ஒலிபெருக்கியில் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த பாடலோடு இணைந்து வாய்விட்டு உற்சாகமாக பாடிக் கொண்டிருந்தாள் மலர்விழி. கைகளோ, வீட்டுக்கு பின்னாலிருந்த கீரை பாத்தியில், களை நீக்கி கொண்டிருந்தது.
மலர்விழி செங்குளம்வாசியாகிப் போயிருந்த இந்த ஆறுமாத காலத்தில், அடிக்கடி காதில் விழுந்த இந்த பாடலின் வரிகள், பிடித்துப் போயிருந்ததால் மனப்பாடமே ஆகியிருந்தது.
ஆமாம்… மலர்விழி செங்குளத்திற்கு வந்து ஆறு மாதங்கள் கடந்திருந்தது. இத்தனை நாட்களில் செங்குளமும், தான் குடியிருக்கும் வீடும் அவளுக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது.
அதுவும், வாடகை வீடென்றாலும் தனக்கே தனக்கென்று அமைந்திருந்த அந்த கூடு அவளின் பிரியத்துக்குரிய இடமாக மாறிப் போயிருந்தது.
இத்தனைக்கும் பழைய மாடல் வீடுதான் அது. சின்ன ஹால், இரண்டு சிறிய படுக்கை அறைகள், சிறிய கிச்சன், வீட்டுக்கு பின்புறம் குளியலறை, கிணறு, தாராளமாக காலி இடம், வீட்டைச் சுற்றி காம்பௌண்ட் சுவர் என்று கிராமத்து பாணியில் அழகாகவே இருந்தது வீடு.
கீரை, கத்தரி, தக்காளி, பாகற்காய், மிளகாய் என்று தனக்கு தேவையான காய்கறிகளை வீட்டிலேயே பயிரிட்டு எடுத்துக் கொள்வதில் அத்தனை ஆனந்தம் மலர்விழிக்கு.
அவற்றை சமைத்து, “இன்னைக்கு வீட்டுலயே விளைஞ்ச கத்தரிக்காய் சாம்பார், கீரைக் கடைசல், சாப்பிட்டு பாருங்க” என்று சொல்லி ராகவனுக்கு கொடுப்பதில் பேரானந்தம்.
கோவிலுக்கு செல்லுவதற்காக, அன்று முதன்முறையாக சந்தித்து கொண்டார்களே அந்த இடம் தான் காதலர்களின் மீட்டிங் ஸ்பாட். தினமும் பணிக்கு செல்லும் நேரத்தில், சில நிமிடங்களிலோ அல்லது சில வினாடிகளிலோ அவர்களின் சந்திப்பு முடிந்து விடும். அந்த நேரத்தில் சாப்பாடு பாத்திரமும் கைமாறிவிடும். மற்றபடி எப்போதும் போல கைபேசியிலேயே இருவரும் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.
“ஹேய்… அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடு
ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் உன்னோடு…
ஒரு சொந்தம் ஒரு பந்தம் இரு ஜீவன் ஒன்றாகும்
இளங் கன்னி உனை எண்ணி உயிர் காதல் பண்பாடும்…”
பாடல் வரிகளை ரசித்து பாடியபடியே காய்த்து தொங்கிக் கொண்டிருந்த கத்தரிசெடிக்கு அருகே வந்திருந்தாள் மலர்விழி.
‘நாளைக்கு கத்தரிக்காய் பொரியல் வச்சு குடுக்கணும். பிஞ்சு கத்தரிக்காய்னா தலைவருக்கு ரொம்ப இஷ்டம்.’ மனம் தன்னைப் போல நினைத்துக் கொண்டது.
அன்று ராகவன் தன் பெயரை பிடிவாதமாக மலர்விழியை சொல்ல வைத்திருந்தாலும் கூட, தொடர்ந்து வந்த நாட்களில் அதை முயற்சித்து பார்க்கவே இல்லை மலர்விழி.
‘இந்த பூனையும் பால் குடிக்குமா ன்னு இருந்துட்டு, அன்னைக்கு… அம்மாடியோவ்!’
தன்னை ராகவன் பெயர் சொல்லி அழைக்க வைத்த அன்று, நடந்த நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வந்து முகம் சூடாகி சிவந்து போனது மலர்விழிக்கு.
“அக்கா, நீங்க கிளம்பலையா இன்னும்?” பட்டுப்பாவாடை, தாவணி அணிந்து வந்து நின்ற மாதவி கேட்டாள்.
பக்கத்து வீட்டு பெண்மணி கோதையின் மகள் தான் மாதவி. பதினொன்றாம் வகுப்பு படிக்கிறாள். கணக்கு பாடத்தில் தன் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் மலர்விழியை அவளுக்கு ரொம்பவே பிடிக்கும். எனவே மலர்விழியோடு நெருக்கமாகிப் போனாள் மாதவி.
மலர்விழியிடமிருந்து கீரை, காய்கறி என்று வாங்கிக் கொண்டாலும் இன்னமும் அவளை அளவிடும் பார்வையே மாதவியின் அம்மாவிடம்.
போதாததற்கு, “உன்னை எங்கயோ பார்த்த மாதிரியே இருக்கு” என்று அவ்வப்போது சொல்லி மலர்விழியை திகிலடையச் செய்து விடுவார்.
மலர்விழிக்கு தன் அடையாளத்தை மறைத்து ராகவனை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எல்லாம் இல்லை. அதே நேரம் இப்போது அவளை வெளிக்காட்டிக் கொள்ளவும் முடியாதே. எனவே ஐம்புலன்களில் ஒன்று எனக்கு வேலை செய்யாது என்ற பாவனை தான் பலநேரங்களில் அவளுக்கு.
கேள்வியோடு தன்னையே பார்த்தபடி நின்றிருந்த மாதவியைப் பார்த்து, “பட்டுப் பாவாடை தாவணில சூப்பரா இருக்கிற மாது” என்று பாராட்டு பத்திரம் வழங்கிய மலர்விழி,
“இன்னும் ஒரு பத்து நிமிஷ வேலை தான் இருக்கும். முடிச்சிட்டே கிளம்புறேன்” என்று, விட்ட இடத்திலிருந்து வேலையை செய்ய ஆரம்பித்தாள்.
வேறொன்றுமில்லை, ராகவனின் தங்கை ஜெயந்திக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம். அதற்கு தான் அடிபொழியாக பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அமர்க்களமாக மாதவியும் புறப்பட்டு வந்து நிற்கிறாள்.
குற்றாலத்துக்கு அருகே வளர்ந்து வரும் மென்பொருள் நிறுவனம் ஒன்றில், கடந்த ஐந்து மாதங்களாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஜெயந்தி.
மாப்பிள்ளை நிர்மல் சென்னையில் ஐடி துறையில் இருக்கிறான். சொந்த ஊர் அம்பாசமுத்திரம். குடும்பமும் இவர்கள் அளவுக்கு பெயர் சொல்லும் குடும்பமே. இரண்டு குடும்பத்தினருக்கும் பிடித்துப் போக, திருமணம் முடிவாகி நிச்சயம் வரைக்கும் வந்தாயிற்று.
நாட்டாமை வீட்டு நிச்சயதார்த்தம், ஊர் முழுவதும் அழைத்து, ஏதோ கல்யாணம் போல ஜாம் ஜாம் என்று ஏற்பாடாகியிருந்தது.
வேலைக்காக என்றாலும், தங்கள் தெருவில் குடியிருக்கும் மலர்விழிக்கும் அழைப்பு உண்டு.
அதுவும், ஊர் முழுவதும் தகப்பனின் சார்பில் அழைப்பு விடுத்த ராகவன் தான், மலர்விழி வீட்டுக்கும் அழைப்பு விடுக்க வந்தது. உடன், அவனுடைய பங்காளி ஒருவனும் வந்திருந்தான்.
இதோ, இன்று காலையில் கூட ஃபோனில் அழைத்தாயிற்று. ஞாயிற்றுக்கிழமை, எப்போதும் போல செடிகளை பராமரிக்க ஆரம்பித்தவளுக்கு, ராகவன் சொன்னது போல முதல் ஆளாக போய் நிற்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், தயக்கமும் இருந்தது.
அதற்கு காரணம் இத்தனை நாட்களில், ராகவனின் பெற்றவர்களை நேருக்கு நேராக மலர்விழி சந்திக்கும் சூழ்நிலை வந்ததே இல்லை. இப்போதோ சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கப் போவது போல, கொஞ்சம் உதறலாகத் தான் இருந்தது.
இருந்தாலும் வேறு வழியில்லாமல் குளித்து புறப்படத் தயாரானாள் மலர்விழி. அம்மாவிடம், மலரோடு வருவதாகச் சொல்லி மாதவி அங்கேயே இருந்து கொண்டாள்.
ராகவனுக்கு பிடித்த லெமன் யெல்லோ கலரில் அடர் வயலட் கலர் பார்டர் வைத்த சில்க் காட்டன் புடவை அணிந்து, ப்ளாக் மெட்டலில் கழுத்தை ஒட்டினாற் போல ஒரு நெக்பீஸ், வளையல், ஜிமிக்கி என்று தயாரான மலர்விழி, தளர பின்னி காலையில் வாங்கி வைத்திருந்த மல்லிகைச் சரத்தையும் தலையில் வைத்துக் கொண்டாள்.
ஆக, எப்போதையும் விட கொஞ்சம் சிரத்தை எடுத்தே புறப்பட்ட மலர்விழி, மாதவியோடு ராகவனின் வீட்டை நோக்கி சென்றாள். அதற்கிடையில் இன்னும் வரவில்லையா என்று பல மெசேஜ்களை போட்டுவிட்டான் ராகவன்.
ராகவனின் வீடு, கல்யாணத்திற்கு போலவே வாழைமரத் தோரணம் கட்டி, பந்தல் போட்டு பரபரப்பாக நின்றது. மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்பதற்காக வெளியே குமாரசாமியும், சிதம்பரமும் தங்கள் பங்காளிகளோடு நின்றிருந்தார்கள்.
மலர்விழியைக் கண்டதும் சிதம்பரம் தன்னை மறந்து, “வா ம்மா” என்று புன்னகையோடு அழைக்க, “நம்ம ஊருக்கு புதுசா வந்திருக்க பிள்ளை, உனக்கு எப்படி டா தெரியும்?” என்று ஆராய்ச்சியாக கேட்டார் குமாரசாமி.
சுதாரித்துக்கொண்ட சிதம்பரம், “நம்ம வீட்டு ஃபங்ஷனுக்கு வர்றவங்களை வெல்கம் பண்ணுறது தானே ண்ணா முறை. அதான் கூப்பிட்டேன்” என்று சமாளித்தார்.
இருவருக்கும் சேர்த்து வணக்கம் வைத்து அங்கிருந்து நகர ஆரம்பித்த மலர்விழியிடம், “இந்தா ம்மா பொண்ணு, உனக்கு சொந்த ஊரு எது? பெத்தவங்க யாரும் இல்லையா?” என்று தன் விசாரணையை ஆரம்பித்தார் குமாரசாமி.
குமாரசாமி, ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஒரேயொரு முறை பார்த்திருந்த பள்ளிப்பருவ மலர்விழிக்கும், இளமை கணிசமான மாற்றங்களை செய்திருந்த மலர்விழிக்கும், தோற்றத்தில் வித்தியாசம் இருந்தது. சற்றே ஊன்றிக் கவனித்து நினைவடுக்கை துழாவினால், கண்டு கொள்ளலாம் தான். ஆனால், அப்படி நடக்காமல் போனது ஒருவகையில் அதிஷ்டமே காதலர்களுக்கு.
குமாரசாமியின் கேள்வியில், ‘ஆஹா… ஆரம்பமே களை கட்டுதே’ என்று உள்ளுக்குள் அலறிய மலர்விழி, பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன், ஒரு உறவுக் குடும்பம் காரில் வந்து இறங்க, குமாரசாமியின் கவனம் அவர்களிடம் சென்று விட்டது.
‘தப்பிச்சேன் டா சாமி’ என்று மாதவியோடு உள்ளே நகர்ந்த மலர்விழியை, “இப்போ தான் வர்றதா?” என்று கண்களால் கேட்டு முறைத்தபடி நின்றிருந்தான் ராகவன்.
“ஒண்ணுமில்ல” கண்களாலேயே பதில் சொல்லி, வாயை கையால் மறைத்து நகர்ந்தவளை நம்பாமல் பார்த்தவன், “மாதவி, டீச்சரை ஜெயந்தி அக்கா ரூமுக்கு கூட்டிட்டு போ” என்றான்.
கோதையின் கணவர், ராகவனுக்கு பங்காளி முறை தான். எனவே மாதவி ராகவனுக்கு தங்கை முறையே.
“சரி ண்ணே” என்று மலர்விழியை ஹாலைத் தாண்டி வீட்டுக்குள் அழைத்து சென்றாள் மாதவி.
அன்று கரகாட்ட கலைஞர்களுக்கு மூடியிருந்த கதவு இப்போது திறந்து இருந்தது. எப்படியிருந்தாலும் அன்றைய நினைவில் லேசாக முகம் சுணங்கியவளை, “இது யாரு மாதவி? புதுசா தெரியுது?” என்ற கதிரேசனின் குரல் இயல்புக்கு கொண்டு வந்தது.
கைகளில் அக்காவின் இரண்டாவது மகனை தூக்கிவைத்துக் கொண்டு பதிலுக்காக நின்ற கதிரின் கண்கள் மலர்விழியின் முகத்தையே யோசனையோடு பார்த்தது.
மலர்விழியைப் பற்றி மாதவி சொல்ல, “பார்றா… நான் ஊர்ல இல்லாதப்போ பாத்து, ஏஞ்சல்ஸ் எல்லாம் நம்ம ஊரை குத்தகைக்கு எடுத்துருக்காங்க போலவே!” இளமைக்கே உரிய வகையில் பதில் சொல்லி நகர்ந்தான்.
அடுத்ததாக ராகவனின் அம்மா தெய்வானையைக் கண்டதும் கொஞ்சம் திக்கென்று தான் இருந்தது மலர்விழிக்கு. ஆனால் உறவுப் பெண்களோடு பரபரப்பாக பேசியபடி நின்றிருந்தவரிடமிருந்து, “வா ம்மா” என்று வாயளவேயான வரவேற்பு மட்டும் தான். அன்றே மலர்விழியை அலட்சியமாக பார்த்தவரின் நினைவுகளில் சிறுதுளி கூட மலர்விழி இல்லை.
ஒருவழியாக எல்லோரையும் தாண்டி ஜெயந்தியின் அறைக்குள் வந்துவிட்டாள் மலர்விழி. மணப்பெண் அறை வழக்கம் போல இளம்பெண்களால் நிறைந்திருந்தது.
அனைவரும், பெண்ணுக்கு போட்டியாக தங்களை அலங்காரம் பண்ணுவதில் முனைந்திருந்தனர்.
ஜெயந்தி தயாராவதற்கு உதவி செய்து கொண்டிருந்த ஆனந்தி, “இதுதான் நீ சொல்லுற மலர் அக்காவா?” என்று மாதவியிடம் கேட்டு, “வா ம்மா” என்று வரவேற்றாள்.
ஜெயந்தியும் வரவேற்பாக புன்னகைத்தாள். ராகவன் எல்லாருடைய சமீபத்திய புகைப்படங்களையும் காட்டியிருந்ததால், அவர்களை அடையாளம் கண்டு கொள்வதில் மலர்விழிக்கு குழப்பம் இல்லை.
அந்த வீட்டு உறுப்பினர்களைப் பார்க்கும் போது என் குடும்பம் என்ற உணர்வு தோன்றியது மலர்விழிக்கு. என்றாலும் கூட அந்த சூழ்நிலையோடு ஒட்டமுடியாமல் தனித்து நிற்பது போலவே அவளுக்குத் தோன்றியது.