அத்தியாயம் 05

“இந்த உலகத்தில், நீங்கள் பாதுகாப்பாக கருதும் இடம் எது?” என்று யாரைக் கேட்டாலும், “என் வீடு” என்று யோசிக்காமல் பதில் சொல்லுவார்கள்.

ஆனால், அந்த வீடுகூட பாதுகாப்பில்லாமல் போனது மலர்விழிக்கு.

ஆமாம்… தாயை இழந்த இரண்டு நாட்களிலேயே அந்த வீட்டிலுள்ளவர்கள் மனதளவில் மலர்விழியை பலவீனமாக்க முயற்சி செய்தார்கள் என்றால், சந்திரன் வேறுவகையில் அவளை பயம்கொள்ள வைத்தான்.

எனவே, தாயில்லாத அந்த வீட்டில் இருக்க மலர்விழிக்கு மனமின்றி போனது. அந்த வீட்டை விட்டு வெளியேறி, கல்லூரி விடுதியில் தங்கிக் கொண்டால் கூட, தன்னை அவ்வளவு எளிதில் இவர்கள் விட்டுவிட மாட்டார்கள் என்றே மலர்விழிக்கு தோன்றியது.

‘தான் நிம்மதியாக படிக்க மட்டுமல்ல, வாழவேண்டும் என்றால் கூட, மாமன் குடும்பத்தாரின் கண்ணுக்குத் தெரியாமல் எங்கேயாவது சென்றே ஆகவேண்டும்’ என்பது, அந்த இரண்டு நாட்களிலேயே மலர்விழிக்கு புரிந்து போனது.

அதனால் திருநெல்வேலி கல்லூரியில் சேராமல், வேறு எங்கேயாவது சேர்ந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து கொண்டாள் மலர்விழி. முடிவெடுத்த விஷயத்தை ராகவனிடம் சொல்ல தயக்கமே.

ஏற்கனவே, தன்னால் அவனுக்கு செலவு என்று நினைத்து கொண்டிருப்பவளுக்கு, இப்போது வெளியூர் கல்லூரி என்றால் அதிகம் செலவாகுமே என்றும் தோன்றியது. ஆனால், ராகவனை விட்டால் அவளுக்கு வேறு வழியும் இல்லை.

எனவே, ‘படித்து முடித்து வேலைக்கு சென்றதும், தனக்கு செலவழிக்கும் பணத்தை திருப்பி கொடுத்துவிட வேண்டும்’ என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டு, ராகவனிடம் கேட்டே விட்டாள்.

அவனோ, நொடி நேரம் கூட யோசிக்காமல் சரி என்று சொல்லி, அவள் இளம் மனதில் இன்னமும் அழுத்தமாக பசைபோட்டு ஒட்டிக்கொண்டான்.

ராகவன் சரி என்றதும், எல்லாம் அப்போதே நடந்துவிட்டது போன்ற எண்ணம் தான் மலர்விழிக்கு. அத்தனை நம்பிக்கை அவன் மீது.

அவள் நம்பிக்கைக்குரியவனோ, என்ன செய்வது என்று கணநேரம் தடுமாறித்தான் போனான். ‘அதுவும் எல்லா கல்லூரிகளிலும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி முடிவடைந்து, சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், என்ன செய்ய போகிறேன்?’ என்று தோன்றியது.

‘இப்போது அரசாங்க கல்லூரி என்று மட்டும் பார்க்க முடியாது. எந்தவகை கல்லூரி என்றாலும் சேர்ந்தே ஆகவேண்டும். அதற்கு கண்டிப்பாக பணம் அதிகம் தேவைப்படும்’ என்று யோசித்த நேரத்தில் தான், அவன் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலி நான் இருக்கிறேன் என்று நம்பிக்கை கொடுத்தது.

‘ஆனால், அப்பா? அவருடைய வார்த்தைகள்?’ என்று யோசித்த ராகவனுக்கு, ‘தகப்பனிடம் எல்லாவற்றையும் சொல்லி உதவி கேட்கலாமா?’ என்று கூட தோன்றியது.

 ‘அடுத்த விநாடியே அந்த யோசனை இருமுனை கத்தியை உபயோகப்படுத்துவது போன்றது’ என்றும் தோன்ற, தன் யோசனையைத் தள்ளி வைத்தான்.

ஆமாம்… ஒருவேளை குமாரசாமி உதவி செய்யலாம். அதுவும், ஒரு ஆண்பிள்ளைக்காக என்று தெரிந்தால் மட்டும். ஒரு பெண்பிள்ளைக்காக மகன் முயற்சி செய்கிறான் என்று தெரிந்தால் கண்டிப்பாக உதவி கிடைக்காது.

அதுவும், அந்த பெண்பிள்ளை மலர்விழி என்று அவன் தாய்க்கு தெரிந்தால், அவ்வளவு தான்… வீடு ரணகளமாகிப் போகும். அவனைக் கூட எதுவும் செய்யவிடாமல் தடுக்கக்கூடும்.

‘அப்படி அவர்கள் தடுத்து, நான் செய்வதற்கு பதில், அவர்களுக்கு தெரியாமலேயே செய்துவிட்டு போகிறேன்’ என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.

 ‘பணத்தேவைக்கு, தன் கழுத்தில் கிடக்கும் ஐந்துபவுன் தங்கச் சங்கிலியை, வங்கியில் அடகு வைக்க வேண்டும்’ என்றும் முடிவெடுத்துக் கொண்டான்.

‘அதன்பிறகு நெட் எக்ஸாம் பாஸ் செய்து வேலைக்கு சென்றுவிட்டால், செயினை மீட்டு விடலாம்’ என்று, எம்எஸ்ஸி யின் கடைசி பருவத்தேர்வை முடித்திருந்த ராகவன் திட்டம் தீட்டிக் கொண்டான்.

அடுத்து, எந்த ஊரில், எந்த கல்லூரியில் மலர்விழியை சேர்ப்பது என்று யோசிக்கும் போது, சென்னையில் இருக்கும் அவன் சித்தப்பா சிதம்பரத்திடம் தான், அவன் எண்ணம் போய் நின்றது.

இதுதான் என்று முடிவு செய்தபிறகு, நொடிப்பொழுதைக் கூட வீணடிக்க விரும்பாமல் உடனே தன் சித்தப்பாவுக்கு அழைத்து விட்டான் ராகவன்.

அது சிதம்பரத்துக்கு அலுவலக நேரம். அழைப்பது தன் அருமை மகன் என்றதும், அழைப்பை ஏற்று விட்டார் மனிதர்.

அவர் அழைப்பை ஏற்றதும், “சித்தப்பூ…” என்று இழுத்தான் ராகவன்.

“என்னடா மகனே… இழுவை எல்லாம் வித்தியாசமா இருக்கு? என்ன விஷயம்?” எப்போதும் போல கேலியோடே பேச்சைத் தொடங்கினார் சிதம்பரம்.

“சித்தப்பூ, எனக்கு காலேஜ்ல சீட் வேணும்.” ஏதோ, குச்சி ஐஸ் வேண்டும், வாங்கிக் குடு என்பது போல கேட்டான் ராகவன்.

“ஜெயந்தியை இந்த பக்கமா காலேஜ்ல சேத்துடலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா? ரெடி பண்ணிடலாம்… ரெடி பண்ணிடலாம்” என்றார் சிதம்பரம் பரபரப்பாக.

“அவ இப்போ தான் ட்வெல்த் போறா, அது கூட உங்களுக்கு ஞாபகம் இல்லையா சித்தப்பூ?” என்று நொடித்துக் கொண்ட ராகவன், “நான் சீட் கேக்குறது இன்னொருத்தங்களுக்கு” என்றான்.

“அட… ஆமால்ல, மறந்துட்டேன்” என்றவர், “லாஸ்ட் நேரம், இப்போ எப்பிடிடா?” என்றார் கேள்வியாக.

“ஏன்? கொஞ்சநேரத்துக்கு முன்னாடி, இதே வாய்தானே ரெடி பண்ணிடலாம்னு சொல்லிச்சி?” கிடுக்கிப்பிடி போட்டான் மகன்.

“அது… ஜெயந்திக்கு ங்கவும் எப்படியாவது செய்துடலாம்னு நினைச்சேன்” என்றார் சிதம்பரம்.

“இப்பவும் ஜெயந்திக்குன்னே நினைச்சுக்கோங்க சித்தப்பூ” என்ற ராகவன், “என் சித்தப்பா பெரிய பிஸ்தா, பாதாம், எப்பிடியாவது காலேஜ்ல சீட் எடுத்து குடுத்துருவார்னு இங்க பில்டப் பண்ணி வச்சிருக்கேன். என் வார்த்தையை காப்பாத்திடுங்க சித்தப்பூ” என்றான் கூடுதலாக.

 “சரி, என்ன க்ரூப் வேணும்?” சில வினாடிகள் மௌனத்திற்கு பிறகு சிதம்பரம் கேட்க, “பிஎஸ்சி மேத்ஸ்” என்றான் ராகவன்.

“அடே… லேட்டா வந்ததும் இல்லாம, உங்களுக்கு டாப் கோர்ஸ் வேற வேணுமோ?” கிண்டலடித்தார் சிதம்பரம்.

“மேத்ஸ்ல நைன்டிநைன் பெர்சென்டேஜ் மார்க் வைச்சிருக்க நாங்க கேட்டா என்னவாம்?” என்றான் பதிலுக்கு ராகவன்.

மகன் சொன்ன மதிப்பெண்களில் புருவத்தை தூக்கிய சிதம்பரம், “பையன் நல்ல மார்க் தானே டா வச்சிருக்கான். இதுக்கு அங்கயே சீட் கிடைக்குமே?” என்றார் விஷயம் தெரியாமல்.

“ஒரு சின்ன கரெக்ஷன் சித்தப்பூ… நான் சீட் கேக்குறது பையனுக்கு இல்ல, ஒரு பொண்ணுக்கு” என்றான் ஹஸ்கி வாய்ஸில் ராகவன்.

ராகவனின் பதிலில் அதிர்ந்து போன சிதம்பரம், “என்னது? பொண்ணுக்கா?” என்றார், அதிர்ச்சியை மறைக்காத குரலில்.

“ம்ம்… பொண்ணுக்கு தான். என் ஃப்ரெண்ட்டோட சிஸ்டர். ஏற்கனவே இரண்டு பேருக்கும் பெத்தவங்க கிடையாது. சமீபத்துல, என் ஃப்ரெண்டும் ஒரு ரோட் ஆக்ஸிடென்ட்ல போய் சேர்ந்துட்டான். இப்போ அவன் தங்கச்சி மட்டும் தனியா நிக்குது.”

இல்லாத நண்பனுக்காக, வரவழைத்துக் கொண்ட சோகக்குரலில் ராகவன் கதைசொல்லிக் கொண்டிருக்க, எதிர்முனையிலிருந்து ம்ம்… கொட்டிக் கொண்டிருந்தார் அந்த அப்பாவி சித்தப்பா‌.

“நீங்களே சொல்லுங்க, நம்ம ஊர்ல ஒரு பொண்ணு தனியா வாழ்ந்திட முடியுமா? அதுவும் அழகான பொண்ணு? முடியாதுல்ல…” கேள்வியையும் கேட்டு பதிலையும் தானே சொல்லிக் கொண்டவன்,

“அந்த ஊர் பண்ணையார் மகனுக்கு, என் ஃப்ரெண்ட் தங்கச்சி மேல ஒரு கண்ணு. அவளை எப்படியாவது கல்யாணம் பண்ணியேத் தீருவேன்னு ஒத்தக்கால்ல நிக்குறான். சரி… மாப்பிள்ளை நல்லவனா இருந்தா, அவனுக்கே கூட கல்யாணம் பண்ணிக்குடுத்து, படிக்கவை ராசான்னு சொல்லலாம். அவனோ கடைஞ்செடுத்த ரௌடிப்பய. வயசு நாப்பது. எப்படி அவனுக்கு கல்யாணம் பண்ணி குடுக்க முடியும், சொல்லுங்க?”

 “அதான், நாங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து, அந்த பொண்ணை ஊரு விட்டு ஊரு கடத்தி, படிக்க வைக்கலாம்னு முடிவெடுத்திருக்கோம். அதுக்கு நீங்க தான் உதவி செய்யணும். ஒரு பொம்பிளப் பிள்ளை உங்களால படிச்சான்னு இருக்கட்டுமே சித்தப்பூ” என்று கதையை முடித்தான்.

நவரசத்தையும் கலந்து, ஃபைனல் டச்சோடு மகன் சொன்ன கதையில் உருகிப்போனாலும், “உங்க அப்பாவுக்கு இந்த விஷயம் தெரியுமா மகனே?” என்று உஷாராக கேட்டார் சிதம்பரம்.

“இதோ, விஷயத்தை சொன்ன உடனே புரிஞ்சிகிட்டு, சீட் எடுத்து தரேன்டா மகனேன்னு நீங்க சொல்லுறீங்களே… உங்களை மாதிரியா, உங்க அண்ணன் இருக்காப்ல? அதான், அவர்கிட்ட சொல்லலை. நீங்களும் சொல்லிடாதீங்க” என்றான் ராகவன் படுஇயல்பாக.

‘நான் எப்போடா சீட் எடுத்து தரேன்னு சொன்னேன்…’ உள்ளுக்குள் அலறிய சிதம்பரத்திற்கு, ‘ஏன் எடுத்து குடுத்தா தான் என்னவாம்?’ என்றும் தோன்ற, “என்னை வம்பு தும்புல மாட்டி விட்டுற மாட்டீங்களே மகனே?” என்றார் பாவம் போல.

“சேச்… சே… எவ்வளவு பெரிய ஹெல்ப் செய்யப் போறீங்க, உங்களப் போய் பிரச்சினைல மாட்டி விடுவேனா சித்தப்பூ? எதுக்கும் நீங்க சித்திகிட்ட இந்த விஷயத்தை சொல்லாதீங்க. அப்புறம் சித்தி எங்கம்மாகிட்ட சொல்லிடப் போறாங்க. நாம உங்க அண்ணன்கிட்ட மாட்டிக்கப் போறோம்” என்றான் ராகவன்.

மகனார் சொன்ன விஷயத்தில் உள்ள உண்மை புரிந்தாலும், ‘மனைவியிடம் சொல்லாமல் ஒன்று செய்வதா?’ என்ற எண்ணத்தில், “உங்க சித்திகிட்ட எதையுமே நான் மறைச்சதே இல்லையே டா” என்றார் சிதம்பரம்.

“நீங்க காலேஜ் படிக்கும் போது, நம்ம மேலத்தெரு ராகினி அக்காவுக்கு லவ் லெட்டர் குடுக்கச்சொல்லி எங்கிட்ட தந்து விட்டீங்களே… அதைக்கூட சித்திகிட்ட சொல்லிட்டீங்களா சித்தப்பூ?!” அப்பாவியாக வியந்தான் ராகவன்.

“அடேய்… பொண்டாட்டிகிட்ட அதையெல்லாமா டா சொல்லுவாங்க?” சட்டென்று தொற்றிக்கொண்ட பதட்டத்தோடு கேட்ட சிதம்பரம்,

 “இதுக்கு தான் டா, அந்த மாதிரி விஷயத்துல உன்னை மாதிரி சின்னப்பசங்களை இணை சேர்த்துக்க கூடாதுன்னு சொல்லுறது” என்று அலுத்துக் கொண்டே, “சரி… உங்க சித்திக்கு சொல்லல” என்று பேச்சை முடித்துக்கொண்டார்.

சிதம்பரம் அதிக நாட்கள் எல்லாம் எடுத்துக் கொள்ளவேயில்லை. மறுநாளே ராகவனுக்கு போன் செய்து, ஒரு பிரபல கல்லூரியில் அவன் கேட்ட பாடப்பிரிவிலேயே இடம் கிடைத்து விட்டதாக சொன்னார்.

அவ்வளவு தான்… அத்தனை ஆர்ப்பரிப்பு ராகவனிடம். கூடவே, “நீங்க பிஸ்தா ன்னு ப்ரூஃப் பண்ணிட்டீங்க சித்தப்பூ” என்று கேலி வேறு.

எவ்வளவு வேண்டுமானாலும் உதவி செய்யலாம். ஆனால் அளவோடு தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கொள்கை உடைய சிதம்பரம், “சரிதான் மகனே… ஆனா, அடிக்கடி என்னை பிஸ்தாவா ப்ஃரூப் பண்ண முயற்சி செய்யாதீங்க” என்று சிரித்தார்.

வருமான வரித்துறையில் வேலை பார்க்கும் சிதம்பரத்தின் நட்பு வட்டம் பெரியது. அந்த கல்லூரி முதல்வரும் சிதம்பரத்தின் நண்பர் தான். பணியில் நேர்மையாக இருக்கும் சிதம்பரம், தன்னிடம் உதவி கேட்கவும், சிறப்பு ஒதுக்கீடு மூலம் ஏற்பாடு செய்து தருவதாக வாக்களித்து விட்டார்.

அதற்கு, மலர்விழி பெற்றிருந்த மதிப்பெண்கள் ஒரு காரணம் என்றால், இதுவரை உதவி என்று வராத சிதம்பரம், முதன்முறையாக உதவி கேட்டது மற்றொரு காரணம்.

“பிஸ்தாவா தானே ப்ரூஃப் பண்ணக்கூடாது சித்தப்பூ… இந்த பாதாம், வால்நட்டா ப்ரூஃப் பண்ணுறதுல, உங்களுக்கு அப்ஜெக்ஷன் ஒண்ணும் இல்லையே” கேலியில் இறங்கினான் ராகவன்.

“அது எதுக்கு ஃபாரின் பருப்பாவே என்னைக் காட்ட முயற்சி செய்யுறீங்க மகனே? சும்மா கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ன்னு உள்ளூர் பருப்பாவே காட்ட முயற்சி செய்யுங்க.” அண்ணன் மகனோடு இணைந்து கேலி பேசிய சிதம்பரம்,

 “அந்த பொண்ணுக்கு யாரும் இல்லன்னு சொல்லுற. அப்புறம், ஃபீஸ் எல்லாம் எப்பிடி, யார் கட்டுவா? இது அட்டானமஸ் காலேஜ் வேற” என்றார் அக்கறையாக.

மலர்விழியின் உண்மைக்கதையைச் சொன்னால், தன் அப்பாவுக்கு பயந்து சிறிய தகப்பன் உதவி செய்ய மறுக்கக்கூடும் என்று தான், அவரிடம் புதிதாக ஒரு கதையை ராகவன் புனைந்தது.

இப்போது கல்லூரி கட்டணத்தை நான்தான் கட்டப்போகிறேன் என்று சொன்னால், எப்படி என்று கேள்வி வரும், அதைச் சொல்லமுடியாதே. எனவே, “அதெல்லாம், எங்க ஹெச்ஓடி பாத்துக்குறேன்னு சொல்லியிருக்கார்” என்று, சரளமாக பொய்யை அவிழ்த்து விட்டான் ராகவன்.

இதுநாள் வரைக்கும் இல்லாமல், இப்படி உண்மையை மறைத்து பேசுவது ராகவனுக்கும் கடினமாகத்தான் இருந்தது. என்றாலும், ஒரு நல்லது நடக்கும் என்றால், சொல்லும் பொய் கூட உண்மைக்கு நிகரானது என்று மனதை அமைதிபடுத்திக் கொண்டான்.

“அட்மிஷனுக்கு இன்னும் பத்து நாள் இருக்கு, ட்ரெயின் டிக்கெட் எல்லாம் பதிவு செய்து ரெடியாகிக்கோங்க” என்றார் சிதம்பரம்.

“சரி” என்ற ராகவன், “தப்பா நினைச்சுக்காதீங்க சித்தப்பா, நீங்க இன்னொரு ஹெல்ப் பண்ணனும்” என்றான்.

“எப்போயிருந்து டா, எம்புள்ளை இவ்வளவு ஃபார்மலா எங்கிட்ட பேச ஆரம்பிச்சான்?” என்று நக்கலடித்த சிதம்பரம், “முழுக்க நனைஞ்சாச்சு, இனிமே முக்காடு போட்டு என்ன ஆகப்போகுது? சொல்லு, செய்துடலாம்” என்றார் உற்சாகமாகவே.

“தீபாவளி, பொங்கல், இந்த மாதிரி ஃபெஸ்டிவெல் டைம்ல, காலேஜ் ஹாஸ்டலை கம்ப்ளீட்டா மூடிடுறாங்க. அப்போ, அந்த பொண்ணு வீட்டுக்கு போக முடியாதே. அதனால, வெளிய வுமன்ஸ் ஹாஸ்டல்ல தான் தங்கியாகணும். காலேஜ் க்கு பக்கத்துல நல்ல ஹாஸ்டலா பாத்துதர முடியுமா சித்தப்பா? தேவைப்பட்டா அட்வான்ஸ் கூட குடுத்துடுவீங்களா?” என்றான்.

உண்மையிலேயே, அண்ணன் மகனின் இந்த உதவி செய்யும் மனப்பாங்கில், எப்போதையும் விட இப்போது அவனை அதிகம் பிடித்தது சிதம்பரத்துக்கு.

“கண்டிப்பா செய்துடலாம் டா.” முழுமனதோடு சொன்னார் சிதம்பரம்.

சென்னையில் கல்லூரியில் இடம் கிடைத்ததையும், எப்போது அட்மிஷன் போன்ற விபரங்களையும் சுந்தரின் அப்பா கைபேசி வழியாக, மலருக்கு தெரிவித்தான் ராகவன்.

மகிழ்ந்து போன மலர், “உங்களுக்கு நான் எப்பிடி நன்றி சொல்லப் போறேன்னே தெரியல?” என்று உணர்ச்சி வசப்பட, “வாயால தான்” என்று கிண்டல் அடித்தான்.

ராகவனிடமிருந்து அப்படி ஒரு பதிலை எதிர்பார்க்காத மலர்விழி, அடுத்து பேச திணறிப்போனாள்.

 சிரித்த ராகவன், “மலர்… உன்னோட நன்றிக்காக வேண்டி, நான் எதையும் செய்யல. கண் முன்னாடி நல்லா படிக்கிற பொண்ணோட வாழ்க்கை கேள்விக்குறியா நிக்குறதை பாத்துட்டு, சும்மா போக மனமில்லாமல், என்னாலான உதவி செய்யுறேன். அவ்வளவு தான். இதை வச்சிட்டு என்னவோ என்னை கர்ணப்பரம்பரை ரேன்ஜுக்கு பார்க்காத” என்றான்.

‘இல்லை என்று சொன்னாலும், அந்த கர்ணனே தான் நீ.’ மனதோடு மலர்விழி பேசிக்கொண்டிருக்க,

“எல்லா சர்ட்டிஃபிகேட்ஸ்ஸையும் மறக்காம கொண்டு வந்துடு மலர்” என்று பேச்சைத் தொடர்ந்த ராகவன், மிகமென்மையான குரலில், “கவனமா இருந்துக்கோ மலர்” என்றான்.

‘தாயை இழந்த இரண்டே நாட்களில், ஒரு உறவே வேண்டாம் என்று முடிவெடுக்க வேண்டும் என்றால், அந்தப்பெண் எத்தனை மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்க வேண்டும்’ என்ற எண்ணம் ராகவனிடம். அதைக் கொண்டே அவன் அவ்வாறு சொல்ல, எப்போதும் போல அவன் அக்கறையில் நெக்குருகித் தான் போனாள் மலர்விழி.

அம்மா இல்லை என்ற சோகத்தையும் தாண்டி, ‘தான் விரும்பிய படிப்பு கிடைக்கப் போகிறது‌, இந்த வீட்டிலிருந்தும், சுயநலம் பிடித்த உறவுகளிடமிருந்தும் நிரந்தரமான விடுதலை கிடைக்கப் போகிறது’ என்ற எண்ணம், மலர்விழியை கொஞ்சம் உற்சாகமாக உணரவைத்தது.

ஆனால் அப்படி எல்லாம் உன்னை நிம்மதியாக விடமுடியாது என்பது போல, “உங்கம்மாவுக்கு முப்பதாவது நாள் சாமி கும்பிட்டு முடிச்சதும், உனக்கும் சந்திரனுக்கும் கல்யாணம்” என்றான் மாயன்.

 “அதற்கு நான் இங்கே இருக்க வேண்டுமே?” என்று நக்கலாக மனதிற்குள் சொல்லிக் கொண்டவளுக்கு, அம்மா இறந்து முப்பது நாட்கள் கழியும் முன்பாகவே, ஊரைவிட்டே செல்லத் தயாராகிவிட்ட தன் மனநிலையில், தாயின் முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தது போலத் தோன்ற, சட்டென்று முகம் ஒட்டுமொத்த பொலிவையும் இழந்து விட்டது.

கணவன் அருகில் நின்று மலர்விழியையே பார்த்துக் கொண்டிருந்த பரமேஸ்வரி, அவளின் முகமாற்றத்தில், “இங்க பாரு, உனக்கு வேற வழியே கிடையாது. எம்புள்ளையைத் தான் நீ கல்யாணம் பண்ணியாகணும். இங்கயிருந்து தப்பிச்சு போய்டலாம்னு நினைச்சு உன் தலையில நீயே மண்ணள்ளி போட்டுக்காத. இந்த உலகம் ரொம்ப பொல்லாதது, தனியா ஒரு பொண்ணு மாட்டிக்கிட்டா கடிச்சி குதறிடும்” என்றாள் மிரட்டுவது போல.

‘அம்மாவே இல்லை, நாம் எதற்காக இவர்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற எண்ணம் மலர்விழிக்கு வரக்கூடும்’ என்ற யூகத்தில், அதை முளையிலேயே கிள்ளி எறியும் முயற்சியாகவே, மறைமுகமாக பயமுறுத்தினாள் பரமேஸ்வரி. கூடுதலாக, கண்கொத்திப் பாம்பாக மலர்விழியை பார்வையாலே தொடர்ந்தும் கொண்டிருந்தாள்.

இது எதுவுமே மலர்விழியின் மனதில் பதியவில்லை. அவள் மனம் முழுவதும் தாயையே சுற்றி சுற்றி வந்தது.

இங்கே, ராகவனோ சென்னைக்கு செல்லும் வேலைகளில் படுமும்முரமாக இறங்கியிருந்தான். தான் மட்டுமாக மலர்விழியோடு செல்லுவதற்கு பதிலாக, யாராவது உடன் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றவே, சுந்தரின் அப்பா தணிகாசலத்திற்கு ஃபோன் செய்து அவரை அழைத்தான்.

அவரோ, “தம்பி… ஏற்கனவே மலரோட மாமா குடும்பமே எங்கமேல செமகோபத்துல தான் இருக்காங்க. மலரும் நானும் ஒரேநாள்ல ஊர்ல இல்லைன்னு தெரிஞ்சா, எங்க மேல தான் ஒட்டுமொத்த சந்தேகமும் திரும்பும். எனக்கு சுந்தர் மட்டும் தான் பிள்ளைன்னா கூட சமாளிச்சிடுவேன். ஒரு பொண்ணும் இருக்குறா.”

“அவனுங்க, அப்பனும் மகனும் மொரடனுங்க. நான் இல்லாத நேரம், வீட்டுல வந்து பிரச்சனை எதுவும் செய்தா கஷ்டமாகிப் போகும். அதனால, ரெயில்வே ஸ்டேஷன் வரைக்கும் மலரை பத்திரமா கூட்டிட்டு வந்துடுறேன். நீயே, மலர் கூட போய்ட்டு வந்துடு ப்பா” என்றார்.

இத்தனை நாட்களில், ராகவனைப் பற்றியும், அவன் குடும்ப பின்னணியைப் பற்றியும் தெரிந்து கொண்ட தணிகாச்சலத்திற்கு, அவனோடு மலர்விழியை அனுப்புவதில் எந்த தயக்கமும் இருக்கவில்லை.

தணிகாசலத்திற்கு அடுத்ததாக, ராகவனின் மனதில் வந்தது நண்பன் செந்தில் தான். தங்களோடு சேர்த்து அவனுக்கும் ட்ரெயின் டிக்கெட் புக் செய்த பிறகே, விஷயத்தை செந்திலிடம் சொன்னான் ராகவன். அவனும் வருவதாக ஒத்துக் கொண்டான்.

சென்னைக்கு போய் வேலையை முடித்து விட்டு திரும்பி வர, குறைந்தது மூன்று நாட்களாவது ஆகும் என்னும் பட்சத்தில் வீட்டுக்கு தெரியாமல் போகமுடியாதே.

எனவே, கிளம்புவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் சென்னைக்கு போகும் விஷயத்தை தந்தையிடம் சொல்லத் தயாரானான் ராகவன்.

காலையில் குமாரசாமி சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தவன், “அப்பா, சென்னைல வச்சி ஃப்ரெண்டோட அக்காவுக்கு கல்யாணம், எல்லா பசங்களும் போறாங்க, நானும் போறேன்” என்றான்.

“அதெல்லாம் ஒண்ணும் போகவேண்டாம்.” பட்டென்று பதில் சொன்னார் குமாரசாமி.

“இல்ல ப்பா… நெட் எக்ஸாம் க்ளீயர் செய்ய புக்ஸ் வாங்கித்தரேன்னு சித்தப்பா சொல்லியிருக்காங்க. கல்யாணத்தை அட்டன் செய்துட்டு, அப்பிடியே சித்தப்பா வீட்டுக்கு போய் எனக்கு தேவையான புக்ஸ் எல்லாம் வாங்கிட்டு வரணும். அதனால போய்ட்டு வரேன்” என்றான் அமைதியாக.

எப்போதுமே குமாரசாமிக்கு தன் தம்பி வருமான வரித்துறையில் பணியில் இருப்பது குறித்து பெருமை உண்டு. தன் பிள்ளைகளும் சித்தப்பனைப் போலவே படித்து, நல்ல வேலையில் அமர்ந்துவிட வேண்டும்’ என்ற ஆசையும் அவருக்கு உண்டு.

 ராகவன் இடம் பார்த்து அடித்ததில், “கல்யாணம் முடிஞ்சதும் கூத்தடிக்காம, சித்தப்பா வீட்டுக்கு போய் சேர்ந்திருக்கணும்” என்று, மறைமுகமாக தன்னுடைய சம்மதத்தை தெரிவித்தார் குமாரசாமி.

அட்மிஷனுக்கு முந்தைய நாள் மாலையில் இங்கிருந்து கிளம்பி, மறுநாள் அதிகாலையில் சென்னைக்கு வந்து, ரெயில் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் அறையில் குளித்து, புறப்பட்டுக்கொள்ள வேண்டும். அதன்பிறகு மலர்விழியின் காலேஜ் அட்மிஷனை முடித்து, அவளை ஹாஸ்டலில் விட்டுவிட்டு சித்தப்பா வீட்டுக்கு செல்ல வேண்டும், என்று திட்டம் போட்டிருந்தான் ராகவன்.

இது எல்லாம் முடிய எப்படியும் சாயங்காலம் ஆகிவிடும். அதனாலேயே திருமணத்திற்கு போய்விட்டுத் தான் சித்தப்பா வீட்டுக்கு போவேன் என்று ராகவன் சொன்னது.

 இல்லையென்றால், ட்ரெயின் சென்னையை சென்றடையும் நேரத்தை கணக்கிட்டு, ராகவன் வந்தாச்சா என்று கேட்டு இங்கிருந்து சித்தப்பா வீட்டுக்கு ஃபோன் பறக்க, அங்கிருந்து சித்தியின் இல்லை என்ற தகவல் பறக்க என்று, நிலவரம் கலவரம் ஆகிப்போகுமே.

இந்த மிஷனில் முக்கிய பங்காற்றும் தன் செயினை, கிளம்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அடகு வைத்து, தேவையான பணத்தை கையிலும், மீதியை தன் வங்கிக் கணக்கிலுமாக வைத்துக் கொண்டான் ராகவன்.

இதோ, திட்டமிட்டபடி தங்களின் பயணத்துக்கான நாளில், ராகவனும் செந்திலும் திருநெல்வேலி ஜங்ஷன் இரயில் நிலையத்தை அடைந்து விட்டார்கள்.

அவர்கள் பயணம் மேற்கொள்ள இருக்கும் சென்னை எக்ஸ்பிரஸ், திருநெல்வேலியில் இருந்து புறப்படுவதால், தன் நீண்ட பயணத்திற்கு தயாராகி அங்கே நின்று கொண்டிருந்தது. தங்கள் கோச் அருகே சென்று, நின்று கொண்டவர்களின் பார்வை, மலரைத் தேடி பயணிகள் வரும் பாதையையே அலசியபடி இருந்தது.

ஆனால், நேரம் சென்று கொண்டிருந்ததே தவிர, மலர்விழியைக் காணவில்லை. தணிகாசலத்தின் ஃபோன் வேறு அந்த நேரம் பார்த்து தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்து, ராகவனை எரிச்சல் படுத்தியது.

நேரம் ஆக ஆக, ராகவனின் முகம் பதட்டத்தை தத்தெடுத்துக் கொண்டது. என்றாலும், “செந்தில், நீ உள்ள போய் உக்காரு. கடைசி நேரத்துல மலர் வந்தா, எல்லோரும் சேர்ந்து ஏற கஷ்டமா இருக்கும்” என்று தன் பயணப்பையையும் கொடுத்து நண்பனை ட்ரெயினில் ஏறச் சொன்னான் ராகவன்.

இதோ… இன்னும் இரண்டு நிமிடங்களில் ட்ரெயின் கிளம்பிவிடும் என்ற நிலையிலும் மலர்விழி வராதிருக்க, ஜன்னலோரம் அமர்ந்திருந்த செந்தில், வெளியே நின்று கொண்டிருந்த ராகவனிடம், “மச்சான்… ப்ரோக்ராம் கேன்சலா?” என்றான் பதட்டமாக.

“நீ கொஞ்சம் வாயை மூடுறியா? கண்டிப்பா அவ வருவா.” அதிகப்படியான டென்ஷனில் நண்பனிடம் கத்தியிருந்தான் ராகவன்…