அவன் குரல் கேட்கவும் கவனம் சிதறியவளை கீழே தள்ளிய அந்த கொடியவன் அவள் போனையும் பறித்து தூக்கி போட்டான்.

———

“அக்கா! எனக்கு சிரிப்பை அடக்கவே முடியல. பசப்புக்காரி இனி விடுதி வாசல்ல தான் தூங்கணும்”

“அவ எங்க தூங்கினாலும் எனக்கு கவலை இல்ல, சல்மா. இங்க வர மாட்டா. அது போதும்”

“சரி தான் அக்கா”

“இவானை அனுப்பியாச்சி. இனி அவன் சித்தியை துரத்தணும்”

“ஹப்பா!! என்ன நல்ல வாசனை! மாளிகையே சுத்தமாகிடுச்சி, அக்கா”

“ம்ம்.. இழு.. இழு.. நல்லா காற்றை இழு”

“இவான் ரூம்ல கட்டிலை, அலமாரியை மாத்தணும் அக்கா”

“எல்லாம் பிளான் செய்து வை, சல்மா”

“சூனியக்காரி ரூம் கூட எனக்கு ஓகே தான் அக்கா. ஆர்யன் ரூம்க்கு எதிர் ரூம். நல்லா இருக்கும். இல்லனா… அதை என்னோட ஜிம் ரூமா மாத்திடவா? உடற்பயிற்சி கருவிலாம் அங்க போட்டுக்கறேன்”

“நல்லா தான் யோசிக்கிறே! அப்போ உன் ரூமை உடைகள் வைக்கும் அறையா வச்சிக்கோ”

“ஆமா அக்கா. இந்த மாளிகை நம்ம கையில கிடைச்சதும் நம்ம விருப்பப்படி முழுசா மாத்தி அமைக்கணும்”

“சரி சல்மா, நீ போய் உணவு தயாரான்னு பாரு, அவங்க வரதுக்குள்ள நாம சாப்பிடலாம்”

———-

காரில் ருஹானா இவான் வரைந்த படத்தை ஆர்யனுக்கு காட்டிக்கொண்டிருந்தாள். “இது உங்களுக்காக தான் இவான் ஆசையா வரைஞ்சான்” என்று ருஹானா சொல்ல, சிறுவன் கையை அசுரன் பிடித்திருப்பது போல இவான் வரைந்து வண்ணம் தீட்டியிருந்த படத்தை பார்த்ததும் ஆர்யனுக்கு இவான் பேசியது ஞாபகம் வந்தது.

‘இது போல தானே என்னை நீங்க பாதுகாக்கறீங்க, சித்தப்பா?’ என அவன் அன்று கேட்டது இப்போது ஆர்யனின் மனவேகத்தை அதிகப்படுத்தியது. அப்போது தனியாக இருந்த ஒரு சிறுவனை பற்றி போனில் தகவல் வந்ததாக காவல்நிலையத்திலிருந்து ஆர்யனுக்கு செய்தி சொல்லவும், அவன் மின்னல் வேகத்தில் அவர்கள் சொன்ன இடத்துக்கு காரை செலுத்தினான்.

அதே ஓவியத்தை தன் பிஞ்சு கைகளால் இவான் அங்கே சுவரில் வரைந்துக்கொண்டிருந்தான். சித்தப்பா அவனுக்கு சொன்ன கதையை திரும்ப சொல்லியபடியே அவன் வரைய அதோடு அவன் சித்தியையும் சேர்த்து வரைந்தான். “நீள முடி… லெமன் குக்கீஸ் வாசனையோட அழகான இளவரசி போல அவன் சித்தியும், பெரிய சிங்கம் போல அவன் சித்தப்பாவும்… சின்ன பையனை எப்படியும் காப்பாத்த வருவாங்க”

சத்தம் கேட்டு கதவை திறந்து எட்டிப்பார்த்த கேடி தாவூத் “இப்படி முயல் குட்டி மாதிரி அமைதியா இருந்தா எனக்கும் தொல்லை இல்ல. உனக்கும் நல்லது” என இளிக்க “நான் ஒன்னும் முயல் இல்ல. அக்னி சிறகு நான்! என் சித்தப்பா என்னை தேடி வருவார்” என வீரமாக பேசினான்.

முகம் மாறிய தாவூத் இவான், சுவரில் இருந்த படத்தை பார்த்தவன், அதன் மேல் கையால் கோடு போட்டபடி “உனக்கு நான் புது சித்தப்பா பார்த்துட்டேன். அவன் உன்னை கூட்டிட்டு போக வந்திட்டே இருக்கான்” என்று சொல்ல இவான் அவனை முறைத்தபடி நின்றான்.

——-   

வாகிதா இருக்கும் இடத்தை தக்க சமயத்தில் கண்டுபிடித்து வந்த வாசிம் தையல்காரனை அடிபின்னி எடுத்துவிட்டான். வாகிதாவை வெளியே அழைத்து சென்றவன் தன் கோட்டை அவள் மேல் போர்த்தி அவளை ஆறுதல்படுத்தினான். அவளுக்கு தண்ணீர் வாங்கிவந்து கொடுத்து அவள் தேம்பலை நிறுத்த உதவி செய்தான். ‘பெரியப்பாவிற்கு செய்து கொடுத்த சத்தியத்தை மறக்கலாமா?” என அவளை கடிந்து கொண்டவன் அவளை சையத் உணவகத்திற்கு அழைத்து போனான்.

——

ஆர்யனும், ருஹானாவும் பூங்காவிற்குள் ஓடிவர அங்கே காவலர்களும் பையனை தேடிக்கொண்டிருந்தனர். “இங்க தான் ஒரு சின்ன பையன் இருக்கான்னு போன்ல ஒரு பொண்ணு சொன்னா. ஆனா அப்படி யாரும் இல்ல. நாங்களும் தேடுறோம். சிலசமயம் விளையாட்டுக்கு யாராவது இப்படி செய்துடுவாங்க” என்று காவல் அதிகாரி சொல்ல இருவரும் ஒன்றும் புரியாமல் நின்றனர்.

அப்போது ஆர்யன் போன் ஒலிக்க “அல்லாஹ்! நல்ல செய்தி தாங்க!” என ருஹானா பிரார்த்திக்க, போனில் ரஷீத் “தாவூத்ன்னு ஒரு ரவுடி சின்ன பையனை விலை பேசிட்டு இருக்கான்னு தகவல் கிடைச்சது, ஆர்யன்” என்றான். 

“அந்த தாவூத் இருக்கிற இடம் கண்டுபிடிச்சி உடனே எனக்கு அனுப்பு, ரஷீத்” என ஆர்யன் இரைந்தபடி காருக்கு விரைந்தான். “இவானுக்கு என்ன ஆச்சு? யார் இந்த தாவூத்?” என கேட்டபடியே ருஹானாவும் பின்னாடி ஓடி வந்தாள்.

—–

“வாக்கு, கடமை, பொறுப்பு இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன சையத் பாபா?” என எதிரே அமர்ந்திருந்த வாகிதாவை பார்த்தபடியே வாசிம் கேட்டான். சையத் குர்ஆனில் இருந்து ஒரு சம்பவத்தை விளக்கி சொல்லிவிட்டு “செய்றேன்னு சொன்ன வார்த்தையை எந்த கஷ்டம் வந்தாலும் காப்பாத்துறது தான் வாக்கு, பொறுப்பு, கடமை” என்று எடுத்து சொன்னார்.

சையத் அவர்களுக்கு உணவு கொண்டுவர செல்ல, வாசிம் “நீ பெரியப்பாக்கு கொடுத்த வாக்குறுதியை மட்டும் மனசுல வை. உன்னை அத்தை எதும் சொல்லாம நான் பார்த்துக்கறேன். இனி எங்கயும் போக மாட்டேன்னு எனக்கு சத்தியம் செய்” என மன்றாட, தனக்கு ஏற்பட இருந்த பேராபத்து மனதில் கிலியை ஏற்படுத்த, இதற்கு தௌலத் அத்தையின் ஏச்சுகளை தாங்கிக் கொள்ளலாம் என வாகிதா முடிவு எடுத்து சத்தியம் செய்தாள்.

——-

ரஷீத் அனுப்பிய முகவரியில் இருந்த வீட்டில் ஆர்யன் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தான். இண்டு இடுக்குகளில் கூட கவனமாக தேடியும் அங்கே யாரும் இல்லை. வெறுப்புடன் வெளியே வந்தவன், ருஹானா குழப்பமாக பார்க்க, அங்கே நின்ற ஒரு வாலிபனிடம் தாவூத் பற்றி விசாரித்தான். “தாவூத் இங்க வந்து மாதக் கணக்காயிடுச்சி. அவனை பற்றி ஒன்னும் தெரியல” என்று அவன் சொல்ல என்ன செய்வது என யோசித்தான்.

“அந்த தாவூத் கிடைக்கலனா என்ன செய்றது? அதுக்குள்ள அவன் இவானை வேற யாருக்கும் கொடுத்துட்டா நாம எப்படி இவானை கண்டுபிடிக்கிறது?” என ருஹானா கேட்க “இவானுக்கு ஒன்னும் ஆகாது. அவன் நல்லா இருப்பான்” என ஆர்யன் நம்பிக்கையாக சொன்னான்.

தாவூத் போக கூடிய இடங்கள் ஒவ்வொன்றாக ரஷீத் சொல்லிக்கொண்டே வர ஆர்யனும் தேடிக்கொண்டே அலைந்தான். இறுதியாக இருவரும் ஒரு கிடங்கை வந்து அடைந்தார்கள். “நீ இங்கயே இரு. ஆபத்தான இடம்” என்று ருஹானாவை வெளியே நிறுத்தி உள்ளே சென்றான்.

உள்ளே சதுரங்கம் ஆடிக்கொண்டிருந்தவர்களிடம் அவன் விசாரிக்க அவர்கள் பதில் சொல்லாமல் இடக்கு பேசினர். அவர்கள் இருவரையும் புரட்டி புரட்டி அடிக்கலானான். எப்போதும் ஆர்யன் சொல்பேச்சு கேட்காத ருஹானா இப்போதும் உள்ளே வந்து அந்த அடிதடியை பார்த்து திகைத்து நின்றாள்.

அவன் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி ஆர்யன், தாவூத் தற்போது இருக்குமிடத்தின் தகவலை பெற, ருஹானா ‘முகவரி சொன்னவனை ஆர்யன் சுட்டுவிடுவோனோ’ என நடுங்கிப்போனாள். அவனை கீழே தள்ளிவிட்டு ஆர்யன் விறுவிறுவென வெளியே விரைய, ருஹானா மிரட்சியில் இருந்து விடுபட்டு அவனை தொடர சில விநாடிகள் பிடித்தது.

ஆர்யன் காரில் ஏறி இயக்க, ஓடிவந்த ருஹானா காரில் ஏற முயன்று கதவை திறக்க பார்த்தாள். முடியவில்லை. ஆர்யன் கதவை பூட்டி இருந்தான். கண்ணாடியை தட்டி “கதவை திறங்க” என அவள் கத்த, கண்ணாடியை மட்டும் லேசாக இறக்கிய ஆர்யன் “நான் தனியா போறேன். அங்கே என்ன ஆபத்து எதிரே வரும்ன்னு தெரியாது. நீ மாளிகைக்கு போ” என மறுத்தான்.

“நானும் உங்க கூட வரேன். ப்ளீஸ் திறங்க” என ருஹானா அழ, ஆர்யன் காரை நகர்த்த, கார் முன்னே வந்து நின்ற ருஹானாவை பக்கவாட்டில் கடந்து அவளை விட்டுவிட்டு வேகமாக சென்றுவிட்டான். சற்று நேரம் அப்படியே நின்ற ருஹானா போனை எடுத்து பிள்ளைகளை கடத்தி விற்பவனையும் அவன் முகவரியும் போலீசுக்கு தெரிவித்து விட்டாள்.

——–     

“வா, உன் சித்தப்பா வந்துட்டே இருக்கார்” என தாவூத் இவானை அழைக்க “என்னோட சித்தப்பா வந்துட்டாரா?” என இவான் சிரிப்போடு எழுந்தான். “இது உன் புது சித்தப்பா! உனக்கு புது வாழ்வு துவங்குது. இனிமேல் உக்காராம வேலை செய்யணும். வேற இடம் போகலாம், வா” என அவன் இவான் கையை பிடித்து இழுக்க, அவன் கையை கடித்த இவான் ஓடிப்போய் ஒரு பெட்டிக்குள் ஒளிந்துகொண்டான்.

—–

இரவு நேர சாலையில் வாகனங்கள் அதிகமாக இருக்க, அந்த நெருக்கடியிலும் வேகத்தை குறைக்காமல் ஆர்யன் பறந்து வந்தான். அவன் காரை விட வேகமாக அவனுடைய மனமும், எண்ணங்களும் பறந்தன. 

——

இவானை தேடிக் கண்டுபிடித்த தாவூத் உரிய நேரம் தாமதமாகிவிட்டதே என்ற கவலையில் வேகமாக காருக்கு வந்தான். இவான் “விடு! விடு!! என கத்த அவனை பின்னிருக்கையில் போட்டவன் கதவை மூடி வண்டியை எடுத்தான். பின்னால் நின்ற இவான் அவன் தோளில் அடிக்க, காரை முன்னே எடுக்க பார்த்தவன் எதிரே வந்து மறித்து நின்ற கருப்பு நிற டொயோட்டா செக்வயாவை பார்த்து திகைத்தான்.

காரிலிருந்து படுவேகமாக இறங்கி வந்த ஆர்யன், தாவூத் கார் கதவை கூட திறக்காமல் கார்ஜன்னலில் கையை விட்டு அவனை அப்படியே வெளியே இழுத்து தூக்கினான். அவனை கீழே போட்டு நைய புரட்டி எடுத்தவன் சரமாரியாக முகத்தில் குத்தினான். கால்களாலும் அவனை உதைத்தான்.

கதவை திறந்து கீழே இறங்கிய இவான் ஆர்யன் அடிப்பதை பார்த்துவிட்டு “சித்தப்பா!” என்று கூப்பிட அடிப்பதை நிறுத்தினான். பாய்ந்து வந்து அண்ணன் மகனை அணைத்துக்கொண்டான். சில விநாடிகள் அப்படியே இருந்தவன் இவானை தள்ளி நிறுத்தி ஆராய்ந்தான்.

“சித்தப்பா! நீங்க வந்திட்டீங்க. கதைல வர்ற மாதிரியே என்னை காப்பாத்திட்டீங்க” என சிரிப்புடன் இவான் சொல்ல, “சித்தப்பா எப்பவும் உனக்கு துணையா இருப்பேன்” என மூச்சிரைக்க வேகமாக சொன்னான்.    

சித்தப்பாவின் இன்னுயிர்

சிறுவனிடத்தில் மட்டுமே

இளையவனுக்கு தீங்கு

நேரும் நேரம்

காப்பானின் செயல்

காப்பதின்றி வேறேது?

மகன் உணரும் நேரம்

கதையல்ல நிஜம்..!

 

அப்போது காவல் வண்டியின் எச்சரிக்கை மணியோசை கேட்டது. இவான் பயத்துடன் “என்னை அவங்க கூட அனுப்பாதீங்க சித்தப்பா. நான் போக மாட்டேன்” என்று சொல்ல ஆர்யன் யோசித்தான். “என்னை விட்டு போகாதீங்க” என்ற வார்த்தையை இவான் சொல்லவும், ஆர்யனுக்கு அவன் சிறுவயது கதறல் நினைவு வந்தது. அவன் அழ அழ விட்டுப் போன அன்னை முகம் முன்னே வந்தது.

“உன்னை எப்பவும் கைவிட மாட்டேன், என் அக்னி சிறகே! உனக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கேன் தானே! உன்னை விட்டு போக மாட்டேன்” என்று சொன்ன ஆர்யன் அவனை தூக்கிக் கொண்டான். காவலின் அபாய ஒலி அருகில் கேட்க காரில் இவானை அமர வைத்தவன், காரை இயக்கினான்.

“நாம எங்க போறோம், சித்தப்பா?”

“யாருமே நம்மை கண்டுபிடிக்க முடியாத இடத்துக்கு”   

(தொடரும்) 

Advertisement