அத்தியாயம் 06
இரு கோடுகளாக நீண்டிருந்த தண்டவாளத்தில், தன் பரிவாரங்களை இழுத்துக்கொண்டு அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தது அந்த சென்னை எக்ஸ்பிரஸ். அதில், தங்களுக்கான இருக்கைகளில் மலர்விழி, ராகவன், செந்தில் மூவரும் எதிரெதிராக அமர்ந்திருந்தார்கள்.
ஆமாம்… ட்ரெயின் கிளம்பப் போகும் அந்த கடைசி வினாடிகளில், தணிகாசலத்தோடு அரக்கப்பரக்க ஓடி வந்த மலரை, ட்ரெயினில் ஏற்றிவிட்டு தானும் ஏறியிருந்தான் ராகவன்.
மூவரும் அமர்ந்திருந்த பகுதியில் மீதமிருந்த இருக்கைகள், அடுத்தடுத்த ஸ்டேஷன் பயணிகளால் முன்பதிவு செய்திருந்தபடியால், அவர்களின் அருகே தற்போது யாரும் இல்லை.
ஓடிவந்ததால் மூச்சிரைக்க, இருக்கையில் தளர்ந்து அமர்ந்திருந்த மலரின் முகம் சோர்ந்து போய் கிடந்தது.
தான் கொண்டு வந்திருந்த ஷோல்டர் பேக்கை மடியில் வைத்து இறுக்கிப் பிடித்தபடி அமர்ந்திருந்தவளின் பார்வையோ, தனது கனவை எட்டிப்பிடிக்கப் போகும் சந்தோஷத்தை பிரதிபலிக்காமல் எதிர்திசையை வெறித்தபடியே இருந்தது.
மலர்விழியை நேரடியாக சந்தித்த இரண்டு முறையும் இப்படியொரு முகபாவனையை அவளிடம் கண்டிராத ராகவன், அவளை யோசனையோடு பார்வையிட்டபடியே அமர்ந்திருந்தான்.
கடைசியாக ராகவன் பார்த்ததை விட, மலர்விழியின் உடல் நன்றாகவே மெலிவடைந்திருந்தது அப்பட்டமாக தெரிந்தது. கண்களிரண்டும் கலக்கத்தை சுமந்திருக்க, பயணத்திற்காக தனியான புறப்படுதல் எதுவுமின்றி நலுங்கிய தோற்றத்திலேயே இருந்தாள்.
பெண்ணவளின் தோற்ற மாற்றத்தில், ராகவனின் இதயத்தில் இனம் தெரியாத வலியொன்று பரவ, அவளிடம் வேறெதுவும் கேட்க முயற்சிக்காமல், “டீ குடிக்கிறியா மலர்?” என்று கேட்டான்.
தன் பார்வையை வெளிப்புறத்திலிருந்து லேசாக திருப்பி, “வேண்டாம்” என்று தலையசைத்தாள் மலர்விழி.
“ஆனா எங்களுக்கு வேணுமே… உன்னைத் தேடித்தேடி பூத்துப் போன எங்க கண்ணுல ஒளி வரணும்னா, இந்த டீ எங்களுக்கு ரொம்ப அவசியம்.” கேலியாக சொன்ன ராகவன், அங்கே டீ விற்றுக் கொண்டிருந்த நபரிடமிருந்து மூன்று பேருக்குமே டீ வாங்கினான்.
முதலில் மலரிடம் டீயை நீட்டினான். மறுபேச்சின்றி வாங்கிக்கொண்டாள். அடுத்து செந்திலுக்கும் கொடுத்து, தனக்கும் எடுத்துக் கொண்டான். மூவரும் எதுவும் பேசாமல் அமைதியாக டீயை குடித்து முடிக்க, மலர்விழியின் பார்வையோ மறுபடியும் வெளியே நிலைகொண்டது.
ஆனால், முன்பை விட இப்போது முகம் தெளிவடைந்தது போலிருக்க, “என்னாச்சு மலர்? ஏன் லேட்?” என்று கேட்டான் ராகவன்.
ராகவனின் கேள்வியில் கனவிலிருந்து விழித்தவள் போல, தலையைக் குலுக்கிக்கொண்ட மலர்விழி,
“இப்போல்லாம் இந்த மலர்விழிக்கு வீட்டுல அளவுக்கு அதிகமாவே செக்யூரிட்டி ஃபோர்ஸ். என்னோட செக்யூரிட்டி காட்ஸ்க்கு டிமிக்கி குடுத்துட்டு, பின்சுவரேறி குதிச்சு வர இவ்வளவு நேரம் ஆகிடிச்சி.” சொல்லிவிட்டு, மெல்லியதாக சிரித்தாள். அந்த சிரிப்பில் நிச்சயமாக உயிர்ப்பில்லை.
அவளுடைய பதிலில் அருகருகே அமர்ந்திருந்த ராகவனும் செந்திலும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“அப்போ, நம்ம திட்டம், அவங்களுக்கு தெரிஞ்சிடிச்சா மலர்?” பதட்டத்தோடு கேட்டான் செந்தில்.
“இல்ல ண்ணா, எங்கம்மாவுக்கு முப்பதாவது நாள் சாமி கும்பிட்டு முடிச்சதும், அவங்க பையனுக்கும், எனக்கும், கல்யாணம்னு எங்கிட்ட மாமா சொன்னாங்க. அந்த கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு நான் வீட்டைவிட்டு வெளியே போயிடுவேன்னு, அவங்களுக்கே தோணியிருக்கும் போல. அதான், எப்போ பாத்தாலும் யாராவது ஒரு ஆள் எம்பின்னாடியே சுத்திட்டு இருந்தாங்க.” செந்திலை ஏற்கனவே தெரியும் என்பதால் இயல்பாக பதில் சொன்னாள் மலர்விழி.
கேட்ட விஷயத்தில் நண்பர்கள் இருவருமே அதிர்ந்து தான் போனார்கள். ராகவனோ, ‘மனதிற்கு ஒவ்வாத ஒரு விஷயத்தை, தனியாளாக இத்தனை நாட்கள் இந்தப்பெண் சகித்துக் கொண்டிருந்திருக்கிறாளே’ என்ற ஆற்றாமையில், “எங்கிட்ட விஷயத்தை சொல்லவே இல்லையே மலர்?” என்றான்.
“எப்படியும் அவங்க சொன்ன நாள் வரைக்கும், நான் அங்க இருக்கப் போறதில்லை. அப்படியிருக்கும் போது எதுக்கு வீணா எல்லாரையும் டென்ஷன் பண்ணனும்னு தோணிச்சு. அதான், சுந்தரோட அம்மா, அப்பா உட்பட, இந்த விஷயத்தை நான் யார்கிட்டயும் சொல்லலை” என்றாள் மலர்.
மலர்விழி இந்த விஷயத்தை எளிதாக எடுத்துக் கொண்டது போல, ராகவனால் எடுத்துக் கொள்ள இயலவில்லை. தனது வலதுகை விரல்களை மடக்கி இடதுகை உள்ளங்கையில் குத்தியபடி,
“கேட்க ஆள் இல்லைன்னா, அவங்க இஷ்டத்துக்கு என்ன வேணும்னாலும் செய்வாங்களா? கண்டிப்பா, ஒருநாள் அவங்களுக்கு எங்கிட்ட பூசை இருக்கு” என்றான் கோபமாக.
“அதான் மலர்விழி நல்லபடியா வெளிய வந்துட்டா ல்ல, இனிமே அவ நிழலைக் கூட அவங்களால தொடமுடியாது. விட்டுட்டு வேற வேலையைப் பாப்பியா?” என்றான் செந்தில்.
நண்பர்கள் இருவரும் மாறிமாறி பேசிக்கொண்டிருக்க, மறுபடியும் மலர்விழியின் பார்வை ஜன்னல் வழியே கண்ணுக்கெட்டிய தூரத்தை வெறிக்க ஆரம்பித்தது.
மலர்விழியின் பார்வையில் இருந்த வெறுமையில், வேறெதுவோ அவள் மனதை அழுத்துகிறது என்பதை புரிந்து கொண்ட ராகவன், மயிலிறகால் வருடுவது போன்ற குரலில், “உன்னோட இந்த அமைதிக்கு காரணம், கண்டிப்பா நீ சொன்ன விஷயம் இல்லன்னு தோணுது. எது உன்னை டிஸ்டர்ப் பண்ணுது? எங்கிட்ட ஷேர் பண்ணிக்கோ மலர், மைண்ட் ரிலாக்ஸ் ஆகும்” என்றான்.
ராகவன் கேட்பதற்காகவே காத்திருந்தது போல, மலர்விழியின் கண்கள் இரண்டும் உடைப்பெடுக்க தயாராகியது.
“மலர்… பி அ ப்ரேவ் கேர்ள். எதுக்கிப்போ இந்த அழுகை?” என்ற ராகவன், அந்த மலர் முகம் கசங்குவது பொறுக்காமல், ஷோல்டர் பேக் மீதிருந்த அவள் வலது கையை மெல்ல தட்டிக்கொடுத்தான்.
மனதிற்கு பிடித்தவனின் முதல் தொடுகை. அதைக்கூட உணர்ந்துகொள்ள முடியாமல், “நான்… நான், ரொம்ப சுயநலவாதி இல்ல?” வார்த்தைகள் நடுங்க கேட்டவளின் கண்ணீர் இப்போது கரை உடைத்திருந்தது.
“யாரு சொன்னா?” பெண்ணவளின் முகத்தைப்பற்றி கண்ணீரைத் துடைத்துவிடத் துடித்த கைகளை கட்டுப்படுத்திக் கொண்டு, நிதானமாக கேட்டான் ராகவன்.
“என் மனசாட்சி சொல்லுதே… அம்மாவோட முப்பதாவது நாள் காரியத்தைக் கூட, ஒரு மகளா நின்னு செய்யாம, உன்னுடைய சுகம்தான் முக்கியம்னு ஊரைவிட்டே ஓடுறியேன்னு, என் மனசாட்சியே என்னைக் காறிதுப்புதே.” வலது கையால் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி பேசிய மலர்விழியின் குரல், உணர்ச்சி மிகுதியில் கரகரப்பாக கம்மிப் போய் வந்தது.
மலர்விழியின் மனச்சுணக்கத்திற்கான காரணம் இப்போது பிடிபட்டது ராகவனுக்கு. அதை நிவர்த்தி செய்யவில்லை என்றால் காலம் முழுவதுமே ஒருவகையான மன அழுத்தத்திற்கு மலர்விழி ஆளாக நேரிடலாம் என்பதை உணர்ந்து கொண்ட ராகவன், அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தபடியே,
“அந்த ஊர்ல இருந்தா மட்டும் தான் உங்கம்மாவை நீ நினைப்பியா? ஊருவிட்டு ஊரு போனா மறந்துடுவியா என்ன?” குரலில் கேலி இழையோடக் கேட்டான்.
“அதெப்பிடி அம்மாவை மறக்க முடியும்?” ரோஷத்தில் மலர்விழியின் குரல் லேசாக உயர்ந்திருந்தது.
“அவ்வளவு தான்… அவ்வளவே தான் வேணும். எங்க போனாலும் அம்மாவை இங்க ஞாபகம் வச்சிகிட்டா போதும். வேறெதுவும் தேவையில்ல அவங்களுக்கு.” தன் இடதுபக்க நெஞ்சைத் தட்டிக்காட்டியபடிச் சொன்னான் ராகவன்.
“உண்மையாவா?” ஏதோ அவனுக்குத் தான் எல்லாம் தெரியும் என்பது போல, ஊன் உருகும் குரலில் கேட்டாள் மலர்விழி.
“ஆமாம்…” என்பது போல கண்களை மூடித்திறந்தான் ராகவன். அவன் கண்ணசைவில், தான் கொண்ட காயம் எல்லாம் பறந்துவிடும் போலிருக்க, அவனையே விழி அகலாது பார்த்துக் கொண்டிருந்தாள் மலர்விழி.
அவள் பார்வையைத் தயங்காமல் தாங்கிக்கொண்ட ராகவன், “இந்த ட்ரெயின் எப்பிடி ஓரே இடத்திலேயே நின்னுட்டு இருந்தா சென்னையைப் போய்ச்சேர முடியாதோ, அப்பிடித்தான், நாமளும் நடந்ததையே நினைச்சுட்டு இருந்தோம்னா, ஒரே இடத்தில் தேங்கிப் போவோம்” என்றான் அழுத்தமான குரலில்.
சாதாரணமான எடுத்துக்காட்டு தான். ஆனால், தேவைப்படும் நேரத்தில், சொல்லப்பட்ட அந்த வார்த்தைகளுக்கு பலன் என்னவோ அதிகமாகத் தான் இருந்தது.
ஆமாம்… சற்றுநேரத்தில், தன் அம்மா உடனான தன்னுடைய பசுமையான நினைவுகளை, ஒரு லயிப்போடு அவர்களிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்திருந்தாள் மலர்விழி.
தன் கூட்டை விட்டு மலர்விழி மெதுவாக வெளியே வருகிறாள் என்பது ராகவனுக்கு புரிந்தது. உற்சாகமாக கதை கேட்டு, அவளை மேலும் பேச ஊக்கப்படுத்தினான். நேரம் ஆக ஆக, நன்றாகவே தெளிந்திருந்தாள் மலர்விழி.
மாலை மயங்கி, இரவும் வந்தது. தன்னுள்ளே வெளிச்சத்தை நிரப்பிக்கொண்டு, இருளைக் கிழித்தபடி ராட்சத பாய்ச்சலில் சென்று கொண்டிருந்தது அந்த இரும்பாலான இயந்திரம்.
“ட்ரையின் மதுரையை ரீச் ஆகிடிச்சுன்னா, பக்கத்து சீட்டுக்கு ஆள் வந்திடும். அதுக்கு முன்னாடி நாம சாப்பிட்டு முடிச்சிடுவோமா?” என்று கேட்டான் செந்தில்.
“சரி” என்று இருவரும் ஒத்துக்கொள்ள, மூவரும் சென்று அந்த கம்பார்ட்மெண்ட் வாஷ்பேஷனில் கைகழுவிக் கொண்டு வந்தார்கள்.
ஒரு பிரபல ஹோட்டலின் பெயர் அச்சிடப்பட்டிருந்த கவரிலிருந்து, சாப்பாட்டு பார்சல்களை எடுத்து செந்தில் இருவருக்கும் கொடுக்க,
“ட்ரெயின்ல சாப்பாடு எப்பிடி இருக்குமோங்குற டவுட்ல, ஹோட்டல்ல வாங்கிட்டு வந்துட்டோம்” என்றான் ராகவன்.
மூவரும் தங்களுடைய உணவுப் பொட்டலத்தைப் பிரித்தார்கள். மூன்றிலுமே இட்லி இருந்தது. இன்னொரு பார்சலில் இருந்து ஆளுக்கு இரண்டு கார வடைகளையும் எடுத்து கொடுத்தான் செந்தில்.
சாப்பிட ஆரம்பித்த மலர்விழி, “உங்களுக்கு இட்லின்னா ரொம்ப பிடிக்குமா?” என்று ராகவனைப் பார்த்து கேட்க, “ஏன்?” என்று கேட்டான்.
“இல்ல… அன்னைக்கு ஆழ்வார்க்குறிச்சிலயும் எனக்கு இட்லி தான் வாங்கிக் குடுத்தீங்க. அதான்…”
மலர்விழியின் பதிலில் சத்தமாக சிரித்த ராகவன், “ஏன்? உனக்கு இட்லி பிடிக்காதா?” என்றான்.
“நீங்க, எது வாங்கிக் குடுத்தாலும் எனக்கு பிடிக்கும்.” அவசரத்தில் வாய்வரை வந்த வார்த்தைகளை விழுங்கியவள், “பிடிக்குமே…” என்று சொல்லி சாப்பாட்டில் கவனம் போல காட்டிக் கொண்டாள்.
சாப்பிட்டு முடித்ததும் செந்தில் சென்று கைகழுவி விட்டு வந்தான். ராகவன் சாப்பிட்டு முடித்திருந்தாலும், மலர்விழி முடிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தான்.
மலர்விழியும் சாப்பிட்டு முடிக்க, இருவருமாக சென்று கைகழுவிக் கொண்டார்கள். வாழ்க்கையில் முதன்முறையாக இரயில் பயணம் மேற்கொள்ளும் மலர்விழிக்கு, அங்கே எல்லாமே தடுமாற்றமாகவே இருந்தது.
அதை ஏற்கனவே கைகழுவ வரும்போது கவனித்திருந்த ராகவன், “மலர், ரெஸ்ட் ரூம் போய்ட்டு வந்துடுறியா?” என்று கேட்டான். தயக்கத்தோடு பார்த்தாள் மலர்விழி.
“நீ போய்ட்டு வா. நான் இங்கயே நிக்கிறேன்” என்றான் ராகவன். தலையாட்டியவள், உள்ளே சென்று தன் தேவையை முடித்துவிட்டு வெளியே வரும்போது, அந்த கம்பார்ட்மெண்ட் வாசலின் இருபக்கமும் இருந்த கைப்பிடியை பிடித்துக்கொண்டு வெளியே பார்த்தபடி நின்றிருந்தான் ராகவன். எதிர்காற்று ஆசையோடு அவனைத் தழுவிச் சென்றதில், அவன் கேசம் உற்சாகத்தில் நர்த்தனம் ஆடியது.
மலர்விழி வந்ததும் திரும்பிய ராகவன், “இங்க வந்து கொஞ்ச நேரம் நிக்கிறியா மலர்? நல்லாருக்கு” என்று அழைத்தான்.
இருட்டில் பின்னோக்கி நகர்ந்த மரங்களின் வேகத்தில் தலை சுழலுவது போலிருக்க, “ஐயோ… என்னால முடியாது” என்று வேகமாக சொல்லியவள், “நீங்களும் வந்திடுங்களேன்…” என்றாள் கெஞ்சலாக.
அவளை பதட்டத்தில் தள்ள விரும்பாதவன், “போ… வரேன்” என்று சொல்லி அவள் பின்னோடு சென்றான்.
சற்றுநேரத்தில் மதுரை ஜங்ஷன் வரவும், அவர்களுக்கு அருகே இருந்த இருக்கைகளில் ஆட்கள் வந்திருந்தார்கள். வந்தவர்கள் சாப்பிட்டு முடித்து தூங்க ஆயத்தமாக, இவர்களும் தயாரானார்கள்.
இரண்டு பக்கமும் இருந்த அப்பர் பெர்த்தும், ஒரு மிடில் பெர்த்தும் இவர்களுக்கானது. மிடில் பெர்த்தில் செந்தில் ஐக்கியமாகிக் கொண்டான். இருபக்கமும் இருந்த அப்பர் பெர்த்தில் ஆளுக்கொன்றில் ராகவனும் மலர்விழியும் ஏறி அமர்ந்திருந்தார்கள்.
“உன்னோட பேக்கை தலைக்கு அணைவா வச்சிட்டு தூங்கு மலர். எதுவும் டிஸ்டர்பன்ஸ்ஸா ஃபீல் பண்ணுனா, உடனே என்னை எழுப்பு” என்று விட்டு படுத்துக் கொண்டான் ராகவன்.
சம்மதமாக தலையாட்டிய மலர்விழி, தன் பையைத் திறந்து வானநீலக்கலர் காட்டன் புடவை ஒன்றை எடுத்து கழுத்து வரை போர்த்திக்கொண்டு படுத்தாள்.
மலர்விழியின் முகம் பார்த்தே படுத்திருந்த ராகவன், புடவையைப் பார்த்து புருவத்தை உயர்த்த, “அம்மா புடவை” என்று வாயசைத்தாள் மலர்விழி.
“ஓ…” என்று பதிலுக்கு வாயசைத்த ராகவன், “சூப்பர்” என்று விரல்களால் அபிநயம் பிடிக்க, புன்னகைத்தாள் மலர்விழி.
இரயில் வண்டியின் தாளலயத்திற்கேற்ப உடல்கள் மெதுவாக ஆட, ஒருவரையொருவர் பார்வையால் தீண்டியபடி விழித்தேக் கிடந்தார்கள்.
“தூங்கு” வாயசைவில் ராகவன் சொல்ல, மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல கண்களை மூடிக் கொண்ட மலர்விழி, சிறிது நேரத்தில் தூங்கியும் போனாள்.
ஆனால் ராகவனுக்கு தான், தூக்கம் வருவேனா என்று அடம் பிடித்தது. தன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நிர்மலமான முகத்தோடு தூங்கும் மலர்விழியையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதில், ‘இந்த பெண்ணிற்கு ஒன்றென்றால், என் மனம் ஏன் தவித்துப் போகிறது? என்ற கேள்வி எழுந்தது.
கிடைத்த பதிலோ, நாடி நரம்பெல்லாம் புதுவகையான உணர்வைப் பரப்பி அவனை சிலிர்க்க வைத்தது. ஆனால், அந்த உணர்வை இப்போதைக்கெல்லாம் மலர்விழிக்கு கடத்தும் எண்ணமின்றி அமைதியாக தூங்கிப்போனான் ராகவன்.
“மலர்… எழும்பு, இறங்கலாம்.” தன்னருகே ராகவனின் குரல் கேட்கவும் பதறியடித்து எழும்பினாள் மலர்விழி.
தங்கள் பயணப்பைகளோடு இறங்குவதற்கு தயாராக நின்றிருந்த ராகவனையும் செந்திலையும் பார்த்து, “கொஞ்ச முன்னாடியே எழுப்பி விட்டுருக்கலாம்ல” என்று கேட்டபடியே இறங்கினாள்.
“இது தான் கடைசி ஸ்டேஷன், மெதுவா இறங்கிக்கலாம்னு தான் எழுப்பல” என்றபடியே, மேலே இருந்த அவளின் பையை தன் கையில் எடுத்துக் கொண்டான் ராகவன்.
பெர்த்திலிருந்து இறங்கியவுடன் ராகவனிடமிருந்து தன் பையை வாங்கி தோள்களில் மாட்டிக்கொண்டாள் மலர்விழி. முண்டியடித்தவர்களுக்கு வழிவிட்டு, நிதானமாகவே இறங்கிக்கொண்டது அந்த மூவர் கூட்டணி.
காலை ஏழு மணிக்கே மனிதர்களால் நிரம்பி வழிந்தது சென்ட்ரல் இரயில் நிலையம். விழிகள் விரிய அந்த மக்கள் கூட்டத்தை பார்த்த மலர்விழி, “எவ்ளோ ஜனங்க!” என்றாள் வியப்பு மாறாத குரலில்.
“தமிழ்நாட்டோட கேப்பிட்டல்னா சும்மாவா ம்மா…” என்றான் பதிலுக்கு செந்தில்.
மூவரும் பயணிகள் காத்திருக்கும் அறையைத் தேடி அங்கிருந்து நகர்ந்த நேரம், “மகனே… ராகவா…” என்ற சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையில் பார்த்தான் ராகவன்.
அங்கே ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தார் சிதம்பரம். எதிர்பாராத நேரத்தில் அவரை அங்கே காணவும் உற்சாகமாக, “சித்தப்பூ…” என்று கைகளை விரித்தபடி அவரை நோக்கிச் சென்ற ராகவன், அவரை கட்டி அணைத்து, “பத்து மணிக்கு காலேஜுக்கு வர்றதா தானே சொன்னீங்க?” என்றான்.
“எம்பொண்டாட்டியும் பிள்ளைங்களும் ஊருக்கு போய்ட்டாங்க டா” என்றார் மனிதர் வாயெல்லாம் பல்லாக.
“அட… எங்களுக்காகவா பேக் பண்ணுனீங்க? எப்புடி சித்தப்பூ?” முகவாயில் விரலை வைத்து ஆச்சர்யப்படாத குறையாக கேட்டான் ராகவன்.
“நானா எதுவும் செய்யல, எல்லாம் தானா நடந்தது மகனே.” ரைமிங் டயலாக் அடித்தார் சிதம்பரம்.
“என்னாச்சு சித்தப்பூ?” தான் அழைத்து வந்த அப்பாவி ஜீவன்கள் ரெண்டுபேரையும் அம்போ என்று விட்டுவிட்டு சித்தப்பாவோடு வார்த்தையாட ஆரம்பித்திருந்தான் ராகவன்.
அந்த அப்பாவி ஜீவன்களுக்கோ அப்பா, மகனின் உரையாடல் சுவாரஸ்யமானதாக இருக்க, புன்னகையோடு அவர்களைப் பார்த்தபடி நின்றிருந்தார்கள்.
“சித்தியோட அப்பத்தாவுக்கு உடம்பு சரியில்லைன்னு நேத்து இராத்திரி தகவல் வந்திச்சி. உங்க சித்தியும் என் அப்பத்தாவை பாத்தே ஆகணும்னு பிடிவாதம் பிடிச்சா. போய்ட்டு வா ராசாத்தின்னு காலைல பஸ்ஸுக்கு பிள்ளைகளையும் அவளையும் அனுப்பி வச்சிட்டு, இங்க ஓடி வர்றேன்” என்ற சிதம்பரம், மகனுக்கு பின்னால் நின்றிருந்த மலரைப் பார்த்து, “இந்த பொண்ணுக்கு தான் அட்மிஷனா?” என்று கேட்டார்.
அதன்பிறகு தான் ஞாபகம் வந்தது போல மலர்விழியையும், செந்திலையும் தன் சித்தப்பாவுக்கு அறிமுகப்படுத்தினான் ராகவன்.
ஏற்கனவே தன் சித்தப்பாவைப் பற்றி மலர்விழியிடம் ராகவன் சொல்லியிருந்ததால், “வணக்கம் சார்” என்று தன் கரங்களைக் குவித்தாள் மலர்விழி. குரலிலோ மரியாதை பொங்கி வழிந்தது.
“அட… இந்த சார், மோரை எல்லாம் தூக்கி கடாசிட்டு, அங்கிள்னு கூப்பிடு மா” என்ற சிதம்பரம், மூவரோடும் தன் கார் நின்றுகொண்டிருக்கும் பார்க்கிங் ஏரியாவை நோக்கி நகர்ந்தார்.
‘ஆமா ம்மா… இப்போ அங்கிள்னு கூப்பிடு. இன்னும் கொஞ்ச நாளுக்கு அப்புறமா மாமா ன்னு கூப்பிடலாம்.’ மனதிற்குள் கவுண்டர் அடித்துக் கொண்டே அவர்களோடு சேர்ந்து நடந்தான் செந்தில்.
இந்த காதல் ஒரு மாய வஸ்து. உடையவர்கள் கண்டு கொள்கிறார்களோ இல்லையோ, உடன் இருப்பவர்கள் எளிதாக அதனைக் கண்டு கொள்வார்கள். அப்படித்தான், ராகவனுக்கும் மலர்விழிக்கும் நடுவே துளிர் விட்டிருக்கும் அந்த மெல்லிய காதலை, செந்தில் அடையாளம் கண்டு கொண்டிருந்தான்.
‘மலர்விழி அருமையானப் பெண். தன் நண்பனோ பொறுப்பானவன். எனவே இருவருமே இந்த காதலை பக்குவமாகக் கையாள்வார்கள்’ என்ற நம்பிக்கை இருந்ததால், பதட்டம் எதுவுமின்றி இருந்தான் செந்தில்.
ஆனால், ராகவனிடம் விளையாடிப் பார்க்கும் ஆர்வம் செந்திலுக்கு தலைதூக்கவே, காருக்கருகே வந்ததும் முதல் ஆளாக பின்கதவை திறந்து உட்கார்ந்து கொண்டு, “வா மலர்… வந்து உக்காரு” என்று மலரையும் அழைத்தான்.
மறுத்துப் பேசாமல் மலர்விழி பின்சீட்டில் அமர்ந்தாள். வேறு வழியில்லாமல் சித்தப்பாவுக்கு அருகே முன்சீட்டில் அமர்ந்தான் ராகவன்.
கார் சென்னை மாநகரின் பரபரப்பான சாலையில் கலந்து ஓட ஆரம்பித்தது. அந்த பிரம்மாண்டமான நகரத்தை விழிகள் விரிய பார்த்த மலர்விழி, “யப்பா…எவ்ளோ பெரிய ஊர்!” என்றாள் தன்னை மறந்தவளாக.
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல மலர், நம்ம திருநெல்வேலியை விட கொஞ்சம் பெருசு, அவ்வளவு தான்.” கண்ணையும் காதையும் மலர்விழியிடமே வைத்திருந்த ராகவன் சட்டென்று சொல்லியிருந்தான். அவனுக்கு ‘அந்த மாநகரத்தின் பிரம்மாண்டம், தன்னந்தனியாக அங்கே வசிக்கப்போகும் மலர்விழியை மருட்டிவிடக் கூடாது’ என்ற கவலை.
“ஏம்பா செந்தில்… இந்த உருட்டு உருட்டுறானே உன் நண்பன், ஏன்னு கேக்கமாட்டியா?” ட்ரைவர் சீட்டில் அமர்ந்திருந்த சிதம்பரம், பின்னால் திரும்பிப் பார்த்து செந்திலிடம் கேட்டார்.
“நல்லவேளை… சென்னையை விட திருநெல்வேலி தான் பெரிசுன்னு சொல்லாமப் போனானேன்னு நினைச்சு சந்தோஷப்பட்டுக்கோங்க அங்கிள்” என்றான் செந்தில் சிரித்தபடி. செந்திலின் கேலியில் அந்த காருக்குள் மெல்லிய சிரிப்பு அலை எழுந்து அடங்கியது.
ஒரு நாற்பத்தி ஐந்து நிமிட பயணத்தில், சிதம்பரத்தின் குடியிருப்பு வளாகத்திற்கு வந்திருந்தார்கள். ஐந்தாவது மாடியில் இருந்தது அவரது வீடு.
எல்லா வசதிகளோடும் ஆடம்பரமாக இருந்தது அவர் வீடு.
அங்கே குளித்து, தயாராகிக் கொண்டார்கள். சிதம்பரம் ஆர்டர் செய்திருந்த காலை உணவை உண்டு முடித்து நால்வருமாகவே கல்லூரிக்கு கிளம்பினார்கள்.
இப்போது, முதல் ஆளாக பின்னிருக்கையில் உட்கார்ந்து கொண்ட ராகவனுக்கு, தன்னை சித்தப்பா யோசனையோடு பார்ப்பது போல இருந்தது.
ஆமாம்… சிதம்பரத்தின் வீட்டில், மலர்விழியும் செந்திலும், இரண்டு படுக்கையறைகளோடு இணைந்திருந்த குளியலறைகளில் குளித்து தயாராகி வருவதற்காக சென்றிருந்த போது, ராகவனும், சிதம்பரமும் உற்சாகமாக தங்கள் ஊர்க் கதைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது திடீரென்று, “உன் ஃப்ரெண்ட் அந்த பிள்ளையை லவ்வு கிவ்வு பண்ணுறானோ?” என்று சந்தேகமாக கேட்டார் சிதம்பரம்.
எதிர்பாராத இந்த கேள்வியில் பதறிப்போன ராகவன், “ஐயையோ… அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல சித்தப்பா” என்றான் வேகமாக.
“அப்போ நீ…” என்று பேச்சைத் தொடங்கியவரை முடிக்க விடாமல், அவர் ஃபோன் அழைத்தது. எடுத்துப் பார்த்து, “சித்தி” என்று ராகவனிடம் சொன்னவர், மனைவியிடம் பேச ஆரம்பித்தார். ராகவனோ, இன்னொரு அறையிலிருந்த குளியலறைக்குள் வேகமாக சென்று நுழைந்து கொண்டான்.
ஒருவேளை, “நீ விரும்புறியா?” என்று சித்தப்பா கேட்டு விட்டால், மனதிற்குள் ஆசையை வைத்துக் கொண்டு “இல்லை” என்று சொல்ல முடியாதே. அதே நேரம், “ஆமாம்” என்று சொல்லுவதற்கான வயதும், காலமும் இதுவல்லவே.
எனவே, அப்படியொரு தர்மசங்கடமான கேள்வியைத் தற்போது தவிர்க்கும் விதமாக, வேகவேகமாக குளியலறைக்குள் நுழைந்து கொண்டான் ராகவன்.
யோசித்துப் பார்க்கும்போது செந்திலை கண்டவுடன் ‘அண்ணா’ என்றும், தன் சித்தப்பாவை ‘சார்’ என்றும் ஏதோ ஒரு அடைமொழியில் அழைக்கும் மலர்விழி, இதுவரையிலும் தன்னை அப்படி எந்த ஒரு அழைப்பிற்குள்ளும் அடக்க முயலவில்லை என்பது புரிந்தது ராகவனுக்கு.
‘அப்படியென்றால் தனக்கேற்பட்டிருக்கும் இந்த தேவ உணர்வை, நான் அவளுக்கு கடத்த வேண்டிய தேவையே இல்லாமல், அங்கேயும் ஏற்கனவே இருக்கிறதோ?!’ இந்த கேள்வி மனதிற்குள் எழும்பவும், ரகசிய குறுகுறுப்பில் அருகே இருந்த மலர்விழியைப் பார்த்தான் ராகவன்.
அவளோ, நிர்மலமான முகத்தோடு ஆர்வமாக வெளியே பார்த்துக் கொண்டு வந்தாள்.
‘பரவாயில்லை, அதை தெரிந்து கொள்ளவோ, தெரியப்படுத்தவோ இப்போது முயற்சிக்க கூடாது. முதலில் இருவருமே படித்து முடிக்க வேண்டும். அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.’ திடமாக முடிவெடுத்துக் கொண்டவனின் பார்வை, ஜன்னல் வழியாக நகர்ந்த காட்சிகளில் பதிந்தது.
குறித்த நேரத்தில் கல்லூரிக்கு வந்து மலர்விழியின் அட்மிஷனை முடித்திருந்தார்கள். அதேபோல, கல்லூரிக்கு அருகிலேயே முன்பணம் செலுத்தி சிதம்பரம் ஏற்பாடு செய்திருந்த பெண்கள் விடுதியிலும் சேர்க்கையை முடித்துக் கொண்டார்கள்.
ஒரு பருவத்திற்கான கல்லூரி கட்டணத்தையும், விடுதி கட்டணத்தையும் கட்டியபிறகும் கணிசமான பணம் மிச்சமிருந்தது ராகவனிடம். விடுதிக்கு கட்டிய முன்பணத்தை மகனிடமிருந்து பெற்றுக் கொள்ள சிதம்பரம் மறுத்துவிட்டார்.
ஒரு பெண் படிப்பதற்கு தங்களால் முடிந்த உதவியை செய்கிறோம் என்ற எண்ணத்தில் எல்லோரும் உற்சாகமாகவே இருந்தார்கள். மலர்விழி தான், கொஞ்சம் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கி கொண்டது போலத் தோன்றியது.
அதுவும் கல்லூரியிலும், பெண்கள் விடுதியிலும், லோக்கல் கார்டியனாக தன் பெயரையும் விலாசத்தையும் சிதம்பரம் தானாக முன்வந்து கொடுக்க, நெகிழ்ந்து தான் போனாள் மலர்விழி.
அது புரியவும், உடன் வந்திருப்பவர்களுக்கு வித்தியாசமாக தோன்றிவிடாத அளவிற்கு அவளை தாங்கி நின்றான் ராகவன்.
எல்லா நடைமுறைகளும் முடிய மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது. அப்படியே மலர்விழியை அழைத்துச் சென்று மதிய உணவை ஒரு பெரிய ஹோட்டலில் முடித்த பிறகே விடுதியில் கொண்டு விட்டார்கள்.
முகமெங்கும் மெல்லிய பதட்டம் சூழ, திரும்பித் திரும்பி பார்த்து கையசைத்தபடியே விடுதிக்குள் சென்றாள் மலர்விழி.
அவள் உள்ளே செல்லும் வரை கையசைத்து பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு மூவரும் கிளம்பினார்கள். ஏதோ, தன் உடம்பிலிருந்து ஒரு பாகத்தையே அங்கே விட்டுவிட்டு செல்வது போலிருந்தது ராகவனுக்கு…