தன்னை பாராட்ட அழைத்த செந்திலிடமும், அதே விஷயத்தை மலர்விழி பேச்சுவாக்கில் சொன்னாள். சத்தமாக சிரித்த செந்தில், மலர்விழியைப் படிக்க வைப்பதற்காக ராகவன் செய்தவற்றைச் சொல்ல, அதிர்ந்து தான் போனாள்.
ராகவனைப் பார்த்த அன்றே அவனிடம் தன் மனம் சாய்ந்தது உண்மை. ஆனால், அன்று அவனுக்கு அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று மலர்விழிக்கு தெரியுமே.
அப்படியிருந்தும், தன்னிடம் சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற அவன் செய்தவற்றைக் கேட்கும் போது, இன்னும் இன்னும் அவன் மீது காதல் ஊற்றெடுத்தது மலர்விழிக்கு.
“ஆனாலும் நீங்க என்னை படிக்க வைக்க ரொம்பவே ரிஸ்க் எடுத்துருக்கீங்க தலைவரே” என்று ராகவனுக்கு அழைத்து இவள் சொல்ல,
“யாரு? செந்தில் சொல்லிட்டானா?” என்று சிரித்தான்.
“ஹ்ம்ம்… என்னால நீங்க உங்க வீட்டுல பொய் சொல்ல வேண்டியதா போச்சே?” லேசான குற்ற உணர்ச்சியோடு பேசினாள் மலர்விழி.
“அதால இப்போ என்ன குறைஞ்சு போச்சு மலர்? அந்த செயின் இப்பவும் எங்ககிட்ட தான் இருக்கு. அந்த பொன்னை பெரிசா நினைச்சிருந்தா, இந்த பொண்ணுக்கு நல்லது நடந்திருக்குமா? சொல்லு…” என்றவன்,
“எல்லாத்துக்கும் ஆரம்பம்னு ஒண்ணு உண்டுதானே மலர், உன்னோட படிப்புக்கு என்னோட முயற்சி ஆரம்பமா இருந்ததுல எனக்கு சந்தோஷம் தான். நீ எதைப் பத்தியும் யோசிக்காம படி” என்று அலட்டிக் கொள்ளாமல் சொல்லிவிட்டான்
அன்றைக்கு அவன் சொல்லிய வார்த்தைகள் இப்போது சொன்னது போலவே காதில் ஒலிக்க, ராகவன் குரலை அப்போதே கேட்க வேண்டும் என்று மலர்விழியின் மனம் அடம் பிடித்தது.
இப்போது ராகவன் ஆழ்வார்க்குறிச்சி கல்லூரியில் துணைப் பேராசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருப்பதால் நினைத்த நேரமெல்லாம் பேசிவிட முடியாது.
ஆமாம்… ஒரே வருடத்தில் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்று, கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்து விட்டான் ராகவன். அவனின் பாடம் நடத்தும் நேர்த்தி, அந்த பதவிக்கு போட்டியிட்ட அத்தனை போட்டியாளர்களையும் ஓரம்கட்டி விட்டு அவனை வெற்றிபெற செய்திருந்தது.
கூடவே, தன் துறைத்தலைவரை வழிகாட்டியாகக் கொண்டு, பிஹெச்டி செய்து கொண்டிருக்கிறான் ராகவன். எனவே நினைத்த நேரத்தில் அவனோடு பேசிவிட முடியாது.
ஆனாலும் மனம் அடம்பிடிக்க, வாட்ஸ்அப் பேஜை திறந்து பார்த்தாள். அவன் ஆன்லைனுக்கு வந்து மணிக்கணக்காக ஆகியிருந்தது.
வேறுவழியில்லாமல் பாடங்களை மேலும் ஒருமுறை ரிவிஷன் செய்ய ஆரம்பித்தவள், சற்று நேரத்தில் சுற்றம் மறந்து பாடத்தில் மூழ்கிப் போனாள்.
மறுநாள் கல்லூரிக்கு செல்வதற்கு தேவையானவற்றை எல்லாம் எடுத்து வைத்து, இரவு உணவை உண்ட பிறகும் கூட ராகவனிடமிருந்து அழைப்பு வரவில்லை.
‘என்னவாக இருக்கும்?’ என்று யோசித்தபடியே மொட்டை மாடிக்கு வந்தாள் மலர்விழி. இருட்டை விரட்டும் வண்ணம் ஆங்காங்கே மின்சார விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது. கோடைகாலம் தொடங்கியிருந்ததால் வெக்கை தாங்காமல் மற்ற பெண்களும் அங்கே குழுமியிருந்தார்கள்.
அவர்களிடமிருந்து சற்றே ஒதுங்கி மாடியின் கைப்பிடி சுவரில் சாய்ந்து நின்று, ஒளிவெள்ளத்தில் பரந்து விரிந்திருந்த சென்னையை பார்வையிட்டாள் மலர்.
மனமோ எதிலும் லயிக்காமல் ராகவனிடமே ஓடியது. ‘தலைவர் அழைக்காவிட்டால் என்ன? நாம் அழைத்து விடுவோமா?’ என்று கூட சிந்தனை ஓடியது.
அதற்கு மேலும் சோதிக்காமல், அழைத்து விட்டான் அவள் தலைவன். ஃபோன் சிணுங்கவும், அடுத்த வினாடியே அழைப்பை ஏற்றிருந்தாள் மலர்விழி.
“வாழ்த்துகள் தீச்சர்… நான் சொல்லாமலேயே யூனிவர்சிட்டி ரேங்கை தட்டி தூக்குவீங்கன்னு தெரியும். ஆனாலும் சொல்லுறேன், கப்பு முக்கியம் மலரு…” என்றான் ராகவன் ஆரவாரமான குரலில்.
அவளோ, வாழ்த்துக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பதை மறந்தவளாக, “காலைலயிருந்தே உங்க ஃபோனை எதிர்பாத்துட்டு இருக்கேன் தெரியுமா? ஏன் லேட்டு.” தன்னை மறந்து சிறு பிள்ளையாக சிணுங்கினாள்.
மலர்விழி தன் அழைப்பை ஏற்ற வேகத்திலேயே அவள் தேடல் புரிந்திருந்தவன், “கொஞ்சம் வேலை அதிகம் மலர். முடிச்சிட்டு பேசினா உங்கூட ஃப்ரீயா பேசலாமேன்னு வேகவேகமா முடிச்சிட்டு வரேன்” என்றான் சமாதானபடுத்தும் விதமாக.
ராகவன் குரலைக் கேட்டதும் சுயம் மறந்து தன்னை, தன் மனதை எதிர்முனையில் இருந்தவனுக்கு வெளிக்காட்டியிருந்தவள், தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, காலையில் சிதம்பரம் வந்து வாழ்த்தி பேனா கொடுத்தது, சற்றுமுன் செந்தில் பேசியது என்று எல்லாம் சொன்னாள்.
புன்னகை முகமாக கேட்டுக் கொண்டிருந்தான் ராகவன். இருவருக்கிடையே வாய் வார்த்தையாக இன்னமும் காதல் பரிமாறப்படவில்லை. என்றாலும், இதோ, சற்று நேரத்திற்கு முன் மலர்விழி தன்னையறியாமலேயே தன்னை வெளிப்படுத்தியிருந்தாளே, அப்படி இருதரப்பிலும் காதல் உணரப்பட்டிருந்தது.
இத்தனை நேரம் ராகவன் குரலை கேட்டு விடவேண்டும் என்று அடம்பிடித்த மலர்விழியின் மையல் கொண்ட மனமோ, அது நிறைவேறியதும், அவன் முகத்தைப் பார்த்தால் நன்றாக இருக்கும் என்று பேராசைக் கொண்டது.
அது அவள் குரலிலும் எதிரொலித்ததோ என்னவோ, தன் பேச்சுக்கு ம்ம் கொட்டிக் கொண்டிருந்தவளின் தாளம் தப்பியது போல உணர்ந்த ராகவன், “என்னாச்சு மலர்?” என்றான் யோசனையாக.
“எனக்கு உன்னைப் பார்க்க வேண்டும் போல இருக்கிறது. வீடியோ காலுக்கு வா” என்று சொல்லலாம் தான், சொன்னால் ராகவனும் செய்வான் தான்.
ஆனால் காதலை இன்னும் ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பரிமாறிக்கொள்ளாத நிலையில், தானே அதை நோக்கி முதலடி எடுத்து வைக்க முடியாமல் பாழாய் போன வெட்கம் வந்து தடுக்க, “ம்ஹூம்… ஒண்ணுமில்ல” என்று முணுமுணுத்தாள் மலர்விழி.
அந்நேரம், “மாமா…” என்று ராகவனை அழைத்த மழலைக்குரல் அலைபேசி வழியாக மலர்விழியை வந்தடைய, “அபிக்குட்டி வந்திருக்காளா?” உற்சாகமாக கேட்டாள் மலர்.
ராகவனின் அக்கா ஆனந்தியின் மூன்று வயது பெண்குழந்தை தான் அபி என்ற அபிநயா.
“ம்ம்… ஈவ்னிங் நான் தான் அக்காவையும் பாப்பாவையும் போய் கூட்டிட்டு வந்தேன்” என்ற ராகவன், “வாங்க பாப்பு…” என்று குழந்தையை அழைத்தான்.
“குட்டியா இருக்கும் போது அபியை ஃபோட்டோல பாத்தது. இப்போ வளந்திருப்பா ல்ல, வீடியோ கால் போடுங்களேன், நான் அவளைப் பாக்கிறேன்” என்று விட்டாள் மலர்விழி.
ஆமாம்… மருமகளைப் பார்க்கும் சாக்கில் மாமனையும் பார்த்துவிட முடிவு செய்து, சொல்லிவிட்டாள். ராகவனுக்கோ காதுவரை நீண்டது சிரிப்பு. பெண்ணவளின் தைரியத்தை மெச்சிக் கொண்டவன், அக்கா மகளை மடியில் அள்ளி வைத்துக் கொண்டு வீடியோ காலில் மலர்விழியோடு இணைந்தான்.
இரண்டு பக்க சுவரிலும் இருந்த கரும்பலகைகளின் பின்னணியில் மாமனும் மருமகளும் ஃபோன் திரையில் தெரிந்தார்கள்.
ஒரே நேரத்தில் இருவரையும் பார்வையிட்ட மலர்விழி, “ஹாய் குட்டி பாப்பா… எப்படி இருக்கீங்க?” என்று குழந்தையிடம் பேச்சில் இறங்கினாள்.
திடீரென்று ஃபோனின் திரையில் தெரிந்த மலர்விழியைப் பார்த்து விரலை நீட்டி, “அக்கா” என்றது குழந்தை.
“அக்கா இல்லடா, அத்தை” ராகவனின் திருத்தம் குழந்தைக்கானதாக இருந்தாலும் பார்வை என்னவோ மொத்தமும் மலர்விழியின் முகத்திலேயே இருந்தது.
இதைவிட அழுத்தம் திருத்தமாக ஒருவன் தன் விருப்பத்தை சொல்ல முடியுமா, என்ன? ராகவனின் அதிரடியில் குப்பென்று வியர்த்து போனது மலர்விழிக்கு.
அதன்பிறகு எங்கே குழந்தையுடன் அவள் சகஜமாக பேச? அந்த குட்டிக்கும் ஃபோனைவிட மாமனின் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியே பிரியமானதாக இருக்க, அதை கையில் பிடித்து திருகிக் கொண்டே இருந்தாள்.
“அப்புறம், சொல்லுங்க தீச்சர்… பாத்தாச்சா? எப்பிடியிருக்கேன்? இல்ல, எப்படி இருக்கா பாப்பா?” உன்னை நான் கண்டுகொண்டேன் என்ற ரீதியில், புன்னகைமுகமாக ராகவன் பேசினான்.
அதை கண்டுகொள்ளாதவள் போல, “ஹ்ம்ம்… இதுதான் உங்க ரூமா? இந்த ப்ளாக்போர்ட்டை தான் க்ளாஸ் எடுக்க யூஸ் பண்ணுவீங்களா? இன்னைக்கு வீடியோ எதுவும் யூ ட்யூப்ல அப்லோட் பண்ணலையா?” பேச்சை மாற்றுகிறேன் பேர்வழி என்று உளறிக் கொட்டிக் கொண்டிருந்தாள் மலர்விழி.
“ஹ்ம்ம்… இதுதான் என் ரூம். இங்க நின்னு தான் க்ளாஸ் எடுப்பேன், இதோ இந்த செயர்ல உக்காந்து தான் யூ ட்யூப்ல வீடியோஸ் அப்லோட் பண்ணுவேன்.” மலர்விழியின் பாணியிலேயே ராகவனும் பதில் சொல்ல, போதும் என்னை விட்டுவிடேன் என்பது போல பார்த்தாள் மலர்விழி.
சிரித்தவன், தன் கழுத்து செயினோடு பிஸியாகி இருந்த மருமகளிடம், “வேணுமா டா?” என்று கேட்டு, கழற்றி சிறியவளின் கழுத்தில் போட்டுவிட்டு, “அம்மாகிட்ட போங்க. மாமா இதோ வந்துடுறேன்” என்று அனுப்பி வைத்தான்.
ராகவனின் கழுத்தில் இப்போது கிடப்பது அவன் அப்பா போட்டுவிட்ட தாத்தாவின் செயின் அல்ல. முற்று முழுதாக அவனுடைய உழைப்பில் வாங்கியது.
சித்தப்பா அனுப்பி தந்த பணத்தில் செயினை மீட்டிருந்த ராகவன், “ட்ரெயின்ல தூங்கும் போது களவு போய்டக் கூடாதுன்னு, கழத்தி பேக்ல வச்சதை மறந்துட்டேன்” என்று சொல்லி தந்தையிடம் நீட்டியிருந்தான்.
செயின் கிடைத்தது மிகப் பெரிய சந்தோஷமாக இருந்தாலும், அதிருப்தியாக மகனைப் பார்த்த குமாரசாமி,
“இதுக்கு மேலயும், இதை உங்கிட்ட தருவேன்னு கனவுலயும் நினைக்காத” என்று தன் கைகளில் வாங்கியிருந்தார்.
“எனக்கும், இதை போடுற ஆர்வம் எல்லாம் எப்பவோ விட்டுப்போச்சு” என்றான் ராகவனும் அலுப்பான குரலில்.
அதன்பிறகு, உடனடி வருமானத்திற்காக பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் மேத்ஸ் ட்யூஷன் எடுக்க ஆரம்பித்தான் ராகவன். ஆரம்பத்தில், தனக்கு அறிந்தவர், தெரிந்தவர் வீட்டு பிள்ளைகளுக்கு ராகவனை பரிந்துரை செய்தார் அவனுடைய ஹெச்ஓடி. அதன் பிறகு அவனின் சொல்லிக் கொடுக்கும் நேர்த்தியே, அந்த வேலையை பார்த்துக் கொண்டது.
நாலைந்து மாதங்களில் ட்யூஷன் மூலமாகவே ஒரு தொகையை சம்பாதிக்கும் அளவிற்கு வளர்ந்திருந்தான் ராகவன். கூடவே, JEE தேர்வுக்கான பாடங்களை தெளிவாக நடத்தி வீடியோக்களாக யூ ட்யூபில் பதிவேற்றம் செய்ய ஆரம்பித்தான். கைமேல் பலனாக, ராகவனின் காட்டில் இப்போது பண அறுவடை தான்.
போதாததற்கு, கல்லூரி வேலையில் வந்த சம்பளம் என்று எளிதாகவே சித்தப்பாவிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து விட்டான் ராகவன்.
மலர்விழிக்கு ஹாஸ்டல் ஃபீஸ் மட்டுமே கட்ட வேண்டியிருந்ததால் தாராளமாக ராகவனின் கையில் பணம் தங்கியது. அதைக்கொண்டு புத்தம்புதிய செயின் ஒன்றை சமீபத்தில் வாங்கி தாயின் கைகளில் கொடுக்க, “நீயே போட்டுக்க ராகவா” என்று சொல்லி மகனின் கழுத்திலேயே போட்டு விட்டுருந்தார் தெய்வானை.
“அப்புறம், எக்ஸாம் என்னைக்கு முடியுது மலர்?” தன்னை எதிர்கொள்ள முடியாமல் அங்கும் இங்குமாக கண்களை சுழற்றியபடி இருந்த மலர்விழியிடம் கேட்டான் ராகவன்.
தேதியைச் சொன்னவள், “எதுக்கு கேக்குறீங்க?” என்றாள் மெதுவாக.
“அங்க, சென்னைக்கு வரணும். அதுக்கு தான்” என்றான் ராகவன்.
“எதுவும் வேலையிருக்கா என்ன?”
எப்போதும் சென்னைக்கு வந்தாலும் ஏதாவது ஒரு வேலையுடனே வரும் ராகவன், மலர்விழியையும் பார்த்து விட்டு செல்வான். இப்போதும் அப்படித்தான் இருக்கும் என்று மலர்விழி கேட்க,
“உன்னைப் பாக்கணும், உங்கூட பேசணும். அதுக்காக, அதுக்காக மட்டும் தான் வர்றேன்” என்றவன், “என்ன, வரட்டுமா?” என்றான் மலர்விழியை ஆழ்ந்து பார்த்தபடி.
அந்த பார்வையில் இதயம் தாளம் தப்பி துடித்தாலும் கூட, “சரி” என்று சம்மதமாக ஆடி, தலை தன் பணியை செவ்வனே செய்து முடித்திருந்தது.
மறுபடியும் ஒருமுறை மலர்விழியை வாழ்த்தி, “சீக்கிரம் நேரில் சந்திக்கலாம்” என்று சொல்லி, அழைப்பைத் துண்டித்துக் கொண்டான் ராகவன்.
அறைக்கு வந்து கட்டிலில் சாய்ந்த மலர்விழியின் மனமெங்கும், சென்னை வருவதாக, அதுவும் தன்னைப் பார்ப்பதற்காக வருவதாக சொன்ன ராகவனின் முகமே வியாபித்து நின்றது.
‘எதற்காக என்னைப் பார்க்க வேண்டும்? ஒருவேளை நேராகவே காதல் சொல்வானோ?’ நினைவே தித்தித்தது.
பரவசத்தோடு கண்களை மூடியவளுக்கு, ராகவன் தன்னிடம் காதல் சொல்லும் போது, தான் மறுக்கப்போவது அப்போது தெரிந்திருக்கவில்லை…