அன்று, முன்மாலைப் பொழுதில், தங்கள் ஊருக்கு அருகில் உள்ள செட்டிக்குளம் என்ற ஊருக்கு, செந்திலோடு பைக்கில் வந்து இறங்கினான் ராகவன்.
அந்த ஊரில் கோவில் திருவிழா என்றும், கரகாட்டம் உண்டு என்றும் சொல்லிய செந்தில், “போய்த்தான் பார்ப்போமே, ஒருவேளை அந்த பெண்ணைப் பற்றி ஏதாவது தகவல் கிடைக்கலாம்” என்று சொல்ல, ஏதோ ஒரு நம்பிக்கையில், ஊர் நாட்டாமை வீட்டுக்கருகே வண்டியில் வந்து இருவரும் இறங்கி விட்டார்கள்.
பைக்கிலிருந்து இறங்கி, நாலா பக்கமும் பார்வையை வீசினான் ராகவன். அவன் எதிர்ப்பார்ப்பை பொய்யாக்காமல் கண்கள் நிலம் பார்க்க யோசனையோடு நடந்து கொண்டிருந்த மலர்விழியும், சிறு இடைவெளி விட்டு அவளைத் தொடர்ந்து கொண்டிருந்த சந்திரனும் ஒருசேர பார்வையில் விழுந்தார்கள்.
சந்தோஷத்தில் நண்பனை அணைத்து விடுவித்த ராகவன், வேகமாக மலரின் அருகே வந்து நின்று, “என்ன ம்மா சூரப்புலி… இருக்கிறதிலே பெரிய கல்லு எதுன்னு ஆராய்ச்சி பண்ணுறீங்களா?” என்றான் கிண்டலாக. அவன் அறியாமலேயே குரலில் உற்சாகம் பொங்கி வழிந்தது.
ராகவனின் கம்பீரமான குரலில் சட்டென்று நிமிர்ந்து பார்த்த மலர்விழியின் கண்கள், சந்தோஷத்தில் மின்னியது. ஆனால், அதையும் தாண்டி அந்த கண்களில் மெல்லிய சோகஇழை ஓடுவது போல தோன்றியது ராகவனுக்கு.
மலரை அடைகாப்பது போல அவள் பின்னோடு அலைந்து கொண்டிருந்த சந்திரன், “கல்லா? எதுக்கு?” என்றான் எரிச்சலை மறைக்காத குரலில்.
ராகவனின் வருகையை அவன் விரும்பவில்லை என்பதை அந்த குரலே சொல்லியது. அதுவும் இல்லாமல், தன்னை ஒரு பொருட்டாக மதிக்காமல், மலர்விழியோடு ராகவன் சகஜமாக பேசியதை அவன் அறவே விரும்பவில்லை.
“வேறெதுக்கு, உன் மண்டையை உடைக்கத்தான்” என்று சத்தமாகவே முணுமுணுத்த ராகவன்,
“என்ன மாயன், எங்க வீட்டுக்கு வந்தப்போ தானே உங்க மருமக கால் உடைஞ்சது? அதான், இப்போ எப்பிடி இருக்குன்னு கேட்டா, உங்க பையன் முறுக்கிகிட்டு நிக்குறாப்ல. நான் உங்க மருமககிட்ட பேசக்கூடாதா, என்ன?” சற்று தள்ளி நின்று, ஊர் நாட்டாமையோடு பேசிக்கொண்டிருந்த மாயனிடம் இங்கிருந்தே சத்தமாக கேட்டான்.
அவன் சத்தத்தில் பேசிக்கொண்டிருந்த இருவருமே கலைந்தனர். மாயனை முந்திக்கொண்ட ஊர் நாட்டாமை, “அடடே… தம்பி, நீங்களா?! நம்ம ஊருக்கு நீங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம் எனக்கு. உங்க ஊர் திருவிழாவுக்கும் இவங்களோட நிகழ்ச்சி தானே நடந்ததாம்?” என்றார்.
“ம்ம்… ஆமா… அருமையான நிகழ்ச்சி” என்று புகழ்ந்தான் ராகவன்.
அவன் புகழ்ச்சியில் உச்சிகுளிர்ந்து போன மாயன், மகனிடம், “நீ போய் கரகத்தை அலங்காரம் பண்ண ஆரம்பி டா” என்று கட்டளை போல சொல்ல, அங்கிருந்து நகர்வேனா என்று, அப்படியே நின்றிருந்தான் சந்திரன்.
அவன் எண்ணம் புரிந்தது போல, செந்தில், “அடுத்த மாசம் எங்க ஊர்ல திருவிழா வருது, அந்த நாள்ல உங்களால நிகழ்ச்சி பண்ண வரமுடியுமா? உங்க சம்பளம், மத்த விபரம் எல்லாம் சொல்லுங்களேன்” என்று சந்திரனை ஓரம்கட்ட, கிடைத்த இடைவெளியில் மலர்விழியுடன் பேச ஆரம்பித்தான் ராகவன்.
முதலில் அவள் காலைப் பற்றி விசாரித்தான். “என்னோட கால், அவங்களோட மூலதனம் இல்ல, அதனால இராஜவைத்தியம் நடந்தது” என்று சிரித்தாள் மலர்விழி.
அடுத்ததாக, அவள் அம்மா உடல்நிலையைப் பற்றி கேட்டான். இப்போது மலர்விழியின் கண்களில் கண்ணீர்.
அந்த கண்ணீரில் ஏனோ ராகவனின் மனது தடுமாற, “என்னாச்சு?” என்றான் மெதுவாக.
“அம்மாவுக்கு கேன்சர். ஃபைனல் ஸ்டேஜ், எப்போன்னு தெரியாது” தந்தி பாஷையில் பேசியவளால், எவ்வளவு முயற்சி செய்தும் சிறுகேவல் ஒன்று வெளிவந்ததை தடுக்க முடியவில்லை.
உண்மையில், இந்த தகவல் ராகவனுக்குமே அதிர்ச்சியாகத் தான் இருந்தது. அம்மாவிற்கு உடம்புக்கு சரியில்லை என்று மலர் ஏற்கனவே சொல்லியிருந்தாள் தான். ஆனால், இந்த அளவிற்கு இருக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
இருக்கும் ஒரே உறவான தாயும், வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். அதை அருகேயிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் மகளின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்று புரிந்துகொள்ள முடிந்த ராகவனால், மலர்விழிக்கு எப்படி ஆறுதல் சொல்லுவது என்றே தெரியவில்லை.
ஆனாலும் அந்த பெண்ணுக்கு தைரியம் சொல்லியே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில், “வாழ்க்கை, ஒவ்வொருவருக்கும் எப்படியான அனுபவத்தை தர காத்து இருக்குன்னு யாருக்குமே தெரியாது. அப்பிடி தெரிஞ்சா வாழ்க்கையில் சுவாரஸ்யமும் இருக்காது. கண்டிப்பா, இது உன்னோட வாழ்க்கையில் கடினமான நாட்கள் தான். ஆனா, தைரியமா அதைக் கடந்து நீ வரணும்” என்றான் மென்மையாக.
புரிந்தது என்பது போல தலையசைத்த மலர்விழியிடம், “எக்ஸாம் எல்லாம் எப்படி எழுதியிருக்க?” என்று கேட்டான் ராகவன்.
“ம்ம்… நல்லா பண்ணியிருக்கேன். நல்ல மார்க்ஸ் கிடைக்கும்” சுரத்தின்றி பதில் சொன்னாள் மலர் .
“அடுத்து என்ன படிக்கிறதா உத்தேசம்?” ஆர்வமாக கேட்டான் ராகவன்.
“இல்ல… நான் படிக்கல…” ராகவனின் கண்களைப் பார்க்காமல் பதில் சொன்னாள் மலர்விழி.
“ஏன்?” உச்சபட்ச அதிர்ச்சியில் கேட்டான் ராகவன்.
“எங்காலுக்கு செலவழிச்ச பணத்துல கால் பங்குகூட எம்படிப்புக்கு செலவழிக்க இங்க யாருக்கும் மனசில்ல” என்றாள் விரக்தியாக.
“நல்ல மார்க்ஸ் வரும் ங்கிற. அப்புறம் படிக்க என்ன செலவாகிடப் போகுது மலர்?”
“அதைச் செலவழிக்க கூட, இங்க யாருக்கும் மனசில்லயே…” சோர்ந்து போனக் குரலில் சொன்னாள் மலர்.
‘அன்று எப்படியாவது படித்துவிடுவேன் என்று நம்பிக்கையாகச் சொன்ன பெண்ணா இது?!’ ஆச்சர்யமாக இருந்தது ராகவனுக்கு.
‘அன்னையின் நிலைமை, இப்படி பிடிப்பில்லாமல் பேசவைக்கிறது போல’ என்று நினைத்த ராகவன், “நீ படிக்கிறதுக்கு, வேற யாரும் மனசுவைக்க வேண்டாம் மலர். நீ… நீ மட்டும் தான் மனசு வைக்கணும். மொதல்ல அதைப் புரிஞ்சிக்கோ” என்று அழுத்தமாகச் சொல்லியவன்,
“உங்கூட யாரும் இல்லைன்னு நினைக்காத. நான் இருக்கேன் உனக்கு. நீ படிக்கிறதுக்கு என்ன ஹெல்ப் பண்ணனுமோ, அத்தனையையும் நான் செய்துதரேன். அது பணமா இருந்தா கூட. மொதல்ல ரிசல்ட் வரட்டும், நாம என்ன செய்யுறதுன்னு முடிவெடுக்கலாம். இப்போ உன் ஃபோன் நம்பரைக் குடு” என்றான் தெளிவாக.
ராகவனின் பேச்சில் அவனை நிமிர்ந்து பார்த்தாள் மலர்விழி. ‘தகப்பனுக்கு பிறகு தாய்மாமன் என்று சொல்லப்படும் அந்த உன்னதமான உறவே, அவர்கள் சுயநலத்திற்காக என்னை வளைக்க முற்படும் போது, என் கனவை நனவாக்கி தருகிறேன் என்று வந்து நிற்கிறாயே! யாரடா நீ? என் வாழ்வை உய்விக்க வந்த தேவனா?’
பார்வையாலே பாவையவள் ராகவனோடு மானசீகமாக பேசிக்கொண்டு நிற்க, “மலர், ஃபோன் நம்பர் கேட்டேன்” என்றான் ராகவன் மறுபடியும்.
“ஹாங்… எங்கிட்ட ஃபோன் இல்லையே” பாவமாக உதடு பிதுக்கினாள் மலர்.
“அப்போ, உன்னை ஈசியா கான்டேக்ட் பண்ணுற மாதிரி, வேற யாரோடதாவது தா” என்றான் ராகவன்.
“சுந்தரோட அப்பா நம்பர் தரட்டுமா?” வேகமாக கேட்டவள், ராகவனின் யோசனையான பார்வையில், “சுந்தர், என்னோட க்ளாஸ்மெட். எங்க வீட்டுக்கு பக்கத்துல தான் அவங்க வீடு. அவனோட பேரெண்ட்ஸ் தான் நிறைய தடவை எனக்கு ஹெல்ப் பண்ணியிருக்காங்க” என்று விளக்கம் கூறினாள்.
“ஓ… கிரேட், அப்போ அவங்க நம்பரையேத் தா” என்று வாங்கிக் கொண்டான்.
அந்த நேரத்தில் அங்கே சிறு சலசலப்பு ஏற்பட்டது. என்ன என்பது போல பார்த்தவனிடம் வந்த செந்தில், “எண்பது வயசு தாத்தா ஒருத்தர் தவறிட்டாராம். அதனால கோவில் நடை சாத்தப் போறாங்களாம். தாத்தாவோட மூத்த மகன் சென்னைல இருக்குறாராம். அவர் வந்து, எல்லா காரியமும் முடிய எப்படியும் நாளைக்கு சாயங்காலம் ஆகிடும் போல. அதனால, இதோட திருவிழா முடிஞ்சுதுன்னு தான் நினைக்கிறேன்” என்றான்.
“ஆக, ஒரு தாத்தா சிவலோக பதவி அடைஞ்சு, இந்த பேத்திக்கு பிடிக்காத விஷயம் நடக்காம தடுத்திருக்கிறார்” என்று விளையாட்டாக சொன்ன ராகவன்,
“நமக்கு ஒண்ணு வேண்டாம்னு தோணிச்சுன்னா, அதை தைரியமா சொல்லணும் மலர். அதனால எத்தனை பிரச்சினை வந்தாலும் கூட நம்ம முடிவுல, நின்னு சாதிக்கணும்” என்றான்.
“அடேய்… போதும்டா, உன் அட்வைஸைக் கேட்டுக் கேட்டு அந்த புள்ள காது தேய்ஞ்சுடப் போகுது” என்று கிண்டலடித்த செந்தில், தன்னைத் தானே, மலரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு, “கவலப்படாத ம்மா, உனக்கு நாங்க இருக்கோம்… அடிச்சு தூள் கிளப்பிடலாம்” என்றான் உற்சாகமாக.
பொதுவாக ஊருக்குள் இந்த மாதிரி துக்க சம்பவங்கள் நடைபெற்றால், அதன் அந்திமகாரியங்கள் முடிவடையும் வரை, கோவிலைத் திறக்கமாட்டார்கள். அதனால் கோயில் திருவிழா அத்தோடு நிறுத்தப்பட்டது.
அத்திப் பூத்தாற்போல எப்போதாவது இப்படி நடப்பது தான் என்பதால், கரகாட்ட கலைஞர்கள் உட்பட எல்லா கலைஞர்களும் கிளம்பிச் சென்றார்கள்.
ஆக, இம்முறையும் விருப்பமில்லாமல் கரகத்தை தலையில் சுமக்கும் நிலை வராமல் தப்பித்துக் கொண்டாள் மலர்விழி.
நாட்களும் கடகடவென்று உருண்டோட, இதோ, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவும் வந்துவிட்டது. ஏற்கனவே மலர்விழியின் தேர்வுஎண்ணை ராகவன் வாங்கி வைத்திருந்ததால், அவனே தேர்வு முடிவைப் பார்த்தான்.
பார்த்தவனுக்கு அத்தனை ஆச்சர்யம். ஆமாம்… நல்ல மதிப்பெண்கள் எடுத்து மலர்விழி தேர்வில் வெற்றி பெற்றிருந்தாள். அதிலும் கணிதத்தில் தொன்னூற்று ஒன்பது விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருந்தாள்.
‘படிப்பதற்கு ஏற்ற சரியான சூழ்நிலை இல்லாத போதே இந்தப்பெண் இத்தனை மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாள் என்றால், அவள் திறமை சாதாரணமானது அல்ல’ என்று நினைத்த ராகவன், மலர்விழியின் படிப்பிற்கு உதவி செய்தே ஆகவேண்டும்’ என்ற தன் முடிவில் இன்னமும் உறுதியானான்.
அன்று மாலை, சுந்தரின் அப்பா போனிலிருந்து ராகவனுக்கு அழைத்தாள் மலர்விழி. “ஹலோ…” என்ற ஒற்றை அழைப்பிலேயே மலர்விழியைக் கண்டுகொண்ட ராகவன், “வாழ்த்துகள் மலர்விழி… இவ்வளவு மார்க்ஸ் வாங்குவன்னு நான் நினைக்கல.” உண்மையை மறைக்காமல் சொல்ல, மெல்லச் சிரித்தாள் மலர்விழி.
“இப்போ சொல்லு, என்ன கோர்ஸ் சேரப்போற?” ஏதோ தானே கல்லூரியில் சேரப்போவது போல அத்தனை உற்சாகம் ராகவனிடம்.
“பிஎஸ்சி மேத்ஸ்” என்றாள் மலர்விழி.
‘தன்னைப் போலவே தேர்ந்தெடுத்திருக்கிறாள்’ என்று நினைத்த ராகவன், “ஏன்?” என்று கேட்டான்.
“எனக்கு டீச்சர் ஆகணும். இத்தனை பேர் முயற்சியால கிடைக்கிற இந்த படிப்பை, நான் நிறைய பேருக்கு சொல்லிக் குடுக்கணும்” என்றாள்.
“சரிங்க தீச்சர்.” உற்சாகமான மனநிலையில் இருந்த ராகவன் கேலியில் இறங்க, “வந்து…” என்று இழுத்தாள் மலர்விழி.
“என்னாச்சு தீச்சர்?”
“இல்ல… ஃபீஸ் ரொம்ப ஆகுமே? நீங்க எப்பிடி?” முடிக்காமல் இழுத்தாள் மலர்விழி.
“மலர்விழி… உன்னோட மார்க்குக்கு கவர்ன்மென்ட் காலேஜ்லயே சீட் கிடைச்சிடும். அங்க ஃபீஸ் ரொம்ப கம்மி. அப்புறம் ஸ்காலர்ஷிப், முதல் பட்டதாரிக்கு கிடைக்கிற சலுகைகள்னு நிறைய இருக்கு. அதனால கவலைப்படாத” என்று நிதானமாக சொன்னான்.
அரசாங்க கல்லூரி கட்டணமான சில ஆயிரங்கள், மலர்விழியை மிரட்டியது போல, வசதியான வீட்டு பையனான ராகவனை மிரட்டவில்லை. ‘ஆரம்பத்தில் எப்படியாவது சமாளித்து விட்டால் போதும். அதன்பிறகு, ஸ்காலர்ஷிப் இப்படி ஏதாவது ஏற்பாடு செய்து விடலாம்’ என்ற எண்ணம் தான் அவனுக்கு.
மலர்விழி, கல்லூரியில் சேருவதற்கான நடைமுறைகள் அனைத்தும் முடிந்து, திருநெல்வேலி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்த தேதியில் அட்மிஷன் என்ற நிலைக்கு வந்திருந்தது.
அந்த சூழ்நிலையில் ஒருநாள், ராகவனுக்கு ஃபோன் செய்த மலர்விழி, “அம்… அம்மா, ரெண்டு நாளுக்கு முன்ன” என்றவள், அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாமல் தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்தாள்.
அவள் அழுகையே என்ன நடந்திருக்கும் என்பதை ராகவனுக்குச் சொல்ல, “சாரி மலர், ஸ்டே ஸ்ட்ராங்” என்று வார்த்தையாலே ஒத்தடம் கொடுக்க முயன்றான்.
ஒருமூச்சு அழுது ஓய்ந்தவள், “எ… எனக்கு, எங்க மாமா வீட்டு ஆள்களோட இருக்க வேண்டாம். நான் எங்க இருக்குறேன்னு கூட அவங்களுக்கு தெரியவேண்டாம். தெரிஞ்சா கண்டிப்பா என்னை நிம்மதியா இருக்க விடமாட்டாங்க. என்னை எங்கயாவது வெளியூர் காலேஜ்ல சேர்த்து விடுறீங்களா?” என்று தயங்கித் தயங்கி கேட்டாள்.
ராகவனோ, தயங்காமல் சரி என்றான்.
ஆனால், பெரும்பான்மையான கல்லூரிகளில், புதிய சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்யும் கடைசிநாட்கள் முடிவடைந்திருக்கும் இந்த தருணத்தில், அட்மிஷனுக்காக எதிர்கொள்ள வேண்டிய நடைமுறை சிக்கலோடு, அதிகப்படியான பணத்தேவையும் ராகவன் கண்முன்னே வந்து நின்று மிரட்டியது.
‘வாக்கு கொடுத்தபடி, இந்த பெண்ணின் கல்வி தாகத்தை எப்படி தீர்த்துவைக்கப் போகிறேன்?’ யோசித்தபடி கழுத்தை தடவியவனின் கையில், ஐந்து பவுன் தங்கச் சங்கிலி தட்டுப்பட்டு, “நான் இருக்க கவலை எதற்கு?” என்றது.
நொடியில் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து கொண்ட ராகவனுக்கு, “இது எங்க அப்பா செயின், யாருக்கும் குடுக்காம உங்கிட்ட குடுத்திருக்கேன். கவனமா போட்டுக்கணும்.” எம்எஸ்ஸி க்காக கல்லூரிக்கு சென்ற முதல்நாள், தன் கழுத்தில் செயினை போட்டுவிட்டு அப்பா சொன்ன வார்த்தைகள் மறக்காமல் ஞாபகத்துக்கு வந்தது.