Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 42 

இரவு வேளையில் இவான் இருக்கும் இடம் காண வந்த இருவரும் ரஷீத்தின் போன் வழி செய்தியில் அதிர்ந்து நின்றனர். ‘அர்ஸ்லான் மாளிகை இவான் வசிக்க லாயக்கற்றது எனும் புகாரின் அடிப்படையிலேயே தன் அன்புக்குரியவர்களிடமிருந்து இவான் பிரிக்கப்பட்டு சிறுவர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கிறான்’ என்ற தகவல் கேட்டு ஆர்யன் பேச்சிழந்து நின்றான்.

“ஆர்யன்! ஆர்யன்!… லைன்ல இருக்கீங்களா?”

“யாருக்கு இவ்வளவு தைரியம் வந்துச்சி, இப்படி புகார் கொடுக்க?” ஆர்யன் இரைந்தான்.

“தெரியல ஆர்யன்! அதான் தேடிட்டு இருக்கோம்”

“நீ எல்லா செக்யூரிட்டியும் மாளிகைக்கு கூட்டிட்டு வா. நானும் கிளம்பிட்டேன்” என்று ரஷீத்திடம் சொன்ன ஆர்யன், ருஹானாவிடம் “நாம போகலாம்” என கூறி அழைத்து வந்தான்.

மாளிகைக்கு வந்த ஆர்யன் அங்கே ரஷீத் கூட்டியிருந்த அலுவலக பாதுகாவலர், வீட்டு காவலர் அனைவரையும் பார்த்து “நம்ம கூடவே இருக்குறவங்க யாரோ தான் இப்படி பொய்யான புகாரை கொடுத்திருக்கணும். அது யார்ன்னு உடனே கண்டுபிடிங்க… ஆபிஸ்ல, வீட்ல.. எந்த இடத்துலயும் சந்தேகப்படற மாதிரி எந்த நடவடிக்கை இருந்தாலும் எனக்கு சொல்லுங்க” என உத்தரவிட்டான்.

“புகார் கொடுத்தவங்க யாரா இருந்தாலும் அவங்களை நான் சும்மா விட மாட்டேன்” என ஆர்யன் கர்ஜித்துவிட்டு செல்ல பின்னால் நின்ற கரீமா, சல்மா முகங்களில் ஈயாடவில்லை.

“அக்கா! என்ன இவ்வளவு தூரம் கண்டுபிடிச்சிட்டாங்க? அது நீதான்னு ஆர்யனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்? அதோட நம்ம கதை முடிஞ்சது”

“அது அத்தனை சுலபத்துல நடக்காது, சல்மா. புகார் கொடுத்தவனுக்கு நான் அவ்வளவு பணம் கொடுத்திருக்கேன். இருந்தாலும் முன்னெச்சரிக்கையா ஒன்னு செய்ய போறேன்”

“என்னக்கா அது?”

“நம்ம கிட்ட இருந்து ஆர்யன் கவனம் திசை மாறணும். அவனோட குறியை மாத்த போறேன்”

“அது யார் அக்கா?”

“ஈசியா யார் மேலே எல்லா சந்தேகமும் விழுமோ அவன் தான். யார் மேலே ஆர்யனுக்கு ஏற்கனவே நம்பிக்கை இல்லையோ அவன் தான் நம்ம இலக்கு”

———–

கமிஷனர் வாசிமின் பெரியப்பா ஹெமதுல்லாக்கு மருந்து வாங்க வாகிதா  சென்றிருந்த சமயம் ஹெமதுல்லாக்கு நெஞ்சடைப்பு ஏற்பட அவர் மயக்கமாகி கீழே விழுந்தார். பக்கத்தில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் வரவைத்து வாசிமுக்கு தகவல் கொடுத்தனர். 

மரண படுக்கையில் ஹெமதுல்லா “நான் வளர்த்த நீங்க ரெண்டுபேரும் இனி ஒருத்தருக்கொருத்தர் அன்பா இருக்கணும். பரஸ்பரம் நம்பிக்கை வைக்கணும். ரெண்டு பேரும் பிரியக்கூடாது” என்று வாசிம், வாகிதாவிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.

வாகிதா, அவள் தனியாக விட்டுப் போனதால் தான் ஹெமதுல்லா இறந்தார் எனும் குற்றயுணர்ச்சியால் கதறி அழுதாள். கமிஷனர் வாசிம் அவளை தேற்றும் வழி தெரியாமல் கலங்க, வாசிமின் தோழன் தன்வீர் அவனுக்கு ஆதரவாக நின்று அடுத்து நடக்க வேண்டியதை பார்த்தான். தன்வீரின் தாய், ருஹானாவின் வளர்ப்புதாய் பர்வீன் வாகிதாவை அணைத்து ஆறுதல்படுத்தினார்.

“எனக்கு அப்பா இல்லாத குறை தெரியாம வளர்த்தீங்க. நீங்க போன பின்ன என் உலகமே இருண்டு போச்சி” என வாசிம் ஹெமதுல்லாவின் கல்லறையில் நின்று கண்கலங்க, பக்கத்தில் வந்த சையத் “மகனே! உன் பெரியப்பா இடத்துல உனக்கு இனி நான் இருக்கேன். என் வீட்டு கதவு உனக்கு எப்பவும் திறந்திருக்கும். என் மகன் போல தான் நீ” என்று அவனை அணைத்து ஆறுதல்படுத்தினார்.

வாசிமையும் வாகிதாவையும் வீட்டுக்கு அனுப்பிவிட்ட சையத், ஹெமதுல்லாவின் கல்லறையை தொட்டு “நண்பனே! ரகசியங்கள் இல்லாத உலகத்துக்கு நீ போய்ட்ட. நானும் உன்கிட்டே சீக்கிரம் வரேன். அதுவரை உன் ரகசியம் என்கிட்டே பாதுகாப்பாக இருக்கும். வாசிம் பத்தி கவலைப்படாதே. அவனை நான் பார்த்துக்கறேன்” என்று விடைகொடுத்தார்.

வாசிமும் வாகிதாவும் ஏழை மாணவர்களை படிக்க உதவி செய்த ஹெமதுல்லாவின் நற்பணிகளை தாங்கள் இருவரும் சேர்ந்து தொடர உறுதி மேற்கொண்டனர்.     

ஹெமதுல்லாவின் இறுதி சடங்கிற்கு வந்திருந்த வாசிமின் அத்தை தௌலத் வாகிதாவை சந்தேகமாகவே பார்த்தார். அவருக்கு வாகிதாவை பிடிக்கவில்லை. தன் அண்ணன் இறப்புக்கு அவளே காரணம் என அவளை வெறுத்தார்.  

———-

விடிந்தும் படுக்கையை விட்டு எழாமல் இவான் அழுதுக்கொண்டு இருக்க, அந்த அறையில் அவனோடு இருந்த மெஹ்மத் தன் போர்வையை மடித்து வைத்துக்கொண்டே “என்ன அம்மா பையா? இன்னும் படுத்துருக்கே? இங்க உன் வேலையை நீ தான் செய்யணும். உன் வீடு மாதிரி வேலைக்காரங்கலாம் கிடையாது” என சொல்லும்போது அங்கே புராக்கும் வந்து சேர்ந்தான்.

இவான் போர்வையை இறுக்கமாக பிடிக்க “என்ன மறைக்கிறே?” என கேட்டு இருவரும் அவன் போர்வையை பற்றி இழுத்தனர். இவான் படுக்கையை ஈரமாக்கி இருக்க, இருவரும் அவனை கேலி செய்து சிரித்தனர்.

“எழுந்திரு அழுமூஞ்சி பையா! உன் அழுக்கை சுத்தம் செய்” என மெஹ்மத் வம்பு செய்து சிரிக்க, “என்ன செய்றே, மெஹ்மத்?” என கேட்டபடியே ஹஸல் அங்கே வந்தாள். சமவயது பெண்ணின் முன்னே தன் செய்கையை அவமானமாக கருதிய இவான், நன்றாக மூடிக்கொள்ள மெஹ்மத் திரும்பவும் போர்வையை இழுத்தான்.

“நீ செய்றது தப்பு, மெஹ்மத்” என ஹஸல் கண்டிப்புடன் சொல்ல, “நீ பேசாம போ” என அவன் அவளை கீழே தள்ளிவிட்டான். “உனக்கு அடி பட்டுடுச்சா?” என பதறிபோய் இவான் எழ அதை கிண்டல் செய்து சிறுவர்கள் இருவரும் நகைத்தனர்.

சத்தம் கேட்டு லைலா அங்கே வர நடந்ததை அறிந்து இருவரையும் இவானிடம் மன்னிப்பு கேட்க சொன்னார். புராக் உடனே மன்னிக்க வேண்ட, லைலா மீண்டும் வற்புறுத்தவும் தான் மெஹ்மத் இவானை முறைத்துக்கொண்டே மன்னிப்பு கேட்டான்.

அவர்களை குளிக்க அனுப்பிவிட்ட லைலா இவானின் அருகே அமர்ந்து “நீ தப்பு எதும் செய்யல, இவான். இது இயற்கையானது தான். இதுல வெட்கப்பட ஒன்னும் இல்ல. யாரும் உன்னை திட்ட மாட்டாங்க. இனிமேல் யாரும் கேலி செய்யவும் மாட்டாங்க. நீ கவலைப்படாதே” என்று சொல்லி அவனை சுத்தம் செய்ய அழைத்து சென்றார்.

அது மலர்ந்த மலர்வனம் அல்ல…

கருகி சருகாகிடாமல் காக்கும் சுடர்வனம்

சிறுபூக்களை கயவர்களிடமிருந்தும் காக்கும் அரண் 

சிறையாய் தோன்றுவது மாயத் தோற்றமே…!

புதிதாய் விடப்பட்ட ஜீவனிடம் பழையவர்கள்

தாங்கள் உணர்ந்தது, ஏங்கியது, ஏமாந்ததெல்லாம்

அவர்களுக்கே உரிய மொழியில் உரைத்திட..

பிரிவே தாங்கிடாமல் மிரளும் புதுச்சிட்டுக்கு

இந்த மொழி கூறும் கதைகள் புரிந்திடுமோ..?

   ——–

ருஹானா பையுடன் வேகமாக செல்வதை பார்த்த கரீமா அவளை நிறுத்தி விசாரித்தாள்.

“இவானை பார்க்க போறேன். இதெல்லாம் அவனுக்கு தேவைப்படலாம். நேத்து அவசரத்துல இவானுக்கு என்ன கொடுத்தேன்னு தெரியல”

“நல்லது செஞ்சே! நான் கூட இவானை நினைச்சி ராத்திரி ஒரு பொட்டு கண் மூடல. நீ முன்னாடியே சொல்லியிருந்தா சாராட்ட சொல்லி அவனுக்கு பிடிச்சது சமைக்க சொல்லியிருக்கலாம்”

“அடுத்த முறை கொண்டு போகலாம். இன்ஷா அல்லாஹ் அடுத்து ஒரு முறை போகவேண்டியது வராமல் போகட்டும்”

“இன்ஷா அல்லாஹ்! அப்படியே நடக்கட்டும். சாரிட்டி மீட்டிங் இன்னைக்கு இருக்கு. இல்லனா நான் உன்கூட வந்திருப்பேன்”

“பரவால்ல, கரீமா மேம்! நீங்க போங்க. நான் பார்த்துக்கறேன்”

“சரி, டாக்ஸில போக வேணாம். ஜாஃபரை கார் எடுத்துவிட சொல்றேன்”

“தேவையில்ல. நானே கூட்டிட்டு போறேன். நானும் அங்க தான் போறேன்” என்றான், அப்போது அங்கே வந்த ஆர்யன்.

இருவரும் ஒன்றாக செல்ல கரீமா அவர்களை கடுப்புடன் பார்த்து நின்றாள்.

———– 

இவானின் பையை அங்கே வரவேற்பில் இருந்த பெண்ணிடம் கொடுத்த ருஹானா இவானை பார்க்க அனுமதி வேண்டினாள். விசாரணை நடந்துக்கொண்டிருப்பதால் அது இயலாது என்று அந்த பெண் மறுக்க, மேலும் என்ன கேட்பது என தெரியாமல் ருஹானா ஆர்யனை நோக்கினாள்.

“எப்போ நாங்க இவானை பார்க்கமுடியும்?” என ஆர்யன் கேட்டான். 

“விசாரணை முடிஞ்ச பிறகு அதை அதிகாரிகள் சொல்வாங்க” 

“அது எங்களுக்கு சாதகமா அமையலனா?”

“அப்படி நடந்தா இவான் நிரந்தரமா இங்க தான் இருக்கணும். மாதத்தின் குறிப்பிட்ட நாள் இவானை பார்க்க உங்களுக்கு நேரம் ஒதுக்கப்படும்”

ருஹானா அதிர்ந்துப்போய் ஆர்யனை பார்க்க அவனும் திகைத்து நின்றிருந்தான்.

லைலா சிறுவர் இருவருக்கும் கணக்கு பாடம் சொல்லி தர, படம் வரைந்து கொண்டிருந்த ஹஸல் அதை எடுத்துக்கொண்டு ஜன்னலையே பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்த இவானிடம் சென்றாள். “என்கூட படம் வரைய வர்றீயா?” என அவள் கேட்க, கையில் பிடித்திருந்த ஸ்கார்ப்பை இறுக்கிக்கொண்ட இவான் மறுத்தான்.

Advertisement