Advertisement

இதை பார்த்துக்கொண்டே பின்னால் வந்த லைலா ஒரு படம் கொண்டு வந்து இவானை நிறம் தீட்ட சொன்னார். அவன் பதில் சொல்லாமல் நிற்க “உனக்கு காது கேட்காதா? நான் எத்தனை முறை சொல்றேன், யாரும் நம்மை தேடி வர மாட்டாங்க” என மெஹ்மத் சொல்ல, லைலா அவனை கடிந்து கொள்ள மெஹ்மத்க்கு கோபம் வந்தது.

அதற்குள் ருஹானாவையும் ஆர்யனையும் கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்துவிட்ட இவான் “சித்தி! சித்தப்பா!!” என கத்தினான். ருஹானாவும், ஆர்யனும் வெளியே செல்ல இருந்தவர்கள் அவனை பார்த்து அருகே வர “சித்தி!! என்று கூவியபடி கதவுக்கு ஓடினான். பின்னால் லைலாவும் ஓடிவர அடைத்திருந்த கதவை தட்டினான்.

“சித்தி! சித்தப்பா! என்னை இங்க இருந்து கூட்டிட்டு போங்க! நான் இங்க இருக்க மாட்டேன்” என அவன் கதற, லைலா “இவான்! தயவு செய்து அழாதே! இப்போ நீ அவங்களை பார்க்க முடியாது” என சமாதானப்படுத்த முயற்சி செய்தும் அவன் அழுகையை நிறுத்தவில்லை.

ருஹானா கதவின் பின்னிருந்து “இவான் செல்லம்! உன்னை இங்க நாங்க விட மாட்டோம். சீக்கிரம் வந்து கூட்டிட்டு போவோம். நாங்க உன்னை அதிகமா நேசிக்கிறோம்” என்று அழ, சித்தியின் அழுகையில் இவான் சற்று மட்டுப்பட்டான். லைலா அவனை உள்ளே அழைத்துப்போக, இருவரின் கண்ணீரில் ஆர்யன் கண்களும் கலங்கின. “உன்னை திடப்படுத்திக்கொள். சீக்கிரம் அவனை அழைத்து போய்டலாம்” என்று சொல்லி அவளை கூட்டிப்  போனான்.

———

மிஷாலின் உணவகம்.

“சொல்லுங்க கரீமா மேம்! என்கிட்டே பேசனும்னு போன் செய்தீங்களே”

“ஆமா, மிஷால்! ஆனா நான் சொல்றதை நீ ரகசியமா வச்சிக்கணும்”

“சரி! என்ன விசயம்?”

“இவானை சிறுவர் விடுதிக்கு கூட்டிட்டு போய்ட்டாங்கன்னு நான் உனக்கு போன்ல சொன்னேன் தானே”

“ஆமா”

“அதுக்கு ஒரு ரிப்போர்ட் தான் காரணம். அது கொடுத்தது யார்ன்னு ஆர்யன் தீவிரமா தேடிட்டு இருக்கான். உனக்கு தெரியும்ல அவன் சந்தேகம் யார் மேல விழும்ன்னு”

“ருஹானா தான் அந்த புகார் கொடுத்துருக்கான்னு அவன் சந்தேகப்படறானா?”

“நான் அப்படி சொல்லல. ஆனா ருஹானாவை கவனிச்சிக்கோன்னு சொல்றேன். அவளுக்கு உன்னை விட்டா யாரும் இல்ல. உனக்கு ஆர்யனோட கோபத்தை பத்தி தெரியும். அவன் கோபத்துல என்ன செய்வான்னு யாருமே நினைச்சி பார்க்க முடியாது”

——–

காரை ஓட்டிக்கொண்டே ஆர்யன் ருஹானாவை பார்க்க அவள் அழுதுக்கொண்டே இருந்தாள். “அழாதே! நாளைக்கு இவான் வீட்டுக்கு வந்துடுவான்” என ஆர்யன் சொல்ல, “வரலைனா?” என அவள் கேட்க “கண்டிப்பா வருவான். அவனை நான் அங்கே விடமாட்டேன். என்ன செய்தும் அவனை கூட்டிட்டு வந்துடுவேன்” என உறுதியாக சொன்னான்.

அப்போது ருஹானா போன் அடிக்க, அழைப்பது மிஷால் என கண்டு ஆர்யன் இறுகிப் போக, ருஹானா அந்த அழைப்பை ஏற்காமல் போனை அணைத்து பையில் வைக்க ஆர்யன் இயல்புக்கு திரும்பினான்.

—— 

“உனக்கு இங்க பிடிச்சிருக்கா, இவான்?”

லைலா கேட்க இவானிடம் பதில் இல்லை.   

“உன் புது நண்பர்கள் உன்கிட்டே நல்லா பழகுறாங்களா?”

அதற்கும் பதில் இல்லை.

“உன் வீட்டை நீ அதிகமா மிஸ் செய்றியா?”

அதற்கு மட்டும் திரும்பி பார்த்து வேகமாக தலையாட்டினான்.

“உன் சித்தியையும், சித்தப்பாவையும் பார்க்காதது உனக்கு கவலையா இருக்கா? உன்னை கஷ்டப்படுத்தனும்னு நாங்க இப்படி செய்யல. இதை நீ புரிஞ்சிக்கணும். இதான் சட்டத்தோட நடைமுறை. சரியா?”

மீண்டும் இவானிடம் மௌனம்.

“இப்போ சொல்லு, உன் வீட்டில நீ எப்பவாவது சோகமாக இருந்திருக்கியா?”

“இல்ல!”

“சரி, உன் வீட்ல என்னென்ன நடக்கும், நீயே சொல்லேன்”

“யாரும் என்னை திட்ட மாட்டாங்க. எனக்கு கப்பல் பிடிக்கும்னு செஞ்சி தருவாங்க. என் சித்தி கூட ஜாலியா விளையாடுவேன். அம்ஜத் பெரியப்பா கூட சேர்ந்து தோட்டத்துல செடிக்கு தண்ணீ ஊத்துவேன். சாரா ஆன்ட்டி காமெடியா பேசுவாங்க. என்னை சிரிக்க வைப்பாங்க” 

“உன் சித்தியும், சித்தப்பாவும் எப்படி? உனக்கு அவங்களை எவ்வளவு பிடிக்கும்?” 

“என்னோட சித்தி தான் உலகத்திலயே சிறந்த சித்தி. நான் சித்தியை ரொம்ப நேசிக்கறேன். என் சித்தப்பா சூப்பர் மேன். அவருக்கு நிறைய பவர் இருக்கு. நான் கிணத்துல விழுந்துட்டா கூட உடனே குதிச்சி என்னை காப்பாத்திடுவார். நெருப்புல இருந்து என்னை காப்பாத்தி இருக்கார்”

லைலா கையில் இருந்த புத்தகத்தில் குறித்துக்கொண்டே வர இவான் சொல்லிக்கொண்டே போனான்.

——-  

“என்னாச்சு ரஷீத்.. யார்னு கண்டுபிடிச்சியா?” போன் பேசிக்கொண்டே ஆர்யன் தோட்டத்திற்கு வர, பின்னால் ஒரு பணியாள் அவன் வில்லையும், அம்புகளையும் தூக்கிக்கொண்டு வந்தான். 

“நம்ம கூட இருக்கற யாரோ தான் துரோகம் செஞ்சிருக்கணும். நான் கொடுக்க போற தண்டனைல அது யாராயிருந்தாலும் சாவை தேடி ஓடனும்”

ஆர்யன் வர போவதை அறிந்து அவனுக்கு முன்னால் வந்து தோட்டத்தில் அமர்ந்திருந்த கரீமாவும், சல்மாவும் தங்களது அடுத்த கட்ட நடவடிக்கையை ஆரம்பித்தனர்

“எனக்கு மனசே ஆறல, சல்மா.. யார் இப்படி இல்லாதது பொல்லாததுலாம் சொல்லி இருப்பாங்க. நாம தான் வீட்டுக்குள்ள அந்நியர் யாரையும் விடறது இல்லயே. ஆங்.. மிஷால் வருவான். ஆனா அவன் இப்படி செய்ய மாட்டானே.. அவன் ருஹானா தோழனாச்சே”

கோபத்துடன் வில்லை வளைத்து எய்த ஆர்யனின் அத்தனை அம்புகளும் நடு இலக்கில் பாய்ந்தன.

——

சாப்பிட அழைத்த சாராவிடம் பசியில்லை என மறுத்த ருஹானா புலம்பி அழுதாள்.

“என் மனசு இவான் கிட்ட தான் இருக்கு. எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு கதவு தான் இருந்தது. அது என்னால தாண்ட முடியல. எங்க கிட்ட வர அவன் அவ்வளவு முயற்சி செய்தான். எங்களால ஒன்னுமே செய்ய முடியல.” 

“நீ தைரியமா இருக்கணும், ருஹானா. சீக்கிரம் ரெண்டு பேரும் சேர்ந்துடுவீஙக. உனக்கு போராட தெம்பு வேண்டாமா.. வா.. வந்து சாப்பிடு”

“இவான் சாப்பிட்டானோ இல்லையோ.. என்ன செய்றான்னு தெரியலயே. இன்னும் அழுதுட்டு இருப்பானா? நாங்க அவனை கைவிட்டுட்டோம்னு பயந்து போயிருப்பானோ..? அவனோட கதறல் என் காதுல இன்னும் ஒலிக்குது. என் உயிரை எப்படி நான் அங்க விட்டுட்டு வந்தேன்?”

அவள் தேம்பி அழ அது காண பொறுக்காத சாரா அழுது கொண்டே அகன்றார். அப்போது மீண்டும் மிஷால் போனில் அழைக்க ருஹானா இப்போதும் பதில் அளிக்கவில்லை. 

கவலையடைந்த மிஷாலுக்கு கரீமாவின் வார்த்தைகள் நினைவுக்கு வர, இயலாமையில் சுவற்றில் கையை மோதினான்.

பின் போனை எடுத்து ஆர்யனுக்கு அழைத்தவன் “முன்னாடி துறைமுகத்தில இழுக்காத துப்பாக்கி விசையை இப்போ இழுக்க நான் தயங்க மாட்டேன். இது சத்தியம்“ என அறைகூவல் விடுத்தான்.

“நீ சத்தியம் செய்யாதே. அது உன்னால முடியாது” இடக்காக ஆர்யன் பதிலளித்தான். 

“நீ கவனமா இரு. ருஹானா கிட்ட உன் வீரத்தை காட்டாதே. எப்பவும் உன் அதிகாரம் தான் செல்லும்னு நினைக்காதே. உன் கைல இருந்தே இவானை ருஹானா தூக்கிடுவா. அதுக்கு தேவையான எல்லா உதவியும் நான் செய்வேன்.” 

அதற்கு மேல் மிஷால் பேசுவதை கேட்க பொறுக்காத ஆர்யன் போனை எறிந்துவிட்டு துப்பாக்கியை கையில் எடுத்தான். அப்போது போன் அடிக்க “ஆர்யன்! கடைசில ஒரு சின்ன தகவல் கிடைச்சது. புகார் கொடுத்தது ஒரு ஆண். அது யார்ன்னு சீக்கிரம் தேடி கண்டுபிடிச்சிடுவோம்” என்று ரஷீத் சொன்னான்.

“வேணாம். இனி வீணா தேடாதே. எனக்கு யாரதுன்னு தெரிஞ்சிடுச்சி” என சொன்ன ஆர்யன் துப்பாக்கியை எடுத்து கொண்டு கிளம்ப, இவானின் அறையில் அவன் சட்டையை கையில் வைத்துக்கொண்டு அழும் ருஹானாவை பார்த்து ஒரு விநாடி தயங்கியவன், பின் துப்பாக்கியை பின்னால் செருகியபடி வேகமாக படியிறங்கினான். 

——-

இருட்டு அறையில் இவானின் முகத்தில் டார்ச் அடித்து அவனை எழுப்பிய மெஹ்மத், இவான் கத்துவதற்குள் அவன் வாயை பொத்தியவன் “டேய்! நீ ஈரம் செய்ததுக்கு டீச்சர்ட்ட நான் திட்டு வாங்கினேன். பால் வடியும் முகத்தை வச்சிக்கிட்டு இதை சாதிச்சிட்டேல. உன்னை நான் சும்மா விடுவேனா?” என கேட்டு புராக்கை கூப்பிட்டான்.

“நீ போய் ஹஸலை கூட்டிட்டு வா, புராக். காலைல அவ தானே இந்த ஸ்ப்ரிங்முடி பையனுக்கு சப்போர்ட் செய்தா…! இப்போ இவன் எப்படி அவளை காப்பாத்துறான்னு பார்க்கலாம்” என்று சொல்ல புராக் அறையை விட்டு வெளியே போனான்.

———–

ருஹானா டாக்ஸி கொண்டுவந்து தருமாறு ஜாஃபரை கேட்க, அவர் உடனே வெளியே செல்ல, சாரா கவலையுடன் கேட்டார்.

“எங்க ருஹானா, இந்த நேரத்துல வெளியே போறே?”

“எனக்கு மனப்பாரம் தாங்க முடியல, சாராக்கா. பர்வீன் அம்மா கிட்டே போய் பேசிட்டு வரேன். அப்போ தான் எனக்கு சிறிதளவு ஆறுதல் கிடைக்கும்”

“நல்லது தான். ஆனா இப்போ அவங்க தூங்காம இருப்பாங்களா?”

“அதான் தெரியல. ஆனா நான் போன் செய்துட்டு போனா அவங்க கவலைப்பட்டுட்டு இருப்பாங்க. அதான் நேரா போறேன். அவங்க முழிச்சிருந்தா பேசிட்டு வரேன். இல்லனா திரும்பி வந்துடுறேன்” என்று கிளம்பிய ருஹானா காரில் ஏறி புறப்பட்டாள்.

சிறிது தூரம் சென்ற ருஹானாவின் போனில் வேறு ஏதோ குறுஞ்செய்தி வர, அப்போது தான் இதற்கு முன் மிஷால் அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்தாள். 

‘ருஹானா, உன்னை நினைச்சி எனக்கு கவலையா இருக்கு. உன்கிட்ட இருந்து இவானை பிரிச்சவங்க கண்டிப்பா அதுக்கான பலனை அடைவாங்க. இப்படி செய்ய அவங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது’ 

இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது? என குழப்பமாக யோசித்தபடியே ருஹானா பயணப்பட, ஆர்யன் கார் பயணம் முடிந்து மிஷால் உணவகம் அடைந்தவன், விளக்குகளை நிறுத்தி கிளம்ப தயாராகிக்கொண்டிருந்த மிஷாலின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்தான்.

(தொடரும்)

Advertisement