அத்தியாயம் 14

உலகாளும் ஈசன் சன்னிதானத்தில் மாலையும் கழுத்துமாக ஜோடியாக நின்றிருந்தார்கள் ராகவனும் மலர்விழியும். அவர்களோடு செந்திலும் நின்றிருந்தான்.

அம்மையப்பரை மாங்கல்யமாக கோர்த்திருந்த மஞ்சள் கயிறை பூஜையில் வைத்து ராகவன் கைகளில் அர்ச்சகர் கொடுக்க, அந்த எம்பெருமானை மனதார வேண்டிக்கொண்டு மலர்விழியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான் ராகவன்.

 மஞ்சள் கயிறு மார்பில் உரசவும், இறுகினாற் போல இருந்த மலர்விழியின் முகம் சற்றே தளர்ந்து புன்னகையை பூசிக்கொண்டது.

“மாலையை மாத்திக்கோங்கோ.” அர்ச்சகர் சொல்ல, செய்தவர்கள், சுவாமியை விழுந்து வணங்கி, அம்பாள் சன்னதிக்கு வந்தார்கள்.

அங்கே பிரசாதமாக கொடுத்த குங்குமத்தை, மலர்விழியின் நெற்றி வகிட்டில் உரிமையோடு ராகவன் வைத்து விட்டான். இப்போது, மணப்பெண்ணுக்கே உரித்தான மலர்ச்சி மலர்விழியின் முகத்தில்.

கழுத்து மாலையோடு ஜோடியாக பிரகாரம் சுற்றி வந்தவர்கள், அம்மன் சன்னிதானத்திற்கு முன்பு நீண்டிருந்த மண்டபத்தில் அமர்ந்தார்கள்.

இரவு நேரமாதலால், கோவில், ஒளி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது.

ஆமாம், இரவு நேரம் தான்…

 “நீ என் பிள்ளையே இல்லை” என்று உதறிவிட்டு, குமாரசாமி மனைவி, மக்களோடு சென்றுவிட, தன் கைப்பிடியில் இருந்த மலர்விழியைப் பார்த்தான் ராகவன்.

 அவள் முகமோ இறுகிப்போய் கிடந்தது. அதற்கு மேலும் வெளியே நின்று அடுத்தவர்களுக்கு காட்சிப் பொருளாக மாற விரும்பாத ராகவன், மலர்விழியின் கையைப் பிடித்து, அவள் வீட்டுக்குள் அழைத்து வந்தான்.

தன்னுடைய வீட்டில் நடந்தவற்றை சுருக்கமாக மலர்விழிக்கு சொல்லி, அதனால் தான், இந்த முடிவை அவசரமாக எடுக்கவேண்டி போயிற்று என்று தன்னிலை விளக்கம் கொடுத்த ராகவன்,

தன் இரண்டு கைகளாலும் மலர்விழியின் கன்னத்தைப் பற்றி, “சாரி மலர். அம்மா, அப்பா ரெண்டு பேருமே அந்த காலத்து மனுஷங்க, அவங்க பேசுனது எதையும் மனசுல வச்சிக்காத” என்றான்.

ஆனால், மலர்விழி என்ன முயன்றும் இரண்டு சொட்டு கண்ணீர் துளிகள், அவள் பேராழிக் கண்களின் கரையைத் தாண்டியே விட்டது. அதை அப்படியே தன் பெருவிரல்கள் கொண்டு துடைத்த ராகவன்,

“இப்பிடியே நின்னுட்டு இருந்தா, தேவையில்லாதது எல்லாம் தான் ஞாபகம் வரும். வா, கோவிலுக்கு போயிட்டு வந்துடலாம்” என்று அவள் கைப்பற்றி அழைத்தான்.

அவனைத் தடுத்தவள், “ஜெயந்தி கல்யாணத்துக்கு அப்புறம் நாம பண்ணிக்கலாம்னு இருந்தோமே. இப்போ இப்பிடி ஆகிப்போச்சே” என்றாள் தவிப்போடு.

“அவளுக்கு தான் நிச்சயம் முடிஞ்சிடிச்சே. அதுவே பாதி கல்யாணம் முடிஞ்ச மாதிரி தான். அவ கல்யாணத்துக்கு நாம ஜோடியா நிக்கணும்னு இருந்திருக்கு. வா, இப்போ கோயிலுக்கு போய்ட்டு வந்துடலாம்.” ராகவன் சமாதானம் சொன்ன நேரம், அவன் கைபேசி அழைத்தது.

அழைத்தது, அவர்கள் இப்போது இருக்கும் வீட்டின் உரிமையாளர். “தம்பி, உங்க அப்பா என்னவோ சொல்லுறாங்க, நீங்க வீட்டை காலி பண்ணிடுங்களேன்” என்றார் தயங்கித் தயங்கி.

“அண்ணே… இது உங்க வீடு தான், இல்லைங்கல. ஆனா, நீங்க சொன்ன உடனே எல்லாம் காலி பண்ண முடியாது. அட்லீஸ்ட், ஒரு நாலு மாசத்துக்கு முன்னாடியாவது நீங்க சொல்லணும். அப்போ தான் காலி பண்ண முடியும். இந்த விஷயத்தை உங்க நாட்டாமை கிட்டயும் சொல்லிடுங்க” என்று ராகவன் சொல்ல, கலவரமாகித் தான் போனாள் மலர்விழி.

அந்நேரம் மலர்விழியின் வீட்டு வாசலில், ராகவனின் பைக்கோடு வந்து நின்றான் கதிரேசன். சும்மா ஒன்றும் வரவில்லை, ராகவனின் உடமைகளை கையோடு கொண்டு வந்திருந்தான்.

ஆமாம்…வீட்டுக்கு சென்றதும் குமாரசாமி முதல் வேலையாக ராகவனின் பொருட்களை அள்ளி வெளியே எறிய, தகப்பனின் முறைப்பையும் பொருட்படுத்தாது அத்தனையையும் தமையனிடம் கொண்டு வந்திருந்தான் கதிரேசன். கூடவே, இருவருக்கும் பொதுவாக தன் வாழ்த்தையும் சொல்லிவிட்டே சென்றிருந்தான்.

‘அண்ணனுக்கு பெண்ணை பிடித்திருக்கிறது. பெண் படித்திருக்கிறார், அண்ணனுக்கு இணையான ஜோடியாக வேறு இருக்கிறார். இதற்கு மேல் என்ன வேண்டும்?’ என்ற எண்ணம் தான் கதிரேசன், ஜெயந்தி, இருவருக்குமே. ஆனால் மனம் திறந்து வீட்டில் சொல்லிவிட முடியாதே. எனவே இருவரும் அமைதியோ, அமைதி தான்.

அதற்கு மேல் குளித்து, உடை மாற்றிவிட்டு, ராகவனின் பைக்கிலேயே கோவிலுக்கு கிளம்பிவிட்டார்கள். ராகவன், வேஷ்டி, சட்டை அணிந்து கொண்டான். மலர்விழி மாம்பழக்கலரில் மெரூன் கலர் பார்டர் வைத்த சில்க் காட்டன் புடவை அணிந்து கொண்டாள்.

 ஆழ்வார்குறிச்சி வந்து, ஒரு நகைக்கடையில் தாலியும், மஞ்சள் சரடும் ராகவன் வாங்கிக்கொள்ள, அவன் எண்ணம் புரிந்து ராகவனின் கண்களை மலர்விழி பார்த்தாள். “ஆமாம்” என்பது போல கண்களை மூடித்திறந்தான் ராகவன்.

செந்திலுக்கு மட்டும் விஷயத்தை போன் செய்து ராகவன் சொல்லியிருந்ததால், அவனும் அவர்களோடு வந்து சேர்ந்து கொண்டான்.

 இரவு எட்டு மணி. இதோ, இறைவன் சாட்சியாக இருவரும் கணவன் மனைவியாக அமர்ந்திருக்கிறார்கள்.

“ஹ்ம்ம்… இருக்குற ஒரே ஒரு ஃப்ரெண்டுக்குக்கு புதுத்துணி எடுத்துத்தராம, கல்யாண சாப்பாடுக் கூட போடாம, இப்பிடி கல்யாணத்தை முடிச்சிட்டியேடா, கஞ்சப்பிசுனாரி.” வேண்டுமென்றே ராகவனிடம் வம்பு வளர்த்தான் செந்தில்.

“இப்போ அதுதான் உனக்கு முக்கியமா போச்சா? எழும்பி வந்தேன், மவனே நீ காலி” ராகவன் பற்களைக் கடிக்க, சிரித்தபடியே புதுமணத் தம்பதியருக்கு பேச தனிமை கொடுத்து வெளியே சென்றான் செந்தில்.

“நாம இன்னைக்கு கல்யாணம் பண்ணிப்போம்னு நினைச்சே பாக்கல ல்ல.” கழுத்தில் கிடந்த மாலையைக் கழற்றி, மடியில் வைத்தபடியே மலர்விழியிடம் கேட்டான் ராகவன்.

“ஹ்ம்ம்… ஆமா…” பெருமூச்சோடு தானும் மாலையை கழற்றி மடியில் வைத்துக் கொண்ட மலர்விழியின் முகம், நடந்த நிகழ்வுகளின் நினைவுகளில் மறுபடியும் கசங்கத் தொடங்கியது.

“மலர், ப்ளீஸ்… அதை விட்டு வெளிய வா.” மலர்விழியின் கையை ஆதரவாக பற்றி தட்டிக் கொடுத்தான் ராகவன்.

இன்று ஏதோ விஷேச நாள் போல, எப்போதையும் விட கோவிலில் சற்று கூட்டம் அதிகமாக இருந்தது.

சற்றுமுன் நடந்த மலர்விழி, ராகவன் திருமணத்தை கோவிலில் இருந்த பலர் பார்த்திருக்க, பிரகாரம் சுற்றி வந்த சிலர், இருவருக்கும் வாழ்த்துகள் கூட சொன்னார்கள்.

‘ஆமாம்… இன்று எங்களுக்கே எங்களுக்கான நாள், அதை நான் ஏன் தேவையில்லாமல் யோசித்துக் கெடுத்துக் கொள்ள வேண்டும்’ மனம் சற்றே தெளிந்த மலர்விழி, புன்னகை முகத்தோடு வாழ்த்துகளை ஏற்று, நன்றியும் சொன்னாள்.

கொஞ்சம் உற்சாகமாக உணர்ந்த மலர்விழியின் கண்களில், சற்று தள்ளி ஒரு தூண் அருகே நின்று கொண்டிருந்த இரு இளம்பெண்கள், தங்களையே குறுகுறுவென்று பார்த்தபடி அவர்களுக்குள் பேசிக்கொள்வது விழுந்தது. அப்படி என்னதான் பேசிக்கொள்கிறார்கள் என்று கேட்கும் ஆர்வத்தில் காதுகளைத் தீட்டினாள் மலர்விழி.

“சூப்பர் ஜோடி ல்ல, லவ் மேரேஜ் போல” என்றாள் ஒரு பெண்.

அந்த பெண்ணின் பாராட்டில் மலர்விழியின் மனம், தேன் உண்ட வண்டாக கிறங்கியது. உற்சாகமாகவே அடுத்த பெண்ணின் பதிலைக் கேட்க தயாரானாள்.

“ம்ஹும்ம்… ஆனா, மாப்பிள்ளை ரொம்ப ஹேன்ட்ஸ்ஸமா இருக்கார்ல.” ராகவனையே நோட்டமிட்டபடி சொன்னாள் அடுத்தவள்.

‘எதே… எம்புருஷன் அழகா இருந்தா, உனக்கென்ன ம்மா போச்சு? எதுக்கு இப்பிடி பெருமூச்சு விடுற?’ மனதிற்குள் நொடித்துக் கொண்டாள் மலர்விழி.

“ஹேய்… என்னடி, சைட்டா? பக்கத்துல உக்காந்திருக்க பொண்டாட்டிக்கு மட்டும் இது தெரிஞ்சுதோ, உன்னை பிச்சி… பிச்சி.” கேலியாக சிரித்தாள் முதல் பெண்.

‘என்னது? சைட்டா? கொய்யால, வந்தேன்… பிச்சி… பிச்சி தான்.’ உள்ளுக்குள் அலறினாள் மலர்விழி.

“அடப் போம்மா… என் சைட்டு, என் உரிமை, இதை கேட்க யாருக்குமே உரிமை கிடையாது. அது, அந்த ஹேன்ட்ஸ்ஸம்மோட பொண்டாட்டியா இருந்தாக் கூட.”

‘உன் உரிமையா? யாருகிட்ட?’ கண்களை உருட்டியபடி அந்த பெண்ணைப் பார்த்தாள் மலர்விழி.

மார்தட்டாத குறையாக வீரவசனம் பேசிய அந்த பெண்ணின் கண்களில் தீவிரமாக தன்னையே பார்த்தபடி இருந்த மலர்விழி விழ, ஒருவேளை, தாங்கள் பேசியது அங்கேவரை கேட்டிருக்குமோ என்ற சந்தேகத்தில், அசட்டுச் சிரிப்போடு அவசர அவசரமாக உடனிருந்தவளை இழுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடியே விட்டாள்.

மனைவியின் திடீர் மௌனத்தில், அவள் பார்வையும் கவனமும் குவிந்திருந்த இடத்தில் ராகவனும் கவனம் வைத்திருந்தான். பெண்களின் பேச்சையும் அதற்கு மலர்விழியின் முகபாவத்தையும் அவதானித்துக் கொண்டிருந்த ராகவன், அந்த பெண்கள் இடத்தை காலி செய்த வேகத்தில் சிரித்தான்.

கணவனும் அங்கே நடந்த நாடகத்தை கவனித்து விட்டான் என்பது தெரியவும், “என்ன, சிரிப்பெல்லாம் பலமா இருக்கு? வீட்டுக்கு வாங்க, உங்களை வச்சிக்கிறேன்.” என்னவோ அவன் தான், அந்த பெண்களிடம் தன்னை ரசிக்கச் சொன்னது போல பற்களைக் கடித்தாள் மலர்விழி.

“வெயிட்டிங்…” என்று, அதற்கும் அழகாகவே சிரித்தான் ராகவன்.

கோவிலில் இருந்து நேராக ஆர்வார்குறிச்சி ஐயர் ஹோட்டலுக்கு வந்து, இரவு உணவை மூவரும் முடித்துக் கொண்டார்கள்.

வீடுவரை அவர்களோடு வருவதாகச் செந்தில் சொல்ல, “அதெல்லாம் நாங்க போய்டுவோம். நீ, கல்யாண சாப்பாடு போடலைன்னு மட்டும் இனி சொல்லாத” என்றான் ராகவன்.

“இது கல்யாண டிஃபன். சாப்பாடு, இன்னும் நீ போடல” என்று, நண்பனை வெறுப்பேற்றிய செந்தில், “மச்சான்… கவனம் டா” என்று விட்டே சென்றான்.

ராகவனின் பைக், செங்குளம் செல்லும் பாதையில் ஓடத் தொடங்கியது. இத்தனை நேரம் இருந்த இதமான மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைவது போலத் தோன்றியது மலர்விழிக்கு.

தங்கள் வீட்டுக்கு அருகே வரும் போது, வண்டியின் வேகத்தை குறைத்த ராகவன், வீட்டைத் திரும்பி பார்த்தான்.

 காம்பௌண்ட் கேட்டை பூட்டிக் கொண்டிருந்த தெய்வானையோ, மகனைக் கண்டதும் பழக்க தோஷத்தில் வேகமாக கேட்டை திறக்க முயன்றவர், மகன் பின்னால் அமர்ந்திருந்த மலர்விழியைக் கண்டதும், நொடிப்பொழுதில் சுதாரித்துக்கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

ராகவனின் பின்னால் அமர்ந்திருந்த மலர்விழியோ, ராகவனோடு இன்னும் கூடுதலாக நெருங்கி அமர்ந்து, அவன் இடுப்போடு கையைக் கொடுத்து வயிற்றை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

இத்தனை நேரம் சாதாரணமாக அமர்ந்து வந்த மலர்விழியிடம், தன் தாயைக் கண்டவுடன் வந்த மாற்றத்தையும், மலர்விழியைக் கண்டதும், தாயின் முகத்திருப்பலையும் கவனித்த ராகவன்,

ஆசீர்வாதம் வாங்குறேன் பேர்வழி என்று அங்கே இறங்கி மறுபடியும் ஒரு மனக்கசப்பை ஏற்படுத்த முனையாமல், மலர்விழியின் வீட்டுக்கு முன் கொண்டு வந்து வண்டியை நிறுத்தினான். இருவரும் இறங்கிக் கொள்ள, ஆங்காங்கே நின்றிருந்தவர்கள், ஆர்வமாக இவர்களைப் பார்த்தார்கள்.

‘அடுத்து பரபரப்பா ஒரு செய்தி வர்றவரைக்கும், இவங்க வாய்க்கெல்லாம் அவல் நாங்க தான்.’ அலுத்துக் கொண்ட ராகவன், மலர்விழியோடு வீட்டுக்குள் நுழைந்து, கதவை தாழிட்டான்.

தம்பியின் உபயத்தால் அவன் துணிமணிகள் வந்திருக்க, எந்த தயக்கமும் இன்றி மலர்விழியின் அறைக்குள் அவற்றை கொண்டு சென்றவன், அங்கேயே ஒரு ட்ராக் பேண்ட், டிசர்ட் என்று மாறிக்கொண்டான்.

ஆனால், ராகவனைப் போல மலர்விழியால் இயல்பாக இருக்க முடியவில்லை. இரவும், தனிமையும், அவர்கள் திருமணம் நடந்த விதமும் அவளை இயல்பாக நடமாட விடாமல், கால்களுக்கு தடா போட்டது.

எனவே, ராகவன் இருக்கும் அறைக்குள் செல்லாமல் கிச்சனுக்குள் நுழைந்து கொண்டவள், ஃப்ரிட்ஜிலிருந்து பாலை எடுத்து காய்ச்சினாள்.

அதன் பிறகு, ராஜத்திற்கு அழைத்து தாங்கள் திருமணம் செய்து கொண்டதைச் சொன்னாள்.

“ஹேய்… சூப்பர்… சூப்பர்” என்று ஆர்ப்பரித்த ராஜம், “பெருசா பிரச்சனை ஒண்ணும் இல்லையே” என்று கேட்க, பதிலாக ஒரு சிரிப்பு மட்டும் தான் மலர்விழியிடம்.

“பரவாயில்ல… சீக்கிரமே ஒரு பேரனையோ பேத்தியையோ, இல்ல, இரண்டு பேரையும் சேர்த்தோ பெத்துக் குடுத்துடு. முரண்டு பிடிக்கிறவங்க எல்லாம் பேசாம வழிக்கு வந்துடுவாங்க” என்றார் ராஜம் உற்சாகமாக.

“உங்க லைஃப்ல அப்படி எதுவும் நடக்கலையே க்கா.” இறங்கிய குரலில் கேட்டாள் மலர்விழி.

“அஞ்சு விரலும் ஒரே மாதிரி இருக்கா என்ன?” என்று கேட்ட ராஜம், “எதையும் போட்டு குழப்பிக்காம சந்தோஷமா இருக்கணும்” என்று விட்டு, ஃபோனை ராகவனிடம் கொடுக்கச் சொல்ல, ராகவன் இருந்த அறையை உற்றுப் பார்த்தாள் மலர்விழி.

 அவன் யாரிடமோ ஃபோனில் மும்முரமாக பேசிக் கொண்டிருந்தான். அதை ராஜத்திடம் சொல்ல, “பரவாயில்ல… அப்புறமா பேசுறேன்” என்றவர், மேலும் சிறிது நேரம் மலர்விழியோடு பேசிவிட்டு அழைப்பை துண்டித்துக் கொண்டார்.

ராகவன் தன்னுடைய சித்தப்பாவிடம் தான், தங்கள் திருமண விஷயத்தை பகிர்ந்து கொண்டிருந்தான்.

“இப்பிடித்தான் ஏதாவது நடக்கும்னு எனக்கு தெரியும் டா. நம்ம பயலுக எல்லாமே ஜேம்ஸ்பாண்ட் க்கு தம்பி மாதிரி. அவனுங்க கண்ணுலயிருந்து ஒன்னும் தப்ப முடியாது” என்று அலுத்துக் கொண்ட சிதம்பரம்,

“சீக்கிரமே மகனைப் பெத்து எங்க அண்ணன் கைல குடு. பேரன் மூத்திரத்தை எங்க அண்ணன் மூஞ்சியில அடிக்கிறதுல தான், அவர் புத்தி தெளியணும்” என்று சொல்லி சிரித்தவர், மலர்விழியிடம் ஃபோனை கொடுக்கச் சொன்னார்.

கைபேசியோடு சமையலறைக்குள் வந்த ராகவன், “சித்தப்பா” என்று போனை மலரிடம் நீட்டினான்.

“வணக்கம் அங்கிள்.” எப்போதும் போல மலர்விழி பேசத் தொடங்க,

“இனி மாமா ன்னு கூப்பிடு மா.” உற்சாகமாக பேசத்தொடங்கிய சிதம்பரம், “எதையும் நினைச்சு மனசக் குழப்பிக்காம, உங்க லைஃபை நல்லபடியா ரன் பண்ணுங்க. ஊருக்கு வரும்போது உங்களை வந்து பாக்குறேன்” என்று சொல்ல, தலையாட்டிக் கொண்டாள்.

 மலர்விழி பேசி முடிக்கவும், “பால் காய்ச்சிட்டியா?” என்று, அவளை உரசுவது போல நெருங்கி நின்று கேட்ட ராகவன், பாலை இரண்டு டம்ளர்களில் ஆற்றி பதமான சூட்டில், ஒன்றை மலர்விழியின் கையில் கொடுத்தான்.

வாங்கிக் கொண்டவளுக்கு, ராகவனை சந்தித்த முதல்நாள், அவன் டீ தந்தது ஞாபகத்துக்கு வர, மெல்லிய புன்னகை இதழ்களில்.

“என்ன சிரிப்பு? சொன்னா நாங்களும் கொஞ்சம் சிரிப்போம்ல.” பாலோடு சேர்த்து பாவையின் அழகையும் பருகிக் கொண்டிருந்த ராகவன் கேட்க, சொன்னாள்.

“யப்பா… அம்மணி அன்னைக்கு டீ குடிக்க என்னா பிகு பண்ணுனீங்க.” ராகவன் கேலி செய்ய, எதற்காக டீ யை மறுத்தோம் என்பது ஞாபகம் வந்தது மலர்விழிக்கு.

 ‘அன்றிலிருந்து இன்றுவரை அவளைப் பற்றிய நிலைப்பாடு, சிறிதும் மாற்றம் இன்றி அப்படியேத் தானே இருக்கிறது அவன் அன்னையிடம். இதில் அவர்கள் மகனை நான் திருமணமும் செய்தாயிற்று.’ மறுபடியும் மலர்விழியின் மனம் சோர்ந்து போனது.

இருவரும் பால் அருந்தி முடிக்கவும், டம்ளர்களை மலர்விழி கழுவி வைத்தாள். “அவ்வளவு தான? வா, தூங்கலாம்” என்றான் ராகவன் இயல்பாக.

அத்தனை இயல்பு வரப்பெறாதவளோ, ராகவனை தயக்கமாக பார்க்க, “இங்கேயே தூங்கிடலாம்னு உத்தேசமா? எனக்கு நோ ப்ராப்ளம்” என்றான் உதட்டுக்குள் சிரிப்பை மறைத்து.

“இல்ல… நீங்க போங்க… இதோ, நான் வந்துடுறேன்.” மலர்விழியின் வார்த்தைகள் மெதுவாக தடுமாறியது.

அவள் கண்களுக்குள் நுழைந்து விடுபவனைப் போல ஆழ்ந்து பார்த்த ராகவன், அங்கிருந்து நகர்ந்தான். அந்த பார்வைக்கே உடல் சில்லிட்டுப் போக, ஆழ்ந்து மூச்செடுத்து தன்னை சமன்படுத்திக் கொண்டாள் மலர்விழி.

திருமணம் முடித்தாயிற்று. அடுத்து என்ன என்று தெரியாத அளவுக்கு அவள் ஒன்றும் அறியாப்பிள்ளை இல்லை. ‘இருக்கும் மனநிலையில், இதெல்லாம் இப்போது தேவையா?’ என்ற எண்ணம் தான் மலர்விழிக்கு.

ஆனால், அப்படி எண்ணம் எதுவும் ராகவனுக்கு இல்லை என்பது, ஆர்வமாக பளபளக்கும் அவன் கண்களைக் கொண்டே புரிந்து கொள்ள முடிந்தது.

‘தன் மனநிலையை எடுத்து சொன்னால் புரிந்து கொள்வார்.’ மலர்விழி தன்னைத்தானே சமாதானம் செய்துகொள்ள முயல, ‘நோ சான்ஸ் ம்மா, மாமன் லவ் மூடுக்கு போய் ரொம்ப நேரமாச்சு’ என்று சிரித்தது அவள் மனது.

அப்படியும் இப்படியுமாக அரைமணி நேரத்தை போக்கியவள், அதற்கு மேலும் தாமதித்தால் நன்றாக இராது என்று, மெதுவாக ராகவன் இருந்த அறைக்குச் சென்றாள்.

கட்டிலில் கால்நீட்டி ஜம்மென்று சாய்ந்து அமர்ந்து, ஃபோனில் ஏதோ செய்து கொண்டிருந்தான் ராகவன்.

கடந்த ஆறு மாதங்களாக மலர்விழி, தன் அறையாக உபயோகப்படுத்திய அறை தான் அது. இப்போதோ, முற்றுமுழுதாக ராகவனின் வசமாகி இருந்தது போலத் தோன்றியது அவளுக்கு.

“பயம் போச்சா? இல்ல… இன்னும் மிச்சம் மீதி இருக்கா?” தயங்கித் தயங்கி வந்தவளைப் பார்த்து கேலியாக ராகவன் புருவத்தை உயர்த்தினான்.

“எனக்கென்ன பயம்?” வேகமாக மறுமொழி சொன்ன மலர்விழி, அதே வேகத்தில் ராகவனுக்கு அருகில் கட்டிலில் வந்து அமர முயன்றாள். அப்படியே அவள் முகம் பார்ப்பது போல, தன் மடியில் தூக்கி வைத்திருந்தான் ராகவன்.

 “ஐயோ… என்ன இது? விடுங்க.” சிணுங்கினாள் மலர்விழி.

அவனோ, “ராகவன்… ராகவன் சொல்லு” என்றான், அவள் இடுப்பிலிருந்து கையை எடுக்காமலேயே.

“ஹ்ம்ம்… ராகவ், விடுங்க…” சொல்லாமல் விடமாட்டான் என்று அனுபவம் சொல்ல, தனக்கு பிடித்தது போல சொல்லிக் கொண்டாள் மலர்விழி.

“அட… இது கூட நல்லாருக்கே” என்றவன், தான் சொல்லாததைச் செய்து, தன்னை அகம் குளிரச் செய்த மலரின் இதழ்களுக்கு பரிசில்களை வாரி வழங்கினான்.

முடிவில்லாமல் நீண்டு போன இதழ் முத்தத்தில் துவண்டு போன மலர்விழி, அவன் கழுத்து வளைவில் முகத்தை புதைத்து கொள்ள, “இதுக்கேவா…” பெண்ணவளின் காதோரம் இதழ் உரச, சரசமாகக் கேட்டான் ராகவன்.

சிவந்து போனவள், முகத்தை கொஞ்சம் இறக்கி அவன் மார்பில் புதைந்து கொண்டு, “ரோம் நகரம் பத்தி எரியும் போது, நீரோ மன்னன் பிடில் வாசிச்சானாம்” என்றாள் கிசுகிசுப்பான குரலில். கைகளோ அவன் மார்பை நீவி விட்டபடி இருந்தது.

அவள் உவமையில் சத்தமாக சிரித்த ராகவன், “எரியுறது ஸ்டாப் ஆகிடும்னா சொல்லு, பிடில் வாசிக்கிறதையும் நிறுத்திடலாம்” என்றான் கேலியாக.

 ஆனால், அவள் குரல் கொண்டே, மனம் படிப்பவன், இன்று அவள் வார்த்தைகளில் இருக்கும் அர்த்தத்தை படிக்காமல் போவானா என்ன?

அவள் பட்டுக்கூந்தல் தடவி, நெற்றி முத்தம் ஒன்றை வைத்த ராகவன், தன் நாடியை மலரின் முன்உச்சியில் பதித்து, “மலர்… என்ன பிரச்சனை வந்தாலும், அதை தூக்கி தூரப் போட்டுட்டு நம்ம வாழ்க்கையை நாம வாழ்ந்தாகணும். இப்போ நீ தனியாள் இல்ல, உங்கூடவே நான் இருக்கேன். எது வந்தாலும் நாம சேர்ந்தே சமாளிக்கலாம்” என்றான் மென்மையாக.

கொண்டவனின் வார்த்தைகளில், மலர்விழி கொண்டிருந்த கலக்கங்கள் எல்லாம் காணாமல் போக, கணவன் கழுத்தோடு தன் கைகளைக் கோர்த்து, அவன் மார்பில் முத்தம் ஒன்றும் வைத்தாள்.

 அவ்வளவு தான்… காதல் பித்தேறி, மனைவியின் மார்பில் முகம் புதைத்த ராகவனை, அங்கிருந்த புத்தம்புது மஞ்சள் கயிறின் வாசம் கட்டியிழுத்தது.

 அதில் உன்மத்தம் கொண்டவனாய் இன்னும்… இன்னும்… என்று முன்னேறியவனின் கைகளில், மெழுகாய் கரைந்த மனைவியோடு, காமன் பல்லாக்கில் ஏறி காதல் ராஜ்ஜியத்தை உல்லாசமாகவே ஆளத் தொடங்கினான் ராகவன்.

அதே உல்லாசமான மனநிலையிலேயே, மறுநாள் காலையில் மனைவியை ஊட்டிக்கு அள்ளிக் கொண்டு வந்து விட்டான்.

தேன்நிலவு என்று சொல்லிக் கொண்டாலும், தேவையில்லாத பஞ்சாயத்துகளை மலர்விழியிடமிருந்து தள்ளி நிறுத்துவதே அந்த பயணத்தின் முக்கிய நோக்கம்.

பகலில் காடுமேடெல்லாம் ஜோடிப்புறாக்களாக அலைந்து திரிந்து கண்களுக்கு விருந்தளித்தவர்கள், இரவெல்லாம் ஒருவரில் மற்றவரைத் தேடி இளமைக்கு விருந்தளித்துக் கொண்டார்கள்.

மொத்தம் ஆறு நாட்கள், அவர்கள் மனம் போல், உண்டு, உறங்கி, களித்து வாழ்ந்தவர்கள், ஆறாம் நாள் இரவு செங்குளத்தில் வந்து இறங்கினார்கள்.

அடுத்த நாளிலிருந்து இருவருமே வேலைக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து கொண்டு, தங்கள் அசதி தீர தூங்கி முழித்துக் கொண்டார்கள்.

காலையில் எழும்பிய மலர்விழி பரபரப்பாக சமையலில் ஈடுபட, அவளுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று வம்பிழுத்துக் கொண்டிருந்தான் ராகவன்.

அந்நேரம், “ராகவா…” என்று, ஆனந்தியின் குரல் முன் வாசலில் கேட்டது. பரபரப்பாக ஓடிய ராகவன், அங்கே நின்றிருந்த ஆனந்தியை, “வா க்கா…” என்று ஆனந்தமாகவே வரவேற்றான்.

அவளோ, “சந்தோஷமா? சொல்லு… இப்போ உனக்கு சந்தோஷமா?” என்றாள் தம்பியிடம் கோபமாக. பார்வையோ, ராகவனுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த மலர்விழியையே முறைத்துப் பார்த்தது…