அத்தியாயம் 19

இராஜஸ்தான் மாநிலத்தில், ஜெய்ப்பூருக்கு அருகேயுள்ள ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தின் கலெக்டர் பங்களாவை நோக்கி சென்று கொண்டிருந்த வாடகைக் காரின், பின்னிருக்கையில் அமர்ந்திருந்தான் ராகவன். ட்ரைவருக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தான் கதிரேசன்.

 கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த ராகவனின் மனமோ, உணர்வுகளின் பிடியில் அகப்பட்டு கொந்தளித்துக் கொண்டிருந்தது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் கலெக்டர் என்ற தலைப்பு நேற்றிரவு ராகவனை பிடித்திழுக்க, அந்த செய்தியை தள்ளிவிடாமல் பார்த்தவனின் உலகமே ஒருநிமிடம் தலைகீழாகத்தான் சுழன்றது.

அந்த பெண் கலெக்டராக மலர்விழியை ஒருநொடி கூட சிந்தித்திராத ராகவனின் உடலில் சட்டென்று ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. வேகவேகமாக கட்டிலில் எழும்பி அமர்ந்தவன், கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு மறுபடியும் அந்த புகைப்படத்தைப் பார்த்தான்.

அப்போதும் மாறாத புன்னகையோடு அவனைப் பார்த்து சிரித்தபடி இருந்தாள் புகைப்படத்திலிருந்த மலர்விழி. அவளோடு, அவனையே உரித்துவைத்தாற் போன்ற தோற்றத்தில் சிறுவனையும், அவர்கள் இருவருடைய சாயலில் சிறுமியையும் கண்ட ராகவன் எப்படி உணர்ந்தான் என்று கேட்டால், சத்தியமாக அவனுக்கேத் தெரியாது.

மலர்விழியுடைய குடும்பம் என்று ஊடகம் சொல்லிய நபர்களையும் உற்றுப் பார்த்தான் ராகவன். அதில் வயதான ஆணை அவனுக்கு தெரிந்திருந்தது. அவரை வைத்து, உடனிருந்தவர்களை அவனால் அனுமானிக்க முடிந்தது.

ஆனால், அவர்களோடு மலர்விழி எப்படி என்று தான், அவனால் அனுமானிக்க முடியவில்லை.

சில நிமிடங்களுக்கு முன்னர் தான் அந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. வீடியோவை ஓடவிட்டு முழுவிஷயத்தையும் தெரிந்து கொண்ட ராகவன், தம்பியை அழைத்தான்.

அண்ணன் காட்டிய வீடியோவைப் பார்த்ததும் கதிரேசனுக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது. ‘தவிக்கும் குடும்பம்’ என்ற வார்த்தையும் அதற்கு தகுந்தாற்போல இரண்டு பிள்ளைகளோடும், குடும்ப உறுப்பினர்களோடும் நின்றிருந்த மலர்விழியின் புகைப்படத்தையும் கண்டவன், குழப்பத்தோடு அண்ணனைப் பார்த்தான்.

“பிள்ளைங்க ரெண்டு பேரும் என்னோட பிள்ளைங்கன்னு பாத்தாலே உனக்கு தெரியலையா டா?” என்று குறைபட்டுக் கொண்ட ராகவன், மலர்விழியோடு நின்றிருந்தவர்களை இன்னாரென்று கதிரேசனுக்கு சொன்னான்.

“ண்ணா… உனக்கு ட்வின் பேபீஸ் இருக்காங்க…” சத்தமாகச் சொன்ன கதிரேசன், உற்சாக மிகுதியில் தமையனைக் கட்டிக்கொண்டான்.

கதிரேசனின் உற்சாகக் குரலில் வீடே விழித்துக் கொண்டது. ஆளாளுக்கு அந்த வீடியோவைப் பார்த்து ஆனந்தப்பட்டு கொண்டாலும், பழமைவாதிகளின் பிடியில் மலர்விழி இருக்கிறாள் என்ற செய்தி அவர்களை முழுமையாக மகிழ்ச்சியை அனுபவிக்க விடவில்லை.

“ண்ணா… அதெல்லாம் கவர்ன்மென்ட் பாத்துட்டு சும்மா இருக்காது. சீக்கிரமா ஆக்ஷன் எடுத்து அண்ணியை மீட்டுருவாங்க. கிளம்பு, நாம மொதல்ல அங்க போலாம்.” ஒருவிதமான பதட்டத்தில் நின்றிருந்த தமையனை தட்டிக்கொடுத்த கதிரேசன், அண்ணனோடு கிளம்ப ஆயத்தமாக, தான் மட்டும் சென்று வருவதாகக் கூறினான் ராகவன்.

ஆனால், ராகவனின் மறுப்பை ஏற்றுக் கொள்ளாமல், உடன் கிளம்பியேவிட்டான் கதிரேசன்.

இரவோடிரவாக தென்காசி வந்து, அங்கிருந்து தனியார் பேருந்தில் சென்னை வந்து, அங்கிருந்து ஜெய்ப்பூருக்கு விமானத்தில் வந்து சேர்ந்திருந்தவர்கள், இதோ மலர்விழி குடியிருக்கும் கலெக்டர் பங்களாவை நோக்கி வாடகைக் காரில் பயணம் செய்யும் போது முன்மாலைப் பொழுதாகிவிட்டது.

கதிரேசன் மட்டும் உடன் வரவில்லை என்றால், இருந்த மன அழுத்தத்திற்கு காற்றை மட்டுமே உட்கொண்டு ராகவன் பயணம் செய்திருப்பானோ என்னவோ?

“அண்ணா, போய்ச்சேர இரண்டு மணி நேரம் ஆகுமாம். கொஞ்ச நேரம் அமைதியா கண்ணை மூடித் தூங்கு.” உடன்பிறந்தவனின் அலைப்புறுதல் புரிந்ததால் அக்கறையாகச் சொன்னான் கதிர்.

தம்பியின் அக்கறையான வார்த்தைகளில் அடங்கி விடும் அலைப்புறுதலா ராகவனுடையது?

 ‘ஒரு உயிர் அவனிடமிருந்து விலகி நிற்கிறது’ என்று அவன் நினைத்திருக்க, இல்லை, மூன்று உயிர்கள் என்று காலம் அவனுக்கு காட்டிக் கொடுத்ததில் அலமலந்து போய் நிற்கிறான் ராகவன்.

 காரில் ஏறும் போது, போக வேண்டிய இடத்தைச் சொன்னதும் அவர்களை யோசனையாக பார்த்த கார் ட்ரைவர், அண்ணன், தம்பி இருவரும் தமிழில் பேசிக் கொள்ளவும் தன்னுடைய உடைந்த தமிழில்,

“அந்த அம்மா சப் கலெக்டரா அந்த மாவட்டத்துக்கு வந்ததுலயிருந்து, நிறைய நல்ல நல்ல விஷயங்கள் செய்தாங்க. முக்கியமா, அங்க உள்ள சில கிராமங்கள்ல பெண் குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பாம, சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணிக் குடுக்குற வழக்கத்தை எதிர்த்தாங்க.”

“அப்பிடி நடக்க இருந்த நிறைய கல்யாணங்களை சட்டப்படி தடுத்து நிறுத்தி, அந்த பொண்ணுங்களை படிக்க வச்சிருக்காங்க. இப்போ சமீபமா, அந்த கிராமங்களுக்கு நேரடியாவே போய் குழந்தை திருமணம் தப்பு, பொண்ணுங்களை படிக்க வைங்கன்னு பிரச்சாரம் செய்ய ஆரம்பிச்சாங்க.”

“ஒரு பொண்ணு படிச்சா, அந்த பரம்பரையே படிச்சதுக்கு சமம்னு தெரியாத முட்டாப்பசங்க, கலெக்டரால அவங்களோட பாரம்பரியம், பழக்கவழக்கம், கிராமக் கட்டுப்பாடு கெட்டுப் போகுதுன்னு ஏற்கனவே அவங்க மேல கடுங்கோவத்துல இருந்துருக்கானுங்க போல. இந்த அம்மாவும் எப்பவும் போல கிராமங்களுக்கு பிரச்சாரத்துக்கு போயிருக்காங்க. அவனுங்க சந்தர்ப்பம் பாத்து தூக்கிட்டானுங்க” என்று சொல்லி முடித்தார்.

 அவருக்கு, கலெக்டர் பங்ளாவிற்கு இருவரும் செல்வதால், கலெக்டரின் உறவுக்காரர்களாக இருக்கக்கூடும் என்ற அனுமானம். அதனால் நடந்த சம்பவத்தை தானறிந்த வகையில் கூறினார்.

இது அத்தனையும் நேற்றிரவு அந்த வீடியோவில் கேட்ட தகவல்கள் தான். ஆனாலும், நேருக்கு நேராக ஒரு மனிதன் வாயிலாக கேட்கும் போது, மனைவியைக் குறித்து பெருமையாக இருந்தது ராகவனுக்கு.

அதே நேரம், மனைவி இன்னமும் வீடு திரும்பியிருக்கவில்லை என்ற செய்தி அவனை சோர்வடையவும் செய்தது.

சரியாக இரண்டு மணிநேர பிரயாணத்தில், அந்த கலெக்டர் மாளிகைக்கு முன் இருவரையும் இறக்கிவிட்டு, பேசிய பணத்தை வாங்கிக்கொண்டு சென்றார் அந்த ட்ரைவர்.

தங்கள் முன்னால் கம்பீரமாக நின்றிருந்த அந்த பங்களாவை நிமிர்ந்து பார்த்தவர்கள், கேட்டுக்கு அருகில் சென்றார்கள்.

அங்கிருந்த காவலாளி, இருவரையும் அளவிடும் பார்வை பார்த்தபடியே, “க்யா சாப்? ஆப்கோ க்யா சாஹியே?” என்றார்.

வீட்டுக்குள் இருக்கும் பெரியவரின் பெயரைச் சொல்லி, “தமிழ்நாட்டுல இருந்து ராகவன் வந்திருக்கேன்னு சொல்லுங்க” என்று திருத்தமான ஆங்கிலத்தில் சொன்னான் ராகவன்.

 ஃபோன் மூலம் தகவலை காவலாளி வீட்டுக்குள் கடத்த, அடுத்த நிமிடமே வீட்டுக்குள் இருந்தவர்கள், குடும்பமாக கேட்டுக்கே ஓடோடி வந்திருந்தார்கள்.

அவர்களில் வயதான ஆண், ராகவனைப் பார்த்து, “வாங்க தம்பி” என்று முகம் மலர வரவேற்றார். மற்றவர்களின் முகங்களும் ராகவனை வரவேற்கும் விதமாக மலர்ந்தே கிடந்தது.

 அந்த பெரியவர், வேறு யாரும் இல்லை. மலர்விழி ராகவனோடு சென்னைக்கு செல்லும் போது இரயில் நிலையம் வரை அவளை பாதுகாப்பாக கொண்டுவிட்ட தணிகாசலம் தான். ஆமாம்… மலர்விழியின் வகுப்புத் தோழன் சுந்தரின் அப்பா தணிகாலச்சலமே தான்.

அவரோடு இருப்பது அவருடைய மனைவி, மகன் சுந்தர், மருமகள் பத்மா எல்லோரும் தான். இவர்களைத் தான் ஊடகம், மலர்விழியின் குடும்பம் என்று சொன்னது.

ராகவன், தணிகாசலத்தை பார்த்திருக்கிறானேத் தவிர சுந்தரையோ, அவன் அம்மாவையோ பார்த்தது கிடையாதே. ஆனால் தணிகாசலத்தைக் கண்டுகொண்டவன், இப்படித்தான் இருக்கும் என்று யூகம் செய்து கொண்டான்.

“வீட்டுக்குள்ள வாங்க தம்பி” என்ற தணிகாச்சலம், “இது…” என்று, கதிரேசனைப் பார்த்து கேட்கவும், “தம்பி” என்றான் ராகவன்.

 கலெக்டரின் குடும்பத்தாரே கேட்டுக்கு வந்து வரவேற்றதில், வந்திருப்பவர்கள் முக்கியமான நபர்கள் என்று புரிய, விறைப்பான சல்யூட் ஒன்றை வைத்தார் காவலாளி.

“மலர் எப்போ வர்றாளாம்? தகவல் எதுவும் கிடைச்சுதா?” தன்னருகே நடந்து வந்து கொண்டிருந்த சுந்தரிடம் கேட்டான் ராகவன்.

ராகவனின் கேள்விலேயே விஷயம் தெரிந்து தான் வந்திருக்கிறான் என்பது புரிய, “இதுதான் சாக்குன்னு ஏகப்பட்ட டிமாண்ட்ஸ் வைக்கிறாங்க போல. விஷயம் சீஃப் மினிஸ்டர் வரைக்கும் போயிடிச்சி. கண்டிப்பா நாளைக்கு கூட்டிட்டு வந்துடுவோம்னு சொல்லுறாங்க” என்றான் சுந்தர்.

வீட்டுக்குள் நுழையவும், ஹாலில் நின்றிருந்த பெண்ணை, தன் மனைவி பத்மா என்று அறிமுகப்படுத்தினான் சுந்தர். அந்த பெண் கர்ப்பிணி என்பது பார்த்தவுடனே தெரியும்படியே இருந்தது அவள் தோற்றம்.

புன்னகை முகமாக கைகுவித்து வணக்கம் வைத்த அந்த பெண் பத்மா, “வாங்க ண்ணா” என்று வரவேற்க, அவள் வரைக்கும் தான் அறிமுகமே என்று மனதில் குறித்துக் கொண்ட ராகவனின் கண்கள் ஆவலோடு அந்த ஹாலை தூழாவியது.

ராகவனின் பார்வையை புரிந்து கொண்டது போல, “கபி, நாச்சி, இரண்டு பேரும் இங்க வாங்க… வந்து, யார் வந்துருக்கான்னு பாருங்க.” பக்கத்திலிருந்த அறையைப் பார்த்து அழைத்தாள் பத்மா.

“பையன் பெயர் கபிலன், அவன் தான் மூத்தவன். பொண்ணு காமாட்சி. நாங்க நாச்சி ன்னு கூப்பிடுவோம்.” மெதுவாகச் சொன்னார் சுந்தரின் அம்மா சரோஜா.

‘பொண்ணுக்கு அவ அம்மா பெயரை வச்சிருக்கா.’ அந்த நேரத்திலும் நினைத்துக் கொண்டான் ராகவன்.

பத்மாவின் அழைப்பைத் தொடர்ந்து, “யார் வந்துருக்காங்க ஆன்டி?” மழலைக்குரலில் கேட்டபடியே, தென்றலாக அறையிலிருந்து தாவி வந்தார்கள் ராகவனின் புத்திர செல்வங்கள்.

“யாருன்னு நீங்களே சொல்லுங்க பாப்போம்.” பத்மா பிள்ளைகளிடமே கேட்க,

ஆவலாக இவர்களை நோக்கிய மழலைகளின் கண்கள் ராகவனின் முகத்தில் நிலைத்தது, பின்னர் சிரித்தது.

“ஹைய்ய்… அப்பா…” சட்டென்று சொல்லிய கபிலன் எந்த தயக்கமும் இன்றி ராகவனுக்கு அருகே ஓடிவர, பரவசநிலையில் நின்றிருந்த ராகவன் பாய்ந்து சென்று மகனைத் தன் கைகளில் அள்ளிக் கொண்டு முத்தமழை பொழிந்தான்.

தகப்பனுக்கு குறையாத தேடல் சிறுவனிடமும் இருந்தது போல. அவனும் தகப்பனை கழுத்தோடு கட்டிக்கொண்டு பதிலுக்கு முத்தமிட, பார்த்துக் கொண்டிருந்தவர்களின் கண்களில் கண்ணீர் படலமே.

“அண்ணா… மேடத்தைப் பாருங்க.” அண்ணனின் தோளை லேசாகத்தட்டி அவனை ஒருநிலைப்படுத்திய கதிரேசன், ராகவனின் கவனத்தை, அவன் மகள்மீது திருப்பினான்.

ராகவனுக்குமே அப்போதுதான் இன்னொரு சொர்க்கம் தன் கைசேராதது ஞாபகத்துக்கு வர, மகள் மீது பார்வையை வீசினான். அவளோ, பத்மாவின் காலைக் கட்டிக் கொண்டு அவள் பின்னாலிருந்து தகப்பனை எட்டிப் பார்த்தாள்.

“பட்டூ… நம்ம அப்பா தான், கிட்ட வா.” தகப்பனுக்காக, தங்கையிடம் பரிந்து கொண்டு வந்தான் கபிலன்.

தகப்பனிடம் செல்ல ஆசையிருந்தாலும், தயக்கமும், கூச்சமும் போட்டிபோட, பத்மாவிடம் தூக்கச் சொல்லி அவசரமாக கைகளை உயர்த்தினாள் ராகவனின் பெண்ணரசி.

அத்தனைப் பெரிய வயிற்றை வைத்துக் கொண்டு, எந்த முகச்சுழிப்பும் இல்லாமல் நான்கு வயது பிள்ளையை இடுப்பில் தூக்கிக் கொண்ட பத்மா, “மொதல்ல கொஞ்சம் வெட்கப்படுவா ண்ணா, கொஞ்சம் நேரம் போயிடிச்சின்னா தன்னாலே ஒட்டிப்பா” என்றாள் ராகவனை சமாதானப்படுத்தும் விதமாக.

“உக்காருங்க தம்பி.” இத்தனை நேரமாகியும் நின்று கொண்டேயிருந்தவர்களைப் பார்த்து தணிகாச்சலம் சொல்ல, மகனை மடியில் வைத்தபடியே அமர்ந்த ராகவன்,

தன் அருகில் அமர்ந்த கதிரேசனை மகனிடம் காட்டி, “இது…” என்று தொடங்க, “சித்தப்பூ” என்று முடித்தான் மகன்.

மகனை முகம் கொள்ளா புன்னகையோடு ராகவன் பார்க்க, “நல்லா ட்ரெயினிங் குடுத்து வச்சிருக்காங்க ண்ணா, உங்க வைஃப்” என்று கண்களை உருட்டினான் கதிரேசன். சித்தப்பன் தன்னை புகழ்கிறான், என்றெண்ணி,

 “ஹ்ம்ம்… அம்மா உங்க எல்லாரோட ஃபோட்டோஸும் காமிச்சிருக்காங்க சித்தப்பூ, இல்ல பட்டூ” என்று, தன் பேச்சில் தங்கையையும் கபிலன் இணைத்துக் கொள்ள, அந்த இறுக்கமான சூழ்நிலையில் கூட பெரியவர்களின் முகங்களில் புன்னகை எட்டிப் பார்க்கத்தான் செய்தது.

 “ப்பா… உங்க வேலை எல்லாம் முடிஞ்சிடிச்சா?” தகப்பனின் தாடையைப் பிடித்து கபிலன் கேட்க, புரியாமல் புருவம் உயர்த்தினான் ராகவன்.

“அப்பாக்கு வேலை இருக்கு, முடிஞ்சதும் வருவாங்கன்னு அம்மா சொல்லியிருக்காங்க.” மகன் விளக்கம் கொடுக்க, முகம் இறுகிப் போனது ராகவனுக்கு.

நேற்று இரவு வரை, நான்கு வயது பிள்ளைகள் இருவருக்கு தான் தகப்பன் என்பது தெரியாமல் இருந்திருக்கிறோம் என்று நினைக்கும் போது, அவமானமாக இருந்தது ராகவனுக்கு. அதற்கு காரணமான மனைவி மட்டும் இப்போது கையில் கிடைத்தால் கன்னம் கன்னமாக அறைந்து தள்ளும் ஆத்திரம் வந்தது.

‘அவள் தான் புத்தி கெட்டு வீட்டை விட்டு வெளியே வந்திருந்தாள் என்றால், உடன் இருந்தவர்களாவது தனக்கு தகவல் தந்திருக்க வேண்டாமா?’ என்று, தணிக்காசலம் குடும்பத்தினர் மீதும் கோபம் வந்தது.

ஆனால் வந்த கோபத்தை காட்டமுடியாமல் மடியில் மகன் இருந்தான். ஒரு கட்டத்திற்கு மேல் முடியாது என்பது போல, “மக்களை வெளியே அழைத்துச் செல்” என்று பார்வையாலே தம்பியிடம் சொன்னான் ராகவன்.

அதைச் சரியாக புரிந்து கொண்ட கதிர், “செல்லம், எங்கிட்ட வர்றீங்களா? சித்தப்பா நிறைய ஃபோட்டோஸ் காட்டுறேன்.” தகப்பனின் மடியில் உரிமையோடு சாய்ந்து அமர்ந்திருந்த கபிலனுக்கு ஆசை காட்டிய கதிர், தனது ஃபோன் கேலரியைத் திறந்து ராகவி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்திருந்த வீடியோவை காண்பித்தான்.

ஜெகஜோதியாக மின்னிய அந்த வீடியோவில் கவரப்பட்ட கபிலன் மெதுவாக கதிரேசன் மடிக்கு வந்தான். அவனை கைகளில் அள்ளிக்கொண்ட கதிரேசன் வீட்டைவிட்டு வெளியே செல்ல, பத்மாவின் இடுப்பிலிருந்த குட்டி காமாட்சியும், அண்ணன் பின்னால் செல்ல வேண்டும் என்று முகத்தைச் சுருக்கினாள். அப்போதைக்கு அதுதானே வேண்டும் அவர்களுக்கும். பிள்ளையோடு பத்மாவும் வெளியே சென்றாள்.

 வெளியே செல்லும் போது திரும்பித் திரும்பி தகப்பன் மீது பார்வை வேறு அவன் பெண்ணரசிக்கு. அந்த நொடியே அவளை அள்ளி உச்சிமுகரும் ஆவல் ராகவனுக்கு வந்தாலும், ‘இத்தனை வருடங்கள் இப்படியொரு உறவு இருக்கிறது என்று தெரியாமலேயே இருந்த தனக்கு, இன்னும் கொஞ்ச நேரம் பொறுமையாக இருக்க முடியாதா?’ என்றும் தோன்றவே, மகளை கலவரப்படுத்த முயலவில்லை.

“மலர் இத்தனை வருஷமா உங்க கூடத்தான் இருந்துருக்கா. ஒருநாள் கூடவா, அதை எனக்கு தெரியப்படுத்தணும்னு உங்களுக்கு தோணல?” பிள்ளைகள் இருவரும் வெளியே சென்றிருந்த அடுத்த வினாடியே ராகவனிடமிருந்து வந்திருந்த கேள்வி, தணிகாசலத்தை குற்றம் சாட்டும் தொனியிலேயே இருந்தது.

“இல்ல… ஒரு பொண்ணைப் பெத்த தகப்பனா, மலர்விழி சொன்ன காரணம் எனக்கு சரியாப்பட்டதால, எனக்கு உங்ககிட்ட சொல்லணும்னு உண்மையிலேயேத் அப்போத் தோணல. ஆனா, இப்போ கொஞ்சநாளா, ராகவன் தம்பியை கூப்பிடப் போறேன்னு சொல்லிட்டே இருந்தேன். நீங்களும் வந்துட்டீங்க.” தயக்கமின்றி பதில் சொன்னார் தணிகாசலம்.