Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 44 

இவான் வரவை ஆவலோடு எதிர்நோக்கி அவனை வரவேற்க தடபுடலாக ஏற்பாடுகள் செய்துக்கொண்டிருந்த ருஹானாவோடு தானும் இணைந்துக் கொண்ட ஆர்யன், சமையலறையில் அவள் தந்த காபியை வாங்க எத்தனிக்கும்போது அவன் போன் ஒலித்தது.

போனில் வந்தது நல்ல செய்தி அல்ல என இறுகிய அவன் முகம் காட்டிக்கொடுக்க, அதைக்கண்டு ருஹானா பதறிப் போனவள் “என்ன நடந்தது? இவானை பற்றிய செய்தியா?” என கேட்க “இவானை நமக்கு தர மறுத்துட்டாங்க” என ஆர்யன் இடியை இறக்கினான்.

ஆர்யன் வேகமாக அனல் மூச்சுகளை விட ருஹானா மூச்சு விட மறந்தாள். ஒருவாறு தன்னை திரட்டிக் கொண்டவள் “இது எப்படி நடக்கும்? எனக்கு புரியல. எங்க தப்பாச்சி? இப்போ நாம என்ன செய்ய போறோம்?” என அடுக்கடுக்காய் அவள் கவலைகளை கேள்விகளாக மாற்ற, ஆர்யன் நெற்றியெல்லாம் வேர்த்து விட்டது. ஒரு பதிலும் சொல்லாமல் விருட்டென வெளியே சென்றான்.

ஏப்ரானை கழட்டி வைத்துவிட்டு அவன் பின்னாலேயே ருஹானாவும் ஓடினாள். அறையில் கோபமாக சுழன்று கொண்டிருந்த ஆர்யனை பார்த்து திகைத்து நின்றாள். அவன் மேசையில் இருந்த பொருட்கள் எல்லாம் கீழே சிதறி கிடந்தன. கண்ணாடி சுக்குநூறாக உடைந்திருந்தது. கை முஷ்டிகளை சுவற்றில் மோதிக்கொண்டு இருந்தான்.

“என்ன செய்றீங்க? உங்களை நிதானத்துக்கு கொண்டு வாங்க” என ருஹானா சத்தமாக சொல்ல அவளை திரும்பி பார்த்தான். “உங்க கோபத்தை அடக்குங்க. அங்க ஒரு சின்ன பையன் நமக்காக காத்துட்டு இருக்கான். நம்ம மேலே தான் முழு நம்பிக்கையும் வச்சிருக்கான். அவனுக்கு ஏமாற்றம் தர முடியாது. உங்களை கட்டுப்படுத்திக்கங்க” என்று கட்டளைகள் போல அவள் சொல்ல அவளையே பார்த்துக்கொண்டிருந்த ஆர்யனின் கோபம் விஷம் போல தலைக்கேறியது.

“போ வெளியே!!!” பல்லை கடித்துக்கொண்டு சொன்னான். ருஹானா மிரண்டு விழிக்க “உன்னை வெளிய போக சொன்னேன்” என திரும்ப கத்தினான். அவன் அவளை முறைத்தபடி நிற்க, அவனை மிரள மிரள பார்த்தவண்ணம் வெளியே சென்றாள்.

எதிரே வந்த கரீமா என்ன நடந்தது என விசாரிக்க, ருஹானா விவரம் சொன்னவள் “அது எப்படி அவங்க இவானை வச்சிக்க முடியும்? எப்படி சாத்தியம்?” என நடந்த கொடுமைக்கு சாவி கொடுத்தவளிடமே வினவினாள். “ருஹானா டியர்! அது அரசாங்கத்தின் முடிவு. நாம என்ன செய்ய முடியும்?” என உள்ளே பொங்கிய மகிழ்ச்சியை மறைத்து கரீமா பதில் கேள்வி கேட்டாள்.

மீதியிருந்த இரவெல்லாம் ருஹானா கண்ணீர் மல்க பிரார்த்தித்தபடி இருக்க, ஆர்யன் கலக்கத்துடன் நடமாடிக்கொண்டு இருந்தான்.

——– 

காலையில் சிறுவர்களை துயிலெழுப்ப வந்த லைலா, இவான் படுக்கை காலியாக இருப்பது கண்டு அவனை தேடினார். அதே அறையில் இருந்த மெஹ்மத்திடம் விசாரிக்க “நான் என்ன அவன் வேலைக்காரனா? எனக்கு எப்படி தெரியும்?” என கேட்டுவிட்டு அவன் போர்வையை முகம் வரை மூடிக்கொண்டான். லைலா சுற்றி வந்து தேட பின்கதவு திறந்திருப்பதை கண்டு திக்பிரமை பிடித்து நின்றார்.

——–

வாகிதா திரும்பி வந்தது கமிஷனர் வாசிமின் அத்தை தௌலத்தால் சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடுத்த நாள் வாசிம் பணி காரணமாக வெளியூர் செல்ல, திரும்பவும் வாகிதாவை விரட்டியடிக்க முனைந்தார். பிடிவாதமாக வெளியேற மறுத்த வாகிதாவை ‘வாசிமை திருமணம் செய்வதே அவளது உள்நோக்கம்’ என குற்றம் சாட்டி அவள் பெட்டிகளுடன் அவளையும் தூக்கி போட்டார். 

மனம் உடைந்த வாகிதா இனி இங்கே திரும்புவதில்லை என முடிவு செய்து, தனக்கு தெரிந்த ஏதாவது வேலையை பார்த்துக்கொண்டு பெண்கள் விடுதியில் தங்கிக்கொள்வது என தீர்மானித்தாள். வாசிம் தன்னை கண்டுபிடித்திட கூடாது என அவளது செல்பேசியையும் அடைத்து வைத்தாள். வேலை தேடி அகாபா நகரை வலம் வந்தாள்.

ஆனால் அவள் நினைத்ததற்கு மாறாக வாசிம் தோழன் தன்வீர் வாகிதா வீட்டில் இல்லாததை கண்டுகொண்டு, அதை வாசிமுக்கும் தெரியப்படுத்த அவன் பதறிப்போய் நகருக்கு திரும்பி வந்தான். அவனது சக காவல்துறை நண்பர்கள் உதவியுடன் வாகிதாவை தேட ஆரம்பித்தான்.

——-      

ருஹானா ஆர்யனின் அறைக்கதவை மெதுவாக தட்டி பார்த்தாள். பின் வேகமாக தட்டினாள். உள்ளே எந்த சத்தமும் கேட்கவில்லை. காதை வைத்துப் பார்த்தாள். உள்ளூர சிரிப்பை அடக்கிக் கொண்டு வந்த கரீமா “என்ன ருஹானா! நீங்க ரெண்டுபேரும் இன்னும் பேசலயா?” என கேட்க “அவர் கதவையே திறக்க மாட்றார். உள்ள என்ன செய்றார்னே தெரியல. அங்க இவான் எங்களுக்காக காத்திட்டு இருப்பான். இவர் ஏன் இப்படி செய்றார்?” என புலம்பினாள்.

“ருஹானா! உன்னை பயங்காட்றதுக்காக நான் இதை சொல்லல. ஆர்யன் நிலைமை இப்போ மோசமா இருக்கு. புயலுக்கு முன்னே இருக்கிற அமைதி இது. ஆர்யன் இப்படி இருந்தாலே எனக்கு பயமா இருக்கும்” 

“விபரீதமா எதாவது செய்துடுவார்ன்னு சொல்றீங்களா?”

“எனக்கு தெரியல ருஹானா டியர். ஆனா எது வேணா நடக்கலாம்” என்று சொன்ன கரீமா அம்ஜத் அழைக்கவும் ருஹானாவிடம் தலையாட்டிவிட்டு சென்றுவிட்டாள். 

——–

அடர்ந்த மரங்களுக்கிடையே அமர்ந்தபடியே இரவை கழித்த இவான் நன்கு விடிந்ததும் வெளியே வந்தான். பழகாத வெளிச்சூழல் அவனை பயமுறுத்த சுற்றுமுற்றும் பார்த்தபடியே நடக்க தொடங்கினான்.

தண்ணீரில் விழுந்து கிடந்த ஒரு பூனைக்குட்டியை பார்த்தவன், ஸ்கார்ப்பை கால்சட்டைப் பையில் வைத்துக்கொண்டு அதை தூக்கிக்கொண்டான். “நீ ஏன் தனியா இருக்கே? உனக்கும் அம்மா இல்லயா?” என அதை தடவி கொடுத்தவன் “உனக்கு பசிக்குதா? எனக்கும் பசிக்குது. வா, சாப்பிட எதாவது கிடைக்குதான்னு நாம ரெண்டு பேரும் சேர்ந்து தேடலாம்” என்று பூனைக்குட்டியை அணைத்துக்கொண்டு நடக்கலானான். 

அன்பை தேடியே பயணம்

அன்புமொழி அறிந்த சிறுவன்

பகிர்வது அன்பின்றி வேறேது?

அன்பை கொடு..!

அரவணைத்து விடு..!!

——–

கதவை தட்டியும் உள்ளே இருந்து பதில் வராததால் கதவை திறந்துக்கொண்டு ருஹானா உள்ளே வர “நான் உள்ளே வர அனுமதி கொடுக்கலயே!” என கத்தியபடி திரும்பிய ஆர்யன், உள்ளே நுழைந்தது ருஹானா தான் என்று அறிந்து ஒன்றும் சொல்லாமல் தலையை திருப்பிக்கொண்டான். 

அருகில் வந்த ருஹானா பேச, பேச அவனிடம் எந்த அசைவும் இல்லை.

“என்ன செய்ய போறோம்?”

“எப்படி இவானை திரும்ப வாங்க போறோம்?”

“நீங்க என்ன யோசனை வச்சிருக்கீங்க?”

“வாயை திறந்து எதாச்சும் பேசுங்க”

“ப்ளீஸ், நாம முயற்சி எடுப்போம்”

“கண்டிப்பா ஏதோ தப்பா நடந்திருக்கு. நாம போய் அதிகாரிகளுக்கு புரிய வைப்போம்”

“எதும் பேச மாட்டிங்களா?”

அவனை அசைக்கமுடியாத ஏமாற்றத்தில் ருஹானா வெளியே நடந்து விட்டாள்.

ஆர்யன் உடல் விறைத்திருந்தாலும் கண்கள் கவலையை காட்டின.

——-

ஒரு அட்டைப்பெட்டியில் பூனைக்குட்டியை வைத்துக்கொண்டு அதனுடன் பேசிக்கொண்டே இவான் நடந்து வந்தான்.

“உங்க அம்மாவை கண்டுபிடிக்க முடியலன்னு கவலைப்படாதே.. ஆஹா.. இங்க பார்.. ஒரு ரொட்டித்துண்டு கிடக்குது”

கீழே இருந்த ரொட்டியை எடுத்த இவான் அதை சிறிய துண்டுகளாக பிய்த்து அந்த குட்டிக்கு கொடுத்தவன், மீதி ரொட்டியை பெட்டியில் வைத்தான். அப்படியே சாலையை கடக்க முயன்றவன், வேகமாக வந்த காரை கவனிக்கவில்லை. அப்படியே திகைத்து நின்ற இவானை வேகமாக ஓடிவந்த வாகிதா தூக்கிக்கொண்டாள்.

கார் ஓட்டுனர் திட்டிக்கொண்டே செல்ல இரு சின்ன உயிர்களை காப்பாற்றிய வாகிதா “உனக்கு ஒன்னும் ஆகலயே?” என இவானை கேட்டாள். “இல்ல. இந்த குட்டி தான் பயந்துடுச்சி” என்று பூனையை இவான் காட்ட “வா, இதை பத்திரமா கொண்டு வைக்கலாம்” என்று வாகிதா அழைத்துப் போனாள்.

பையில் இருந்த சாக்லேட்களை இவானுடன் பகிர்ந்துக் கொண்டவள் “என்கிட்டே இதான் இருக்கு. நீ உன் வீட்டுக்கு போய் நல்ல சாப்பாடு சாப்பிடு” என்றாள்.

“என்னோட சித்தி, சித்தப்பாவை உங்களுக்கு தெரியுமா?”

“தெரியாதே! நீ அவங்களோட தான் இருக்கியா?”

“ஆமா! நான் அவங்களை தேடி தான் போறேன்”

“எங்கிருந்து வரே நீ?”

“நான் விடுதில இருந்தேன். அங்க இருந்து ஓடி வந்துட்டேன்”

அதிர்ந்து போன வாகிதா “இன்னேரம் உன் சித்தி, சித்தப்பா உன்னை காணோமேனு பயந்து போயிருப்பாங்களே. நான் உன்னை விடுதில கொண்டு விடவா?” என கேட்டாள்.

“நான் அங்க போக மாட்டேன். என் சித்தியை நானே தேடி கண்டுபிடிப்பேன்” என இவான் உறுதியாக சொல்ல வாகிதா கவலைப்பட்டாள்.

——– 

தூங்கும் சல்மாவை எழுப்பிய கரீமா “நம்ம உலகம் தலைகீழா மாறிடுச்சி. நீ இன்னும் தூங்கிட்டு இருக்க!” என சொல்ல “என்னக்கா இவ்வளவு சந்தோசம்?” என சல்மா புரண்டபடியே கேட்டாள்.

“ஆர்யன் அந்த வித்தைக்காரி முகத்தை கூட பார்க்க மறுத்துட்டான்”

வேகமாக எழுந்து உட்கார்ந்த சல்மா “என்ன! அவளை பார்க்கலயா? எப்படி இந்த மாற்றம்?” என ஆவலோடு வினவினாள்.

“இவான் கிடைக்க மாட்டான்ங்கற தகவல் அவங்களுக்கு வந்துடுச்சி. இவான் இல்லனா ருஹானா இல்ல. அவ்வளவு தான்”

“ஒருவழியா அவ ஒழிஞ்சாளா? அப்பாடா! இப்போ தான் நிம்மதியா இருக்கு அக்கா”

“இவான் நிரந்தரமா கிடைக்கமாட்டான்னு தெரிஞ்சதும் அவளும் ஒரேடியா அர்ஸ்லான் மாளிகைவிட்டு போய்டுவா. இப்போ இவானை பார்க்க கிளம்பிட்டு இருக்கா”

“அக்கா உன்னை பார்த்து எல்லாரும் பயப்படணும். நீ நினைக்கறதை நடத்தி காட்டுறே”   

பெருமையாக சிரித்த கரீமா “சீக்கிரமே ஆர்யன் உன்னை தேடி வருவான் பார்” என்றாள்.

——

“உன் சித்தி, சித்தப்பா முகவரி உனக்கு தெரியுமா?”

“தெரியாதே”

“அவங்க போன் நம்பர்?”

“ம்ஹூம்”

“அப்போ நாம போலீஸ்ட்ட போகலாமா?”

“அவங்க என்னை அந்த விடுதில விட்டுட்டாங்கன்னா என்ன செய்றது? எனக்கு அங்க திரும்ப போக வேண்டாம்”

“அப்போ எப்படி தான் அவங்களை கண்டுபிடிக்கிறது? நான் நினைக்கறேன், அவங்க ஏற்கனவே போலீஸ் கிட்ட சொல்லியிருப்பாங்க”

“இல்ல! அவங்க அப்படி செய்ய மாட்டாங்க” என்று வேகமாக மறுத்த இவான், வாகிதாவின் சாக்லேட் கவரை திருப்பி கொடுத்தான்.

“சரி, சரி, நீயே வச்சிக்கோ! நாம போகலாம்”

“உங்க வீடு எங்க இருக்கு?”

“இனிமே தான் நான் வேலை தேடனும். அப்புறம் வீடு தேடனும். என் வீட்டுக்கு நீயும் உன் சித்தியும் தான் முதல் விருந்தாளிகள்”

“என் சித்தப்பாவும் வரலாமா?”

“தாராளமா வரலாம்” 

இரு புதிய நண்பர்களும் பேசி சிரித்தபடி ஒரு பூங்காவை அடைந்திருந்தனர்.

“சாக்லேட் மட்டும் சாப்பிட்டா வயிறு வலிக்கும். நான் போய் பேகல் வாங்கிட்டு வரேன்” என வாகிதா சொல்ல இவான் பயமாக பார்த்தான்.

“பயப்படாதே. நீ இங்கயே விளையாடிட்டு இரு. நான் சீக்கிரம் வந்துடறேன். இந்த பார்க் விட்டு வெளியே போயிடாதே. தெரியாதவங்க கிட்ட பேசாதே!” என்று சொல்லி வாகிதா சற்று தள்ளி சென்றாள். 

ஒரு செடி மறைவில் நின்று இவானை பார்த்துக்கொண்டே தனது செல்பேசியை திறந்து காவல்நிலையத்துக்கு அழைத்து விவரம் சொன்னவள் அவர்கள் வரும்வரை அவளும் பையனுடன் அங்கேயே இருப்பதாக தெரிவித்தாள். வாகிதா போனை திறந்ததுமே வாசிம் அவள் இருப்பிடம் அறிந்துக்கொண்டவன் விரைந்து வண்டியை செலுத்தினான்.

———-

வக்கீலிடமிருந்து வந்த அழைப்பு அசையாத ஆர்யன் சிலைக்கு உயிர் கொடுத்தது.

“ஆர்யன் சார்! இறுதி முடிவும் எடுத்துட்டாங்க. அர்ஸ்லான் மாளிகைக்கு இவானை திருப்பி அனுப்ப முடியாதுன்னு சொல்லிட்டாங்க. என்னோட அறிவுரை என்னன்னா நீங்க அவசரப்பட்டு எந்த…..”

அதற்கு மேல் ஆர்யன் போனில் கேட்டுக்கொண்டு இருக்கவில்லை. சூறைக்காற்றாக கிளம்பி படிக்கட்டில் வேகமாக இறங்க, இவானின் பைகளுடன் வாசலுக்கு நடந்து கொண்டிருந்த ருஹானா “என்ன நடந்தது? இவானை பற்றிய தகவலா?” என பதற, அவளை ஏறிட்டும் பார்க்காமல் வேகமாக வெளியே சென்றான்.

“எங்க போறீங்க? உங்களை தான் கேட்கறேன்” என அவள் பின்னாலேயே ஓடிவர ஆர்யன் ஒன்றும் சொல்லாமல் நடக்க, அவனுக்கு முன்னால் வந்து வழிமறித்து நின்றவள் “எனக்கு தெரியும். இவான் விஷயமா தான் போறீங்க. நானும் வரேன்” என்றாள்.

“தேவையில்ல” என்று சொன்னபடி அவளை விலக்கிய ஆர்யன் கார் கதவை திறக்க, ருஹானா அவன் முழங்கையை பற்றி இழுத்தாள். “இவான் என்னோட அக்கா பையனும் தான்” என அவள் பேச அவள் கையை உதறிவிட்டு காரில் ஏறினான். ருஹானாவும் வேகமாக காரை சுற்றி வந்து உள்ளே ஏறிக்கொண்டாள்.

ஆர்யன் அவளை திரும்பி பார்த்து முறைக்க “நானும் வருவேன்” என அவளும் முறைத்துக்கொண்டே சீட்பெல்ட்டை மாட்டினாள். வாய் பேசாமல் தத்தளிக்கும் மனதோடே இருவரும் பயணம் செய்தனர்.

சிறுவர் விடுதிக்கு வந்து சேர, தூரத்திலேயே இவர்களை பார்த்துவிட்ட லைலா பயந்தபடி வெளியே வர, அவரிடம் ஆர்யன் “இவானை நான் இப்பவே பார்க்கணும்” என்றான்.

“ஆர்யன் சார்! நீங்க கொஞ்சம் பொறுமையா இருக்கணும். போலீஸ்ல சொல்லியாச்சி. அவங்க இவானை சீக்கிரமே தேடி தந்துடுவாங்க” என்று மெல்ல சொன்னார். 

இருவர் இதயங்களும் லயம் தப்பி துடிக்க, மற்ற இயக்கங்கள் செயலிழந்து நிற்க, ஆர்யனும், ருஹானாவும் தங்கள் உயிரே பறிபோனது போல நின்றுவிட்டார்கள். 

———

பேகல் வாங்கிக்கொண்டு இவானை நாடி சென்ற வாகிதா, அந்த பூங்காவை நோக்கி வாசிம் வருவதை பார்த்து திகைத்து நின்றாள். மறுபக்கம் இரு காவல்காரர்களும் வர அவர்கள் இவானை கூட்டி சென்றுவிடுவார்கள் என்ற தைரியத்தில் வேறு பக்கம் ஓட்டம் பிடித்தாள்.

வாசிம் பூங்காவின் உள்ளே சென்று வாகிதாவை தேட, இவான் காவலர்களை பார்த்துவிட்டான். போலீஸ் தன்னை விடுதிக்கு அனுப்பி விடுவார்கள் என்று பயந்த இவான் வேறுபக்கம் சென்று மறைந்து கொண்டான். 

காவலர்கள் தங்களை போனில் அழைத்த பெண்ணை தேட, வாசிம் வாகிதாவை தேட, மறைந்திருந்த இவான் சமூக விரோதி ஒருவன் கண்ணில் பட்டுவிட்டான். இவான் நம்பும்படி பேசி அவன் இவானை அங்கிருந்து அழைத்து சென்றான்.

தையல்கடை ஒன்றில் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற பலகையை பார்த்து உள்ளே சென்ற வாகிதா, அங்கே காமுகன் ஒருவனிடம் மாட்டிக்கொண்டாள்.

இவானை நைச்சியமாக பேசி அழைத்து வந்த ரவடி, அவனை அறையில் அடைத்து பூட்டவும், பயந்து போன இவான் சித்தியின் ஸ்கார்ப்பை பிடித்தவண்ணம் சுவரில் சாய்ந்து தரையில் அமர்ந்துக்கொண்டான்.

(தொடரும்)

Advertisement