அத்தியாயம் 13
“நம்ம ராகவனும், அந்த மலர் டீச்சரும் லவ் பண்ணுறாங்க தெய்வா க்கா…” தன் கையிலிருந்த காஃபி கப்பை லேசாக உருட்டியபடியேச் சொன்னார் கோதை.
“என்ன கோத சொல்லுற?” சட்டென்று தேகம் விறைத்துப் போக நிமிர்ந்து அமர்ந்த தெய்வானை, கோதையின் வார்த்தைகளை நம்ப முடியாமல் கேட்டார்.
ஏனென்றால் கோதையின் வரலாறு அப்படி. ஊருக்குள் நடப்பவற்றை கூட்டியும் குறைத்தும் சொல்லுவதில் அவருக்கு நிகர் அவரே.
தேவை தவிர, வீட்டை விட்டு வெளியே செல்லாத தெய்வானைக்கு ஊரில் நடக்கும் விஷயங்கள் எதுவும் தெரிவதில்லை. கணவனும் தனக்கு தெரிந்த விஷயங்களை மனைவியோடு பகிர்ந்து கொள்ளும் ரகம் இல்லை. நாட்டாமையின் கோபமுகத்திற்கு பயந்து தெய்வானையிடம் நட்பு பாராட்டிக்கொண்டு யாரும் சட்டென்று வீட்டுக்குள் வருவதில்லை. எனவே தெய்வானையின் ஒரே உள்ளூர் செய்தி சேனல் கோதை மட்டும் தான்.
“அட, ஆமா க்கா. எனக்கே கொஞ்சநாளா சந்தேகம் தான். ஆனா நிச்சயமா தெரியாம, ஒரு விஷயத்தை சொல்லக் கூடாதுன்னு தான் அமைதியா இருந்தேன். ஆனா…” என்று இழுத்தவர்,
“நேத்து, ஊரே உங்க வீட்டுல இருக்கும் போது, பட்டப்பகலிலேயே அந்த மலர் வீட்டுக்குள்ள ராகவன் போய்ட்டு வந்துட்டான் க்கா” என்றார் கிசுகிசுப்பான குரலில்.
கோதை சொல்லி முடிக்கவும் அதிர்ச்சியில் இருக்கையிலிருந்து எழும்பியிருந்த தெய்வானை, “வாய் இருக்குன்னு, சும்மா எதையும் பேசக்கூடாது கோத” என்றார் சற்று கோபமான குரலில்.
“இத்தனை நாள் பழக்கத்துல, இந்த கோத மேல உங்களுக்கு நம்பிக்கை வரல பாத்தீங்களா க்கா?” என்று முகத்தைச் சுருக்கிய கோதை,
“வேற யாரும் சொல்லியிருந்தாக் கூட நான் நம்பியிருக்க மாட்டேன் க்கா. ஆனா ராகவன், மலர் வீட்டுக்குள்ள இருந்து வந்ததை, நானே, என் கண்ணால பாத்தேன். அப்பிடியிருந்தும் உங்ககிட்ட எப்பிடி விஷயத்தைச் சொல்லன்னு யோசிச்சு யோசிச்சே சாயங்காலம் ஆகிப்போச்சு. நீங்க என்னடான்னா என் வார்த்தையை நம்பமாட்டேங்குறீங்க.” பெரிதாக அலுத்துக் கொண்டார் கோதை.
நான் பார்த்தேன் என்ற கோதையின் வார்த்தையில் கலவரமாகிப் போன தெய்வானை, “உண்மையாவா சொல்லுற கோத? நீ பாத்தியா?” என்றார் காற்றாகிப் போன குரலில்.
“அட… நீங்க வேற க்கா. நான் மட்டுமில்ல, நிறைய பேர் பாத்துருக்காங்க. இன்னைக்கு நம்ம ஊர்ல பரபரப்பான பேச்சே ராகவனும், அந்த மலர் புள்ளையும் தான்” என்றார் கோதை.
கோதையின் பதிலில் ஓய்ந்தே போனார் தெய்வானை. நிச்சயதார்த்தம் முடிந்து பந்தி பரிமாறும் போது மகனைக் காணாமல், தான் தேடியது ஞாபகத்திற்கு வந்தது.
‘அப்போ, அந்த நேரம் தான் அங்க போயிருப்பானா? ஆனா, அந்த பொண்ணு இங்கே வந்ததை நானே பார்த்தேனே, அப்புறம் எப்படி?’ குழம்பிப் போனவர், தன் சந்தேகத்தை கோதையிடமே சொல்ல,
“ஏன்னு தெரியலை க்கா, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்து இறங்கும் போது, மலர், வீட்டுக்கு திரும்பி போனதையும் நான் பாத்தேன். அதுவுமில்லாம, நம்ம மாதவி கிட்ட, டீச்சருக்கு சாப்பாடு குடுத்துடுன்னு, நம்மாளு சாப்பாடு வேற குடுத்து விட்டிருக்காரு.”
வீட்டு சமையலறையிலிருந்து, மகன் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு சென்றதை தெய்வானையும் தான் கண்டாரே. “எதுக்கு ராகவா?” என்று கேட்டதற்கு, “அப்புறமா சொல்லுறேன் ம்மா” என்று விட்டு சென்றதும் ஞாபகத்துக்கு வர, அப்படியே நாற்காலியில் சோர்ந்து போய் அமர்ந்தார் தெய்வானை.
இளைய மகன் கதிரேசன் காதலிக்கிறான் என்று யாராவது சொல்லியிருந்தால் கூட, தெய்வானை இத்தனை அதிர்ச்சியாகி இருக்கமாட்டார் போல. ஆனால், அன்பானவன், அனுசரணையானவன், பொறுப்பானவன் என்று, அக்மார்க் நல்லவனாக முத்திரை குத்தப்பட்ட ராகவன் காதலிக்கிறான் என்ற செய்தி, பெரும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது அந்த தாய்க்கு.
“இரண்டு பேரும் ஜோடி போட்டுட்டு சிவன் கோவிலுக்கு போவாங்களாம். வேலைக்கு போகும் போது தினமும் மெயின் ரோட்டு சந்திப்புல நின்னு பேசிப்பாங்களாம். இவ்வளவு ஏன்? அந்த பிள்ளை தினமும் நம்ம ராகவனுக்கு மதிய சாப்பாடு கட்டிக்கொண்டு வந்து குடுக்குமாம்ல. இப்போ தான் கதைகதையா ஒவ்வொருத்தரும் பேசிக்கிறாங்க.”
சிறிது நாட்களாக, “லஞ்ச், கேண்டீன்ல பாத்துக்கிறேன் ம்மா” என்று மகன் சொன்னதன் காரணம் இப்போது புரிந்தது தெய்வானைக்கு.
அந்த புரிதல், மலர்விழி மீது அப்படியொரு கோபத்தை கொண்டுவந்தது. ‘இத்தனை நாளுக்குள் என் மகனை வளைத்ததும் அல்லாமல், அவளிடமிருந்து சாப்பாடு வரைக்கும் வாங்கி சாப்பிட வைத்திருக்கிறாள் என்றால் சரியான கைகாரியாகத் தான் இருப்பாள்’ என்ற குமுறல் வேறு.
அவர்களுடைய காதலின் காலமும், காத்திருப்பும் அவருக்குத் தெரியாதே. அதனால் இப்படித்தான் நினைக்கச் சொல்லியது.
“இதை இப்படியே வளரவிட முடியாதே, என்ன க்கா செய்யப் போறீங்க?” ஆவலாக கேட்டார் கோதை.
தன் முன்னால் இருந்த மேஜையில் கைகளை ஊன்றி, அதில் தலையை சாய்த்துக் கொண்ட தெய்வானை, “தெரியல கோத” என்றார் சோர்ந்து போனவராக.
“பேசாம, ராகவன் அப்பா காதுக்கு விஷயத்தை கொண்டு போயிடுங்க. அவங்க பாத்துப்பாங்க” ஐடியா சொன்னார் கோதை.
“ஐயையோ… அவங்களுக்கு விஷயம் தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகிடுமே.”
தெய்வானை சொல்லி வாய் மூடவில்லை, “தெய்வா… ஏய் தெய்வா… எங்க டி உம்மொவனை?” என்று சத்தமிட்டபடியே வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தார் குமாரசாமி.
திசைக்கொன்றாய் பறந்த அவர் காலணிகளே அவருடைய கோபத்தின் அளவைச் சொல்ல, நடுங்கித்தான் போனார் தெய்வானை.
தகப்பனின் காட்டுக் கத்தலில், தங்கள் அறையில் இருந்த கதிரேசனும், ஜெயந்தியும் கூட வெளியே வந்து விட்டார்கள். கதிரேசன் நாளை டில்லிக்கு கிளம்பி செல்ல வேண்டும் என்றும், இரண்டு மாதங்கள் கழித்து தான் திருமணம் என்பதால், நாளை முதல் வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஜெயந்தியும் முடிவெடுத்திருந்தபடியால் வீட்டில் இருந்தார்கள்.
“ராகவன் இன்னும் காலேஜ் விட்டு வரலைங்க.” மெதுவாக பதில் வந்தது தெய்வானையிடமிருந்து.
“ஹ்ம்ம்… நான் எந்த மகனைத் தேடுறேன்னு உனக்கு தெரிஞ்சிருக்கு. அப்போ விஷயம் தெரிஞ்சு தான் இருக்க.” கோதையை ஒரு பார்வை பார்த்துவிட்டு மனைவியிடம் உறுமினார் மனிதர்.
குமாரசாமியின் ஒற்றைப் பார்வைக்கே குளிர் ஜுரம் கண்டது கோதைக்கு. என்றாலும், அடுத்து நடக்கப்போவதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கம்மென்று நின்று கொண்டார்.
“என்னைப் பாத்தா டிராயர்ல ஒண்ணுக்கு போற பயலுவ எல்லாம், இன்னைக்கு நாக்கு மேல பல்லப்போட்டு சாடை பேசுறானுங்க. அத்தனைக்கும் காரணம் நீ. பெத்த பிள்ளை எங்க போறான், என்ன செய்யிறான்னு தெரிஞ்சிக்காம, வீட்டுல வெட்டி முறிஞ்ச வேல பாத்தியா? ம்ம்…”
இருக்கும் கோபம் அத்தனையையும் மனைவி மீது இறக்கிவிடும் முயற்சியில் கையை ஓங்கிக்கொண்டு வந்தார் குமாரசாமி.
வேறொன்றுமில்லை… இன்று காலை குமாரசாமி தெருவில் நின்று கொண்டிருக்கும் போது, இரண்டு பேர், “இதெல்லாம் பெரிய வீட்டுல நடந்தா தப்பே இல்ல ப்பா. இதே, நம்ம வீட்டுல நடந்திருந்தா மட்டும், பஞ்சாயத்தை கூட்டி தீர்ப்பை சொல்லியிருப்பாங்க, வெக்கங் கெட்டவய்ங்க” என்று பேசிக்கொண்டே நடந்தார்கள்.
அப்போதே அவருக்கு ‘என்னடா…’ என்ற யோசனை தான். அவர் சந்தேகத்தை தீர்த்து வைப்பது போல, பங்காளி ஒருவன் தைரியமாக அவரிடம் வந்து ராகவன், மலர்விழி விஷயத்தை சொல்லியிருக்க, கேட்டுக்கொண்டு வந்தவர் தான், தனது ருத்ரதாண்டவத்தை மனைவியிடம் தொடங்கியிருந்தார்.
“ப்பா… என்ன பண்ணுறீங்க நீங்க?”
தாயை நோக்கி உயர்ந்திருந்த தந்தையின் கையை சட்டென்று பிடித்து தடுத்ததோடு, அவரை அலேக்காக தூக்கி அந்த இடத்திலிருந்து நகர்த்தவும் செய்திருந்தான் கதிரேசன். அம்மாவை எங்கே அடித்துவிடுவாரோ என்ற பதட்டத்தில் கதிரேசன் செய்தது, அவ்வளவு தான்.
ஆனால், தன் விரல் பிடித்து வளர்ந்த பிள்ளையிடம், தன் வீரம் செல்லுபடியாகாமல் போனது குமாரசாமியின் தன்மானத்தை சீண்ட, “என்னடா? தோளுக்கு மிஞ்சி வளந்துட்டோம், சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டோம் ங்குற திமிர்ல துள்ளுறீங்களா? எல்லாம் நான் போட்ட பிச்சை டா. அதை மொதல்ல ஞாபகம் வச்சிக்கோங்க” என்று சீறினார்.
“ப்பா… என்ன விஷயம்னு சொல்லாம சத்தம் போட்டா, என்னன்னு நினைக்கிறது?” பொறுமையாகவே பேசினான் கதிரேசன்.
“ஏன்? நீயும், அங்க டெல்லியில எவளையாவது பாத்து வச்சிட்டியா?” அடங்காத கோபத்தில் குமாரசாமி கேட்க, அதிருப்தியாக முகம் சுழித்தான் கதிரேசன்.
கண்மண் தெரியாத கோபத்தில் குமாரசாமி குதித்துக் கொண்டிருந்த வேளையில், தெருவில், முதலில் மலர்விழியின் ஸ்கூட்டியும், அதைத்தொடர்ந்து சிறிய இடைவெளியில் ராகவனின் பைக்கும் வந்தது.
“ம்ம்… நாள் முழுக்க ஊர்வலம் போயிருக்காங்க. அது தெரியாம, நீ நல்லா தின்னுட்டு, தின்னுட்டு உறங்கியிருக்க.” மறுபடியும் மனைவியிடமே சண்டைக்கு கோர்த்துக் கொண்டு வந்தார் நாட்டாமை.
இப்போது கதிரேசனுக்கு விஷயம் பிடிபட்டு விட, ‘டேய் அண்ணா… நீயா டா…’ என்ற நினைவில் வாயைத் தான் பிளந்தான்.
ராகவனோ, நிதானமாக பைக்கிலிருந்து இறங்கி வீட்டுக்குள் வந்து கொண்டிருந்தான்.
வீட்டுக்குள் நுழைந்ததுமே, இயல்பான சூழ்நிலை அங்கு இல்லை என்பது புரிந்து விட, “என்ன?” என்பது போல தம்பியைத் தான் பார்த்தான் அண்ணன். அவனோ, ஊமைச் சிரிப்போடு கண்களைச் சிமிட்டினான்.
‘இவன் வேற’ என்று அலுத்துக்கொண்ட ராகவன், துவண்டு போய் நின்றிருந்த அன்னையை தோளோடணைத்து, “என்னாச்சு ம்மா?” என்றான்.
மகனின் அணுசரணையில் கண்கள் கலங்க, “நீ ஏன் ராகவா இப்பிடி பண்ணிவச்சிருக்க?” என்றார் தெய்வானை கண்ணீர் குரலில்.
“என்ன பண்ணி வச்சிருக்கேன்? தெளிவா சொன்னாத் தானே ம்மா புரியும்” யோசனையோடு ராகவன் கேட்க,
“ம்ம்… தொரை கேக்குறார்ல, அந்த வந்தேறி கழுதை பின்னாடி இவர் நாய் மாதிரி அலையுறது, அவ வீட்டுக்குள்ள பட்டப்பகல்ல நுழைஞ்சு வெளிய வந்ததுன்னு, அவரோட எல்லா சாகசமும் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சுன்னு, வாயைத் திறந்து சொல்லு டி.” இறைந்தார் குமாரசாமி.
இப்போது இந்த அசாதாரண சூழ்நிலை எதற்காக என்பது ராகவனுக்கு புரிய, “ப்பா… தப்பா பேசாதீங்க. நானும் மலரும் ஒருத்தருக்கொருத்தர் விரும்புறோம்” என்றான் அழுத்தமான குரலில்.
“எடு செருப்பை, உனக்கு கல்யாணத்துக்கு என் தங்கச்சி மகளை நான் பாத்து வச்சிருந்தா, எங்கிட்டயே வந்து எவளோ ஒருத்தியை காதலிக்கிறேன்னு சொல்லுவியா? எவ்வளவு நெஞ்சழுத்தம் உனக்கு?” நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ராகவனிடம் சண்டைக்கு வந்தார் குமாரசாமி.
“என் மனசுக்கு பிடிச்ச பொண்ணைப் பத்தி நானே சொல்லாம, வாடகைக்கு ஆள் வச்சா சொல்ல முடியும்?” குமாரசாமியின் வாரிசு நான் என்பதை பேச்சில் நிரூபித்தான் ராகவன்.
“சும்மா கண்டவளையும் காதல் பண்ணுறேன், கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொன்னதும் பண்ணி வச்சிடுவமா? இந்த குடும்பத்துக்குன்னு ஒரு கௌரவம், மரியாதை இருக்கு. அதுக்கேத்த மாதிரி தான் உன் கல்யாணமும் நடக்கும், நடக்கணும். மரியாதையா இந்த காதல், கத்திரிக்கா எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சிட்டு, அடுத்த முகூர்தத்துல சுசீலா கழுத்துல தாலி கட்ட ரெடியாகு.” குமாரசாமி கட்டளையாக சொன்னார்.
“ப்பா… புரிஞ்சிக்கோங்க, மலர்விழியைத் தவிர வேற யாரையும் என்னால கல்யாணம் செய்ய முடியாது. வீணா, சுசீலாவுக்கு நம்பிக்கை குடுக்காதீங்க.” ராகவனின் குரலில் கண்டிப்போடு இறைஞ்சலும் இருந்தது.
“அதையும் பாத்துரலாம் டா.” சட்டமாகச் சொல்லியவர், விஷயத்தை தனக்கு சொல்லிய தன் பங்காளிக்கு அழைத்து,
“என்ன வேணும்னாலும் செய்துக்கோ, இன்னும் அரைமணி நேரத்துக்குள்ள அந்த சிங்காரி இந்த ஊரைவிட்டே போயிருக்கணும்” என்று சொல்ல, அவ்வளவு நேரமும் ராகவனிடமிருந்த பொறுமை விடைபெற்று சென்றிருந்தது.
தன் முழுக்கை சட்டையின் கையை மடித்து விட்டபடியே, “வரட்டும், அப்படி எவன்தான் வர்றான்னு நானும் பாத்துடுறேன்” என்று தீவிரமாக சொல்லியபடியே தலைவாசலை நோக்கி நடந்தவனை,
“அண்ணே, அந்த பொண்ணு, ஆட்டக்காரி காமாட்சி இருக்கால்ல, அவளோட பொண்ணு” என்று அசூசையாக ஒலித்த குரல் நிறுத்தியிருந்தது.
ஆமாம்… குமாரசாமியின் கை பட்டு, அவர் ஃபோனின் ஸ்பீக்கர் ஆன் ஆகியிருந்தது. அதனால் எதிர்முனையில் இருந்து பேசியவரின் குரல் அட்சரம் பிசகாமல் அங்கிருந்த அனைவரின் காதுகளிலும் தெளிவாக விழ,
ராகவன் உட்பட மொத்த குடும்பமுமே அதிர்ந்து தான் போனார்கள். என்ன… ராகவனுக்கு இந்த விஷயம் இவர்களுக்கு எப்படி தெரிந்தது? என்ற அதிர்ச்சி என்றால், மற்றவர்களுக்கு, அவர்களின் மனதைப் பொறுத்து அதிர்ச்சிக்கான காரணமும் மாறுபட்டிருந்தது.
“என்ன சொல்லுற?” தன் அதிர்ச்சியை மறைக்காமல் கேட்டார் குமாரசாமி.
“அதான் ண்ணே… மாயன் இருக்கான்ல, அவனோட தங்கச்சி பொண்ணு. நம்ம பயலுக அந்த புள்ளையோட முகம் பாத்தது போலவே இருக்குன்னு சொன்னானுங்களா, அப்பதான் ஒருத்தன் சட்டுன்னு ஆட்டக்காரி காமாட்சி போல இருக்குதுன்னு சொன்னான்.”
“நானும் உடனே மாயனுக்கு போன் செய்து அவன் தங்கச்சி பொண்ணு பெயரைக் கேட்டேன். மலர்விழின்னு சொன்னான். இப்போ என்ன பண்ணுறான்னு கேட்டேன். எங்க, நாலைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எங்களை விட்டு ஓடி போயிடிச்சின்னு சொன்னான்.”
“உன் தங்கச்சி பொண்ணு மாதிரியே எங்க ஊர்ல வெளியூர் பொண்ணு ஒண்ணு இருக்குது. பெயர் கூட மலர்விழி தான். உன் தங்கச்சி பொண்ணா இருக்க சான்ஸ் இருக்குன்னு சொன்னேன், இதோ இப்போ கிளம்பி வரேன்னு மாயன் சொல்லியிருக்கான் ண்ணே. அவன் மட்டும் வந்து பாத்துட்டு, தன்னோட தங்கச்சி பொண்ணு தான்னு சொல்லட்டும், அவங்கூடவே பத்திவிட்டுடலாம் ண்ணே. கவலப்படாதீங்க” என்று நீட்டி முழங்கினான்.
அவ்வளவு தான், “டேய் ராகவா… போயும், போயும் ஒரு ஆட்டக்காரி பெத்த மகளையா இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டுவரத் துடிக்கிற?” அப்படியே மடங்கி அமர்ந்து அழுதார் தெய்வானை.
“ஏன் ம்மா? கரகம் ஆடுறவங்க ங்குறதால அவங்க எட்டு மாசத்திலும், நாம பன்னிரண்டு மாசத்திலயுமா, அம்மா வயித்துல இருந்து பிறந்தோம்? எல்லாரும் பத்து மாசத்துல தானே ம்மா பிறந்தோம். அப்புறம், எதுக்கு இப்பிடி வித்தியாசம் பாக்குறீங்க?” தாயின் அருகில் கால் மடக்கி அமர்ந்து அவர் தலையை தடவி விட்டபடியே கேட்டான் ராகவன்.
மகனின் வார்த்தைகள், மலர்விழியை காமாட்சியின் மகள் தான் என்பதை உறுதிப்படுத்த, “எங்க வந்து, யார் குடும்பத்துல, யார் கையை வைக்கிறது?” என்று உறுமிய குமாரசாமி, எதிர்முனையில் இன்னமும் இருந்தவரிடம்,
“மாயன் வர்ற வரைக்கும் எல்லாம் பொறுத்துக்க முடியாது. அந்த அலங்காரி வீட்டுக்கு நம்ம பசங்களோட வந்துடு, நானும் வர்றேன். இரண்டுல ஒண்ணு இப்பவே பாத்துட வேண்டியது தான்.” துண்டை உதறி தோளில் போட்டபடி வெளியே நடக்க ஆரம்பித்தார்.
தகப்பனின் முகத்திலிருந்த ரௌத்திரத்தில், அவருக்கு முன்னர் வீட்டிலிருந்து இறங்கி மலர்விழியின் வீட்டை நோக்கி ஓடிய ராகவன், வீட்டுக்கு பின்பக்கமிருந்து வந்து கொண்டிருந்த மலர்விழியின் கழுத்தில், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தன் கழுத்தில் கிடந்த செயினை கழற்றி போட்டிருந்தான்.
வேகவேகமாக ஓடிவந்ததும் இல்லாமல், செயினை கழற்றி தனக்கு போட்ட ராகவனை மலர்விழி குழப்பமாக பார்க்க, அவள் கையைப் பற்றிக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்த ராகவன்,
“இந்த ராகவன் பொண்டாட்டி மேல கை வைக்கிற தைரியம் யாருக்கும் இருக்கா? வாங்க, இப்போ வாங்க” என்றான் சத்தமாக.
ராகவனின் பின்னால் வந்து கொண்டிருந்த அவன் மொத்த குடும்பமும் நடந்த நிகழ்வில் அதிர்ந்து போய் நின்றிருந்தார்கள்.
“டேய்… ஏதோ ஒண்ணை அவ கழுத்துல போட்டா தாலி ஆகிடுமா? கழட்டி குடுடி எம்புள்ள செயினை.”
மகனிடம் கேட்டு மலர்விழியிடம் முடித்த தெய்வானை, விட்டால் மலர்விழியின் கழுத்தில் கிடக்கும் செயினை கழற்றி விடுவது போல நிற்க, ராகவனின் கையைப் பிடித்துக்கொண்டு அவனோடு ஒட்டிக்கொண்டு நின்றாள் மலர்விழி.
“விடுடி… எம்புள்ள கையை விடுடி” மகனின் கையை கோர்த்து பிடித்திருந்த மலர்விழியின் கையை தெய்வானை பிரிக்க முயல, மலர்விழியின் பிடியோ இன்னும் அழுத்தமானது.
“இந்த ஆள் மயக்கி கூட எம்புள்ளையை அனுப்பாதீங்கன்னு நான் அன்னைக்கே சொன்னேன், கேட்டீங்களா? ஒரே நாள் பழக்கத்துல எம்புள்ளையை சுருட்டிகிட்டாளே? நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட… நாசமா…”
தன் வயிற்றெரிச்சலை எல்லாம் தெய்வானை வார்த்தைகளாக்கி கொட்ட முயல, சட்டென்று தாயின் வாயை தன் கையால் மூடிய ராகவன்,
“ம்மா… பிளீஸ் ம்மா… உங்க வாயால எதுவும் சொல்லிடாதீங்க, பலிச்சிடப்போகுது. அவ இல்லைன்னா என் வாழ்க்கை பட்டமரம் ஆகிப்போயிடும்” என்றான்.
இத்தனை நாட்களும் அம்மா, என்று சுற்றிய மகன் இன்னொரு பெண்ணுக்காக, அதுவும் தன் மனதிற்கு பிடிக்காத பெண்ணிற்காக பரிந்து கொண்டு வந்தது, அதுவும் அவள் இல்லை என்றால் தன் வாழ்க்கையே இல்லை என்பது போல பேசியது ஒரு தாயாக தெய்வானையை அடித்துச் சாய்த்தது.
மொத்த ஊருமே கூடி நின்று, தங்களைத்தான் வேடிக்கை பார்க்கிறது என்ற உணர்வின்றி, “ஐயோ தெய்வமே… உனக்கு கண்ணில்லையா? இப்படியா எங்குடும்பத்துல வந்து இடி விழணும்? இந்த அசிங்கம், பரம்பரை பரம்பரையா கூடவே வருமே? நான் என்ன செய்வேன்?” என்று வாய்விட்டு புலம்பிய தெய்வானை,
“டேய் ராகவா… கண்ணு… அம்மா சொன்னா கேட்ப தானே? இந்த ஆட்டக்காரி நம்ம வீட்டுக்கு வேண்டாம். இப்போ நடந்தது கல்யாணமே இல்ல, அவ கையை விட்டுடு, வா… நம்ம வீட்டுக்கு போகலாம்” என்று மகனின் கையைப் பிடித்து இழுத்தார்.
உண்மையில், தாயின் நிலையை பார்ப்பதற்கு கவலையாக இருந்தது ராகவனுக்கு. இப்படி அதிரடியாக தங்கள் திருமணத்தை முடித்துக் கொள்ள, இருவருமே நினைக்கவில்லையே. ஆனால், எல்லாம் கைமீறி போய்விட்ட பிறகு மலர்விழியையும் அவன் விட்டுவிட முடியாதே.
வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் எல்லோருக்கும், எது அல்லது யார் முக்கியம் என்று முடிவெடுக்கும் தருணம் வரத்தான் செய்யும் போல. இப்போது ராகவன் அந்த கட்டத்தில் நிற்க, எல்லோரையும் விட மலர்விழி தனக்கு முக்கியம் என்று முடிவெடுத்தேயாக வேண்டிய சூழ்நிலை.
எனவே, “ம்மா… உங்க கௌரவத்துக்காக எனக்கு கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறீங்களா? இல்ல, நான் சந்தோஷமா வாழணும்னு எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறீங்களா? நான் சந்தோஷமா என்னோட வாழ்க்கையை கொண்டு போகணும்னா, எங்கூட மலர்விழி வேணும் ம்மா. புரிஞ்சிக்கோங்க” என்றான்.
மகன் சொன்னவற்றை கண்கள் சிவக்க கேட்டுக் கொண்டிருந்த குமாரசாமி, மறுபடியும் மகனிடம் ஏதோ சொல்ல முயன்ற மனைவியிடம்,
“அவன் நீயெல்லாம் எனக்கு பொருட்டில்ல, அந்த ஆட்டக்காரி பெத்தமக தான் வேணும்னு அவ்வளவு தெளிவா சொல்லுறானே… அப்புறம் எதுக்கு அவங்கிட்ட கெஞ்சிட்டு நிக்குற. வா” என்று மனைவியின் கைகளை முரட்டுத்தனமாக பிடித்து இழுத்தார்.
“ப்பா… மெதுவா.” இரண்டு மகன்களுமே பதறியபடி அவர் அருகில் வந்தார்கள்.
“அவ எம்பொண்டாட்டி டா, அவளை என்ன வேணாலும் நான் செய்வேன். அதைக் கேட்க உங்களுக்கு உரிமை கிடையாது. அதிலும் உனக்கு…” என்று ராகவனை சுட்டிக் காட்டியவர்,
“உனக்கு சுத்தமா கிடையாது. இன்னைலயிருந்து நீ யாரோ, நாங்க யாரோ. நாங்க செத்தாக் கூட வீட்டு பக்கம் தலைவச்சி படுத்துறாத.” ஆங்காரத்தோடு சொன்னவர், மனைவியை தரதரவென கைப்பிடியாக அழைத்துச் சென்றார்.
“அப்பா… வார்த்தைகளை தவற விடாதீங்க. இது நமக்குள்ள ஒரு சின்ன பிரிவு தான், நிரந்தரம் கிடையாது.” பதறிப்போனவனாக சொன்னான் ராகவன்.
சட்டென்று நின்று, மகனைத் திரும்பி பார்த்த குமாரசாமி,
“இப்போ கூட நமக்குள்ள பிரிவு இல்லன்னு ஆக்கிடலாம். அந்த ஆட்டக்காரியை விட்டுட்டு, எங்க கூட வந்துடு” என்றார் கடைசி முயற்சியாக.
ராகவனோ, மலர்விழியின் கையைப் பிடித்துக் கொண்டு ஓரடி பின்னால் நகர்ந்தான்.
மகனின் செயலில் ஏளனச் சிரிப்பை இதழ்களில் தவழவிட்டபடி மனைவி, மக்களோடு குமாரசாமி அங்கிருந்து நகர்ந்தார்.
தன்னை விட்டு தள்ளிப் போகும் உறவுகளை பார்த்தபடியே நின்றிருந்தான் ராகவன்…