Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 43 

‘இவானை தங்களிடமிருந்து பிரிக்கும் புகாரை அனுப்பியது மிஷால்’ என்று தவறாக புரிந்து கொண்ட ஆர்யன், அவனை நோக்கி துப்பாக்கியால் குறி வைக்க, மிஷால் சில விநாடிகள் அசைவற்று நின்று விட்டான்.

பின் சற்று சுதாரித்துக்கொண்டவன் “என்ன முட்டாள்தனம் செய்றே நீ?” என்று ஆர்யனை பார்த்து கேட்டான். 

“நான் இல்லடா, நீ தான் படுமுட்டாள்தனம் செஞ்சிருக்கே? என் வாழ்க்கையில தலையிட உனக்கு எங்க இருந்து தைரியம் வந்தது?”

“நீ என்ன சொல்றே? எதை பத்தி பேசுறே?”

“நீ தானே ரிப்போர்ட் கொடுத்தது? நீ தானே இவானை தூக்கிட்டு போக வச்சது?” என கத்திய ஆர்யன் துப்பாக்கியை இடுப்பில் செருகிவிட்டு, மிஷாலின் சட்டை காலரை பிடித்து தூக்கினான்.

“நான் அதை செய்யல. ஆனா யார் அதை செய்தாங்களோ அவங்க சரியா தான் செய்திருக்காங்க” என்று சொன்ன மிஷால் ஆர்யன் கையை தட்டி விட்டான். “இவான் அரசாங்க பாதுகாப்புல இருக்குறது தான் நல்லது. உன்ன மாதிரி முரடன் கூட இருக்கறதை விட அது சிறந்தது”

மிஷாலின் குற்றச்சாட்டை கேட்டு கோபம் தலைக்கேறிய ஆர்யன் அவனை தாக்கினான். மிஷால் உதட்டிலிருந்து இரத்தம் வடிந்தது.

வாடகைக்காரில் அந்த சாலையை கடந்த ருஹானா மிஷாலின் உணவகம் அருகே ஆர்யனின் டொயோட்டா செக்வயா நிற்பதை கண்டு குழப்பம் அடைந்து, காரை அங்கே நிறுத்த சொன்னாள். காருக்கு பணம் செலுத்திவிட்டு உள்ளே வந்தவள் கண்டது, இருவரின் கைகலப்பைத் தான். திகைத்து போய் ஓடி வந்தவள் இருவரையும் பிரித்துவிட்டாள். “விடுங்க அவனை! என்ன செய்றீங்க?” என்று ஆர்யனை தள்ளினாள். 

“இவன் தான் புகார் கொடுத்தது” என திமிறிக்கொண்டு வந்த ஆர்யனை பிடித்து நிறுத்தியவள் “என்ன பைத்தியக்காரத்தனம் இது! அவன் ஒன்னும் செய்யல. அவன் எனக்கு இந்த மெசேஜ் எப்போ அனுப்பி இருக்கான் பாருங்க. அவன் இது எதுலயும் சம்மந்தப்படல” என்று போனில் மிஷாலின் குறுஞ்செய்தியை காட்டினாள்.

“நம்பலனா இதை நீங்களே படிங்க. யார் அதை செய்ததுன்னு அவனுக்கு தெரியாது” என அவளும் இரைந்து பேச ஆர்யன் அந்த செய்தியை படித்தான். “உங்க கோபத்தால எதுவும் நடக்காது. இப்படி நடந்துக்கிட்டா இவானை திரும்ப வாங்கிடலாம்னு நினைக்கிறீங்களா?” என ருஹானா மூச்சிரைக்க பேச, தன் ஆக்ரோஷத்தை விட்டு அடங்கிய ஆர்யன் மிஷாலை முறைத்தபடி வெளியேறினான்.    

மிஷாலின் இரத்தம் கண்டு பதறிய ருஹானா அவனுக்கு ஒத்தடம் கொடுக்க ஐஸ் கொண்டு வந்து கொடுத்தவள் “இவானை இழந்துடுவோமோ என்ற பயத்துல அவர் இப்படி நடந்துக்கிட்டார். நாளைக்கு அதிகாரிகள் விசாரிக்க வராங்க. அந்த குழப்பத்துல இந்த பைத்தியகாரத்தனம் செய்துட்டார்” என ஆர்யனுக்காக பரிந்து பேசினாள்.

“இல்லனா மட்டும் அவன் தன்மையா நடந்துக்க போறானா, என்ன?” மிஷால் ஏளனமாக கேட்க ருஹானா பதில் ஏதும் சொல்லவில்லை.

“அவன் முரடன் தானே? அவன்கிட்டே இருந்து அரசாங்கம் இவானை பறிச்சதுல என்ன தப்பு?” என மிஷால் கேட்க “உனக்கு எப்படி இந்த தகவல் தெரியும்?” என ருஹானா பேச்சை மாற்றினாள்.

“கரீமா மேம் சொன்னாங்க” என வாய் தவறி சொல்லிவிட்டான். “ஓஹ்! நான் போன் எடுக்கலன்னதும் அவங்களுக்கு போன் செய்தியா?” என ருஹானாவே கேட்டு, வெளியே வரவேண்டிய உண்மையை தன்னையறியாமல் மூட, மிஷாலும் தலையாட்டினான்.

“சரி, நான் வீட்டுக்கே போறேன். இதுக்கு மேலே போய் பர்வீன் அம்மாவை தொல்லை செய்யக்கூடாது” என ருஹானா கிளம்ப “நான் உன்னை பர்வீன் ஆன்ட்டி வீட்ல விடுறேன். அங்க தங்கியிருந்திட்டு காலைல போ” என மிஷால் சொன்னான்.

“இல்ல மிஷால். இவான் பற்றி எதும் தகவல் வரலாம். இப்போ நான் வீட்டுக்கு போறது அவசியம்” என அவள் சொல்ல “சரி, வா.. நானே உன்னை கொண்டுவிடுறேன்” என மிஷாலும் புறப்பட ருஹானா தடுத்தாள்.

“வேணாம், நீ அங்க வந்தா திரும்ப தேவையில்லாம ஒரு சண்டை உருவாகும். நீ எனக்கு ஒரு டாக்ஸி மட்டும் சொல்லு, ப்ளீஸ்” என ருஹானா கேட்க மிஷால் போனை எடுத்து காரை அழைத்தான்.

——-  

இவான் கையில் ஒரு கல்லை கொடுத்த மெஹ்மத் அந்த அறை ஜன்னல் கண்ணாடியை உடைக்க சொன்னான். இவான் முடியாது என மறுக்க, ஹஸலின் தலைமுடியை பிடித்துக்கொண்டு புராக் அதை வெட்டுவதாக பயமுறுத்த, இவான் கல்லை வீசினான்.

கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு உள்ளே வந்த லைலா என்ன நடந்தது என விசாரிக்க, இவான் உடைத்துவிட்டதாக மெஹ்மத் சொல்ல மற்ற யாரும் எதுவும் சொல்லவில்லை. அதை நம்பாத லைலா “போய் படுங்க! காலைல இது பத்தி பேசலாம்” என சிறுவர்களை அனுப்பி வைத்தார். 

அவர்கள் சென்றதும் ஹஸல் லைலாவிடம் நடந்தது அனைத்தையும் சொல்லிவிட, அவர் இந்த கோபக்கார சிறுவர்களை எப்படி திருத்துவது என யோசித்தார்.

——–

ருஹானா திரும்பி வரும்வரை படிக்கட்டின் அருகேயே ஆர்யன் நிற்க, மேலே ஏறி வந்த ருஹானா அவனை நேர்பார்வையுடன் முறைத்தாள். அவனை சுற்றிக்கொண்டு சென்றவள் தன் அறை வாசலில் நின்று திரும்பி பார்த்தாள். 

தன்னையே பார்த்துக்கொண்டிருந்த ஆர்யனிடம் “மிஷாலுக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்லன்னு எனக்கு தெரியும். ஆனா புகார் கொடுத்தவங்களுக்கு உங்க முரட்டுத்தனம் பத்தி நல்லா தெரிஞ்சிருக்கு” என கடுமையான குரலில் சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

மறைந்திருந்த கரீமா குதூகலமாய் இதை பார்க்க, யோசனையுடன் ஆர்யன் படியிறங்கி செல்ல கடமை தவறாத சிகாமணி ரஷீத் போனில் கூப்பிட்டான்.

“அப்புறம் பேசலாம், ரஷீத்” ருஹானாவின் பேச்சின் தாக்கத்தில் இருந்த ஆர்யன் பேச மறுத்தான்.

“ஒரு நிமிடம், ஆர்யன். என்னாச்சு உங்களுக்கு?”

“நாளைக்கு அதிகாரிகள் விசாரணை பாதகமா தான் போகும்னு தான் எனக்கு தோணுது. அவங்க இவான் சித்தி கிட்டேயும் விசாரிப்பாங்க. அவ என்னை பத்தி எதும் நல்லதா சொல்ல மாட்டா”

“நீங்க ஏன் அப்படி நினைக்கிறீங்க?”

“இப்போ சில நிகழ்ச்சிகள் நடந்தது. அதோட விளைவுகள் நாளைய நிகழ்வுகளை மோசமாக்கும்”

“நான் எதாவது செய்யணுமா?”

“இல்ல.. நாளைக்கு என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்” என்று சொல்லி போனை அணைத்து கோட் பையில் போட்டவன் இரவில் படுக்கும் எண்ணமின்றி அங்குமிங்கும் நடக்க ஆரம்பித்தான்.

சிரித்தபடி சல்மாவிடம் சென்ற கரீமா “நினைச்சதை விட எல்லாமே நமக்கு நல்லதா நடக்குது. ஆர்யனும், ருஹானாவும் பிரிஞ்சிட்டாங்க. இனி அந்த பையன் அர்ஸ்லான் மாளிகைக்கு வர வாய்ப்பே இல்ல” என்று மகிழ்ந்தாள்.

“எப்பவும் விட பெரிய திட்டம் இது. அப்படிதானே அக்கா? கடைசி வரை சரியா நடக்கும்ல?”

“கவலைப்படாதே, சல்மா. பிளான் பக்காவா இருக்கு. அப்படியே சின்ன தடங்கல் வந்தாலும் நான் சரிப்படுத்திடுவேன். இப்போ நாம நிம்மதியா தூங்கலாம்”

——- 

வரவேற்பறை சோபாவில் அம்ஜத்தும், சல்மாவும் அமர்ந்திருக்க, ரஷீத்தும், ஆர்யன் கழுத்தை நெறித்த வழக்கறிஞரும் சோபாவின் பின்னே நின்றிருக்க, ஆர்யன் அலை பாய்ந்துக் கொண்டிருந்தான்.

“ஏன் இவ்வளவு நேரம் ஆகுது?” என ஆர்யன் பொறுமையில்லாமல் நடக்க, “அதிக நேரம் எடுக்குறதால எதிர்மறையா நடக்கும்னு நினைக்க வேண்டாம், ஆர்யன் சார். இது போன்ற விசாரணைகளுக்கு நிறைய நேரம் செலவாகும்” என அவன் கோபத்தை அனுபவித்திருந்த வக்கீல் ஆர்யனை நிதானமாக்க சொல்ல, “எல்லாம் நல்லபடியா நடக்கும், ஆர்யன்” என ரஷீத் ஆறுதலளிக்க முயன்றான்.

இதையெல்லாம் பார்த்துகொண்டிருந்த அம்ஜத் “இவான் திரும்ப நமக்கு கிடைச்சிடுவான் தானே, ஆர்யன்? நம்ம கூட தானே இருக்க போறான்?” என பதட்டமாக கேட்க, தன் பதட்டத்தை மறைத்துக்கொண்ட ஆர்யன் அண்ணன் தோளை தொட்டு “ஆமா அண்ணா! எதை கொடுத்தும் இவானை நான் திரும்ப வாங்கிடுவேன். உங்களை அமைதியா வச்சிக்கோங்க, அண்ணா” என்றான்.

அப்போது தொங்கிப் போன முகத்துடன் கரீமா வர, அவளிடம் சென்ற ஆர்யன் “முடிந்ததா?” என்று கேட்டான். “ஆமா என்னோடது முடிஞ்சது. இப்போ ருஹானாட்ட கேட்கறாங்க. அடுத்து உன்னை கூப்பிடுவாங்க” என்று கரீமா கூறினாள். அதற்கு மேல் அங்கே நிற்கமுடியாமல் தனதறைக்கு செல்வதாக சொல்லி ஆர்யன் மேலே போய்விட்டான். 

அம்ஜத் “என்ன கேட்டாங்க கரீமா? இவானை நமக்கு தர மாட்டேன்னு சொல்லல தானே?” என படபடப்பாக கேட்க “அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. நீங்க தேவையில்லாம குழம்பாதீங்க” என்று சொன்ன கரீமா தங்கையின் அருகே சென்று அமர்ந்தாள். ‘நீ சொல்ல வேண்டியதுலாம் சொல்லிட்டே தானே?’ என கண்ணால் சல்மா கேட்க ‘சிறப்பா சொல்லிட்டேன்’ என கரீமாவும் கண்ஜாடை செய்தாள்.

——- 

ருஹானாவிடம் பதில்களை வாங்கிக் கொண்டிருந்த அதிகாரிகள் கடைசியாக ஆர்யனை பற்றி கேட்டார்கள்.

“எப்படிப்பட்ட மனிதர் ஆர்யன் அர்ஸ்லான்? வன்முறை தான் அவரோட வாழ்க்கை முறையா?”

இந்த வார்த்தையை கேட்டு தன் அறைக்கதவை திறக்க போன ஆர்யன் அப்படியே நின்றான். இவான் அறையில் நடந்துக்கொண்டிருந்த விசாரணை,  கதவு லேசாக திறந்திருந்த காரணத்தால் அந்த கேள்வி வெளியே வந்து விழுந்தது.

“அவரோட கோபம் எல்லாருக்கும் தெரியுமே! ருஹானா மேம்! நீங்க அதை பத்தி சொல்லுங்க”

ஆர்யனுக்கு கேள்வி முக்கியமில்லை. அதற்கு ருஹானா அளிக்கும் பதிலுக்காக அவன் நெஞ்சம் தடதடத்தது. அவளின் ஒவ்வொரு வார்த்தையும் தெளிவாக கேட்க இவான் அறை அருகே நெருங்கி நின்றான்.

“எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லலாம், ருஹானா மேம்!”

அவளை அம்பு எய்து பயமுறுத்தியது, துப்பாக்கியை தலையில் வைத்தது, நாயை ஏவி விட்டது என எல்லா நிகழ்ச்சிகளும் ருஹானாவை எடுத்து சொல் என சொன்னது.

அவளும் “உண்மையாக சொல்ல போனால்…“ என தொடங்கிவிட்டாள். ஆர்யனும் காதை தீட்டிக்கொண்டான்.

“அவர் கடுமையானவர் தான்!” 

ஆர்யன் முகம் சுருங்கிவிட்டது. அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான்.

திறந்திருந்த கதவை அப்போது தான் கவனித்த அதிகாரி எழுந்து சென்று நன்றாக மூடினார்.

“ஆபிஸ்லயும், வீட்டிலயும் அவரை பார்த்து எல்லாரும் நடுங்குறாங்க. ஆனா இவானை பொறுத்தவரைக்கும் அவர் அப்படியே வேற மனிதர். நீங்க யாரை கேட்டாலும் சொல்லுவாங்க, அவர் இவான் மேலே எத்தனை அன்பு வச்சிருக்கார்ன்னு… அவனை எப்படி பாசத்தோட பாதுகாப்பார்ன்னு”

——–

லைலா நான்கு சிறுவர்களுக்கும் காலையுணவு அளித்தபின் இவானையும், ஹஸலையும் குக்கீஸ் செய்ய அழைத்து போனார். இருவரையும் கிச்சனில் விட்டு திரும்பி வந்தவர், இரு குறும்புக்கார பையன்களிடம் “நேத்து நீங்க ரெண்டு பேரும் தான் இவானை மிரட்டி கண்ணாடியை உடைக்க வச்சிங்கன்னு எனக்கு தெரியும். அதுக்கு தண்டனை தான் இன்னைக்கு நீங்க எந்த விளையாட்டுலயும் கலந்து கொள்ள முடியாது” என்று சொல்லி சென்றார்.

“பாரு புராக், அழுமூஞ்சி நம்மள மாட்டிவிட்டான். இன்னைக்கு நைட் அவனுக்கு நம்ம வேலையை காட்டிட வேண்டியதுதான்” என மெஹ்மத் கோபத்தோடு கூற புராக் சம்மதித்தான்.

——-    

“வாங்க ஆர்யன் சார்! உக்காருங்க! உங்களுக்கு முன்னாடி நாங்க ருஹானா மேம் கிட்டே ஏன் பேசினோம்னா அவங்க இவானோட அதிக நெருக்கமா இருக்காங்க, அதனால தான். ருஹானா மேம் எங்களுக்கு அவங்களால முடிந்த அளவு தெளிவுபடுத்தினாங்க. அவங்க பேச்சு உண்மையா இருந்தது. நாங்க உங்ககிட்டேயும் அதே தெளிவையும், நேர்மையும் எதிர்பார்க்கிறோம்”

‘கண்டிப்பா என்னை பத்தி தவறா தான் சொல்லியிருப்பா’ என எண்ணம் மனதில் ஓட ஆர்யன் அமைதியாக பார்த்திருந்தான்.

“உங்களுக்கும், இவானுக்கும் உள்ள உறவை பத்தி சொல்லுங்க”

“என்னை பொறுத்தவரை இவான் ஒரு பக்கம். மொத்த உலகமும் மறுபக்கம். அவன் என்னோட அண்ணா பையன். என் அண்ணா எனக்கு கொடுத்த பொக்கிஷம், பொறுப்பு, கடமை எல்லாம். அவனுக்கு கெடுதல் செய்ய நினைக்கிறவங்களுக்கு தடையா, அவனுக்கு முன்னாடி அவனை காக்கும் கவசமா நான் நிற்பேன்”

“சரி, இவான் உங்க கூட எப்படி பழகுவான்? பயத்தோடவா? இல்ல.. மரியாதையோடவா?”

“இவான் என்னை பார்த்து பயப்பட எந்த காரணமும் இல்ல. நான் அவன் சித்தப்பா. அவன் மேலே நான் எவ்வளவு அன்பு வச்சிருக்கேன், எப்படி அவனை பாதுகாப்பேன்னு அவனுக்கு நல்லா தெரியும்”

“ஆர்யன் சார்! நம்மளை பத்தி நாமே சொல்றது சிரமம் தான். அப்படி ஒருவேளை நான் உங்களை பத்தி சொல்ல சொன்னா நீங்க என்ன சொல்வீங்க?”

“என் அண்ணன் பையனையும், குடும்பத்தையும் பாதுகாக்கறது தான் என் வேலை. அதுக்காக மட்டும் தான் நான் இருக்கேன்”

கேள்வி கேட்ட அதிகாரி தலையாட்ட, அனைவரின் பேச்சுக்களையும் குறிப்பெடுத்துக்கொண்டிருந்த அதிகாரியும் நிமிர்ந்து ஆர்யனை பார்த்தார்.

Advertisement