“ராகவா” என்ற அக்காவின் அழைப்பில் பரபரப்பாக வாசலுக்கு வந்து ஆனந்தியை வரவேற்ற ராகவனுக்கு, அவள் பேச்சிலும், பார்வையிலும் இருந்த மாறுபாடு, ‘ஏதோ சரியில்லை’ என்றே எண்ணத் தோன்றியது.
யோசனையாக நெற்றியைச் சுருக்கியவன், என்னவாக இருந்தாலும் வீட்டுக்குள் வைத்து பேசிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில், “வீட்டுக்குள்ள வா க்கா” என்று தமக்கையின் கைப்பிடித்து வீட்டுக்குள் அழைத்தான்.
அவளோ, “இந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சாலே பாவம்” என்று கோபமாக கைகளை உதற, “என்னாச்சு க்கா? எதுக்கு இவ்வளவு கோபம்?” என்று கேட்டான் ராகவன்.
“ஆஹாஹா… செய்யுறதை எல்லாம் செய்துட்டு, புரியாத மாதிரி கேள்வி வேற கேக்குறியா?” என்று சிலிர்த்துக் கொண்ட ஆனந்தி, மலர்விழியை முறைத்துப் பார்த்தபடி,
“இந்த அழகுராணியை நீ கல்யாணம் செய்ததால, என் மாமியார், நீ இங்க வாழ்ந்த வரைக்கும் போதும்னு என்னையும், எம்பிள்ளைங்களையும் அனுப்பி வச்சிட்டாங்க” என்றாள் குற்றச்சாட்டும் குரலில்.
“என்னக்கா சொல்லுற?” உச்சபட்ச அதிர்ச்சியில் வந்தது ராகவனிடமிருந்து கேள்வி.
“ம்ம்… உன் தம்பி ஒரு ஆட்டக்காரியை கல்யாணம் செய்துட்டு வந்திருக்கானாம். உங்க வீட்டை எங்களோட சம்மந்தார் வீடுன்னு சொல்லவே எங்களுக்கு அசிங்கமா இருக்கு, நீ உங்க அப்பன் வீட்டுக்கு போ ன்னு என்னை விரட்டி விட்டுட்டாங்க” என்ற ஆனந்தியின் கண்களில், கண்ணீர்.
“இது என்ன பைத்தியக்காரத்தனமா இருக்கு? எதுக்கு என் வாழ்க்கையோட, உன்னோட வாழ்க்கையை இணைச்சு பிரச்சினை பண்ணுறாங்க அந்த அம்மா?” எரிச்சல் குரலில் கேட்ட ராகவன்,
“அக்கா மேல அவ்வளவு அக்கறை இருக்குறவன், கல்யாணம் பண்ணுறதுக்கு முதல்லயே யோசிச்சிருக்கணும். சும்மா உன் இஷ்டத்துக்கு கல்யாணம் செய்துட்டு, இப்போ இருக்குற பிரச்சனை போதாதுன்னு, இன்னும் கொஞ்சம் இழுத்துவிடப் பாக்குறியா?” சட்டென்று தம்பியின் கையிலிருந்த ஃபோனை பிடுங்கிக்கொண்டு சண்டைக்கு வந்தாள் ஆனந்தி.
“இப்போ என்ன க்கா, உங்க பிரச்சினை? என் மனசுக்கு பிடிச்ச பொண்ணு, உன் வீட்டு, ஜெயந்தி வீட்டு கன்னுக்குட்டிக்கு வரைக்கும் பிடிச்சவளா இருக்கணுமா? இல்லைன்னா நான் கல்யாணம் பண்ணிக்கவே கூடாதா?”
ஜெயந்திக்கு வரன் தேடும் போது, தங்கள் திருமணம் ஒருவேளை பிரச்சினையை ஏற்படுத்தலாம் என்று ராகவன் நினைத்திருக்க, திருமணம் முடிந்து இரண்டு பிள்ளைகளுக்கு தாயான அக்கா வாழ்க்கையில் இப்படி ஏற்படும் என்று நினைத்துக் கூட பார்க்காத ராகவன், தன் நினைப்புக்கு மாறாக நடக்கவும் கோபத்தில் குதித்தான்.
“அப்பிடி எல்லாம் யாரும் சொல்லலை. ஆனா, பொண்ணு நம்மளைப் போலவே இருக்கணும்னு சொல்லுறது ஒண்ணும் தப்பு இல்லைன்னு எனக்கு தோணுது” என்றாள் ஆனந்தியும்.
“ஏன்? நம்மளை மாதிரி ஒரு தலை, இரண்டு கை, இரண்டு கால் ன்னு சாதாரணமாத் தானே எம்பொண்டாட்டியும் இருக்கா. இல்ல, வித்தியாசமா தெரியிற மாதிரி அவளுக்கு மட்டும் தலைல கொம்பு எதுவும் மொளைச்சிருக்கா என்ன?” கொஞ்சம் கோபமாகவே வந்தது ராகவனிடமிருந்து வார்த்தைகள்.
“ராகவா, நீ விதண்டாவாதமா பேசுற டா.” சலித்துக் கொண்டாள் ஆனந்தி.
“யாரு? நான் விதண்டாவாதமா பேசுறனா? எங்க, உன்னை இங்க அனுப்பி வச்சிட்டு உன் வீட்டுக்காரர் என்ன பண்ணுறார்? அவருக்கு அறிவு வேண்டாம், அடுத்தவன் வீட்டு படுக்கையறையை எட்டிப் பாக்கக்கூடாதுன்னு அவங்க அம்மாகிட்ட சொல்ல வேண்டாம்? இதுல வயசானவங்க தான் பேசுறாங்கன்னா, படிச்ச நீயும் அசால்ட்டா ஆட்டக்காரின்னு சொல்லுற. உங்களை எல்லாம் என்ன பண்ணுறதுன்னு எனக்கு தெரியல.” கடுகடுத்தான் ராகவன்.
“பாத்தியா? என் வாழ்க்கையே போச்சுன்னு நான் வந்து நிக்குறேன். ஆனா, அவளை நான் ஆட்டக்காரின்னு சொன்னது தான் உனக்கு பெருசா தெரியுது, இல்ல…” கண்கள் கலங்க, மூக்கை உறிஞ்சினாள் ஆனந்தி.
அத்தனை சொல்லியும் மறுபடியும் அதே வார்த்தையைச் சொல்லிய ஆனந்தியைப் பார்த்து, “அக்கா…” என்று பல்லைக் கடித்தான் ராகவன்.
“இப்போ நான் என்ன செய்யணும்னு நீங்க எல்லாரும் நினைக்குறீங்க க்கா. மலரை நான் விட்டுடணுமா? அப்போ தான் உங்களுக்கெல்லாம் சந்தோஷமா? ஆனா, அது மட்டும் இந்த ஜென்மத்துல நடக்காது. நீயும், உன் மாமியார் சொல்லுற எல்லாத்துக்கும் தலையைத் தலையை ஆட்டி குனிஞ்சு குடுக்காத க்கா. அப்புறம் உன்னோட சுயத்தையே தொலைக்க வச்சிடும் அந்த அம்மா. கொஞ்ச நாள் அமைதியா நம்ம வீட்டுல இரு. பொண்டாட்டி அருமை தெரிஞ்சு தன்னால கூப்பிட வருவார் உன் வீட்டுக்காரர்” என்றவன்,
“மலர், அக்காவுக்கு டீ போட்டு குடுத்துட்டு, நீ ஸ்கூலுக்கு கிளம்பு” என்றான்.
மறுத்துப்பேச முடியாத குரலில் ராகவன் சொல்ல, சமையறைக்கு செல்லத் தொடங்கினாள் மலர்விழி.
“அதானே… என் தம்பிகிட்ட சொன்னா ஏதாவது செய்வான்னு வந்தா, அவன் இந்த மலரோட புருஷனாகி ஒரு வாரம் ஆகிப்போச்சுன்னு இப்பல்ல தெரியுது. அதுவும் ஹனிமூ…ன் போய்ட்டு வந்த புருஷன், அப்புறம், நாங்கல்லாம் கண்ணுக்கு தெரிவோமா என்ன?” என்று நொடித்துக் கொண்ட ஆனந்தி,
சத்தமாக முணுமுணுத்தபடியே, கையிலிருந்த ராகவனின் ஃபோனை அங்கிருந்த நாற்காலியில் விட்டெறிந்து விட்டு, வீட்டை விட்டு வெளியேறினாள்.
ஏற்கனவே பிரச்சினை வேறு ரூபம் கொண்டு வந்ததில் அரண்டு போயிருந்த மலர்விழிக்கு, ஆனந்தி சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகள் மனதை வசமாக பதம் பார்க்க, கலங்கிப் போன கண்களோடு கணவனைப் பார்த்தாள்.
“அடுத்து நீ தொடங்கிடாத மலர். தீர்க்க முடியாத பிரச்சனைன்னு இந்த உலகத்துல எதுவுமே கிடையாது. பாத்துக்கலாம். சீக்கிரம் கிளம்பி வா, ஸ்கூல்ல உன்னைக் கொண்டு விட்டுட்டு, நான் அத்தானைப் போய் பாத்துட்டு வரேன்” என்றான் ராகவன்.
திருமணத்திற்கு பிறகு, மலர்விழி இன்றுதான் வேலைக்கு செல்வதால், அவளை பள்ளியில் கொண்டு விட்டுவிட்டு ராகவன் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்றும், சாயங்காலம் அழைத்து வரவேண்டும் என்றும் இருவரும் ஏற்கனவே பேசியிருந்தார்கள்.
ஆனால், ஆனந்தியின் கணவன் மாதவனை, அவனுடைய கடையில் சென்று சந்திக்க வேண்டும் என்று ராகவன் இப்போது முடிவெடுத்து கொண்டதால், அவன் இன்றும் விடுமுறை எடுக்க வேண்டியதாயிற்று.
உண்டோம் என்று, பெயருக்கு இருவரும் உண்டு முடித்து, விரைவாகவே புறப்பட்டுக் கொண்டார்கள். பைக்கில் தங்கள் வீட்டைக் கடந்து செல்லும் போது, அங்கே நின்றிருந்த அம்மா, முகத்தை திருப்பிக் கொண்ட வேகத்திலேயே அவரின் கோபத்தின் அளவை புரிந்து கொள்ள முடிந்தது ராகவனால்.
மலர்விழியின் பள்ளிக்கு வந்து அவளை அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடாமல், அவள் கூடவே வந்து பள்ளியின் முதல்வரை சந்தித்து, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டே சென்றான் ராகவன்.
அது, தமிழ்நாடு முழுவதும் பிரபலமாக இயங்கி வரும் ஒரு குழுமத்தின் கீழ் உள்ள பள்ளி. ஏற்கனவே தேவையான அளவு கணித ஆசிரியர்கள் அங்கே இருந்த போதும், மலர்விழியின் சான்றிதழ்களைக் கண்டு அவளை விட்டுவிட மனமின்றி, அவளையும் கணித ஆசிரியராக நியமனம் செய்திருந்தது நிர்வாகம்.
பணியில் சேர்ந்த குறுகிய நாட்களில் மலர்விழியின் திறமை, பணியில் அர்ப்பணிப்புடன் செயல்படுவது எல்லாம் சேர்ந்து, அவளை நிர்வாகத்திற்கு பிடித்தவளாகவும் மாற்றியிருந்தது. ஆனால், அதுவே அங்கிருந்த அனேக ஆசிரியர்களுக்கு மலர்விழியை பிடிக்காமல் போக காரணமாகவும் அமைந்து விட்டது.
இத்தனை நாட்களில், மலர்விழிக்கு திருமணம் நடந்திருந்தது அரசல்புரசலாக பள்ளியில் எல்லோருக்குமே தெரிந்திருந்தது.
கழுத்தில் புத்தம்புது மஞ்சள் கயிறும், நெற்றி வகிட்டில் குங்குமமும் அணிந்து, ஸ்டாஃப் ரூமை நோக்கி சென்ற மலர்விழிக்கு, ஆர்வமிகுதியில் ஒருசில மாணவர்கள் கூட தங்கள் வாழ்த்துகளைச் சொன்னார்கள். முகம் மலர அவளும் ஏற்றுக் கொண்டாள்.
மலர்விழி ஸ்டாஃப் ரூமுக்குள் நுழையவும், அவள் வயதையொத்த மூன்று பெண் ஆசிரியைகள் அவள் கையைப் பிடித்துக்கொண்டு தங்கள் வாழ்த்துகளை மனதாரச் சொன்னார்கள். மூன்று பேருமே மலர்விழியோடு நட்பு பாராட்டுபவர்கள்.
அங்கிருந்த மற்றவர்கள் மலர்விழிக்கு வாழ்த்துகள் சொன்னாலும், ஒரு அளவிடும் பார்வையும், இதழ்களில் ஏளனச் சிரிப்புமே. காரணம், மலர்விழியின் குடும்பப் பிண்ணனி இத்தனை நாட்களில் அவர்களுக்கு தெரியவந்திருந்தது.
மலர்விழியைப் பற்றித் தெரியவும், ஏதோ தங்களைவிட மலர்விழி கீழானவள் என்ற எண்ணமே அவர்களுக்கு. அதனாலேயே அந்த ஏளனச் சிரிப்பு.
நாற்பதுகளின் தொடக்கத்தில் இருந்த ஒரு ஆசிரியை நேரிடையாக மலர்விழியிடமே, “டீச்சர், உங்க அம்மா கரகாட்டம் ஆடுறவங்களாமே! அப்படியா?” அப்பாவியாக விழிகளை விரித்து கேட்டார்.
“ஆமா டீச்சர்.” அநாவசியமான உடல்மொழிகள் எதுவும் இன்றி, நிமிர்வாக மலர்விழி பதில் சொல்ல, கேள்வி கேட்டவருக்கு சப்பென்று ஆகிப்போனது.
அத்தோடு விட மனமின்றி, “உங்களுக்கு கரகம் ஆடத் தெரியுமா? எங்கயாவது ஆடி இருக்கீங்களா?” கண்களும் இதழ்களும் ஒருவித வன்மத்தில் மின்ன கேட்டார் அதே ஆசிரியை.
“ம்ம்… நான் நல்லா கரகம் வச்சி ஆடுவேன். ஆனா, எங்கயும் ப்ரோக்ராம் பண்ணுனது கிடையாது.” உன் கேள்வி என்னை எதுவுமே செய்துவிட முடியாது என்ற ரீதியில் மலர்விழியின் பதிலிருந்தது.
ஒரு வினாடியாவது மலர்விழியின் முகத்தில் அவளுடைய இயலாமையை பார்த்துவிட வேண்டும் என்று நினைத்த அற்பப்பதருக்கு அந்த நிமிர்வை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.
எனவே, “உங்க அம்மா தொழிலை, நீங்க ஏன் செய்யல டீச்சர்?” என்று அல்பத்தனமாக அடுத்த கேள்வியைக் கேட்டார் அந்த ஆசிரியை.
அவரின் நோக்கம் புரிந்து, சில வினாடிகள் தீர்க்கமாக அவரைப் பார்த்த மலர்விழி, “உங்க அம்மா என்ன பண்ணுறாங்க டீச்சர்?” என்று பதில் கேள்வி எழுப்பினாள்.
“அது…” பதில் சொல்ல முடியாமல் இழுத்தது அந்த அரைவேக்காடு.
“கல்யாண வீட்டுல சமைக்கிறவங்களுக்கு ஹெல்ப் பண்ண போவாங்க.” மலர்விழியின் நட்பு ஆசிரியையிடமிருந்து பதில் வந்திருந்தது.
“நீங்க ஏன், உங்க அம்மா தொழிலையே செய்யாம டீச்சர் ஆனீங்க?” பதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற ரீதியில் அந்த ஆசிரியையை மலர்விழி பார்க்க, பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார் அந்த பெண்.
“ஹாங்… அப்பிடித்தான், பெத்தவங்க செய்யுற தொழிலைத் தான், பிள்ளைங்க செய்தாகணும்னு எந்த கட்டாயமும் இங்க கிடையாது” என்று அழுத்தம் திருத்தமாக சொன்ன மலர்விழி,
“இது ஸ்கூல், என்னோட பெர்ஸ்ஸனல் லைஃபை ஆராய்ச்சி செய்றதுக்கான இடம் கிடையாது. என்னைப் பத்தி தெரிஞ்சே ஆகணும்னா வீட்டுக்கு வாங்க, தாராளமா சொல்லுறேன்” என்றவள் வகுப்புக்கு செல்ல எழும்பினாள்.
“ம்ஹூம்… இப்படிப்பட்ட குடும்பத்துல பிறந்ததுக்கே இவ்வளவு திமிரு. இதே கொஞ்சம் நல்ல குடும்ப பிண்ணனி இருந்திருந்தா கைல பிடிக்க முடியாது.” நான் தோற்றுப்போவதா, என்ற எண்ணத்தில் அந்த ஆசிரியை முணுமுணுக்க,
“ஆஹாங்… உங்க ராஜ பரம்பரையோட வளர்ப்பு அள்ளுது போங்க.” அசராமல் கிண்டலடித்தபடி வகுப்பிற்கு செல்வதற்காக ஸ்டாஃப் ரூமை விட்டு வெளியே சென்றாள் மலர்விழி.
மலர்விழியைப் பிடிக்காத சக பெண் ஆசிரியைகள் தங்கள் வன்மத்தை இப்படி தீர்த்துக் கொள்ள முயன்றார்கள் என்றால், ஆண்களோ, வேறுவகையில் முயற்சித்தார்கள்.
பொதுவாக, பணியிடங்களில் ஒரு ஆணைவிட பெண்ணை திறமைசாலி என்று நிர்வாகம் கொண்டாடினால், அந்த பெண்ணின் திறமையை ஒத்துக்கொள்ள மனமின்றி, சிரிச்சே எல்லாரையும் கவுத்துடுவாங்க என்றோ, நாமளும் நாளைலயிருந்து சாரி கட்டிட்டு வரணும் ப்பா, என்றோ புலம்பும் ஆண்கள் இங்கே அதிகம்.
மலர்விழியின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், இப்படிப் பேசி தங்கள் இயலாமையை போக்கிக்கொண்ட ஒருசில ஆண் ஆசிரியர்களுக்கு, மலர்விழியின் குடும்ப பிண்ணனி தெரியவும், அவளை மலினமாக பேசுவதற்கு எளிதாகப் போனது.
அதிலும், மலர்விழியை முற்றுமுழுதாக எதிரியாக கருதும் ரமேஷ் என்பவனுக்கோ கொண்டாட்டமாகித் தான் போனது. ரமேஷ், ஒன்பது மற்றும், பத்தாம் வகுப்பிற்கு கணிதப் பாடம் எடுப்பவன். திருமணம் ஆகாத இளைஞன்.
அவன் பாடமெடுக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களில் சிலர் ஒன்றுசேர்ந்து கொண்டு, தங்களுக்கு ரமேஷ் சார் பாடமெடுப்பது புரியவில்லை என்றும், மலர்விழி மேடத்தையே தங்களுக்கும் பாடம் எடுக்க சொல்ல வேண்டும் என்றும், நேரிடையாகவே பள்ளி முதல்வரிடம் புகார் செய்தார்கள்.
போதாததற்கு, அவர்களின் பெற்றோர்கள் வேறு பள்ளிக்கு ஃபோன் மற்றும் நேரில் வந்தும் சொல்ல, தன் கற்றுக் கொடுக்கும் திறமையை வளர்த்துக் கொள்ளுவதற்கு பதில், மலர்விழி மீது கோபம் வளர்த்துக் கொண்டான் ரமேஷ்.
விளைவு, இளம் பெண் என்பதால், அதுவும் அழகான இளம்பெண் என்பதால் மாணவர்கள் மலர்விழியிடம் மயங்கிக் கிடக்கிறார்கள் என்பதான பேச்சு ரமேஷிடம்.
இப்போதோ மலர்விழியைப் பற்றி தெரியவும், ஒரு ஏளனம்.
இரண்டாவது மாடியில் இருக்கும் தன் வகுப்பிற்கு செல்ல மலர்விழி படிகளில் ஏறிக்கொண்டிருந்தாள். வகுப்புகள் ஆரம்பிப்பதற்கான நேரமாகிவிட்டதால், மாடிப்படிகளில் மாணவர்களின் நடமாட்டம் இல்லை. அதே படிக்கட்டுகள் வழியாக தன் நண்பனோடு மேலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தான் ரமேஷ்.