Advertisement

 

புயல் காற்றில் விளக்காகவே

                              அத்தியாயம் – 1

ஜோர்டான் நாட்டின் அழகிய அகாபா நகரம்….

பழமையான வீடு…

அழகி ஒருத்தி பிஸ்தா நிற கவுனில், அதன் மேல் ஏப்ரான் அணிந்து மனம் மயக்கும் புன்சிரிப்புடன் தன் சமையலறையில்….

தக்காளியை வெட்டுகிறாள்…  வெள்ளரியை தோல் சீவுகிறாள்..  ஒன்றை வட்டமாக உருட்டுகிறாள்..  பின் அதை பொரிக்கிறாள்.  மாவை  பிசைந்து  உருண்டையாக்கி அதற்குள் எதையோ வைக்கிறாள்..  ஓவனில் ஏதோ பலகாரத்தில் குச்சி செருகி எடுக்கிறாள்..  குக்கரில் காய்கறிகளை வேக வைக்கிறாள்.. கொதித்து கொண்டிருக்கும் சூப்பை சின்ன கிண்ணத்தில் ஊற்றுகிறாள்..

விதவிதமாக சமைத்து கொண்டிருக்கும் அந்த ரோஜா வண்ண அழகிக்கு

மயக்கும் எமரால்ட் பச்சை வண்ண வட்ட விழிகள்..

சிரிக்கும் கண்களோடு சேர்ந்து நம்மையும் சிரிக்க அழைக்கும் உதடுகள்..

மெல்லிய தேகம்… நடுத்தர உயரம்.. அடர்த்தியான கூந்தல்…

அவள் சமைக்கட்டும்… அதற்குள் நாம் வேறு இடம் சென்று வருவோம்…

– – – – – – – – – – – – – – – –

பிரமாண்டமான மூன்று அடுக்கு பங்களா..

சுற்றிலும் தோட்டம்… கோட்டை போன்ற மதில் சுவர்..

எங்கும் பண செழிப்பு பொங்கி இருந்தது…

அங்கே ஐந்து வயது அழகான சிறுவன்..

அவன் அணிந்திருக்கும் சிவப்பு சட்டை அவன் வெள்ளை நிறத்தை தூக்கி காட்டியது..

அத்தனை பாவமான பிஞ்சு முகம்..

தலை கொள்ளா சுருட்டை முடி..

வளைந்த செப்பு வாய்…

ஆழமான கண்கள், கண்ணீருடன்..

கண்ணீர் சிந்தும் பையனை பார்க்க மனம் பதைக்கிறது….. எதிரே நிற்கும் இளைஞன், நெட்டையன் சிறுவனுக்கு ஆறுதல் சொல்வான் என எதிர்பார்த்தால் கடகடவென கடுகடுவென சிறுவனிடம் பேசுகிறான்..

“நான் சொல்றத கவனமா கேள், அக்னி சிறகே..

வாழ்க்கையில நீ வலிமையா நிக்கணும்னா.. நம்மோட ரூல்ஸ் நினைவு இருக்குல..

எப்பவும் தைரியமா இருக்கணும்..

யாருக்கும் இரக்கம் காட்டி உன்னோட சக்தியை வீணாக்காதே..

உன் பாதுகாப்பு முக்கியம்..

உன்னை தாக்க வர்ற கையை உடனே உடைக்க தயங்காதே..

சாவு நெருங்கும் நேரத்திலும் பயப்படாமல் உன் எதிராளியை நோக்கி தலை நிமிர்ந்து நட….“

அவன் சொன்னது பிஞ்சுக்கு என்ன புரிந்ததோ….. தலையை சரி என அசைத்தது.. பின் தன் கையை நீட்டி அதில் ஏற்பட்ட காயத்தை காட்டியது… அப்போதும் கருணை காட்டாத கருப்பு சட்டைக்காரன், சிறுவனின் கண்ணீரை துடைத்தபடி சொன்னான். “கீழே விழுந்தாலும் அழக்கூடாது.. நீயே திரும்ப எழுந்து நிற்க உனக்கு தெரியணும்.. சரி தானே..“

அக்குழந்தை அழகாக தலை ஆட்டியது.

அப்போதும் நிறுத்தாமல் தன் சொல்லே முக்கியம் போல இன்னும் சொல்லிக்கொண்டே போனான், அந்த சிடுமூஞ்சி….

“எல்லாத்தையும் விட முக்கியமான ரூல் என்னன்னா. .

யாரையும் நம்பாதே.. முக்கியமாக பெண்களை.. பெண்கள் பாம்பு போன்றவர்கள்.. அம்மா மட்டுமே குறைந்தபட்ச தீங்கு இழைப்பவள்.. ஆனால் அவளும் தேவை என்றால் தன் குழந்தையை விஷமாக்க கூடியவள்.. நினைவு வச்சிக்கோ, சிங்க பையா”

திரும்பவும் சின்ன சிட்டுவிடமிருந்து ஆமோதிப்பான தலையாட்டல்..

அவனோ “இப்போ நீயே மருந்து போட்டுக்க” என்று ஒரு மருந்துபட்டியை கொடுத்து இன்னும் பேசினான்..

“உன் தழும்பை மற்றவர்களிடமிருந்து மறைக்க மறக்காதே” என்று கூறி திரும்பி நடந்தவனுக்கு….

சுளித்த புருவங்கள்…

சற்றே பெரிய கண்கள் தான்.. ஆனால் கீழ் இமையை சுருக்கி சுருக்கி கண்களும் சுருங்கியிருந்தது…

கோபத்தை எடுத்து காட்டும் மூக்கு..

லேசாக ஒட்டிய கன்னங்கள்..

அதை மறைக்கும் கரிய மீசை, தாடி.  அடர்ந்த கேசம்..

நல்ல உயரம்… நீண்ட கை, கால்கள்.. வலிமையான தேகம்..

அவன் அணிந்திருந்த கோட் சூட் அவனை மேலும் வலிமையானவனாய் காட்டியது..

அழகன் தான்.. ஆனால் சிநேகம் கொள்ள யாருக்கும் தைரியம் வராது.. பார்த்ததும் பயமே தோன்றும்..

இவன் ஏன் இத்தனை கொடூரமாக இருக்கிறான் என்பதை பிறகு தெரிந்து கொள்வோம்.. இப்போது பச்சை கண்ணழகி யாருக்கு பரிமாறுகிறாள் என பார்க்க செல்வோம்..

– – – – – – – – – – – – – – – – –

பெரியவர் சூப்பை ரசித்து குடித்துக் கொண்டே “ருஹானா” என்று அழைக்க…

மதிப்பெண் தெரிய ஆவலுடன் நிற்கும் பள்ளி மாணவி போல, அந்த ரோஜா அழகியான ருஹானா, “எப்படி இருக்குப்பா.. இந்த முறை நான் சரியா செஞ்சிருக்கேனா..” என கேட்டாள்..

“கண்ணே!! உன் அம்மா செய்வதை போல் இருக்கே”

“இருக்கும்.. ஏன்னா நான் அவங்க ரெசிபி தானே உபயோகித்தேன்”.. குரலில் ஒரு சோகம்…

“மிஷால், அவன் ஹோட்டல்ல குக் வேலைய விட்டு போனதும்… உன்னை உதவிக்கு கூப்பிட்டானே,.. அது எனக்கு ரொம்ப சந்தோசம்மா.. நம்ம மடாபா கிராம சமையலை முழு அகாபாக்கும் காட்டு” என தன் மகளை அவர் மீண்டும் பாராட்ட..

“இந்த கறி உருண்டை சாப்பிடுங்க.. அது தான் ரொம்ப வேலை இழுத்தது”

“கலர், வாசனை, டேஸ்ட் எல்லாமே அருமை”

“சரி, இந்த கத்தரிக்காய் சாப்பிடுங்க” என்று வேறு ஒரு பாத்திரத்தில் இருந்ததை காட்டினாள்..

அவள் அப்பாவோ மூடி வைக்கப்பட்ட இன்னொரு பாத்திரத்தை காட்டி “அது என்ன?“ என்று கேட்டார்..

அவளிடம் மவுனமே பதில்…

“மூடியை திறந்து காட்டு”..

அவள் மூடியை தூக்கியதும் அவர் முகம் சலிப்பை காட்டியது…

“அதை தூர தூக்கி எறி.. நீ வேணும்னே தானே அதை செஞ்ச”

அவர் குரலில் ஆற்றாமை…

“ஆமாப்பா… வேணும்னு தான் செஞ்சேன்.. அது அக்காக்கு பிடித்த இனிப்பு”

அவர் முகத்தில் கோபம்… ஆனாலும் அவள் நிறுத்தவில்லை…

“ஆறு வருஷமாச்சிப்பா.. நான் அக்காவை ரொம்ப மிஸ் செய்றேன்..  நீங்களும்..” என தொடர்ந்து பேச வர..

அந்த பெரியவரோ, ”உன் வாயை மூடு” என்று உறுமிவிட்டு எழுந்து சென்று விட்டார்.. ருஹானாவும் தன் தந்தை பின்னாலேயே அடுத்த ரூமுக்குள் நுழைய… தந்தை பெரிய மகளை நினைத்து பொருமினார்..

“அவளை போகாதேன்னு சொன்னேன்.. ‘உன்னை அவங்க கஷ்டப்படுத்துவாங்க.. நீ கஷ்டப்படுறேன்னு தெரிஞ்சா உன்னை விட நான் அதிகம் கஷ்டப்படுவே’ன்னு கெஞ்சினேன்..  ஆனா அவ கேக்கல.. போய்ட்டா.. அவ அப்பாக்கு பிடிக்காத கல்யாணம் செய்துக்கிட்டா… அர்ஸ்லான் குடும்ப மருமகளாயிட்டா..

ருஹானா! எல்லாம் தெரிஞ்சும் நீ ஏன் என் இதயத்தை உடைக்கற.. உன் அப்பா மேல உனக்கு இரக்கம் இல்லயா”

“நீங்க சொல்ற எல்லாம் சரி தான்ப்பா..  நானும் முதல்ல அவ மேல கோபமா தான் இருந்தேன்.. என் இதயமும் உடைச்சிட்டு தான் அவ போனா…  ஆனா…“

“ஆனா.. என்ன ருஹானா?“

“நீங்க தானேப்பா எப்பவும் சொல்வீங்க.. வாழ்க்கை ரொம்ப சின்னதுனு.. அதுல இன்னும் இந்த நிராகரிப்பு தேவையா?“

“ஆமா.. வாழ்க்கை சின்னது தான்.. அல்லாஹ் கொடுத்தது.. அவர் கேட்கும்போது திரும்ப கொடுக்கனும்.. ஆனாலும் அவளை என்னால மன்னிக்க முடியல.. அப்பாவின்  ஆசிர்வாதங்கள் என்னைக்கும் அவளுக்கு உண்டு.. அவ்வளவு தான்..“

“நீங்க அவளை நினைக்கலயா? அவளை பார்க்கனும்னு ஆசைப்படலயா? அவளை விடுங்க.. உங்க பேரன்..? அந்த கள்ளம் இல்லாத குழந்தை செஞ்ச தப்பு என்ன? நீங்க என்ன தான் கோவமா இருந்தாலும் உங்க உள் மனசுக்கு தெரியும், அக்காக்கு உங்க மேல அளவில்லாத அன்பு இருக்குன்னு… அவ பையனுக்கு உங்க பேரை தான் வச்சிருக்கா..

யெஸ்.. இவான்”

– – – – – – – – – – – – – –

“இவான்.. சூப் குடி… அப்புறம் நாம விளையாடலாம்” வேலைக்கார நானி  சிறுவனை வற்புறுத்த…

அதே பெரிய அர்ஸ்லான் மாளிகை…

“நான் அம்மாட்ட குடிக்கிறேன்” சுருட்டை முடி சிறுவன் இவான் மறுத்தான்.

“அம்மா மருந்து எடுத்துக்கிட்டு படுத்துட்டாங்க”

“அவங்க திரும்ப தூங்கிட்டாங்களா”

அந்த பெண் ஆம் என தலையாட்ட..

“நான் போய் பார்க்குறேன்.. ஒருவேளை அவங்க முழிச்சிட்டு இருக்கலாம்”

“சாப்பிடு.. இல்லன்னா உன் சித்தப்பா ஆர்யன் சத்தம் போடுவார்“..

அப்போது அங்கு வந்த ஒரு மாது சிரித்த முகத்துடன்,  ”செல்ல பையா!!  சூப் குறையவே இல்லையே,“ என கேட்டு அவன் தலையை தடவ..

அந்த பெண், “மிஸஸ் கரீமா! எவ்வளவு முயற்சி செய்தாலும் அவனை சாப்பிட வைக்க முடியல” என வருத்தப்பட..

“ஃபோர்ஸ் செய்யாதே.. அவனுக்கு பசிக்கும்போது சாப்பிடுவான், அழகு செல்லம்” என்று அலட்சியமாக சொல்லிவிட்டு அந்த கரீமா நகர்ந்து விட்டாள்..

தன்மேல் சிந்திய சூப்பை சுத்தம் செய்ய வேலைக்கார பெண்ணும் நகர… இவான் சிறுவன் அந்த சூப்பை தூக்கி கொண்டு படுக்கை அறையில் நுழைந்தான்..

அங்கே ஒரு வெளுத்த, மெல்லிய தேக பெண் ஒருத்தி கண் மூடி படுத்திருந்தாள்.. மேசையில் சில படங்கள்.. இவான் சிரிக்கிற ஒரு போட்டோ, இவானை அணைத்தப்படி அந்த பெண் படம் ஒன்று, பின் பக்கம் மறைந்திருக்கும் ஒரு படத்தில் ஆணுடன் அந்த பெண் என சட்டங்கள் இட்டு வைக்கப்பட்டு இருந்தன.. அவள் படுத்திருந்த கட்டிலருகே அவளும், ருஹானாவும் கன்னம் ஒட்டி சிரித்த போட்டோவும், பெண்கள் இருவரும் தந்தையை அணைத்த வண்ணம் நிற்கும் போட்டோவும் கண்ணை கவர்வதாய் நின்றன..

இவான் அவள் பக்கம் நெருங்கி அம்மா என அழைக்க.. அவளும் கண் திறந்து இவனை பார்த்ததும் முறுவலிக்க… “மா!! இந்த சூப்பை எனக்கு ஊட்டுங்க” என அவன் கூறவும், “வா.. நான் கொடுக்கறேன்” என அவன் அம்மா எழ முயல.. அச்சோ பாவம்.. அவளால் முடியவில்லை.. திரும்ப படுக்கையில் சாய்ந்து மயங்கி விட்டாள்..

இவான் மெதுவாக சூப் கிண்ணத்தை பக்கத்தில் இருந்த மேசையில் வைத்தான்.. பின் மெல்ல படுக்கையில் ஏறி அம்மா என அழைத்து அவள் கன்னத்தை தடவினான்.. அப்போதும் அவளுக்கு முழிப்பு வரவில்லை.. அவன் அம்மாவின் கழுத்தை இறுக்கி அணைத்து படுத்து கொண்டான்.. தனது அம்மாவின் கையை எடுத்து தன் மேல் போட்டுக் கொண்டான்.. ஆனால் பலனற்று விழுந்த கை அவனை அணைக்கவில்லை…

சிறிது நேரம் அசையாமல் பார்த்த குட்டி பையன் மெதுவாக இறங்கினான்.. தனது கிண்ணத்தை எடுத்துக் கொண்டான்.. மெல்ல நடந்து தனது அறைக்கு வந்து சூப்பை தனது மேசையில் வைத்தவன், படுக்கையில் ஏறி சாப்பிடாமல் படுத்து கொண்டான்…

அன்பாக அவனை சாப்பிட வைக்க அவ்வளவு பெரிய மாளிகையில் யாருமே இல்லையா…? சிறுவனுக்கு வயதுக்கு மீறிய அறிவுரையை வீசிய அந்த கடுவன்பூனை எங்கே..?

Advertisement